Saturday, May 9, 2020



தாண்டகவேந்தரின் தண்டமிழ்
[முத்தமிழ்மணி, ஆ. சுவாமிநாதன், மஞ்சக்கொல்லை]

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திரு நாவுக்கரசர் பெருமான் அருளிய திருப்பாடல்களில் தாண்டகமும் ஒரு பிரிவாகும். தாண்டகம் தமிழ்ப்பாவினங்களில் ஒன்று. இதன் இலக்கணத்தைச் சொல்லும் இலக்கண ஆசிரியர்கள் அதற்குரிய இலக்கணங் கூறி உதாரணமாகச் சொல்லுமிடத்து அப்பமூர்த்திகள் அருளிய தாண்டகத்தையும், திருமங்கையாழ்வார் பாடிய தாண்டகத்தையும் கூறியுள்ளனர். தாண்டகப் பதிகங்களைச் சொல்லாசருக்கு நிகராக இதுவரை யாரும் பாடாமையால் வாக்கின் அரசரைத் "தாண்டகவேந்தர்" தாண்டகச் சதுரர் என்றே முன்னோர்கள் உரைத்தனர். வேறு பண் வகைகளையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை போன்ற பதிகங்களையும் அடிகளார் பாடியிருப்பினும், அவைகளி லெல்லாம் சிறந்து படிப்போரையும், பாடுவோரையும் மிகவும் உருகவைப்பது தாண்டகப் பதிகங்களேயாகும். இதனைக் கூறவந்த சேக் கிழார் பெருமான்,

மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அர சமர்ந்திருந்தார்.
என்று குறித்தருளினர்.

அப்பமூர்த்திகள் அருளிய பாடல்களில் திருக்குறுந் தொகைப் பதிகங்களும், தாண்டகப்பதிகங்களுமே எண்ணிக்கையில் அதிக இடம் பெற்றுள்ளன. அவற்றுள் தாண்டகப் பதிகங்கள் தொண்ணூற்றொன்பதாகும். ஆளுடைய அரசரின் அருந்தமிழ்ப்பாக்கள் இலக்கியவளமும், பொருட் செறிவும் பெற்று மக்களைச் செம்மைப்படுத்துவதுடன் முத்தியின்பத்தையும் நல்குவதாய் அமைந்துள்ளன. இலக்கிய வளத்திற்குச் சிறப்பாக அமைவது உவமைகள். அந்த உவமைகளைப் பல இடங்களில் வாக்கின் மன்னர் அழகுற அமைத்துள்ளனர். திருமறைக்காட்டுத் திருத்தாண்டகப் பதிகத்தின் ஐந்தாவது திருப்பாட்டு,

"மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறை எம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே
என்பதாகும். இத்திருப்பாடலில் சிவபெருமான் எல்லாவுயிர் கட்கும் எளியனாகவும், உபகாரியாகவும் இருக்கும் தன்மையினை வெளிப்படுத்த எண்ணிய அடிகளார்  ''ஏரி நிறைந்தனைய செல்வன்” என்று குறித்தார். ஏரியில் நிறைந்துள்ள நீர் உவமானம். இறைவனின் பாந்தகருணை உவமேயம். அனைய உவம உருபு. ஏரி நீரின் பரப்பும் பயனும், இறைவனின் பாந்த கருணையும் பாலிப்பும் உவமைப் பொருத்தங்களாக அமைந்துள்ளன.

புறநானூற்றில் வள்ளல் அதிகமான் நெடுமானஞ்சியைப் பாராட்டிய ஔவையார் "கடல் போன்ற பெருஞ் செல்வத் தைப் பலர் பெற்றிருப்பினும் அவர்கள் செல்வம் கடல் நீரைப் போல ஒருவருக்கும் பயன் படவில்லை. உனது செல்வம் குறைந்த அளவில் இருப்பினும் கிணற்று நீரைப் போலப் பலருக்கும் பயன்படுகின்றது" என்பதனை,

உவர்க்கட லன்ன செல்வரும் உளரே
கிணற்றூற் றன்ன நீயுமா ருளையே

என்று பாடியிருக்கிறார். கடலும் கிணறும் அல்லாத ஏரியினைத் தாண்டகச் சதுரர் தனது தண்டமிழில் உவமை காட்டினார். இது உணர்ந்து இன்புறத்தக்கதாகும். இன்னும்
"விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல், எனவும்,

"காம்பிலா மூழை போல" எனவும் உலையிலேற் றித் தழலெழ மடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமை போல" எனவும் அமைந்த எண்ணிறந்த உவமைகளும் அதன்கண் உறையும் கருத்துக்களும் உணர்ந்து இன்புறத்தக்கனவாகும்.

உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன் அவ்வுயிர்கட்குச் செய்யும் அருளிப்பாட்டின் தன்மையைப் புலப்படுத்தும் போது அது பழத்தினும், கற்கண்டினும், ஐம்புல இன் பங்களை நல்கும் மங்கை நல்லாரினும் செல்வபோகத்தில் உறையும் அரச வாழ்க்கையினும் இனிமையுடையது என்தனை,

"கனியினும் கட்டிப்பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழற் பாவை நல்லாரினும்
தனி முடிகவித்தாளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே"

என்னும் திருக்குறுந்தொகைப் பாட்டால் விளக்கி நம்மை யெல்லாம் சிவபெருமானின் திருத்தொண்டராக்குகின்றார்.

பூசு நீறு போல் உள்ளும் புனிதர்களாகிய அடியவர்களின் திறத்தினைச் சொல்வேந்தர் பல இடங்களில் விவரித்துள்ளார். காலையில் எழுந்து சிவபெருமானைச் சிந்தித்து நீராடி மலர்களைக் கொண்டு அருச்சித்து ஆர்வத்தோடு விளக்கேற்றித் தூபதீபங் கொடுத்துப் போற்றுவர் என்ற கருத்துக்களை,

" பெரும் புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்குத் தூபம்விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல் வார் கடவூர் வீரட்டனாரே”

என்ற திருநேரிசைப் பாடலாலும் பிறவற்றாலும் விளக்கியிருக்கின்றார். இங்கனம் உரைத்த ஆளுடைய அரசரைப் புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் படிப்போர் நெஞ்சையுருக்கும் வண்ணம் விவரித்துள்ளார்.

என் கடன் பணி செய்து கிடப்பதே யென்றபடி தலங்கள் தோறும் வழிபட்டு வந்த வாகீசர் திருவாரூருக்கு வந்த காட்சியை,

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுரவாக்கில்
சேர்வாகுந் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொற்றாளே
சார்வான திருமனமும் உழவாரத் தனிப் படையும் தாமுமாகிப்
பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்

என்று திருநாவுக்கரசர் புராணத்திலும், சீர்காழிக்குத் தாண்டகவேந்தர் வருவதையறிந்து திருஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் கொண்டழைக்க வந்த போது கண்ட காட்சியாகச் சொல்லாசரைச் சொல்லுமிடத்து,

"சிந்தையிடை யறா அன்பும் திருமேனி தனிலசைவும்
கந்தைமிகை யாங்கருத்தும் கையுழவாரப் படையும்
வந்திழிகண்ணீ ர் மழையும் வடிவில்பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர் வந்தணைய

என்று திருஞானசம்பந்தர் புராணத்திலும் குறித்துள்ளமை அறிந்தின் புறப்பாலதாகும். தமிழ் நூற்கடலையும், வடநூற் கடலையும் நிலை கண்டுணர்ந்த மாதவச் சிவஞான சுவாமிகள் தாமியற்றிய காஞ்சிப் புராணத்தில் வாகீசர் வணக்கப்பாட லில் அப்பமூர்த்திகளின் அருளுருவத் திருமேனியை அகங் கனிந்து அப்படியே வருணித்துள்ளார்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்திண்
படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகை தன ஞானப்பாடல்
தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம்
என்பதாகும். 

இளமைப் பருவத்திலேயே தந்தையையும் தாயையும் இழந்து தமக்கையாரின் அரவணைப்பில் வாழ்ந்த மருள் நீக்கி யாருக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றிற்று. நேற்றிருந்தவன் இன்றில்லை யென்ற பெருமையுடைய நிலையாமையை நன்குணர்ந்தார். அச்சந்தர்ப்பத்தில் கொல்லாமை மறைந்துறையும் சமண சமயத்தவ முனிவர்கள் இவரைத் தன்பாலீர்த்துச் சாத்திரங்களைக் கற்பித்தனர். அங்கு நன்கு தேர்ச்சி பெற்று வாதிடுவதிலும் வெற்றி பெற்ற அடிகளார்க்குத் தருமசேனர் என்ற பட்டமும் கொடுத்துத் தலைமை நிலையையும் அளித்தனர். அப்போது இறைவன் திருவருளால் சூலை நோய் ஏற்பட்ட போது அவர்களுடைய மணிமந்திர ஒளடதங்களால் தீராமையால் திலகவதியாரை அடைக்கலமாக அடைந்தார். தவச்செல்வியராகிய திலகவதியாரும் தம்பால் வந்த தம்பியாரை இறைவன் பால் அழைத்துச் சென்றார். அங்கு வீரட்டத்தெம்பெருமானை விருப்போடு வழிபட்டார். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் என்று உருகினார். அப்பர் சூலையும் நீங்கிற்று. சிவ பெருமான் நாவுக்கரசு என்று உன்னை இனி நானிலம் போற்றும் என்றும் அருளினார். சிவபெருமான் திருவாக்கைக் கேட்ட திருநாவுக்காசர் ஆனந்த பாவசாகி தோத்திரம் கள் பாடினார். இவ்வாறு அருளும் பெருமானை ஏழையேன் பண்டிகழ்ந்தேனே என்று இரங்கினார். இவ்வாறு தாம் முன்பு நெறியல்லா நெறியிற் சென்றதைப் பல தலங்களில் பாடிய பாடல்களிலெல்லாம் பாடியுள்ளார். அவ்வாறு அமைந்த பாடல்களில் திருவாரூரில் பாடிய “மெய்யெலாம் வெண்ணீறு" என்று தொடங்கும் காந்தாரப்பண், படிப்போர் மனத்தை உருக்கவல்லதாகும். இத்திருப்பாடல்கள் பத்தின் இறுதியிலும் கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன் என்றும், முயல் விட்டுக்காக்கைப்பின் போனவாறே யென்றும் அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே யென்றும், பனி நீராற் பாவை செயப் பாவித் தேனே யென்றும், ஏதன்போர்க்காதனாய் அகப்பட்டேனே யென்றும், இருட்ட றையில் மலடுகறந்து எய்த்தவாறே யென்றும், பாரூரில் பயிக்கம் புக்கெய்த்தவாறே யென்றும், தவமிருக்க அவஞ் செய்து தருக்கினேனே யென்றும், கரும்பிருக்க இரும்பு கடித்தெய்த்தவாறே யென்றும் பல படக்கூறி வருந்தியுள்ளார்.

தாண்டகவேந்தரின் தண்டமிழானது பல அடியார்கள் அரசர்களுடைய வரலாறுகளைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. திருக்குறுக்கை வீரட்டம் திருநேரிசைத் திருப்பாடல்களிலும், பிறவற்றிலும் இவைகளைக் காணலாம். ஆத்திமரத்தின் கீழ் மணல் குவித்து அவற்றையே இலிங்கமாகப் பாவித்து ஆவின் பாலைக்கறந்து அபிடேகஞ் செய்ய, அதனைத் தவறாகக் கருதித் தந்தையார் அடித்துத் துன்புறுத்திய போது, அவர் வசமில்லா ததைக் கண்டு காலினால் பாற்குடங்களை இடறினார். அவற்றைக் கண்ட சண்டேசர் தந்தையார் கால்களை மழுகொண்டு வீழ்த்தினார். அவருக்குப் பேரின்பம் நல்கினார் பெருமான் என்பதனை,

"தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபரமணலாற் கூப்பி' என்னும் திருப்பாட்டில் தெரிவிக்கின்றார். மற்றும் கணம்புல்லர், கோச்செங்கட் சோழர், மாபலிச் சக்கரவர்த்தி, கண்ணப்பர், அமர்நீதி நாயனார், சாக்கிய நாயனார், நமிநந்தி யடிகள், அப்பூதியடிகள், திருஞான சம்பந்தர் ஆகிய பெரியோர்களையும் குறித்துள்ளமையால் வரலாற்றாராய்ச்சிக்கும் துணையாக இருக்கின்றது..

சிவபெருமானை நோக்கி உரையாடும் வகையில் சில திருப்பாடல்கள் அமைந்துள்ளன. அவைகளில் ஒன்று திருவொற்றியூரிலிருக்கும் எழுத்தறியும் பெருமானிடம் உவகையுடன் பேசியதாகும். அவையாவன: - "வேத முதல் வனே ! நீ கோயில் கொண்டிருக்கும் இவ்வூரைப் பிறரிடம் ஒற்றி (ஒத்தி) யாகப் பெற்றுள்ளாய். உன்னிடம் ஒற்றியாக வைத்தவர்கள் பரம்பரையில் ஒருவருமில்லாததால் இவ் வொற்றியூர் உனக்குச் சொந்தமாயிற்று. உன்னிடம் ஒற்றி வைத்தவர்கட்கு உறவினர் யாரேனும் வந்து கேட்டால் இதனைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டுமே என்ற எண் பணத்தால் நீ விற்று விடலாம் என்று கருதவும் கூடும். அவ் வாறு விற்று விட நினைத்தால் என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிக் கொள்ளப்பலர் முன்வருவார்கள். அவ் வாறு பலர் வாங்க நினைப்பதற்குக் காரணம் இங்குள்ள கை வளங்களேயாகும். வண்டுகள் நறுமலர்களில் அமர்ந்து தேனையுண்டு யாழோசையைப் போல ரீங்காரம் செய்யும் சோலையும் இளமாக்காவும் சூழ்ந்து விளங்குவதேயாகும். இதனை விற்றால் பெரும் பொருள் கிடைக்குமென்று நினைத்து விற்றுவிடாதே. இதன் சிறப்பினை நோக்காது விற்று விட்டால் இதுபோன்ற வேறொரு ஊரை உன்னால் வாங்க முடியாது " என ஒற்றியூரின் சிறப்பினை,

"சுற்றி வண்டு யாழ்செய்யும் சோலையும் காவும் துதைந்தி லங்கு
பெற்றி கண்டால் மற்றியாவருங் கொள்வர் பிறரிடை நீ
ஓற்றி கொண்டாய் ஒற்றியூரையுங் கைவிட்டு உறுமென்றண்ணி
விற்றி கண்டாய் மற்றிது வொப்பதில் இடம் வேதியனே.''

இவ்வாறு நகைச்சுவை தோன்றப் பாடியுள்ளார். –

நமது பாவரசரின் பைந்தமிழ்க் கருத்துக்கள் தற்காலக் கவிஞர்கட்கு வேண்டிய கருத்துக்களைக் கொடுத்திருக்கின்றன. நாட்டு விடுதலைப் போராட்டத்தினைக் கவிதையில் ஊக்கிய பாரதியார் பாடலில் பல செய்திகளைக் காணலாம். அடியார்களின் உறைப்பைக் கூறுமிடத்து எதற்கும் அஞ்சா வுறுதியுடையவர்கள் என்பதைக் காட்ட அடிகளார் "வானந் துளங்கி லென் படண் கம்பமாகி - லென்'' சிவபெருமானுக் காட்பட்டவர்கட்கு அவனே துணையென அச்சமின்றியிருப்பர் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தைக் கவிபாரதியார் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்" என்று பாடியுள்ளார். கல்லொடு கட்டி அடிகளாரைக் கடலிற் போட்டபோது இறைவன் திருவருளால் ஐந்தெழுத்தோதி திருப்பாதிரிப்புலி யூரையடைந்து திருக்கூட்டத்தாருடன் சிவ பெருமானை வழிபட்ட செய்தியறிந்த மன்னவன் அமைச்சர்களை யனுப்பி அழைத்து வரச் செய்தான். அவர்கள் சென்று நமது வாகீசரை யழைத்தபோது யாம்யாருக்கும் அடிமையில்லை எவரையும் பணியோம் நோயும் எங்களுக் கில்லை எல்லாம் வல்ல பரம் பொருளாகிய சிவபெருமானையே பணிவோம் என்று கூறும் போது "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற திருத்தாண்டகத்தைப் பாடியருளினார். இக் கருத்தைப் பாரதியார் சுதந்திரப் பள்ளில் "புவியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்'' என்று பாடியுள்ளார்.

நால்வர் பெருமக்கள் சென்ற நெறியை தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என ஆன்றோர் கூறியுள்ளனர். அதில் சொல்லின் செல்வராகிய அப்ப மூர்த்திகள் சென்ற நெறியே தாசமார்க்கமாகும். இதுவே நம் போன்றவருக்கு எளியநெறியுமாகும். சிவபெருமான் திருவருளால் திருஞானசம்பந்தர் தந்தையாகப்போற்றினார். ஆளுடைய நம்பிகள் தோழமை கொண்டார். மாணிக்கவாசகப் பெருமானோ அறிவால் சிவனேயானார். திருநாவுக்கரசர் இறைவனை ஆண்டானாகவும் தன்னை அடிமையாகவும் பாவித்தார். இறைவன் உடையான் நாம் உடைமைப் பொருள். இவ்வாறு அடிமை செய்யும் நெறியே நம் போன்றவருக்கு ஏற்புடைத்தாகும். இவ்வாறு வழிபடும் நெறியை சரியை யென்றும், கிரியை யென்றும், யோக மென்றும், ஞான மென்றும் படிமுறை வகுத்துப் பாகுபாடு செய்துள்ளனர். இந்நெறிகளை முறையாக வலியுறுத்தும் முறையோடு கூடிய பாடல்களையும் அடிகளார் அருளியுள்ளார்.

நிலை பெறுமாறு எண்ணு தியேல் நெஞ்சே நீவா" என்று தொடங்கும் திருப்பாடல் சரியையும், ''காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக'' என்னும் திருப்பாடல் கிரியையும், உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உருவெழுதி என்னும் திருப்பாடல் யோகத்தையும்,

"ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்

என்னும் திருப்பாடல் ஞானத்தையும் தெரிவிப்பனவாகும். இவ்வாறு பல சிறப்பியல்களைத் தாண்டக வேந்தரின் தண்டமிழ் பெற்றுள்ளன. அவைகளை யெல்லாம் ஓதி வழிபட்டுப் பின்பற்றிச் சிவனெனும் நாமம் தனக்கே யுரிய செம்மேனி யம்மானை வழிபட்டு உய்தி பெறுவோமாக.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment