Saturday, May 9, 2020



கொக்கிறகு
(திரு. மு. அருணாசலம்)

சித்தாந்தம் மலர் 34 இதழ் 12 இல் கொக்கிறகு என்ற சொல்லின் பொருள் பற்றிப் பேசினோம். இது வெண்ணிறக் கொக்கிறகு மலரையே குறிப்பிடும் என்று கூறினோம். இனி இங்கு அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் புள்ளின் சிறகு என்ற தொடர் வரும் சந்தர்ப்பத்தையும் பொருளையும் ஆராய்வோம். இது அப்பர் தேவாரம் நான்காம் திருமுறை, இரண்டாம் திருப்பதிகம், இரண்டாம் பாசுரத்தில் வருகிறது.

பூண்டதோர் கேழல் எயிறும் பொன்றிகழ் ஆமைபுரள
நீண்டதிண் தோள்வலம் சூழ்ந்து நிலாக்கதிர்போல வெண்ணூலும்
காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை.

என்பது பாசுரம். இப்பாசுரம் பிறந்த சந்தர்ப்பத்தை நினைவு - கூர்தல் நலம்.

சமணருடைய தூண்டுதலால் மன்னன் உண்பித்த நஞ்சும் அப்பர் சுவாமிகளுக்கு அமுதம் ஆயிற்று. கண்ட சமணர் நடுங்கினர். அரசனிடம் சென்று, அவனுடைய "மதயானை எதிரே அப்பரை இடவேண்டும்'' எனக் கூறினர். அரசனும் இசைந்தான்.

மலைபோன்ற கொலைக்களிறு ஊழித்தீ எனச்சினந்து இடியோசை செய்து அடியவர் மீது கடுகி ஓடிவந்தது. ஓடிவந்த தோற்றத்தைச் சேக்கிழார் பாடியுள்ள சந்தவிருத் தங்கள் படிக்கக் கேட்டாலே அச்சமுண்டாகும். எதிரே இருந்த அப்பர் சுவாமிகளோ, இதனினும் பல கொடுமைகளைக் கண்டு அனுபவித்தவர். பல சோதனைகளில் இறையவனால் பாதுகாக்கப் பெற்ற வலிமை வாய்ந்தவர். ஆதலினாலே, மதக் களிற்றைக் கண்டு அவருக்கு அச்சம் எழவில்லை நாம் அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்சவருவதுமில்லை” என்று பாடினார். அவ்வாறு பாடிய பாடல்களே "சுண்ணவெண் சந்தனச் சாந்து' என்ற திருப்பதிகம்.

இனி, இந்தப் பதிகத்தின் பாடல்கள் யாவும், ஏனைய பதிகங்களினும் பார்க்க, ஒரு தனிச் சிறப்பு உடையன. இவ்வாறு சிறப்புடைய பதிகங்கள் சில. எடுத்துக் காட்டாக முதல் பதிகத்தையே கூறலாம். “என்வேதனையான் விலக்கியிடாய்" என்ற கருத்துப் பொருந்தவே இப்பதிகத்தின் பாசுரம் ஒவ்வொன்றிலும் வேண்டுகிறார்.

அங்ஙனமே, இரண்டாம் பதிகத்தின் பாசுரம் ஒவ்வொன்றிலும் வரும் மதக்களிற்றை அஞ்சாது நோக்கி, இறைவன் தன் பராக்கிரமங்களை எடுத்துக் கூறி, "இவை யுடையார் தமர் நாம், அஞ்சுவது யாதொன்று மில்லை, அஞ்சவருவதுமில்லை'' என்று பாடுகிறார். திரிபுரதகனமாகிய பராக்கிரமச் செயல் நிகழ்ந்த இடம் திருவதிகை வீரட்டானம்.
வண்ண உரிவையுடையும் அகலம் வளாய அரவும் உடையார்.          (1)

பூண்டதோர் கேழல் எயிறும் ஆமை புரளத்தோளும் புள்ளின் சிறகும் கட்டங்கக் கொடியும் உடையார்                                             (2)

ஒத்த வடத்திள நாகம், முளைத்தெழு மூவிலை வேலும், உயர் வீரட்டம் சூழ்ந்து உடையார்                                                             (3)

மான்மறி, மழு, பாம்பு, குடமால் வரைய திண்தோளும் இருநிலன் ஏற்ற சுவடும் உடையார்                                                             (4)

கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும் வலமேந்திரண்டு சுடரும், வான்கயிலாய மலையும் உடையார்                                         (5)

கொள்ளி விளக்கும் துடியின் முழக்கும், பதினெண் கணமும் உடையார் (6)

கொலை வரி வேங்கையதளும் விலையில் கபாலக்கலனும் மணியார்ந்திலங்கு மிடறும் உடையார்                                       (7)

அறையில் அரைத்த அரவும் பாடல் பயின்ற பல் பூதம் பல்லாயிரங் கொள் கருவி நன்குயர் வீரட்டம் - சூழ்ந்து உடையார்                            (8)

அரவத் துகிலும் யாழின் மொழியாள் அஞ்ச அஞ்சாத அரு வரை போன்ற வேழ முரித்த நிலையும் வீரட்டம் சூழ்ந்து உடையார்                   (9)

நரம்பெழுகைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை உரங்களெல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் அலறச் செய்வான் வீரட்டம் சூழ்ந்து உடையார். (10)


இவ்வாறு பத்து பாசுரங்களிலும் இறையவனுடைய வீரச் செயல்களைக் கூறியிருப்பதைக் காண்கிறோம். இறைவனைத் துதிக்குங்கால் இடையே வந்த சில செய்திகளாக இவற்றைக் கொள்ள இடமில்லை. ஒவ்வொரு பாடலும் தவறாது வீரச் செய்திகளையே உரைப்பதால், அப்பர் சுவாமி கள் தம்மனத்தில் சிவபெருமானுடைய வீரச் செயல்களை நினைவுக்குக் கொண்டு வந்து அச்சமின்றி இருந்தார் என்று கருதுவதே முறை.

சிறப்பாக மூன்று செய்திகளை இங்குக் கருத வேண்டும். அவர் மீது விரைந்து ஓடிவருவது கொலைக் களிறு; அந்த நிலையில் ஐந்தாம் பாடலில் "பதைத் தெழுவார் மனத் துள்ளே கலமலக் கிட்டுத்திரியும் கணபதி என்னும் களிறும் உடையார்'' என்கிறார். இந்தக் களிறு உடையார் தமர் அந்தக் களிறுக்கு அஞ்சுவது இல்லை என்பது குறிப்பு. மேலும் சிவபிரான் 'யாழின் மொழியாள் அஞ்ச, அஞ்சாது அருவரை என வந்த வேழம் உரித்த உரியுடையான்'' அன்றியும் அவன் நங்கை நடுங்க உரங்க ளெல்லாம் கொண்டு மலையை எடுத்தான் தலைகள் ஒன்பதும் ஒன்றும் அலறச் செய்து வரங்கள் கொடுத்தான்'' என்கிறார்.

இங்கு எடுத்துக் காட்டிய செய்திகளால் அறியவருவது, அப்பர் சுவாமிகள் இத் திருப்பதிகம் முழுமையிலும் கூறும் செய்திகள் பராக்கிரமத்தைப் புலப்படுத்தும் செய்திகளே என்பது.

ஆதலால் இரண்டாம் பாசுரத்தில் வரும் செய்தியாகிய "புள்ளின் சிறகு உடையார்'' என்பதும் இத்தகைய தொன்றேயாகும். கொக்கு உருவத்தோடு வந்த ஓர் அசுரனைப் பெருமான் அழித்து, அவன் சிறகொன்றைத் தலையில் சூட்டிக் கொண்டார் என்பது பலருக்கும் தெரியாத ஒருகதை. எங்கோ ஒரு மூலையில் புராணத்தில் பயில்வது; அப்பர் சுவாமிகள் இக் கதையை அறிந்திருந்தார். பராக்கிரமத்தைக் கூறியவிடத்து இதுவும் நினைவுவரவே, இங்கு “புள்ளின் சிறகு'' என்ற சொற்களால் இதைக் குறிப்பிட்டார். இது பொருத்தமுடையதே.

ஆனால் பிற இடங்களில் யாரும் எந்தப் பாசுரத்திலும் புள்ளையோ சிறகையோ குறிப்பிடாமையால், யாருக்கும் இம் மூலக்கதை தெரியாமையால், கொக்கிறகு அசுரன் சிறகு ஆகாது. கொக்கிறகு, கொக்கிறகு மலரே அன்றி, புள்ளின் சிறகு அன்று.
சித்தாந்தம் – 1962 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment