Saturday, May 9, 2020



கொடியும் கவியும்

ந. வீ. செயராமன் எம். ஏ.,
விரிவுரையாளர், தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் நற்றமிழ் அறிஞர் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நூலாகிய கொடிக்கவியும் ஒன்று. நான்கே பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் இந்நூல் அளவில் சிறிதாயினும் சைவ சித்தாந்தக் கருத்துகளைக் தன்னகத்தே செறித்து விளங்கும் சீர்மையினால் பெருஞ் சிறப்புடையதாகும். வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப் பெருக்கும் கலைப் பெருக்கும் கொண்ட உமாபதி சிவாச்சாரியாரின் இந்நூல், மும்மலமாகிய பள்ளத்துள் வீழ்ந்திருக்கும் உயிர்கட்கெல்லாம் உணர்வரிய மெய்ஞ் ஞானமாகிய சிவ ஞானத்தை அளிக்கும் தன்மை யுடையதாகும்.

உமாபதி சிவாச்சாரியார் அந்தணர் குலத்தில் தோன்றிய அறவோர்; எல்லா உயிர்கட்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிந்தையர். மறைஞான சம்பந்தரின் மாணவர்; சைவ சமயத்திற்குரிய சந்தான குரவர்கள் நால்வருள் ஒருவர். சித்தத்தைச் சிவன்பால் செலுத்தி, சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் பொலிவும் கொண்ட உமாபதி சிவாச்சாரியார், மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். தில்லையில் நடைபெற்ற ஒரு திருவிழாவின் போது, கொடி மரத்தில் கொடி ஏறாதிருந்த நிலையில், தில்லைவாழ் அந்தணர்கள் வேண்ட, அவர் கொடிக்கவி என்ற நூலினைப் பாடிய பின்னர், கொடியுயர்த்தப்பட்டு விழா செய்யப்பட்டது என்ற வரலாற்றை இக் கொடிக்கவி என்ற நூல் எழுந்தமைக்குக் காரணமாக உரைப்பர்.

கொடியை வாழ்த்திப் பாடுவது பழந்தமிழ் மரபு. முருகப் பெருமானின் சேவற்கொடியைச் சிறப்பித்துப் பாடி வணங்கிய செய்தியை

கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்தி

எனவரும் திருமுருகாற்றுப் படையுள் நக்கீரர் கூறுகின்றார். 'கொடி பாடித் தேர்பாடி' என வரும் முத்தொள்ளாயிரச் செய்யுளும் கொடியையும், தேரையும் வாழ்த்தி வணங்கும் பழந் தமிழர் மரபை நமக்கு நன்கு விளக்குகின்றது. ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியத் துள்ளும் கொடியினை வாழ்த்திப் பாடும் பழந்தமிழ் மரபுக்குச் சான்று உள்ளது.

கொடிநீலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த் தொடு கண்ணிய வருமே.
எனவரும் சூத்திரம் இதனை நமக்குக் காட்டுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில்

மூவர் கொடியுள்ளு மொன்றொடு பொரீஇ
மேவரு மன்னவர் கொடி புகழ்ந்தன்று

என்ற சூத்திரத்தில் கொடி நிலையின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. முப்பெருங் கடவுளர்களின் கொடிகளுள் ஒன்றோடு மன்னன் கொடியை உவமித்து அதனை வாழ்த்திப் பாடுவது என்பது இச்சூத்திரத்தின் கருத்து. எனவே, இறைவனது கொடியை வாழ்த்திப் பாடுதல் பழந்தமிழ் மரபாகும் என்பதை அறிகின்றோம்.

சிவபெருமானுக்கு இடபக்கொடியும், திருமாலுக்குக் கருடக்கொடியும், பிரமனுக்கு அன்னக்கொடியும் உரியன. முப்பெருங் கடவுளர்கள் அன்றியும் பிற கடவுளர்களுக் கும் தனித் தனியே கொடிகள் விளங்குவதுபோல, பண்டு மூவேந்தர்களில் சோழனுக்குப் புலிக்கொடியும், பாண்டிய னுக்கு மீன் கொடியும், சேரனுக்கு விற் கொடியும் விளங்கின. திருவிழாக் காலங்களில் கோயில்களிலும், போர்க் காலங்களில் போர்க் களங்களிலும் தனித் தனியே கொடிகள் உயர்த்தப்படும், அங்காடியில் குறிப்பிட்ட ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு கொடி பறந்தது. அங்காடியில் விளங்கிய பல்வேறு கொடிகள் பற்றி மது ரைக் காஞ்சியும் (365 - 373) கப்பல்களில் உயர்த்தப் பட்டிருந்த கொடிகள் பற்றியும் (174 - 175) பட்டி மன் றங்களில் உயர்த்தப்பட்டிருந்த கொடிகள் பற்றியும் (169 - 171) பட்டினப்பாலையும் கூறுகின்றன. மேலும் கல்வி, கொடை முதலியவற்றிற்கும் தனித் தனிக் கொடி கள் இருந்தன. 'கூழைத் தண்டமிழுக்கேன் கொடியும் காளமும்' என வரும் தமிழ் நாவலர் சரிதை கல்விக்கென தனிக்கொடி இருந்ததைக் கூறுகின்றது. கொடைக்கென கொடைக்கொடி அல்லது தியாகக் கொடி இருந்த செய்தி யைத்'தியாகக கொடியே தனிவள ரச செயது என வரும் திகுவாரூருலாவாலும்,'தியாகக் கொடியோடு மேற்பவர் வருகென்று நிற்ப'என வரும் வீரராசேந்திரதேவர் மெய்க்கீர்த்தியாலும் அறியலாம். இங்ஙனம் ஒவ்வொன்றினையும் குறிப்பிட ஒவ்வொரு விதக்கொடி இருந்தது என்ற செய்தியை நாம் அறிகின்றோம்.

கொடியை வாழ்த்திப் பாடுவது பேரிலக்கியங்களில் மட்டுமின்றிச் சிற்றிலக்கியங்களுள்ளும் இடம் பெற்றிருக் கின்றது. தசாங்கம் என்ற சிற்றிலக்கியத்துள் பாட்டுடைத் தலைவனின் பத்து உடைமைகளை வாழ்த்திப் பாடுவது மரபு.

மலை நதி நாடூர் வளைதா ரிவுளி
கொலைமத களிறு கொடிமுர சாணை
யிவையே தசாங்க மென்மனார் புலவர்

எனவரும் இலக்கண விளக்கப் பாட்டியலால் தசாங்கங்களில் கொடியும் ஒன்று என்பதை அறிகின்றோம். எனவே தசாங்கம் என்ற சிற்றிலக்கியத்தில் பாட்டுடைத் தலைவனின் பிற உடைமைகளை வாழ்த்திப் பாடுதல் போன்று அவனது கொடியும் சிறப்பித்துக் கூறப்படும். தசாங்கம் தனி ஒரு சிற்றிலக்கியமாக வளர்ச்சியடைந்ததுடன் மட்டு மின்றி, தூதுபோன்ற சிற்றிலக்கியங்களில் ஒரு உள்ளுறுப்பாகவும் மிளிர்கின்றது. அவற்றுள்ளும் பாட்டுடைத் 'தலைவனின் கொடி வாழ்த்திக் கூறப்படுகின்றது.

எண்வகை மங்கலப் பொருள்களுள் ஒன்றாகவும் கொடி விளங்குகின்றது. விளக்கு, கவரி, கண்ணாடி, தோட்டி, இணைக்கயல், முரசு, நிறைகுடம், கொடி என எண்வகை மங்கலப் பொருள்கள் இன்னின்னவை எனச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது. விளக்கு முதலிய பிற மங்கலப் பொருள்களுடன் கொடியையும் ஒரு மங்கலப் பொருளாகச் சேர்த்து வைத்த பழந்தமிழர் பண்பு அறிந்து இன்புறுதற் குரியதாகும். இங்ஙனம் தசாங் கங்களுள் ஒன்றாகவும், அட்டமங்கலங்களுள் ஒன்றாகவும் கொடி விளங்குகின்றது.

காப்பிய ஆசிரியர்கள், கொடியைக் கதை நிகழ்ச்சியை முன்னரே குறிப்பால் விளக்குகின்ற ஒருகருவியாகத் தங்கள் காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளனர். இராமன் மிதிலை நகருள் முனிவரோடும், தம்பியோடும் செல்கின்ற பொழுது நகர மதிலின் மீது உயர்த்தப் பட்டிருந்த கொடிகள் இராமனை நோக்கி,'விரைந்து வா என்று அழைப்பது போல் விளங்கின என்று கம்பர் கூறுகின்றார்.

மையறு மலரின் நீங்கி யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணி கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பது போன்ற தம்மா

எனவரும் பாடலில் இராமனுக்கும், சீதைக்கும் நிகழ விருக்கும் திருமணமாகிய மங்கலச் செய்தியை நமக்குக் குறிப்பாக உணர்த்த கம்பர் கொடியைப் பயன்படுத்தியுள்ள பாங்கு அறிந்து இன்புறத்தக்கதாகும். கோவலன் மதுரை நகரின் புறஞ்சேரி சென்று இறுத்தகாலை, மதுரை நகர மதில்மீது உயர்த்தப்பட்ட கொடிகள் கோவலனை நோக்கி, 'வராதே' என்று தடுப்பனபோல் அசைந்து ஆடின என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்.

போருழந் தெடுத்த வாரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட

என்ற இப்பகுதியில் மதுரை நகருக்குள் கோவலன் செல்வதால் கொலைப்படுவான் என்ற அவலச் செய்தியை நமக்குக் குறிப்பாக உணர்த்த இளங்கோவடிகள் கொடியைப் பயன்படுத்தியுள்ளார். இங்ஙனமே வில்லிப்புத்தூராழ்வாரும் கொடியைப் பயன்படுத்தியுள்ளார். பாரதப் போரின் போது, கண்ணனைத் தம் பக்கம் சேர்த்துக் கொள்ள எண்ணிய துரியோதனன் அதுபற்றிக் கேட்க, கண்ணனின் இருப்பிடம் வருகின்றான். மதிற் கொடிகள் அதுசமயம் ஆடுவது, கண்ணன் துரியோதனாதியர் பக்கல் சாரமாட்டான் என்பதை அவனுக்கு உணர்த்துவது போல் இருந்தது என்று கூறுகின்றார். இதனை

ஈண்டுநீ வரினு மெங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான்
மீண்டுபோ கென்றன் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற''

என வரும் பாடலில் வில்லிப்புத்தூரார் விளக்கியுள்ளார். இங்ஙனம் கதை நிகழ்ச்சியைக் குறிப்பால் முன்னரே உணர்த்தும் கருவியாகக் காப்பிய ஆசிரியர்கள் கொடியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இனி, மூவர் முதலிகளுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமான் ஒருமுறை திருவீழிமிழலை சென்றிருந்த பொழுது அங்கே குன்றேய்க்கும் நெடுவெண் மாடக் கொடி களைக் கண்டார். அக்கொடிகள் இறைவனை இறைஞ்சீர் என்று விண்ணுலகத்தவரை நோக்கி விளிப்பன போன்று அப்பெருமானுக்குத் தோன்றியது.

காணுமா றரிய பெருமானாகிக் காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை யுத்தமனை யிறைஞ்சீ ரென்று
வேணுவார் கொடி விண்ணோர்தமை விளிப்ப போலோங்கு மிழலையாமே"

என வரும் பாடலில் ஞானசம்பந்தப் பெருமானின் அகத் திரையில் எழுந்த ஞானக்காட்சியை நாம் காண்கிறோம்.

உமாபதி சிவாச்சாரியார் இயற்றியுள்ள கொடிக்கவி கொடியைச் சிறப்பித்துப் பாடுவதாகவோ, இறைவனின் இடபக் கொடியோடு பிறிதொரு கொடியை உவமித்துப் பாடுவதாகவோ அமையவில்லை என்பது யாவரும் அறிந்ததே. மும்மலக் கடலில் மூழ்கிக் கிடக்கும் உயிர்கள் பஞ் சாக்கரத் திருமந்திரத்தை ஓதி பவமதனை அறமாற்றும் திருப்பெருகு சிவஞானம் பெறலாம் என்ற சித்தாந்தக் கருத்தினை உணர்த்துவதாக இந்நூல் உள்ளது. உயிர்கள் அருள் பெறுவதற்கு விழா நடத்துதல் வேண்டும். விழா நடப்பதற்கு முன்னோடியாகக் கொடி ஏற்றுதல் வேண் டும் என்ற முறையில்,

'திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படிக்
கொடி கட்டினேனே'

என்று உமாபதி சிவாச்சாரியார் பாடியுள்ளது அறிதற் குரியதாகும்.

இறைவன் திருவுருவைப் பதியாகவும், நந்தியின் திருவுருவைப் பசுவாகவும், பலிபீடத்தைப் பாசமாகவும் உருவகித்து சைவ சித்தாந்த முப்பொருள் உண்மையை இந்த அமைப்பு விளக்கி நிற்கின்றது என்று சைவப் பேரறிஞர்கள் கூறுவர். அங்ஙனமே கொடிக்கம்பத்தைப் பதியாகவும், கம்பத்தில் பறக்கின்ற இடபக் கொடியைப் பசுவாகவும், கொடியையும், கம்பத்தையும் இணைக்கும் கயிற்றைப் பாசமாகவும் கொண்டு சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையை ஒருசேர விளக்கி நிற்கும் ஒரு திருவுருவமாகக் கொடி மரத்தைக் கொள்ளலாம். கோவில்களில் கர்ப்பக் கிரகத்தின் எதிரேயுள்ள இக்கொடிக் கம்பத்தில் ஒளி வீசிப் பறக்கும் இடபக்கொடி உயிர்களுக்கு அருள் நல்க உயர்த்தப்பட்ட தியாகக் கொடியாக, அருள் கொடியாக விளங்குகின்றது.

சித்தாந்தம் – 1964 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment