Saturday, May 9, 2020



கோகழி

[பத்திராசிரியர்]

கோகழி என்ற தலம் எங்குளது? மாணிக்கவாசக சுவாமி கள் இத்தலத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர். திருவாசகத்திற் பல இடங்களில் இத்தலத்தின் குறிப்பு வருகின்றது. சிவபுராணம் மூன்றாம் அடியில் "கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க" என்றும், போற்றித் திரு அகவல் 157 - வது அடியில் “கோகழி மேவிய கோவே போற்றி" என்றும், குயிற்பத்தில் 6 - வதுபாட்டில் "கொம் .... குயிலே கோகழி நாதனைக் கூவாய்" என்றும், பண் ..... முதற்பாட்டில் "கோகழி எங் கோமாற்கு" என்றும், ... ''நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் .... கோகழிக்கரசை " என்றும் இத்தலக் குறிப்பு ..... புலவர்கள் கோ + கழி என்று பிரித்து அவன்துறை யென்றும் பெருந்துறை யென்றும் பொருள் கொண்டனர். கோ - ஆ. பெரிய; கழி = துறை என்பது அவர்கள் கருத்து. கோகழி என்ற பெயரோடு இன்றும் ஓர் ஊர் கூறப்படுமாயின். இவ்வாறு பிரித்து ஆவடுதுறைக்கும் பெருந்துறைக்கும் வலிந்து பொருத்த வேண்டியதில்லை. திருவாசகத்துள் யாண்டும் ஆவடுதுறை கூறப் படவில்லை. வெளிப்படையாக அவ்வாறு கூறப்படாத ஒரு தலததை இவ்வாறு வலிந்து கோடல் எற்றுக்கு? மேற்கூறிய பண்டாய நான் மறை ஐந்தாம் பாட்டில் “நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல, எண்ணிஎழு கோகழிக் கரசை'' என்ற பகுதியை நோக்கினால், பெருந்துறையும் கோகழியும் அடுத்தடுத்து முதலடி இரண்டாவதடிகளில் வருவதால், இரண்டும் ஒரே தலம் என்று கூறு வதற்கு மிகுந்த துணிவு வேண்டும். மேலும் பெருந்துறை என்ற பெயர் திருவாசகத்துள் சுமார் நூற்றுக்கு மேலான இடங்களில் வருவதால், மேற்கூறிய ஐந்திடங்களில் மட்டும் இவ்வாறு மாற்றிக் - வேண்டிய அவசியமென்ன! சிவபுராணத்துள் மூன்றாம் அடியில் பெருந்துறை என்று வெளிப்படையாகக் கூறாமல் கோகழி என்று மறைத்துக் கூறவேண்டிய நெருக்கடியும் அவசியமும் மாணிக்கவாசகருக்கு ஏற்பட்டதென்று ஏன் கொள்ள வேண்டும்? இவ்வாறு பல வழிகளிலும் சிந்தித்தால், கோகழி என்ற பெயரோடு இன்றும் வழங்கப்படும் ஓர் ஊரையே மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்ற முடிபுக்கே நடுநிலையில் நிற்போர் ஒவ்வொருவரும் வருவர். இத்தலம் எங்குளது?

கன்னர தேசத்தில் பல்லாரி ஜில்லாவில் ஹடகள்ளி தாலுகாவில் கோகழி என்ற தலம் உள்ளது. இது ஹொஸப்பேட் (Hospet) ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ளது. இவ்வூரிலும் இதைச் சுற்றிலுமுள்ள கல்வெட்டுக்களிலிருந்து இவ்வூரின் பெயர் கோகழி என்பது விளங்குகின்றது. இன்றும் இவ்வூர் இப்பெயரால் அழைக்கப்படுகின்றது. இவ்வூருக் கருகில் சுமார் 20 மைல் தொலைவில் நேச நாயனார் திருவவதாரத் தல மாகிய காம்பீலி உள்ளது. இராவணனால் அசைக்கமுடியாமற் போன மஹாபலேசுவரர் வீற்றிருக்கும் திருக்கோகர்ணமும் கன்னர நாட்டிலுள்ளதே. பல்லாரிக் கோட்டையிலுள்ள திருக்கோயிலில் அறுபத்து மூவர் சரிதம் மதிற்சுவரில் சித்திரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னர நாட்டிலுள்ள நஞ்சன் குடியில் அறுபத்து மூவர் சிலைகள் சிவாலயத்தில் மிகப் பெரிய உருவங்களாக உள்ளன. அககாலத்துல கனனர தேசம் தமிழ் வழங்கும் நாடாகவே இருந்தது. Caldwell முதலிய ஆராய்ச்சியாளர்கள் கன்னர மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைப் பகுதிகளை விளக்கியுள்ளனர். இற்றைக்கும் கன்னரதேசம் சிறந்த வீர சைவ நாடாகவே திகழ்கின்றது. கோகழியிலும் இன்று வீர சைவ சமயமே விளக்கமுற்றிருக்கின்றது.

கோகழியைப் பற்றிய குறிப்புள்ள சில கல்வெட்டுக்களை இனி ஆராய்வாம். (496 / 1914) என்ற கல்வெட்டில் கி. பி. 1158 - ல் மகா மண்டலேசுவர வீரபாண்டிய தேவன் கோகழி நாட்டையும் சூழ்ந் துள்ள நாடுகளையும் ஆண்டான் என்ற குறிப்புள்ளது. இவ்வாறே 450 / 1914, 86 / 1904, 107 / 1904, 113 / 1913, 118 / 1913 முதலிய பல கல்வெட்டுக்களில் கோகழி நாட்டு மன்னர்கள் பாண்டியர்கள் என்றே கூறப்பட்டுள்ளனர். கி. பி. 1087 - லும் கி. பி. 1125 - லும் ஏற்பட்ட சாசனங்களிற் கோகழி நாட்டிலுள்ள சில கிராமங்கள் திராவிட தேசத்துப் பிராமணர்கட்குத் தானம் செய்யப்பட்ட விவரம் கூறப்படுகின்றது. இது எபிக்ராபிகா இண்டிகா என்ற வெளியிட்டின் 12 - வது தொகுதியில் 142 - 155 பக்கங்களில் காணப்படுகின் றது. 441 / 1914, 443 / 1914 என்ற கல்வெட்டுக்களில் கோகழியில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்த மலையாள பண்டிதருடைய சீடர் ஞானேசுவர பண்டிதருடைய சீடர் சோமேசுவர பண்டிதருக்கு நிலம் தானமாகத் தரப்பட்ட விவரம் காணப்படுகின்றது. மேற் கூறிய மலையாள பண்டிதர் லகுலீச குருமரபைச் சார்ந்தவரென்றும் கோகழி நாட்டுப் பெருங்குரவராகத் திகழ்ந்தவரென்றும் கூறப்படுகின்றனர். இன்றைக்கும் பல பழைய மடங்கள் இருந்த குறிப்புக்கள் பல கோகழியிற் காணப்படுகின்றன. மேற்கூறிய கல்வெட்டுக்களிலிருந்து நான்கு விஷயங்கள் தெளிவாகின்றன: - (1) கோகழி நாட்டு மன்னர்கள் பாண்டியர்கள் என்று கூறப்பெற்றமை. (2) கோகழி நாட்டில் திராவிட தேசத்துப் பிராமணர்கட்கு நிலதானம் செய்யப்பட்டமை. (3) கோகழி நாட்டில் பல மடங்களும் குருமார்களும் விளங்கியமை. (4) கோகழி நாட்டில் சைவம் நன்றாகப் பொலிவுற்றிருந்தமை.

மாணிக்கவாசகர் காலம் மூவர் முதலிகட்கு முந்தியதென்றும் பிந்தியதென்றும் இரண்டு கொள்கைகள் உண்டு. பிந்தியதாயின் மேற்கூறிய கல்வெட்டுக்கள் பெருந்துணை செய்யும். முந்தியதா யின் கன்னர நாட்டுக்கும் தென்பாண்டி நாட்டுக்கும் தேவார காலத் துக்கு முந்தியே ஏற்பட்ட தொடர்பு நினைவுகூர்தற்குரியது. பெரிய புராணத்துள் மூர்த்தி நாயனார் புராணத்தில் 11, 12 - வது பாடல் களைக் கொண்டு "கானக்கடி சூழ்வடுகக் கருநாடர் காவல்மானப் படைமன்னன்........ தமிழ்நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்று......... மதுராபுரி காவல் கொண்டான்'  என்ற செய்தி புலப்படுகின்றது. கல்வெட்டுச் சான்றாலும் இது வலியுறுத்தப்படுகின்றது. (Kalabhara Interregnum) என்று சரித்திர ஆராய்ச்சியாளர் இந்நிகழ்ச்சியைக் குறிக்கின்றனர். பாண்டி நாட்டுக்குள் சமண சமயம் புகுந்ததும் இக்காலத்திலேதான். எனவே தேவார காலத்துக்கு முன்பாகவே பாண்டி நாட்டுக்கும் வடுகக் கருநாடருக்கும் தொடர்பேற்பட்டது ஒப்புக்கொள்ளக் கூடிய செய்தியேயாம். அக்காலத்திலிருந்தே கருநாடர்தேயத்தவர் பாண்டி நாட்டிலும், பாண்டி நாட்டவர் கருநாடர் தேயத்திலும் குடியேறிக் கலப்புற்றிருத்தல் இயல்பு. இவ்வாறு இருநாட்டவரும் கலப்புற்ற பிறகு, திருவாதவரிலே அவதரித்தவர் மாணிக்கவாசகர். இவர் கன்னர அந்தணர் என்றோ வீர சைவர் என்றோ கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டு அந்தணர் குடியிலே சைவ சித்தாந்த சமயத்திலே பிறந்தவராகவே கொள்ளலாம். அக்காலத்திய கருநாடர் நாகரிகக் கலப்பில் கோகழி என்ற கருநாடர் தலத்தின் பெருமையும் வரலாறு களும் வாதவூரடிகளுடைய மனதைக் கவர்ந்திருக்கலாம். அரச அம் மந்திரி யென்ற முறையில் பல சௌகரியங்களோடு இவா கோகழி சென்று தரிசித்துமிருக்கலாம். தேவார காலத்துக்கு முன்னும் பின்னும் கோகழி நாட்டுக்கும் பாண்டி நாட்டுக்கும் இருந்த வந்தணர், அரசியல் முதலிய தொடர்புகள், வாதவூரடிகள் பல்லார் அல்லாவிலுள்ள கோகழியைக் குறித்திருக்கலாம் என்ற ஊகம் வலி பெறுமாறு செய்கின்றன.

இதை அற்றுத்தீர்ந்த முடிந்த முடிபாக எவரும் கொள்ளுதல் கூடாது. மேற்கூறியவைகளைத் தத்தம் ஆராய்ச்சியில் வைத்து, உண்மை நோக்குடன் ஒவ்வொருவரும் தெள்ளித் தேறி, நடுநிலை நின்று, வாதவூரடிகள் வழுத்திய கோகழி யாண்டுளதென்பதை பறியுமாறு கோகழியாண்ட குருமணி அருள்புரிக.

சித்தாந்தம் – 1944 ௵ - மே ௴


No comments:

Post a Comment