Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
கோபம்.

இவ்வுலகத்தி லக்கினியானது சரீரத்தை மாத்திரம் தகிக்கக்கூடியது. கோபாக்கினியானது உள்ளத்தையும் உயிரையும் சரீரத்தையுந் தகிக்கக் கூடியது. அறிவிற்சிறந்த'விவேகிகளுக்கும் கோபமெழுந்த காலத்துத் தங்கள் நிலை தடுமாறி மனமும் குடரும் கரிந்து உலகெலாம் நடுங்கும்படி தாமொருவழி தமது ஆடை ஒருவழி போகவும் அவர்பெருந்தன்மையாவை யும் குறையும்படி செய்கிறது.

அல்லாமலும் தீபம்போற் பிரகாசிக்கும் தபோதனரிடத்துக் கோபம் பிரவேசித்து அயலோர் பதைபதைத்து உயிர்போம்படியான சாபத்தைக் கொடுத்து அவர் செய்த அரிய தவங்களையும் ஒழியும்படிசெய்கறது.

விஸ்வாமித்திரன் வதிட்டமகாமுனிவரிடம் கொண்ட குரோதத்தால் சத்தியசீலனாகிய அரிச்சந்திர மகாராஜனுக்கும் கற்பிற்சிறந்த மாதுசிரோ மணியாகிய சந்திரமதியாருக்கும் செய்யத்தகாத கொடுமைகளைச் செய்து தன் றவத்தையிழந்தனன்.

"கோபத்தாற் கௌசிகன் றவத்தைக் கொட்டினான்
கோபத்தால் நகுடனுங் கோல மாறினான்
கோபத்தா லிந்திரன் குலிசம்'போக்கினான்'
கோபத்தா லிறந்தவர் கோடி கோடியே. "

இதுவல்லாமலும் தக்கனென்பவன் பிரமபுத்திரனாயும் தவசிரேட்டனாயும், அம்பிகையே மகளா யவன்பால வதாரஞ் செய்தும் சிவபெருமானையே மிருமகனாகப் பெற்றிருந்தும் அக்கைலாயபதியானவர் தன்னை மாமனாரென்றுமதித்து உபசரணை முதலியவுஞ் செய்யவில்லையென அப்பெருமானை யவமதித்துக் கோபங்கொண்டு சிவபெருமானுக்கு யாகாவிர்ப்பாகங் கொடுப்பதில்லை யென்று கூறி அவரை நீக்கயோர் - யாகஞ்செய்ய வீரபத்திரரால் தலையிழந்தான்.

“தாவு சினத்தாற் றலையிழந்தான். றக்கனுமா
தேவி மகளாயுஞ் சிவசிவர் - வாவன் மிகுந்
தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம். "

இக்காலத்திலும் மன்னர் மன்னர்களெல்லாம் கோபத்தினாலேயே நாடு நகரங்கள், செல்வங்கள், அனுபவிக்கும் போகங்கள் சேனாசைன்யம் முதலானவைகளையிழப்பதும் அன்றித் தங்களாருயிரையுந் துறக்கின்றனர் இதையுங்காண்கிறோம். இவ்வுலகத்தில் மனிதர்களுக்குக் கோபமுண்டாவ தற்குப் பலமுகாந்திரங்களுண்டு. தாங்களெத் தனித்த காரியத்துக் கிடை யூறு செய்தவர்மீதும் மனைவி புத்திரர் முதலான உயிர்ச்சார்புக்குக் கெடுதி செய்தவர்மீதும் தன்னைவை தவர்மீதும் அடித்தவர்மீது மின்னஞ்சிலமுகாந் தரங்களாலும் கோபமுண்டாகிறது.

“கோபமே பாபங்களுக்கெலாந் தாய் தந்தைகோபமே குடிகெடுக்கும்
கோபமே யொன்றையுங் கூடிவரவொட்டாது கோபமே துயர்கொடுக்கும்
கோபமே பொல்லாது கோபமேசீர்கேடு கோபமே யுறவறுக்குங்
கோபமே பழிசெயுங் கோபமேபகையாளி கோபமே கருணைபோக்குங்
கோபமே யீன மாங் கோபமேயெவரையுங் கூடாம லொருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய் தீய நரகக் குழியினிற்றள்ளுமால்.”

கோபத்தா லிருமையிலும் யிவ்வுலகத்தும் மனிதர்கள் பெருங்கேடடைவரென்பது நிச்சயம். ஆனதால் கோபத்தின் வழியே தான் செல்லுதல் குணமல்ல. கோபத்தையடக்கிப் பொறுமையோடிருத்தலே மேலான குணம்.

“உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்கரத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளந்
தடுத்தலரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.''  

தன்னினும் தாழ்ந்தவரை ஒருவன் கண்டனை தண்டனை செய்யச் செல்லும்போது தன்னினுமேற்பட்டவரிடத் தஞ்சி நிற்குந் தனது நிலமையை யோசிக்கவேண்டும்.

"வலியார் முற்றன்னை நினைக்கத்தான் றன்னின்
மெலியார் மேற்செல்லு மிடத்து.''

அல்லாமலும் பெரியோர் சமுகத்துச் செல்லும் நம் கோபமானது எப்படியாகுமென்றால், ஒரு சிறுகோலெடுத்துக் கொண்டு பெரியமலையைத் தள்ள நினைப்பதை யொக்கும். அல்லது தன்னை யொத்தவரிடத்துச் செல்லும் கோபமானது தானெவ்வளவு கெடுதியவர்க்குச் செய்கின்றனனோ அவ்வளவு கெடுதியவராலடைவன். தன்னினுந் தாழ்ந்தவரிடத்துக் கோபத்தைச் செலுத்துவானாயின், இம்மையில் பழியும் மறுமையில் நரகத்தையுமடைவான் ஆனதால் யாவரிடத்தும் கோபமில்லாதிருத்தல் நல்லது.

பெரியவர் தம்மைக் காய்ந்தால் பிறங்கல்கல்லிய கோலொப்பன்
புரிவன புரியப்பட்டுப் புலம்புவ னொத்தார் காய்ந்தால்
எரிநரகதனில் வீழ்வனெளியரைக் காய்ந்தா னென்றால்
ஒருவர்த மிடத்துஞ் சீற்றமுறாமையே நன்று மாதோ.
நாம் பிறர்க்கு ஒருவிதத்திலும் தீங்கு செய்யாதிருக்க அவர் நம்மை அநீதியாகவைதால் நாமெவ்வாறு பொறுத்திருப்பது என்றால், கீழ்மக்கள் அறிவிற்சிறந்த பெரியோர்களைப் புன்மொழிகளால் வைவாராயின் மீட்டு மவ்விழிவான சொற்களைக் கொண்டவரைவையார். எதுபோலெனில், இவ் வுலகத்தில் கீழான நாயானது ஒருவரைக் கடித்தால் அந்நாயைத் திருப் பிக்கடிப்போரில்லை.

“கூர்த்து நாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயால்
பேர்த்து நாய் கௌவினா ரீங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்க டம்வாயான் மீட்டு.

அல்லாமலும் குற்றம் பொருந்திய நாவுடையார் தகாதவார்த்தை சொன்னாலவரோடு பேசாதிருத்தலே யறிவுடையார்க்குப் பெருந்தன்மை. இதுவல்லாமலும் பெரியோர்கள் தம்மையிகழ்ந்து பேசியவர்களைப் பார்த் துத்தாம் பொறுப்பதுமன்றி ஐயோ யெம்மையிகழ்ந்த தீவினைப்பயனால் இவன் மறுமையில் நரகத்தை யடையப்போகிறானென்று இரக்கமுங்கொள் வார்கள்.

“தம்மை யிகழ்ந்தமைத்தாம் பொறுப்பதன்றிமற்,
றெம்மையிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை
யெரிவாய் நிரையத்து வீழ்வர்கொ லென்று
பரிவதூஉஞ் சான்றோர் கடன்.''

இதுவல்லாமலும் ஒருவர் சொல்லும் கடுமொழியும் நம்மெதிரில் வந்து நின்றுகொண்டு நமக்குத் தீங்குசெய்கிறதா. அல்லாமலும் அன் னியபாஷையில் ஒருவன் நம்மைவை தால் அப்பாஷை நமக்குத் தெரியாத தால், நாம் கோபங்கொள்ளாது சத்தமாத்திரங் கேட்கிறோம். பட்சிசாதி களின் சத்தம்போலக் கொள்ளலாமென்று மேற்படுகிறது. இதுவரையிலு மோர் முகாந்தரமின்றிக் தம்மையொருவர் வைதகாலத்தும் தாமவரை மீண்டுங் வையப்படாததொடு அவர் தம்மை வை ததைப்பற்றி மறுமையில் நரகத்தை யடைவரென அறிவுடையோர்க ளிரங்குவரென்பதும் அல்லாமலும் பிறர்சொல்லும் கடுமொழியை அன்னியபாஷையின் வார்த்தை போலும் காக்கை குருவியின் சத்தம்போலும் கொள்ளவேண்டுமென்று மவ்வார்த்தையானது நம்மெதிரில் வந்துநின்று நமக்குத் தீங்கு செய்யவில்லை யென்று மேற்பட்டது. ஆனால் பிறர்சொல்லும் கடுமொழிகளைப் பொறுத் துக்கொள்வதினால் நமக்கிம்மை மறுமைகளிற் பலனுளதோவெனில் உண்டு. யாதெனில் நல்வழியைக் கடந்தார் வாயிலுண்டாகும் கடுமொழிகளைப் பொறுப்போர் மூவாசையு முற்றத் துறந்த மகான்களைக்காட்டிலு மிம்மை யில் பரிசுத்த குணமுடையராவர்.

“துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொன் னோற்கிற் பவர்.
அல்லாமலும் சாந்திராயணவிரதம், சோமவாரவிரதம், சஷ்டிவிரதம், கிரிச்சரம் முதலான பலவிரதங்களையு மனுட்டித்து அதனாலாகாரம் நித் திரை முதலானவைகளை யொழித்துத் தேகத்தை விளைக்கச்செய்யு மறிவுடை யார் பெரியோர். அவர் மறுமையிலடையும்பலனும் விசேடம். ஆனாலிவரைக் காட்டிலும் மேலானவர்களும் பெரும்பலனடையக் கூடியவர்களு முளர்யா ரெனில் பிறர்கடுமொழிகளை பொறுப்போர்.

'உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச் சொன்னோற் பாரிற்பின்.''

ஆனாலிவ்வரிய பாவினங்களினாலேயே பொறுமையுடையார்க்கு இருமையிலும் பெரும்பலனுளதென் றேற்படுகிறது. ஆனாலிதுவரையிலும் சொன்னதில் பிறர் கடுமொழிகளைப் பொறுத்துக்கொள்ளுவோமதிற் றடை யில்லை. ஆனால் பிறர் நமக்குத் தேகாந்திரியம் வரையில் தீங்கான காரியங் களையே செய்தால் நாமதுவிஷயமாய்க்கோபங்கொண்டு அவர்க்குத் தீங்கான காரியத்தைச் செய்யா திருக்கவுங் கூடுமோவெனிற் கூடும். அறிவுடையோர்கள் தமக்கெப்போதுந் தீங்குசெய்வோர்க்கும் உபகாரமே செய்து காப்பாற்றுவார். எதுபோலெனில், “ஒருமரத்தின் கிளையை ஒருவன் ஒருபால்வெட்டுந்தோறும் அம்மரத்தின் வேரொருகிளை வெட்டப்பட்டவனுக்கே நிழலைத் தருகிறது.

சாந்தனையும் தீயனவே செய்திடினுந் தாமவரை
யாந்தனையுங் காப்ப ரறிவுடையோர் - - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம். "

''கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.''

உபகாரஞ் செய்ததனை யோராதே தங்க
ணபகார மாற்றுச் செயினு - முபகாரந்
தாஞ்செய்வ தல்லா தவற்றினாற் றீங்கூக்கல்
வான்றோய் குடிப்பிறந் தார்க்கில்.''

ஆனாலிப்படி தங்கட்குத் தீங்குசெய்த விடத்தும் உபகாரமே செய்யு மகான்கள் உலகத்திலுண்டோவெனிலுண்டு. அதைச்சொல்லுவோம். நம் திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமண்சமையத்துட்புகுந்த பல்லவர்கோனென் னுமரசன் சமணர்களது துற்போதனையைக் கேட்டுப் பழிபாவத்துக் கஞ்சாமல் சுவாமிகளை நீற்றறையிலிட்டும், விடங்கலந்தபாலைக்கொடுத்தும், தனது யானையைக்கொலைசெய்யும்படி யேவியும், கடைசியாகக் கல்லிற்பிணித்து நடு சமுத்திரத்திற்றள்ளியும் நம் வீரட்டானேச்சுரனது திருவருளினால் இவ் விபத்துக்களெல்லா வற்றினும் நின்று நீங்கிக் கரையேறியகாலத்து அதைக் கண்ட பல்லவர்கோனென்னு மரசன் மிகப்பயத்தையடைந்து அப்பெரியா ரது பாதத்தில் விழுந்து பணிந்து சுவாமிகாள் சமணர்களது துற்போதனை யால் தேவரீர்பெருமையறியாது அடாத காரியஞ்செய்தேன், அடிமையின் குற்றமெலாம் பொறுத்துத் தங்கட்கடிமையாக்கிக் கொள்ளல் வேண்டு மெனச்சுவாமிகள் சிறிது மவன் குற்றத்தைக்கவனியாது விபூதி ருத்ராக்கதா ரணஞ் செய்து பஞ்சாக்கரவுபதேசமுஞ் செய்வித்துப் பழையபடியே அவனைச் சமையத்தனாக்கினார்.

“பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரிதோய்வன்ன வின்னா செவினும்
புணரின் வெகுளாமை நன்று.

இதுவல்லாமலும் மெய்ப்பொருள் நாயனாருடன் பல தரமும் யுத்தஞ் செய்து தோற்றுப்போன முத்தநாதனென்பவன் அவரை வஞ்சகத்தால் வெல்லக்கருதிப் பசுவானது புலித்தோலைப் போர்த்துப் பயிரை மேய்வது போல் சிவனடியார் வேடம்பூண்டு இராஜவரண்மனையில் பலகாவலையுங் கடந்து அரசனும் அரசியும் சயனித்திருக்கு மறைக்குட் செல்ல, உடனே தேவியார் அரசனை யெழுப்ப மன்னனும் வந்தபெரியாரை வணங்கிநிற்க அதற்கவ னுங்கள் நாயகனாருரைத்த வாகம நூலிதுவரையில் வெளிவராத தொன்றுனக் குபதேசிக்கக் கொண்டுவந்தேன் அது ஏகாந்தமாயிருந்து நான் சொல்ல நீ கேட்கவேண்டுமென அவ்வாறேமன்னவன் பத்தினியை அந்தப்புர மனுப்பிவிட்டு அவனை உயர்வாகிய ஆசனத்திருத்தித் தான் கீழே நின்று வணங்கிக்கேட்க, அப்பா தகன் புத்தக மவிழ்ப்பான் போலப் பத்திரம் வாங்கித்தான் முன் நினைந்த வப்பரிசேசெய்ய மெய்த்தவவேடமே மெய்ப் பொருளெனத் தொழுது வீழ்ந்தார். அதைக்கண்ணுற்ற தத்தன் அப்பாதகனைத் தன் வாளாயுதத்தா லொரேவெட்டாக வெட்டப்போனான், அப்போது நாயனார் தத்தா! நம்தமரென த்தடுக்க அரசனுத்தரவின் மீது அப்பாதகனுக் கோரிடையூறுஞ் செய்யாமல் நகர்க்கு வெளியே கொண்டுபோய்விட்டு அச்செய்தி அரசனுக்குவந்து சொல்லப் பிறகு பார்த்திபனும் பரசிவப்பிரபு வின் றிருவடிநிழலைச்சேர்ந்தார்.

“ஒட்டலன் செய் தீமைக் கொறாது நம ரென் றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஒருத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.''

இப்பெரியோர்களது திவ்ய சரிதத்தால் பிறர் தமக்குத் தீங்கு செயினும் தாமவர்க்குத் தீங்குசெய்தல் கூடாதெனச் செவ்வனே தெரிகின்றது. இதுவல்லாமலுல் பிறரால் நமக்கு நன்மை தீமைவருதற் கேதுவான சில அருமையான காரணங்களைக் கூறுவாம், இதைத்தான் மிகவும் கவனித்தல் வேண்டும். இவ்வுலகத்தில் நாமுற் பிறப்பில் செய்த நல்வினை தீவினைக் கீடாக இப்பிறப்பில் சிவபெருமானானவர் பஞ்சகிர்த் தியங்களை, அவன் அவள், அது, என்னும் ஜீவர்கள் முன்னிலையில் நமக்கு நல்வினைவருங்கால் நல்லதையும் தீவினைவருங்கால் தீமைகளையும் நடத்துவிக்கிறார். அது அறி யாமலே யெய்தவனிருக்கவம்பை நோதல் போல நமக்கு நன்மை செய்தவரிடத்து வெறுப்புக் கொள்ளுகிறோம், இங்ஙனமெண்ணுதல் மேலும் மேலும் நமக்குப் பிறவியை யுண்டு பண்ணுதற் கேதுவான அறியாமையேயாம்.

அறிவிற்சிறந்த பெரியோர்கள் நல்வினை தீவினைவருங்காலத்துச் சீவச் செயலை நாடாது சிவச்செயலை நாடி மகிழ்ச்சி வாட்டமின்றி யிருப்பார்கள்.

அல்லாமலும் இந்தவினையானது, இன்னவூரிலே, இன்னகாலத்திலே இன்னவிதமாக, இன்ன முன்னிலையில் வருமென்றறிந்து அவ்வினையை யவ் ஆரில் அக்காலத்து அவ்விதமாக அதன் முன்னிலையில் சிறிது மாறுபாடின்றி இறைவன் நடத்துவிக்கிறார்.

இன்னவினையின்ன தலத் தின்னபொழு தின்னபடி –
யின்ன தனா லெய்து மெனவறிந்தே - யன்னவினை
யன்ன தலத் தன்னபொழு தன்னபடி யன்ன தனாற்
பின்ன மறக் கூட்டும் பிரான்..

சும்மா தனுவருமோ சும்மாபிணி வருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் - நம்மான் முன்
செய்தவினைக் கீடாச்சிவனருள் செய்விப்ப தென்றா
லெய்தவனை நாடியிரு.

பேராயிரமுடைய பெம்மானைச் சோணகிரி
யாராவமுதை யறியாமல் - வாராது
தீது நலமுந் தெரியுங்கா னெஞ்சமே
யேது மவ னென்றே யிரு.

ஜீவர்கள் முன்செய்த கர்மத்துக்கீடாக பரமசிவம் காலதேசம் முதலானவைகளறிந்து ஓர் முன்னிலையாக நடத்து விக்கிறபடியால் சீவச்செயலை நாடாது சிவச்செயலை நாடவேணுமென் றேற்படுகிறது. இதுவல்லாமலும் ஒருவருக்குத் தீவினை வருங்காலத்துத் தாய்முலைப்பாலே பகையாய் உயிரைப் போக்குகின்றது. நல்வினை வருங்காலத்து விடமுமமிர்தமாகின்றது. தாய்ப்பாலே தலைக்கேறிப் பிள்ளையிரப்பதும், விடமுண்டுபிழைப்பதும் உலகத்தில் பார்த்திருக்கிறோம்.

ஊழ்வினை யுறுத்தகாலத் துறு தவத்தீன்ற நற்றாய்
வீழ்முலை சுரந்தபாலு முண்ட்பின் வெய்ய நஞ்சா
மாழ்கடற் பிறந்த நஞ்சு முண்டபின் னமிர்தமென்றால்
வாழிய மாந்தரெல்லா மிருவினை வயத்தர் மன்னா.
ஆனால் மேற்சொன்ன பாவினத்தால் ஒருவருக்கு தீவினை வருங்காலத்து வேண்டியவர் செய்யும் நன்மையும் கெடுதியாகவே முடிகிறதென்றும், நல்வினை வருங்காலத்துப் பகைவர்செய்யுங் கெடுதியும் நன்மையாகவே முடிகிறதென்று மேற்படுகிறது.

ஆனாலிவ்வுலகத்தில் சிலர் தங்களுக்கொருவர் தீங்குசெய்தகாலத்தும் வைதகாலத்தும் அப்போததற்குச்சிறிதேனுங் கோபியாமலும் தீங்குசெய்யாமலும் அவரைக் கண்டபோதெல்லாம் தாமரை மலர்ந்தது போன்ற முகமும் அவருடன் பேசும் வார்த்தையெல்லாம் சந்தனம்போலுங் குளிர்ச்சி யுடையதாயுமிருக்கிறது. ஆனால் சமையம் வாய்த்தபோது அவர் பகையை வஞ்சகமாக வுள்வைத்துக் கத்தரிக்கோல் போலவர்க்கு மிகக்கெடுதி முதலானவை செய்கிறார்கள். அதனால் முதலில் அவர் தீங்கு செய்தகாலத்துப் பொறுத்தது பொறுமையாகாதோவெனில் ஆகாது அவர்கள் பாபிகள் வஞ்சக முடையவர்கள் அவர்கட்கிம்மூன்று குணங்களெப்போதுந் தங்கி யுள்ளது.

செங்கமலப் போதலர்ந்த செவ்விபோலும் வதனந்
தங்குமொழி சந்தனம் போலும் - பங்கியெறி
கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனங்'
குத்திரர் பால் மூன்று குணம்.

ஆனால் விவகார முன்னிலையில் கோபமானது உலகத்திலெல்லாருக்கும் வரக்கூடியது தான். அதில் உத்தமர் கோபமானது பிறர்கடுத்தீங்கின்றி யக்கணமே மாறிவிடும். மத்திமர்கோபம் சிறிது காலத்துக்குள் ளொருவர் முன்னிலையில் மாறும். அதமர்கோபம் கற்பிளவுபோலு மாயுள் பரியந்தம் மாறாது.

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.

இதுவரையிலும் பிறர் தமக்குத் தீங்கு முதலானவை செய்தகாலத்து அப்போது பொறுமையுடையார் போலிருந்து சமயம் வாய்த்தபோது அவர்க்குக் கெடுதிசெய்வோர் வஞ்சகமுடைய வரென்றும், கோபமானது விவகார முன்னிலையில் வந்தாலும் அதனால் தீங்கின்றி உத்தமர் கோபம் உடனே மாறுமென்றும், மத்திமர் கோபம் சிறிதுகாலத்துக்குள் மாறு மென்றும், அதமர்கோபமாயுள்பரியந்த மாறாறுதென் மேற்பட்டது. ஆனால் பிறர்செய்த தீமை முதலானவைகளைப் பொறுப்பதனால் பலனுளதோ வெனில் உண்டு. தம்மை வை தவனை வாழ்த்தினவ னெனவும் தமக்குத் தீங்குசெய்தவனை நன்மை செய்தவனெனக் கொள்ளும் மகானுக்கள் பேரின்பமாகிய முத்தியையடைந்தவர். இது திண்ணம். அப்படிக் கொள்ளாத வன் பொய்தவனாகி யுலகத்தில் பிறந்திறந் துழல்வனென்று ஆன்றோர் வாக்கியங்கள் கூறியுள்ளது.
வைதவன் றன்னை நன்றுவாழ்த்தின னெனவுந்தீய
செய்தவன் றன்னை நல்லசெய்தவனெனவுங் கொள்வோன்
கைதவமகன்ற முத்திகண்டவ னவ்வாறுன்னான்
பொய்தவ னென்பதென்று புகன்றனர் புலவரன்றே.

மேற்சொன்ன பாவினத்தால் பிறர்செய்த தீமைகளைத்தமக்கு நன்மையாகவும் அவர் வைதவைகளை வாழ்த்தின தாகவும் கொள்ளுங் குணமுடை யோரே மோட்சத்தையடையும் மகானுக்களென் றேற்பட்டது.

சர்வபந்த மொழித்த மகானுக்களை மேற்சொன்னவாறு நடத்தல் கூடும் இது பற்றியே நாயனாரும் "இன்னா செய்தாரை யொறுத்தலவர் நாண, நன்னயஞ் செய்து விடல்.'' தமக்கு கெடுதி செய்தவரை மகான்கள் தண்டித்தல் அவர் நாணும்படி அவர்க்குயினிமையைச் செய்தலாம்.

இவைகளெல்லாம் அறிவிற்சிறந்த பெரியாருக்கே தகும் நம்மைப்போல் குடும்பத்தில் பந்தப்பட்டிருப்போர்க்கு மேற்சொன்ன விஷயங்க ளெல்லாம் அசாத்தியமாயிருக்குமென்று தோற்றுகிறது. ஏனெனில் நமக்கடங்கிய ஆளடிமை மனைவி மைந்தர் முதலானவர்கள் பார்க்கும் விவகாரங்களில் தவறு வந்தவிடத்தும் அவர்கள் தகாதகாரியஞ் செய்த விடத்தும் கண்டன் தண்டனம் அவசியம் வேண்டியதாயிருக்கிறதே. குடும்பத்தலைவ னாயுள்ளவன் அப்படி செய்யாவிட்டால் காரியம் நடவாதே ஆகையாலிந்த விஷயத்திலெப்படி நடந்து கொள்ள வேண்டுமெனில் சொல்லுவாம். எப்படியெனில் நம் வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகளிடத்து நாம் மிகப் பிரியமுடையவர்களாயிருக்கிறோம். அதற்கு அன்னம், பால், பழம், பலகாரம் முதலானவைம் பிரியத்துடன் கொடுத்து அதை வளர்க்கிறோம் : இது அறக்கருணை. ஆனாலதே குழந்தைக்கு இசிவு முதலான நோய்வந்த காலத்து 'அதற்குக்கடுமையான மருந்துகளைக் கொடுக்கிறோம். இவ்விசுவு நீங்குதற்குச் சூடுபோட வேணுமென்று பரிகாரி சொன்னால் ஊசியை நெருப்பிற் காய்ச்சியதற்குச் சூடும் போடுகிறோம். ஏனெனிலக்குழந்தைக்கு நோய் நீங்கிச் சுகமடைவதற்காக அதனிடம் வைத்த பிரீதியால் செய்கிறோம். இது மறக்கருணை. அக்குழந்தையின் சுகத்தைக் கருதியே இவை யிரண்டும் செய்கிறோம். இது பற்றியே தன் பகைவர் சொல்லு மின்சொல்லினும் காதலாற் சொல்லும் கடுஞ்சொல் மேலானது.

''காதலார் சொல்லுங் கடுஞ் சொல்லுவந்துரைக்கு,
மேதிலாரின் சொலிற்றீ தாமோ –
போதெலா, மாதர் வண்டார்க்கு மலிகடற்றண்சேர்ப்ப,
வாவதறிவார்ப் பெறின்.''

ஆனால் நமக்காக வேண்டிய காரியங்களில் நமக்கெதிராயுள்ளவர்கள் தகாத காரியஞ் செய்தால் நாமுமவ்வாறே நடத்தலன்றோ நங்காரியம் முடிவு பெறு மென்று சங்கை கொள்ளலாம். இவ்வுலகத்தில் கடுமொழி நய'மொழியை வெல்லாது. எது போலெனில், யானையைத் துளைத்துச் செல்லுமம்பானது பஞ்சுப் பொதியிற் பாயாது கடுமையான இருப்பாணிக்குப் பிளவுபடாத கற்பாரையானது பசுமரத்தின் வேறுக்குப் பல பிளவாய்ப் பிளந்து விடும்.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங்கோல் பஞ்சிற்பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாவப் பாரைபசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

இப்பாவினத்திலேயே இவ்வுலகத்தில் நயத்தாலாகுங் காரியம் கடுமையாலாகாதென்றேற் படுகிறது.

ஆனாலிவ்வுலகத்தில் குடும்ப விஷயமாக உள்ளத்தில் கோபத்தை நெடுங்காலம் வைத்துப் பிறகு கடுத்தீங்கு செய்யாது உள்ளக்கருணையோடு மேலுக்குமாத்திரம் கோபத்தைச் செலுத்துவானாயின் கெடுதியில்லை. மன மொழி மெய்களால் பிறருக்குத் தீங்கு செய்யாது நடப்போமாயின் இம்மையில் பெரும் புகழும் மறுமையில் சோபானமாகப் பேரின்பமாகிய முத்தியையு மடைதல் திண்ணம்.

கா - வேதாசலமுதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment