Saturday, May 9, 2020



க்ஷேத்திரத் திருவெண்பாத் தலங்கள்
[மு. அருணாசலம்]

பிரபந்தமாலை என்று சொல்லப் பெறுகின்ற பதினோராம் திருமுறை நாற்பது பிரபந்தங்களைக் கொண்டது. அவற்றுள் ஐந்தாவது பிரபந்தம் க்ஷேத்திரத் திருவெண்பா என்பது. இதைப்பாடியவர் ஐபடிகள் காடவர் கோன் நாயனார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். காஞ்சியில் அரசாண்டவர். சைவத்திருநெறி பெருகுமாறு சில ஆண்டுகள் அரசாண்டபின் இவர் தம் மகனுக்கு முடி சூட்டி விட்டுத் தல வழிபாடு செய்து ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு வெண்பாப்பாடும் நியமம் மேற்கொண்டார். இவ்வாறு இவர் பாடிய பாடல்களின் தொகுப்பே க்ஷேத்திரத் திருவெண்பா. திருத்தொண்டர் திருஅந்தாதியில் நம்பியாண்டார் நம்பி இவரைக் குறித்துப் பாடிய பாடல் இக்கருத்தை நன்கு விளக்கும்.

சத்தித் தடக்கைக் குமரன் நல்
தாதைதன் தானம் எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மை நல் தாள் அரற்
காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா
கின்ற நம் பல்லவனே

இவர் கி. பி. 550 முதல் 575 வரை அரசாண்ட மூன்றாம் சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் என்று ஆராய்ச்சியாளர் முடிவு செய்கின்றனர். இவர் காலமாகிய ஆறாம் நூற்றாண்டு தான் சைவ சித்தாந்தத்திற்கு வேர் ஊன்றிய திருமூலரும் காரைக்கால் அம்மையாரும் வாழ்ந்தகாலம் என்பதை நாம் இங்கு நினைவிற் கொள்ளலாம்.

இனி, காடவர் கோன் பாடிய வெண்பாவில் 22 பாடல் கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றுள் 10, 23, 24 பாடல்கள் நீங்கலாக ஏனைய பாடல்கள் தலப்பெயர்களைக் குறிப்பிடுகின்றன. அத்தலங்கள் பின் வருவன; தில்லைச் சிற்றம்பலம், தென் குடந்தைக் கீழ் கோட்டம், ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, தென் இடைவாய், நெடுங்களம் குழித்தண்டலை, ஆனைக்கா, மயிலை, உஞ்சேனை மாகாளம், வளை குளம், பூம்புகார்ச் சாய்க்காடு, பாச்சில் ஆச்சிராமம், சிராமலை, மழபாடி, திருவாப்பாடி, ஏகம்பம், திருப்பனந் தாள், ஒற்றியூர் என்பன. இவற்றுள், தென்னிடைவாய் என்பது கல்வெட்டின் மூலம் கிடைத்த சம்பந்தர் பதிக முடைய திருவிடைவாய் என்ற தலமாகலாம். குழித்தண்டலை என்பது கடம்பர் கோயிலாகும். உஞ்சேனைமாகாளம் ஒருவைப்புத்தலம். இனி பத்தாம் பாடல் பின் வருவது.

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு
ஓடேந்தி உண்ப துறும்.

இங்கு கொன்றையந்தார்ச் சோதி' என்று ஆசிரியர் கூறுகின்றார். மற்று இப்பாடலில் தலப்பெயரில்லை. இத் தலம் கொன்றையைத் தலவிருட்சமாகக் கொண்ட திரு அச் சிறுபாக்கமாகலாம். 23ஆம் பாடல் பின்வருவது.

நூற்றனைத்தோர் பல்கோடி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவங் கேட்ட பகல் 

இப்பாடலில் தலப்பெயரை அறிவதற்குத் துணையாய் உள்ள தொடர் ''கூற்றுதைத்தான்” என்பது. இத்தலம் திருக்கடவூர் என்பது வெளிப்படை. 24ஆம் பாடல் பின்வருவது:

உய்யும் மருந்திதனை உண்மின் என உற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே !
செழுந்திரு மயானமே சேர்.

இங்கு திருமயானம் என்ற தலம் சுட்டப்பட்டுள்ளது. மயானம் என்ற பெயரோடு மூன்று தலங்கள் உள்ளன. கச்சிமயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் என. இவற்றுள் இப்பாடல் கூறும் திருமயானம் எது என்பது கேள்வி. முந்திய பாடல் கடவூரைக் குறிப்பிடுவதால், அடுத்த பாடல் கடவூர் மயானத்தையே குறிப்பிடுவது என்று நாம் கொள்வது பொருத்தமாய் இருக்கும்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment