Saturday, May 9, 2020



சங்க நூல்களில் சமயம்
திரு. அ. இ. பரந்தாமனார், M. A.,
தியாகராசர் கல்லூரி, மதுரை

மக்களினத்தின் சிறப்பியல்களுள் ஒன்று சமயத்தைக் கண்ட மாண்பு. சமயம் அல்லது நெறி என்பது, மக்களுளுடைய உடல் நலத்திற்கும் உயிர் நலத்திற்கும் ஏற்ற நன்மைகளை விதித்து, மாறான தீமைகளை விலக்கி இன்ப வாழ்வு எய்துவதற்கு அமையும் அறிவு அரணாகச் சமைந்ததாகும். இச் சமய அறிவு காலத்துக்கும் அறிவுக்கும் நாட்டுச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பற்பல மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், கற்பனையாலும் கணக்கிட முடியாத காலத்திற்கு முன்பு தோன்றிய நிலவுலகில் 5 லட்சம் ஆண்டுகளாகப் படிப்படியாகக் கூர்தல் முறையில் (Evolution) வளர்ச்சியுற்ற படைப்பின் மணிமுடியாக, அறிவின் சிகரமாக, அற்புதப் பொருளாக இலங்கும் மனிதனுக்கு 25,000 ஆண்டுகளுக்கு முன் தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுச் சமய அறிவு தோன்றிற்று என்றும், அச்சத்தால் ஏற்பட்ட முதல் முயற்சியே ஆதி மனிதனது சமயம் என்றும், கி. மு. 10, 000 ஆண்டிலிருந்து கி. மு 3, 000 வரையிலும் மனிதனது சமய எண்ணங்களில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன என்றும், அச்சத்தால் ஆவிகளையும் பாம்புகளையும் அரிய இயற்கைப் பொருள்களையும் இறந்த வீரர்களையும் வழிபடுவதற்குரியதாக இருந்த சமயம், அறிவு வளர்ச்சியால் அன்பே சிவம் என்னும் அன்புச் சமயமாக ஏற்றமுற்றது என்றும், அறிவு முதிர்ச்சியால் உலகம், உயிர், இறைவன் எனும் மெய்யறிவு தோன்றியது என்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் சமய வளர்ச்சி வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். இந்நிலை ஒரு குறிப்பிட்ட சமயத்துக்கு மட்டும் அன்று; உலகில் நிலவி வரும் பலப் பல சமயங்களுக்கும் பொதுவானது.

இவ்வுண்மையைச் செவ்வையாக உள்ளத்தில் இருத்தினால் தமிழகத்தின் பண்டைச் சமயத்தின் நிலையை நன்கறிதல் கூடும். தண்டமிழ் நாட்டின் பண்டைச் சமயத்தைத் தெரிந்து கொள்வதற்கு உரிய நூல்களாக உள்ளவை சங்க நூல்களேயாகும். முச்சங்கங்களைப் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் சங்கங்கள் இருந்து துங்கத் தமிழ் வளர்த்த செய்தியை எவரும் மறுத்தல் முடியாது. இச் சங்ககாலம் என்பது கி. மு. 3 ஆம் நூற் றாண்டிலிருந்து கி. பி. 250 வரைக்கும் உள்ள பரந்துபட்ட காலமாகும். இப் பரந்துபட்ட காலத்தில் தோன்றிய இலக்கண இலக்கியங்களையே பொதுவாகச் சங்க நூல்கள் என்கிறோம். சங்க கால நூல்கள் என்பவை தொல் காப்பியமும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதி னெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த திருக்குறளும் களவழி நாற்பதும் சிலப்பதிகாரக் காப்பியமுமாகும். தொல் காப்பியம் பழந்தமிழ் இலக்கண நூல். இஃது எழுத்திலக் கணத்தையும் சொல்லிலக் கணத்தையும் சொல்வதோடு, இலக்கியத்திற்குரிய வாழ்வியலையும் எடுத்துக் கூறுகிறது. இவ்விலக்கண நூல் கி. மு. 4 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பர். எட்டுத்தொகை என்பது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய எட்டுத் தொகுப்பு நூல்களைக் குறிக்கும். அகநானூறும் புறநானூறும் சங்க காலத்தின் முற்பகுதியில் தோன்றியவை; மற்றவை அக்காலப் பிற்பகுதியில் வெளிவந்தவை. பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். திருமுரு காற்றுப்படை ஆகிய இவை சேர்ந்த தொகுதியே பத்துப்பாட்டு எனப்படும். பரிபாடல், கலித்தொகை இவற்றைப் போலப் பத்துப்பாட்டிலிருக்கும் திருமுருகாற்றுப்படை சங்ககாலத்தின் பிற்பகுதியில் தோன்றியதாதல் வேண்டும். பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த திருக்குறளும் களவழி நாற்பதும் தவிர ஏனையவை மிகவும் பிற்காலத்தவை. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரக் காப்பியம் கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மணிமேகலைக் காப்பி யமோ தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும் களப் பிரர் காலத்தில் தேரவாத பௌத்தம் வளர்ச்சியுற்றிருந்த நிலையில் மலிந்த சமயப் பிரசாரத்திற்காக கி. பி. 4 - ஆம் நூற்றாண்டிலோ 5 - ஆம் நூற்றாண்டிலோ தோன்றியதாய் இருத்தல் வேண்டும். ஆதலால், இதனைச் சங்க நூல்களோடு சேர்த்துக் கூறுவது பொருந்தாது. இந் நூல்களைக் கொண்டு சங்க காலத்தில் தண்டமிழ் நாட்டில் நிலவி யிருந்த சமய நிலையை ஒருவாறு கூறுதல் கூடும். சங்க காலச் சமயத்தைக் கூறும்போது விருப்பு வெறுப்பின்றி உண்மை நிலையை எடுத்துக் காட்டுவது தமிழக வரலாற் றுக்கு இன்றியமையாதது.

சங்க நூல்கள் தோன்றிய சங்க காலமானது, ஆரியர் நாகரிகமும் பண்பாடும், தமிழர் நாகரிகமும் பண்பாடும் பின்னிப் பிணைந்து இணைந்து விளங்கிய காலம் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. ஆரியர்கள் கி. மு. 7 - ஆம் நூற்றாண்டிலேயே அஃதாவது இற்றைக்கு 2, 700 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் புகுந்து, கி. மு. 5 - ஆம் நூற்றாண்டுக்குள் தஞ்சை, மதுரை முதலிய இடங்களில் பரவி விட்டார்கள் என்று R. G. பந்தர்கர் என்ற ஆராய்ச்சியாளர் தமது தக்காணத்தின் முன்னைய வரலாறு (The Early History of Decan) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். முதல் முதல் ஆரியர் கூட்டம் ஒன்று விந்திய மலைக்கு அருகில் ஓடும் நருமதையாற்றங் கரையிலிருந்த மாகிஷ்பதி என்ற நகரத்தின் வழியாகத் தென்னகத்தில் புகுந்ததாம். அகஸ்தியர் கதை முதல் முதல் நிகழ்ந்த ஆரியர் குடியேற்றத்தையே குறிக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர் K. A. நீலகண்ட சாஸ்திரியார், ஆரியரது தமிழக நுழைவு கி. மு. 1000ல் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தமது தென்னிந்திய வரலாறு என்னும் நூலில் கூறியிருக்கிறார். பந்தர்கார் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், ஆரியர் குடியேற்றம் தமிழகத்தில் ஏற்பட்டது குறைந்தது இற்றைக்கு 2,700 ஆண்டுகளுக்கு முன்னாகும் எனலாம். தென்னகத்து நகர நாகரிகம் வடநாட்டு ஆரியர்களுடைய உள்ளத்தைக் தொன்மை மிக்க தமிழகத்திற்கு வந்து குடியேறுமாறு தூண்டியது என்று உமாயூன் கபீர், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழகச் சிறப்பினைக் கூறியபோது எடுத்துக் காட்டியிருக்கிறார். தமிழகத்தின் பண்பாடு வந்தவர்களை வரவேற்று ஆதரித்தது. தமிழ் நாட்டு மன்னர்களும் அவர்களை ஆதரித்தார்கள். எனவே, குடியேறிய ஆரியர்கள் அமைதியான முறையில் தங்கள் நாகரிகத்தையும் சமயக் கருத்துக்களையும் தமிழ் நாட்டில் எளிதாக வேரூன்றி நிலைத்து நிற்குமாறு பரப்பி விட்டார்கள். அவர்களுடைய வடமொழிச் செல்வாக்கும் சமுதாய வழக்கங்களும் வைதீகக் கோட்பாடுகளும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் புகுந்து விட்டன.

தொல்காப்பியரும் பொது எழுத்தான் இயன்ற வட சொல்லும் செய்யுட் செய்தற்குரிய சொல்லாகும் என்னும் கருத்தோடு,

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''

என்று இலக்கணமும் வகுத்து விட்டார். மேலும் அவர் தமிழரது களவு மணத்தைக் கந்தருவ மணத்துக்கும் ஒப் பிட்டுக் காட்டினார். வடமொழி வேத நெறியும் தமிழகத் தில் புகுந்து விட்டது. தமிழர் சமுதாயத்தில் ஆரியருடைய கடவுள்களான திருமாலும் இந்திரனும் வருணனும் குடிபுகுந்து விட்டார்கள். தொல்காப்பியர், ''முல்லை நிலத்துக் கடவுளாக மாயோனையும், குறிஞ்சி நிலத்துக் கடவுளாக முருகப் பெருமானையும், மருத நிலத்துக் கடவுளாக வருணனையும் குறிப்பிட்டிருததலைக் காண்கிறோம். அந்நூற்பா வருமாறு:

''மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேயமை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

இந்நிலை பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே காணப்படுவது.

வேத நெறியும் வேள்வி செய்தலும் பண்டைத் தமிழகத்தில் நன்கு பரவி விட்டதைச் சங்க நூல்கள் மிகுதியாகத் தெரிவிக்கின்றன.

'நால்வேத நெறி திரியினும் (புறம் - 2)'
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்'(புறம் - 93)
'கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்'0(புறம் - 361)
'ஒன்று புரிந்தடங்கிய இரு பிறப்பாளர் முத்தீப் புரைய'(புறம் - 367)
அறுதொழில் அந்தணர் (புறம் - 378),
'அவிர்சடை அந்தணர் அங்கி வேட்கும் ஆவுதி நறும்புகை '(பட்டினப்பாலை),
'அந்தி அந்தணர் அயர் (குறிஞ்சி - 225வது அடி),
'ஓதல் அந்தணர் வேதம் பாட (மதுரைக் காஞ்சி - அடி 656)
ஆகிய இவ்வடிகளும் சொற்றொடர்களும் ஆரியருடைய வேதநெறியும் வேள்வியும் பண்டைத் தமிழ் நாட்டில் பரவியிருந்த நிலையை எடுத்துக் காட்டுகின்றன; பார்ப்பனர்கள் அந்நாளிலேயே பெரிதும் மதிக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றன,

மேலும் தமிழ் மன்னர்கள் வேதநெறியைப் பின் பற்றி வேள்விகள் இயற்றியதைச் சங்க நூல்களில் காண்கிறோம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சிறப்பித்துப் பாடிய புலவர்,

"அறுதொழில் அந்தணர் அறம்புரிந் தெடுத்த
தீயொடு விளங்கும் நாடன்'

என்று அவனுடைய நாட்டில் எங்கும் வேள்வி வேட்டதைக் குறிப்பிட்டுள்ளார். சோழன் பெருநற்கிள்ளி இராசசூய வேள்வி செய்தான். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல வேள்விகளைச் செய்து 'பாண்டியன் பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' எனப் பேரும் புகழும் பெற்றான். இப்பாண்டியனை நோக்கி கெட்டிமையார் என்ற புலவர்,  'நினக்கு ஒன்றாராகிய வசைபட வாழ்ந் தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன் களம் பல கொல்'' என்று பொருள் தருமாறு,

நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்''                (புறம் - 15)
என்று வினவுவது போல் பாராட்டியுள்ளதைக் காண்கிறோம்.

புறநானூறு 161 ஆம் பாடலில் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் செய்த வேள்வி யைச் சிறப்பித்துப் பாடிய ஆவூர் மூலங்கிழார், வேள்வி செய்த முறையினை விரிவாகக் கூறியுள்ளார்; அவன் தன் மனைவியரோடு கூடி மான் தோலை அணிந்து வேள்வியில் நீர் நாணும்படி நெய் சொரிந்ததையும், வேள்வி முடிவில் பெரு விருந்து செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்; அவன் செய்த வேள்விகள் எண்ணில் அடங்கா என்றும் கூறி வாழ்த்தியுள்ளார். கரிகாற் பெருவளத்தானும் வேள்வி செய்ததைக் காண்கிறோம். பெருஞ்சேரல் இரும்பொறையும் வேள்வி செய்ததைப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது. இப்படி தமிழ் வேந்தர்களும் பார்ப்பனரும் வைதிக நெறி யில் நின்று வேள்வி செய்து வழிபட்ட முறை மிகவும் பரவியிருந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுவதைக் காணும் போது. வேதநெறி அக்காலத்தில் வேரூன்றி விட்டது என்று ஐயமின்றிக் கூறலாம்.

அடுத்துப் பெரிதும் மக்களிடத்தில் பரவியிருந்த சமயம் முருக வழிபாட்டுக்குரிய கௌமார சமயமாகும். குமரன் வழிபாட்டைக் கௌமார சமயம் என்று குறிப்பிட்டது பிற்காலமாகும். இப்பெயரில் சொல்லாவிட்டாலும் முருக வழிபாடே மிகப் பெரிய அளவில் அக்காலத்தில் பரவியிருந்தது; இதுதான் சங்க காலச் சமயம் என்று சொல்லும் அளவிற்குக் காட்சியளிக்கிறது. குறிஞ்சி நில மக்கள் மட்டுமல்லாமல் வேறு நில மக்களும் முருகனை வழி பட்டு வந்தார்கள். முருகப் பெருமானுக்கு வெறியாட்டு விழாக்களும் நடைபெற்றன. பரிபாடலில் பெரும் பெயர் முருகன் மீது 8 அருமையான துதிப்பாடல்கள் உள்ளன. 5வது பரிபாடல். பிணிமுகம் என்னும் யானையின் மீது எழுந்தருளி வேலால் சூரபன்மனாகிய மாமரத்தைத் தடிந்து, கிரௌஞ்ச மலையை ஊடறுத்தோய்! ஆறு திருமுடியையுடையோய்' என்றும், 8 வது பாடல், "முருகப்பெருமானே ! துழாய் மாலையையும் கருடக் கொடியையும் உடைய திருமால், சிவபெருமான், பிரமன், துவாத சாதித்தியர், தேவர்கள், அரசர்கள், தெய்வ முனிவர்கள் முதலியோரும் நின்னைத் தரிசிக்கும் பொருட்டு இம்மண்ணுலகில் வந்து உறைவதற்குரிய இடமாயிற்று திருப்பரங்குன்றம், அதனால் அஃது இமயமலையை ஒக்கும்'' என்றும், 9வது பாடல், 'கங்காதரராகிய நீலகண்டப் பெருமானுக்கு மகனாகப் பிறந்தோய்" என்றும், 14வது பாடல் ''ஆறு திருமுகங்களையும் பன்னிருதோளையும் கொண்டு வள்ளி என்னும் மகளை விரும்பியோய் என்றும் 17 வது பாடல், ''மணிநிறமயிலையும் உயர்ந்த கோழிக் கொடியையும் உடைய முருகா! பிணிமுகம் என்னும் யானையின் மேல் ஊர்ந்து போர் செய்து வெல்லும் தலைவா! பிறவித் துன்பம் நீங்கிய இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுக என்று வேண்டியாமும் எம்சுற்றத்தாரும் மக்களைப் பணிந் தொழுகாமல் நின்புகழைப் பாடித் தொழுகின்றோம்" என்றும். 18வது பாடல் 'சூரபன்மாவாகிய மாமரத்தை அழித் தோய், நீ விரும்புதலால் இத் திருப்பரங்குன்றம் நின்னைப் பெற்ற இமயமலையைப் போலப் புகழ் பெற்றது" என்றும், 19 வது பாடல், ''திருப்பரங்குன்றத்தில் நீ வள்ளி நாச்சியாரை மணம்புரிந்தருளியது வானுலகத்தில் தேவயானையை மணந்ததற்கு மாறாக இவ்வுலகத்திற் செய்த செயல் போலும்'' என்றும், 21 வது பாடல், "பகைவரை அழித்த செல்வா, சுற்றத்தோடு ஒருங்கே நின்னடிக் கண் உறைதல் இன்று போல என்றும் நமக்கு இயைவதாக எனப் பரவுகின்றோம்" என்றும் முருகப் பெருமானைப் புகழ்ந்து போற்றுவதைக் காண்கிறோம்.

திருமுருகனைப் புகழ்ந்து பாடும் ஒருமுழுநூலே திருமுருகாற்றுப்படை என்னும் பெயருடன் பத்துப் பாட்டுத் தொகுதியில் கடவுள் வாழ்த்துப் போல் முதலில் இருக்குமாறு தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் ''பழமுதிர்சோலை மலைகிழவோனாகிய வாணுதல் கணவன், முருகன் திருப்பரங்குன்றில் அமைந்துறைதலும் உரியன்; திருச்சீரலைவாயிலும் இருப்பன்;  திருவாவினன் குடியில் அசைதலும் உரியன் : ஏரகத்தில் உறைதலும் உரியன்; குன்றுதோறாடலும் உரியன்; என்று முருகனுக்குரிய ஐந்து திருப்பதிகளையும் குறிப்பிட்டுப் போற்றுகிறது. பிற்காலத்தார் குன்று தோறாடலையும் சேர்த்து முருகனுக்கு ஆறுபடை வீடுகளாகத் தவறுபடக்கருதலாயினர்.

திருமுருகாற்றுப்படைக்கு முற்பட்டனவாகக் கருதப்படுகின்ற எட்டுத்தொகை நூல்களிலும், முருகப்பெருமானும் திருச்செந்தூரும், முருகன் பொருட்டு வெறியாடலும், முருகன் மக்கள் மேல் ஆவேசமாதலும் குறிப்பிடப்பட்டுள்ளன. புறநானூற்றிலுள்ள 16வது பாடல், "முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்" என்னும், 23 வது செய்யுள், "கார்நறுங்கடம்பின் பாசிலைத் தெரியற் சூர் நவை முருகன்'' என்றும், 54 வது பாடல், ''செந்தில் நெடுவேள் நிலை இய'' என்றும், 299வது செய்யுள், "அணங் குடை முருகன் கோட்டத்து'' என்றும் குறிப்பிடுகின்றன. 299வது பாடல் முருகன் கோட்டத்தைக் குறிப்பிடக்காண் கிறோம். இவ்வாறு முருகவணக்கம் மலைவாழ் மக்களுக்கு மட்டுமன்றி மற்றையோர்க்கும் பெருமளவில் இருந்தது என்பது சங்க நூல்களால் அறியலாகும்.

அடுத்துத் திருமாலைப்பற்றிய குறிப்புக்கள் சங்க நூல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தொல் காப்பியத்திலேயே முல்லை நிலக்கடவுளாகத் திருமால், மாயோன் என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறார். ''மாயோன் மேய காடுறை உலகமும்' என்னும் தொல் காப்பிய நூற்பாவின் அடியால் இவ்வுண்மையை உணரலாகும். தொல்காப்பியத்தில் காணப்படும் பூவை நிலை என்னும் துறை "மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவைநிலை'' என்று கூறுகிறது. மன்னனைத் திருமாலுக்கு உவமித்துக் கூறுவதே பூவை நிலை எனப்படும். திருக்குறளில் காணும்'' ''அடியளந்தான்'', " தாமரைக்கண்ணான் உலகு'' என்னும் தொடர்கள் திருமாலைக் குறிப்பவை. முல்லைப்பாட்டு, ''வலம் புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மா அல் போல'' என்று திருமாலை உவமையாகக் கொண்டே தொடங்குகிறது. பெரும்பாணாற்றுப்படை,'' இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் என்று'' குறிப்பிடுவதோடு, திருமாலின் பள்ளி கொள்ளும் கோலத்தை.

"நீடுநிலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்,

என்று வருணிக்கிறது. மதுரைக் காஞ்சி, "மாயோன் மேய ஓணம்'' என்கிறது. புறநானூற்றிலுள்ள 56வது பாட்டு மண்ணுறு திருமணி புரையும் மேனி விண்ணு யர் புட்கொடி விறல் வெய்யோனும்'' என்று திருமாலைக் குறிப்பிடுகிறது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்ததைக் கண்ட காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

"பானிற உருவிற் பனைக்கொடியோனும்
நீனிற உருவின்நேமி யோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாங்கு"

என்று பாடி வாழ்த்தியுள்ளார்.

பரிபாடலில் திருமால் துதியாக ஆறுபாடல்கள் உள்ளன. முதற்பரிபாடல், திருமாலையும் பலராமனையும் இணைத்துக் கூறுவதுடன் பிரமனையும் காமனையும் திருமாலுக்குப் புதல்வர்களாகக் குறிப்பிட்டு,

"புலனும் பூவனும் நாற்றமும் நீ
வலனுயர் எழிலுயர் மாக விசும்பும்
நிலனும் நீடிய இமயமும் நீ''
என்று துதி பாடுகிறது. வேது பரிபாடல், 'நீ பலதேவ னுக்குப் பிறப்பு முறையால் இளையை; சிறப்பு முறையால் முதியையாகின்றாய்; நீ உயிர்தொறும் மறைந்து நிற்கிறாய்'' என்று பாடுகிறது. 3ஆம் பாடல், ''மறுபிறப்பறுக்கும் மா அயோயே" என்கிறது. 4வது பாடல் தூணிலிருந்து திருமால் தோன்றி இரணியனுடைய மார்பை வகிர்ந்த கதையைக் குறிப்பிடுகிறது. 13வது பாடல் திருமாலைத் தொழுவோர்க்கு வைகுண்டம் உரியதாவதாகக் கூறு கிறது. 15வது பாடல்,'' பலமலைகளுள் திருமாலிருஞ் சோலைமலையே சிறந்தது. அம்மலையை வணங்குவோம். திருமால் பலதேவரோடு அமர்ந்திருக்கும் நிலையை மாந்தர் களே தொழுவீர்களாக !'என்று வேண்டுகிறது.

சிலப்பதிகாரமோ திருவேங்கடமலையில் உள்ள திருமாலின் நின்ற திருக்கோலத்தையும், திருவரங்கக்கோயிலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தையும் வருணிப்பதோடு, இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத் தையும் கூறுகிறது. இவ்வாறு பலராலும் தொழப்பட்ட கடவுளாகச் சங்க நூல்களில் திருமால் காட்சியளிப்பதைக் காண்கிறோம்.

சிவன் என்னும் பெயர் காணப்படாவிடினும், சங்க நூல்களில் சிவ வழிபாடும் சிவனைப்பற்றிய கதைகளும் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் சிவனைப்பற்றி ஒரு குறிப்பும் இல்லை. சிவன் என்னும் பெயர் இல்லை யெனினும் சிவனைக்குறிக்கும் தொடர்களும் இல்லை. இது வியப்பாக இருக்கிறது. தொல்காப்பியத்தில் காணப்படும் கந்தழி என்னும் சொல், சிவலிங்கத்தைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறவாறு, தீயையோ சிவலிங்கத்தையோ, தத்து வங்கடந்த கடவுளையோ குறிக்குமாறு இல்லை. பண்டைய உரையாசிரியரான இளம்பூரணர்.

"கொடி நிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ''குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வரும்" என்று உரை கூறியுள்ளார். ஐயனாரிதனார் தமது புறப் பொருள் வெண்பா மாலையில் கொடி நிலை என்பது மன்னவன் கொடியை முதற்கடவுளர் மூவர் கொடியுள் ஒன்றனோடு உவமித்ததாகும் என்றும், கந்தழி என்பது மாயோன் வாணாசுரனது சோ என்னும் மதிலினை அழித்த வெற்றியினைப் புகழ்வதாகும் என்றும், வள்ளி என்பது மகளிர் முருகனுக்கு வெறிக் கூத்தாடியதைக் குறிக்கும் என்றும் விளக்கியுள்ளார். நச்சினார்க்கினியர் கொடிநிலை என்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறு என்றும், கந்தழி என்பது ஒருபற்றுக்கோடும் இன்றித்தானே நிற்குந் தத்துவம் கடந்த பொருள் என்றும், வள்ளி என்பது, தேவர்க்கு அமிர்தம் வழங்கும் தண்கதிர் மண்டிலமாகிய திங்கள் என்றும் கூறினார். இப்பொருள் பொருத்தமான தன்று. திரு. க. வெள்ளை வாரணனார் தமது தொல்காப்பிய உரைநடை நூலில் நச்சினார்க்கினியர் கூறிய பொருள் தவறானது என்பதை எடுத்துக் காட்டி மறுத்திருப்பதைக் காண்க. “இம்மூன்றனுள் கந்தழி என்பதற்கு அவர் (நச்சினார்க்கினியர்) கூறும் இலக்கணம் கடவுளுக்கே உரிய சிறப்புடையதாதலால், அது கடவுள் வாழ்த்தாவ தன்றிக் கடவுள் வாழ்த்தோடு பொருந்திவரும் வேறோரு துறையெனக் கொள்வதற்கு இல்லை,'' ஆதலால் நச்சினார்க் கினியர் கந்தழி என்னும் சொல்லுக்குக் கூறிய பொருள் தவறானது என்றறியலாகும்.

கந்தழிவேறு; கந்து என்பது வேறு, பட்டினப்பாலை 249வது அடியில் குறிப்பிடும் வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் "என்புழி, கந்து என்னும் சொல் சிவ லிங்கத்தைக் குறிக்கலாம், சிவ வழிபாட்டுக்குரியதாகச் சிவலிங்கத்தை ஒரு குழவி வடிவில் மரத்தடியில் வைத்திருப்பதை இன்றும் காண்கிறோம். சிந்துவெளி நாகரிகம் சிவலிங்க வழிபாட்டைக் காட்டுவதாகக் கூறினும் நம்முடைய சங்க நூல்களில் சிவலிங்கத்தைப் பற்றிய குறிப்புக்கள் காணோம்.

சிவபெருமான் சங்க நூல்களில் குறிப்பிடப்படுகிறார். புறநானூற்றிலுள்ள 55ஆம் செய்யுள், ''ஓங்குமலைப் பெருவிற் பாம்பு ஞாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிரல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல'' என்று சிவபெருமான் முப்புரம் எரித்ததையும் முக்கண்ணுடைமையையும் கறைமிடறு கொண்டிருத்தலையும் கூறுகிறது. புறம் 56வது செய்யுள் "ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன்'' என்று சிவபெருமானுடைய சடையையும் சூலத்தையும் மணிமிடற்றையும் வருணிக் கிறது. ஒளவையார், '' நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும்'' என்று அதியமானை வாழ்த்தியுள்ளார். பரிபாடலில் 'கறைமிடற்றண்ணல்' என்றும், 'பைங்கட் பார்ப்பான்' என்றும் வருந்தொடர்கள் சிவபெருமானைக் குறிப்பிடுகின்றன. மலைபடு கடாம் என்னும் பாட்டின் 83 வது அடி, 'காரியுண்டிக் கடவுள்' என்கிறது, ஆலமர் கடவுள்' என்றும் சிவபெருமான் குறிப்பிடப்படுகிறார். இங்ஙனம் சங்க நூல்களில் சிவபெருமான் குறிப்பிட்டிருத்தலைக் காண்கிறோம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், "பிறவாயாக்கைப் பெரியோன்'' என்று குறிப்பிடுகிறது.

மேலும் சங்க நூல்களில் பிரமன், பலதேவன், இந்திரன் இவர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். கொற்றவை வழிபாடும் சங்க நூல்களில் காணப்படுகிறது. வீரர்களும் மன்னர்களும் வேடுவர்களும் கொற்றவையை வழி பட்டார்கள். வீரத்துக்குக் கொற்றவை தெய்வமாக விளங்கினாள். நற்றிணை 343வது பாடலில் "கடவுள் ஆலத்து” என்றும், அகநானூறு 270 வது செய்யுளில் 'கடவுள் மரத்த' என்றும், புறநானூறு 199வது பாடலில் 'கடவுள் ஆலத்து' என்றும் தொடர்கள் வருவதை நோக்கும் போது, மரத்தை வணங்குவதும் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்க நூல்களால் அறிகிறோம். இன்றும் தமிழகப்பெண்கள் ஆலமரத்தையும் அரசமரத்தையும் வேப்பமரத்தையும் சுற்றிவருவதைக் காணாமல் இல்லை. திராவிடர்க்கே உரிய பாம்பு வணக்கம் சங்க நூல்களில் காணப்படவில்லை, சிவபெருமான் பாம்பை அணிந்திருத் தலையும் திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டிருத்தலையும் மட்டும் காண்கிறோம். இருபெருந்தெய்வங்களோடு பாம்பை விட்டுவிட்டார்கள் போலும்.

இறந்த சிறந்த வீரனுக்குக் கல்நட்டுப் பீலி அணிந்து கள்ளைப் படைத்துத் தமிழ்மக்கள் வழிபாடு செய்தது முண்டு. இது சமாதி வழிபாடு போன்றது. நடுகல் வழி பாட்டையும் புறநானூற்றில் காணலாம். இது தமிழகத்தில் அக்காலத்தில் மிகுதியாக இருந்தது. அகநானூறு 131 ஆம் பாடல் ஆடவர் பெயரும் பீடும். எழுதி அதர் தொறும் பீலி சூட்டிய புறங்குநிலை நடுகல்'' என்றும், மலைபடுகடாம், “செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்லேசு கவலை எண்ணு மிகப் பலவே" என்றும் கூறுவதால் இவ்வுண்மை புலனாகிறது. 335வது புறநானூற்றுப்பாடல்,

கல்லே பரவினல்லது கடவுளும்
நெல்லுகுத்துப் பரவலும் இலவே"

என்று நடுகற்றெய்வத்தைப் புகழ்ந்து கூறுகிறது. நடு கல்லை வணங்காமற் போகாதே என்று 262வது புறநானூற்றுப் பாடலில் இரவலனுக்கு ஒரு புலவர் கூறியிருப்பதைக் கீழ்வரும் அடிகளிற் காணலாம்.

''இரும்பறை இரவல, சேறியாயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி

அந்நடுகல்லை வணங்கினால் கொடுங்கானம் மழைபெய்தலால் குளிகும்'
என்றும் மேற்குறித்த புலவர் கூறியுள்ளார். இவ்வாறு நடுகல் வழிபாடும் சங்க நூல்களில் பரக்கக் காணலாம்.

இன்னும் பரதவர்கள் சுறாமீன் எலும்பை நட்டு அதில் வருணனை நிறுவி (ஆவாகனம் செய்து) வழிபட்டார்கள் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது. சங்க கால இறுதியில் சேரன் செங்குட்டுவன் பத்தினி வழிபாட்டைத் தமிழகத்தில் புகுத்தினான். இதுவும் நடுகல் வழிபாடு போன்றதே. வீரர்களை வணங்கியது போல் வீரபத்தினியையும் வணங்கும் வழக்கம் புகுந்தது. சிலப்பதிகாரம் பத்தினி வழிபாட்டைப் பரப்பும் நோக்கத் தோடே தோன்றிய தென்றால் தவறாகாது. 'உரைசால் பத்தி னிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்' என்று சிலப்பதிகாரப்பதிகம் கூறுவது இக்கருத்தை வலியுறுத்தும். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லைக் கொணர்ந்து. அதனைக் கங்கையில் நீராட்டிச் சேரநாட்டிற்குக் கொண்டுவந்து படிமம் செய்வித்துக் கோயில் கட்டி அதில் கண்ணகித் தெய்வத்தை நிறுவி வழிபட்டான். மன்னர்களும் அப் பத்தினித் தெய்வத்தை வழிபட்டார்கள்.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், மாலைவெண்குடை மன்னவன் (இந்திரன்) கோயிலும் இருந்தன. இந்நகரில் இந்திர விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் சமணப் பள்ளிகளும் பௌத்தப் பள்ளிகளும் இருந்ததை மதுரைக் காஞ்சி அறிவிக்கிறது கார்த்திகை விழாவும் திருவாதிரை விழாவும் நாடெங்கும் கொண்டாடப்பெற்றன.

இவ்வாறு சங்க நூல்களிலிருந்து தொகுக்கப் பெற்ற குறிப்புக்களை நோக்கும்போது, சங்ககால மக்கள் கடவுள் வேறுபாடின்றிப் பெருநோக்கோடு சமரச உணர்ச்சியுடன் வாழ்ந்துவந்தார்கள் என்னும் உண்மையே புலனாகிறது. மக்கள் சிவபெருமானையும் வழிபட்டனர். முருகப்பெருமானையும் வணங்கினார்கள், பலதேவனையும் தொழுதார்கள்; திருமாலையும் வழுத்தினார்கள்; கொற்றவையையும் பரவினார்கள் : பத்தினித் தெய்வத்தையும் போற்றித் தொழுதார்கள்; நடுகல் தெய்வத்தையும் வழிபட்டு வணங்கினார்கள். வேடர்கள் காடுறை தெய்வங்களையும் கொற்றவையையும் சிறப்பாக வழிபட்டதையும், பரதவர்கள் தங்கள் நெய்தல் நிலத்துக்குரிய வருணனை வழிபட்டதையும் காண்கிறோம். மன்னர்களும் பார்ப்பனர்களும் சிறப்பாக வேத நெறிநின்று வேள்வி செய்தார்கள். பலரும் இந்திர விழா வில் கலந்துகொண்டனர். வேள்விநெறியை எதிர்த்த சமண பௌத்தமதங்களைக் கற்றவர்கள் எதிர்த்தார்கள் என்ற குறிப்புப் புறநானூற்றில் காணப்படுகிறது. ஆனால், பொதுவாகக் கற்றவர்களும் மற்றவர்களும் பெரும்பாலும் சமய வேற்றுமையோ மதவெறியோ இன்றிச் சமரசப் பெருநோக்கோடு வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள் என்று சுருங்கக் கூறலாம்.

மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பூவைநிலை என்னும் புறப்பொருள் துறைக்குத் திருமாலை மட்டும் உவமிக்கும் மரபை விடுத்து, இலவந்திகைப் பள்ளித்துஞ் சிய நன்மாறனைச் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் இவர்களோடு ஒப்பிட்டுப் புறநானூற்றில் 53வது பாடலை இயற்றியுள்ளார். முருகப் பெருமானைப் பாடிய கடுவன் இளவெயினனார் திருமாலையும் வேறுபாடின்றிப் பாடியிருக்கக் காண்கிறோம். வடநாட்டுச் செலவில் நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகு பொதி உருவத்துச் சிவபெருமானை இறைஞ்சி யானை மீது ஏறிய போது, 'குடக்கோக்குட்டுவன் கொற்றம் கொள்க' என ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோனான திருமால் சேடம் கொண்டு சிலர் நின்றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி தலைமேல் வைத்திருந்ததால், அதனை வாங்கி அணிமணிப்புயத்துத் தாங்கிய செங்குட்டுவனே, பத்தினிக்கடவுளான கண்ணகிக்குக் கோயில் கட்டி நித்திய வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து தொழுது வந்தான்.

இச்சான்றுகளை நோக்கும் போது சங்ககாலத் தமிழ் கத்தில் பலகடவுளை வணங்கும் சமயமே இருந்தது என் பதில் எட்டுணையும் ஐயமில்லை. இதுவே சங்க நூல்களில் காணும் சமயமுமாகும். இதுவே இன்று தமிழ்மக்கள் மேற்கொண்டுள்ள சமயமாகும். இன்று விநாயக வழி பாடும் சேர்ந்திருக்கிறது. அன்று விநாயகவழிபாடு தமிழ் கத்தில் புகவில்லை இது கி. பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் புகுந்தது. சமரச சமயமே சங்க நூல்களில் காணும் சமயம் என்க.

சித்தாந்தம் – 1962 ௵ - மே ௴


No comments:

Post a Comment