Saturday, May 9, 2020



கச்சியும் கச்சபேசமும்

ந. ரா. முருகவேள்

[சென்னை அரண்மனைக்காரன் தெருவிலுள்ள கச்சாலீசுவரர் கோயிலில் நிகழ்ந்த மாதாந்தர வழிபாட்டின் போது திரு. T. புருஷோத்தம முதலியார், M. L. C. அவர்கள் தலைமையிற் பேசியது. (23 - 9 - 1962)]

முன்னுரை:

'கச்சி' என்பது காஞ்சிபுரத்திற்கு மிகப் பழங்காலந் தொட்டு வழங்கி வரும் பெயர். "கச்சியோனே கைவண் தோன்றல்'' என்பது பெரும்பாணாற்றுப் படை. மணிமேகலையின் கண் "கச்சி மாநகர் புக்க காதை'' என வருதலும் காணலாம். கச்சி என்னும் சொல்லைப் போலவே 'காஞ்சி' என்னும் சொல்லும் மிகப்பழமையானதொன்று.

அருளியல் நகரம்:

காஞ்சிபுரம் முத்திதரும் நகரங்கள் ஏழனுள் முதன்மை மிக்கது. இதனை 'நகரேஷு காஞ்சி' என்னும் வடசொற்றொடர் இனிதுணர்த்தும். உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக மதிக்கத் தக்க மாட்சிமை யுடையது காஞ்சிபுரம். கி. பி. 640இல் இயூன் - சங்க் என்னும் சீன யாத்ரிகன், இங்குவந்து அதன் சிறப்புக்களைக் கண்டு வியந்து பாராட்டிச் சென்றிருக்கின்றான். 'நகர அமைப்பு (Town Planning) முறையில், காஞ்சிபுரம் உல கிலேயே மிகவும் சிறப்பிடம் பெற்றொளிர்கின்றது 'எனக் கெட்டிஸ் (Prof. Geddes) துரைமகனார் புகழ்ந்து போற்றுகின்றார். உலகில் எத்துணையோ பல சிறந்த பெருநகரங்கள் தோன்றிச் சிலகாலம் இருந்து, பின்னர் இருந்த இடமும் தெரியாமல், மருங்கற அழிந்து மாய்ந்தொழிந்து போயின. நமது தமிழகத்திலேயே, சோழர்களின் தலை நகரங்களாக விளங்கிய உறையூர் காவிரிப்பூம்பட்டினம் முதவிய நகரங்களும், சேர வேந்தர்களின் தலைநகரமாகத் திகழ்ந்திருந்த வஞ்சிமாநகர் முதலியனவும் அழிந்து போயின. ஆனால், பாண்டியர்களின் தலைநகரம் ஆகிய மதுரையும், பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியும் தொன்று தொட்டு இன்று காறும். தம் பழஞ் பெருஞ் சிறப்புக்களிற் சிறிதும் குன்றாது நின்று நிலவி வருகின்றன. மதுரையின் மாட்சிமைக்கு மீனாட்சியம்மை காரணம். காஞ்தியின் பெருமைக்குக் காமாட்சியம்மை காரணம். அம்மையின் அருள் காரணமாகவே இவ்விரு பெரு நகரங்களும் செழித்தோங்கிச் சிறந்து திகழ்ந்து வருகின்றன.



கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்:

காஞ்சிபுரத்தின் புகழ் மிகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேசம் எங்கும் பரவியிருந்தது. பிறதேசங்கள எல்லாம் காஞ்சியின் சிறப்பினைப் புகழ்ந்து கொண்டாடின. இதனை ஏறத்தாழ 1600 ஆண்டுகட்கு முற்பட்ட வராகக் கருதப்பெறும் மாணிக்கவாசகர், 'தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்' என அருளிச் செய்திருத்தல் கொண்டு உணரலாம். 'தேச மெல்லாம் புகழ்ந்தாடுதல்' என்னும் அடைமொழி, கச்சிக்கும் திருவேகம்பன் செம்பொற்கோயிலுக்கும் பொருந்துவதாகும். இங்ஙனமே ‘கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்' என்று திருநாவுக்கரசர் பெருமான் அருளிச் செய்திருத்தலும் அறிந்தின் புறம்பாலது. சந்திரகுப்த மௌரியனின அமைச்சராக விளங்கி, ‘அர்த்த சாஸ்திரம்' என்னும் அரிய பெரிய நூலினை எழுதிய சாணக்கியர் காஞ்சிபுரத்திற் பிறந்தவர். சங்கரர் இராமாநுஜர் பரிமேலழகர் போன்ற பெருமக்கள் காஞ்சியில் வாழ்ந்தவர்கள். பௌத்த சமயத்தின் பெருநூலாசிரியர்களாகச் சைனா திபெத்து ஜப்பான் பர்மா இலங்கை முதலிய நாடுகளிலெல்லாம் போற்றப்பெறும் புகழ் ஓங்கிய திக்கநாகர் தருமபாலர் தரும கீர்த்தி முதலிய பெருமக்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களே யாவர். கடம்ப அரசர் குலத்தைத் தோற்றுவித்த முதல் வனாகிய மயூரசன்மன் (கி. பி. 350) - என்னும் மன்னவன் பல்லவர்களுக்குப் பகைவனாயினும், கல்வியிற் கரை இலாத காஞ்சி'மாநகரத்தின் சிறப்புக் கருதி, அங்கு மாறுவேடங் கொண்டு மறைந்து வந்திருந்து கல்வி பயின்று சென்றனன் என வரலாறு கூறுகின்றது! காஞ்சிபுரம் கயிலாச நாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயிற் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றனவாகும்.

சான்றோர்கள் போற்றிய காஞ்சி:

காஞ்சிபுரம் திருக்குறிப்புத் தொண்டர், சாக்கியர், ஐயடிகள் காடவர்கோன் என்னும் நாயன்மார்கள் வாழ்ந்திருந்து வழிபட்டு அருள் பெற்ற மாட்சிமை சான்றது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார், சேக்கிழார் சுவாமிகள், சிவஞான சுவாமிகள், தணிகைப் புராணம் முதலியன பாடிய கச்சியப்ப முனிவர் முதலிய பெருமக்கள் பலரும் காஞ்சிபுரத்தின்பால் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த பொழுதே ஆசிரியர் சிவஞான சுவாமிகள், சிவஞான போதப் பேருரையினை வகுத்தருளினர் என்பர். சேக்கிழார் சுவாமிகள் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, தொண்டை நாட்டின் பெருமையினையும், காஞ்சிபுரத்தின் சிறப்புக்களையும் சுவைதுளும்பப் பெரிதுவந்து பாடுகின்றார். காஞ்சி என்னும் சொல்லே அவர்தம் திருவுளத்தில் தேனும் இன்னமுதமுமாய்த் தித்திக்கின்றது. ஆதலின், அவர் அதனைத் திரும்பத் திரும்பப் பலகால் பல பொருள்களில் அமைத்துப் பின் வரும் செய்யுளிற் பாடி இன்பு றுத்துகின்றார்.  

"தண் காஞ்சி மென் சினைப்பூங் கொம்பர் ஆடல்
சார்ந்தசைய, அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசைபாடும் பழனவேல
பணை மருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர், நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழுங்கிடங்கு, திருமறைகள் ஒலிக்கும் தெய்வ
வண்காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க
வளர்கருணைக் கடலுலகம் சூழ்ந்தால் மானும்

காஞ்சி என்னும் சொற்பொருட் காரணம்:

இங்ஙனம் சேக்கிழார் பெருமான் திருவாய் நவிற்றி மகிழ்ந்த 'காஞ்சி' என்னும் சொல்லின் செம்பொருட் குறிப்புக்களை யெல்லாம், ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தாம் இயற்றியருளிய காஞ்சிப்புராணம் என்னும் நூலில் அழகுற விளக்குகின்றார்:

1. க + அஞ்சி = காஞ்சி

க - பிரமம், சிவபெருமான்; அஞ்சித்தல் - வழிபடுதல். சிவ பெருமானை, அம்மை அயன் மால் முதலிய பலரும் வழிபட்டு அருள்பெற்ற இடமாதலின்,'காஞ்சி' என்னும் காரணப் பெயர் இந்நகரத்திற்கு அமைவதாயிற்று.

''பிறங்கு கவ்வெனும் மொழிப்பொருள் பிரமம்.
பிரமம் ஆனயாம் அஞ்சிக்கப் படலால்,
உறங்கிடாப் புகழ்க் காஞ்சி என் றுரைக்கும்
ஒருதிருப் பெயர் எய்தும் இந்நகரம்''

'பிரமம்' என்னும் சொல் சிவபெருமானைக் குறிக்கும் என்பதற்குப் பாம்பன் குமர குருதாச சுவாமிகள், "ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே'' என வரும் திருவாசகத் திருமொழியினை மேற்கோள் காட்டியிருப்பது ஈண்டு உணர்ந்து இன்புறுதற் குரியது.

2. க - பிரமன், அயன், நான் முகன். அஞ்சுதல் - பூசித்தல், வழிபடுதல். நான்முகக் கடவுளாகிய பிரமன் வழி பட்டு உலகைப் படைக்கும் ஆற்றலைப் பெற்ற இடம். "கவ்வென்பது அயன்பேர் என்ன, முந்து இருக்கு ஓதும் அஞ்சு என்பகுதி அடை. வொடு பூசை மொழியும் மாதோ'', "திசைமுகனால் அஞ்சிக்கப் படுதலினால் காஞ்சி எனத் திசைபோய் மல்கும்''

3. க - சென்னி, தலை; அஞ்சித்தல் - வழிபடுதல். எத்தகையவரும் தலையாய தலம் எனச் சென்னி மேற் கொண்டு வழிபடத் தக்கது.

4. க - இன்பம்; அஞ்சித்தல் - அடைவித்தல்; யாவர்க்கும் பேரின்பத்தை அடைவிப்பது.
"மற்றும் கவ்வெனல் சென்னியோடு இன்பம்
மலரவன் தலையுணர்த்தும்; அஞ்சித்தல்
சொற்ற பூசனை அடைவும் ஆம். யாரும்
சென்னி மேற்கொடு தொழத்தகும் சிறப்பால்,
பற்றி வைகுநர் பேரின்பம் உறலால்,
பங்க யத்தவன் வழிபட லானும்,
பெற்ற தாகும் இத்திருப்பெயர்! இதனால்
பிரம லோகம் என்று ரைக்கவும் படுமால்,”

5. காஞ்சி - மகளிரின் உந்தி, கொப்பூழ். நிலமகளுக்கு உந்தித் தானத்தைப் போன்ற சிறந்த தலம்.

"இலகு வாள் நகை அரிமதர் மழைக்கண்
இருண்ட வார்குழல் வேய்மருள் பணைத்தோள்
கலப மாமயில் இயல் எழில் மடவார்
உந்தித் தானத்தைக் காஞ்சி என் றுரைப்பர்;
சுலவு வெண்டிரைப் பனிக்கடல் உடுக்கைத்
தொல்லை நானில மடக்கொடி தனக்குக்
குலவு காஞ்சி நற் றானமாய்ப் பொலிந்த
கொள்கை யானும் அத் திருப்பெயர் வழங்கும்''

காஞ்சியின் சிறப்பு:

காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரம். அதனைப் போன்ற மிகச் சிறந்த கோயில்கள் நிறைந்த நகரம் பிறி தொன்றில்லை எனலாம். பலவகைப் பட்டனவும், பழமையும் பெருமையும் வாய்ந்தனவும் ஆகிய கோயில்கள் அங்குள்ளன. சமணம் பௌத்தம் சைவம் வைணவம் என்னும் பல்வேறு சமயங்களின் கோயில்களும் அங்கு உண்டு. பல்லவர்காலம், சோழர்காலம், பிற்காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல கோயில்கள் அந்நகரை அணிசெய்கின்றன.

“Of all the ancient places in South India there is none that can rival the ancient Kanchi in the variety, antiquity and importance of ancient monuments. Here are Jaina and Buddhist, Saiva and Vaishnava temples of the Pallava Chola and later times, which it would be difficult to imagine in any other place”. - K. N. DIKSHIT.

அது பற்றியே "கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும் கயி லாய நாதனையே காணலாமே'' என நாவுக்கரசர் நவின்றருளினார். காஞ்சிபுரத்தின் அதிசயங்கள் குறித்துச் சேக்கிழார் சுவாமிகள் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற் றிலும், கச்சியப்ப சிவாசாரியர் கந்தபுராணம் திருநகரப் படலத்திலும் சிவஞான சுவாமிகள் காஞ்சிப் புராணம் விம்மிதப் படலத்திலும் வீரிவாக விளக்கிப்பாடியுள்ளனர். சீர்காழிக்குப் பன்னிரண்டு பெயர்கள் உளவாதல் போல, காஞ்சிபுரத்திற்கும் பன்னிரண்டு பெயர்கள் வழங்கும். அவை முறையே காஞ்சிபுரம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், திரிமூர்த்திவாசம். பிரமபுரம், காமபீடம், தபோமயம். சகற்சாரம், சகலசித்தி, கன்னிகாப்பு. துண் டீரபுரம், தண்டகபுரம் என்பனவாகும். இப் பெயர்க் காரணங்களால் காஞ்சிபுரத்தின் அருமை பெருமைகளை யாவரும் அறிந்தின்புறலாம்.

காஞ்சியைப் பற்றிய தனிக் கவிதைகள்:

காஞ்சிபுரத்தைப் பற்றிப் பலப்பல சிறந்த அழகிய இனிய தனிக் கவிதைகள் இலக்கியங்களில் வழங்குகின்றன. அவைகள் அறிஞர்களின் உள்ளங்களைப் பெரிதும் கொள்ளை கொள்ள வல்லவை.

ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக்,
காருடைய பீலி கடிகாவா, - நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு

மலிதேரான் கச்சியும், மாகடலும் தம்முள்
ஓலியும் பெருமையும் ஒக்கும்; - மலிதேரான்
கச்சி படுவ கடல்படா; கச்சி
கடல்படுவ எல்லாம் படும்.''

"ஆடவர்கள் எவ்வா றகன்றொழிவார்? வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் ! இதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு?''

வெஃகா - யதோத்காரி கோயில்
பாடகம் - பாண்டவதூதர் கோயில்
ஊரகம் - உலகளந்த பெருமாள் கோயில்
பஞ்சரம் - கருப்பக்கிரகம், திருவுண்ணாழிகை.

தொல்லை மறைதேர் துணைவன்பால், ஆண்டுவரை
எல்லை இருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்
ஒங்குலகில் வாழும் உயிர் அனைத்தும் ஊட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சி இடை.”

"பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண் தாங்கு
வண்மைசால் சான்றவரும் காஞ்சி வளம்பதியின்
உண்மையால் உண்டிவ் வுலகு',

என்பன போன்ற பல தனிப்பாடல்கள், காஞ்சியின் பெருமையைக் குறிப்பனவாகத் தண்டியலங்காரம், வீரசோழியம், யாப்பருங்கலம் முதலிய தமிழிலக்கண நால்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

"கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டம்காவல்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு.
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு,''
என்னும் பழைய வெண்பாச் செய்யுள் ஒன்று, அடியார்க்கு நல்லார் அவர்களால் தமது சிலப்பதிகாரவுரையில் மேற கோளாக எடுத்தாளப் பெறுகின்றது.

காஞ்சியும் கரிகாலனும்:

காஞ்சிபுரம் கரிகாற் பெருவளத்தானால் நான்கு காதம் விரிவாக்கப்பட்டு, நாற்பத்தெண்ணாயிரம் வேளாண் மக்களைக் குடியேற்றப் பெற்றது என்னும் செய்தி,

''என்றும் உள்ள இந்நகர் கலியுகத்தில்
இலங்கு வேற் கரிகாற்பெரு வளத்தோன்
வன்றி றற்புலி இமயமால் வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடன் முன் கண்டுரை செய்யத்
திருந்து காதம் நான்குட்பட வகுத்துக்
குன்று போலும்மா மதில்புடை போக்கிக்
குடியி ருததின கொள்கையின் விளங்கும்''

என்னும் பெரிய புராணப் பாடலாலும் தெரிகின்றது.

"விண்ணுளார்மறை கள்வே தம்விரித் தோதுவார்
கண்ணு ளார்கழ லின்வெல் வார்கரி காலனை
நண்ணு வார்எழில் கொள்கச் சிநகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடு கின்ற அலங்கா ரம்மே "

எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரமும் கரிகாலனைக் குறிப்பிடுதல் காணலாம்.

ஏகம்பநாதர்:

காஞ்சிபுரம் ஏகம்பநாதர் கோயிலைப் போலவே, கச்சபேசமும் முதன்மையும் சிறப்பும் வாய்ந்த கோயில் ஆகும். இறைவன் 'வெள்ளங் காட்டி வெருட்டிட அம்பிகை நடுக்கம் (கம்பம்) கொண்டு சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்ட காரணத்தால், கோயில் 'ஏகம்பம்' எனப் பெயர் பெற்றது. ஆம்ப்ரம் - மாமரம். இறைவன் ஒரு மாமரத்தின் கீழ் (ஏகம் + ஆம்ப்ர ம் = ஏகாம்பரம்) எழுந்தருளியிருத்தலின், ஏகாம்பரநாதர் எனப் பெயர் பெற்றார் எனினுமாம்.

''முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கால ரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது'

எனவரும் சுவைமிகுந்த காளமேகப் புலவர் பாடலில், ஏகாம்பரநாதர் 'ஒருமாவின் கீழர்' எனக் குறிப்பிடப்படுதல் அறிதற்குரியது.

கச்சபேசம்:

கச்சபேசம் என்னும் தொடர், கச்சபம் + ஈசம் என்னும் இருசொற்கள் கொண்டது. கச்சபம் - ஆமை. ஈசம் - கோயில், ஈசன் எழுந்தருளியிருப்பது. இச்சொல் ஈச்சுரம், ஈச்சரம் எனவும் வழங்கும். அமிர்தம் பெறுவதன் பொருட்டுத் தேவர்கள் திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது, திருமால் ஆமை வடிவம் கொண்டு மந்தரமலையைத் தாங்கினர். அந்நிலையிற் செருக்கு எய்திய திருமால் கடலைப் பெரிதும் கலக்கி உழக்கினர். அதுகண்டு தேவர்களும் பிறரும் அஞ்சி நடுங்கி வருந்தி அலமந்தனர். அதுபோது சிவபிரான் தோன்றி, ஆமை வடிவை மாய்த்து, அதன் செருக்கை ஒழித்து, அதன் ஓட்டினைத் தமது திருமார்பில் தரித்தார். தமது பிழை யுணர்ந்து கழிவிரக்கம் கொண்ட திருமால், தமது கச்சப (ஆமை) வடிவில் சிவபெருமானை வழிபட்ட திருக்கோயி லே 'கச்சபேசம்' எனப் பெயர் பெற்றது. கச்சப + ஆலய + ஈசுவரர் என்னும் சொற்றொடரே கச்சாலீசுவரர் என மருவி வழங்கி வருகின்றது .'கச்சாலை' என்னும் மரூ உச்சொல் 'கச்சபேசம்' என்பதனைக் குறிக்க நெடுங்காலத்திற்கு முன்னரே வழங்கியிருக்கின்றது. கச்சாலீசு வரரைப் பற்றிய குறிப்பு தமிழிலக்கியங்களில் எங்கேனும் வந்துள்ளதா? எனச் சிந்தித்தபொழுது, பின் வரும் இரண்டு பாடல்கள் நினைவிற்கு வந்தன.

'நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்பன் நுதல்விழியன் - தோலுடையன்
கைம்மான் மறியன் கனல் மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை”

சீலத்தால் ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால் - ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம்
கச்சிக்கச் சாலைக் கனி',

இவ்விரண்டு பாடல்களும் 'தண்டியலங்காரம்' என்னும் அணி இலக்கண நூலில் மேற்கோட் செய்யுள்களாக வருகின்றன. கயிலாசநாதர் கோயிலைக் கட்டு வித்த இராசசிம்மன் (கி. பி. 685 - 705) என்னும் பல்லவ மன்னனின் அவைக்களப் புலவராக விளங்கியிருந்த தண்டி என்னும் வடமொழிப் புலவர் இயற்றிய காவ்யாதர்ஸம் என்னும் வடமொழி நூலின் மொழி பெயர்ப்பே, தமிழ்த் தண்டியலங்கார நூல். இதனைத் தமிழில் மொழிபெயர்த்து இயற்றியவர் அநபாய சோழனின் காலத்தவர் என்பதும், ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் பெருந்தகையின் மாணவர் என்பதும், அந்நூலின் பாடல்களில் வரும் குறிப்புக்களைக் கொண்டு தெளியப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் மிக முதன்மை வாய்ந்த திருக்கோயில்களுள் ஒன்றாகத் திகழும் கச்சபேசம் பற்றியும், தேவாரத் திருப்பதிகங்கள் பாடப் பெற்றிருத்தல் வேண்டும். அவைகள் இப்போது கிடையா மற் போயினமை, நம்மனோர் தவக்குறைவேயாகும். எனினும் இவ்விரண்டு பழம் பாடல்களும் கச்சாலீசுவரர் பெருமானை நாம் நினைந்து துதித்து உய்தற்குத் துணைபுரி வன ஆகும்.

"கச்சுற்றப் பாரபயோதர முலையாள் முன்
கற்புத்தப் பாதுல கேழையும்
ஒக்கப்பெற்றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே''

எனவரும் திருப்புகழ்ப்பாடலும் ஈண்டு உணர்தற்குரியது.

சென்னைக் கச்சாலீசுவரர்:.

கிழக்கு இந்தியக் கம்பெனியில் 'துவிபாஷி' யாக இருந்தவர்களுள் திரு. களவாய் செட்டியார் என்பவர் ஒருவர். அவர் நாள்தோறும் கச்சிக் கச்சபேசரை வழிபடும்நியமம் பூண்டிருந்தவர். தமது அலுவல் நிலைமைகளால் அது தடைப்படவே, அவர் பெரிதும் வருந்தினார். இறைவன் அவர் தம் கனவில் தோன்றி, 'நீ சென்னையிலேயே எமக்கு ஒரு கோயில் அமைத்து வழிபடலாம்' என்று பணித்தனர். அதன்படி திரு. களவாய் செட்டியார் அவர்கள் அமைத்த திருக்கோயில் தான் இது. அதனாலேயே இதற்குக் கச்சாலீசுவரர் கோயில் எனப் பெயர் வழங்குவதாயிற்று. எங்கே இருந்து நாம் நினைத்தாலும் இறைவன் நமக்கு அங்கே வந்து அருள் புரியும் தன்மையுடையவராக விளங்குகின்றார்.

"எங்கேனும் இருந்துன் அடியேன் உனை நினைந்தால்
அங்கேவந் தென்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே''

"எங்கேனும், யாதாகிப் பிறந்திடினும், தன்னடியார்க்
கிங்கே என் றருள் புரியும் எம்பெருமான், எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கோத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே”,
எனத் தேவார ஆசிரியர்கள் அருளிச் செய்தபடி, அன்பர் ஒருவரின் பொருட்டுக் காஞ்சிபுரத்துக் கச்சாலை ஈசுவரர், சென்னைக்கு எழுந்தருளி நம்மனோர்க்கும் அருள் புரிந்து வருகின்றார். ஓரிடத்திருந்து பெயர்ந்து செல்வோர், தாம் புதிது சென்று வாழத் தலைப்படும் இடத்தும், தம் முன்னையிடத்தின் பழக்க வழக்கங்களையும் பிறவற்றையும் விடாமல் உடன் கொணர்ந்து நிலைபெறுத்துவர். இதனை ஆங்கிலத்தில் 'Colonial preservation' என்பர். அம்முறையில் சென்னையில் அமைந்தனவே இக்கச்சாலீசுவரர், ஏகாம்ப ரேசுவரர், அருணாசலேசுரர், காளத்தி ஈசுரர் பெயர்களால் அமைக்கப் பெற்றுள்ள சென்னைக் கோயில்கள் ஆகும்.

கதையும் கருத்தும்:

கச்சபேசத்தில் துர்க்கை சாத்தன் சூரியன் வயிரவர் விநாயகர் ஆகிய ஐவரும் கூட இறைவனை வழிபட்டு, அருள் பெற்றுச் சிறப்புற்றனர். கச்சிக் கச்ச பேசத்திற் போலவே, திருக்கச்சூர் என்னும் தலத்திலும் திருமால் சிவபிரானை ஆமை வடிவில் வழிபட்டார். திருக்கச்சூர், இறைவன் சுந்தரர் பொருட்டுப் பிச்சை ஏற்று உணவளித்த தலம். அங்குள்ள கோயிலுக்கு 'ஆலக்கோயில்' என்றும் இறைவனுக்கு 'மலைமேல் மருந்தீசர்' என்றும் பெயர். தலபுராணக் கதைகள் இக்காலத்தில் ஒரு சிலருக்குப் புறக்கணிக்கத் தக்கன போலத் தோன்றலாம். எனினும் இத்தகைய கதைகள் எத்துணையோ பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களாற் சொல்லவும் கேட்கவும் சுவைக்கவும் பெற்று வழங்கி வருவன. இலக்கியம் வரலாறு சமுதாயம் பண்பாடு முதலிய துறைகளில் இன்னோரனைய கதைகள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. அவைகளை ஏற்றபெற்றி போற்றுதல் நமக்குக் நடமை யாகும். §

§ "Indian mythology is richer, vaster, very beautiful, and full of meaning. I have often wondered what manner of men and women they were who gave shape to these bright dreams and lovely fancies, and out of what gold mine of thought and imagination they dug them... Many of the problems of human life have a permanence and a touch of eternity about them, and hence the abiding interest in these ancient books... We can admire them, and they become part of our mental heritage” - Jawaharlal Nehru.

இத்தல வரலாற்றுக் கதையில் வரும் திருமால், மால் (மயக்கம்) கொண்டு உலவும் நம்மை ஒத்த உயிர்களையே குறிப்பதாகக் கொள்ளலாம். அவர் தம் ஆமைவடிவம் அறியாமையில் அழுந்தி வருந்தும் உயிர்களாகிய நம் இயல்பினைச் சுட்டுகின்றதெனலாம். ஆமையின் கால்கள் நான்கும், தலை ஒன்றும் ஆகிய ஐந்தும், உயிர்களின் ஐம் பொறிகளை யுணர்த்தும். ஆமை நீரும் நிலமும் ஆகிய ஈரிடத்தும் உலவும் தன்மையுடையது. உயிர்கள் நல்ல தனோடும் தீயதனோடும் தொடர்பு கொள்ளும் தன்மையினை, இது குறிக்கின்றது. ஆமையின் மந்தகதி, உயிர்களின் தெளிவற்ற மந்தத் தன்மையினைப் புலப்படுத்தும்.

திருநாவுக்கரசர் தம்மை ஓர் ஆமையின் நிலைக்கு ஒப்பிட்டுக் கொள்ளுகின்றார்

"வளைத்து நின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்து நின்றாடு கின்றேன் என் செய்வான் தோன்றினேனே

என்பது திருநாவுக்கரசர் தேவாரம். முதலில் இன்பம் போலத் தோன்றி மயக்கிப் பின்னர்ப் பெருந்துன்பத்தில் அழுத்தி வருத்தும் உலகியல் நுகர்ச்சிகளில் உழலும் உயிர்களின் தன்மைக்கு, உலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரின் இளஞ்சூட்டினை, முதலில் மகிழ்ந்து பின்னர்ச் சூடு ஏறஏறத் தாங்கொணாது பெரிதும் தளர்ந்து வருந்தி மாயும் ஆமையினுடைய தெளிவின்மையினை. நாவுக்கரசர் உவமை கூறியிருத்தல் நனிமிகப் பொருந்துவதாகும். இஃது உயிர்களாகிய நம்மனோரின் அறியாமை நிலைக்கு ஏற்ற எடுத்துக்காட்டு. நாலடியார் (331) செய்யுளிலும் இக் கருத்து வந்துள்ளது. இனி, மெய்யுணர்வு எய்தத்தக்க உயிர்களின் மேதகு நிலைக்கும் ஆமையையே ஏற்ற உவமையாக,

''ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து'

எனவரும் திருக்குறளில், ஆசிரியர் திருவள்ளுவர் அருளிச் செய்திருக்கும் திறம் அறிந்தின்புறற் பாலது.

முடிவுரை:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றி, வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, நாம் அனைவரும் உய்வதற்குச் சுந்தராம்பிகை சமேத கச்சாலீசுவரப் பெருமான் திருவருள், நமக்குத் துணைபுரிவதாக!

சித்தாந்தம் – 1962 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment