Saturday, May 9, 2020



கஞ்சனூர் - சப்த க்ஷேத்திரங்கள்

[மு. அருணாசலம்]

தென்குரங்காடு துறை:

இடம்: - தஞ்சை ஜில்லாவில் ஆடு துறை என்ற ஊரின் சயிலடியிலிருந்து வடக்கே 2 பர்லாங் தூரம், கும்பகோணத் திலிருந்து மாயூரம் செல்லும் பஸ் மார்க்கத்தில் 8, மைலில் சாலைக்குத் தென்புறம் சிலகஜ தூரத்தில் கோயில் உள்ளது. காவிரிக்குத் தென்கரை.

பெயர்: - காவிரிக்கு வடகரையில் ஐயம்பேட்டை அருகே மற்றொரு குரங்காடுதுறை இருப்பதால், தென் கரையில் உள்ள இவ்வூர் தென்குரங்காடுதுறை ஆயிற்று. சுக்ரீவன் பூஜித்தமையால் இந்தப் பெயர் ஏற்பட்டது. துறை என்றபெயருக்கு ஏற்ப, கோயிலுக்குச் சமீபத்தில் வீரசோழ னாறு ஓடுகின்றது. சுவாமி திருநாமம் ஆபத்சகாயேசுவரர், அம்பிகை ப்ரவாள வல்லி, பவழக்கொடி அம்பிகை.

“தென்குரங் காடு துறைத் தேவிபவ ளக்கொடிசேர்
சங்கரா ஆபற் சகாயனே'

தலவிருட்சம் பவழ மல்லிகை.

கோயில்: - சிறப்பான பெரிய கோயில், கோபுரத்தி லிருந்து கருவறை வரையில் மூன்று கட்டாக உள்ளது. இது கஞ்சனூர் சப்தஸ்தலங்களுள் ஒன்று. மிகப் பழைய கோயில், நல்ல நிலைமையில் உள்ளது. மதில் சுவர் முதலி யன சிறப்பாக உள்ளன.

மூர்த்தி: - அம்பிகை சிறிய உருவம், நிருதி விநாயகர் வலம்புரி, திருச்சுற்றில் கயிலாசநாதர், சுக்ரீவன் பூஜித்த லிங்கமும் அம்பிகையும்; விசுவநாதர், அகத்தியலிங்கம்; வசிஷ்டலிங்கம், புதிய நவக்கிரகப் பிரதிஷ்டை; நடுவில் சூரியன் இருக்க மற்ற எட்டுக் கிரகங்களும் தங்களுக்குரிய திசையை நோக்காமல் சூரியனையே பார்க்கின்றனர். கரு வறையின் கோஷ்டத்தில் பல மூர்த்தி வடிவங்களும் மேலே சிவபராக்கிரமச் சிற்பங்களும் உள்ளன. கோஷ்டத்தில் கணபதி, மேலே மார்க்கண்டேயர் அமைப்பு, அடுத்து நடராஜர் சிறிது பின்னம், அருகில் இடத்தில் காரைக்கால் அம்மையார், மேலே பைரவர் சிற்பம். பின் அகத்தியர், மேலே கிராதார்ஜுனர். ஹரதத்தர் மூலவர் சிலையும் உள்ளது. சுக்ரீவ பூஜை செம்பியன் மாதேவி பூஜையைக் குறிக்கும் சிற்பங்களும் உள்ளன. வடபுறக் கோஷ்டங் களில் பிரமன், பிக்ஷாடன மூர்த்தி, விஷ்ணு துர்க்கை, கங்கா விசர்ஜனர், மேலே கஜஸம் ஹார மூர்த்தி, துர்க்கைக்குத்தனி வழிபாட்டிடம், சிறப்பு வழிபாடு; அஷ்டபுஜ துர்க்கை; மேலே ஸம்ஹார துர்க்கை வடிவம்; மகிஷாசுரனுடன் போரிடும் கோலம்.
நடராஜப் பெருமான் சபை முழுமையும் பித்தளைத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பஞ்சாட்சரப்படி இரு புறமும் யானைகள், யானைகளின் விரிந்தகன்ற காதுகள் படியின் இருபுறமும் பரந்து நிற்கின்றன. படியில் யாரும் ஏறுவதில்லை. பெருமானருகே மாணிக்கவாசகர், பதஞ்சலி வியாக்கிரபாதர் இருபுறமும் நின்று தரிசிக்கின்றனர். நட ராஜ சபைக்கு எதிரே வடக்கு நோக்கியவாறு தனிச்சபை போன்ற மண்டபத்தில் நால்வர் இருக்கின்றனர். முருகப் பெருமான் இடக்கையில் சக்திவேல் பிடித்திருக்கிறார். (ஒருவேளை வில்லேந்திய கோலம் போலும்) சுந்தர மூர்த்தி இடப்புறத்தில் யோக தண்டம் ஊன்றியிருக்கிறார். காசி விசுவநாதருக்குத் தனிக்கோயில் உள்ளது. இங்கு உற்சவ மூர்த்திகள் மட்டும் உள்ளனர்.

வரலாறு: வாலியால் துன்புற்ற சுகரீவன் இங்கு இறைவனைப் பூஜித்தான். வாலி துரத்தி வந்தபோது அவன் கண்ணில் படாதவாறு அம்பிகை சுக்ரீவனை மறைத்து விட்டாள் என்பது வரலாறு. பதஞ்சலி, வியாக்ரபாதர் இரு வரும் இங்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தசமயம் காவிரி நதி வழிவிடவில்லை. நடராசப் பெருமான் நதியை வடியச் செய்து இருவருக்கும் தாண்டவ தரிசனம் அளித்தார். இருவரையும் நடராஜாவின் பக்கலில் காணலாம். இவ்வூர் ஹரதத்தர் வரலாற்றோடும் தொடர்புடையது. ஒருசமயம் அவர் தரிசனத்துக்காக இங்கு வந்தபோது அகாலமாகிப் பூஜை முடிந்து கதவு தாளிடப்பட்டிருந்தது. அவர் பிரார்த்திக்க, கதவு தானே திறந்தது. சுவாமி தரிசனம் கொடுத்தார்.

விழா : நடைபெறுகின்றது : கஞ்சனூர் பஞ்சமூர்த்தி கள் சப்தஸ் தலங்களையும் சுற்றி இங்கு இரவு மூன்று மணிக்கு வரும் விழா முன்னமே நடைபெற்று வந்தது. இப்போது அவ்விழாவின் அடையாளமாக ஹாதத்த மூர்த்திமட்டும் வருகிறார்.

பாடல் : சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் குறுக் தொகைப் பதிகம் ஒன்று. 'காவிரிக் கோலக்கரை மேல் குறையார் பொழில்சூழ் குரங்காடுதுறையே' என்பது சம்பந்தர் வாக்கு (1848) தடநீர்ப் பொன்னித் தென் கரைக் குரங்காடுதுறை' என்பது அப்பர் வாக்கு (5858) இவற்றால் காவிரியின் கரையில் ஆடுதுறை இருந்தது என்று ஏற்படுகின்றது. இன்று ஆடுதுறை அருகே இருப்பது வீரசோழனாறு. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட வீரராஜேந்திர சோழன் பெயரைத் தாங்கிய. கிளை நதி. இதனால் முற்காலத்தில் காவிரியின் கிளைகளையும் காவிரி என்றே வழங்கும் வழக்கு உண்டென்று நாம் அறி கிறோம். திருப்புகழ் மூன்று பாடல்கள் (78, 514, 557)
'' குரங்கு குதித்தாடு தலங்கள் இசைப்பான'' என்பது அருணகிரிநாதர் பாடல்.

நிர்வாகம்: சொத்துக் குறைவான தலமாக இருப்பினும் தனிப்பட்டோர் நிர்வாகம் இங்கு சிறப்பாய் உள்ளது.


கஞ்சனூர்: -

இடம்: - கும்பகோணத்திலிருந்து திருக்கோடிகா செல் லும் பஸ் மார்க்கத்தில் திருக்கோடிகாவுக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. சாலைக்குத் தென்புறம் ஒரு பர்லாங் தூரத்தில் காவேரி, வடக்கே ஒருபர்லாங் தூரத் தில் கோயில் கோபுரம்; நாரசிங்கன்பேட்டை ரயிலடி யிலிருந்து வடக்கே ஒரு மைல்; திருமங்கலக் குடியிலிருந்து கிழக்கே மூன்று மைல்.

பெயர்: - தாமரை மலரில் வசிக்கும் பிரமன் பூசித்ததால் கஞ்சனூர் என்று பெயர். (கஞ்சன் - பிரமன்) சுவாமி திருநாமம் அக்கினீசுவரர்; அம்பிகை கற்பகாம்பிகை. தல விருட்சம் புரசு (வடமொழியில் பலாசம்)

கோயில்: - பெரிய கோபுரம் உள்ளது. அதில் எந்தச் சிற்பமும் இல்லை சிறப்பான பெரிய கோயில். கிழக்கு நோக்கிய சந்நிதியில் கிழக்குப்பக்கம் இருக்கவேண்டிய கோபுரம் தெற்கு மதிலில் இருக்கின்றது. உள்சென்றால் அம்பிகையை வழிபட்டு வலம் வந்த பிறகு தான் சுவாமி சந்நிதி அடையக் கூடிய மாதிரி கோயிலின் அமைப்பு உள்ளது. விநாயகர் கற்பக விநாயகர்; இவர் கோபுரத்தின் வெளியே இரண்டு வீடுகளே உள்ள சந்நிதி வீதிக்குத் தெற்கே தனிக் கோயிலில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது.

மூர்த்தி: - பலாச விருட்சத்தின் அடியிலிருந்த பலாச வனேசுவரர், அக்கினி பூசித்தபின் அக்கினீசுவரர் ஆனார். நிருதிவிநாயகர் உள்ள இடத்தில் விசுவநாதர் இருக்கிறார். இத்தலத்தில் ஹரதத்த சிவாசாரியர் வரலாறு சைவர்களுக்கு மிகவும் ஏற்றமானது. கோட்டத்தில் தக்ஷணா மூர்த்தி உருவங்கள் இரண்டு, பழைய உருவம் சிறியது; புதிய உருவம் பெரியது; மூர்த்தி திருவடியில் உபதேசம் பெறும் ஹரதத்தர் கும்பிட்ட கோலத்தில் அமர்ந்திருக்கிறார். இருவரும் கோஷ்டத்தில் அடங்காத உருவம். இத்தலத்திற்குச் சிறப்பானது நடராஜப் பெருமானுடைய சிலா விக்கிரகம். பெருமானும் சிவகாம சுந்தரி அம்பிகையும், இங்கு சிலைவடிவமாக எழுந்தருளி இருப்பது தமிழ் நாட்டுக் கோயில்களில் மிகமிக அபூர்வமாய்க் காண்கிற ஒருகாட்சி. இந்திரன், கம்சன் பூஜித்த லிங்கங்கள் சந்நிதியில் ஹரதத்தரைப் போற்றிய சிவலிங்கபூபதி என்ற அரசனுடைய சிலை கும்பிட்டவாறு உள்ளது. அம்பாள் சந்நிதியில் முன்னிருந்த அம்பிகை (சிறிது பின்னம்) உள்ளது. இது மிகப்பெரிய உருவம். பின் பிரதிட்டை செய்யப்பட்ட உருவம் சிறியது. வடப்புறச் சுவர் ஒன்றில் புரசங்காட்டில் சிவலிங்கத்தைப் பராசர முனிவர் பூஜித்துத் தாண்டவதரி சனம் பெற்ற வரலாறு சிற்பமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நடராஜர், சிவகாம சுந்தரி, பதஞ்சலி, வியாக்கிர பாதர், திரு மால், வேடன், ஹரதத்தர் அமர்ந்த பீடம், ஹரதத்தர் ஆகி யோர் வடிவங்கள் இதில் உள்ளன.'மானக்கஞ்சாறர் சிலை'என்று கோயிலார் சொல்கின்ற ஒருசிலை கிரீடமும் உடை வாளும் உடையதாய்க் காணப்படுகின்றது. மூவர் சிலைகள் உள்ளன; சுந்தரமூர்த்தி சிலை இல்லை. அடுத்துச் சுரைக் காய்ப் பக்தரும் அவர் மனைவியாரும் காணப்படுகின்றனர் செம்புச்சிலைகளில் ஹரதத்தரைக் குறித்த சிலைகள் சிறப் பானவை. ஹரதத்தரும் அவர் மனைவியாரும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். மனைவியின் பெயர் கமலா; பிள்ளை கள் நீலகண்டன், அக்கினீசுவரன், உமாபதி: அடுத்து அவரைச் சோதிக்க வந்த இறைவன் கொண்ட பசியால் வாடிய வயிறொட்டிப்போன நீசனுடைய வடிவம் கோலத் துக்கு ஏற்ற பாவத் துடன் விளங்குகிறது. உயர்ந்து வளர்ந்த கிழவன்; கண்ட மாத்திரத்தில் உள்ளத்தை உருக் கத்தக்க தோற்றம். உற்சவ சுப்பிரமணியர் வில்லும் வேலும் ஏந்திய அவதாரம் மிகவும் சிறப்பானது சதுர்புஜங்கள்; குமார தந்திரத்தில் இவர் பாகுலேய மூர்த்தி என்று சிறப் பிக்கப் பெற்றிருக்கிறார். சுவாமி சந்நிதியில் வெளிப் புறத் தில் உள்ள நந்தி, ஹரதத்தருக்காகப் புல்லருந்திய கோலத் தில் வடக்கே தலையைத் திருப்பி இருக்கிறார்.

வரலாறு: - பதஞ்சலி பெற்ற தாண்டவ தரிசனப் பேறு தமக்கும் வேண்டுமென்று இங்கு பராசர முனிவர் வழிபட்டார். தாண்டவத் துக்குப் பிரமன் தாளம், திருமால் மத்தளம் கொட்டுகிறார். அக்கினி அதிகச் சாப்பாட்டினால்வெளுத்துப் பாண்டுரோகம் அடைந்து, இங்குக் கீழவீதியில் அக்கினி தீர்த்தம் உண்டாக்கிப் பூஜித்து நோய் நீங்கப் பெற்றான். இதனால் சுவாமி அக்னீசுவரர் ஆனார். ஒருவேடன் இங்கு ஏவல் செய்து வந்தபோது தினந்தோறும் வெற்றிலை பாக்குச்சுண்ணாம்பைச் சுவர் இடுக்குகளில் துடைத்துத் திருப்பணிக் கைங்கரியமாகி அவன் நல்லகதி அடைந்தான்.

விழா: - சிறப்பான விழாக்களும் பிரமோற்சமும் நடை பெறுகின்றன. கஞ்சனூர் சப்த க்ஷேத்திரம் என்ற ஒரு வரலாறு உண்டு. முற்காலத்தில் சுவாமி உற்சவத்தின் போது கோடிகா, ஆலங்காடு, ஆவடு துறை, ஆடு துறை, மங்கலக்குடி, மாந் துறை ஆகிய தலங்களில் சென்று விழாக் கொண்டார். இவ்விழாவில் ஹரதத்தர் மாத்திரம் இப்போது செல்வதாகத் தெரிகிறது.

பாடல்: - அப்பர் சுவாமிகள் தாண்டகப் பதிகம் ஒன்று உண்டு. அக்கினி வழிபாட்டை " அனலோன் போற் றும் காவலனை'என்று முதல் பாட்டில் குறிப்பிடுகிறார். எல் லாப் பதிகங்களிலும் " கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற் பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்'' என்று பாடுகிறார். கற்பகம் என்பது அம்பிகையின் திருநாமத்தைக் குறிப்பிட்டவாறு. "பஞ்சவடி மார்பினானை' என்று ஐந்தாம் பாடலில் சொல்லுகின்றார்; பஞ்சவடி என்றதனால் இத்தலம் மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றோடு தொடர் புடையது என்று கருதுகின்றனர். கஞ்சாறு கஞ்சனூர் என்றும், செம்பொன் பள்ளிக்கு அடுத்த கஞ்சா நகரம் என்றும் பலர் பலவாறு சொல்லுவர். இங்குள்ள மானக்கஞ்சாறர் வடிவத்தைச் சுந்தரமூர்த்தியே என்று ஐயுறுதற்கு இடம் உண்டு. இக்கருத்துக்கள் பின்னும் ஆய்ந்துதெளிதற்குரியன. க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில் இவ்வூரைக் குறிக்கும் 45 ஆம் பாடலில் ஹரதத்தர் வரலாறு விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளது.

நிர்வாகம்: இது மதுரைத் திருஞான சம்பந்தசுவாமிகள் ஆதீனத்து நிர்வாகம்; அவர்களுக்கு தஞ்சை ஜில்லா விலுள்ள ஐந்து கோயில்களில் இது முக்கியமானது. ஒரு நிர்வாக அதிகாரி உள்ளார். கோயில் நல்ல நிலைமையில் உள்ளது. திருப்பணிவேலை நடந்து வருகிறது.  

ஹரதத்தர் வரலாறு: சிவபரத்துவம் நிரூபித்த மஹான் ஹரதத்தர். இவர் சுதர்சனம் என்ற நாமத்தோடு இவ்வூரில் தனி ஆலயத்தில் உள்ள வரதராசப் பெருமானை வழிபடும் வைணவர் குலத்தில் பிறந்து பூர்வஜன்ம விசேடத்தால் பிள்ளைப் பிராயத்திலேயே வைணவரை வாதில் வென்று பெருமாள் ஆலயத்திலேயே பழுக்கக் காய்ச்சிய இருப்புப் பீடத்தின் மீது அமர்ந்து சிவமேபரம் என்று நிரூபித்தார். வரதராசப் பெருமாள் ஆலயமும், அங்கு சிவலிங்கமும் ஹரதத்தர் பீடமும் தனியே உள்ளன. இவர் சுருதி சூக்திமாலை, சதுர்வேத தாத்பரிய சங்கிரகம், சுலோக பஞ்சகம் முதலான மிகப் பலவான வடமொழிப் பாடல்கள் பாடிச் சைவசமயத்தை நிலை நாட்டினார். சைவர்களுக்கு இவர் குலதெய்வமாவார் என்றால் மிகையாகாது. இவருடைய மாணாக்கனும் அரசனுமாய் இருந்தவன் சிவலிங்க பூபதி. இவர் செய்த அற்புதங்களை இங்கு விவரிக்க இயலாது. விசாக உற்சவம் இவருக்காக நடைபெறுகிறது. கோபுர வாயிலுக்கு நேரே நூறு கஜ தூரத்தில் இவருக்கென்று தனிக்கோயில் உள்ளது. தஞ்சை வேளாளர் குடும்பங்களுக்கு இவர் வழிவந்தவரே ஆசாரியார்களாக இருந்து வருகிறார்கள்.
சுரைக்காய் பக்தர் வரலாறு : - இவ்வூரில் இருந்த பக்தர் ஒருவர் தாம் வளர்த்த சுரைக்கொடியின் காய் ஒவ்வொன்றையும் சுவாமிக்கே அர்ப்பணம் செய்து வந்தபோது விதைக்காக நிறுத்தி வைத்த ஒருகாயில் பாதியை மனைவி சிவனடியாருக்குக் கொடுத்துவிட இச்செயலைப் பொறாது பக்தர் மனைவியை அறுக்க முற்பட, சிவபிரான் இருவருடைய பக்தியையும் பாராட்டி இருவருக்கும் கயிலை வாழ்வு அளித்தார். சோழமண்டல சதகம் 34 ஆம் பாடல் இவ்வரலாற் றைக் குறிப்பிடுகிறது.

சிறப்பு: - ஹரதத்தர் வரலாறு, நடராஜப் பெருமான் சிலை உருவம், கற்பக வினாயகர், கற்பகாம்பிகை இங்குச்சிறந்தனவாம்.  

சித்தாந்தம் – 1964 ௵ - பிப்ரவரி, மார்ச்சு, ௴


No comments:

Post a Comment