Saturday, May 9, 2020



கடவுளால் முடியாத காரியங்கள்
[முரு. பழ. இரத்தினம் செட்டியார்]

கடவுளால் முடியாத காரியங்களும் உண்டா? தலைப்பே வியப்பினை அளித்தல் கூடும். ஒரு நாள் திரு. புரிசை முருகேச முதலியாரவர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, இறைவனால் செய்ய முடியாத ஒரு காரியத்தை நகைச் சுவை ததும்ப எடுத்துச் சொன்னார்கள்: -

'ஓர் அரசன் தன் ஆட்சியின் கீழ் அடங்கி நடக்காத எந்த ஒரு குடிமகனையும் உடனே தன் எல்லையை விட்டு வெளிக் கடத்திவிட முடியும். இன்றும் அரசாங்கங்கள் நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இறைவன் தன்கீழ் அடங்கி நடக்காத எந்த உயிரையும் தன் எல்லையை விட்டு வெளிக் கடத்த முடியாது. எல்லாம் அவன் எல்லையே; அவன் இல்லாத இடம் இல்லை. எங்கே போகச் சொல்வது; எங்கும் இருக்கின்ற வியாபகத் தன்மையால் பாவம் அவனுக்கு இம் முடியாமை ஏற்படுகிறது!

முதலியாரவர்கள் கூறிய இம் 'முடியாமை' இறைவனின் பெருமையை இன்னும் அதிகமாக நாம் உணரும்படி செய் கின்றதே அன்றி ஒரு சிறிதும் குறைக்கவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எனவே நாமும் இக்கட்டுரையில் இறைவனின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகச் சைவசித் தாந்தத்தில் கூறப்படும் நுட்பங்களை விளக்கும் வகையில் அவனால் செய்ய முடியாத காரியங்களை இரண்டாகக் குறிப் விட விரும்புகிறோம்: -

(அ) எல்லா ஆன்மாக்களுக்கும் உடனடியாக இறைவன் முத்தி அளிக்க முடியாது.
(ஆ) உலகில் தீய செயல்களே நடைபெறாமல் அறவே ஒழித்து, நல்ல செயல்கள் மட்டும் நடைபெறும் படி இறைவனால் செய்ய முடியாது.

இனி இம் 'முடியாமைகள் 'இறைவனுக்கு ஏன் ஏற்படு கின்றன என்பதை விவரிப்போம். சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைளையே அலகிப் பார்த்து இம் 'முடியாமை' களை நிறுவ வேண்டிய திருப்பதால் கட்டுரை சிறிது நீள்வதோடு, அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகளையும் எழுப்பக்கூடும். எனினும் தகுந்த சாத்திர ஆதாரங்களை மனத்திற்கொண்டு இயன்றவரை யாவர்க்கும் புரியும் வகையில் விளக்க முயல்கின்றோம்.

உலகில் இன்று மக்களால் பின்பற்றப் பட்டுவரும் ஆத்திக மதங்களில் பல இறைவனே எல்லாவற்றையும் உண்டாக்கினான் என்னும் கொள்கையை உடையனவாய் இருக்கின்றன. "அனைத்தும் ஆண்டவன் படைப்பு" எனச் சொல்வது தான் அவனுக்குப் பெருமையாக இருக்கும் என்றும் அவை கருதுகின்றன. சைவசித்தாந்தம் உலகை இறைவன் படைத்தான் எனக் கொண்டாலும் அவன் அதனை 'மாயை'' என்னும் பொருளிலிருந்தே உண்டாக்கினான் என்றும், ஆனால் அந்த 'மாயையை' அவன் உண்டாக்க வில்லை என்றும், அஃது இறைவனைப் போல யாராலும் உண்டாக்கபடாத அநாதி நித்தியப் பொருள் என்றும் கூறு கிறது. அதுபோலவே உயிர்களையும் இறைவன் உண்டாக்க வில்லை என்றும், அவைகளும் அவனைப்போல யாராலும் உண்டாக்கப்படாத அநாதி நித்தியப் பொருள் என்றும் கொள்கிறது. "இல்லது தோன்றாது" என்னும் சற்காரிய வாத அடிப்படையில், உயிர்களும் உலக மூல காரணப் பொருளாகிய மாயையும் என்றும் உள்ள பொருட்களே எனச் சைவசித்தாந்தம் கூறுவதை ஏனைய ஆத்திக சமயத்தினர் அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்களென எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சற்காரிய வாதம் அவர்கள் எல்லார்க்கும் உடன்பாடான ஒரு கொள்கை அன்று. எனினும் கடவுள் உண்டென்று கொள்கின்ற அவர்கள் அனைவரும் ஏற்குமாறு இறைவன் எந்த மூல காரணப் பொருளையும், உண்டாக்கவில்லை என்னும் கருத்தை நிறுவ வழி இருக்கிறது.

"இறைவன் ஒரு தேவையும் அற்றவன்; எந்தக் குறையும் இல்லாதவன்; எல்லையில் கருணை உடையவன்; பூரண அறிவும் இன்பமும் நிறைந்தவன்,'' என்று ஆத்திகர்கள் அனைவரும் கூறுகின்றனர். அப்படியானால் அவன் இவ்வுல கையும், உயிர்களையும் படைக்கவேண்டிய அவசியம் என்ன? இவைகளால் அவனுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. தன்னை வழிபடுவதற்காக உயிர்களையும் அவை வாழ்வதற்காக உலகையும் படைத்தான் என்றால், அவனுக்குப் புகழ்ச்சியிலும் ஆட்சியிலும் விருப்பம் இருக்கிறதெனக் கொள்ள வேண்டியது வரும். இவ் விருப்பத்தால் அவனுக்கு உயிர்களும் உலகமும் தேவைப்படுகின்றன என்றாகிவிடும். சும்மா ஒரு நோக்கமும் இன்றி இவைகளைப் படைத்தான் என்றால், நோக்கம் இன்றிப் படைத்த படைப்பில் உயிர்களுக்குத் துன்பவுணர்வு தோன்றும்படி படைக்கலாமா? அங்ஙனமானால் அவன் கொடியவனார் எனவும் கேட்கவேண்டியது வரும், ''உலகைப் படைத்தது அவன் விருப்பம் (His will). அதனைக் கேட்க நமக்கு உரிமை இல்லை," என்று சிலர் சொல்வதுண்டு. அவன் விருப்பம் என்றால் கல்லையும் மண்ணையும் படைத்து விட்டுச் சும்மா இருந்திருக்கலாம். அறிவுணர்ச்சி உள்ள உயிர்களைப் படைத்து அவைகளுக்கு மரணம், நோய், துன்பம் முதலியவைகளை உண்டாக்குவது கொடுமை யாகாதா? தனக்கு ஆற்றல் இருக்கிறதென்பதற்காக இப்படி எல்லாம் படைத்துக் கொடுமைப் படுத்தலாமா? உயிர்களுக்குத் துன்ப அனுபவம் ஏற்படாவிட்டால் அவன் எப்படியாவது போகிறான் என்றிருக்கலாம். அங்ஙனம் இன்றிப் பல்வகையான துன்பங்களை நாம் அனுபவிப்பதால், அவன் ஏன் நம்மை உண்டாக்கவேண்டும் எனக் கேட்க உரிமை இருக்கிறது. "அவன் விதித்தபடி நடந்தால் நமக்கு இன்பத்தை வழங்குவான்; மாறாக நடந்தால் தான் துன் பத்தை உண்டாக்குவான்; நம்மைப் படைத்து நமக்குச் சுயமாகச் சிந்திக்கும் அறிவையும் தந்திருக்கிறான்; எனவே அவனைக் குறை சொல்லக் கூடாது,'' என்று சிலர் கூறுவ துண்டு. ஆடு, மாடு, கோழி முதலிய சிற்றுயிர்களுக்குச் சுயமாய்ச் சிந்தித்து, நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அறிவு வன்மையோ, இறைவன் என்ன விதித்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் சாதனமோ இல்லை. அவை களுக்கும் துன்பம், நோய், மாணம் ஆகியவை ஏற்படக் காரணம் என்ன?'' அவை ஆன்மாக்கள் அல்ல'' எனச் சிலர் கருதினாலும், துன்பத்தை அவை அநுபவிக்கின்றன என்பதையும், துன்பத்தை உணரும் அறிவுணர்ச்சி அவைகளுக்கு இருக்கிறதென்பதையும் யாரும் மறுக்க முடியாது. எனவே அந்த அப்பாவி'' உயிர்களுக்குத் துன்ப உணர்ச்சியைக் கொடுப்பது எல்லையில் கருணை உடைய இறைவனுக்கு ஏற்ற செயலாகுமா? " இவ்வுலகில் நாம் எவ்வளவுக்கெவ் வளவு துன்பத்தை அனுபவிக்கிறோமோ, அவ்வளவுக் கவ் வளவு இன்பத்தைப் பரலோகத்தில் அவன் நமக்கு வழங்குவான்'' எனக் கிறிஸ்துவமத சகோதரர்கள் கூறுவதுண்டு. கருணை நிறைந்த இறைவன் எல்லா உலகங்களிலும் இன்பத்தை வழங்கக் கூடாதா? பரலோகத்தில் மட்டும் தானா வழங்கவேண்டும்? பரலோகத்தில் இன்பத்தை வழங்குவதற்காக இவ்வுலகில் நம்மைத் துன்பமுறச் செய்வது நியாய மாகுமா? துன்ப அநுபவம் இருந்தால் தான் இன்பத்தை உணரமுடியும் என்றால், துன்ப அநுபவம் இல்லாமலே இன்பத்தை உணரும் வகையில் நம்மைப் படைக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை என்றாகிறதே? அவன் எங்கனம் துன்பஅநுபவம் இல்லாமலே இன்பப் பொருளாக என்றும் இருக்கிறனோ, அதுபோல நம்மை அவன் படைக்கக் கூடாதா? மேலும் இங்கனம் எல்லாம் படைத்து ஆட்சிபுரிய வேண்டு மென்கிற தேவை அவனுக்கு என்ன வந்தது? சிலர்,  "அவன் உலகையும் உயிர்களையும் என் படைத்தான் என்பதைச் சொல்ல முடியாது. அது நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்," எனச் சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பார்ப்ப துண்டு. படைத்ததற்குரிய காரணம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்றால் உலகையும் உயிர்களையும் அவன் படைத்தான் என்பது மட்டும் நமக்கு எப்படித் தெரிந்தது? அவனே படைத்தான் எனச் சொல்பவர்கள், ஏன் படைத்தான் என்பதற்கும் காரணம் சொல்லித்தானே தீரவேண்டும்? வேறு காரணம் ஒன்றும் சொல்லமுடியாம லிருப்பதை உணர்ந்த சிலர்; “இறைவன் லீலா விநோதமாக, அஃதா வது திருவிளையாட்டாக உலகையும் உயிர்களையும் படைத்தான்'' என அலங்காரமாகக் கூறுவதுண்டு. அவனுக்கு ஏன் விளையாட்டு? மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள அது தேவைப்படுகிறதா? எனவே இங்கனம் கூறுவன எல்லாம், “இறைவன் ஒரு தேவையும் அற்றவன்; எல்லையில் கருணை உடையவன்; எந்தக் குறையும் இல்லாதவன்'' எனக் கூறப்படும் இலக்கணங்களுக்கு மாறாக முடிவதைக் காணலாம். தன்னிலே ஒரு குறையும் இல்லாத பூரண நிறைவுப் பொருளாகிய இறைவனுக்கு எந்தப் பொருளையும் புதிதாக உண்டாக்கவேண்டிய அவசியம் எதுவும் இருக்க முடியாது. ஆகவே உயிர்களையும், உலக மூலகாரணப் பொருளாகிய மாயையையும் அவன் உண்டாக்கவில்லை என்றும், அவைகளும் அவனைப்போல யாராலும் உண்டாக்கப்படாமல் அநாதி நித்தியமாகவே இருக்கின்றன என்றும் கொள்வதே, கடவுள் உண்டென்று அவனுக்குப் பெருமையும் ஏற்றமும் கூறுகின்ற ஆத்திக சமயத்தினர்க்குப் பொருந்துவதாகும். அப்படியானால் மாயையிலிருந்து உலகை உண்டாக்கவேண்டிய அவசியமும், உயிர்களுக்கு அம்மாயையிலிருந்து உடல்களைப் படைத் தளிக்க வேண்டிய அவசியமும் இறைவனுக்குஏற்பட்ட காரணம் என்ன? என்னும் கேள்வி இயல்பாக எழும். இக்கேள்வியைப் பின்னே ஆராய்வோம்.

"திருவிளையாட்டு' எனச் சொல்வது பொருந்தாது என்றால் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில், "நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்''  என அருளிச் செய்திருப்பது பொருந்துமா? எனக் கேட்கலாம். "இவ்வளவு பெரிய இந்தச் சுமையைச் சுமப்பது சாத்தனுக்கு ஒரு விளை யாட்டு" என்றால் அவ்விடத்தில், "'விளையாட்டு' என்பதற்கு ஒரு வருத்தமும் இன்றி எளிதாக அந்தச் சுமையை அவன் சுமக்கின்றான் என்று பொருள் கொள்ளுதல் போல, மாயையினின்றும் இவ்வுலகைப் படைத்தல், காத்தல் முதலிய தொழில்களை இறைவன் ஒரு வருத்தமும் இன்றி மிக எளிதாகச் செய்கின்றான் என்று மணிவாசகப் பெருமான் திரு வாக்கிற்குப் பொருள் செய்யவேண்டும். திருமுறைகளிலும் சித்தாந்த நூற்களிலும் வேறு பல இடங்களிலும் வரும், "விளையாட்டு' என்னும் சொல்லிற்கு, "உயிர்களின் பொருட்டு அவை மகிழ்வதற்காகத் திருவிளையாட்டுச்செய்து'' என்றும் பொருள் கொள்ளலாம். சைவசித்தாந்தம் உயிர்கள் யாராலும் உண்டாக்கப்படாத அநாதி நித்தியப் பொருட்கள் என்றும், தனக்கென ஒரு தேவையும் இல்லாத இறைவன் அவைகளின் பொருட்டே செயல்கள் புரிகின்றான் என்றும் கொள்கிறது. எனவே, ஒரு காரணமும் இன்றித் திருவிளையாட்டாக இறைவன் உயிர்களையும் உலகையும் உண்டாக்குகின்றான் எனக் கூறுபவர்கள், திருமுறைகளையோ சித்தாந்த நூற்களையோ தமக்கு ஆதாரமாகக் காட்ட முடியாது என்பது இதனால் நன்கு விளங்கும். இனிச் சைவ சித்தாந்தம் கொள்கின்ற முப்பொருள் உண்மையை - அஃதாவது "இறை, உயிர், தளை" என்னும் முப்பொருட்களும் யாராலும் உண்டாக்கப்படாமல் அநாதி நித்தியமாக உண்டு என்னும் கொள்கையை - ஒப்புக்கொள்ளாமல்,'' இருப்பது பிரமம் ஒன்றே; வேறு பொருட்களே இல்லை'' எனக் கூறும் சங்கரர் வேதாந்தம்பற்றிச் சிறிது ஆராய்வோம்.

சித்தாந்தம் – 1960 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment