Saturday, May 9, 2020



திருக்கோழம்பம்

மு. அருணாசலம்

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதை நற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
அமர லோகமது ஆளுடை யார்களே.

என்ற இந்த அப்பர் திருக்குறுந்தொகைத் தேவாரப் பாசுரத்தை முருகன் வழிபாடாகப் பாடாத ஓதுவார் அல்லது பாடப்பெறாத சிவாலயம் தமிழ் நாட்டில் இல்லை. இப்பாசுரத்தைப் பெற்ற தலமாகிய திருக்கோழம்பம் எவ்வளவோ பழமையான சிறப்பு வாய்ந்த தலமாக இருந்தும், கோயில் மிக மிகக் கிலமாக இருப்பது தரிசிப்பவர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. கோயில் தினமும் கொஞ்சம் இடிந்து கொண்டிருக்கிறது.

இடம்: காவிரித் தென்கரை, தஞ்சை ஜில்லா. போக்கு வரத்து வசதி இன்று இல்லாத இடத்தில் இருப்பதால், இக்கோயில் கிலம் அடைவதைத் தடுக்க முடியா மல் போயிற்றுப் போலும். நாரசிங்கம் பேட்டையில் இருந்து கிழக்கே ஒரு மைல் சென்று திருவாவடுதுறை அடைந்து, அங்கிருந்து தெற்கே 11 மைல் மண்பாதையில் சென்றால் கோழம்பம் அடையலாம். இப்பாதையில் கோ டையில் செல்வதே மிகவும் அரிது. மழைக்காலத்தில் மிகவும் கஷ்டம். வழியில் மஞ்சளாறு, வீரசோழன் ஆகிய இரு ஆறுகளைக் கடக்க வேண்டும். (இவற்றிற்குப் பாலம் இல்லை.) அல்லது கும்பகோணத்திலிருந்து திருநாகேசுவரம் அடைந்து, அங்கிருந்து புதூர் சென்று அங்கிருந்து வடக்கே இரண்டு மைல் சென்றால் கோழம்பம்; இதுவும் மிகவும் கெடுதலான வழி. இரண்டு மைலேனும் நடந்து சென்றால் தான் இக்கோயிலைத் தரிசிக்க முடியும். தரிசித்தவர்கள் குறைவான தொகையினரே இருக்க முடியும்.

பெயர்: திருக்குழம்பியம் என்று வழங்குகின்றது. சுவாமி திருநாமம் கோகிலேசுவரர், அம்பிகை சௌந்தர நாயகி, பசு குழப்பியது என்பர்; தலவிருட்சம் பலா.

கோயில்: முதலில் மொட்டைக் கோபுரம், பின்னர் சிறு கோபுரம், எதிரில் திருக்குளம். கோயில் வெளிமதிற் சுவர் முழுமையும் இடிந்து விட்டது. மிக்க விசாலமான பிராகாரம். உள்மதிலும் இடிந்து வருகிறது. முன்புறத்தில் ஓர் அலங்கார மண்டபம் உள்ளது. அதுவும் இடிந்து விட்டது. அங்கு அமர்ந்த கோலத்தில் ஓர் அம்பிகை உருவம் உள்ளது. திருச்சுற்று மண்டபங்கள், கோயில் கள் எல்லாம் இடிந்து விட்டன. நடராஜா கோயிலும் இடிந்து விட்டது. வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கியவாறு உள்ள அம்பிகையின் கோயில் சொற்பமான அளவில் இப்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி கோயில் கருங்கல்லால் ஆனது. அடித்தளத்தில் உள்ள யாள வரி முதலியன, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பெரிய கோயிற் சிற்பத்தை நினைவூட்டுகின்றன. திருச்சுற்றின் முகப்பின் மேலே பிராகாரம் கொண்ட நீளத்திற்கு மிகப் பலவான உருவங்கள் சுதை வேலை செய்து வைக்கப்பட்டு இருந்தன; யாவும் இடிந்திருக்கின்றன.

எண்ணற்ற கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்த நகரத்தார் இக்கோயில் திருப்பணி செய்யாத காரணம் தெரியவில்லை. 

மூர்த்தி: ஒரு காலத்தில் இக்கோயில் எல்லா மூர்த்திகளும் கொண்ட சிறப்புடைய கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. மூலலிங்கம் பெரிய உருவம், துவாரபாலகர் அழகிய பெரிய உருவங்கள். திருச்சுற்று கோட்டங்களில் நர்த்தன விநாயகர், நடராஜா, அகத்தியர் ஆகியோர் உள்ளனர். தக்ஷிணாமூர்த்தி சிறியவடிவம்; அழகிய முகபாவம் நிருதிவிநாயகர்; இக்கோயில் முன்னே புராதன லிங்கோத்பவர் பாணவடிவம் மட்டும் வைக்கப் பட்டுள்ளது. பின்புறக்கோட்டத்தில் லிங்கோத்பவர், பிரமன், திருமாலோடு பாடலில் சிறப்பிக்கப்பட்ட குமரன் தேவியரோடு கூடிய சிறிய வடிவம், கஜலக்ஷ்மியின் எதி ரில்பின்னமான பெரியசண்டேசுவரர் உருவமும் உள்ளன. வடபுறத்தில் கோட்டங்களில் பிரமன், அர்த்தநாரீசுவரர், துர்க்கை, பிக்ஷாடன வடிவங்கள், பெரிய சண்டேசர், பின்னர் பைரவர், சூரியன், அப்பர், உள்ளனர். இச்சிலை வடிவங்கள் யாவும் மிகவும் சிறப்பான வேலைப்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. உற்சவமூர்த்திகள் அனை வரும் உள்ளனர். கல்யாண சுந்தரர் தனியே உள்ளார். எல்லா வடிவங்களும் மிகவும் திருத்தமாகவும் சிறந்த வேலைப்பாடு உடையனவாகவும் உள்ளன.

சிலை வடிவங்கள் யாவும் எண்ணெய்க்காப்பே இல்லா மல் வெண்ணிறமாய்க் காட்சி தருகின்றன. செப்புச் சிலைகள் யாவும் சுத்தம் செய்வோர் இன்றிப் பச்சை நிற மாகவே உள்ளன.

வரலாறு: உமாதேவி இங்குப் பசுவாக வந்து பூசித்ததாகச் சொல்லப்படுகிறது. சந்தன் என்ற வித்தியாதரன் குயிலாகும்படி இந்திரனால் சபிக்கப் பெற்று இங்கு வந்து பூசித்துப் பின் பழைய வடிவம் அடைந்தான். பெருமானைக் குயில் (கோகிலம்) பூசித்தமையால் கோகிலேசுவரர் ஆனார்.

பாடல்: சம்பந்தர் ஒருபதிகம், அப்பர் குறுந்தொகைப் பதிகம் ஒன்று.

விழா : ஊரில் மக்களே இல்லாமையால் விழாவும் இல்லை.

நிர்வாகம்: ஒருகாலத்தில் இக்கோயிலுக்கு அறுபது வேலிக்கு மேற்பட்ட நிலங்கள் இருந்தன என்று கல்வெட்டின் மூலம் தெரிகிறது. நிர்வாகம் செய்தவர்கள் அத்தனையையும் ஏப்பம் இட்டு விட்டார்களாம். இப்பொழுது இரண்டு ஏகரா நிலம் கூட இல்லை. பூசை நடப்பதே அரிது. இதற்கிடையில் சொற்பத் திருப்பணியும் நடந்து வருகிறது.

கல்வெட்டு: கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பெரிய கோயில்களை ஒப்ப, கீழ்வரிகள் முழுமையும் கல் வெட்டுக்கள் நிரம்பி உள்ளன. கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறச் சுவர்கள் முழுமையும் பண்டையக் கல்வெட்டுகள் ஏராளம்.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴
  

No comments:

Post a Comment