Saturday, May 9, 2020



திருக்குறளும் சமயமும்
பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியார், எம். ஏ., பி. ஓ. எல்., எல். டி.,
முதல்வர், பழனியாண்டவர் கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி, பழனி.

[பழநியில் நிகழ்ந்த சமாஜ ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு]

இவ்வுலக வாழ்க்கையில் நாம் அடையக் கூடிய பெரும்பேறுகளை (Supreme aims of existence) தமிழ்ப் பெரியோர்கள் அகம்புறமென இருகூறாகப் பகுப்பர். அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கையுமிரண்டாயினாற் போல, உடலும் உயிரும் போல், இணைந்தும் பிணைத்தும் ஒன்று பட்டு முடிவில் ஒரு 'அந்தமிலின் பத்து அழிவில்' நிலைக்குக் கொண்டு போய் விடவேண்டும். அதை வீடென்பர். வீடே, உலகப் பற்றுக்களினின்று விடுதலை பெற்றுப் பேரின்ப மெய்துவதே. எல்லோரும் அடைய வேண்டிய முடிந்த குறிக்கோளாகும். (Ultimate object of achievement) அறம், பொருளின் பங்கள் அதனை அடைவதற் குரிய வழிகள். அவ்வழிகள் தாமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டியங்குவன. ''சிறப்புடை மரபின் இன்பமும் பொருளும், அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல' என்னும் ஆன்றோர் வாக்கை நோக்குக. அறம் பொருளின்பம் வீடு என்ற இந்நானெறிகளும் அகம் புறம் என்ற இருகூறுகளில் அடங்கி, அவற்றினின்று விரிந்து வந்தன என நூலோர் நுவல்வர். இவ்வீடு பேற்றினை ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும்,

''காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன பயனே''

என்ற நூற்பாவில் விளக்கி, சிறந்தது என்னும் செஞ் சொல்லால் அந்நிலையைக் குறித்துள்ளனர். இவர் வழி நின்றே தமிழ் மறை வகுத்த தெய்வப் புலவர் திருவள்ளுவரும் "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு'' என்று அவ்வீட்டு நிலையைச் சிறப்பு அல்லது செம்பொருள் காண்பதாகச் செப்புவர்.

இச்சிறப்பு அல்லது செம்பொருள் காணும் நெறியை ஒவ்வொரு நாட்டிலும் அவ்வந்நாட்டில் அன்று முதல் இன்று வரை தோன்றி, வளர்ந்து உருவாகி இருக்கும் சமயங்கள் (Religions) அவற்றின் மெய்யுணர்வு (Philosophy) கண்ட நூல்கள் வழியாக, மக்களுக்கு அறிவுறுத்த, அவற்றின் நடைமுறைகளாகத் திருக்கோயில்கள், வழிபாடுகள், வழிபாட்டு முறைகள் மெய்யுணர்வு நூல்களாகிய சாத்திரங்கள் (Philosophical texts) போற்றி நூல்களாகிய தோத்திரங்கள் (Devotional literature) முதலியன எல்லா நாட்டிலும் தோனறி மக்களை நன்னெறிப்படுத்தி வருகின்றன.

இவற்றுள் சமயம் என்னும் சொல்லைக் குறிக்கும் 'Religion' என்ற ஆங்கிலச் சொல் 'Relegere' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து அல்லது 'Religare' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாமென்றும், முதலது திரும்பத் திரும்பப் படிக்கப்பட்டுச் சிந்திக்கப்பட்டது'' என்ற பொருளையும், பின்னது 'கட்டுவது' என்ற பொருளைத் தருவதாகவும் அக்ஃச்ஃபோர்ட் புதிய ஆங்கில அகராதி கூறுகின்றது. சமய அறநெறிக் கலைக் களஞ்சியம் (Encyclopedia of Religions and Ethics) இங்ஙனமே கருதுகிறது. 'Words and their Ways' by Greenough and kiredge) என்னும் நூலில் 'கட்டுவது என்ற பொருளை இச்சொல் நல்குவதாக வந்துள்ளது. ‘கட்டுவது' என்ற பொருளிலேயே மேலை நாட்டு மெய்யுணர்வு நூற்புலவர், இச்சொல்லைப் பெருவரவிற்றாக வழங்கி வருகின்றார்கள் .'கட்டுவதாவது' மனத்தைப் பொறி வழி போகாது அறிவினால் கட்டி, கடவுள் உலகு உயிர் என்னும் முப்பொருளியல்புகளை ஆராயத் தூண்டி மனத்தை ஒரு நெறிப் படுத்துவதாகும். அறிவாற்றல் மிக்க சான்றோர்கள் கட்டியதுமாம். இச்செம்பொருளி லேயே சமை என்னும் பகுதியினடியாகச் சமயம் என்னும் சொல் ந்தமிழ் மொழில் ஆகியிருக்கிறது என்பர். மெய்யுணர்வு நூல்வல்ல தொல்லாணைத் துறை போகிய நல்லாசிரியர்.

"விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனி போல் அன்றோ பராபரமே.

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே''

என்று முற்றத் துறந்த முனிவராகிய தாயுமானவர் சமய நெறிகளையும் அவற்றின் முடிந்த பயனையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமை காண்க.

இந்நெறிகளின் மெய்யுணர்வைப் பிழிந்தெடுத்துக் காட்டும் வாக்குகளில் தலைசிறந்தவற்றைத் தொகுத்து அவ்வந்நாட்டினர் தத்தம் மறை (வேதம்) என வகுப்பர். 'இலைமறைகாய் போல' இம்மறைகள் ஆன்றோர்களின் அமுதவாக்குகளின் உறுதிப் பொருளை, உள்ளார்ந்து வைத்திருக்க, இலையை நீக்கிக் காயைப் பார்த்துப் பறிப்பது போல, சற்று உற்று நோக்கி உணர்ந்து கொள்ளலாம். இம்மொழிகள் மெய்யுணர்வுற்ற செந்தண்மை பூண்ட அந்தணாளர்களால் உறுதியாக அறுதியிட்டுக் கூறப்பெறுவன. அவைவழி நின்று பயன் பெறுதலே நம்மனோர் கடமையாகும். 'நிறைமொழி மாந்தர் ஆணை யிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரமென்ப" என்ற தொல்காப்பியர் கூற்றாலும் 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்" என்ற திருக்குறட்பாவாலும் மறைகளின் மேன்மையை நாம் உய்த்துணரலாகும்.

ஒரு ஊருக்குப் போவதற்குப் பலவழிகள் இருக்கின்றன. அவையனைத்தும் அவ்வூருக்கே நம்மை அழைத்துக் கொண்டு செல்லுகின்றன. ஆறுகள் பலவாக இருப்பினும் அவை இறுதியில் ஒரே கடலிற் சென்று கலக்கின்றன. அது போன்றே பலநாடுகளிலும் அவ்வந்நாட்டு இயற்கை, சூழ்நிலைகளுக்கேற்பப் பல சமயங்கள் தோன்றினும் முடிவில் அவைகாட்டும் பொருள் ஒன்றேயாகும்.

'நதியுண்ட கடலெனச் சமயத்தை உண்ட பரஞான
வானந்த வொளியே
நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே.
என்று மலைவளர் காதலியைப் பார்த்துத் தாயுமானவர் பேசுகிறார்.

தொக்கிலங்கு பாரெல்லாம் பரந்தோடித் தொடுகடலே
புக்கன்றிப் புறநிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா நின்
புக்கிலங்கு சீரல்லாற் புக்கிலன் காண் புண்ணியனே''

என்பர் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். இவ்வாறு மக்கட் டொகுதிகளும், நாடுகளும், மொழிகளும், பலபிரிவு களாக இருப்பதைப் போன்றே, சமயங்களும், அவ்வந் நாட்டினரின், மொழியினரின் அறிவாற்றல்களுக்கும், கால, இடங்களுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு நிலைகளில் பலதிறப்பட்டனவாக அமைந்திருப்பினும், அவற்றின் நெறிகளாலும் குறிகளாலும் காணப்பெறும் கடவுட் காட்சி ஒன்றே என்பதை ஆற்று உவமையால் விளக்க வந்த கம்ப நாடர்

''கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையின் மறைகளாலு மியம்பரும் பொருளீ தென்னத்
தொல்லையின் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும் போற் பரந்த தன்றே''

என்று அழகுற எழுதிப் போந்தனர். 'விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும்'' என்ற ஆளுடைய அரசை ஒட்டியே சிவாச்சாரியர் அருள் நந்தியாரும் 'ஓது சமயங்கள பொருளுணரும் நூல்கள் ஒன்றோடொன் றொவ் வாமல் உளபலவு மிவற்றுள் யாது சமயம் பொருணூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்க தின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதியா தொரு சமயம் அது சமயம் பொருணுல்'' என்று உறுதிப்பட இவ்வுண்மையை அறுதியிட்டுரைக்கின்றனர். தமிழ்ப் பெரியார் திரு வி. கவும்  'உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் ஒரு கடவுளையே பல பெயரால் பல வடிவங்களாகப் போற்றிப் புகழ்கின்றன. இவ்வுணர்வோடு எச்சமயத்தை ஆய்ந்தாலும் அச்சமயத்தில் சமரச மணங் கமழ்வது காணலாம். அம்மணங்கமழப் பெறாத சமய மொன்றிருப்பதாகத் தெரியவில்லை. இருக்குமேல் அது கடவுள் நெறிகாட்டும் சமயமாகாது. எச்சமயம் எல்லாச் சமயங்களையும் சகோதரச்சமயங்களாகத் தழுவுகின்றதோஅது சமரச நோக்குடைய சன்மார்க்க சமயமென்று போற்றப்படும். எச்சமயம் பிற சமயங்களைப் பொய் யெனக் கருதுகிறதோ, பழிக்கிறதோ அது சமரச சன் மார்க்கத்தை வளர்ப்பதாகாது. சமரச நோக்குடைய சமயமெதுவோ அது சாதிமதம், பாஷை, நிறைவேற்று மைகளைப் பாராட்டாது எல்லா உயிர்களிடத்தும் ஒரே வித அன்பு செலுத்துமாறு மக்களை ஏவும். அச்சமயம் கைம்மாறு கருதாப் பணியாற்றுமாறு போதிக்கும். தனக் கென வாழாது பிறர்க்கென வாழுமாறு அறிவுறுத்தும், தியாக உணர்வு நல்கும், உயர்வு தாழ்வை ஒதுக்கும். இன்னோரன்ன விழுமிய நோக்கங்களையுடைய சமய மெதுவோ அதுவே சமயம் என உண்மைச் சமயத்தின் உயரியல்புகளை எடுத்தோதினர். முறைவழி உணர்ந்த சமயப் பொறையும், இது அது என்ற வேற்றுமை பாராட்டாத சமயப் பொது நோக்கமும் தற்கால உலகுக்கு மிகவும் வேண்டற்பால தென்பதனை வருமுன் காணும் வல்லமையால் சமரச சன்மார்க்க நெறிவகுத்து, ஆன்மநேய ஒருமைப்பாடுணர்த்தி உள்ளொளி பெருக்கிய வள்ளலார்
பெருகிய பேர் அருளாளர் அம்பலத்தே நடிக்கும்.................. விளையாட்டே'' என்றும் 
' எவ்வுயி ரும் பொதுவென.................. தெரிந்தேன்" என்றும் எத்துணையும் பேதமுறாது.................... தெரிந்தேன்'' என்றும் திருவருட்பாக்களால் அரும்பெறலுண்மைகளை எடுத்தோதியுள்ளனர்.

      தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றியருளிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் மறையாந் திருக்குறளும் இத்தகைய தொரு சமயப் பெருவாழ்க்கையையே வகுத்துச் செல்கின்றது. எப்பாவலரும் இயையும் முப்பால நூலில் கூறப்பெற்ற அறம் பொருளின் பங்களிடையே வீட்டு நெறியாம் சமயப் பெரு வாழ்வும் தீட்டப்பெற்றுள்ளதோ? என்ற வினாவும் எழற் பாலதே. முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் என்றும், அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திற னறிந்தோம் வீடு தெரிந்தேம் என்றும், பலரும் திருக்குறளில் நாற்பாலும் பயிலும் பான்மையைப் பாராட்டுவதால் திருக்குறள் வீடும் தரும் என்பது விளங்கும்.

ஆனால் வீடென்பது "சிந்தையும் மொழியும் செல்லாநிலை'' மைத்தாகலின் நூல்களால் நேராகக் கூறப்படுவன அறம் பொருளின்பங்களே. வீடோ எனின் நேராக இலக்கணவ கையானன்றி மறைமுகமாகத் துறவறமாகிய காரணவகையால் மட்டுமே கூறப்பெறும். திருவள்ளுவரும் வீட்டு நெறியைத் துறவறத்தில் அமைப்பர். இன்பப்பால், அறத்துப்பாலில் இல்லறவியல், பொருட்பால்களை முறைப்படுத்திப் பயின்றோர், பின் துறவியலில் நிலையாமை, துறவு கடவுள் வாழ்த்து நீத்தார் பெருமை, மெய்யுணர்தல், அவாவறுத்தல்களை முறையாகத் தொடர்ந்து படித்தால், வேண்டாமை என்னும் விழுச்செல்வம் பெற்று வீட்டின்பத்தை விழுமிதினெய்துவர். இவ்வீட்டு நெறிச் சமய வாழ்க்கை, எவ்வாறு திருக்குறளில் வகுக்கப் பெறுகிற தென்பதைச் சுருக்கமாக ஆராய்ந்து பார்ப்போம்.

சமய வாழ்க்கை யென்பது ஏதோ ஒரு நாளில் ஒரு ஐந்து மணித்துளிகள் அல்லது கால்மணி அல்லது ஒரு மணி நேரம் மட்டும் திகழ்கின்றது என்று மட்டுமில்லாமல் ஒவ்வொருவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு நாடு முழுவதும் எந்நிலையிலும் இழையும் குழையும் போல் இணை பிரியாது, இல்வாழ்க்கை, சமுதாய வாழ்க்கைகளில் ஊடுருவிச் செல்லும் நீர்மைத்தாய்ச் செயல்படு நிலையில் உள்ளதாக இருந்தால்தான், உயிருள்ள தாக மிளிரும். சமுதாயத் திலும் அதன் கைவண்ணத்தைக் காணவேண்டும் அங் ஙனமின்றி அது ஏட்டளவில், மரபுச் சமயச் சடங்குகள் அளவில், பேச்சளவில் 'திண்ணைச் சித்தாந்தமாக உள்ள அளவில் உயிருள்ள உண்மைச் சமயமாகாது. அதனால் எவருக்கும் எப்பயனும் விளையாது.

இல்வாழ்க்கையில் அடிப்படையாக அமைந்துள்ள அன்பு நெறியாகிய பிஞ்சு, படிப்படியாக வளர்ந்து கொண்டு போய்ச் சமய நெறியின் அடிப்படையாகிய அருள்நெறியாகக் காய்த்து முற்றி முதிர்ந்து முத்திக் கனியாகப் பழுக்கும். இல்லறத்தை வழுவாதியற்றி மெய்யுணர்வெய்தும் நோக்கத்தோடு உலகப்பற்றுக்களை விட்டுத் துறவொழுக்கத்தைக் கைக்கொண்டு மெய்யுணர்வெய்தும் நிலையையே திருக்குறள் சமய வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாய்க் கொண்டுள்ளதால் மன்பதையுலகில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில், ஒரு பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் கொண்டு, அம்முறையை வகுத்துள்ளது. "அறன் வலியுறுத்தலில் பொதுவாக அறத்தினது சிறப்பைக் கூறவந்த ஆசிரியர் அதன் முடிந்த நிலையையும் அதையடையும் வழியையும் இவ்வதிகாரத்தில் தொகுத்துக் கூறி, ஏனைய பால் இயல் அதிகாரங்களில் வகுத்து விவரித்துக் கூறுகின்றார்.

சுருங்கக் கூறுமிடத்து, அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கிலும் இழுக்காது இயன்றதே அறமாம். இதையே மெய்யுணர்வு அதிகார ஈற்றில் "காமம் வெகுளி மயக்கமிவை மூன்றன், நாமம் கெடக் கெடும் நோய்'' என்றும், 'அவா வறுத்தல்' அதிகார ஈற்றில், ''ஆராவியற்கை அவா நீப்பின் அந்நிலையே, பேராவியற்கை தரும்" என்றும் முடிந்த முடிபாக வற்புறுத்தியுள்ளார். 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன் ஆகுல நீர பிற' என்ற அறமுடிபே சமய முடிபு மாகும். மனத்துக் கண் மாசறும் முதிர்ந்தநிலை இல்வாழ்க்கை வழியாக அடையப்படுவது இயல்பாகுமென்பதை அறிவிக்கவே முதற்கண் இல்வாழ்க்கை நெறியை வைத்து அதில் வளர்க்கும் அன்பு நெறியைக் கூறி அதன் பயனாகிய துற வொழுக்க நெறியை அடுத்து வைத்துள்ளார் ஆசிரியர். இல்லறமாகிய பெரும் பள்ளியில் அன்பைப் பயின்று, எவ்வாறு தனக்கெனவே வாழாது பிறர்க்குரி யாளருமாவது என்று தேர்ந்த பிறகே, மெய்யுணர்வுப் பட்டம் பெரும் பாலோர்க்குக் கிடைக்கக் கூடிய இயற்கை நெறி. மாணாக்கராயிருந்து கல்வி கற்றுக், கல்விப் பயனைப் பெற இல்வாழ்க்கை யேற்று. அவ்வாழ்க்கையில் அன்பும் அருளும் விளங்கப் பெற்று எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளராகி மேன்மையுறல், ஒவ்வொரு வாழ்க்கையிலும் அரும்பு. மலர், காய், கனிபோல் அடுத்தடுத்துப் படிப்படியாய் வருகின்றன. ஒரோ வழி முற்றத் துறந்த முனிவர்கள் சிலர் முற்பிறவிகளிற் பெற்ற நற்பயிற்சிகளின் பயனாய் இல்வாழ்க்கை வழியினன்றி நேரேயும் துறவற மெய்யுணர்வுகளை அடைவதுமுண்டு.

எவ்வழியில் இந்நிலை யெய்தினும், இந்நிலையில் அருளு டைமை சிறப்பாக மிளிரும். இல்வாழ்க்கையில் விளங் கிய அன்பு விரிந்து கொண்டே சென்று உயர்ந்த நிலையை அடைந்த பொழுது, தொடர்பு பற்றாது, இனம், குலம், நாடு, இடம், காலம் முதலியவற்றைக் கடந்து எல்லாவுயிர் களிடத்தும் இயல்பாகவே செல்கின்றது. இல்வாழ்க்கையில் மிளிரும் சமய வாழ்க்கையில் மனைவி, மக்கள், ஒக்கல் என்ற தொடர்பு பற்றி நிகழ்ந்த இவ்வன்பு துறவறமாகிய சமய வாழ்க்கையில் அக்காரணங்கள் எல்லாம் கடந்து சென்று, இயல்பாகவே எல்லா மக்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் முன்னர் காட்டிய இராமலிங்க அடிகளார் முறையில் செல்லா நிற்கும். இந்நிலையில் இது 'அருள்' என்னும் பெயரைப் பெறுகின்றது. இறைவன் எல்லா உயிர்களையும் பொது நோக்கக் கண் கொண்டே நோக்கி வேற்றுமை பாராட்டாது ஒரு படியாகவே அவ்வவற்றிற்குத் தக்கவாறு அருள் புரிகின்றான். இதுவே அருள் உளங்கனிந்த தூயவுள்ள முடையதுறவிகளின் மன மிளகுந்தன்மையாம் அருள் எனப்பெறும். அன்பே இதற்கு அடிப்படையாதலின் ஆசிரியர் அருள் எனும் அன்பீன் குழவி'' என்று தாய் சேய் உவமை வாயிலாக அன்பையும் அருளையும் விளக்குகின்றார். அருளுடைமை'அனைத்துயிர் மாட்டும் செல்லுந் தன்மைத் தாகலின் அருளுடையோர் ''யாது மூரே யாவரும் கேளிர்.'' 'ஒன்றே குலமும் ஒரு வனே தேவனும்'', ''அன்பேசிவம்' என்ற உயர்ந்த பொது நோக்கில் நிற்பவராவர்.

இனி இவ்வருளாளரின் ஒழுகலாற்றை மனத்துக் கண் மாசிலராகி உள்ளத் துறவியாகத் திருவள்ளுவர் தாம் உலகத்தில் வாழ்ந்து காட்டிய உண்மை நெறியையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் எனத் தமது துறவறவியலில் விளக்கினர். போலி உருத்தாங்கி உலகை ஏமாற்றும் துறவிப் போலிகளும் அக்காலத்தே உண்டு போலும்? ஆதலினன்றே திருவள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் அன்னார் தம் போலிப் புன்னெறியைச் சாலவும் வெறுத்துரைக் கின்றனர். அன்னார் தம் கூடா ஒழுக்கத்தைத் தடுத்து நிறுத்தித் தூய துறவறச் சமய நெறியையே எடுத்து மொழிகின்றார். உண்மைத் துறவிகள் உலகிடையே யிருப்பினும், "பரஞானத் தாற் பரத்தைத் தரிசித்தார், பரமே பார்த்திருப்பர், பதார்த்தங்கள் பாரார்' என்ற சிவஞான சித்தியார் கூறுமாறு மெய்ப்பொருள் நாட்ட மே உடையராயிருப்பர். இத்தகையோர் இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் தான் என்ன? பற்றற்ற துறவற நெறியில் நின்றால் தான் என்ன? பயன் ஒன்றே.

தூய துறவற நெறிக்கு, சமய வாழ்விற்கு, அருளு டைமை அடிப்படையானதால் அருளுடைமை பற்றுக் கோடாகப் பிறக்கும் பல அருட்செயல்களையே அன்னார் மேற் கொள்வர். பொருள் அற்றார் ஒரோ வழி ஊழ்வழி யால் அதையும் பெறலாம். அருளற்றார் ஒன்றையும் பெறமுடியாது. இவ்வருளாளர் செயல்களாக வள்ளுவர் புலால் மறுத்தல், இன்னா செய்யாமை. கொல்லாமை முதலியவற்றை வைத்தார். இல்லறத்தோருக்கு வற்புறுத்திக் கூறிய வெஃகாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், முதலியவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் போல் அருள் பழுத்த தூய துறவிகளாகிய தாயுமானவ அடிகளாரும் இராமலிங்க அடிகளாரும் கொல்லாமையும் மன்னுயிர்க்கன்பும் குவலயமெல்லாம் விளங்கப் பாடுபட்டதைத் தமிழ் நாட்டிற் கேளாதாரும் படித்தறியா தோருமுண்டோ?

இந்நெறி நிற்போர் மேல், தள்ளத்தக்கனவெனக் கூறியவற்றோடு, மன மொழிக் குற்றங்களாகிய கள்ளா மை, பொய்யாமை, வெகுளாமைகளையும் வேரறக் களைய வேண்டும். இவ்வருள் ஒழுக்க நெறி நின்றார் மனம் பொறிவழிப் போகாது நிற்றற்பொருட்டு விரதங்களால் உண்டி சுருங்கல் முதலிய செயல்களை ஏற்று அவற்றால் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, பிறவுயிர் ளுக்குத்துன் பஞ் செய்யாது அவம் ஒழிக்கும் தவநெறியில் நிற்றல் இயல்பென்பர். தாம் மேற்கொண்ட நெறியில் தவம் ஒரு இன்றியமையாத உறுப்பாகும். உற்றநோய்நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு'' தவமுறையால் மெய்யுணர்வு பெருகிக் கொண்டே வரும் தொல்காப்பியனாரும் தவசிகளுக்கிலக்கணம் கூறியுள்ளதையும், பரிமேலழகரைப் போலவே நச்சினார்க்கினியரும் தவஞ்செய்வோரென்றும் தவஞ்செய்து யோக நெறியில் நிற் போர் என்றும், தவசிகளை இரு கூறாகப் பிரித்துப் பொருள் கூறு வதையும், வாகைத் திணையில் பரக்கக் காணலாகும். போலித்துறவிகளின் கூடா வொழுக்கத்தை அடாததென வள்ளுவர்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்''       என்று அறுதியிட்டுரைக் கின்றார்.

இத்தவவொழுக்கத்தின் பயனாக - மெய்யுணர்வு முறையாக வந்தெய்தும், மெய்யுணர்வு வந்தெய்தும் முறை யாது? அதற்கு முதற்படி இவ்வுகில் தோன்றிய பொருள்கள் நிலையற்றவை என்ற உணர்ச்சியாகும். செல்வம், உடல், இளமை, அழகு முதலியவை நிலையற்றன என்ற உணர்ச்சி வரவேண்டும். உடம்புக்கு உயிரோடுள்ள தொடர்பு, கருவும் தானும் ஒன்றாய்ப் பிறந்து வேறு வேறாய்ப் பிரியும் வரை தனக்காதாரமாக விருந்த முட்டையைப் பருவம் வந்தவுடன் பறவை விட்டுப் பிரியும். பறவைக்கும் அது பிரிந்த முட்டைக்கும் உள்ள தொடர்பையே ஒக்கும். இறப்பதும் பிறப்பதும் உறங்குவதும் விழிப்பதும் போலப் புதுவதன்றி இவ்வுலக வாழ்வும் பொருள்களும் சிலையற்றன என வுணர்ந்த பெரியார் புறமாகிய செல்வமாதிய பொருள்களின் மேலும், அக மாகிய யாக்கையின் கண்ணு முள்ள பற்றுக்களை அகப்பற்றுப் புறப்பற்றுக்களைச் சிறிது சிறிதாக விட்டுத் துறப்பர்,
" தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப் பட்டார் மற்றையவர்''
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று நிலையாமை காணப் பெறும். உலகப்பற்றை விடுவதற்கு இறைவன் பற்றினைப் பற்ற வேண்டும், இனிக் கடவுள் வாழ்த்திலேயே இறைவனது திருவடியையே உற்ற துணையாக வள்ளுவர் அமைத்து வைத்திருப்பதை இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும். பிறவிப் பெருங்கடலை இறைவன் திருவடிப் புணையாலேயே கடக்கவேண்டும். பற்று நீக்குவான் பரம்பொருளைப் பற்றுவோரே பிறப்புவீடுகளையும், பிறப்பின் காரணத்தையும் வீட்டை அடை யும் வழியையும். ஐயம், திரிபு விபரீதங்களின்றி உண்மை யாக உணர்வார்கள். இவ்வுணர்வே மெய்யுணர்வு எனப் படும். உலகில் உள்ள பல அறிவியற் கலைகளும் பலவகை யான உலகப் பொருள்களை ஆராய இவ்வுணர்வுகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட.

"எல்லா வுலகுமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லவாய் நிற்கும்'' இறைவனது உண்மைத் தத்துவத்தை உணரும் உணர்வே மெய்யுணர்வாகும். இவ்வுணர்வைத் திருஞானசம்பந்தர் உற்ற நிலையைச் சேக்கிழார்,

''சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்''

என்று ஒப்பற்ற இத் தெய்வத் திருப்பனுவலில் விளக்கியுள்ளார். இம் மெய்யுணர்வைக் கற்றறிந்தடங்கிய நற்றேசிகர் பால் கேட்டு அறிவதோடு நின்றுவிடாமல் அளவைகளானும் பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்ந்துணர்ந்து பின் வாழ்க்கையில் செயலிலும் கொண்டு செலுத்த வேண்டும். இவ்வாறு முன்னும் பின்னும் உள்ள வினைத்தொடர்பறுத்த துறவி ஒருவருக்கு அப்போது நின்ற உடம்பும் அதற்கேற்ற வினைப் பயன்களு முள்ளன வாகையால் அவர் மனத் துறவொழுக்கநெறி நின்றாராயினும் பழைய வழக்கத்தின் காரணத்தால் அவர் வென்றடக்கிய புலன்களின் மீது நினைவு மீட்டும் செல்லும். அந்நினைவு அவிச்சையை உண்டு பண்ணிப் பிறவிக்குக் காரணமாக நிற்கும். இதையே திருவள்ளுவர் அவா என்பார். இவ்வவாவையும் இடைவிடாதமெய்ப் பொருள் உணர்வால் ஒழித்தல் வேண்டும். இதுவே அவாவறுத்தலாம்.

"ஆரா வியற்கை யவா நீப்பினந் நிலையே
பேரா வியற்கை தரும்
இப்பெற்றியராகிய தூய துறவிகளை வள்ளுவர் நீத்தார் என்பர்.

இவர் தம் பெருமை பேசவும் படுமோ? முற்றத் துறந்த முனிவர் தம் பெருமை, நன்று என்பவற்றுள் எல்லாம் நன்று. விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் விழுமிது என்று நூல்கள் பேசா நிற்கும். செயற்கரிய செய்த வராகிய இவரே பெரியர். இவரே நிறை மொழி மாந்தர். இவர்கள் அருளுக்கு எல்லோரும் உரியராதல் வேண்டும். இவரைப் போல் ஒவ்வொரு வரும் அருளாளர் ஆதல் வேண்டும். இதுவே தான் சமய நெறி செல்வோர் பெறும் பயனாகும்.

எனவே, அன்பு நெறியாகும் இல்லற நெறி நிற்போரும், அருள் நெறியாம் துறவறநெறி நிற்போரும் முடி.வில் சமய வாழ்க்கையில் ஈடுபட்டு, உள்ளத் துறவடைந்து மெய்யுணர் வெய்த வேண்டு மென்பதே வள்ளுவர் வகுத்த சமயநெறியாகும் இந்நெறி பொது நோக்கப் பார்வையே பெற்றிருக்கிறது. ஒழுக்கமுடைமையும் அருள் நெறியும் எல்லாச் சமய வாதிகளும் மேற்கொள்ளுவனவே. உலக நிலையாமை யுணர்ந்து, அகப்பற்று புறப்பற்றுக்களை அறவே ஒழித்துக் காம, வெகுளி, மயக்கங்களினீங்கி மெய்யுணர்வு பெறுதல் எல்லா நாட்டு மக்களும் சமயத்தினரும் அடைய முயலுகின்ற தொன்றன்றோ? மேலும் பல் சமயப் பொதுமை கொண்ட கடவுள் வாழ்த்தை வள்ளுவர் அமைத்திருப்பதும், நூல் முழுவதும் கடவுளுக்கும், வீட் டிற்கும் வழங்கும் சொற்களும் எச்சமயத்தினரும், எந் நாட்டினரும் எக்காலத்தினரும், எம்மொழியினரும் ஏற் றுக் கொள்ளக் கூடிய வையாய் உள்ளன. இது பற்றியே தான் தமிழ் மறையாகிய திருக்குறள் உலகப் பொதுமறை யாகவும் திகழ்கின்றது திருக்குறளில் அன்றும் இன்றும் இனி என்றும் நின்று நிலவும் அச்சொற்களுட் சில பின் வருவன:

கடவுளுக்கு வருவன: -

சிறப்பு, செம்பொருள், மெய்ப் பொருள், உள்ளது, மெய்ம்மை, வகுத்தான், பற்றற்றான், சார்பு, தெய்வம், வாலறிவன், ஆதிபகவன், அறவாழி அந்தணன், தனக்குவமையில் லாதான், இறைவன், வேண்டுதல் வேண்டாமையில்லான் முதலியன.

வீட்டிற்கு வருவன: -

சிறப்பு, தூய்மை, பேரா வியற்கை, வானோர்க் குயர்ந்தவுலகம், வானம், ஈண்டு வாரா நெறி, பிறவாமை, இன்பம், முதலியன.

இறுதியாக உலக முழுவதும் ஒரே கண் கொண்டு பார்த்து எல்லோருக்கும் ஒத்த நீதியையே கூறிக் குலம்,சமயம், காலம், இடம், மொழி நிறவேற்றுமைகளைக் கடந்து நிற்கும் இத்தமிழ் மறைப் பொதுத் தன்மை பற்றிப் பிறபுலவர் கூறுவதென்ன என்ற சில புறச்சான்றுகளைக் காட்டுவாம். M. Ariel என்பார் Journal Asiatique (1848) என்னும் ஆராய்ச்சி இதழில் இந்நூலின் பொது நோக்கப் போக்கைப் பற்றி எழுதிப் போந்த புகழுரை அறிஞர்கள் போற்றிப் படித்தற்குரியதாகும்: -

“The Kural is the masterpiece of Tamil Literature, one of the highest and purest expressions of human thought. That which above all is wonderful in Kural, is the fact that its author addresses himself without regard to castes peoples or beliefs to the whole community of mankind. the fact that he formulates sovereign morality and absolute reason that he proclaims in their very essence, in their eternal abstractedness virtue and truth, that he presents as it were in one group the highest laws of domestic and social life” என்பதே அதுவாகும்.

எனவே இந்நூல் எக்குலத்தினருக்கும். எந்நாட்டினவருக்கும், எச் சமயத்தவருக்கும், எக்காலத்தினருக்கும் பொதுவாகிய சமய உண்மைகளைத் தன்னகத்தே கொண்டு தனி நூலாக, விளங்குகின்றது. தாம் எழுந்த காலத்து மக்களின் கருத் தைக் கவரும் பொருள் பற்றி மட்டும் கூறிச்செல்லும் சில தற்கால'' நூற்களைப் போலன்றி முக்காலத்துக்கும் ஏற்ற உறுதிப் பொருள்களைக் கூறும் நூல்கள் என்றும் நின்று நிலவும். பிறவிப் பேறுகளாகிய அறம் பொருளின் பங்களையும் அவற்றின் வழி வீட்டின் திறத்தையும் தெரி ந்து திருவள்ளுவர் செய்த நூலும்'' எக்காலத்திலும் மாறாப் பயன் தரும் மாண்புடை நூலாக விளங்குகிறது. இதைச் சொல்லின் செல்வா பேராசிரியர் டாக்டர் சேதுப் பிள்ளை "காலங்கடந்த நூல்'' என்றே கருதுவர்.
காலத்தைக் கடந்ததைப் போலவே குலத்தையும் கடந்த நலத்தகு நூலாகவும் இது விளங்குகின்றது. நான்கு' வருணம்' என்ற குலப் பிரிவுகளைத் தம் முரையிற் பல விடங்களிற் பரிமேல் அழகர் திருக்குறளுக்கு வலிந்தும், நலிந்தும் பொருள் கூறியிருப்பினும், நான்கு வருணப் பிரிவுகளைப் பற்றியும், அவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையென்று போற்றியுரைத்தும் தம் நூலில் ஆசிரியர் யாண்டும் கூறினாரில்லை. சமன் செய்து சீர்தூக்கும் கோல்'' போலவே அறங்களையும் ஒழுக்க முறைகளையும் வகுத்து அனைவரையும் பொது நோக்கக் கண் கொண்டே பார்க்கின்றார். இங் நூலுக்கு எல்லோரும் உரியர்.

“செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரியா ரல்லாதா ரில்''                 (வெள்ளி வீதியார்)

“ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா - ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல் சோர்வின்று''          (கோதமனார்)
என்னும் திருவள்ளுவமாலைப் பாக்களும்,

"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந் தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி யொருகுலத்துக் கொருநீதி''

என்ற திருவனந்தைப் பேராசிரியா சுந்தரம்பிள்ளை வாக்கும் இந்நூலின் குலப் பொதுத் தன்மையைப் புலப்படுத்துகின்றன. அரிதுணர் கேள்விப் பரிமேலழகரும் எல்லா நூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு'  என்பர்.

இனி இதன் சமயப் பொதுத்தன்மைக்கு நேரடியான ஓரிரு புறச்சான்றுகள் தருதும். அக்காலத்துத் தமிழ் நாட்டுப் பல சமயங்களும் திருவள்ளுவரைத் தம் சமயத் தவர் என்று உரிமை கொண்டாடின ஆனால் திருக்குறள் எல்லாச் சமயங்களுக்கும் இடம் கொடுத்தது.

'சமயக் கணக்கர் தம் மதிவழி கூறா
துலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன்'' ...................  என்று கல்லாட முடையாரும்,

"ஒன்றே பொரு ளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென
எப்பா வலரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி''  என்று கல்லாடரும்,
"நால்வர் சொல் சைவர் வேதம் நளிர்குரு கூரன் சொல்லை
போல்வலார் சிலர் தாம் சொல்லும் பொருவில் பா கவதர் வேதம்
வால்வளை யுலவும் வீதி மயிலை வள்ளுவன் சொல்யார்க்கும்
கீழ்மையை யகற்றி மேன்மை யருளுநல் வேதமாமே”

என்று புலவர் புராண முடையாரும் இதன் சமயப் பொதுத் தன்மையைப் பலருமறியப் பாங்குடன் சாற்று கின்றனர். கிறிஸ்துவரும் இதன் பெருமையை அறிய முற்பட்ட காலத்தில் திருக்குறளை ஓங்கெழில் பொருந்திய ஆங்கில நடையில் பெயர்த்தருளிய டாக்டர் போப் பாதிரியார், இதனை இயேசு பெருமான் மலை மேற் பொழிந்த அறவுரையின் எதிர் ஒலியாகக் (Echo) கருதினர் எது முதல் ஒலி எது எதிர் ஒலி என்று அறுதியிட்டுரைக்கு மாராய்ச்சியில் இப்பொழுதிறங்காது திருக்குறளின் பொது மைக்கு : இதுவுமொரு எடுத்துக் காட்டாகும் என்ற அளவில் அமைவோமாக.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாரதியாரும்,

"பொதுமறையான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே"

என்று அவர்வழி வந்த புரட்சிக் கவிஞரும், திருக்குறளின் ஈடு மெடுப்பு மற்ற பொது நோக்கப் பெருமையை எடுத்து அறை கூவிக் காட்டியுள்ளனரன்றோ. திருக்குறளைத் தமிழ் மாதின் உயிர் நிலையாகவும் திருவள்ளுவரைத் தமிழுக்கு உயிரை ஊட்டவந்தவர் எனவும் கவிமணி நவின்றுள்ளார். இதுபோன்று சென்னை அரசவைப் புலவராய் விளங்கிய நாமக்கல் கவிஞரும் இதன் பொது நோக்கப் போக்கைப் புகழா நிற்பர்.

இன்றிவ்வுலகில் இணக்கம் நீங்கிப் பிணக்கமும், அறம் நீங்கி மறமும், நேர்மையுணர்ச்சி நீங்கிப் போர்மையும், நேசம் நீங்கிப் பூசலும் எம் மருங்குஞ் சுற்றிச், சூழ்ந்து பற்றிப்பதிந்து கிடக்கும் நிலையில் பொதுவாகத் திருக்குறளின் இல்லற, சமுதாய வாழ்வியல்களினறிவும், சிறப்பாகப் பொது நோக்கச் சமய வாழ்வியலறிவும், மக்கள் வாழ்வு செம்மையுற இன்றியமையாது ஒவ்வொருவருக்கும் வேண்டப் படுவதொன்றாகும். வள்ளுவர் வாழ்வியல் நிலவுக உலகெலாம். "சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக"

சித்தாந்தம் – 1962 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment