Saturday, May 9, 2020



தக்கோலம்
திரு. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள், M. A., LT, M. O. L., Ph. D.

செங்கற்பட்டிலிருந்து அரக்கோணம் செல்லும் புகை வண்டிப் பாதையில் தக்கோலம் என்னும் பெயர் கொண்ட புகைவண்டி நிலையம் இருக்கிறது. அந்நிலையத்திற்குக் கிழக்கே மூன்றுகல் தொலைவில் தக்கோலம் என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற ஊர் அமைந்துள்ளது. ஊருக்குக் கிழக்கில் சிவன் கோயில் இருக்கின்றது. இச்சிவன் கோவில் திரு ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சிறப்புடையது. சம்பந்தர் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு. எனவே அவரால் பாடப் பெற்ற இக்கோவில் கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட் டது என்பது திண்ணம். கோவிலுக்கு வடக்கே நந்தி ஒன்று இருக்கிறது. அந்தந்தியின் வாயிலிருந்து நீர் எப் பொழுதும் விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் இவ்வூருக்குத் திருவூறல் என்பது பெயராயிற்று.

கல்வெட்டுக்கள்:

திருவூறல் கோவிலில் 54 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை சோழப்பேராசை நிறுவிய ஆதித்த சோழன் மகனான முதற் பராந்தகன் காலம் (கி. பி. 907 - 953) முதல் கி. பி 16 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி (கி. பி. 1550) வரையில் ஆண்ட அரசர்களுடைய காலங்களிற் பொறிக்கப் பட்டவையாகும். எனவே இக்கோயில் சம்பந்தர் காலமான கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி. பி. 16 - ஆம் நூற் றாண்டு வரையில் சிறப்புற்று இருந்தது என்பது தெளிவாகும். இனி இக்கல்வெட்டுக்களில் காணப்பெறும் அரசர் பெயர்களையும், அவர்தம் ஆட்சிக்காலங்களையும் கீழே காண்க: -

அரசர்கள்

முதற் பராந்தக சோழன்                          - கி. பி.      907 - 953
இராசாதித்தன்
கன்னரத்தேவன்
 (இரட்ட அரசனான மூன்றாம் கிருஷ்ணன்)
இராசராசன்- 1                                   - கி. பி.      985 - 1014
இராசேந்திர சோழன் -1                           - கி. பி.      1012 - 1044
இராசேந்திர சோழதேவர்                          - கி. பி.      1052 - 1064
வீரஇராசேந்திரன்                                 - கி. பி.      1063 - 1069
குலோத்துங்க சோழதேவர்-1                       - கி. பி.      1070 - 1122
குலோத்துங்க சோழதேவர்-3                       - கி. பி.      1178 - 1218
சிற்றரசன் தம்மு சித்தி
சிற்றரசர் திருக்காளத்தி தேவர் என்ற யாதவராயர்
விஜயகண்ட கோபாலதேவர்                       - கி. பி.      1246 - 1279
(மூன்றாம் இராசேந்திரன் காலம்)
வீரப்பிரதாப தேவராய மகாராயர்                   - கி. பி.      1427
வீரப்பிரதாப சதாசிவதேவ மகாராயர்               - கி. பி.      1543

கல்வெட்டுச் செய்திகள்:

திருவூறல் கோவிலுக்கு அரசாங்க உயர் அலுவலரும் பொதுமக்களும் பல அறங்களைச் செய்து வந்தனர். அவற்றுள் குறிக்கத் தக்கவை விளக்கு எரித்தல், நிலமளித்தல், விழாக்கள் செய்யப் பொருள் அளித்தல், பூசைக்காகப் பொருள் உதவுதல் என்பன. பல கோவில்களில் இத்தகைய அறங்கள் பெரும்பாலும் தனிப்பட்டவரால் ஏற்று நடத்தப்பட்டன. ஆயின், திருவூறல் கோவிலுக்குச் செய்யப்பட்ட அறங்களுட் பல கோவிலதிகாரிகளாலும் சிற்றூர், அவையினராலும் ஏற்று நடத்தப்பட்டன என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

விளக்குத்தானம்:

பொதுவாகக் கோவில் கல்வெட்டுக்களுட்பல, விளக்குகள் எரிக்கப் பணத்தையோ, ஆடுகளையோ, மாடுகளையோ தானம் செய்த விவரங்களைத் தெரிவிப்பது வழக்கம். அவ்விளக்குகள் சாதாரணவிளக்கு, சந்திவிளக்கு, நந்தாவிளக்கு எனப் பலவகைப்படும். ஆயின் இக்கோவிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காகவே பொன்னும் ஆடுகளும் வழங்கப் பட்டன. நந்தா விளக்கு என்பது இறைவன் திருமுன்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. ஒரு நந்தாவிளக்கு எரிக்க 90 ஆடுகள் கோவிலுக்கு விடப்பட்டன. அதாவது, அந்த ஆடுகளின் வருவாயைக் கொண்டு ஒரு நந்தாவிளக்கு எரிக்கப்பட்டது என்பது பொருள். ஒன்றரை நந்தா விளக்கெரிக்க 135 ஆடுகள் விடப்பட்டன. 'அரைவிளக்கு' என்பது அளவில் சிறியதாக இருத்தல் வேண்டும். ஒரு நந்தாவிளக்கு எரிக்க 15 கழஞ்சு பொன் கொடுக்கப்பட்டது. அதாவது, அதன் வட்டியைக் கொண்டு ஒரு நந்தாவிளக்கு எரிக்க வேண்டும் என்பது திட்டம். மற்றொரு நந்தா விளக்கு எரிக்க முப்பது கழஞ்சு பொன்னின் வட்டி பயன்படுத்தப்பட்டது. இவற்றை நோக்க, முன்னது அளவில் சிறியதாகவும், பின்னது அளவில் பெரியதாகவும் இருத்தல் வேண்டும் என்பது புலனாகும்.

பிற தானங்கள்:

மாசிமக விழாவிற்கும், திருவூறல் நாயனாரை ஊர்வல மாகக் கொண்டு வருவதற்கும் ஓர் உயர் அலுவலன் நிலதானம் செய்தான். பூசை நடத்தவும் விழாக்கள் நடத்தவும் ஒரு சிற்றரசன் நிலதானம் செய்தான். பெரிய குளத்தில் தெப்பவிழா நடத்த ஓர் அம்மை பொன்தானம் செய்தாள். மற்றொருவர் பூசை முதலியன நடைபெற 455 கழஞ்சு பொன் தானம் செய்தார். 'பன்டரெட்டிகள்' நூறு பொன்னுக்குக் கோவில் நிலத்தை வாங்கிக் கோபுரம் கட்டினர். கோவிலதிகாரிகள் அப்பொன்னின் வட்டியைக் கொண்டு காலைப்பூசையில் தயிர்ச்சோறு படைக்க ஒப்புக் கொண்டனர்.

தானம் செய்தவர்கள்:

நிலம், பொன், விளக்கு முதலியவற்றைத் தானமாகச் செய்தவர் பலராவர். சிற்றரசன் திருக்காளத்தி தேவன், பராந்தகதேவர் மகளான வீரமாதேவி, தக்கோலத்துப் பெண்மணி ஒருத்தி, பாண்டி நாட்டு வையக்கரைத் தேனூர் வாசி ஒருவன், சோணாட்டுப் பாம்புணிக் கூற்றத்துத் தேவன் குடித் தலைவனான வீரசோழ விழுப்பேரரையன், சோணாட்டு வேலூர்க் கூற்றத்துப் புலியூரான், மதுராந்தகப் பல்லவரையர் சேவகன் ஒருவன், மணவிற் கோட்டத்துப் பாசலி நாட்டுப்பாசலி என்ற ஊரின் தலைவன், இராசேந்திர சோ ழப் பிரம்மாதிராயாது பணிமகள்; திருவூறல் நங்கை என்பவளுடைய ஒரு மகளான வீரம்மை, மற்றொரு மகளான கோவிந்தம்மை, பல்லவர் மரபைச் சார்ந்த மதுசூதன தே வன், திருவூறல் வணிகர் குழு, திருவூறல் நெசவாளர் குழு, பன்டரெட்டிகள் தானங்களை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டவர்.

இராச மார்த்தாண்ட சதுர்வேத மங்கலச் சபையார், புரிசை ஊரார், தாமல் கோட்டத்துச் சம்புழலை என்னும் ஊரார், புரிசைகாட்டு ஊாடகம் என்னும் ஊரார், பருந்தூர்ச் சபையார், திருவூறல் புரத்தைச் சேர்ந்த அபராசிதச் சதுர் வேதி மங்கலச்சபையார், தக்கோலத்தைச் சார்ந்த திருவூறல் புரத்திலுள்ள சீறூர் மக்கள், சங்கரன் பாடி ஊரார், திருவூ றல் திருவுண்ணாழிகைச் சபையார்.

கோவிலாட்சி:

திருவூறல் மகாதேவர் கோவில் ஆட்சியை ஒரு குழுவி னர் இருந்து கவனித்து வந்தனர். அவர்களல்லாமல் திரு வுண்ணாழிகைச் சபையார் என்று மற்றொரு குழுவினரும் இருந்தனர். திருவுண்ணாழிகைச் சபையார் என்பவர் கோ வில் கருவறைத் தொடர்பான பூசை, விழா முதலியவற் றைக் கவனிக்கும் குழுவினர் என்று கருதலாம். கோவில் நிலங்கள், கிராமங்கள் முதலியவற்றைக் கவனிப்பவர் கோவிலாட்சிக் குழுவினர் எனலாம். திருவூறல் கோவிலில் பண்டரரம் (பொக்கிஷம்) இருந்தது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

கடவுளர் பெயர்கள்:

தக்கோல விடங்கர், திருவூறல் மகாதேவர், திருவூறல் ஆழ்வார், திருவூறல் கற்றளி மகாதேவர், திருவூறல் உடையவ சித்தாந்தம் நாயனார் என்பன இறைவன் பெயர்களாகும். இறைவியின் பெயர் மலையாமகள் அம்மை. இது 'மலையான் மகள் அம்மை' என்பது. மலையான் மகள் என்பது மலையரசன் மகளான பார்வதிக்குப் பெயராகும்.

அளவைகள்:

அக்காலத்தில் பொன் நாணயங்களைச் சோதிக்கும் கல் 'தரும் கட்டளைக்கல்' எனவும், 'துளை நிறை பொன்' எனவும் பெயர் பெற்றது. அக்காலப் படி 'என்னும் முகத்தலளவை' இராஜகேசரி நாழி' எனவும், ‘அருள் மொழித் தேவன் நாழி' எனவும் பெயர் பெற்றது. இராஜகேசரி என்பதும் அருள்மொழித்தேவன் என்பதும் முதல் இராசராச சோழன் பெயர்களாகும். இரண்டு குன்றி மணி = 1 மஞ்சாடி. இருபது மஞ்சாடி = 1 கழஞ்சு. இவை நிறுத்தலளவைப் பெயர்கள். அதாவது, நாற்பது குன்றி மணி எடை ஒரு 'கழஞ்சு' பொன்னாகும்.

நாணயங்கள்:

அக்காலத்தில் பழங்காசுகள், கண்டகோபாலன் மாடை, புஜபலமாடை என்பன வழக்கில் இருந்தன. பொதுவாக வழங்கும் காசு, பொன் என்பவற்றுடன் கண்டகோபாலன் மாடை, புஜபலமாடை போன்ற பொற்காசுகளும் 12, 13 - ஆம் நூற்றாண்டுகளில் தொண்டை நாட்டில் வழங்கின. இவற்றை வழங்கிய அரசர் யார் என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் இவை மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியில் வழக்கிலிருந்தன என்று மட்டும் கூறுதல் இயலும். கண்டகோபாலன் மாடை, விஜய கண்டகோபாலன் ஆட்சிக் காலத்தில் வெளியிட்டவை. அவன் கி. பி. 1250 இல் ஆட்சி தொடங்கியவன். 'ஸ்ரீ புஜவ' என்னும் பெயர் கொண்ட நாணயங்கள் நெல்லூர் மாவட்டத்துக் கோநீரில் கிடைத்துள்ளன, இவை யானரக் குறிப்பன என்பது திட்டயாகக் கூறக் கூடவில்லை.

ஊர்ப்பெயர்கள்:

தக்கோலம் என்ற வல்லவபுரம், மேல்மலை ஆற்றார் நாட்டு இராசமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என்றசு உரகையூர் (இது தேவதான கிராமம்), மணவில் கோட்டத் துப் புரிசை நாட்டுப் புரிசை, மணவில் கோட்டத்துப் பாசலி நாட்டுப் பாசலி, மணவில் கோட்டத்துப் புரிசை நாட்டுத் திருவூறல் புரத்தைச் சேர்ந்த அபராசிதச் சதுர்வேதி மங்க பலம் (அபராசிதன் - பல்லவ மன்னன் பெயர்), மணவில் கோட்டத்துப் பன்மா நாட்டுப் புன்னைவயல், பருந்தூர் (தேவதானகிராமம்).

தக்கோலம் என்னும் ஊர் க்ஷத்திரிய சிகாமணிபுரம், இரட்டபாடி கொண்ட சோழபுரம், குலோத்துங்க சோழ புரம், வடமுடிகொண்ட சோழபுரம் எனப்பல பெயர்களைப் பெற்றிருந்தது. அது ஒரு தனியூராகவும் (City) காட்சி யளித்தது.

வரலாற்றுச் சிறப்பு:

முதற் பராந்தக சோழன் பேரரசன். அவன் தென் னாடு முழுவதையும் வென்றான். அவன் காலத்தில் இராட்டிர கூடர் பம்பாய் மாநிலத்தை ஆண்டு வந்தனர். மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன் சோழப் பெருநாட்டின் மீது படையெடுத்தான். அவனுக்குத் துணையாக அவன் மைத்துனனான இரண்டாம் பூதுகன் என்ற கங்க அரசனும் வந்தான்.

இரட்டரது படையெடுப்பை எதிர்பார்த்துப் பராந்தகன் மகனான இராசாதித்தன் திருநாவலூர்ப் பகுதியில் பெரும் படையுடன் தங்கியிருந்தான். அவனுக்கும் கன்னர தேவனுக்கும் போர் மூண்டது. இராசாதித்தன் முதல் போரில் கன்னரதேவனை முறியடித்தான். பின்னர் இரு திறத்தாருக்கும் தக்கோலத்தில் கடுமபோர் நடைபெற்றது. போர்க்களத்தில் யானை மீதிருந்த இராசாதித்தன் கங்க அரசனால் கொல்லப்பட்டான். இதனால் சோழர் சேனை சிதறுண்டது. கன்னரதேவன் பெற்ற இந்த வெற்றியால் பராந்தகன் சோழப் பெருநாட்டில் பெற்றிருந்த பாணப்பாடி, தொண்டை நாடு, வைதும்ப நாடு என்றவற்றை இழந்தான். தக்கோலம் என்ற இடத்தில் நடந்த கடும்போரே இத்தகைய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாகும். இவ்வாறு தக்கோலம் சமயச் சிறப்புடன் வரலாற்றுச் சிறப்பும் உடையராகும்.

சித்தாந்தம் – 1962 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment