Saturday, May 9, 2020



ஞானாமிர்தம்
[முருகவேள்]
(மலர் - 33; இதழ் - 3; 71 - ம் பக்கத் தொடர்ச்சி)

ஞானியர் இயல்பு

ஞானிகளின் சிறந்துயர்ந்த நலத்தை ஞானாமிர்தம் பின் வருமாறு சுவைமிக நவிலுகின்றது : செஞ்சாந்து எறியினும் செதுக்கினும் போழினும் நெஞ்சு ஓர்ந்தோடா நிலைமையர் ஞானிகள். களிப்பும் கலுழ்ச்சியும் அவர்கள் பாற் காணப்படா ஞானிகட்கு ஒரோவழிக் கலுழ்ச்சி யுண்டெனின், அது தமக்குத் தீங்கு செய்தோர் நீங்கா நிரயத்து அழுந்துதற்கு ஏதுவாயினமே" என நெஞ்சம் அழிந்து பரிவுறுவதேயாகும்.     (40).

மந்திர வலிமையும் மருந்தின் ஆற்றலும் வாய்த்தவர் பால் பாம்பின் நஞ்சு ஊறு பயவாதவாறு போலவும், தாமரையின் இலையில் தண்ணீர் படியாத தன்மைபோலவும், உப்புக் கடலில் தோன்றி யுலவி வாழ்ந்தபோதிலும் மீன்கள் உப்புடன் ஒன்றாத தன்மைபோலவும், உலகியலுணர்வு ஞானிகளை ஒரு சிறிதும் பற்றுவதில்லை.

"ஞான மாக்கழல் மாணுற வீக்குநர்
விடய வேலைத் தடையின்று படியினும்
தீதொடு படியுநர் அல்லர்
மாதுயர் கழியுநர் நீதி யானே."                                       44

அஃது எங்ஙனமெனின், ஞாயிறு தன் கதிர்களால் தூய பொய்கை நீரையும் தூய்தல்லாத சகதி நீரையும் ஒருங்கே பருகுமாயினும், அதற்கு ஒரு குற்றமும் எய்துவதில்லை; அகில் சந்தனம் முதலிய நறுமணங்கமழும் மரங்களையும், காஞ்சிரம் காஞ்சொறி முதலிய நச்சுச் செடி கொடி மர வகைகளையும் ஒருங்கே எரிக்குமாயினும், நெருப்பானது அவற்றால் யாதொரு கெடுதியும் அடைவதில்லை; அங்ஙனமே, அறிவு அனல் கெழுமிய நெறியினோர், விடயங்களில் அழுந்திய வழியும் சுடர்விட்டொளிர்வர்
(45).

ஞானிகள் நம்ம னோரை ஒப்பவே, உடலும் உணவும் உறக்கமும் பிறவும் உடையராகக் காணப்படினும், உலகியற் பொருள்களை ஞானி கள் நுகரும் முறைக்கும் நம்மனோர் நுகரும் முறைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுண்டு. ஒருவன் தனது மகளைத் தழுவுங்காலும் மனைவியைத் தழுவுங்காலும் எய்தும் மன நிலைகள் தனித்தனி வெவ்வேறானவை; தனது தனங்களைக் குழந்தைதை வரும்போதும் கணவன் வருடும் போதும், ஒரு மாதரார் எய்தும் உணர்வு நிலைகள் அறவே வேறுபட்டவை. இவற்றைப்போலவே, அறங்கரை நாவின் ஆன்றோர் உள்ளமானது உலகியற் பொருள்களை நுகருங் கால், நம்மனோர் உள்ளங்கள் போல இழிந்து செல்லாமல், சிறந்துயர்ந்த செவ்விபெற்றுத் திகழும்                          (42).

ஞானாமிர்தம் விளக்கும் அழகிய அரிய இக்கருத்தினை வியந்து, ஆசிரியர் சிவஞான சுவாமிகளின் அரும்பெறல் மாணவராகிய கச்சியப்ப முனிவரர்,

"முப்பொருள் இயல்பும் உள்ளவா றுணர்ந்து
முழுத்தபே ரறிவினுள் விழித்தோர்,
இப்புவியவர் போல் வினை பல குயிற்றி
இருப்பினும் வினைப்பயன் எய்தார்!
கைப்பட மனையைப் புதல்வியைத் தழூஉங்காற்
கருத்து வேற்றுமையும், கை வருடச்
செப்பிள முலையார் மகன்பதிக்கு அளிக்கும்
பயத்தின் வேற் றுமையும், ஒன்றன்றே!"

என வரும் தணிகைப் புராணப் பாடலுள் விதந்தெடுத்துப் போற்றி அமைத்திருத்தல், அறிந்து மகிழ்தற் குரியது.

மெய்கண்ட நூலின் சொற்பொருட் கருத்துக்கள்

ஆசிரியர் மெய்கண்டார் பெருமானின் காலத்திற்கும் (கி. பி. 1232), சிறிது முன்னர் இயற்றப் பெற்றதெனக் கருதப்படும் ஞானாமிர்தம் (கி. பி. 1185) என்னும் இந் நூலில், சிவஞானபோதம் சிவஞான சித்தியார் சிவப்பிர காசம் என்னும் மெய்கண்ட நூல்களின் சொற்பொருட் கருத்துக்கள், ஆங்காங்கே அமைந்து செறிந்து கிடந்து விம்மிதம் விளைக்கின்றன. 'தாலிபுலாகநயம்' பற்றி ஈண்டு அதற்குரிய ஒரு சில சான்றுகளை மட்டுமே கண்டு அமைதல் சாலும்: "நெல்லிற்குமியும் நிகழ் செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே” எனவரும் சிவஞானபோதக் கருத்து,

பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு
அற்றே சொற்றது அனாதி !... " 9

"பேணிற் செம்பிற் பெருகிருந் துகள் என
அறிவினை மறைத்தல் அணிமலம்... " 18

எனவரும் ஞானாமிர்த வரிகளில் அமைந்துள்ளது. "மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை'' எனச் சிவஞானபோதமும், ''போதகாரியம் மறைத்து நின்றது புகல் மலங்காண்... காதலால் அவித்தை சிந்தத்தரும் கலையாதி மாயை. ஆதலால் இரண்டும் சோதி இருள் என வேறாம் அன்றே!'' எனச் சித்தியாரும், “புகலும் மலம் ஒழித்தற்குக் கலாதிமுதல் மாயை பொருந்தியிடும்.... அருளை மலம் உயிர்கள் சாராமல் மறைக்கும். இகலிவரும் இவை யுணரின் இருள்வெளியாந் தன்மை எய்தும்''
எனச் சிவப் பிரகாசமும் கூறும் கருத்தை,

மறைத்தற் றொழில்பூண் பதுவும், அதனைக்
குறைத்தற் கெய்திக் குலவுவ (தும்) ஓரிடை
இரண்டல என்பதென்? இருள் - இருள் இரிசுடர்
முரண்தர நின்ற முழுமலம், மாயை.

என ஞானாமிர்தம் நன்கினிது விளக்குகின்றது. இங்கனமே, ''முத்தொழில் செய்யும் இறைவன் உருவுடையனாதல் வேண்டும், உடம்பின்றி வினை செய்தல் கூடாமையான்''  என்பாரை மறுத்து,  "நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது நின்று... இறைவன்'  எனச் சிவஞான போதமும்,

"ஞாலமே ழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள் நீ நிலைசெயல் கடவுட் கண்ணே

எனச் சித்தியாரும் கூறுவதனை,

"அறிமதி! காலம் அமூர்த்தம், உறுபலம்
தரும். அது போலத் தலைவன் மூர்த்தத்
திரிபினன் ஆயினும், இன்தொழில் பொருவு இரி
இச்சையின் இயற்றும். "                                            62

என ஞானாமிர்தம் நவிலுதல் காணலாம். இவ்வாறே, " வள்ள லாற் பொன்வாள் அலர்சோகம் செய்கமலத்து ஆம்” எனச் சிவஞானபோதமும், "சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை அலரும். காந்தம் கான்றிடும் கனலை. நீரும் கரந்திடும் காசினிக்கே''  எனச் சித்தியாரும், "எல்லாம் வருவிப்பன் விகாரங்கள் மருவான். வானின் முந்து இரவி எதிர் முளரி அலர்வுறும் ஒன்று, அலர்வான் முகையாம் ஒன்று, ஒன்று உலரும் முறையின் ஆமே'' எனச் சிவப்பிரகாசமும் ஆகிய வற்றில் முறையே உணர்த்தப்படும் அரிய கருத்து,

"அடையான் விகாரம் ஆயினும் சுடரவன்
சுடர்வீழ் தாமரைத் தோடு இனிது அலர்த்தவும்,
மற்றவை குவிப்பவும், உலர்த்தவும் கொற்றக்
கிரணத் தது என, அரணமில் கூற்றின்
முரண்தொலை ஒருவனும், முரியாச் சத்தியின்
அண்டர் அண்டம்மற்று எண்தரல் இடைவ
செய்தற் கண்ணும் திரிவிலன்                                       63

எனவரும் ஞானாமிர்தப் பகுதியிற் புலப்படுத்தப் பெற்றுளது. பண்ணையும் ஓசையும் போலப் பழம் அதுவும் எண்ணும் சுவையும் போல் எங்குமாம் அண்ணல் தாள்'' எனச் சிவஞானபோதம் விளக்கிக் கூறும் பதிப்பொருளின் அத்து வித வியாபகத் தன்மையை,

இன்ன தன்மையன் எனையன்? என்றினிது
அன்னோற் றேரின், அம்ம ! மின்னவிர்
பதும ராகப் புதுவெயில், நீழல் செய்
மதியிற் றண்மை, ஞெலிகோல் வன் தழல்,
மடநடை நல்லான் வனமுலை வந்த
பாலில் தீநெய், பழத்தின் இன்சுவை,
பூட்சி ஆருயிர், பொருள் உரை, எள்நெய்,
கடிமலர் கஞலிய முடியா வாசம்,
விம்மிதம் என்னென்று இசைக்குவம் மற்றே?
நிலம் நீர் தீகால் வெளி உயிர் யாவும்
அவையே தான், அவை தானே யாகி
விரவியும் விரவா வீரம்.... "                                         56

என ஞானாமிர்தம் பாராட்டி நவில்கின்றது. இம்மட்டோ!  அங்கித் தம்பனை வல்லார்க்கு அனல் சுடாதாகும். ஒளட தம் மந்திரங்கள் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா. எங்கித் தைக் கன்மமெலாம் செய்தாலும் ஞானிக்கு இருவினைகள் சென்றணையா.'" எனவும், ''உரிய மலம் ஒளடதத்தால் தடுப் புண்ட விடமும், ஒள்ளெரியின் ஒளி முன்னர் இருளும், தேற்றின் வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும் போல் ஆகி மாயாதே தன்சத்தி மாய்ந்து... தேயும்''  எனவும் சித்தியார் கூறும் உண்மையினை,

"மாமலை யன்ன மரந்தெறும் கடுங்கனல்
தாமரை யன்ன தளிர்க்கை தாங்கினும்
மந்திர மாக்கட்கு அந்தரம் யாதே?
விடங்கெழு பெருவலி யுளங்கொள் மந்திரத்து
அடங்கிய தன்மையும் அற்றே ! குடங்கர்க்
கலங்குநீர் இல்ல நலங்கிளர் விழுக்காழ்
துணைந்த மாறென இணங்கிறந் தகன்ற
பாசப் பெருவலி தடுத்தனர்!"                                         52

என ஞானாமிர்தமும் நலந்திகழத் தெளிவித்துள்ளது.
முனிவாரின் சில உரைப்பகுதி களுக்கு மூலங்கள்

இனி இவைபோல்வனவே யன்றி, ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமது பேருரை சிற்றுரைகளில் உரைநடைப் படுத்து வரைந்தன போலக் காணப்பெறும் ஞானாமிர்தப் பகுதிகளும் பலவாகும். முனிவரரின் சில உரைப்பகுதிகளுக்கு மூலங்கள் போல ஞானாமிர்தப்பகுதிகள் சில ஆங்காங்கே காணப்படுகின்றன:

இஃது இவ்வாறக என எண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம், கரணத்தாற் செய்வதூஉம் என வினை முதல் இரு வகைப்படும். குயவன் காணத்தாற் செய்வ தன்றிச் சங்கற்ப மாத்திரையாற் செய்யமாட்டான். இறைவன் சத்தி அவ்வாறன்றிச் சங்கற்ப மாத்திரையான் எல்லாத் தொழிலும் செய்யுமாகலின், இறைவன் மாட்டுக் குயவன் எய்தும் குற்றங்கள் இயைதல் இல்லை''

எனவரும் சுவாமிகளின் உரைப் பகுதி,

"பொங்கிய வினை இரு வகைத்து, சங்கற்
பத்தொடு கரணத்து; அலர்கடம் குலாலன்
எற்படு சங்கற் பத்தின் முற்பட
இயற்றலன்; இறைவன் சங்கற் பத்தின்
மயக்கற விந்துவைத் துயக்கறக் கலக்கல்
செய்வன், நோவான்... "                                             60

என வரும் ஞானாமிர்தப் பகுதியினை உட்கொண்டதாதல் உணரற்பாலது. இவ்வாறே,

"ஆன்மாப் பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் பெற்றவழிப் பசுகரணமும் சிவகரணமாயவாற்றான், அவ்வழிப் பசு ஞானத் தோடு ஒப்பப் பாசஞானமும் உப்பளத்தடுத்த பொருள் போலச் சிவஞான மேயாம் என்பது சிவாகம நூற்றுணிபு''

எனச் சுவாமிகள் எழுதியருளியிருக்கும் பேருரைப் பகுதி

,...........'' காயல்
உப்புவிளை பழனத்து உற்ற பொற்கோட்டு
உலவையின் அறிக மாதோ
கலைவ லாளர் நிலைபுணர் பண்பே''                                 74

எனப் போதரும் ஞானாமிர்த வரிகளை நினைவூட்டி நிற்கின்றன. இவ்வாறே,

''அற்றேல், வினையே அமையும்; இறைவன் வேண்டா வெனின், அற்றன்று; வினையும் மாயைபோலச் சடமாகலிற் கூட்டுவானையின்றி அமையாதென்க. பால் சுரந்து கன்றினை வளர்ப்பவும், காந்தம் இரும்பைவலிப்பவும் காண்டலிற், சடமும் கூட்டுவானையின்றி அமையுமென்பது பொருந்தாது; பால் சுரந்து வளர்க்குமாயின், உயிர் நீங்கிய ஆன் முலையினும் பால் சுரத்தல் வேண்டும். அஃதின்மையிற் சேதனமாகிய ஆவை யின்றி அமையாமை உணர்க. காந்தம் இரும்பை வலித்தலும் அவ்விரண்டினையும் இயைவிக்கும் சேதனனையின்றி அமை யாமை உணர்க

எனச் சுவாமிகள் தமது பேருரைக்கண் தெளிவுறுத்தி யிருக்கும் செய்தி,

கன்றுவளர் பாலினும் சென்றின்று, ஈன்கோச்
சேதனம் ஆதலின்; ஓதிய உயிர்போாஞ்
சுரபி தீம்பால் சொரியின், புரையில்
தீம்பால் வளர்த்தது அன்று என ஓம்பாது
உரையா டுநர்எவர்? வரை யா அறிவன்
செயல்என, இரும்பை அயல் அற உய்க்கும்
காந்தம்என் (ற) எடுத்துக் கோளும் வாய்ந்தன்று !
இரண்டையும் இயைக்கும் முரண்தகு சேதனன்;
இன்று எனின், அவை சென்று ஒன்றா... ! "                            58

என்னும் ஞானாமிர்த வரிகளை உன்னியுணர்ந் தெழுதிய தாகும் எனலாம். இன்னோரனையவை பலவுள!

முற்றுருவகம்

      ஞானாமிர்த நூலின் பலதிற நலங்களுள், சிவஞான போதம் சிவஞான சித்தியார் போன்ற சிறந்த நூல்கள் குறிப்பாகவும் சுருக்கமாகவும் உணர்த்திச் செல்வனவற்றை, விரிவாகவும் விளக்கமாகவும் சுவைகெழும் வகுத்துணர்த்தும் திறமும் ஒன்றாகும்.

"அந்தக் கரணம் அவற்றின் ஒன் றன்று; அவை
சந்தித்தது, ஆன் மாச் சகசமலத் துணராது;
அமைச்சு அரசு ஏய்ப்பநின்று அஞ்சவத் தைத்தே"

எனச் சிவஞான போதத்தினுள்ளும்,

"படைகொடு பவனி போதும் பார்மன்னன், புகும்போ தில்லில்
கடைதொறும் விட்டு விட்டுக் காவலும் இட்டுப் பின்னர்
அடைதரும் தனியே அந்தப் புரத்தினில்; அதுபோல் ஆன்மா
உடலினில் அஞ்சவத்தை உறும், உயிர் காவல் ஆக.''
எனச் சிவஞானசித்தியாருள்ளும் சுருக்கமாகக் குறிப்பிடப் பெற்றுள்ள கருத்தை, ஞானாமிர்தம் மேலும் சுவைமிக அழ கோங்க விரிவாகக் கூறுகின்றது. சிவஞானபோதம் 'அமைச்சரோடு கூடிய அரசன்' எனவுரைத்து உருவகம் செய்தது; சுருங்க அமைந்த அத்தொகை யுருவகத்தினைப் 'படைகொடு பவனிபோதும் பார் மன்னன்' என்னும் தொடரால் மேலும் சிறிது விரியுருவகமாக்கி விளக்கியது சித்தியார்; அதனை, மேலும் தொடர்ந்து முற்றுருவகமாகவே முடித்துக் காட்டி விடுகின்றது ஞானாமிர்தம்!

ஆன்மா அரசன். உடல் அரண்மனை. புருவநடு திருவோலக்க மண்டபம். கண்டம் நாடக அரங்கு. இருதயம் மந்திரா லோசனை மண்டபம். உந்தி அந்தப்புரம். மூலாதாரம் பள்ளியறைக் கட்டில். இவ்விடங்களில் முறையே நிகழும் செயல்கள் நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்படக்கம் (சாக் கிசம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியா தீதம்) என்னும் ஐந்தவத்தைகள். இவ்வவத்தைகளுக்கு முறையே 35, 25, 3, 2, 1 எனக் கருவிகள் தொழிற்படும். மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் அமைச்சர்கள். காலம் நியதி கலை வித்தை அராகம் என்பன கவசம். நிலம் நீர் தீ கால் வெளி என்னும் ஐம்பெரும் பூதங்களும் தேர். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் அறிகருவிகள் ஐந்தும் முறையே ஒற்றர், சூதமாகதர், தூது வர், புரோகிதர், மெய்காப்பாளர் ! வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னும் தொழிற்கருவிகள் ஐந்தும் முறையே குதிரைவீரர், யானை வீரர், தேர் வீரர், காலாட்கள், படைத்தலைவர்! அறி கருவிகளுக்கு நுகர் பொருளாகிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன அகப் பரிவாரம். தொழிற் கருவிகளுக்கு நுகர் பொருளாகிய உரை நடை கொடை போக்கு இன்பம் (வசனம் கமனம் தானம் விசர்க் கம் ஆனந்தம்) என்பன புறப் பரிவாரம். பிராணன் அபா னன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்னும் பத்துவகை வாயுக்களும் உறுதிச் சுற்றம் என ஞானாமிர்தம் (16), ஏற்றபெற்றி இலக் கியச் சுவையமைய முற்றுருவகம் செய்து மொழிந்திருத்தல் அறிந்தின் புறற்பாலது. அன்றியும்,

சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்; கனவு தன்னில்
ஆக்கிய இருபத்தைந்து; களத்தினிற் சுழுனை மூன்று;
நீக்கிய இதயந் தன்னில் துரியத்தில் இரண்டு; நாபி
நோக்கிய துரியா தீதம் நுவலின் மூலத்தின் ஒன்றே!"

எனவரும் சிவஞானசித்தியார் செய்யுட் கருத்தும் ஞானாமிர்தத்தின் (16) இப்பாடலில் நயம்பொலிய விளக்கப்பட்டுள்ளமை காணலாம். இத்தகைய சுவைமிகு கருத்துக்கள் பலவற்றை அழகுறத் தெளிவிக்கும் இவ்வரிய நூலை, நம்மனோர் அனைவரும் செவ்விதிற் கற்றுணர்ந்து போற்றிப் பயன் கொள்ளுதல் வேண்டும்!

சித்தாந்தம் – 1960 ௵ - ஏப்ரல் ௴

No comments:

Post a Comment