Saturday, May 9, 2020



கடவுள் வழிபாடும் கடமையுணர்வும்

[திரு. அ. சோ.]

நமது இந்திய தேசம் காந்தியடிகள் போன்ற அரும்பெரும் தலைவர்கள் பலப்பலர் செய்த அரும்பெருந் தியாகங்களாலும், அளப்பரும் முயற்சிகளாலும் அரிதிற் பெற்ற பெறலரும் சுதந்திரத்திற்கு, இதுபோது சீன அரக்கர்களால் இடையூறு பெரிதும் ஏற்பட்டுள்ளது. சீனர்கள் நமது வட எல்லைப் பிரதேசத் தில், லடாக் நேபா என்னும் பகுதிகளைக் கொண்ட பல்லாயிரம் சதுரமைல் அளவு நிலப்பரப்பை வஞ்சகமாகக் கவர்ந்து கொள்ள முனைந்து முயன்று வருகின்றனர். அதனால் இன்று நம் நாட்டு மக்களிடையே மிக்க கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளன.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிகழத் தொடங்கியுள்ள வட எல்லைப் போர் விரைவில் முடிவுறாமல், நீடித்துப் பல ஆண்டுகள் தொடர்ந்து நிகழக்கூடும் என்று, பெருமதிப் பிற்கும் பேரன்பிற்கும் உரிய நமது பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நமக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.

எங்கோ மிகத் தொலைவில் நடைபெற்ற இரண்டாவது உலகப் பெரும்போர் முடிவடைந்து, பல ஆண்டுகள் ஆகியும் அதன் விளைவுகள் இன்னும் தீர்ந்தபாடு இல்லாமல், நாம் இது போதும் எவ்வளவோ இடர்ப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நம் நாட்டிலேயே போர் ஏற்பட்டு, அது தானும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்து நிகழ நேருமாயின், அதன் விளைவுகளாய இன்னல்கள் எவ்வாறு இருக்கும் என ஒரு சிறிது நினைத்துப் பார்ப்பினும், நெஞ்சம் துணுக் குறும் ! எனவே, இன்று நம் நாட்டின் பால் நமக்குள்ள பல வகைப் பொறுப்புக்களையும் கடமைகளையும் நன்கினிது உணர்ந்து செயலாற்றத் துணிவு கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்,

நாட்டுப்பற்று ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்பது யாவரும் உடன்படத் தக்கதோர் உண்மையுரை.

"தான்பிறந்த நாட்டின் கண் தனிச்சிறந்த பற்றில்லான்
ஏன் பிறந்தான் வீண்கொடியன் எனும் இழிவே எய்துகிற்பான்,"

"இஃது என்னுடைய நாடு! யான் பிறந்த இனிய நாடு ! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பெருமிதம் எய்தி மகிழாத மனிதன் ஒருவனும், உலகத்தில் உயிர்ப்பு விட்டுக் கொண்டு உளனோ? உளனாயின், அவன் ஓர் உணர்ச்சியற்ற நடைப்பிணமேயாவான். எவனுடைய நெஞ்சத்தில் நாட்டுப் பற்று ஒளிவீசித் திகழவில்லையோ, அத்தகைய கயவன் ஒருவன் மூச்சுவிட்டுக் கொண்டு நிலக்குப்பொறையாய் - உப் பிற்கும் காடிக்கும் கூற்றாய் இருப்பானாயின், அவனை நன்கு குறித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள், அவன் எத்துணை உயர்ந்த பட்டம் பதவி செல்வம் செல் வாக்கு எல்லாம் உடையவனாக இருப்பினும், அவனை ஒரு வரும் பொருட்படுத்தார். தன்னலம் ஒன்றேயுடைய அக் கொடியவன், தான் உயிரோடிருக்கும் போதே தனக்குரிய சிறப்பை இழந்து அவமதிப்புறுவான். இறக்க நேருங்கால், புகழுடல் பூதவுடல் என்ற இரண்டுமே இன்றி, புழுதியினின்று தோன்றிய அவன் அப்புழுதிக்கே திரும்பிச் சென்று புதைந்து மறைந்தொழிவான். அவனைக் குறித்து எவரும் ஒரு சிறிதும் இரக்கப்பட மாட்டார்கள். அவனை எல்லோரும் இகழ்ந்து வெறுத்து மறக்க முற்படுவர். எனவே, மனிதராகப் பிறக்கும் பேறு பெற்ற ஒவ்வொருவருக்கும் தேசபக்தி மிகமிக இன்றி யமையாதது. தேசபக்தியைப் போலவே தெய்வபக்தியும் - பெரிதும் இன்றியமையாத முதன்மை வாய்ந்தது *

* Breathes there the man, with soul so dead,
Who never to himself hath said,
This is my own, my native land!
Whose heart hath never within him burned,
As home his footsteps he had turned,
From wandering on a foreign strand!
If such there breathe, go, mark him well;
For him no Minstrel raptures swell;
High though his titles, proud his name,
Boundless his wealth as wish can claim;
Despite those titles, power, and pelf,
The wretch, concentered all in self,
Living, shall forfeit fair renown,
And, doubly dying, shall go down
To the vile dust, from whence he sprung.
Unwept, un honored, and unsung ".   - SCOTT.

இந் நெருக்கடியான நேரத்தில் நாம் எல்லோரும் தேச பக்தியிற் சிறந்தவர்களாகத் திகழ்தல் வேண்டும். சீனர்களை வெருட்டியடித்துத் துரத்த ஒல்லும் வகைகளால் எல்லாம் அரசாங்கத்திற்கு உதவி புரிய வேண்டுவது, நமக்குத் தலை யாய கடமை. தேசத்தின் பொருட்டு எல்லா வகையான தியாகங்களையும் செய்தற்கு நம்மை நாமே சமைவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். நமக்குள் கட்டுப்பாடும் ஒற்றுமை மையும் பொறுப்புணர்ச்சியும் இதுபோது மிகமிகத் தேவை. அரசாங்கத்தின் பணபலம் படைபலம் ஆகியவற்றைப் பெருக்க நாம் ஆந்தனையும் முயலக் கடமைப் பட்டுள்ளோம். நம் அன்றாடத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு சிக்கன வாழ்வு நடத்தத் தலைப்படுதல் நாட்டுக்கு நலம் விளைக்கும். நாட்டின் நெருக்கடி தீரும் வரையில் வெற்றார வாரங்களிலும் களியாட்டங்களிலும் நம்முடைய பொழுதும் பொருளும் ஆற்றலும் சிதறி வீணாகப் போய்விடாமல், நாம் விழிப்பாக இருத்தல் சிறப்பு.

நம் தாய் நாட்டின் பாதுகாப்புக்கும் வெற்றிக்கும் இன்றியமையாத உணவு உடை முதலிய பல்வேறு முக்கியப் பொருள்களின் உற்பத்திக்காக ஒவ்வொருவரும் தத்தம் துறைகளில் ஓயாது உழைக்கும் கடப்பாடு உடையர். யாரும் கோழைகளாக இல்லாமல் வீர உணர்ச்சியும் தேசாபிமானமும் மிக்கவர்களாக விளங்குதல் அவசியம். பொருள்களின் பற்றாக்குறை, பொருள்களின் விலையேற்றம், கள்ள வாணிபம் போன்ற சமுதாய விரோதமான செயல்கள் யாண்டும் நிகழாதவாறு விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்ளுதல், அனைவர்க்கும் உரிய பொறுப்பாகும். படைப்பயிற்சி, முத லுதவிப் பயிற்சி போன்ற பலதிறப் பயிற்சிகளைப் பெறப் பலரும் முற்படுதல் முதன்மையானது.....

இனி இவைகளேயன்றி, நம் நாடு விரைவில் பகைவர்களை வெற்றி பெற்று வீறுடன் விளங்குதல் குறித்துக் கடவுளை இடைவிடாது வழிபட்டுப் பிரார்த்தனை புரிந்து வருதலும், நமக்குரிய கடமைகளுள் ஒன்றாகும்.

இன்று மனித சமுதாயம் முழுவதற்கும் நேர்ந்துள்ள தீங்குகளுக்கெல்லாம் காரணம், பொதுவாகச் சமயவுணர்வும் கடவுள் வழிபாடும் குன்றி வருதலேயாகும். இன்று உலக நாடுகளெல்லாம்'சமயம் வேறு. அரசியல் வேறு. இரண்டிற் கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையில்தான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில தலைவர்களின் உள்ளச் சுழற்சிகளை (Whims and fancies) ஒட்டி. உலகத்தின் தலைவிதியே ஒரு கணப் பொழுதில் நிர்ணயிக்கப்பட்டு விடக்கூடிய பயங்கர நிலைமை ஏற்பட்டுள்ளது. சமய உணர்வும் கடவுள் நினைவும் இல்லாத காரணத்தால்தான் சீன அரக்கர்கள் வாயளவில் நம்மோடு 'பஞ்சசீலம்'' பற்றிப் பேசிக்கொண்டே, வஞ்சகம் பலவும் தயங்காதும் அஞ்சாதும் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். கடவுள் உணர்ச்சியுடையவர்கள் ஓரளவேனும் பழிபாவங்களுக்கு அஞ்சிக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பது திண்ணம்.

இக்கருத்துப் பற்றியே, ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு கிரேக்க நாட்டில் வாழ்ந்திருந்த " சாக்கிர டீசர்'' (கி. மு. 479 - 399) என்னும் பேரறிஞர்,'' அரசர்கள் மெய்யுணர் வாளர்கள் ஆதல் வேண்டும்; அல்லது மெய்யுணர்வாளர்கள் அரசாட்சியை நடாத்துதல் வேண்டும். மெய்யுணர்வு கைவந்தவர்கள் அரசோச்சும் நிலை ஏற்பட்டாலன்றி இவ்வுலகத்திற்கும் மனித சமுதாயத்திற்கும் உய்தியில்லை என வலியுறுத்தித் தெளிவுறக் கூறிச் சென்றார் †  

Until philosophers are kings, or the kings and princes of this world have the spirit and power of philosophy, and political greatness and wisdom meet in one, and those commoner natures who pursue either to the exclusion of the other are compelled to stand aside, cities will never have rest from their evils - no, nor the human race, as I believe - and then only will this our state have a possibility of life and behold the life of day” - SOCRATES, IN PLATO'S REPUBLIC.

காந்தியடிகள் சமயவுணர்வும் கடவுள் வழிபாடும் உடையவராக விளங்கியே, நம் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தார். தேசபக்தி தெய்வபக்தி என்னும் இரண்டும் அவருக்குப் பேச்சும் மூச்சுமாக இருந்தமையினை, யாவரும் இனிதுணர்வர். தெய்வபக்தி இல்லாத தேசபக்தி சிறப்புடையதன்று. தெய்வபக்தி இல்லாதவர்க்குத் தேசபக்தியும் இருத்தல் இயலாது என்று துணிந்து சொல்லலாம். இதனை,

"ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கன் பில்லார்
எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார்
பேசுவதென் அறிவில்லாப் பிணங்களை நாம் இணங்கிற்
பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ''

என அருள் நந்தி சிவம் ஓராற்றாற் குறிப்பிட்டு அருளிச் செய்திருத்தல் காணலாம்.

தெருளாதான் மெய்ப்பொருள்கண் டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்"

என ஆசிரியர் திருவள்ளுவர் பெருமானும், இக்கருத்தினையே வலியுறுத்தியிருத்தல் கருதி யுணர்தற்குரியது. 'அரன்றன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம் வீண் செயல் என்றதும்" உணர்க.

இவ்வுண்மைகளை யெல்லாம் உணர்ந்து, சமயவுணர்வும் கடவுள் நினைவும் உடையவர்களாக நாம் வாழத் தலைப்படுதல் நலம் பயக்கும். இப்போது ஏற்பட்டுள்ள சீனப்போரில் வெற்றி பெறுவதற்கு மட்டுமேயன்றி, எப்போதுமே - மனித சமுதாயத்திற்கே - உண்மைச் சமயவுணர்வும் கடவுள் வழி பாடும் பெருநலம் விளைக்கும் என்பது திண்ணம்.

'பிரார்த்தனையும் ஜெபமும் கடவுள் பக்தியும் நம்மைக் கோழைகளாக்கி விடும். இவையெல்லாம் பயனற்ற வீண் செயல்கள் எனக் கூறுவோரும் கருதுவோரும் மிகப்பலர் இந்நாளில் உளர். அது தவறு. உண்மைச் சமயவுணர்வும் கடவுள் நினைவும் மனிதனை ஒருபோதும் கோழையாக்க மாட்டா. மற்று அதற்கு மாறாக, அவைகள் ஒரு கோழையையுங் கூட ஒப்புயர்வற்ற வீரனாக்கும்.

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார்
ஈர அன்பினர் யாதும் குறைவிலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ

தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி, நினறழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனிவே றடியேனென்று
ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப்பதிகம் அருள் செய்தார்

எனச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்திருத்தல், ஈண்டுச் சிந்தித்து உணர்தற்குரியது அடியார்களின் சிறந்த பண்பு களையெல்லாம்'' வீரம்'என்றும், அடியார்களை'நின் வீரத்தார்” என்றும் அவர் வியந்து பாராட்டி மொழிந்திருத்தல், நம்மனோர் நினைவில் இருத்தத் தக்கது.

பெரிய புராணத்தின்கட் போதரும் கலிப்பகையார் கோட் புலியார் எறிபத்தர் ஏனாதி நாதர் விறன்மிண்டர் சிறுத்தொண்டர் நின்றசீர் நெடுமாறர் முதலியவர்கள் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்திருந்தமை இவ்வுண்மையை வலியுறுத்தும். இராசராச சோழன், இராசேந்திர சோழன். குலோத்துங்க சோழன் முதலிய தமிழ்வேந்தர்கள் சமயவுணர்விற்றலை சிறந்து விளங்கி, ஒப்புயர்வற்ற போர்த்திறனும் ஆட்சித்திறனும் மிக்க பெருவீரர்களாகப் பிறங்கினர் அல்லரோ?

"பக்தியினாலே - இந்தப்
பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளீர் !
சித்தம் தெளியும் - இங்குச்
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்.
வித்தைகள் சேரும் - நல்ல
வீரர் உறவு கிடைக்கும். மனத்திடைத்
தத்துவம் உண்டாம் - நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்...

கல்வி வளரும் - பல
காரியம் கையுறும். வீரியம் ஓங்கிடும்.
அல்லல் ஒழியும் - நல்ல
ஆண்மை யுண்டாம். அறிவு தெளிந்திடும்.
சொல்லுவ தெல்லாம். - மறைச்
சொல்லினைப் போலப் பயனுளதாகும். மெய்
வல்லமை தோன்றும் - தெய்வ
வாழ்க்கை யுற்றே இங்கு வாழ்ந்திடலாம்...”

எனப் பாரதியார் அவர்கள் பக்தியினால் விளையும் பண்பு நலங்களையும் பயன்களையும் குறித்து விளக்கிப் பாடியிருத்தல், அனைவரும் அறிந்தின் புறற் பாலது.

நாம் தெய்வபக்தியிற் சிறந்து விளங்கி, நம் தேசப் பாது காப்புக்கும் வெற்றிக்கும் உரிய முறைகளிலெல்லாம் திறம்படச் செயலாற்றக் கடமையும் பொறுப்பும் உணர்ந்து முற்படுவோமாக ! வாழிய பாரத மணித்திரு நாடு!
ந. ரா. முருகவேள்.

சித்தாந்தம் – 1962 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment