Saturday, May 9, 2020



கடவுள் மாமுனிவர்
மு. அருணாசலம்

மாணிக்கவாசகருடைய வரலாறு தமிழில் பல நூல் பலமாகளில் சொல்லப் பெற்றுள்ளது. 11 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்று அறிஞர் கருதுகின்ற கல்லாடத்துள், மதுரை சோமசுந்தரக் கடவுளுடைய திரு விளையாடற் சரித்திரப் பகுதிகள் உள்ளன. இவற்றுள் மாணிக்கவாசகர் சரித்திரத்தில் சில பகுதிகளும் உள் ளன. 13 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ அதற்கு முன்னோ வாழ்ந்த செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல், 64 திருவிளையாடல் களைக் கூறுகிறது. இவற்றுள் ஞானோபதேசம் செய்தது, நரி குதிரையானது, குதிரை நரியானது, மண் சுமந்தது. ஆகியவை மாணிக்கவாசகர் சரித்திரம் கூறுவன. இனி 18 - ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் பாடிய திரு விளையாடற்புராணம் என்பது இன்று மிகவும் பிரசித்தமாக உள்ளது. இதனுள் முற்கூறியவாறே நான்கு படலங்கள் மாணிக்கவாசகருடைய சரித்திரத்தைக் கூறுவன. இவையன்றி, தல புராணங்களாகிய பெருந்துறைப் புராணமும், உத்தரகோச மங்கைப் புராணமும், சுந்தர பாண்டியமும், கடம்பவன புராணமும் மாணிக்கவாசகர் வரலாறு கூறுகின்றன.

இனி, மாணிக்கவாசகருடைய வரலாற்றை மட்டும் விவரித்துக் கூறும் புராணம் திருவாதவூரர் புராணம் என்பது. மூலமும் உரையுமாகப் பல பதிப்புக்கள் வெளியாகியுள்ளன. காப்புடன் 545 செய்யுட்களுடையது. கடவுள் வாழ்த்து, மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் என்பன இப்புராணத்தில் அடங்கிய பகுதிகள். இப்புராணம் கடவுள் மாமுனிவர் என்பவர் பாடியது. இவரைப்பற்றி எந்த வரலாறும் தெரிந்திலது. எவ்விதத் தனிப் பாடலும் இவரைக் கூறவில்லை. இவர் காலத்தை அறிவதற்கு எவ்வாதாரமும் இல்லை,

கடவுள் மாமுனிவர் காலம் பிற புராண காலம் அனைத்துக்கும் முன் என்று சிலர் சொல்வர். அது பொருந்தாது என்பது பின்னே விளங்கும். ஆனால் இவர் பாடிய புராணம் மாணிக்கவாசக சரித்திரத்தைத் தனியே விரித்துக் கூறுவது. சுந்தரமூர்த்தி தம் திருத் தொண்டத் தொகையுள் குறிப்பிட்ட சிவனடியார்களின் வரலாறுகளை மட்டும் விளக்குவதற்காகச் சேக்கிழார் திருத் தொண்டர் புராணம் பாடினார். சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகரைக் குறிப்பிடாமையால், சேக்கிழாரும் தம் நூலுள் மாணிக்க வாசகருடைய வரலாற்றைப் பாடினார் இலர். எனவே பின்வந்த பெரியாராகிய கடவுள் மாமுனிவர் மாணிக்கவாசகருடைய வரலாற்றை மட்டும் தனியாகப் பாடியுள்ளார் என நாம் கருதுவோம்.

சிவயோகி ஒருவர் பொதிகைமலை செல்லவழிக்கொண்ட போது காவேரிக்கரையை அடைந்தார் என்று கூறு மிடத்து, "பரமேசுவரனுக்குக் கடல் ஆலகால விடம் அளித்தமையால், காவிரியாறு கடல் வயிற்றை நிறைக் காமல், தன் நீரினால் நாட்டில் வளம் நிறைத்தது'' என்று காவேரியைச் சிறப்பித்துச் சேக்கிழார் திருமூலர் புராணத்தில் பாடுகிறார்:

தடநிலைமா ளிகைப்புலியூர் தன்னிலுறைந் திறைஞ்சிப்போய்
அடல்விடையின் மேல் வருவார் அமுதுசெய அஞ்சாதே
விடம் அளித்த தெனக்கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல்வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்'

இக்கருத்தைக் கடவுள் மாமுனிவர் மந்திரச் சுருக்கம் முதல் பாட்டில் அப்படியே வைகைக்கு ஏற்றிப் பாடி யிருப்பது இங்கு அறியத்தக்கது!

முக்கணொடு நான்குபுய ஐந்துமுக முன்னோன்
சொக்கனருள் நன்மைபெரு தொன்மைதிகழ் நன்னாடு
அக்கடு விடத்தை அர னுக்கருள்வ தென்றே
மைக்கடலில் வைகலொழி வைகைவள நாடு,

வைகைக்கு ஏற்றிய இக்கருத்து, பின்னர் ஒரு தனிப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது :
நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த பாவி என்று
வாரியிடம் போகாத வையைதான் - தேரின்
இடத்தும் வலத்தும் இருபுறமும் பாய்ந்து
நடத்துமாம் தண்பாண்டி நாடு,

நம் முனிவர் நூல்வரலாறு கூறும்பொழுது,

"அகத்தியர் கூறிய சிவபிரானது 64 திருவிளையாடல்களுள் சில கூறுகிறேன்'' என்கிறார்.

தென்பொதிய மாமுனி சிறக்க அருள் எண்ணெண்
இன்பவிளை யாடலதெ னுங்கடலுள் நாயேன்
மின்பயிலும் மாமதுரை மேவுதமிழ் மாறன்
துன்பமற நல்குகதை சொல்லலுறு கின்றேன்,

இதனால் 64 திருவிளையாடல் என்ற வழக்கு ஏற்பட்ட பின் இவர் புராணம் பாடினார் என்பது தெளிவு. திருவிளை யாடல்களை முதலில் விரித்துக்கூறும் நூல் நம்பி பாடிய பழைய திருவிளையாடல். எனவே கடவுள் மாமுனிவர் புராணம் பழைய திருவிளையாடலுக்குப் பிற்பட்டது என்பது தெளிவு..

திருவாதவூரர் புராணம் எக்காலத்தில் தோன்றியதாயினும், அது தோன்றிய நாள் தொடங்கிச் சைவப்பெரு மக்களானும், தமிழ் மக்களாலும் சிறப்பாக விரும்பிப் பயிலப் பெற்ற நூலாகும். யாழ்ப்பாணத்துச் சைவ மக்கள் தில்லை நடராஜப் பெருமானிடத்தும், மாணிக்கவாசகப் பெருமானிடத்தும் ஈடுபாடு மிக்கவர்கள். ஆதலால், இந்நூலினிடத்தும் மிகவும் ஈடுபட்டுள்ளார்கள். இப்புராணத்திற்குச் சிவபுராணம் என்றும் அங்குப் பெயர் வழங்கும். இது சிறந்த செம்பாகமான நடை உடையதாய், பக்திச் சுவையொன்றே நிரம்பியதாய், சிருங்கார வருணனைகள் இல்லாததாய், சிவச்சின்னங்களின் பெருமைகளையும் திருவைந்தெழுத்தின் மகிமையையும், சித்தியார் போன்ற சைவ சித்தாந்த சாத்திரங்களில் காணும் நுண் பொருள்களையும் ஆங்காங்கே விரிப்பதோடு, அவற்றின் சொற்கனை எடுத்தாளுவதாயும் அமைந்துள்ளது. சிவபக்தி யூட்டும் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதி 1929 ல் வெளியிட்ட முன்னீர்ப்பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, கடவுள் மாமுனிவர் கச்சியப்ப முனிவருக்குச் சமகாலத்தவர்என்றும், அவர் தூண்டுதலால் திருவாதவூரர் புராணம் பாடினார் என்றும் எழுதினார். இவர் கூற்றுக்கு ஆதாரம் இல்லை. இவர் ஆங்கில நூல் எழுதிய காலத்து, தமிழ் இலக்கிய சரித்திரமே விளக்கம் பெறாமலிருந்தது. தாம் அறிந்தவற்றையும், கேட்டவற்றையும், ஆராய்ந்தவற்றையும், பரம்பரைக் கதைகளையும் ஒருங்கு சேர்த்து அவர் தம் வரலாறு எழுதினார். அவருடைய அக்கால முயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது. ஆனால் அவர் புத்தகத்துள் பிழைப்பட்ட செய்திகள் மிகப் பலவுள்ளன. இதுவுமொரு பிழைபட்ட செய்தி.

அவர் கூற்றை ஆதாரமாக வைத்துத்தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா. சுப்பிரமணிய பிள்ளை 'கடவுள் மாமுனிவர் சிவஞான முனிவரது முதன் மாணாக்கராகிய கச்சியப்பரின் நண்பர். தமது உடலிற் கண்ட பிணி நீங்கும் வண்ணம் கச்சியப்பரால் திருவாதவூரடிகள் புராணம் பாட ஊக்கப்பட்டவர். இவர் தேசிகரோ தம்பிரானோ தெரியவில்லை " என்று எழுதுகிறார். இக்கூற்று பொருந்துவதன்று, இதற்கு ஆதாரம் வாய் மொழியாக வழங்கும் வரலாறு'' என்று இவர் கூறுவதை அறிந்தார் அரியர். வேறு ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. இக்கதை ஆராய்ச்சிக்குப் பொருந்தாது.

இனி, கடவுள் மாமுனிவர் தம்முடைய புராணத்தில் சித்தாந்த சாத்திரக் கருத்துக்களையும் தொடர்களையும் அப்படி அப்படியே எடுத்துப் பெய்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கு நாம் குறிப்பிடலாம். மாணிக்க வாசகர் நிலையை ஆசிரியர்,

''உண்மைதரும் உணர்வு என்னும் நாலாஞ்சத்திநி பாதம் எய்திப்
பரமஅஞ் செழுத்தும் ஒன்றாம் பராபரம் உணர்த்தும் ஞான
குருபரன் திருத்தாள் சென்று கூடுதல் வேண்டும்''

என்று உரைக்கிறார். (பாட்டு 30)  "நாலாஞ் சத்திநிபாதம் எய்தும் தன்மையர் ஆதலாலே" என்று மற்றோர் இட்டத்தில் (பாட்டு 85) கூறுகிறார். சத்திநிபாதம் நாலுவகை என்பது தமிழில் சித்தாந்த சாத்திரங்கள் தோற்றுவித்த கருத்து. 'நாடிய சத்திநிபாதம் நாலுபாதம்'' என்பது சிவப்பிரகாசம் 49 ஆம் செய்யுள்.

முன்னைவினைப் பெருங்காடு மூடுறஐம் புலவேடர்
துன்னியலைத் திடர்செய்யுந் துன்பவழிச் செல்லாமல்

என்பது புராணம் 70 ஆம் செய்யுள். இது பின்வரும் சிவஞான சித்தியார் பாடலை (253) எடுத்தமைத்தது என்பது வெளிப்படை:

துன்னிய ஐம்புலவேடர் சுழலிற் பட்டுத்
துணைவனையும் அறியாது துயருறும் தொல்லுயிரை

சித்தியார் 265 ஆம் பாடல் மிகச்சிறந்த கருத்தொன்றைத் தெரிவிக்கிறது.'' இதுவே சமயம், இதுவே பொருள், இதுவே நூல் என்று கூறும் பிணக்குடையவை சமயங்க ளல்ல, இப்பிணக்கின்றி நின்றதே சமயம்'' என்று அது கூறுகிறது. இக்கருத்தைப் புராணமானது,“ இது நூல் மற்றல்லது நூல் இல்லை எனும், அறுசமய வித நூல்'' என்று தழுவியுரைக்கிறது.

சாத்திரக் கருத்தாகிய மந்திரங்கள், பதங்கள், வண்ணங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள் என்னும் ஆறு அத்துவாக்களும் 103 ஆம் பாடலில் கூறப் பட்டுள்ளன. மாணிக்கவாசகர் ஊமைப் பெண்னைப் பேச வைத்துப் புத்தரை வென்றார் என்ற செய்தி கூறுமிடத்து, புராணத்தில் காணும் "ஆவது பொன்றக் கேடாய் அழிவது முத்தியென்றான்'' (464) என்ற வரியானது சித்தியார் பர பக்கத்தில் 94 ஆம் பாடலில் வரும் "ஆங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தியின்பம்'' என்ற வரியை எடுத்து அமைத்தது. இப்படியே புத்தரை வாதில் வென்ற செய்தி முழுவதும் சித்தியார் கருத்தின் தழுவலேயாகும்.  ''அஞ்செழுத்தே - ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம், மோனந்தமா முத்தியும்'' என்ற சித்தாந்த சாத்திர உண்மை விளக்கக் கருத்து "தத்துவ முடிவிலாடும் தாண்டவம்'' என்று (414) புரா ணத்தில் பயில்கிறது.

மேலும், மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் குருந்தமரத்தின் கீழ்ப்பரம்பொருளின் குருவடிவைக்கண்ட பொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியைப் புராணகாரர் கூறுவது இங்குக் கருதத்தக்கது. மந்திரியாகச் சென்ற மாணிக்க வாசகர் குருந்த மரத்தின் கீழ்க் கண்ட குருமூர்த்தியின் “செங்கைமீது பொருத்தமுறு புத்தகம் ஏது ஐயா'' என்ன அவர் ''பொய்மையிலாச் சிவஞான போதம்" என்றார். அதன்மேல் இவர் சிவம், ஞானம், போதம் என்பவற்றை விளக்கியுரைக்குமாறு கேட்க, குருமூர்த்தி விரித்து விளக்குகிறார்.

என்றலுமே சிவமேது ஞானமேது இங்கு
இலங்கியிடும் போதமேது இயம்பு வீரேல்
அன்றுவட நிழலில் வந்திருந்தார் நீரே
அடியேனும் உமக்கடிமை யாவேன் என்ன
நின்ற சிவம் ஒன்றதனைத் தேர்தல் ஞானம்
நிகழ்போதம் தேர்ந்ததனைத் தெளிதலாம் என்று
ஒன்றிய நற் பொருள்வினவி நிற்பார் சிந்தை
உருகும்வகை உரைசெய்தார் உவமை யில்லார்.

இச்செய்தி சிவஞான போதத்தையே பெயர் சுட்டி உரைக்கிறது. மேற்கூறியவற்றால் திருவாதவூரர் புராணம் செய்த கடவுள் மாமுனிவர் சிவஞான போதம், சித்தியார், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் என்ற சாத்திரங்கட்குப் பின் வாழ்ந்தவர் என்று முடிவு செய்தல் பொருந்துவதாகும். சிவப்பிரகாசம் செய்த உமாபதியார் காலம் கி. பி. 1300 - 1325. இக்காலம் கடவுள் மாமுனிவர் காலத்துக்கு மேல் எல்லையாக அமைகிறது.

இனி, குமர குருபரர் பாடலில் உள்ள ஒரு குறிப்பு இங்குக் கருதத்தக்கது. அவர் பாடிய சிதம்பர மும்மணிக் கோவை 23 -ஆம் பாடல், மாணிக்கவாசகர் தாம் பாடிய திருக்கோவையாருக்குப் (காமஞ்சான்ற ஞானப் பனுவல்) பொருள் அம்பலவாணரே என்று சுட்டினார் எனக் கூறுகிறது.

கடங்கலுழ் கலுழிக் களி நல் யானை
மடங்கலந் துப்பின் மானவேல் வழுதிக்கு
இருநிலம் அகழ்ந்தும் எண்ணில்பல் காலம்
ஒருவன் காணாது ஒளித்திருந் தோயை
வனசப் புத்தேள் மணிநாப் பந்திக்்
கவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்
பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்
ஐந்திணை யுறுப்பின் நாற்பொருள் பயக்கும்
காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்
பொருளெனச் சுட்டிய ஒருபெருஞ் செல்வ.

மதம் கலங்கி ஒழுகுகின்ற வெள்ளத்தை உடைய களிப்புமிக்க நல்ல யானையையும், சிங்கம் போன்ற வலிமை யையும், பெருமைமிக்க வேலையும் உடைய பாண்டியனுக்குத் திருமால் எண்ணில்லாத பல காலம் வலிமிக்க நிலத்தைத் தோண்டியும் காண முடியாமல் ஒளித்திருந்த உன்னை, பிரமதேவனுடைய நாவாகிய அழகிய பந்தியலுள்ள தாவுகின்ற கதியை உடைய வேதக் குதிரைக்குக் காட்டிக் கொடுத்த (அதாவது, வேதமாகிய பரியின் மீது குதிரைச் சேவகனாக எழுந்தருளி வரச் செய்த) பைந்தமிழ் பாடிய செந்நாப் புலவனாகிய மாணிக்கவாசகன் செய்த அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாறபொருளும் தரவல்ல, ஐந்திணைக் கோவையாகிய காமச் சுவை மிக்க திருக்கோவையாருக்குப் பொருள் இவனே என்று சுட்டப் பட்ட ஒப்பற்ற பெருஞ் செல்வனே'' என்பது இதன் பொருள்,

தில்லையம்பலவன் ஒரு வேதியர் வடிவம் கொண்டு மாணிக்கவாசகர் முன்னே தோன்றி, 'ஐயா யாம் பாண்டி நாட்டில் இருந்து இங்கு வந்தோம். உம்முடைய பெருமையை அந்நாட்டினர் அறிந்து மகிழ்ந்தார். சிவபிரானை அன்பினாலே நீர் பாடிய பாடலைக் கற்றுப் பாட எண்ணி இங்கு வந்தோம். அப்பாடல்களை நீர் இப்போது சொல்லும். நாம் ஏட்டில் எழுதிக் கொள்கிறோம்'' என்றான், அவ்வாறே மாணக்கவாசகர் சொன்ன பின்னர், வந்த வேதியர், தையல் பங்கினர் தம்மைக் கோவை பாடுதல் வேண்டும்" என்றார். மாணிக்க வாசகா அங்கனமே பாடினார். வேதியரும், திருவாசகமும் அகப் பொருட் கோவை நாநூ றும் எழுதி, முடித்த இடத்து "உயர்வாதவூரன் மொழிதரித்து எழுதும் அம்பலவன் எழுத்து" என்று கையெழுத்திட்டு மறைந்தார். பின்னர் அன்புடையார், 'தில்லையில் எம் பெருமானைச் செப்பிய இத்தமிழ் மாலை நல்ல அரும் பொருள் கூற வேண்டும்'' என நவின்றார்கள். மாணிக்கவாசகர் அவர்களோடு பொன்னம்பலத்திற்குச் சென்று "இத்தமிழ் மாலைப் பொருள் இவரே' என்று உரை செய்து, அவர்கள் காணமன்றினுள் சென்று மறைந்தார். இது வாதவூரர் அடிகள் முத்திபெற்ற வரலாறு. இங்கு தமிழ் மாலையாகிய திருவாசகம், திருக்கோவை என்பவற்றின் பொருள் அம்பலவாணர் என்ற கருத்து கருதுதற்குரியது. பொதுவாக திருவாசககத்தின் பொருள் நடராஜப் பெருமானே என்று தான் வரலாறு வழங்குகின்றது.

ஆனால் குமரகுருபரர் தம்பாட்டில் குறிப்பிட்ட "காமம் சான்ற ஞானப்பனுவல் என்பது திருவாசகமன்று. திருக்கோவையார். இதன் பொருள் அம்பலவாணர் என்று மாணிக்கவாசகர் சுட்டியதாகக் குமரகுருபரர் கூறுகிறார். ஆகவே இவர் திருவாதவூரர் புராண இறுதிப் பகுதியைத் தம் கூற்றுக்கு ஆதாரமாகக் கொண்டார் என்று சொல் வது பொருந்தும்.

பழைய திருவிளையாடற் புராணக் கதைப் போக்கே வேறுவகை. மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ந்த பிறகு, வாதவூரர் ஆலயத்துள் சென்று ''என்னை ஆளுதற்கு நாதா! இனப் பரியிட்டதன்றி, மன்னிய முடிவருந்த மண் சுமந்த கடலே, அந்தோ, வன்ன மாமேனி நோவ அடியு முண்டனையே!” என்று பாடினார். “சித்திரக் கோவை பாடித் தில்லையம்பலத்துவா'' என்று அத்தன் வானத் துரைத்தான். "ஆனால் இக்கதைக்கு நாட்டில் வழக்காறு இல்லை. எனவே குமரகுருபரர் கடவுள் மாமுனிவர் கூறும் வரலாற்று முறையையே கொண்டிருக்கிறார். ஆதலால், கடவுள் மாமுனிவர் குமரகுருபரருக்குக் காலத்தால் முந்தியவர் என்று கொள்வதே முறை. குமரகுருபரர் காலம் 17 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதி.

இதுகாறும் காட்டியவற்றால், கடவுள் மாமுனிவர் 1325 - க்குப் பிறகும் 1650 க்கு முன்னும் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது. இக்கால எல்லைக்குள் அவர் 15 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்கள் கிடைக்கின்றன.

முதலாவது, அக்காலத்துப் புலமை நிலை; எண்ணற்ற ஓசையின் பேதங்கள் கொண்ட விசித்திரமான சந்தங்களால் தமது தெய்வத் திருப்புகழைப் பாடி அன்று முதல் தமிழ் நாட்டில் சொற்சித்திரமும் தாளமும் கொண்ட பக்திப் பாசுர வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமாறு செய்த அருணகிரி நாதர் இக்காலத்தே வாழ்ந்தார். அவர் பாடிய நூல்களில் "கந்தரலங்காரம்" ஒன்றே சந்தமும் சித்திர மும் இல்லாதது. மற்றவை யாவும் சந்தக் கவிகள் அல்லது சித்திரக் கவிகள். வைணவ மரபில் பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் இக்காலத்தே வாழ்ந்தார். அவர் நூல் முழுமையும் சந்தத்தினால் புகழ் பெற்றது. திருவாதவூரர் புராணமும் சந்தத்தினால் சிறப்புடையது. அவர் பாடியுள்ள அளவு சந்தப் பாடல்களைப் புராணங்களில் அமைத்து யாரும் பாடியதில்லை. அவர் பாடிய முதல் பாட்டே சந்தத்துடன் தொடங்குகிறது. கடவுள் வாழ்த்து முழுமையும் சந்தப்பாடல். அவர் பாடும் சந்தங்களும் எளியனவாய்ச் செம்பாகமாய்ச் சொல்லையோ சீரையோ சிதைக்காதனவாய் அமைந்துள்ளன. ஆதலால் சிறந்த பக்திமானான அவர் இந்தச் சந்தக் கவிஞர் சூழலில் வாழ்ந்தார் என்று கூறுவது பொருத்தமாகும். அவரும் பக்திக் காவியம் பாடினார். சந்தக் காவியம் பாடினார். எனவே அருணகிரி நாதரோடு தொடர்புடையவர் என்று கூறுவதும் பிழையாகாது.

தமிழிலக்கிய சரித்திரத்தை ஆராய்ந்தால் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகையான நூற்போக்கு மேலோங்கி இருந்தமை தெளிவாகும். இலக்கண நூல்கள் அதிகம் செய்யப்பெற்றது ஒரு காலம். உரைகள் செய்யப்பெற்றது மற்றொரு காலம். யமகந்திரிபுகள் அதிகம் இடம் பெற்றது 17 - 18 ஆம் நூற்றாண்டுகள். இவை போல, சந்தப்பாடல் இடம் பெற்றது 15 ஆம் நூற்றாண்டு. ஆதலால் சந்தப் பாடல்கள் அதிகம் கொண்ட திருவாதவூரர் புராணம் பாடிய கடவுள் மாமுனிவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கருதுவது பிறவகையால் செய்யும் முடிவுக்கு ஆதரவாகவுள்ளது.

இரண்டாவதாக, திருவாதவூரர் புராணத்தில் பயிலும் சில சொற்கள் தமிழ் நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் முகம்மதியர் ஆதிக்கம் ஏற்பட்டு அது காரணமாக அவர்களுக்குரிய பல சொற்கள் தமிழ்மொழியிலும் ஏறி இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. சபாஷ், சலாம், ராவுத்தன் முதலான சொற்களை அருணகிரியாரிடம் காணலாம். தொப்பி என்ற சொல்லை நம் முனிவர் எடுத் தாளுகிறார். சோமசுந்தரப் பெருமான் குதிரைச் சேவகனாக வந்த போது தொப்பி அணிந்து வந்தார் என்கிறார்.

ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்க முளராகிச்
செப்பரு நலங்குலவு செண்டொருகை கொண்டே
இப்படியில் இப்படிவம் யாவருளர் என்ன.

இவருக்கு முந்தி தொப்பி என்ற சொல் இலக்கிய ஆட்சி பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

மோகரித்தல் என்பது இது போன்ற மற்றொரு சொல். மோகரம் ஆரவாரம்; மோரித்தல் ஆரவாரித்தல்; இச்சொல்லை நம் புராணகாரர் உபயோகிக்கிறார். மண் சுமந்த கூலியாளாக வந்த பெருமான் மீதுபட்ட பிரம்படி தம்மீதும் பட்டது என்று உலகத்தோர் செய்த ஆரவாரம் கடல் முழக்கம் போன்றது என்று கூறுகிறார்.

எந்தஉலகங்களிலும் இருந்துளோர்கள்
எம்முடலில் அடியுறைத்த தென்று கூற
முந்தி எழும் பன்மொழிகள் உகாந்த எல்லை
மோகரிக்கும் எழுகடலின் முழக்கம் போன்ற.

மோரித்தல் என்ற சொல்லின் ஆட்சி, நாம் கருதுகின்ற காலப்பகுதியில் தோன்றி யிருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட இப்புலவர் சூழலில் தோன்றி யிருக்கிறது என்றால் பிழையாகாது.

இனி மூன்றாவதாக, முற்கூறிய சாத்திரங்களில் கண்ட சொல் ஆட்சி, உமாபதி சிவத்தினின்று ஒரு புதிய சமயப் பிரவாகம் இருநூறு ஆண்டுகள் வரை பெருகியுள்ளது - 14 - 15 ஆம் நூற்றாண்டுகளில். பின்னர் இது மீண்டும் தலையெடுப்பது 17 - ஆம் நூற்றாண்டில்தான். இப்பிரவாகம் எழுந்தபோது உமாபதியாரின் சீடர் வழிகளில் பல்வேறு பிரிவுகள் எழுந்து அவற்றுள் எண்ணற்ற துறவிகள் தோன்றினார்கள். அனைவரும் துறவு நிலை பூண்டு காவி உடை அணிந்தமையால் தம்பிரான் என்றும் முனிவர் என்றும் பெயர் பெற்றனர். அவர்களுள் நம் முனிவரும் ஒருவர். இவர் சமய சாத்திரங்களின் தொடர்களையும் கருத்துக்களையும் தம் நூலில் நிரம்பப் பெய்திருப்பதானது இவர் சந்தான ஆசாரியருக்குப் பின், நெருங்கிய காலத்திலேயே, வாழ்ந்திருந்தார் என்று கருத இடங் கொடுக்கிறது. எனவே இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என முற்கூறியது இதனால் உறுதி பெறுகிறது.

சமயத் துறையில் சைவ சித்தாந்தம் தனிப்பெரும் பிரிவாக உருவெடுத்து மூல நூல்கள் தோன்றி, கிளர்ச்சியும் நூல் ஆக்கமும் உரைவிளக்கமும் ஆசாரிய பரம்பரைகளும் ஏற்பட்ட காலம் 13 - 16 நூற்றாண்டுகள். இப்பகுதிக்குரியவர் நம் முனிவர் என்று கொள்வது எல்லாவிதத்திலும் பொருத்தமுடையதே.

இதுகாறும் கூறியவாற்றால், திருவாதவூரர்புராணம் செய்த கடவுள் மாமுனிவர் சந்தான ஆசாரியர் பரம்பரையில் வந்த முனிவருள் ஒருவர் என்பதும் இவர் 15 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் புகழ் பெற்றிருந்த அருணகிரிநாதர் முதலிய புலவரோடு சமகாலத்தில் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகும்.

கடவுள் மாமுனிவர் வரலாறு குறித்து யாதும் தெரிய வில்லை. மேலே விளக்கியவாறு, இவர் சந்தானாசாரியரை அடுத்து அதே பரம்பரையில் வந்த ஒரு துறவியாதல் வேண்டும். முனிவர் என்ற பெயர் இதை உணர்த்துகிறது. திருவாதவூரர் புராணத்தை அவர் அகத்துறை வருணனை எதுவும் பொருந்தாமல் பாடியிருத்தல், அவர்துறவி என்பதை வலியுறுத்தி வாதவூரரிடத்து அவருக்குள்ள மெய்யன்பையும் புலப்படுத்துகிறது. சைவமலர்ச்சி புதிய உயிரோடு உலவிய காலமாகிய 15 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், நாயன்மாருக்கும் சேக்கிழாருக்கும் புராண மேற்பட்டிருக்க. மாணிக்கவாசகருக்குப் புராணமில்லாத குறையை நீக்கவும், இவருடைய வரலாற்றைச் சைவ அன்பர்கள் நன்குணரவும் இவ்வரலாறு - பாடினாரென நாம் கருதலாம், சாத்திரக் கருத்துக்களின் கருவூலமாய், திருவாசகத்தின் பக்திப் பிரவாகத்துக்கு ஏற்ற பக்திச் சுவை நிரம்பித் ததும்புவதாய், இவர் நூல் பாடி யிருக்கிறார். இதுவும் இவர் சந்தானாசாரியர் பரம்பரையில் வந்த ஒரு பக்திமான் என்ற கருத்துக்கு அரண் செய்கிறது. மாமுனிவர் என்பது இவர் பெருமையை விளக்கப் பிற்காலத்தவர் கொடுத்த அடைகள் போலும். இவரது இயற்பெயர் கூடப் புலப்படவில்லை; கடவுள் என்பது இயற்பெயராக வியலாது. இவரைக் குறித்து வேறு எவ்விவரமும் அறிய இயலவில்லை.

சித்தாந்தம் – 1964 ௵ - அக்டோபர் ௴


No comments:

Post a Comment