Saturday, May 9, 2020



கடவுளைக் காட்டும் கண்ணாடி

[மயிலைகிழார் இளமுருகனார்]

கண்ணாடி பயன்மிக்குடைய பொருள்களுள் ஒன்று. நமது கண் எல்லாப் பொருள்களையும் பார்க்கும். தன்னையே பார்ப்பதற்கு ஒரு கண்ணாடியின் உதவி தேவை. சில பொருள்களை நேரே பார்க்க முடியாது, கண்ணாடி மூலம் பார்க்கலாம். சூரியனை நேரே பார்க்கக் கண் கூசும். ஒரு புகைக் கண்ணாடியின் மூலம் சூரிய கிரகணத்தன்று அனைவரும் பார்ப்பது நமக்குத் தெரியும். கண்ணுக்குப் புலப்படாத ஆழத்திலுள்ள பொருள்களைச் சில கண்ணாடிகள் மூலம் (Series of Reflecting mirrors) பார்க்கலாம். விண்மீன்களைத் தொலை நோக்காடி (Telescope) மூலமாகவும், அவற்றிலுள்ள பிருதிவி வாயுப் பொருள்களை நிறநோக்காடி (Spectroscope) மூலமாகவும் பார்க்கலாம். கிருமிகளைப் பெருநோக்காடி (Microscope) மூலமாகவும், நமது உடம்பிலுள்ள என்பு முதலிய கூறுகளை உண்ணோக்காடி (X - raytube) மூலமாகவும் பார்க்கிறோம். வேறு பற்பல வகையான ஆடி வகைகளுமுண்டு. இவைகளெல்லாம் அசுத்தமாயா புவனத்திலுள்ள பொருள்களைக் காணப் பயன் தருவன. கடவுளைக் காண்பதற்கு இவை உதவி செய்யமாட்டா.

உலக முறையை ஒட்டிக் கடவுள் வழிபாட்டில் உபசாரத்துக்குக் கண்ணாடி காட்டப்படுகிறது. சோடசோபசாரதீபாராதனையில் பூர்ண கடதீபம் கற்பூரம் முடிந்தவுடன்அஷ்டமங்கலம் சமர்ப்பித்தல் உண்டு. அவற்றுள் ஒன்றுகண்ணாடி காட்டுதல். பள்ளியறையில் கண்ணாடி வைப்பதுண்டு. பெரிய பிராகாரங்களில் எழுந்தருளும் மூர்த்திகளைத் தரிசிக்க நிலைக்கண்ணாடிகள் வைப்பதுண்டு. திருச்செந்தூரில் ஆறுமுக நாயனார் புறப்பாட்டில் அக்நி மூலையிலுள்ள கண்ணாடியில் தரிசனம் செய்ய நூற்றுக்கணக்கானஅடியார்கள் இடித்து நெருக்கிக் கூடுவதுண்டு. இத்தகையகண்ணாடிகளில் திருவுருவ அலங்கார விசேஷம் முதலியவற்றைக் கண்டின்புறலாம். இவைகட்குக் கடவுளைக் காட்டும்கண்ணாடி என்று உபசாரமாகக் கூறுவதே பொருந்தும்.

கடவுள் விரும்பும் கண்ணாடி ஒன்றுண்டு. அதைத்தான் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூர் திருவிருத்தம் ஒன்றில் (4. 102. 3) அழகாகக் கூறுகிறார். அத்திருவிருத்தம் கீழ் வருமாறு: -

பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கலம் ஆகிலும் - ரூர் இனி தமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளான்
ஆம்படி மக்கலம் செய்து தொழுதுய் மடநெஞ்சமே.
படிமக்கலம் என்றால் கண்ணாடி. ஆரூரில் திருக்கோயில் கொண்டருளியிருக்கும் கடவுள் கண்ணாடி வேண்டும் என்பரேல் தமிழ் மாலைகளால் கண்ணாடி செய்து கொடுத்துத் தொழுது உய்யலாம் என்பது அப்பர் சுவாமிகள்கருத்து. எனவே கடவுள் விரும்பும் கண்ணாடி தமிழ்மாலைகளே என்பதும், தமிழ் மாலைகளில் கடவுளைக் கண்ணாடியிற் காணுமாறு போலே காணலாம் என்பதும் புலப்படுகின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மாலைகள்தேவாரம் திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகளேயாம்.

சாதாரணமான கண்ணாடியில் ஒரு பொருளின் எல்லா நிலைகளையும் காண முடியாது. உதாரணமாக ஓர் ஓவியத்தில் திருவடியின் அழகு, செம்மை, குளிர்ச்சி, ஆற்றல், தன்மை முதலிய அனைத்தையும் காண இயலாது. தேவாரமாகிய கண்ணாடியில் இவைகளை ஒருங்கே காணலாம். அழகெழுதலாகாத அருட்சேவடியின் அழகை எந்த ஓவியத்தில் கண்ணாடியிற் காண முடியும்? நனைந்தனைய திருவடியின் குளிர்ச்சியை எக்கண்ணாடியிற் காணலாம்? நீள் விசும்பை ஊடறுத்துநின்ற அடியின் ஆற்றலைக் கண்ணாடி காட்டுமா? அரை மாத்திரையிலடங்கும் அடி அகலம் அளக்கிற்பாரில்லா அடியின்நுண்மை பருமைகளை ஒருங்கே எந்தக் கண்ணாடி காட்டும்? உருவிரண்டும் ஒன்றோடொன்றொவ்வா அடி உருவென்அணரப்படாத அடியின் தன்மையை எக்கண்ணாடியிற்காண இயலும்? குறைந்தடைந்தார் ஆழாமை காக்கும் அடியின் அருட்டிறத்தைக் கண்ணாடி காட்டுமா? புகலிழந்த குருடரும் தம்மைப் பரவக்கொடு நரகக்குழி நின்றருள் தருகைகொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலம் எந்தக் கண்ணாடியில் தனது பேரிரக்கத்தை வெளிப்படுத்தும்? இனித்தமுடையஎடுத்த பொற்பாதத்தின் இனிமையை எங்கு காணலாம் இவையனைத்தையும் ஒருங்கே தேவாரத் தமிழ் மாலைகளிற்காணலாம். திருலடி முதல் திருமுடிவரையுள்ள எல்லாவற்றையும் தேவாரம் தெளிவாகக் காட்டும். கடவுள் சொரூப நிலை. தடத்த நிலை, இலக்கணம், உயிர்கட்குச் செய்யும் உபகாரம் முதலியன எல்லாவற்றையும் தொலை நோக்காடி, நுண்ணோக்காடி, பெருநோக்காடி முதலிய பல கருவிகளைக்கொண்டுபிற பொருள்களை விவரமாக அறிவதுபோலத் தேவாரக்கண்ணாடியிற் காணலாம்.

இதனால்தான் அப்பர் சுவாமிகள் ஆரூர் இனி கமர்ச்தார்க்குத் தமிழ் மாலைகளால் படிமக்கலம் செய்து கொடுத்தார். இவர் தமிழ் மாலைகளை விரும்பிய பாமலும் இவருக்கு "நாவுக்கரசு'' என்ற பட்டமளித்தான், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக் குலகவர் முன்தாளம் ஈந்தவன் பாடலுக்கிரங்கும் தன்மையாளன் ஆயினான. "அர்ச்சனைப் பாட்டேயாகும் ஆகையால் மண்மேல் நம்மைச்சொற்றமிழ் பாடுக?” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகட்குக் கட்டளையிட்டான், கோவை பாடவைத்து ஏடும் எழுத்தாணியும் கொண்டெழுதினான். சேந்தன் களியுகந்து திருப்பல்லாண்டு பெற்றுத் திருத்தேரையும் ஓடவைத்தான். மூலன் உடலுள் முனியைப் புகுத்தித் திருமந்திரம் ஓதவைத்தான். தாயுமிலி தந்தையிலி தான் தனியனாயினும் காரைக்காற் பேயாரை அம்மையே என்றழைத்தான். பழுத்தமுது தமிழ்ப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழி கண்டான். "உலகெலாம்" என்று அடியெடுத்தும் கொடுத்தான்.

நாமும் அவன் விரும்பிய தமிழ் மாலைகளை விரும்பி ஓதியுணர்ந்து, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அவனைக் திருமுறைப் படிமக்கலத்தில் கண்குளிக் கண்டு தொழுது உய்வோமாகா.

சித்தாந்தம் – 1943 ௵ - மே ௴


No comments:

Post a Comment