Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
கடவுளும் சமயமும்.

உலகம் பலவகைத் தோற்றத்தது இவ்வுலகில் நாம் பார்க்கும் எல்லாப் பொருள்களும் தோன்றி இருந்து அழியும் இயற்கையன. குடம் முதலியவற்றைக் கண்டபோது அவற்றைச் செய்தவனொருவனுண்டென்பது போல இப்பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் நிலையையும் அழிவையும் உற்றுநோக்குமிடத்துக் கர்த்தாவாகிய செய்பவன் ஒருவன் இருக்கவேண்டு மென்பது எளிது புலனாம். இதனை நாஸ்திகர் தவிர எல்லாச் சமயத்தாரும் அங்கீகரிப்பர். ஆகவே சிருட்டியாதி புரியுங் கருத்தாவுண்டெண்பது துணியப்படும். அக்கருத்தாவைத் தான் கடவுள் என்ற பெயராலழைக்கிறோம், கடத்தற்றொழிலின் முதனிலையாகிய கட என்னும் பகுதியும், அவன் அவள் அது என்னும் ஒருமை முப்பாலில் ஒன்றனை யுணர்த்தும் உள் என்னும் வினை முதற்பொருள் விகுதியுஞ் சேர்ந்து கடவுள் என நிற்றலால் கடந்த பொருள் என்பதே கடவுள் என்ற சொற்குப் பொருளாகின்றது, இப்பொருளே ஆன்றோர் கொண்ட பொருளாகும். இங்ஙனமின்றிக் கடவுள் என்பது கடத்தல் என்னும் பொருள் தந்து ஆகுபெயராய்க் கடத்தலையுடைய பொருள் என்பதை உணர்த்துமெனக் கூறுவாரு முண்டு.

கடந்த பொருளெனவே எவற்றைக் கடந்த பொருள்? எவ்வாறு கடந்தது? ஏன் கடக்கவேண்டும்? என்பனவாதிய சங்கை நிகழும். அன்றியும் கடக்கப்பட்ட பொருள்களு மிருக்க வேண்டுமாதலின் அப் பொருள்கள் யாவை? எனவும் ஆராய்ச்சி நிகழும், இங்ஙனம் ஆராயப்புகின் உலகில் உயிருள்ளனவும் உயிரில்லனவுமாகி மாயாசம்பந்தப்பட்ட சேதனாசேதனப் பொருள்கள்யாவும் கடக்கப்படு பொருள்க ளென்பது பெறப்படும்.

இனி எவ்வாறு கடந்ததெனின் நிலங்கடந்தான் நதிகடந்தான் என்புழி அவற்றோடு தோய்ந்து பற்றின்றி நீங்கினா னென்பது வெளியாதலின் அவ்வாறே சேதனாசேதனப் பொருள்கள் எல்லாவற்றுடனுந் தோய்ந்தும் அங்கனம் தோய்தலால் உறத்தக்கதாகிய பற்றுச் சிறிதுமின்றி நீங்கி அப்பாற்பட்டதெனக் கொள்ள வேண்டும். இதனாற்றான் ''ஒன்று நீ யல்லை'' எனவும், "எல்லாமா யல்லதுமாய்'' எனவும், "அவனன்றி ஓரணுவு மசையாது'' எனவும், “தோய்ந்தும் பொருள னைத்துந் தோயாது நின்ற சுடரே" எனவுங் கூறுவர் பெரியோர்.

இனி ஏனிவ்வாறிருக்கவேண்டும்? பொருள்களோடு தோய்ந்தாவது தோயாமலாவது இருந்தலாகாதோ எனின், ஆகாது. என்னை? பொருள்களோடு தோய்ந்திருப்பின் காணப்படுவனவெல்லாம் அழி படுமாதலின் அப்பொருள்க ளழியும் போது தானும் அழியவேண்டி வரும். தோயாது இருப்பின் கடவுட்கு அந்கியமாகிய பொருள்களு முளவெனப்பட்டு எங்கும் நிறைதலின்மை பெறப்படும். ஆதலின் சர்வவியாபகமாய் எங்கும் நிறைந்தும் யாதொன்றிலும் பற்றாமலும் எல்லாப் பொருள்களிடத்தும் எள்ளினுள் எண்ணெய்போல் அந்தர் யாமியாய் மறைந்து நிறைந்திருத்தலே கடவுளின் இலக்கணமாமென்க.

இங்னம் எல்லாப் பொருள்களிடத்தும் அந்தர்யாமியாகி மறை ந்து நிற்பது தான் கடவுளிலக்கணமாயின் அக்கடவுள் யாண்டுங் காணப்படாத பொருளோ எனின் காணப்படின் அழியப்படும். யாண் டுங் காணப்படாதேல் முயற்கோடு ஆகாயப் பூப்போல் இல்பொருளாகும். ஆதலின் ஒருவாற்றாற் காணப்படாமையும், ஒருவாற்றாற் காணப்படுதலும் உண்டெனக் கொள்க. அறிவு வளர்ச்சியால் உலகத்தோற்ற மாதியவறை யுய்த்துணரும் ஆற்றலில்லாத நாஸ்திகராற் காணப்படாத பொருளாகவும், உலகத்தோற்ற மாதியவற்றை யுய்த்துணரும் அறிவாற்றல் கொண்டுள்ள ஏனைச் சமயத்தார்க்கு அவரவர் பக்குவத் துக்கேற்பச் சிலர்க்குப் பொதுமையாகவும், சிலர்க்குச் சிறப்பாகவும் காணப்படு பொருளாகம் கூறப்படுவர். ஆயின் பொதுமைக்காட்சி யாது? சிறப்புக்காட்சி யாதென ஆராய்வாம்.

ஒருகுகைக்குள்ளுற்ற சிங்கம் கர்ச்சித்தபோது அத்தொனியைக் கேட்டவருள் சிலர் இம்மலைக் குகையுள் யாதோ ஒரு பிராணி இருந்து சத்தமிடுகின்றது என்று மட்டும் அறிதல் போல பிரபஞ்சத்தோற்ற முதலியவற்றை நோக்கி உலகம் இங்ஙனம் நிகழ்தற்கு ஏதுவாகிய கர்த்தா ஒருவன் உண்டு என மாத்திரம் அறிதல் பொதுமைக் காட்சியாம். மற்றுஞ் சிலர் இங்கே கர்ச்சித்தது சிங்கம். அது வெண்ணிறமும் பரந்தமுகமும் நான்கு பாதமும் சிறுகிய இடையும் கொண்டு மிருகவர்க்கத்துட்பட்டது என அறிதல் போல உலக்காரணராகிய கர்த்தா இன்ன தன்மையர், இன்ன குணங்களுள்ளவர் என்பனவாகிய இலக்கணங்கள் முற்றுமறிதல் சிறபுக்காட்சியாம்.

ஆகவே இறைவனது சிறப்புக்காட்சி பெறுதல் இன்றியமையா ததாயிற்று. இப்படியன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்னும் சிறப்புக்காட்சியை அவனருளே கண்ணாகக்காணிற் காணலாமன்றி வேறுவகையாற் காணுதலமையாது. மாயா சம்பந்தமான உலகஞானம் எதுவரையில் முனைத்து நிற்குபோ அதுவரையில் அவனருளாகிய கண்ணைப்பெறுதல் இல்லை. அருட்கண்ணைப் பெறவேண்டின் பாவச்செயல்களை விடுத்துப் புண்ணியச் செயல்களை மேற்கொண்டு, யான் எனது என்னும் அகப்பற்றையும் புறப்பற்றையும் அறக்களைந்து, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் கால்வகை மார்க்கங்களிற் பிரவேசித்து, ''எல்லாமுனுடைமையே எல்லா முனடிமையே யெல்லா முனுடைய செயலே'' எனபதைக் கடைப்பிடித்து முயன்றால் நித்தியத்துவம், வரம்பிலாற்றல், வரம்பிலின்ப மென்னும் சச்சிதானந்தப் பிழம்பாகிய கடவுள் ஆன்மாக்களின் இருவினையொப்பு மலபரிபாக சத்திரிபாத பக்குவத்துக் கேற்றவாறு தாமே வெளிப்படுவர். இறை வன் வெளிமுறையை அடியில் வருந்திருப்பாசுரம் இனிதுவிளக்கும்.

''விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் னிற்குமே.''

இதன் பொருள். - இறைவன் விறகினிடத்து நெருப்புப்போலவும், பாலினிடத்து நெய்போலவும், மணியினிடத்து ஒளிபோலவும் வெளிப்படாமல் மறைந்திருக்கின்றான். விறகிலிருந்து நெருப்பையும், பாலிலிருந்து நெய்யையும், மணியிலிருந்து ஒளியையும் பெறவேண்டியவர்கள் ஒரு கோலை நாட்டி அதிலொருகயிற்றைப்பூட்டி யிழுத்துக் கடையவேண்டும் கடைந்தால் நெருப்பும் நெய்யும் ஒளியும் வெளிப்படத் தோன்றும், அதுபோல மறைந்து நிற்கும் இறைவனையடைய விரும்பியவர்கள் பத்தியாகிய கோலை நாட்டி ஞானமாகிய கயிற்றைமாட்டிப் பலமுற இழுத்துக் கடைவார்களானால் இறைவன் வெளிப்பட்டுக் காட்சி தந்தருளுவன் என்பதாம்.

இதனுள் விறகில் நெருப்புப்போலவும், பாலில் நெய்போலவும் இறைவனுளன் என மூன்றுவகைப்படுத்தினமைக் கேற்பவே “முறுக வாங்கிக் கடைய'' எனக் கூறியதையும், “முறுக வாங்கிக் கடைய,  வாங்கிக் கடைய, “கடையஎன மூன்று வகையாக்கிக் கொள்ள வேண் டும், விறகில் நெருப்பு எடுப்பவர் பலமாக இழுத்துக்கடைந்தாற்றான் நெருப்புக் கிடைக்கும். பாலில் நெய்யெடுப்பவர் இழுத்துக் கடைந்தாலே போதும், நெய் வெளிப்படும். மணியில் ஒளியைக்காணுதற்குய் பலங்கொண்டு இழுத்துங்கடைய வேண்டாம். சாதாபணமாகக் கடைதலே போதும், ஒளிவிளங்குவதாம். இவ்வாறு மேலே மூன்றிடஞ் சொன்னமைக் கேற்ப கீழேமுறையும் முன்றாகக்கொள்ளக் கூறியரு ளினர். பத்தியானது எக்காலத்தும் எவ்வாற்றானும் சிறிதுஞ்சலன முறாது இறைவனிடத்தே அழுந்தி நிற்கவேண்டுமாதலின் அதனைத் தறியாகவும், ஞானமானது மேலும் மேலும் ஆராய்ந்து சென்று சேர் தலின் அதனைக் கயிறாகவுங் கூறியது உய்த்துணரத் தக்கதென்க.

இங்ஙனம் மூன்று முறையாகக் சொண்டு கூறுமாறென்னெனில் தேவர் இருடிகள் மானிடர் முதலாக எறும் பீறாகவுள்ள சகலர் அதி பக்குவர், மந்தபக்குவர், அடக்குவர் என மூவகையாவர். அவருள் மலபரிபாகம் வராத அபக்குவர்கள் தாம் செய்த கன்மத்துக் கீடாகப் புவன சரீபங்களையெடுத்துப் போகங்களைப் புசித்துத் தொலைத்த பின் னர் மலபரிபாகம் வரப்பெற்று ஆசாரியரிடம் தீக்கையைப் பெற்று மோக்ஷத்தை யடைவர். இங்ஙனம் இவர் சிலகாலம் வருந்தி அடைய வேண்டுதலின் இவர்க்கு'' விறகிற் றீயினன்'' என்க. விறகிலிருந்து நெருப்பெடுப்பவர் பலங்கொண்டு இழுத்துக் கடைந்தே எடுக்கவேண்டும். ஆதலின் "முறுக வாங்கிக் கடைய முன்னிற்கும்” எனக்கொள்க

மந்த பக்குவராயுள்ள வைகயிகர் முதலாயினோர் மந்தரம் மந்த மென்று சொல்லப்பட்டசத்தி பதியப்பெற்றவுடன் இறைவன் ஆசாரியனை யதிட்டித்து நின்று அவர்க் கநுகுணமான தீக்ஷையைச் செய்து அவர்கள் எந்த பதத்திலே யிருந்து போகம்புசிக்க விரும்பினார்களோ அந்தப் பதத்திலே அவர்களைச் சேர்த்துப் பின்னர் மோக்ஷம்பெறச் செய்தருளுவன். இவர்கள் அபக்குவரைப்போலப் பலநாள் வருத்த மெய்தாது சிலநாளில் இறைவனை யடையக்கூடியவர்களாதலின் இவர்க்கு இறைவன் “பாலிற்படு நெய்போல்வன் " எனவும்,'' வாங்கிக்கடைய முன்னிற்கு" மெனவுங் கொள்க. பாலிலிருந்து நெய்யெடுப்பவர் விறகிற்றீயெடுப்பவர்போல் பலமுறை யிழுத்துக் கடைய வேண்டாது சுலபமாக வாங்கிக்கடைதலே சாலுமாதலின் பாலிற்படு நெய்போல் வன் வாங்கிக்கடைய முன்னிற்கும் எனக் கொள்ளவேண்டும்.

அதிபக்குவராவார்க்கு இறைவன் தீக்ஷையால் மந்தரம் முதலிய நால்வகைச் சத்தியைப் பதிப்பித்துத் திவ்விய திருமேனியை யதிட் டித்துக்கொண்டு அவர்கள் பாச விமோசனஞ்செய்து ஞானக் கிரியைகளை விளக்கித் திதிகால முடியுமளவும் சுத்தாத்துவாவிற் போகங்களைப் புசிப்பித்து மகாசங்காரத்தில் மோக்ஷத்தை அடைவிப்பன். ஆதலின் இவர்க்கு "மாமணிச்சோதியான் " எனவும், 'கடைய முன்னிற்குமே" எனவுங் கூட்டியுரைக்க. மணியின் ஒளியை உள்ளவாறு காண விரும்பியவர் அதிசீக்கிரத்தில் மிகச்சுலபமாகக் கடைந்து கோடலே போதுமாதலின் அதிபக்குவர் விரைவாகவும் எளிதாகவும் இறைவனை யடையக் கூடுமாற்றால் மாமணிச் சோதியான் கடைய முன்னிற்கும் எனக்கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். இங்கனம் சகலருள் பகுக்கப்பட்ட மூவகையார்க்கு எனக்கொள்ளாது சகலர், பிரளயா கலர், விஞ்ஞானாகலர் என்ற மூவகை யான்மாக்கட்குக் கூறிய மூன்று முறையே இவையெனக் கூறுவாறுமுண்டு. இன்னும் இத்திருப்பாசாப் பொருளை விரிப்பிற் பெருகும்.

இனி இத்தகைய கடவுள் ஒருவரா பலரா? எனின் கூறுதும். பலரெனின் அவஸ்தா தோவும் உண்டாகும் ஆதலின் ஒருவர் தா னென்பது தெளிவாம். இக்கடவுளுடைய முக்கியகுணங்கள் யாவை! யெனின் முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் என ஆறுமாம்.

எல்லாப் பொருளையும் புலப்படக் காணும் அறிவுள்வழி யல்லது எல்லாத்தொழிலும் இயற்றல் கூடாமையின் முற்றறிவும், தமதனு பவத்தின் பொருட்டுப் பிறிதொன்றனை வேண்டில் பரிபூரணத் தன்மை யெடுபட்டுக் கடவுட்டன்மை கெட்டுப்போதலின் வரம்பிலின்பமும், முற்றறிவுடைய வழியும் அஃது அநாதியன்றி அவாந்த பத்தில் வந்ததேல் காரணபூர்வகமாய் வந்ததெனின் வரம்பின்மைக் குற்றமும் காமணமின்றி வந்ததேல் காரணகாரிய நியமமின்மைக் குற்றமும் அடுக்குமாதலின் இயற்கையுணர்வும், பிறர் வயமுண்டேல்பாசத்தடையு முளதாகி வேண்டிய தெய்தாமையும் வேண்டாத தெய்தலுமாகிய குற்றம் பற்றலின் தன்வயமும், ஆற்றல் குன்று மாயின் எக்காலத்தும் எத்தேசத்தும் இளைப்பின்றித் தொழிலியற்றுதல் ஏலாமையிற் குறைவிலாற்றலும் அவ்வாற்றல் வரம்புபட்டபரி மாணமுடையதாயின் வரம்புபடாத தொழிலியற்றல் கூடாமையின் வரம்பிலாற்றலும் ஆகிய ஆறுகுணங்களும் பதிக்கு இன்றியமையாமை காண்க.

தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களி னீங்குதல், போருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிவின்பமுடைமை எனக் குணங்கள் எட்டென்று கூறலுமுண்டு. அன்றியும் யாதேனும் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறத்தலும் இறத்தலுமின்மையும் முக்கிய இலக்கணமாம். பிறந்திறக்கப்படுவன யாவும் ஆன்மவர்க்கத்தனவே யெனவும், அவையில்லாத பொருளே பரம்பொரு ளெனவும் நிச்சயிக்கப்படும். அத்தகைய கடவுள் உலக சிருட்டியாதி தொழில் கட்குக் கர்த்தர வரதலால் அத்தொழில்களில் தொடக்குற வேண்டுமே எனின் அற்றன்று. சூரிய சந்நிதானத்தில் சூரியகாந்தக்கல் நீரைக் கக்குதலும், தாமரை மலர்தலும் கண்கூடாகக் காணப்படினும் சூரியன் அவற்றிற்றொடக் குறாமை பெறப்படுதலால் உலகசிருட்டியாதி தொழில்கள் கடவுட் கிருத்தியமாயினும் கடவுள் அவற்றிற் றொடக்குறாமை பெறப்படுமாறு உய்த்துணரத் தக்கதொன்றாம்.
இங்ஙனம்,
வியாசத்திரட்டு,

சித்தாந்தம் – 1915 ௵ - ஆகஸ்டு ௴


No comments:

Post a Comment