Saturday, May 9, 2020



கடவுளின் வியாபகம்.

கடவுள் உணர்வரியதும் உவமையிலாததுமான சித்துப் பொருளாயிருத்தலினால் அவருடைய வியாபகமும் உணர்வரியதும் உவமையில்லாததுமாயிருக்கிறது. ஆதலால் அவருடைய வியாபகம் சடப்பொருள்களின் வியாபகத்தோடு ஒப்பிட்டு நமது சுட்டுணர்வினால் உணரப்படாததாம், ஆயினும் கடவுளையடைந்து அனுபவிக்கும் உவ'மையிலாப் பேரின்பத்தைப் பாலுக்கும் சீனிக்கும் தேனுக்கும் ஒப் பிடுவது போல், மனிதர்கள் அவரவர்கள் அறிவுக்கிசைய அவருடைய வியாபகத்தைச் சடப்பொருள்களின் வியாபகத்தோடும் சித்துப்பொ ருளாகிய உயிரின் வியாபகத்தோடும் ஒப்பிவேர். இவற்றுள் சித்துப் பொருளாகிய கடவுளின் வியாபகத்தைச் சித்துப்பொருளாகிய உயிரின் வியாபகத்தோடு ஒப்பிடுதல் சிறப்பாகும் சடப்பொருள்களின் வியாபகத்தோடு உவமிக்கினும் ஸ்தூலமாக ஒப்பிடாமல் சூக்குமமாக ஒப்பிடவேண்டும்.

ஆன்மாக்கள் தாம் எடுக்குஞ்சரீரங்கள் தோறும் நிறைந்து தாம் வேறு சரீரம் வேறு என்னாதபடி கலந்து சரீரமுந்தாமும் (அத்துவித மாய்) ஒன்றேயாயிருத்தல்போல் கடவுளும் சித்தசித்து ஆகிய இரு.வகைப் பொருள்களிலும் நிறைந்து அவைவேறு தாம் வேறு என்னாதபடி கலந்து (அத்துவிதமாய்) ஒன்றேயாயிருக்கிரர்.

அகர உயிரானது அங்காத்தல் என்னும் வாயைத்திறத்தலாகிய தொழில் முயற்சி யொன்றினாற் பிறக்கும் ஒரு உயிர் எழுத்து, மற்ற எழுத்துக்களெல்லாம் அங்காத்தலோடு வாயைக் குவித்தல் முதலிய தொழில் முயற்சிகளாற் பிறக்கும். ஆதலால் அகர உயிரானது தனியெழுத்தாய்ச் சீவித்திருப்பதுடன் மற்ற எழுத்துகளுடன் விரவி அவையே  தானாகாமலும் அவற்றின் வேறாகாமலும் கலந்திருப்பதாகவும் துணியப்படும். அகரஉயிர்போலவே மற்ற உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களோடு இரண்டறக்கலந்து அவற்றை இயக்குகின்றன. கடவுள் அகர உயிர்போலவும் ஆன்மாக்கள் மற்றஉயிர்களைப்போலவும் தனுகரணபுவன போகங்களாக விரிந்து கிடக்கும்.. அசித்துப்பொருள் கள் மெய்யெழுத்துகளைப்போலவும் இருந்து ஒன்றினொன்று பிரிக்கப் படாமல் (அத்துவிதமாய்) இரண்டறக்கலந்து நிற்கும்.

கடவுள் இவ்வாறு எல்லாவற்றோடுங்கலந்து ஒன்றேயாகாமலும் வேறாகமலும் இருத்தலினால் நூல்கள் அவரை எல்லாமாய் அல்லவுமாய் இருப்பவர் என்று கூறும்.

கடவுள் தமக்கு முன் அண்டங்களெல்லாம் அணுக்களாகும்படி பெருத்தும் அணுக்களெல்லாம் அண்டாங்களாகும்படி சிறுத்தும் இருத்தல் அவருடைய வியாபகத்தின் பெருமையை விளக்கும்.
கடவுள் பிரமன் முதலிய மிகப்பெரிய தேவர்களுக்கும் எட்டப்படாமல் அகண்டமாயிருப்பதுடன் தன்னை மெய்யன்போடு வழிபடும் பத்தர்களின் சுருங்கிய மனதையே கோயிலாகக் கொண்டு வசிப்பவராகவுமிருக்கிறார்.

திருவருட்பயன்.

அகரவுயிர் போலறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கு நிறைந்து.

திருக்குறள்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

ஆன்மா இயக்க அவயவங்கள் இயங்குவது போல் கடவுளானவர் ஆன்மாவினுள் அந்தரியாமியாயிருந்து இயக்க ஆன்மா இயங்குகின் றது. இயக்காவிடில் ஆன்மா கண்ணிருந்தும் பாராது, காதிருந்தும் கேளாது வாயிருந்தும் பேசாது.

தேவாரம்.

ஆட்டுவித்தாலா ரொருவராடாதாரே
யடக்குவித்தாலா ரொருவரடங்காதாரே
ஓட்டுவித்தாலா ரொருவரோடாதாரே
உருகுவித்தாலா ரொருவருருகாதாரே
பாட்டுவித்தாலா ரொருவர் பாடாதாரே
பணிவித் தாலாரொருவர் பணியாதாரே
காட்டுவித்தாலா ரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே.

ஆன்மா.

ஆன்மாக்கள் அளவிடப்படாதனவாய், நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தடையுடையவைகளாய், சரீரந்தோறும் 'வெவ்வேறாம் வினைகளைச் செய்து வினைப்பயன்களை யனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலுமுடைய வைகளாய், தங்களுக்கு ஒரு தலைவரை யுடையவைகளாயிருக்கும். ஆன்மாக்கள் சேதனப்பொருள் களாயிருப்பினும், பாசத்தால் தடைபட்டு, அஞ்ஞானமாகிய இருட்டில் சார்ந்ததன் வண்ணமாயிருந்து, தங்களையும் தங்கள் தலைவராகிய கடவுளையும் அறியப்பெறாமல் பிறவிக்கடலில் அழிந்து வருந்துவதனால், கருணைக்கடலாகிய கடவுள் அவற்றைப்பல பிறவிகளெடுக்கச் செய்து, பாசத்தடையைப் போக்கி, தமது திருவடி இன்பத்தைக்கொடுத்தருளுவர். ஆன்மா பாசத்தால் பந்திக்கப்பட்டிருத்தலினால் பசு என்னப்படும்.

தாயுமான சுவாமிகள் பாடல்.

பாராதி பூத நீயல்லை ஊன்றிப்
பாரிந் திரியங் காண நீயல்லை
ஆராயுணர்வு நீயென்றான் ஐயன்
அன்பாயுரைத்த சொல் ஆனந்தந் தோழி
சங்கர சங்கர சம்பு சிவசங்கர சங்கர
சங்கர சம்பு சங்கர சங்கர சங்கர சம்பு.

ஆன்மாக்கள் தாம் எடுக்குஞ்சரீரத்திற்கேற்ப மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும், அறியும் அறிவின் வகையால், ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறி'வுயிர், ஐயறிவுயிர் ஆறறிவுயிர், என அறுவகைப்பட்டு, தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன., தாவரம் என்னும் எழு வகையாகப் பிறக்கும். இவற்றுள் கருப்பையில் தோன்றுவன சரா'யுசம் எனவும், முட்டையில் தோன்றுவன அண்டசம் எனவும், வேர்வையில் தோன்றுவன சுவேதசம் எனவும், வித்துவேர் கிழங்கு முதலியவற்றில் தோன்றுவன உற்பிச்சம் என்வும் சொல்லப்படும்.

ஆன்மாக்கள் எடுக்குஞ்சரீரம் தூலசரீரம் எனவும் சூக்குமசரீரம் எனவும் இருவகைப்படும். தூலசரீரமாவது பஞ்சபூதங்களாகிய உரு உடம்பு. சூக்கும சரீரமாவது, சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந் தம் என்னும் காரணதன் மாத்திரையைந்தும், மனம், புத்தி, அகங் காமம் என்னும் அந்தக்கரணம் மூன்றுமாகிற எட்டினாலும் உண்டாக்கப்பட்டு ஆயுள் முடிவில் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாயிருக்கும் அருஉடம்பு.

நல்வினை செய்த ஆன்மாக்கள் தூலசரீரத்தை விட்டவுடனே, சூக்குமசரீரத்தோடு பூதசாரசரீரமாகிய தேவசரீரத்தை யெடுத்துக் கொண்டு சுவர்க்க முதலிய போக பூமிகளிற் போய், இன்பத்தையனுபவித்து, மீண்டும் மனிதப்பிறவியை யெடுக்கும். அவை பூமியிலே மறுபடியும் உடனே மாறிச்சரீரம் எடுத்தலும் உண்டு. தீவினை செய்த ஆன்மாக்கள் தூலசரீரத்தை விட்ட உடனே சூக்கும சரீரத்தோடு பூதசரீரமாகிய யாதனா சரீரத்தை யெடுத்துக் கொண்டு நரகத்திலே போய், துன்பத்தை யனுபவித்து மீண்டும் பூமியில் வந்து தாவரங்களாகவும், நீர்வாழ்வனவாகவும்; ஊர்வனவாகவும், விலங்குகளாகவும் பிறந்து, முன்செய்த நல்வினைப்பயன் வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும். ஆன்மாக்கள் இவ்வாறு பலகோடிப் பிறவிகளெடுத்துப் புண்ணியமேலிட்டால் நல்லினைப்பயனாகிய இன்பத்தையும் தீவினைப்பயனாகிய துன்பத்தையும் சமமாகப்பார்த்தலாகிய இருவினை யொப்பு நேரிடும் பிறவியில் பாசநீக்கம் பெற்றுக் கடவுளின் திருவடி நிழலையடையும்.

ஆன்மாக்கள் அளவற்றன. இதுவரையில் இறந்தகாலத்தையும் இனிவருங்காலத்தையும் அளவிடலாகாதது போல் இதுவரையில் முத்தியடைந்த ஆன்மாக்களையும் இன்னும் முத்தியடையாமலிருக்கும் ஆன்மாக்களையும் அளவிடலாகாது. கடவுளைப் போலவே ஆன்மாக்களும் ஒருகாலத்தில் உண்டாவதும் அழிவதுமின்றி என்னும் நிலை பெற்றிருக்கும்.

செம்பு உள்ளபோதே அதனிடத்தில் களிம்பு இருப்பதுபோலவும், நெல் உள்ளபோதே அதனிடத்தில் உமியும் தவிடும் இருத்தல் போலவும் ஆன்மாக்களிடத்தில் பாசம் அலல்து மலம் என்னும் அழுக்கு இயல்பாகவே இருக்கிறது. இதனால் ஆன்மாக்கள் தம்சொரூபங்குன்றித் தம்மையும் தம் தலைவரையும் அறியப்பெறாமல் ஜனனசாகரத்தில் கிடந்துழல்கின்றனர்.

கடவுளைப்போல் ஆன்மாக்களுக்கும் வியாபகமுண்டு ஆனால் அவை கடவுளைப்போல் இயற்கையாகவே சர்வ வியாபகமாயிராமல் எவ்வெவற்றைச் சார்ந்திருக்குமோ அவ்வவற்றின் அளவாக வியாபித்திருக்கும். எறும்பின் சரீரத்தில் எறும்பினளவாகவும், யானையின் சரீரத்தில் யானையின் அளவாகவும் வியாபித்திருக்கும். தூலசரீரத்தினும் பார்க்கச்சூக்குமசரீரத்தில் ஆன்மவியாபகம் அதிகரித்திருக்கும். அக்கினிதேவன் வாயுதேவன் முதலிய தேவர்களின் சரீரம் மனிதர் சரீரத்தைப்போல் தூலமாயிராமல் சூக்குமமாயிருத்தலினால் அவர்கள் வியாபகம் இந்நிலவுலகெங்குங் காணப்படுகின்றது. யோக சாதனையினால் மனிதர்கள் சூக்குமசரீரம் பெறும்போது அதிக வியாபகமடைந்து அட்டமாசித்திகள் செய்யவல்லவராகின்றார்கள். ஆன்மா மலத்தினின்றும் நீங்கப்பெற்றால் கடவுளைப் போலவே சர்வவியாபகமடையும்..

ஆன்மாவின் உருவம் அறிவேயாகும். ஆனால் ஆன்மாக்களின் அறிவுகடவுளின் அறிவைப்போல் பேரறிவாயிராமல் அவை யெடுக்குஞ் சரீரங்களுக்கேற்ப விளக்கமுறுதலால் சிற்றறிவு எனப்படும். துலசரீரத்தினும் சூக்குமசரீரத்தில் ஆன்ம அறிவு அதிகப்படும். கண்ணினிடத்தில் இயற்கையாகவே ஒளியிருந்தும், அது சூரியனாளியின் உதவியின்றி எதையும் அறியமாட்டாது. அதுபோல் ஆன்மாவினிடத்தில் இயற்கையாகவே அறிவிருந்தும் அதிமுற்றுணர் வினராகிய கடவுள் அறிவிக்க அறிகின்றதேயன்றி தானே எதையும் அறியமாட் டாது. ஆன்மா மலத்தினின்றும் நீங்கிப் பரிசுத்தமடைந்தால் ஆன்ம வறிவும் கடவுளறிவும் ஏகமாய் அகண்டமாய் அபேதமாய் விளங்கும்.

சார்ந்ததன் வண்ணமாயிருத்தல் ஆன்மாவின் இயற்கை சத்தாகிய கடவுளோடு கலக்கச் சத்தாகவும் அசத்தாகிய தேகாதிகளோடு கலக்க அசத்தாகவும் இருக்கும். தான் எடுக்குஞ்சரீரம் வேறு தான் வேறு என்னாதபடி சரீரமேதானாக இருக்கும். தன்னை மனிதசரீரத்தில் மனிதனேயாகவும், விலங்கின் சரீரத்தில் விலங்கேயாகவும், பறவை முதலிய சரீரங்களில் பறவை முதலியனவே யாகவும் ஆண் சரீரத்தில் ஆணேயாகவும் பெண் சரீரத்தில் பெண்ணேயாகவும் மதித் து மயங்கிக்கிடக்கும். தாம் வேறு சரீரம்  வேறு என்று உணர்ந்து பாசநீக்கம் பெற்றால் கடவுளோடு தான் வேறு கடவுள் என்னாமல் இரண்டறக்கலந்து இன்புறும். ஆன்மா எக்காலத்தும் தனித்திராமல் பாசத் தையாயினும் பதியையாயினும் பற்றி நிற்கும். ஆதலால் ஆன்மாபதி யைப்பற்ற பாசப்பற்று அறும்.

தாயுமான சுவாமிகள் பாடல்.

ஆணவத்தோடத்து விதமானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடத்து விதஞ்சாருநா ளெந்நாளோ,

ஆன்மாக்கள் பிறவியெடுக்கும் உலகங்கள எண்ணிறந்தன. இவற்றுள் பல போகபூமிகளாகிய தேவலோகங்களாகவும், பலதுன்பவடி வினவாகிய நாகலோகங்களாகவுமிருக்கும். இவற்றுள் ஆன்மாக்கள் எடுக்குஞ்சரீரங்களுங் கோடி கோடியாகப் பேதப்பட்டிருக்கும். இவைகளினின்றுந்தப்பி மானிடப்பிறவியெடுப்பது கடலைக் கையால் நீந்திக் கரையேறுதலை யொக்கும். இதுபற்றியே பெரியோர்
'' எண்ணரிய பிறவிதனின் மானிடப்பிறவியே யாதினும் அரிது அரிது காண். இப் பிறவி தப்பினால் எப்பிறவிவாய்க்குபோ ஏதுவருமோ''
என்று கூறினார். இவ்வளவு அறிய மானிடசரீரமும் இவ்வளவுகாலம் நிலைத்தி ருக்குமென்று நிச்சயிக்கக்கூடாததாயிருக்கின்றது. இது தாயின் கருப்பத்தில் அழியினும் அழியும், குழந்தைப்பருவத்தில் அழியினும் அழியும், யௌவனத்தில் அழியினும் அழியும் மூப்பில் அழியினும் அழியும் : ஆதலால் இந்தச்சரீரம் உள்ள பொழுதே பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டுப் பெரும்பிறவிக் கடலைக் கடத்தல் வேண்டும்.

பட்டணத்து சுவாமிகள் பாடல்

அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ,
பின்னை யெத்தனை யெத்தனை பெண்டீரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ
முன்ன மெத்தனை யெத்தனை ஜென்மமோ
மூடனா யடியேனு மறிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை ஜென்மமோ
என்செய்வேன் கச்சியேகம்ப நாதனே.

இருக்கம் - ஆதிமூல முதலியார்.

சித்தாந்தம் – 1914 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment