Saturday, May 9, 2020



கடவுளின் சொரூபம்.*

[* இது ஸ்ரீமான் ஜே. எம். நல்லசாமி பிள்ளை B. A., B. L., அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுத், தமிழில் ஸ்ரீமத் சுவாமி வேதாசலம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.]

கடவுளான ருத்ரசிவன் பாட்டுக்களுக்குப் பதி என்றும் யாகங்களுக்குப் பதி என்றும் ருக்வேதத்தில் பேசப்பட்டிருக்கின்றனர்.
'காத பதிம் மேத பதிம்'
இங்ஙனம் சிவபெருமான் பசுபதியாகிய தலைமை தெளிவுறுத்தப் பட்டிருக்கின்றது.
   
எஜுர் வேதத்தில் அவர், ருத்ரன் ஒருவனே இரண்டாவ தொன்றில்லையெனப் பேசப்பட்டிருக்கின்றார்.
"ஏக ஏவருத்ரா நத்விதியாயதஸ்தே''
என்னும் இது, பின்னர்ச் சாந்தோக்கிய தைத்திரீய உபநிடதங்களில் சத் எனவும் பிரமம் எனவும் இரண்டாவதில்லாத ஒன்று எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
            ''சதேவ சௌம்ய தமாக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் பிரஹ்மா"

அவர் ஒன்றேயாம் தன்மையைத் திருமூல மஹருஷியும்,
    "ஒன்றவன்றானே இரண்டவனின்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தானைந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றவன் றானிருந்தா னுணர்ந்தெட்டே''
என்று திருவாய் மலர்ந்தருளினர்.

பகவான் மெய்கண்ட தேவரும்,
      ''ஒன்றென் றது ஒன்றேகாண் ஒன்றேபதி, பசுவாம்
     ஒன்றென்ற நீ பாசத்தோகிளைகாண் - ஒன்றின்றால்
      அக்கரங்களின்றாம் அகரவுயிரின்றேல்
     இக்கிரமத் தென்னு மிருக்கு. "  
என்று அருளிச் செய்தனர்.

''கடவுள் ஒன்று ஒன்றுமாத்திரமே, இவ்வொன்றேபதி.''
ஆகவே, இந்து சமயத்தின் மிகப் பழைய சொரூபமான சைவ  சமய மானது கடவுள் ஒன்றென்றும், இரண்டாவதில்லாத ஒன்று மாத்திரமே என்றும் வலியுறுத்துக் கூறுகின்றது. கட்வுளின் சத்திகள் பல திறப்படும்; அவை வழக்கமாய் ஞான சத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி என மூன்று கூறாக வகுக்கப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் அவருடைய அருள் அல்லது கிருபாசத்தி என்றும், கடவுள் அன்பே உருவாக உள்ளவர் என்றும் சொல்லப்படும்.
''அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
            அன்பே சிவமாவதியாரு மறிகிலார்
            அன்பே சிவமாவதியாரு மறிந்தபின்
            அன்பே சிவமாயமர்ந் திருந்தாரே.''
எனவே, சுருங்கச் சொல்லுங்கால் கடவுள் சத்துச் சித்து ஆனந்தமாவர்; அதுவே சச்சிதானந்த சிவம்.
     
அவர் உலகங்களைப் படைக்க எண்ணுகிறார். அங்ஙனமே அவற்றைப் படைக்கிறார், அவற்றைத் திரும்பத் திரும்ப அழிக்கிறார். இதனை அவர் ஏதொரு நோக்கமும் இன்றியாவது தனது உல்லாசத்தின் பொருட்டாகவாவது தான் நினைத்தபடி யெல்லாமாவது செய்பவர் அல்லர்; ஏனெனில், அவர் அன்பே உருவாக உள்ளவர் என்பதை அறிவேம் அல்லமோ? அறியாமையில் அகப்பட்டுத் தவறுகின்ற உயிர்களை அதனினின்றும் மேலெடுத்து, அவர்களுக்கு உடம்புகளையும் இந்திரியங்களையுங்  கொடுத்து, அவ்வாற்றால் அவர்கள் தாமே தம் எண்ணப்படி நடந்து நன்மை தீமைகளை அறிவிக்கும் மரத்தின் கனிகளைச் சுவைத்துத், துன்பத்தாலும் துயரத்தாலும் திருத்தஞ்செய்யப்பட்டுச் சுத்தமாகிப், பரம்பொருளின் திருக்குறிப்பின் வழியே தமது குறிப்பையும் நிறுத்தத் தெரிந்து கொள்ளும்படி செய்விக்கின்றார்.
   
ஆசாரிய சுவாமிகளான மாணிக்கவாசகர் பின் வருமாறு அருளிச் செய்கின்றார்.
            "நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன்
            புலனாயமைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
            உலகேழெனத் திசை பத்தெனத்தா னொருவனுமே
            பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ.''

இவ்வெட்டு வடிவங்களினும் அவன் நிறைந்திருக்கின்றான்;  இவ்வெட்டும் அவனுக்கு உடம்புகளாயிருக்கின்றன; ஆதலினாலேதான் சிவபெருமான் அட்ட மூர்த்தி யென்று சொல்லப்படுகின்றார். இதனாலே அவர் அந்தரியாமியாந் தன்மையும் அல்லது எங்கும் உண்மையும் அல்லது அவர் அறிவுப் பொருளாகலின்னுள்ளும் இருத்தலும் இனிது நாட்டப் படுகின்றது. என்றாலும், அவர் இவையெல்லா வடிவங்களுக்கும் அப்பாற்பட்டவராயும், மனிதனுக்கும் மாயை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராயும் எல்லாம் கடந்தவராயும் இருக்கின்றார்.
   
இவ்வெட்டு வடிவங்களினும் நிறைந்திருத்தல் பற்றி அவர் எண் பேயர்கள் உடையவரா யிருக்கின்றார்.

    "ப்ருதிவ்யோ பவ:, ஆபச்சர்வ:, அக்நேருத்ர:, வாயுர்ப்பீம:, ஆகா
  ஸஸ்ய மகாதேவ:, சூர்யஸ்ய உக்ர:, சந்த்ரஸ்ய சோம:, ஆத்மாந: பசுபதி:''
'பூ'என்கின்ற பகுதிக்குச் சத் அல்லது இருப்பது என்பது பொருளாகலின், பிரமம் எக்காலத்தும் எவ்விடத்தும் இருத்தல் பற்றி அது பவன் என்று சொல்லப்படுவதாயிற்று. இதனால் பிரமம் எல்லாப் பொருள்களினும் ஊடுருவி விளங்குவது என்று  அறிவுறுத்தப் படுகின்றோம்.
   
இனி ‘சிரீ' என்கின்ற பகுதிக்கு அழித்தல் என்பது பொருளாகலின், சங்கார கருத்தாவாகிய பிரமத்திற்குச் சர்வன் என்னும் பெயர் உண்டாயிற்று,

இனிச் சமுசார நோயை ஒழித்தல் பற்றிப் பிரமத்திற்கு உருத்திரன் எனும் பெயர் உண்டாயிற்று.

இனி எல்லா உயிர்களுக்கும் விதிப்பவன் ஆதல் பற்றியும்  அவர்களால் அஞ்சப்படு பவன் ஆதல் பற்றியும்'பயங்கரமானவன்'என்னும் பொருளைத்தரும் பீமன் என்னும் பெயர் பிரமத்திற்கு வழங்கப்படுவதாயிற்று. சுருதியும் " அவனிடத்துள்ள  அச்சத்தால் காற்று வீசுகின்றது.” என்றுரைக்கின்றது. (தைத்திரீய உபநிடதம், 2, 8)

இனிப் பெரியனும் ஒளியுருவனுமாய் இருத்தல் பற்றிச் சிவபெருமான் மகாதேவன் என்று சொல்லப்படுகின்றான். இங்ஙனமே அதர்வசிரசுபநிடதமும் கூறுகின்றது. - - " எது அவ்வாறு மகாதேவன் என்று சொல்லப்பட்டது? எல்லாட் பொருள்களையும் அறத்துறந்தது பற்றி, அவன் தனது ஆன்ம ஞானத்தின் பொருட்டாக உபாசிக்கப் படுகின்றான்; அதனாலேதான் அவன் மகாதேவன் என்று சொல்லப்பட்டதும்.''

இனி வேறொருவராற் செயிக்கப்படாதது பற்றிப் பிரமம் உக்கிரன் என்று பெயர் பெறலாயிற்று,'அங்கே சூரியனும் விளங்குதல் இல்லை, சந்திரனும் நட்சத்திரங்களும் விளங்குதலில்லை. " (சுவேதா சுவதர உபநிடதம், 6, 14.)

அப்பரம் பொருள் படைத்தற்றொழில் புரிதல் பற்றி அரன் எனவும், காத்தற்றொழில் புரிதல் பற்றிச் சங்கரன் எனவும், அழித்து மீளத்தோற்றுவித்தல் பற்றி உருத்திரன் எனவும், பரமானந்தத்தைத் தருதல் பற்றிச் சிவன் எனவும் பெயர் பெற்று வழிபடப்படுகின்றது.
   
கடவுள் எண்குணங்கள் உடைமையினாலே, எண்குணத்தான் என்று பெயர் கூறப்படுகின்றது. எண்குணங்களாவன,  தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர் வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர் அருளுடைமை, வரம்பில் ஆற்றலுடைமை, வரம்பில்  இன்ப முடைமை.
   
இவற்றுள்'முற்று முணர்தல்'என்பது புறக்கருவிகளின் உதவி சிறிதும் வேண்டாமல், மலினம் அற்ற இயற்கை உணர்வுக்கு எல்லாப் பொருள்களும் நேரே புலனாம்படி அறிந்தாங்கறிந்து நிற்றல், இதுவே சருவஞ்ஞத்துவம். என்றும் நிறைவு எனப்படும் நித்திய திருப்தித்துவம் என்பது தனக்கு மேல் ஒன்றில்லாதாய்த் துன்பம் என்பது தன் கட்டினைத் துணையும் இல்லாததாய் உள்ள பேரின்பத்தால் நிரம்பி நிற்றல் இதுபற்றியே " பிரமம் ஆனந்தம் " என்னும் சுருதி வாக்கியமும் எழுந்தது. (தைத்திரீய உபநிடதம், 3, 6.)
     
சுவாதாச்சிதம் என்பது தானாகவேயுள்ள தனக்கு மேலொன்றில்லாத பேரறிவுடைமையாகும். - இதுவே ஆதியில்லாத அநாதி போதம் என்றுஞ் சொல்லப்படும்.
     
சுவதந்திரம் என்பது பிறர்வயப்பட்டிராமையும், தன்பாற் கீழ்த்தரமான அடையாளங்கள் இன்றித் தன்னையொழிந்த எல்லாவற்றையுந் தன் ஆட்சிக் கீழ்வைத்து நடத்துவதும் ஆகும். என்றுந் தவறா ஆண்மை எனப்படுவதாகிய நித்தியலுப்த சத்தித்துவம் என்பது தன்னியற்கையில் எல்லா வல்லமையும் பொருந்தப் பெற்றிருத்தல், அளவு படாத ஆற்றலுடைமையே முடிவற்ற வல்லமை எனப்படுவதாகிய அந்த சத்தித்துமாகும்.
 
முடிவு படாத இவ்வாற்றல்களை உடைமையினாலே தான் பிரமமானது உலகத்தைத் தோற்றுவித்து அதனை ஆளுதல் செய்கின்றது. சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் உண்மைப்பொருளாகிய சத்தாய், அறிவுப்பொருளாகிய சித்தாய்க் குணிரூபமாயுள்ள  உயிர்ப்பொருளே யாகுமல்லது, உயிரில்லாது இறந்து கிடக்கும் சடசத்தி அன்று. கடவுள் குணங்களற்ற பொருளன்று. அங்ஙமாயின், கடவுளை நிர்க்குணன் என்றும் குணாதீதன் என்றுங் கூறுவதென்னையெனின்; சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மாயா குணங்கள் உடையன் அல்லன் என்பதே அச்சொற்களுக்குப் பொருளாம். சகுணம் என்பது இம்முக்குணங்களையுடையதாகும்.
   
கடவுள் அவன் அவள் அது வென்றும் மூவகை வடிவினனாக ஓதப்படினும், அவன் அவை ஒன்றும் அல்லன். கடவுள் உருவமும் அல்லன், அருவமும் அல்லன், அருவுருவமும் அல்லன்; என்றாலும், அவன் நம் பொருட்டுத் தன் அருளையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு தோன்றி அருள் புரிவன். கடவுளாகிய சிவபெருமான் பிரமா, விஷ்ணு, உருத்திரன் என்னுந் திரிமூர்த்திகளில் ஒருவன் அல்லன்; " சிவம் சதுர்த்தம்  சாந்தம் அத்வைதம்'' என்று உபநிடதங்களிற் கூறப்பட்டபடி, அவர்களுக்கு அப்பாற்பட்ட நான்காவது பொருள் ஆவன். கடவுள் தாய்க்கருப்பையுட் படாதவனாகலின், அவன் நம்மனோரைப்போலச் சடவுடம்பு கொண்டு மனிதாவதாரம்  எடுப்பவனும் அல்லன்; பின்பு இறப்பவனும் அல்லன்; அதனாலேதான் அவன் அஜன் அல்லது பிறவாதவன் என்றும், அமிருதன் அல்லது இறவாதவன் என்றும் வேதங்களினும் உபநிடதங்களினும் ஓதப்படுகின்றான். திருமூல மஹருஷியும்
''பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
      இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
            துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
      மறப்பிலி மாயா விருத்தமுமாமே''
என்று திருவாய் மலர்ந்தருளினர்.

முற்போந்தவற்றை யெல்லாம் தொகுத்துச் சொல்லுங்கால், உண்மையான வேதாந்த சித்தாந்த தத்துவத்தின்படி கடவுள் சத்துச் சித்து ஆனந்தம் ஆவரென்பதூ உம்; அவர் சடப் பொருளும் ஆகார் சடப்பொருளாற் பற்றப்படுபவரும் ஆகார் என்பதூஉம்; அவர் நிர்க்குணராயும் குணிப்பொருளாயும் என்றும் ஆனந்த நிறைவினராயும் அன்பே வடிவினராயும் படைத்தல் முதலாகிய தன் எல்லாச் செயல்களையும் அருளாற் செய்பவராயும் உள்ளவரென்பதூ உம்; அவர், அவன், அவள், அதுவென்றும் ஒன்றும் அல்லாதவராயும், சடரூப அரூபங்கள் உடையரல்லராயும், தம்மை அன்பால் வழிபடுவார்க்குத் தம் அருளினையும் மாட்சியினையும் புலப்படுத்துபவராயும் இருப்பாரென்பதூ உம்; அவர் பிறக்கவும் இறக்கவும் மாட்டாதவராகையால், மலமாயா கன்மங்கள் என்னும் வலையில் அகப்பட்டுப் பதைப்புறும் உயிர்களை அவற்றினின்றும் பிரித்தெடுத்து நிறுத்த வல்லராகிய வரம்பற்ற தனித் தலைமைத்தூய கடவுளாமென்பதூஉம்; அவரை உண்மையான நம் அப்பன் என்றும், சகோதரன் என்றும் அறிந்து, அவரை உண்மை அன்பால் வழிபடுதல் ஒன்று மாத்திரமே பிழைபடும் உயிர்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் போக்கும் மருந்தா மென்பதூ உம் இனிது  பெறப்படும் என்க.
ஓம் சிவாயநம:
சித்தாந்தம் – 1912 ௵ - ஜனவரி ௴

No comments:

Post a Comment