Saturday, May 9, 2020



வேலுமயிலும் துணை
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க
குரு துதி

[ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரியர் அவர்கள் அருளிச் செய்தது]

சிறப்புரை

ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டினைப் பெற்று அவர்க்கு அருள் செய்தற்கு எல்லாம் வல்ல இறைவன் கொண்ட வடிவங்கள் மூன்று. அவை குரு லிங்கம் சங்கமங்கள் ஆகும். லிங்கம் ஆலயத்துள் அமர்ந்து அருள் செய்யும் இயல்பினையுடையது. ஏனைய இரண்டும் எங்கும் சரித்து அருள்வன. குருவுரு தன்னையும் மற்றைய இரண்டின் இயல்பினையும் எடுத்து உரைத்து வீட்டு நெறிக்கு உரியவைகளையும் போதிக்கும். கடவுள் இல்லை என மறுப்பாரும் குருவை மறுக்காது வழிபடுவர். அத்தகைய குருமார்கள் பலபேர் உலகில் தோன்றினர். அவருள் ஒருவர் சென்ற ஆண்டு பழநியில் பரசிவ லிங்கத்திற் கலந்த திரு ஞானியார் அடிகளார். அவர் திருக்கைலாய பரம்பரைத் திருக்கோவலூராதீனத்து திரு ஞானியார் மடாலயத்து ஐந்தாம் முறையாக வந்த தலைவர். இவர், நல்லார் - பொல்லார், ஆண் - பெண், அன்பர் - அன்பிலர், தன் சமயத்தவர் - பிற சமயத்தவர் என வேற்றுமை நாடாது, அவர்கள் பால் அருள் சுரந்து, அமர்ந்து, இனிது ஒழுகி அவர்கள் உள்ளத்தழுக்கைப் போக்க ஞான உபதேசம் செய்தவர். தமிழ் உலகெங்கும் சொன்மாரி பெய்து. தமிழ்ப் பயிரினையும் சைவப் பயிரினையும் வளர்த்தவர். இவர் மறைவிற்கு மனங்கலங்காதவர் ஒருவரும் இலர். இத்தகைய பெருமானார், தமக்கு வினைவழி வந்த கால் ஊனத்தைப், பல சிகிச்சையினாலும் தீர்க்க இயலாது மருத்துவர் கைவிட, குரு துதி கொண்டு தீர்த்துக்கொண்டனர். அப்பாக்களுள் சிதைந்தன பல; கிடைத்தன சில. அவைகளை ஒருங்கு திரட்டி அன்பர்கள் ஓதி யருள்பெற அச்சிடுவித்தனன்.

உலகி லுயர்ஞான மோங்க வுதித்தாய்
தலைமைபெறு ஞானமெனச் சாற்றி - மலரிங்க
நின்னை யடைந்தேனை நீயே யகற்றிவிடின்
தன்னை யறிவேனோ சாற்று.                                              (1)

கோவற் பதிவாழ் குருபரனே யாறுமுக
தேவவெனக் கியாவருளர் செப்புவாய் - - ஓவலிலா
ஆணவத்தி லாழ்ந்த யறிவினேற் கொளிஞானம்
பூணுறச்செய் வாரைப் புகன்று.                                             (2)


புகலாக நின்பாற் புகுந்தேனைக் காத்து
நிகரிலா ஞானநேர் வித்து - தகைபெறுநன்
தாமரைநேர் சீரடியிற் சார்விக்க வேண்டுகிறேன்
கோமளமார் ஞானகுரு வே.                                               (3)

கொடியேனை யாண்டு குறையகற்றத் தோன்றிப்
படியாதி தத்துவத்தின் பாங்கை - - மடியுடையேற்
கைய மகல அறிவித்த ஞானகுரு
வையமதி லாறுமுக வன்.                                                (4)

வன்னெஞ்சே யாறுமுக வள்ளல் குருராயன் (னொடுநான்
பொன்னடியைப் போற்றுதற்குப் போற்றுவம்வா - நின்
பன்னாளு மொத்துநடந் தென்ன பயன் கண்டேன்
என்னொடுவா வுண்டுபய னெண்.                                          (5)

எண்ணம் பலநமக் கிவ்வுலகிற் செய்யபல
எண்ணுவன செய்ய இயலவிலை - எண்ணியதைச்
செய்யும் வலந்தந்து செய்விப்பா னாறுமுக
அய்ய னவனடி சேர்ந் தால்.                                               (6)

அன்பரெலாம் போற்றுமெழி லாறுமுக குருவை
இன்புறுவா னெய்தினேன் ஏழையேன் - - துன்பமெலா
மோட்டினான் இன்ப உருவாகத் தானிருத்தல்
காட்டினான் கண்டுகொள வே.                                             (7)

கண்டுணர வல்லேனோ காட்டாயே லிவ்வுலகிற்
பண்டைமல வாணவத்தால் பாழ்பட்டேன் - தொண்டர்க்கு
வேண்டு நலங் கூட்டுவிக்கும் வித்தகனே யாறுமுக
ஆண்டவனே செய்க அருள்.                                               (8)

அப்பணியுஞ் செஞ்சடையெம் அப்ப னருட்பெருக்கால்
இப்புவியோ ருய்ய எழுந்தருளும் - - ஒப்பில்
உருவே யருவே யுபயமே ஞானம்
குருவே யருள்வதெந்நாள் கூறு.                                           (9)

காயமே மேலாக் கருதுமய லென்றொழியும்
ஆயபொரு ளாசை யகல்வதென்றோ - தூயர்
துதிக்குமுயர் கோவற் சுருதிசொல் தேவே
கதிக்கும் நின் தாளே கதி.                                                 (10)


கதியெனக்குன் காற்கமலம் காண்பார் வியக்கும்
மதியெனக்குன் வாய்வருநல் வாய்மை - பதியெனக்கு
நீயன்றி வேறுண்டோ நேரில் குருபரனே
தாயன்றிச் சேய்க்குயார் சாற்று.                                            (11)

முன்னைந் தெழுத்தின் முதலி லுள நமவைப்
பின்னைந் தெழுத்தினிலே பின்னிறுத்திப் - - பின்மூன்றாற்
காரண வைந்தைக் கழறியாட் கொண்டனையே
ஆரணஞ்சொல் கோவலழ கா.                                             (12)

ஒன்றுக்கும் பற்றேனை யுன்னியன் றாட்கொண்டாய்
இன்றேன் விடுகின்றா யெங்குருவே - என்றும்
இயல்பொன் றுயர்ந்தோர்க் கென்பர் பெரியார்
மயல்போக்கு மாகுரு வே.                                                (13)

நின்னரு ளின்றே னிலையின் புறுவேனோ
முன்வரு மாறு முக்குருவே - இன்னலெலாம்
பாற்றி யிருவினையாற் பாரிலுதிக் காவண்ணம்
தோற்றுவா யென்னைத் தெரிந்து.                                          (14)

(செய்யுள் 15 முதல் 28 வரை விடுபட்டுள்ளது)

மறதி மிகவுடையேன் வந்துநினை வாழ்த்தேன்
பிறராற் பெருமதிப்பைப் பேணித் - தறையினில்யான்
குற்றம் பலசெய்வேன் கோவற் குருபரவென்
பற்றற நீகடைக்கண் பார்.                                                 (29)

பார்த்து விடிலென்றன் பாவம் பறைதருமே
தீர்த்தந் தருகோவற் றேசிகனே - மூர்த்தம்
நினைநினைக்கின் ஞானநிலை நேர்ந்திடுமென் றோர்வேன்
தனை நினைக்கத் தண்ணளிசெய் வாய்.                                    (30)

பொய்யகன்ற நிட்டானு பூதியை நான் வாசியேன்
செய்ய நினதடியைச் சிந்தனை செய் - - துய்யும்
வகையறியேன் கோவல் வருகுருவே வாழ்த்துக்
தகைநீ யெனக்கறியச் சாற்று.                                              (31)

சாற்றுநா ளென்றோ தகுகோவ லாரியனே
மாற்றந் தெரிந்துரைக்கு மாண்பிலேற் - காற்றவுமே
போற்று மறைமுடியிற் பொன்றா வொருமொழியென்
ஏற்ற முறுமொழியை யே.                                                (32)
ஒருமொழியை நீயருளி னுற்றிடுவே னின்பம்
ஒருமொழியே யின்ப முறுவிக்கும் - ஒருமொழியுந்
தேறா வடியேன் தெளிந்தின்பம் பெற்றிடுவான்
பேறாங் குருபர நீ பேசு.                                                   (33)

பேசிடுவேன் வீண்சொற்கள் பேசிப் பயன் சொற்கள்
ஆசகல நின்றிலனென் னாரியனே - பாசமைந்தும்
பாற்றிப் பதிஞானம் பல்குமா பார்த்தருள் செய்
தேற்று தொழினின தே.                                                   (34)

மருவார்ந்த கொன்றையணி வள்ளல்வாழ் கோவற்
குருமணியை ஞானமிலேன் கூடித் - - திருவென்பாள்
கண்ணருள் பெற்றேன் கலைமா னருள் பெற்றேன்
எண்ணு முமையருளோ டிங்கு.                                            (35)

இங்கன்றி யங்கும்யா னின்பம் பெறுதற்குப்
பொங்குசிவ ஞானம் பொருந்துவேன் - எங்கும்
நினதுருவாக் கண்டு நிலைத்தசுகம் என்றோ
அனக பெறுவ தறை.                                                     (36)

குருவருளின்றிக் குலவுவாழ் வுண்டோ
குருவருளின்றிக் குறுகும் - திருவுண்டோ
எல்லாரும் போற்று மெழிற்கோவ லாறுமுக
நல்லானே நல்குதிரு வாழ்வு.                                              (37)

நின்னருளி னாயேன் நினைப்பேன் நின தடியை
நின்னருளி னாயேன் நிகழ்த்துவேன் - - நின்புகழை
நின்னருளி னாயேன் நினைவணங்கும் பேறுற்றேன்
என்ன குறையு மிலேன்.                                                  (38)

குறையேது நினையடைந்த கூரறிஞர் கட்கு
மறையோது ஞான வள்ளால் - தறையில்
உயர்கோவல் வந்த உறுவர் கோவே
மயர்வகற்றி யாள்ககுரு வே.                                              (39)

குருவே குருவே குருவே குருவே
குருவே யெனப்பலகால் கூறி - வருவேன்
பலநாளா கோவற் பதிவாழ் குருவே
நலவழியி லென்னை நடத்து.                                              (40)


எல்லாஞ் சிவமென் றியம்பவுங் கேட்டேற்குப்
பொல்லா வினைகள் பொருந்துதலால் - நல்ல
அறிவெய்தப் பெற்றிலனே யாரியனே நின்னைக்
குறிக்கும் வழியினை நீ கூறு.                                             (41)

நின்றாட் கமலமலர் நீதியறி யேன் றலையிற்
பொன்றா வழகாப் பொருந்தாதோ - - குன்றாத
கோவலூர் ஞான குருபரனே யாறுமுக
தேவவெனை நீயருளாற் றேற்று.                                           (42)

தேற்றிடினீ யானுந் தெளிவுறுவே னின்னருளாற்
போற்றி வழிபடுவேன் புன்மையேன் - ஆற்றுள்ளே
முன்வரு பெண்ணை முழுதணியுங் கோவல்வாழ்
பன்னுகுரு வேகடைக்கண் பார்.                                            (43)

நீ சொல் உபதேசம் நித்தலு நான் செபியேன்
தேசஞ்சொ லாறுமுக தேசிகனே - மாசற்ற
நல்லொழுக்கங் கல்விவளம் நல்லவர்த நட்புடனே
நில்லென் றொரு சொல் நிகழ்த்து.                                         (44)

தெரிவையர்த மாசை திகழாசை யாசை
விரிநிலத்தி னாசை விரும்பி - உரவோர்
துதிகோவ லாறுமுக தூயகுரு நின்னைக்
கதியென் றடையேனைக் கா.                                              (45)

தக்கதொரு காலத்தில் தக்கதொரு நல்லிடத்தில்
தக்கதொரு சாதனையைச் சாதித்துத் - தக்கவர்கள்
போற்று குரு வாறுமுக புங்கவநிற் சாரேனைத்
தேற்றுவ தெந்நாளோ செப்பு.                                              (46)

என்னைப் பொருட்படுத்தி யென்னை நீ கொண்டதன்றித்
தன்னையெனக் கீந்த தயாநிதியே - பன்னுவதென்
நின்னை மறப்பனெனி னீசனே னுய்வேனோ
மேன்னுகோ வற்குரு வே.                                                (47)

குருபூஜை யாலே குவலயம் ஓங்கும்
குருபூஜை யாலே குடிகள் - மருவுவரே
செல்வம் புகழாயுள் சேர்ந்த வுளமனைவி
புல்லும் புதல்வர்தம் பேறு.                                                (48)


கோவல்வாழ் ஞான குருபூஜை செய்தோர்கள்
தாவில் வளமிகவித் தாரணியில் - - ஓவாது
பெற்றுவப்ப தன்றியே பேரின்ப மும்பெறுவர்
கற்றவர்கள் சொல்வதிது காண்.                                            (49)

சித்தாந்தம் – 1943 ௵ - ஜனவரி ௴


No comments:

Post a Comment