Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
குருவணக்கம்.

குருவணக்கம் என்பதற்கு குருவுக்குச் செய்யும் வழிபாடு என்பது பொருளாய் நான்காம் வேற்றுமை உருபும்பயனும் உடன் தொக்க தொகையாய் நின்றது. குரு என்பது வடசொல். கு என்றதற்கு இருள் அல்லது அஞ்ஞானம் என்பது பொருளாம், ரு என்பது நீக் கம் அல்லது ஒளி எனப் பொருள்படும். ஆகவே அஞ்ஞானமாகிய இருளை நீக்கி ஞானமாகிய ஒளியைக் கொடுப்பவரே குரு எனப்படுவாரென்பர். தன்னின் வேறாகாது ஒற்றுமைப்பட்டுத் தோன்றும் உடலையும் தன்னின் வேறாகத்தோன்றும் பொன் பூமி முதலிய பொருள்களை யும் யான் எனது எனப்பற்றிக் கோடலாகிய அறியாமையைக்களைந்து கண்ணுக்குத் தோன்றும் உடற்பொருளும் உலகப்பொருளும் போலாது ஸ்பரிசத்தல் அறியப்படும் பொருளாகிய உயிர் என்பதொன்றுண்டு, அவ்வுயிரே யானெனப்படும் பொருளாகுமென வறிந்து கொள்வதுடன், இவ்வான்மாவின் இலக்கணம்யாது? ஆன்மா அடையவேண்டிய பேறயாது? அடைதற்குரிய வழிகளெவை? என்பவாதியவற்றை யாராய்ந்தறியச் செய்பவரே குருவாவர். இவர் இலக்கணத்தை ஆத்திரையன் பேராசிரியர் கூறிய,

"வலம்புரிமுத்திற் குலம்புரி பிறப்பும்
வான்யா றன்ன தூய்மையும் வான்யாறு
நிலம்படர்ந்தன்ன நலம்பட ரொழுக்கமும்
திங்களன்ன கல்வியுந் திங்களொடு
ஞாயிறன்ன வாய்மையும் யாவது
மஃகாவன்பும் வெஃகா வுள்ளமும்
துலைநாவன்ன சமநிலை யுளப்பட
வெண்வகையு றுப்பின ராகித் திண்ணிதின்
வேளாண் வாழ்க்கையுந் தாளா அண்மைய
முலகியலறி லு நிலைஇய தோற்றமும்
பொறையுநிறையும் பொச்சாப் பின்மையும்
அறிவுமுருவு மாற்றலும் புகழுஞ்
சொற்பொரு ளுணர்த்துஞ் சொல்வன்மையும்
கற்போர்நெஞ்சங் காமுறப் படுதலு
மின்னோரன்ன தொன்னெறி மரபினர்
பன்னருஞ் சிறப்பி னல்லாசிரியர்.''

எனும் தொல்காப்பிய பாயிர சூத்திரத்தாலறிக. மற்றும் ஓராகமத்தின்க ணுள்ள கிரியா காண்டம் ஞான காண்டம் மென்னுமிரண்டையும் ஒதித் திரிபதார்த்த லக்ஷணத்தை யறிந்தவனே ஆசிரியனாவா னென்றலும் ஒன்று.
குருவகை ''முந்திப்பிரேரிப்பான் போதிப்பான் முத்திதனென் றிந்தவிதத்தார் தேசிகர்' என்று சைவசமய நெறியிற்கண்டபடி பிரேரகாசிரியனென்றும், போதகாசிரியனென்றும் முத்திதாசிரிய னென் றும் குரு மூவகைப்படுவர்.

பிரேரகாசிரியன் அம்மூவகை யாசிரியருள் முதலாவதாகிய பிரேரகனென்பான் சைவத்திற்கு யோக்கியர்களாகிய மாணாக்கர்களை உமக்கு அருள் செய்தற்கு யோக்கியராகிய ஆசாரியரிவரென்று காட்டி. அவனாயடையும்படி செலுத்தி உய்விப்பவனாம். (பிரேரிப்பான் - முற்பட்டுச் செலுத்துவான்) பிரோகனெனினுஞ் சோதகனெனினு மொக் கும். இதை "சைவரைச் சாரவ ருட்டக்கா னிவனென்றே, யுய்விப் பான் முந்தினனென்றோர்''  என்பதாலறியலாம்.

போதகாசிரியன் போதகாசிரியனாவான் தன்மேலன்பு கொண்டு தன்னையடைந்தமாணாக்கனுக்குச் சமயதீக்ஷைவிசேஷ தீக்ஷைகளைச் செய்து ஆசாரங்களைக் கற்பித்தருளுவோன். இவரே கிரியா குருவென்றும், குலசருவென்றும் சொல்லப்படுவர். இவர் சுபாசுபக்கிரியை களைச் செய்தலுடன் தீக்ஷாக்கிரமத்தால் சமயப்பிரவேசம் செய்விப்பவர். ஒருவன் ஞானத்தை யடைய வேண்டுமாயின் பற்றுவிடல் வேண்டும். கருமத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆகவே கர்மானுஷ்டானங்களால் பற்று விடலும், பற்றுவிட்டால் ஞானமும் கைகூடு மென்பது பெறப்பட்டது. ஆதலால் ஞானத்தை அடைவதற்குச் சமயப்பிரவேசம் செய்விப்பதே முக்கிய சாதனமாகும். இப்படிச் சமயப்பிரவேசம் செய்விப்பவர் குலகுருவாவர்.

முத்திதாசிரியன் மூன்றாவதாகிய முத்திதாசிரியனாவான் முந்திய சமயதீக்ஷை விசேஷ தீக்ஷைகளைப் பெற்ற மாணாக்கனைப் பன்னிரண்டு வருஷத்திற்குள்ளே பக்குவம் பரிக்ஷித்து நிர்வாண தீக்ஷை செய்து அவனுடைய பாசத்தைச் சோதிப்பவன். இதனை “அடைந்தவனைப் பக்குவம் பார்த்தாண்டாறிரண்டுட், டடிந்தவனே பாசமுத்தி தன்" என்னும் குறளால் அறியலாம்.

இவனே ஞானாசிரியன் - அனுபவிகளே ஞான குருவாவர். இவர் அதிட்டிதகுரு, ஆவேசகுருவென விருவகைப்படுவர். இவர்கட்கு மேற்கூறிய ஜாதிவரம்பு இல்லை. பிராமணர் முதலிய மூன்று வரு ணத்தாராகிய சூத்திரருள் ஞானாசிரியனுண்டாயின் அவ்வாசிரியனி டத்திலே பிராமணர் முதலாயினோர் ஞானோபதேசம் பெறலாம். ஞானோபதேசம் மாத்திரம் பெறுதலேயன்றிக் கிரியா உபதேசம் ஒருக் காலும் பெறக்கூடாது. இதனை,

அற்றிடினே யந்தணருள் ஞானி யடுத்தவன்பாற்
பெற்றிடுக வந்தணன் மெய்ப் பேறு.
இந்த முறைமற்றையர்க்கு மேற்கு மிது தன்னை
நிந்தையல் வென்றே நினை.
பிரமோபதேசம் பெறுதலே பாங்கு
கருமோபதேசங்கழி. என்னும் பாக்கள் வெளிப்படுத்தும்.
"ஸ்ரஷதாநம்பபாடவிவுலாமா
ஷஷ்தாவரதபி அந்தலாஷ பிபதர்மம் ஸ்திரீரத்னம்  
தமஷ்கூலாவுபி. என்னும் மனுஸ்மிருதி சுலோகத் தாலும் உணரலாம்.

இதற்குச் சான்றாக பிரமவிருடிகளாகிய துருவாசர் முதலாயி னோர் பிராமணர் முதலிய மூன்று வருணத்தாருள்ளும் ஞானாசிரியனில்லாமையால், நான்காம் வருணத்தானாகிய விதுரனிடத்திலே ஞானோபதேசம் பெற்றார்களென்றுபாரதபாகவதங்களிலும், சைவத்திலே திருத்துறையூரிலிருந்த ஆதிசைவராகிய சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி சிவாசாரியர் திருவெண்ணெய் நல்லூரிலிருந்த நான்காம் வருணத்தாராகிய மெய்கண்ட தேவரிடத்திலே ஞானோப தேசம் பெற்றாரென்றும் கூறப்பட்டுள்ளது.

அதட்டிதகுரு சமயகுரு, சந்தான குரு என விருவகைப்படுவர். சமயகுரு உலகத்திலே மதத்திற்கு ஆபத்து வருங் காலத்தில் இறைவனருளாலவதரித்துப் பலவற்புதங்களைச் செய்துகாட்டி மெய்ச்சமய மிதுவென விளக்கிப் பொய்ச் சமயங்களைக்களைந்து உலகத்தை உய்விப்பவர். இவர்களே ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள் ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகளெனப் போற்றப்பட்டவர்கள். இதனைத் திருவிளையாடல் வாதவூரடிகளுக்குபதேசித்த படலத்திலுள்ள “ஆய்வளம் பதிய தனி னமாத்தியரி லருமறையின், அயசிவா கமநெறியின் றுறை விளங்க வஞ்சனையான் மாயனிடும் புத்தவிருளுடைந்தோட வந்தொருவர், சேயவிளம் பரிதி யெனச் சிவனருளாலவதரித்தார்' என்னும் செய்யுளாலறியலாம்.

சந்தானகுரு இறைவனருள் பெற்று உலகத்தார்க்கு ஞானோப தேசம் புரிந்து உய்வித்தற் பொருட்டு உலகில் வந்து சஞ்சரித்துப் பரம்பரையாக வருபவர். இவர் வரலாறு ஆதியில் திருக்கைலாய மலை யில் அருள்வடிவாகி எழுந்தருளிய ஸ்ரீசண்டபரம சிவன்பால் ஞானோ பதேசம் பெற்றவர் திருநந்திதேவர். பின்னரவர்பால் சனற்குமாரமுனி வரும் அவர்பால் பரஞ்சோதி மனிவரும் ஞானோபதேசம் பெற்றனர். பின்பரஞ்சோதி முனிவர் தமழுலகம் பெற்றமாதவப் பேற்றால், திரு வெண்ணெய் நல்லூரையடைந்து மெய்கண்ட தேவருக்கு உபதேசிக்க அவர் அருணந்தி சிவாசாரியருக்கு உபதேசிக்க அவர் மறைஞான சம்பந்தருக்கும் அவர் உமாபதி சிவாசாரியருக்கும் உபதேசித்தருளினர். இவருக்குப்பின் அருணமச்சிவாய தேசிகர், மறைஞான தேசிகர், அம்பலவாண தேசிகர், உருத்திரகோடி தேசிகர், வேலப்ப தேசிகர், முற்குமாரசாமி தேசிகர், மாசிலாமணி தேசிகர், இராமலிங்க தேசிகர், முன்வேலப்ப தேசிகர் பின் வேலப்ப தேசிகர், திருச்சிற்றம்பல தேசிகர், அம்பலவாண தேசிகர், சுப்பிரமணியதேசிகர், அம்பலவாணதேசிகர் சுப்பிரமணியதேசிகர் என்றோர் நிஷ்டாபரர்களாய் உபதே சக்கிரமத்தில் வந்தவர் பதினெண்மராவர். இவர்களால் அருளப்பட்ட ஞான நூல்கள் பலவுள.

19 - வது ஞானாசிரியராய் இப்போது வீற்றிருப்பவர்களே திரு வாவடுதுறை யாதீன மடாதிபதியாகிய ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள். ஏனைய ஆதீனங்களும் கைலாயபரம்பரையில் வந்த சந்தான குரு நிலையங்களெனக் கூறப்படினும் சந்தான குரு சுவாமிகள் நால்வரையும் பூஜிக்கு முரிமை திருவாவடுதுறைக்கே உரிமையுடைய தாதலால், சந்தான பரம்பரையென் றவளவில் திருவாவடுதுறை யாதீ னத்திற்கே சிறப்புரிமையுண்டென்க.

1. "கயிலாய பரம்பரையிற் சிவஞானபோ தநெறி காட்டும் வெண்ணெய் பயில்வாய்மைெமய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞானபாநுவாகி குயிலாரும் பொழிற்றிருவாவடுதுறைவாழ்குரு நமச்சிவாயதேவன். சயிலா திமர் புடையோன் திருமரபு நீடூழிவாழ்கமாதோ''
2.
திருந்துவட கயிலை தனிற் பரமசிவ னளித்த
சிவ ஞான போதமுணர் நந்தி முதற் சிறந்தே
வருங்குரவர் வெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவர்
வழங்கருட்சந்ததி யருணமச்சிவாய தேசிகனாம்
இருங்குரவ னளித்த சிவப்பிரகாச தேசிக
னிலங்குமறை வனத்தருகோர் வன்குகையிலுறைநாட்
பொருந்தியவன் திருவடிக்கீழ வனருளேவலினாற்
போந்தருளாவடுதுறைவாழ் நமச்சிவர்யனைப் புகழ்வாம்.
3.
சிற்றுரையும் பேருரையும் சிவஞானபோதமெனு
தெய்வ நூற்குக்
கற்றறிந்தோர்களிகூரக் கருணையினாற் செய்தளித்தான்
கலைகடேர்ந்து
முற்றுணர்வு முதலியவற்றார் சிவனே யென்றறிஞர்
குழாம்மொழிந்து போற்ற
நற்றுறைசைப் பதிமருவுஞ் சிவஞான யோகியெலும்
நாமத்தானே"

இம்முறை வழங்கப்படுவது நவகோடி சித்தபுர்மென்னும் திருவாவடு துறையாதீன சந்தான குருபரம்பரையேயாம். இவ்விடயத்தை மேற்கூறியுள்ள பக்கங்களின் செய்யுளாலுணர்க. இந்த அதிட்டித பெத்தான்மாக்களிடம் உள்ளது போல்வதன்று, இறைவன் பெத்தான்பாக்களிடம் அதிட்டித்து நிற்பது

ஆவேசகுரு - பக்குவான்மாக்களை யாட்கொளவேண்டி இறைவன் ஆசிரியராக வந்து மெய்ப்பொருளை விளக்கி ஆட்கொள்ளும் அருள்வடிவம். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளை ஆட்கொள்ளக் கருதித் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தினடியிலே யெழுந்தருளியவர் ஆவேசகுருவேயாவர். இவர் இருவினையொப்பு வந்து மலபரிக முற்றுச்சத்திபோதம் பெற்ற ஆன்மா தன்னைப் பற்றி நின்ற பாச நீக்கம் பெற்றவுடன் அயரா அன்பின் அரன்கழல் சேருந்தன் மையைச்சின் முத்திரையா லுணர்த்தியாட் கொள்ளுவரென்பர். இதனை நமது கவிச்சக்கர வர்த்திகச்சியப்ப முனிவர் அருளிய.

மும்மலம் வேறுபட்டொழிய முத்தியில்
அம்மலர்த்தாணிழ லடங்கு முண்மையை
கைம்மலர்க்காட்சியிற் கது வநல்கிய
செம்மலையல துளஞ் சிந்தியா தமோ
என்னும் செய்யுளாலறியலாம்.

குமரகுருபரசுவாமிகளும் பண்டாரமும் மணிக்கோவையில்

மீகெழுபரஞ்சுடர் வெளிப்பட்டம்ம
வெம்மனோர்போல வினிதெழுந்தருளிக்
கைம்மாறற்ற கணக்கில் பேரின்ப
மோனவாழ்வளிக்கும் ஞானதேசிகன்
என்றும் அருளியிருக்கின்றதாலறியலாம்.

குருவின் சுடமை - அபக்குவர்களைத் தம்மிடத்தன்பும் அவர்க ளிடத்தருளுங் கொண்டு தள்ளிப்பக்குவர்களுக்கு நிர்வாண தீக்ஷை செய்து திரிபதார்த்தங்களையு முணர்த்தும் ஞான சாத்திரங்களை யும் தேசிக்கக்கடவர். ஞானகுரு நினைத்தலால் பக்குவ வான் மாக்கள் சிவமாகும். மீன் தன்பார்வையால் முட்டையினின்று குஞ்சுகளைத் தோற்றுவித்தல் போல பக்குவ வான்மாக்களைச் சிவனாந்தன்மையெய்தச் செய்வது அவரது தன்மையென்பர். இதனை திருவிளை யாடல் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்தில் உள்ள

பார்த்தபார்வையாலிரும் புண்ட நீரெனப் பருகும்
தீர்த்தன் றன்னையுங் குருமொழி செய்ததுந் தம்மைப்
போர்த்த பாசமுந் தம்மையு மறந்து மெய்ப்போத
மூர்த்தியாயொன்று மறிந்திலர் வாதவூர் முனிவர்
என்பதால் அறியலாகும்.

குருவின் பெருமை - "ஈசனுக்கிழைத்த குற்றம் தேசிகனெண் ணித் தீர்க்கும், தேசிகற்கிழைத்த குற்றம் குரவனே தீர்ப்பதன்றிப் பேசுவதெவனோ'' என்ற பெரியர்வாக்கின்படி கடவுளுக்கு நாமொரு குற்றஞ் செய்தால் அவ்வபராதத்திற் கேற்றபரிகாரஞ் செய்து குருவானவர் தீர்ப்பர். குருவுக்கு அபராதஞ் செய்தால் அவரே தீர்க்கவேண்டுமே தவிரவேறு கதியில்லை, இதனைத் தர்ம சாஸ்திரங்களிலொன்றிலுள்ள

ஸீவேருஷ்டேகரும்தாதா
குரௌருஷ்டேநகசக

என்னும் சுலோகமும் வற்புறுத்தும்.

“நான்மறைக்கிழவ நற்றவமுதல்வ
நூன்முறைபயின்ற நுண்மைசால்அறிஞ
சொற்சுவைபழுத்த தொகைத்தமிழ்க்கவிஞ
கற்றவர் வியக்குங் காவியப் புலவ
செவிதொறுஞ் செவிதொறுந்தெள்ளமுதூட்டு
கவிஞர் வயினிரப்புங் கல்விப்பிரசங்க
வெள்ளிடத்தோன்றா துள்ளத்துணர்த்தவுஞ்
சேய்நிலைநின்று திருக் கண்சாத்தவுஞ்
சாயாமும்மலச் சகலரே முய்ய
வெம்முருக்கொண்டு மெம்மொடுபயின்று
மும்மலக்கிழங்கை முதலொடு மகழ்ந்து
சிற்பரமுணர்த்துஞ் சற்குருராய
பளிங்கினிற்குயின்ற பனிநிலாமுற்றத்து
விளங்கிழைமடந் தையர்விளையாட்டயர் தரச்
கொங்குவார்குழலுங் குவளை வாள் விழியும்
பங்கய முகமும்பத்தி பாய்ந்தொளிர் தலிற்
சைவலம் படர்ந்து தடங்கயலுகளுஞ் –
செய்யபூங்கமலஞ் செழுமலரோடையென்
றாடவர் சிற்சிலர் நாடினர்காணூஉ
வம்மின் வம்மின் மடந்தையர் நீவிர்மற்
றம்மெல்லேர் தி யரைம்பையராதலி
னீர்நிலைநிற்றிரா னீரவர் தங்களுள்
யார்கொல்யார் கொல்லிசைமினிசைமினேன்
றிறும்பூதெய்தி யிரந்தனரிசைப்ப
மறுமொழிகொடாது குறுநகைமுகிழ்த்தாங்
கையுறவகற்று மணிமதிற்கமலை
நன்னகர்புரக்கு ஞானதேசிக
வாசிலாவண்புகழ் அணிநிலாவெறிக்கு
மாசிலாமணி ஞானசம்பந்த
வென்பொருட்டாயினு மென்பொருட்டன்றிது
நின்பொருட்டொரு பொருணிகழ்த்துவன் கேண்மோ
வறிஞனோம்பிய செறுவொன்றேய்ப்ப –
பக்குவநோக்காப்பவந் தொறும்பவந்தொறு
மிருவினைப்போகமு மேற்கொண்டார்த்துபு
மற்றென்னுருக்கொடு முற்றினையாலினித்
தாகமின்றாகலிற் பாகமின் றெனக்கென –
வருளாதொழியினு பரிபவநினக்கே - -
சேய்முகம்பாராள் சினந்தனளேகினும்
போயெடுத்தாற்றுமத் தாய்மீட்டன்றே
யாதலினெனைப்போலடிக்கடித்தோன்றலை
யீதியாலின்னருளின்னணமெமக்கே
சமையந்தீர்ந்த தனிப்பொருடெறித்தற்
கமையந்தேர்கலை யருளுதியாயினு
மென்னீராண்டைக் கிலக்கமிட்டிருந்த
வண்ணலங்குமரற் காருயிர்தோற்றக்
கடாவிடையூர் தீபாற்கண்டு.'
மடாதெனமொழிகுக ரார்கொன்மற்றுனையே''

'' சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலு மென் சுந்தரனுஞ்'
சிற்கோலவா தவூர்த் தேசிகரும் - முற்கோலி –
வந்திலரேல் நீறெங்கே மாமறை நூலெங்கே
எந்தைபிரானஞ் செழுத்தெங்கே"

என்னும் செய்யுள்களாலும் அறியக்கிடக்கின்றது மற்றுமிவர் பெரு மையாவர்க்கும் தெரிந்ததே.

குருவையடையும் வழி : - சமுசாரசாகரத்தினின்று தவிக்கும் சீடன் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்துப் பிறவிநோயை நீக்கக் குருவை யடையவேண்டும் "கள்ளக் காதலனிடத் தன்புகலந்து வைத் தொழுகு முள்ளக் காரிகைமடந்தைபோல்"  குருநாட்டங் கொண்ட பக்குவ சீடர்கள் எத்தொழிலைச் தெய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் அத்தனாகிய குருவையடையுநாள் எதுவோ வென்றேக்க மேலி பட்டவராகியேயிருப்பர். அப்படித் தேடும் நன்மாணாக்கர்களை ஆட் கொள்ளுவது இப்பரம குருவின் தன்மை.

குருவைவழிபடு முறை - மாணாக்கன் குருவினிடத்தில் விருப்ப முடையனாய், அவனை அன்புடன் வணங்கி ஆசிரியர் நித்திரை நீங்கி எழுந்திருந்து இன்னது செய்யென்று ஏவுதற்கு முன்னே தானெழுந்திருந்து ஸ்நானம்பண்ணி அனுஷ்டானஞ் செய்து முடித்துக்கொண்டு அவர் முன்னே வந்து நின்று அவரைப் பலமுறை ஸ்தோத்திரஞ் செய்து அவருக்கு வேண்டுந் தொண்டுகளைச் செய்து பாசத்தை நீக்கும் ஆசிரியரைச் சிவபெருமானிவரேயென்று மனதினால் அன்போடு பாவனை செய்யக் கடவன்.

'புரிந்தே குரவனடியிணையும் போற்றிப்
பரிந்தேயவர் துய்ப்பணிந்து"

“ஏவுதன் முன்னே யியற்றிப்பணி யறிந்து
நாவினவின் றவ னாமம்''

சிந்தனைசெய்க சிவனிவனே யென்றுளத்துட்
பந்தமறுப்பானைப் பரிந்து''
என்னும் சைவசமய நெறிச்செய்யுளா லுணரலாம். மற்றும்,

அழலினீங்கானணு கானஞ்சி, நிழலினீங்கா நிறைந்த நெஞ்ச மோடு, எத்திறத் தாசானுவக்கு மத்திறம், அறத்திற்றிரியாப் படர்ச் சிவழிபாடே, என்ற நன்னூல் சூத்திரத்தாலும் அறியலாம். மேலும் ஞானதீக்ஷையால் உடல் பொருள் ஆவி மூன்றையும் தானஞ் செய்ய வேண்டும். அதாவது முன் செயற்கையாய்த் தன்னுடைமையாய் நின்ற இம்மூன் றனையுந் தனக்கின்றிச் சிவபெருமானுக்கே உடைமை யாகச் செய்தலாம். ஆவியாகிய தன்னைத் தானஞ்செய்தலாவது தான் சிவபெருமானுக்குப் பரதந்திரனென் றுணர்ந்து அவாருளல்லது ஒன் றைச் செய்யானாகி நிற்றலேயாம். தானே தனக்குச் சுதந்தர மின்றிச் - சிவபெருமானுக்கே உடைமையாய் வழித் தன்னின் வேறாய உடல் பொருள்கள் தன்னுடைமையாமாறு யாண்டைய தென்க, மறைஞா னசம்பந்த சிவாசாரியர்

“பொருளுடலாவியெனு மூன்றும் புதல்வன், குரவன் கொளென்கை குணம்"

என்று மாணாக்கன் தீக்ஷாகாலத்தில் உதகஞ்செய்யு மறைமையை யுணர்த்துகின்றார். இன்னும் இதை யொட்டியே,

"அன்றே யென்றனாவியு முடலும் உடைமை யெல்லாம், குன் றேயனையாய் என்னை யாட்கொண்ட போதே கொண்டிலையோ''  என்றும்,

தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கராயார் கொ லோசதுரர்"
என்றும்,

வஞ்சவினைக் கென்கலமா முடலைத் தீவாய் மடுக்கிலென் வரை யுருண்டுமாய்ப் பேனல்லேன், நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லேன் நாதனே யாதுநின துடமை யென்றே யஞ்சினேன்''

என்று கூறியுள்ள இன்னோர் வாக்கியங்களாலுணரலாம். மற்றும் சிஷ்யன் ஆசாரியர்களை அவர்களுடைய எதிரில் நிற்றலானும் அவர்களுக்குப் பணிவிடை செய்தலானும் வணக்கத்தோ டிருத்தலானும், அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தலானும் அவர்களுடைய உபதேசத்தைக் கடைப்பிடித்தலானும், கௌரவப்படுத்தவேண்டும். ஆசிரியன் நீதியுடனாவது, நீதியில்லாமலாவது ஒருகாரியத்தைச் செய் என்றேவினால் அதைச் சிஷ்யன் சிரமேற்கொண்டு செய்யவேண்டும். இதை

"அய்யனங் கது கேட்டற னல்லவும்
எய்தினாலது செய்கவென் றேவினால்
மெய்யநின் னுரைவேத மெனக்கொடு
செய்கை யன்றோயறஞ் செய்யுமா றென்றான்"
என்னும் பாவாலறிக.
ஆகையால் எய்துதற்கரிய மானிடஜென்மமெடுத்த நாமொவ் வொருவரும் அடையவேண்டிய பேற்றைச் சற்குருவாயிலாக உணர்ந்து, சிவபெருமான் திருவடிக்கீழ் உய்வோமாக.

துறைசை - நமசிவாயத் தம்பிரான் சுவாமிகள்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴


No comments:

Post a Comment