Saturday, May 9, 2020



திருமழபாடி
சைவநெறிக் காவலர் டாக்டர் மா. இராசமாணிக்கனார்.

திருமழபாடி. பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று. இத்தலம் திருவையாற்றுக்கு மேற்கில் ஒரு கல் தொலைவிலுள்ள திருநெய்த்தானத்துக்கு இரண்டு கல் தொலைவு வடக்கில் உள்ளது. திருமழபாடிக்கும் இதற்கும் இடையில் கொள்ளிடம் பாய்கின்றது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தலத் திலுள்ள சிவபெருமான் மீது திருப்பதிகங்கள் பாடியுள்ளனர். இதனால் இக்கோவில் அப்பர் சம்பந்தர் வாழ்ந்த கி. பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தது என்பது தெரிகிறது.

இக்கோவிலில் 103 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை முதலாம் பராந்தகன் காலம் முதல் கோனேரிதேவ மகாராசர் காலம் வரை (கி. பி. 1492) அரசாண்ட மன்னர் கள் காலத்தவை. எனவே, இக்கோவில் கி. பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 15 ஆம் நூற்றாண்டு முடிய மன் னர்களாலும் பொது மக்களாலும் நன்கு போற்றப்பட்டது என்பது விளக்கமாகும். இனி இக்கல்வெட்டுச் செய்திகள் குறிப்பவற்றைக் காண்போம்.

அரசர்கள்.
பராந்தகன்   -1                             கி. பி.             907 - 953
இராசராசன் -1                             கி. பி.             985 - 1014
இராசேந்திர சோழன் -1                     கி. பி.             1012 - 1044
இராசாதிராசன் -   1                       கி. பி.             1018 - 1054
குலோத்துங்கன் -1                          கி. பி.             1070 - 1120
மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்                 (குலோத்துங்கன் காலம்)
குலோத்துங்கன் -2                          கி. பி.             1133 - 1150
இராசராசன் -2                             கி. பி.             1116 - 1173
இராசாதிராசன் II                           கி. பி.             1163 - 1179
குலோத்துங்கன் III                          கி. பி.             1178 - 1218
இராசராசன் III                              கி. பி.             1216 - 1246
சடையவர்மன் சுந்தர பாண்டியன்            கி. பி.             1251 - 1271
சடையவர்மன் வீர பாண்டியன்              கி. பி.             1253 - 1268
மாறவர்மன் குலேசேகரன்                   கி. பி.             1268 - 1311
வீரப்பிரதாப தேவராயர்                     கி. பி.             1432
கோனேரி மகாதேவராயர்                   கி. பி.             1487 - 1492




விளக்கு அறம்.

கோவில்களில் விளக்கெரித்தல் பண்டைக் காலத்தில் சிறந்த அறமாகக் காணப்பட்டது. அதனால் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுக்களிலும் விளக்கு அறம்பற்றிய கல் வெட்டுக்களே மிகுதியாக உள்ளன. கோவிலில் சாதாரண விளக்கு, சந்திவிளக்கு, நந்தா விளக்கு எனப் பல விளக்கு கள் எரிக்க அறம் செய்யப்பட்டன. அடியார்கள் விளக்கை எரிக்க ஆடுகள், பசுக்கள், எருமைகள், நிலம், பணம், இவற் றைத் தானமாக வழங்குதல் வழக்கம். திருமழபாடிக் கோவிலுக்குக் கால்நடைகளுள் ஆடுகள் மட்டுமே விடப் பட்டன என்பது இங்கு அறியத்தகும். மழபாடிப்பகுதியில் அக்காலத்தில் ஆடுகள் மிகுந்திருந்தன போலும் ஒரு நந்தா விளக்கு எரிக்க 90 ஆடுகள் அளிக்கப்பட்டன. இங்ஙனம் கோவிலுக்கு விடப்படும் ஆடுகளைக்'கோவில் விளக்குக் குடிமக்கள்'என்னும் மன்றாடிகள் ஏற்றுக்கொண்டு, ஒப்பந் தத்தில் குறிக்கப் பெற்ற அளவு நெய்யை நாள்தோறும் கோவிலுக்கு அளத்தல் வழக்கமாகும். ஓர் ஆட்டின் விலை 48 காசு என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.

ஆடுகள் மேலும் மேலும் பல்கிப் பெருக ஆண் ஆடுகளும் உடன் தரப்படுத்தல் வழக்கம். அந்ஙனம் தரப்படும் ஆடுகள் எண்ணிக்கையில் குறைந்துவிடின், கோவிலாரோ பிறரோ புதிய ஆடுகளை வழங்குதல் வழக்கம்.

முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் முதற் குலோத்துங்கன் காலத்திலும் கோவிலுக்கு விடப்பட்ட ஆடுகள் எக்காரணத்தாலோ இறந்துவிட்டன. அதனால் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் புதிய ஆடுகள் கோவிலுக்கு விடப்பட்டன என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.

நில அறம்.

சமயத்தொடர்பான பலவற்றைக் கருதிக் கோவிலுக்கு நிலங்கள் விடப்பட்டன. பலர் தம் கால்களைக் கழுவாமலே நேரே கோவிலுக்குச் செல்கின்றனர். சிலர் திருக்குளத்தில் கால்களைக் கழுவிக்கொண்டு செல்வர். கோவிலுக்கு வருபவர் அனைவரும் கால் கழுவிக்கொண்டே கோவிலுள் நுழையவேண்டும் என்று வணிகன் ஒருவன் நினைத்தான். அவன் மலைமண்டிலத்து ஏறாண்புரம் என்ற ஊரினன். அவன் மூன்றாம் திருச்சுற்றின் தென்வாயிலில் ஒரு கிணற்றைத் தோண்டினான்; அதன் அருகில் ஒரு தண்ணீர்த் தொட்டியை அமைத்தான்; வேலையாள் ஒருவனை அங்கு நிறுத்தினான்; கோவிலுள் வருபவர்க்குத் தண்ணீர் எடுத்துத் தருதல் அவ்வேலையாள் கடமை. அவ்வணிகன் இத்திருப்பணிக்காக வரியிலியாக ஒரு குறிப்பிட்ட நிலத்தைக் கோவிலுக்கு வழங்கினான். கோனேரி மகாராயர் கோவில் நடன மகளுக்கு ஒரு நிலத்தை வழங்கினார்.

திருமழபாடிச் சிவன் கோவிலில் நாயன்மார் திரு உருவங்களும், பிட்சாடன தேவர், பாவனாபதி நாச்சியார், வைத்தியநாத தேவர், கொள்கைத்தேவர், அழகிய பிள்ளையார், சயங்கொண்ட சோழவிடங்கர், அவருடைய நாச்சியார் திருவுருவங்களும் பூசிக்கப்பட்டன. அடியார் பலர் இத்திருவுருவங்களுக்குப் பூசை நடத்த நிலங்களைக் கொடுத்தனர். திருப்பள்ளியெழுச்சியின் போது பூசை நடத்தவும், நந்தவனம் வைத்து நடத்தவும், விழாக்கள் நடத்தவும், சோலையை உண்டாக்கி வளப்படுத்தவும் நிலங்கள் தானமாக விடப்பட்டன.

நிலதானம் பற்றிப் பேசும் கல்வெட்டுக்களுள் பல, சிவலிங்கத்தின் திருமுழுக்குக்காகக் காவிரியிலிருந்து நாள் தோறும் ஒருகுடம் தண்ணீர் கொண்டுவருபவனுக்கு இன்ன அளவுள்ள நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டது என்று குறிக்கின்றன. அவை பல அரசர் காலங்களில் தோன்றியவை; - இரண்டு குடம் நீர்கொண்டு வருபவனுக்கு இவ்வளவு நிலம் தானம் என்றும் கூறுகின்றன. இங்ஙனம்124 சித்தாந்தம் காவிரி நீரை நாளும் கொண்டுவருவதற்காக நிலம் கொடுக்க இத்துணைக் கல்வெட்டுக்கள் வேறு எக்கோவிலிலும் தோன்ற வில்லை என்பது கவனிப்பதற்குரியது.

பிற அறங்கள்

நக்கன் தில்லை அழகியார் என்ற சோழமாதேவியார் வெற்றிலைத் தட்டு ஒன்றை வழங்கினார். இவ்வாறே வெள்ளி வெற்றிலைத்தட்டு, அன்னக்கெண்டி என்ற பித்தளைப்பாத்திரம், சேகண்டி, விளக்குத்தண்டு, காளப், கண்ணாடி, ஊது சங்கு, ஊதுகொம்புகள், விளக்குத் தண்டு, பல்வேறு பாத்திரங்கள், வெள்ளிக்கவசம் முதலிய பொருள்கள் பலரால் வழங்கப்பட்டன. இறைவனுக்குப் பொன் வாளும், பொற்பூக்களும் கொடுக்கப்பட்டன. கோவிலில் உணவு விடுதி இருந்தது. அதில் நாள் தோறும் சிவயோகிகள், மாகேசுவரர், தபஸ்விகள் ஆகியோரை உண்பிக்க நிலமும் பொன்னும் நெல்லும் வழங்கப்பட்டன. குற்றூர் உடையான் மூவேந்தவேளான் போன்ற அதிகாரிகள் புதிய மண்டபங்களைக் கட்டினர்; கோவிலை விரிவாக்கினர். கோவிலைப் பழுதுபார்க்க நெல்லும் நிலமும் வழங்கப் பட்டன. கோவிலில் மார்கழி ஆருத்ரா, மாசிசஷ்டி, ஆனி அஷ்டமி நாள் போன்ற நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப் பட்டன.

கோவில் ஆட்சி.

கோவில் அருச்சகரான சிவாச்சாரியரே சில சமயங்களில் அடியார்கள் சார்பில் விளக்குகள் எரிக்க ஒப்புக் கொண்டனர். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கோவில் அருச்சகனான கண்டராதித்தபட்டன் விளக்கு எரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டான். இரண்டாம குலோத்துங்கன், சந்திர பூஷணபட்டன் என்பவனைக் கோவில் அருச்சகனாக நியமித்தான் என்று ஒருகல் வெட்டுக் கூறுகின்றது.

சுவாமி பெயர்கள்.

திருமழபாடி உடையார், திருமழபாடி. ஆளவார், திருமழபாடிப் பெருமானடிகள், திருமழபாடி மகாதேவர் என்பன சுவாமியின் பெயர்கள். அம்மன் பெயர்கள் கல்வெட்டுக்களில் இல்லை. பலகோவில்களில் அம்மனுக்கென்று தனிக்கோவில் கி. பி. 11 ஆம் நூற்றாண்டிலிருந்தே தோன்றியது என்பதைக் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன.

சிறப்புச் செய்திகள்

இரண்டாம் இராசராசன் காலத்தில், சேக்கிழான் மாதேவடிகள் இராமதேவன் ஆன உத்தமசோழப் பல்லவ ராயர் என்ற ஒருவர், ஒரு நந்தாவிளக்கு எரிக்கத் தொண் ணூறு ஆடுகள் கொடுத்தார். இப்பெரியாரே பெரிய புராணத்தை இயற்றிய குன்றத்தூர்ச் சேக்கிழாராக இருத்தல் கூடும், என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சேக் கிழார் இரண்டாம் இராசராசன் தந்தையான இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியில் முதலமைச்சர் வேலைபார்த்தவர். அவர் பெரியபுராணம் பாடிய பின்பு துறவு பூண்டு தலயாத் திரை செய்திருக்கலாம்; அப்பொழுது திருமழபாடிக் கோவிலுக்கு ஆடுகளை வழங்கி இருக்கலாம்.

இக்கோவிலில் தெலுங்குக் கல்வெட்டு ஒன்று காணப் படுகின்றது. ஏழைகளுக்கும் புலவர்களுக்கும் கொடை வழங்கிய கோபய்ய திப்பன் என்பவர் மீது பாடப்பெற்ற புகழ்ப்பாடல் இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.

சோழர், பாண்டியர் ஆட்சிக்குப் பின்பு விசயநகர் ஆட்சிக்காலத்தில் இக்கோவில், அவ்வாட்சி அதிகாரிகளால் நன்கு கவனிக்கப்பட்டது. காஞ்சிப்புரவராதீசுவரன் மகா மண்டலேசுவான் இராய பசவசங்கரன் மகனால் ஒருமண்டபம் கோவிலில் கட்டப்பட்டது. கோனேரி தேவமகாராயர் கோவில் நிலங்கள் மீது வசூலித்த வரிகளை மகா பூசைக்கும் கோவிலைப் பழுதுபார்க்கவும் செலவிடும்படி கட்டளை பிறப்பித்தார்.

பொன்னார் மேனி விளாகம் என்பது கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒரு சிற்றார். இது போன்ற பல சிற்றூர்கள் அச்சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்திருந்தன என்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து" என்பது சுந்தரர் தேவாரம். இத்தொடரில் உள்ள 'பொன்னார் மேனி" என்பது ஓர் ஊருக்கு இட்டு வழங்கப்பட்டது என்பது இங்கு அறியத்தகும். இது, அக்காலச் சைவ நன் மக்கள், நாயன்மாருடைய அருட்பாடல்கள் மீது கொண்டிருந்த மதிப்பை நன்கு விளக்குவதாகும்.

மலைமண்டலத்து ஏறாண்புரம் என்பது ஓர் ஊர். 'ஏறாண்முல்லை' என்பது தொல்காப்பியம். ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை, ஏறாண் முல்லை என்பது. இத்துறையின் பெயர் ஓர் ஊரின் பெயராக வழங்கப் பெற்றது பாராட்டத்தக்க தன்றோ!

ஆண்டார் என்பவர் சுவாமி பூசைக்கு உரிய மலர்களைப் பறித்தல், கோவில் திருச்சுற்றுக்களைத் தூய்மை செய்தல் முதலிய சிவப்பணிகளில் ஈடுபட்டவர். இவர்கள் ஏறத் தாழக் கத்தோலிக்க கிறித்தவத் துறவியருள் சகோதரர்'என்பவருக்கு இணையாவர். இத்தகைய ஆண்டார் பலர் ஒவ்வொரு பெரிய கோவிலிலும் இருந்து சிவப்பணி செய்து வந்தனர்.

முதலாம் இராசேந்திர சோழன் திருமகளார் அருள் மொழி மங்கையார் என்பவர். இப்பெயர் காலப்போக்கில் மருவி அம்மங்கையார்' என்றும் 'அம்மங்காதேவி' என்றும் மாறிவிட்டது. இவ்வம்மையாரே கீழைச் சாளுக்கிய மன்னனான இராசராச நரேந்திரனுடைய மனைவியார்.

ஏனாதி என்பது படைத்தலைவர் பெற்று வந்த சங்ககாலப் பட்டமாகும். அப்பட்டம் பிற்காலச் சோழர் வரையில் தொடர்ந்து வழக்கில் இருந்து வந்தது என்பது, ஆர்க்காடு தலைவன் ஆபிரவன் ஏனாதி'என்னும் கல்வெட் டுத தொடரால் அறியக்கிடக்கின்றது.

பெரிய ஊர்களைக் காவல் காக்கும் பொறுப்புள்ள வீரர்கள் அக்கால அரசரால் நியமனம் பெற்றிருந்தனர். அவருள் ஒருவன் திருமழபாடி காவல்காணி உடையான். அவன் பாரம் தாங்கினான் என்ற அமரர்கோன்' என்று கல் வெட்டுக் கூறுகின்றது.

போரில் புகழ்மாலை 'மாராயம்' எனப்படும். அதனைப் பெறுபவன் 'மாராயன்' எனப்பட்டான். அவன் மனைவி 'மாராசி' என்று அழைக்கப்பட்டாள். அவன் சோழனுடைய மாராயன் ஆயின், 'வளவன் மாராயன்' எனப்படுவான். இங்ஙனம் பட்டம் பெற்ற அதிகாரி ஒருவன், முதல் இராசேந்திர சோழன் காலத்தில் இருந்தான். அவன் பெருந்தரம் தண்ட நாயகன் கூட்டன் ஜனநாதன் என்ற வளவன் மாராயன்' என்று பெயர் பெற்றான்.

சோழரின் இறுதிக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய ஹொய்சள மன்னர்களும், அவர் தம் தண்ட நாயகர்களும் இக்கோவிலுக்குப் பல அறங்களைச் செய்துள்ளனர்.

மழபாடி என்பது மழநாட்டைச் சார்ந்தது. அந்நாட்டு மக்கள் சங்ககாலம் முதலே மழவர் எனப்பட்டனர். அதனை ஆண்டவர் மழவராயர் என்று பெயர் பெற்றனர். மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் சுந்தரபாண் டிய மழவராயன் என்ற அதிகாரி ஒருவன் இருந்தான் என் பதை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

'பொய்கை நாட்டில் மீப்பிலாறு என்னும் உட்பகுதியைச் சேர்ந்த திருமழபாடி' என்பது கல்வெட்டுவாசகம். சோழர் காலத்தில் திருமழபாடிக்கு ஜீன சிந்தாமணி நல்லூர் என்ற ஒரு பெயரும் இருந்தது.




மக்கள் பெயர்கள்.

நக்கன் சிங்கதேவன், காமன் தாயன், நஞ்சணிகண்ட பட்டன், பின்பழகியான், இராசசிங்கதேவன், நெற்குப்பை உடையான், ஆராவமுது பெரிய நாயன், நாற்பத்தெண்ணாயிர நம்பி, வேளூர் கிழான், இராசராசதேவன், கோவன் சுவரன், மோசி அருந்த நாராயணன் (மோசி கீரனார் - சங்ககாலப் புலவர்; மோசி என்பது ஊரின் பெயர் அல்லது குடிப் பெயராகலாம்) நானூற்றுவன் யாமாரமன், திருவேங்கட முடையான், சேக்கிழான் இராமதேவன், விளங்க வந்தான் என்ற அகில புவன முடையான், கேந்தள வெள்ளாளப் பிள்ளையார் என்பன ஆடவர் பெயர்கள்.

நக்கன்தில்லை அழகியார், அரிஞ்சிகை, இளங்கோன் பிச்சி, பஞ்சவன் மாதேவி, அருள்மொழி மங்கை என்பன பெண்டிர் பெயர்கள்.

சித்தாந்தம் – 1962 ௵ - மே ௴


No comments:

Post a Comment