Saturday, May 9, 2020



திருப்பாலைவனம்
["சைவநெறிக் காவலர்" டாக்டர் - திரு. மா. இராசமாணிக்கனார் அவர்கள், எம். ஏ., எல். டி., எம். ஓ எல்., பிஎச். டி.]
(மலர் - 33; 96 - ம் பக்கத் தொடர்ச்சி)

(4) திருப்பாலைவனம் சிவன் கோவிலில் திருக்கோட்டி மண்டபம் இருந்தது. ஆண்டார்கள் அதனை மேற்பார்க்கவும், திருமுறை ஓகவும் கடமைப்பட்டவரென்று கல்வெட்டுக் கூறுகிறது. சீர்காழி, திருக்காறாயில், திருவீழிமிழலை, திருவுசாத்தானம் முதலிய கோவில்களில் திருக்கைக் கோட்டி மண்டபங்கள் இருந்தன. அவற்றில் திருமுறைகள் பாதுகாக்கப்பட்டன. அவற்றைப் பாதுகாத்தவர் தமிழ்விரகர்' எனப்பட்டார் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. * இவற்றை நோக்க, திருப்பாலைவனத்தில் இருந்த திருக் கோட்டி மண்டபம் என்பது திருக்கைக்கோட்டி மண்டபமாக இருத்தல் கூடும் என்று கருதுதல் பொருத்தமாகும்.

* 381 of 1918, 203, 414 of 454 of 1908.

அக்கால மக்கள் பெயர்கள்

சூரியதேவர், நங்கமகா தேவியார் (நங்கைமகா தேவி யார்), திருஏகம்பமுடையான், நாற்பத்தெண்ணாயிர † நம்பி, சித்தமா தேவியார், கண்டகோபால மாணிக்கம், அம்மையப்பன், பார்ப்பதிபாகன், நாற்பத்தெண்ணாயிர ‡ வேளான், திருவரங்கமுடையான், ஸ்ரீதரன், சோழமகிபாலன், தம்முசித்தி, நல்லசித்தி, எர்ரசித்தி, திருச்சிற்றம்பலமுடையான், பதுமன், மாரட்டன், அறமுடையான், அபயம்புக்கான், சங்கமாகேவி கிலக வாள்நுதலி, பெரியான் திருச்சிற்றம்பலமுடையான் கங்கமாதேவி, செழிய வேளான், பேரம்பலக் கூத்தன் வேட்டையழகியான், தியாக சமுத்திரப் பல்லவரையன், சுவேதவனப் பெருமாள், சாமிப் பிள்ளை, கோவப் பிள்ளை, பெரியாழ்வார் வானவன் விழுப்பரையன், திருஏகம்பமுடையான் செங்கதிர்ச் செல்வன், நாராயணன் வேங்கடராசு, உதயகிரி அமைச்சன் திம்மனா, ஓபல ராஜய்யா, அன்னப் பிள்ளை நாயக்கர், தேவர்கள் தேவன்.

பழைய ஊர்கள்: கல் வெட்டுக்களில் கண்ட ஊர்களிற் சில, இன்றும் திருப்பாலைவனத்தைச் சுற்றிலும் இருந்து வருகின்றன. அவற்றின் பட்டியலைக் கீழே காண்க:
#      ஊரின் பெயர்             திருப்பாலைவனத்திற்கு         தொலைவு
1     மெதூர்                        மேற்கு                  1. ½ மைல்
(2)    பெருப்பேடு                    தெற்கு                  4.மைல்
இவ்வூரில் அக்காலத்தில் ஆட்சிமன்றம் இருந்தது.
(3)    பூவாவமி                      வடமேற்கு              1.மைல்
இவ்வூரில் அக்காலத்தில் ஆட்சிமன்றம் இருந்தது.
இதன் பழைய பெயர் பூவரம்பி.
(4)    கோளூர்                       வடமேற்கு              21/2 மைல்
திருப்பாலைவனம் இவ்வூரைச் சேர்ந்ததாக இருந்தது.
(5)    தத்தமஞ்சி                     தென்கிழக்கு             3.மைல்
பழையகாலத்தில் ஆட்சிமன்றம் இருந்தது.
(6)    பனப்பாக்கம்             வடமேற்கு                    31/2 மைல்
இது கல்வெட்டில் பனையம்பாக்கம் எனப்பட்டது.
இவ்வூர் திருப்பாலைவனம் கோவிலுக்குச் சொந்தமானது.
(7)    அயகல்லூர்              தென்மேற்கு                   5 மைல்
இதன் பழைய பெயர் அளிதல்லூர்.
(8)    ஈஞ்சூர்                        தென்மேற்கு             10.மைல்
(9)    பெருங்கரும்பூர்                வடமேற்கு              4 மைல்
இதன் பழைய பெயர் பெருங்குறும்பூர்.
(10)   நெற்குன்றம்             தென்மேற்கு                   15 மைல்
இதன் பழைய பெயர் மெய்க்குன்றம்,'மெய்க்குன்ற
வள நாட்டுப்பையூர்க் கோட்டம்'' என்பது கல்வெட்டு.
(11)   சிறுவாக்கம்             தெற்கு                        7.மைல்
இது பண்டு சிறுவனம்' எனப்பட்டது.
(12) பேரூர், ஆவூர், ஆமூர், எயினூர், புதுவாயில் என்பவை
பையூர்க் கோட்டத்தைச் சேர்ந்தவை.

மதுரையில் நாற்பத்தெண்ணாயிரம் சிவனடியார் இருந்து சிவத்தொண்டு செய்து வந்தனர்'என்று நம்பி திருவிளையாடல் கூறி அப்பெருமக்கட்கு வணக்கம் செலுத்துகிறது.'நாற்பத் தெண்ணாயிரம்'என்பது தில்லை மூவாயிரம், திருப்பெருந்துறை - மர் நூறு, திருவாக்கூர் - ஆயிரம், திருவீழிமிழலை - ஐந்நூறு என் மாற்போல ஒரு கூட்டத்தின் பெயராகும். இக்கூட்டத்தினர் சிதம் பரம், திருவானைக்கா, திருப்பூவணம் போன்ற இடங்களில் இருந்து சிவத்தொண்டு செய்தனர் என்று தக்கயாகப்பரணி (கண்ணி 219, உரை) கூறுகின்றது. ஒரு நடன மகள் 'நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம்' என்ற பெயருடன் இருந்தாள் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. (202, 2140f1929 - 30). இந்த நாற்பத்தெண் ணாயிரம் தொண்டரிடம் அவளோ அவள் பெற்றோரோ கொண் டிருந்த மதிப்பு இதனால் தெரிகிற தன்றோ? இவ்வாறே இக்கோவில் கல்வெட்டில் காணப்படும் நம்பி என்பவனோ அவன் பெற்றோரோ நாற்பத்தெண்ணாயிரவரிடம் கொண்டிருந்த மதிப்பு இப்பெயரால் என்கு தெரிகிறது.

§ இதுமுதல் 3 பெயர்கள் 18 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.




இன்றைய திருப்பாலைவனம் - கோவில்

இவ்வூர்ச் சிவன் கோவில் கிழக்கு நோக்கி யுள்ளது; ஐந்து நிலைகள் உள்ள கோபுரத்தை உடையது. கோவிலின் முன் பதினாறுகால் மண்டபம் கோவிலின் வாயிலை அழகு செய்கிறது. கோவிலின் எதிரில் ஒரு திருக்குளம் இருக்கிறது. அதன் பெயர் அமிர்தபுஷ்கரணி என்பது. அக்குளத்தில் செந்தாமரை பூத்து அழகு செய்கிறது. அதற்குக் கிழக்கே திருநந்தவனம் இருக்கிறது.

கோவில் நீள் சதுரப் பாப்பையுடையது. கோவில் மதில் கிழக்கு மேற்கில் 506 அடி நீளமுடையது; தெற்கு வடக்கில் 550 அடி நீளமுடையது. கோவிலுள் சுவாமிக்கும் அம்மைக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன; தனித் தனித் திருச் சுற்றுக்களும் உள்ளன. இவ்விரண்டு கோவில் களையும் உள்ளடக்கிய வெளித் திருச்சுற்று ஒன்றும் இருக்கிறது. சுவாமியின் பெயர் பாலீசர் அல்லது அமிர்தேசுவரர் என்பது; அம்மன் பெயர் லோகாம்பிகை என்பது.

கோவிலின் கருவறை யானையின் பின்பக்கத்தை ஒத்திருக்கிறது. சுவாமி கோவிலைச் சுற்றியிருக்கும் உள் திருச் சுற்றில் ஆஞ்சநேயர், நவக்கிரகம், சண்டேசுவரர் முதலிய மூர்த்தங்கள் ஸ்தாபிக்கப்பட்டுப் பூசையில் இருந்து வருகின்றன. சுவாமி கோவிலில் மகா மண்டபம் இருக்கிறது. கோவிலுள் தென்மேற்கு மூலையில் இத்தல மரமாகிய பாலைமரம் தழைத்து ஓங்கியுள்ளது.

இங்குள்ள லிங்கம் சுயம்பு. வெண்மை நிறம் உடையது. இதன் மேற்புறம் மாப்பட்டையால் மூடப்பட்டது போல் காணப்படுகிறது. இதன் உச்சியில் பிளவு காணப்படுகிறது. "இது ஒரு காலத்தில் மரத்தால் மூடப்பட்டிருந்தது. சோழ அரசன் யானை அம்மாத்தில் கட்டப்பட்டது. அந்த யானை திடீரென்று இறந்தது. அரசன் சினந்து அம்மரத்தைக் கோடரிகொண்டு வெட்டுவித்தான். அப்போது மரத்தின் அடிப்பகுதியிலிருந்து குருதி வெளிப்பட்டது. சோழன் உடனே சோதித்தான்; லிங்கத்தை மரம் மூடி யிருந்ததை அறிந்தான்; லிங்கத்தின் உச்சியில் கோடரியால் பிளவு ஏற்பட்டிருந்ததைக் கண்டான்; அவ்விடத்தில் ஒரு கோவில் கட்டினான் '' என்பது தலவாலாறு.

பாற்கடவில் கிடைத்த அமிர்தத்தைத் தேவர்கள் இவ் விடத்தில் பங்கிட்டுக் கொண்டனர் - அமிர்தத்தின் ஒரு பகுதி கொண்டு லிங்கத்தை அமைத்துப் பூசித்தனர். அதனால் சுவாமி அமிர்தேசுவரர் எனப்பட்டார்'' என்பது தல வரலாறு. லிங்கத்தின் மீது சாத்தப்படும் சந்தனம் கரைகிறது, ஆதலால் வெள்ளியால் செய்யப்பட்ட திருநீற்றுப் பட்டத்தின் மீது தான் சந்தனம் சாத்தப்படுகிறது. லிங்கத் திற்குப் பால், பனிநீர், இளநீர், தண்ணீர் முழுக்கு மட்டும் நடைபெறுகிறது.

இக்கோவிலுக்குப் பலஊர்களில் நிலங்கள் இருக்கின்றன. பையூர்க் கோட்டத்து வேளாளர் என்ற முதலிமார்கள் இக் கோவில் நடைமுறையைக் கவனித்து வருகின்றனர். விழாக்களும் மூன்று கால பூசையும் நடைபெற்று வருகின்றன. அச்சிடப் பெறாத தலபுராணம் (15 சருக்கங்களை உடையது) உரை நடையில் உள்ளது. இந்து மத அறநிலையப் பாது காப்புக் கழகத்தார் ஆணையின் படி 1950 - இல் தலவரலாறு ஒன்று சிறிய அளவில் (16 பக்கம்) அச்சிடப்பட்டுள்ளது.

சித்தாந்தம் – 1960 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment