Saturday, May 9, 2020



தமிழ்மொழியும் சிவநெறியும்.

பிள்ளைகள் நெடுங்கணக்குப் படித்துப் பின்னர் முதற்பாடம் இரண்டாம் பாடம் முதலிய ஏடுகள் படித்து மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குரிய பாடங்கள் படித்துத்தேறிப் பின்னர் பி. ஏ. எம். எ. முதலிய பரீக்ஷைகளுக்குப் படித்துத் தேறி ஆசிரியராதல் போல வெவ்வேறு கீழ்ப்படி மதங்களைப்பற்றி அவ்வவற்றிற் பெறத்தக்க அறிவடைந்து, பல ஜன்மங்களில் சித்த சுத்தியடைந்து சிவஞான மெய்தி முக்தியடைவர்.

எம். ஏ. பரீட்சையிற் றேறுதற்கு ஒவ்வொரு வகுப்புப் பாடங்களும் எப்படித் தள்ளத்தகாத அத்தியாவசியமும் பயன்படத்தக் கனவுமாகுமேர் அப்படியே ஒவ்வொரு மதங்களாகிய சோபான மார்க்கங்களும் தள்ளத்தகாத பயனுடையனவேயாம். ஆதலால் கன்மபரிபாகத்தால் பல திறப்பட்ட அனந்தகோடி ஜீவர்களுக் குபயோக மாம்படி உலகத்திற் பல்லாயிர மதங்களிருக்கப் பரமன் கற்பித்திருக்கின்றனன். ஆதலால் ஒருமதமும் எள்ளத்தக்கதன்றென்று கருதி அறிவதே அறிஞர் முடிவு. சைவசித்தாந்தத்தின் உண்மைத்துணிவு ஃதே.

திரு. நா. தேவாரம்.

      விரிவிலா அறிவினார்கள் வேறொருசமயஞ்செய்தே
      எரிவினாற்சொன்னாரேனு மெம்பிராற்கேற்றதாகும்.

சிவஞான சித்தியார்.

      யாதொருதெய்தங்கொண்டீரத்தெய்வடாகியாங்கே
      மாதொருபாகனாரேவந்தருள்புரிவர்.

சாந்தோக்கியம்.

      ''யதாயதோ பாஸதே ததைவபவதி''
''எப்படி எப்படி உபாசிக்கின்றனன், அப்படியே ஆகின்றனன்''.

திருவாய்மொழி.

      தமருவந்ததெவ்வுருவவ்வருவந்தானாய்த்
      தமருவந்ததப்பேரப்பேர் - தமருவந்த
      தெவ்வண்ணஞ்சிந்திப்பதியையா திருப்பரேல்
      அவ்வண்ணமகிழ்வோ னாம்.
     
என்ற சுருதிகளும் அவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. ஆதலால் மதத்துவேஷங்களை யொழித்தல் நமது கடமையேயாம்.
     
எக்காலத்தும் எவ்விடத்தும் எந்தத்தொழில் செய்யும்பொழுதும் பரமேசுவரனைத் தியானித்தலும் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போலெண்ணி அவைகட்கு நன்மைபுரிதலும் தீமை செய்யாமையும் சைவர்க்கு இன்றியமையாத செயல்களாம். படித்தவர்களும் பெரிய உத்தியோகமுஞ் செல்வமுடையவர்களுந் தாம் கடவுளை வணங்கலாம். எளியவர்களுக்குப் போதுமான அவகாச மின்மையால் அவர்கடவுளைத் தியானஞ்செய்ய முடியாதென்றெண்ணற்க. மன உழைப்புடையரைக் காட்டிலும் தேக உழைப்புடைய வேலைக்காரர்க்கு அவகாசமுண்டு, உதாரணமாக மூட்டை சுமப்பவன் எனது (பாவச்சுமை) அஞ்ஞாஞானச்சுமைகளை ஒழித்தருள வேண்டுமென்று தியானித்துக்கொண்டு செல்லலாம். அதனால் தெய்வபக்தி யுண்டாவதோடு பாரந்தெரியாமையு முண்டாம்; மண்வெட்டு பவன் இவ்வாறு என் ஆணவம் தீயகன்மங்களை வெட்டி யொழிக்க வேண்டுமென்று தியானித்துக்கொண்டு வெட்டலாம். குப்பை தூர்க்கிறவன் இவ்வாறு என் பாசக்குப்பைகளை விலக்க வேண்டுமென்றும், கரிச்சட்டி கழுவுபவன் இவ்வாறு என் அஞ்ஞானக்கரியைக் கழுவவேண்டுமென்றும் கடவுளைத் தியானிக்கலாம். மன உழைப்புடையவன் அவன் தொழிலை நிறுத்தி யொருதியானத்தில் மனஞ் செலுத்தவேண்டும். உடல் வேலை செய்பவன் வேலை செய்யும்பொழுதே மனதிற் கடவுளைத் தியானிக்கலாம்.
     
சிவன் எல்லா உயிர்களினும் நிறைந்த அந்தரியாமியா தலால் உயிர்களனைத்தும் அவன் கோவில் அது பற்றி அவன் வீற்றிருக்கும் கோவிலுக்கு எவ்வாற்றானும் இடுக்கண் விளைத்தல் கூடாது. இக்கருத்தானே பிறவுயிர்கொன்று ஊன் தின்னலைச் சைவநெறிமறுக்கின்றது.

திருநீறு.

திருநீறு, கண்டி இரண்டும் சிவசின்னங்களெனப் படுகின்றன. சர்வப் பிரபஞ்சங்களையும் இறுதியில் சங்கரித்து எல்லாமொடுக்கிய காலத்தில் எஞ்சி நிற்பவன் சிவன் ஒருவனே.

ஆதலால் திருநீறு சர்வசங்காரக் கடவுளை நினைப்பூட்டுகின்றது. திரிபுண்டரமாகத் திருநீறிடும்பொழுது மும்மலங்களையும் நீற்றி யிவ்வாறு நீறாக்கவேண்டுமென்று நினைந்து ஐந்தெழுத்தை யோதி முறைப்படி திருநீறிடவேண்டும்.

திருநீறு மும்மலங்களையு மொழித்து ஆயுளும் செல்வமும், அறிவும், கொடுக்குந் தன்மையுடையது. வைத்திய முறையாய் கோக்கில் விபூதி உத்தூளநம் அவகுண்டநம் (நீர் கலந்து உடலிற் பூசல்) திரிபுண்டரம் என்ற தாரணங்கள், உடம்பிற்படும் நோய்ச் சிற்றுயிர் தொற்று நோயச்சிற்றுயிர்களையும் கொல்லும். உட்கொள்ளும்பூதி வாயினுட்சென்ற புழுக்களைக்கொல்லும் புழுக்களால் உண்டாகும் நோய்கள் வராமற்காக்கும். உதாரணமாக வித்துகள் புழுக்காமல் அல்லது உளுக்காமல் இருப்பதற்கு சாம்பல் சேர்த்து வைத்தலும், புழு, அசுகுணி முதலியன வுண்டாகிய அவரை, புடல், பீர்க்கு முதலிய படர்கொடிகளுக்குச் சாம்பல் தெளித்தலும் அதனால் அவை நீங்கி நல்லபலன் தரலும் வாராமற் காத்தற்கும் வந்தபின் நீக்கற்கும் போதுமான சான்றுகளாம்.

கண்டிகை.

ருத்திராக்ஷம் மகா உருத்திரனது கண் போன்றது. அவற்றையணிந்து கொள்வது நாம் அவனருட் கண்பெற வேண்டுவதைக்குறிக்கின்றது. கண்டியின் தாரணத்தால் தேகசுகமும் நல்லறிவும் செல்வமும் சிவனருளும் உண்டாம். வைத்திய முறையாய் நோக்கில் கண்டியில் உயிர்ச்சாரசக்தி (Human Magnetism) உளதால் அதை யணிவார்க்கு உயிர்ச்சாரசக்தி மிகுத்துத் தேகத்துக்கும் மூளைக்கும் பலமுண்டாகி ஆயுளும் நீளும். இரத்த சுத்தியும் நோய் நீக்கமும் உண்டாம். உதாரணமாக, பலவிடங்களில் மகம்மதியரும், கிறிஸ்தவரும் கூட சில நோய்கள் வராமற் 'காத்தற்கும் நீக்கற்கும் ருத்திராக்ஷத்தை இரக்ஷாபந்தனம் போலக் குழந்தைகளுக்குக் கட்டி வருகின்றனர். நல்ல பலனையு மடைகின்றனர். வைத்தியர், ஜன்னி நாவாட்சி மயக்கம் முதலியவைகட்கு அதனால் கண்டாவிழ்தஞ் செய்து கொடுத்து நல்லகுணங் காண் கின்றனர்

இவ்விரு காரணங்க ளுடையாரைக் காணுந்தோறும் அவற்றைத் தரிக்குந்தோறும் தெய்வ நினைப்புண்டாவதும் பாராட்டத்தக்கதே.

ஐந்தெழுத்து.

இச்சைவ சமயம் ஒருஜாதியார் அல்லது தேசத்தாருக் குரிய தன்று. மனித ஜாதியார் அனைவர்க்கும் பொது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் வகுப்புகளைக் கருதினால் அவ்வுண்மை விளங்கும். கடவுளை அடையும் நன்னெறிகள் சிலர்க்குரியன வென்றும், சிலர்க்குரியன வன்றென்றும் கூறல் எவ்வளவறியாமை. கடவுட்குரிய அளவில் பெயர்களில் சிவன் என்பது எங்கும் நிறைந்தவன் என்று குறிக்கின்றது.
   
அது நெடுநாட் பலரால் கழுவப்படலானும் தென்மொழி வடமொழி, மறையாகமங்களிலும், வழக்கிலும், சிறந்து வழங்கப் படுகின்றது. பிற்காலத்து நமச்சிவாயன் என்ற பெயரும் வழங்கியது. அப்பெயர்கள் ஐந்தெழுத்தென்றே கொள்ளப்படுகின்றன.


தேவாரம்.

     '’பாத்திரஞ்சிவமென்று பணிதியேல்'
      வேதம் நான்கினு மெய்ப்பொருளாவது
      நாதனாம நமச்சிவாயவே. "

என்ற சுருதிகள் அக்கருத்தை விளக்குகின்றன.

அடியர்வணக்கம்.

மக்கள் அனைவரும் சிவபிரான் பிள்ளைகள், ஆதலால் அவ்வனைவரையும், நான் உடன்பிறந்தாராய்க் கொள்ளல் வேண்டும். அவருள்ளும் சிவபக்தர் யாவராயினும் அவர் பால் நாம் மிக்க அன்பு செலுத்தல் வேண்டும்.

இக்கருத்தை,
திரு. நா. தேவாரம்.

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந்தந்து தரணியொடு
            வானாளத் தருவரேனும் -
மங்குவாரவர் செல்வ மதிப்போ மல்லோ மாதேவர்க்
            கேகாந்த ரல்லராகின்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயரா
            யாவுரித்துத்தின் றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராயி னவர்
            கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே.
                                                                                                     
முண்டகோபநிஷத்.

அபிவாயச் சண்டாள சிவ இதிவாசம்வதேத், தேக ஸஹ சம்வகேத், தேகஸஹ ஸம்வசேத்தேநஸஹபுஞ்ஜித''
      (இதன்பொருள்) சன்டானனாயினும் சிவனென்ற சொல்லைச் சொல்வானானால் அவனோடு பேசுக, அவனோடு இருப்பாயாக, அவனோடு உண்பாயாக,
   
என்றல் முதலியசுருதிகள் விளங்குகின்றன. இதுகாறுங்கூறியவாற்றால் சைவ சமயம், தமிழ் நாட்டில் 12000, ஆண்டு கட்கு முன்னரே தோன்றியுள் தென்றும், அது எல்லவருக்கும் பொதுவாம் ஞான மதமென்றும் உலகு, உயிர், தெய்வம் என்று முப்பொருள்களுள. உயிர்கள், ஜாதி, மதவேற்றுமை யின்றி,
அவர்கள் புரியும் நன்மை, தீமை உபாசனைகளுக்குரிய பலனை அடைவர். நாம் கடவுளை நம்பி நன்னெறியிலொழுகி அவனை வழி படல்வேண்டும். தன்னுயிர்போலெவ்வுயிரினிடத்தும் அன்பு செலுத்தவேண்டும். விபூதி, ருத்திராக்ஷதாரணம், பஞ்சாக்ஷர ஜெபம், ஜீவகாருண்யம் சைவத்துக்கு முக்கிய சாதனங்களென்றும் நன்கு விளங்குகின்றது.
   
இன்று சிவபிரான் பிரபாவங்களை யான் சொல்லவும் நீங்கள் கேட்கவும் அருளிய திருவருளைப்பன் முறை வணங்குகின்றேன்.
நம : பார்வதீபதயே.

       மறைத்திருவன் விருதை சிவஞானயோகிகள்.

சித்தாந்தம் – 1913 ௵ - ஆகஸ்ட் / செப்டம்பர் ௴


No comments:

Post a Comment