Saturday, May 9, 2020



தமிழ்ச் சிவஞான போத வரலாறு.

வரலாறென்பது வந்தவழி எனப்படும். ஆகவே தமிழ்ச்சிவ ஞானபோத வரலாறென்பது தமிழ்ச் சிவஞான போத நூல் வந்தவழி என்றவாறாம்.
வந்த வழியாவது வடமொழி இரௌரவ ஆகமம் பாசவிமோசனப்படலத்திலுள்ள பன்னிரு சூத்திரங்களையும் சிவபெருமான்நந்திதேவருக்கும் நந்தி தேவர் சனற்குமார முனிவருக்கும் அவர்சத்தியஞான தெரிசினிகளுக்கும் அவர் பாஞ்சோதி முனிவருக்கும் அப்பாஞ்சோதி முனிவர் மெய்கண்டதேவருக்கும் உபதேசிக்க அம்மெய்கண்டதேவர் தமிழில் மொழிபெயர்த்து வார்த்திகப் பொழிப்பும் அருளிச்செய்தனர். பொருள் நிச்சயமாகிய சிவஞானத்தை மலைவற உணர்த்துங் காரணத்தால் சிவஞானபோத மெனப்பட்டது. நூல்வந்த வரலாறு இவ்வாறாகவும் தற்காலத்தில்சிற்சிலர் தத்தம் அறிவிற்கெட்டியவாறு நூல் வந்த வரலாற்றைப்பற்றி வேறு வேறு சொல்லவும் எழுதவும் முற்பட்டிருக்கின்றனர்.
அவ்வாறெழுதப்பட்டவற்றுள் ஞானசாகரம் பதுமம் மூன்று இதழ் 6ல் 'மெய்கண்டதேவர்' என்னும் தலைப்பின் கீழ் சிவபெருமான் முதற் பரஞ்சோதிமுனிவரீறாக அவர் மாட்டெல்லாம் பன்னிரண்டு உபதேச விஷப உருவாக மாத்திரமிருந்த அச்சிவஞானபோதம் மெய்கண்டவள்ளலாரிடத்து தமிழ்ச் சூத்திரவடிவம்பெற்றுக் கருத்துரை வார்த்தீக உரை, உதாரணச் செய்யுள், அதிகரணப்பகுப்பு, சூரணைக்கொத்து முதலிய அலங்கார விசேடணமுடைத்தாய் நடைபெறலாயிற் றென்க என்றும், சந்தானாசாரியராதல் அவர்க்குப்பின் அம்மரபில் வந்த சீகாழிச் சிற்றம்பலநாடிகள், தாயுமான சுவாமிகள் முதலியோராதல் மொழிபெயர்ப்பு நூலென்று கூறவில்லை என்றும், வடமொழி மாட்டுத்துரபிமானம் வைத்தார் சிலர் தமக்குத் தோன்றியவாறு மொழிபெயர்ப்புநூலென்று கூறிய உரை போலி உரையாம் என்றும் காணப்படுகின்றது. தமிழ் சிவஞானபோதவரலாறு.
தமிழ்ச் சூத்திரவடிவம் பெற்று என்றதனானே முன்னர் விஷயவுருவாக இருந்தபொழுது தமிழாக இருக்கவில்லை என்று புலனாகின்றது. ஆகவே முன்னர் வடமொழி விஷயவுருவாக இருந்ததைபின்னர்த்தமிழ் சூத்திரவடிவமாக்கினார் என்றாகி மொழிபெயர்ப்பு என்பதையே வலியுறுத்தும். அன்றியும் மணிவாசகப்பெருமானுக்குச் சிவபெருமான் அருட்கோலங்கொண்டு எழுந்தருளுங் காலத்துத் திருக்கரத்திலிருந்தது சிவஞானபோதப்புத்தகமெனவும் சனகாதிகளுக்குபதேசிக்க திருமேனி கொண்டெழுந்தருளிய தெட்ச.ணாமூர்த்தி திருக்கரத்திலிருந்தது சிவஞான போதப் புத்தகமெனவும் முறையே வாதவூர்ப் புராணத்தில் பொருத்தமுறும் புத்தகமேதையா'' என்று வினவ "பொய்மையிலாச் சிவஞானபோதமென்று'' விடையிறுக்கப் பெற்றதனாலும், திருவிளையாடற் புராணத்தில் ''செங்கரனான்கும், வேதபுத்தகமும்'' என்ற தனாலும் விளங்கக் கிடத்தலால் மெய்கண்டதேவருக்கு முன் புத்தகரூபமாக இல்லை, விஷய உருவாய் உபதேசமாத்திரையாகத்தான் இருந்ததென்பது எவ்வாறு பொருந்தும்.,
இனி, ஞானசாகரம் பதுமம் 3, இதழ் 5ல் மாணிக்கவாசகருக்குப் பன்னிரண்டு கூறாய் உபதேசித்தருளிய சிவஞானபோதமென்னும் ஞானசாத்திரத்தை'' என காணப்படுகின்றது. சாத்திரம் என்ற போது புத்தகரூபமாய் இல்லா திருக்கமுடியுமா? அன்றியும் மொழிபெயர்ப்பு நூலென்று சிறப்புப்பாயிரத்தினாலேயே நன்கு தெளியக்கிடக்கவும் இல்லை என்றல் எவ்வாறு பொருந்தும்.பொருந்தாதென்பதை மற்றொரு கூற்றில் முன்னர்க் கூறுவாம்.
சிவஞான யோகிகள் சந்தான பரம்பரையில் வந்தவர்களல்லவா? அவர்கள் மொழிபெயர்ப்பு நூலென்று கூறியிருப்பவும் வடமொழிமாட்டுத் துரபிமானம் வைத்தார் சிலர் தமக்குத் தோன்றியவாறு மொழிபெயர்ப்பு நூலென்று கூறிய உரைபோலி உரைஎன்று கூ றியதைப்பற்றி என் சொல்வது. நிற்க,இனி, சித்தாந்தம் தொகுதி 2 பகுதி 4 முதல் பன்னிரண்டுவரை சிவஞானபோத மென்னும் தலைப்பின் கீழ் மிகவிரிவாய்ப்பல விஷயங்கள் காணப்படுகின்றன, அவற்றை எழுதிய அம்முறைப்படியே ஆராய்வாம்,  . –
1. சிவஞான போதம் மெய்கண்ட தேவருக்கு முன்னேயே நூல் வடிவாக உண்டு. அது தமிழ் நூல் தான் எனவும்,
எந்தைசனற்குமானேத்தித் தொழவியல்பாய்
நந்தி புரைத்தருளுஞான நூல் - - சிந்தைசெய்து
தானுரைத்தான் மெய்கண்டான் றாரணியோர் தாமுணர
வேது திருட்டாந்தத்தாலின்று

என்னும் செய்யுளுக்கு முன்னரேயுள்ள சிவஞான போதத்தமிழ் நூலை சிந்தித்து உரையும் செய்புளுமாக பொழிப்புரையைஉரைத்தார் எனவுங் காணப்படுகின்றன.
உரைத்தானென்பதற்கு செயப்படுபொருள் உரை என்றுகூறியதனானே மெய்கண்டதேவர் நூல் உரைக்கவில்லை என்றாகி உயர் சிவஞான போத முரைத்தோன் என்ற சிவஞானபோதப்பாயிரத்தோடும் மெய்கண்டான் நூல் சென்னியிற்கொண்டென்றசிவஞான சித்திப்பாயிரத்தோடும் முரணுமா தறிக. அன்றியும்ஞானநூல் சிந்தை செய்து உரைத்தானென்றதற்கு ஞான நூலைச்சிந்தை செய்து உரைத்தானென்பதே வெளிப்படையான பொருளாயிருக்க ஞான நூலைச்சிந்தைசெய்து உரையை உரைத்தான் என்று வலிந்து பொருள் கொள்வதற்கு ஓர் இயைபுமின்று. அற்றன்று உரைத்தானென்பதற்கு உரை என்னும் செயப்படுபொருள்வருவித்துக்கொண்டா லென்னையோ வெனின் உரையாகிய ஏதுதிருட்டாந்தத்தை செய்யுளிற் கூறியிருக்கவும் வேறு ஓர் உரைஎன்னும் சொல் வருவித்தால் அச்சொல்லுக்குப் பொருள் வேண்டும். மெய்கண்டதேவர் செய்த உரை ஏது திருட்டாந்த முதலியவையேயாம். ஆகவேவருளித்த உரை என்னும் சொல்லிற்கு பொருளில்லாமையால் பொருந்தாதென்க.
இனி உரைத்தானென்பதற்கு ஏது திருட்டாந்தமாகிய உரையை உரைத்தானென்று கொள்வே மெனின் அவ்வாறாயின் ஏதுதிருட்டாந்தத்தை என்றிருக்கவேண்டும். ஏது திருட்டாந்தத்தாலென்றிருக்கக் கூடாது, அன்றியும் ஞான நூலென்றவிடத்து நான்காம் வேற்றுமை உருபைவிரித்து ஞான தூலுக்கு ஏது திருட்டாந்தமாகிய உரையை உரைத்தான் எனல் வேண்டும். ஞான நூலுக் என்று விரித்தால் சிந்தை செய்து என்னும் சொல் பொருள் தமிழ்ச்   படாமை அறிக, உரைக்க வேண்டுவதான உரையைச் சிந்தை செய்து என் றுகொள்வே மெனின் அங்ஙனமாயினும் மேற்கூறியவாறுஏது திருட்டாந்தத்தை என்றிருத்தலே பொருத்தம், ஆதலால் ஞான நூலில் ஏது திருட்டாந்தத்துடன் உரைத்தானென்பதே பொருளாம். நூலை உரைத்தானென்ற தனாலேயே மெய்கண்டதேவர்உரைத்த தமிழில் முன் இல்லாமை நன்குவிளங்கும். முன்னர்தமிழில் இருந்திருக்குமாயின் உரைத்தா னென்று கூறவேண்டுவதின்றாம், உரைத்தானென்றதனால் முன்னர் தமிழில் இல்லாதிருக்கவேண்டுமென்பதை,
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை''
என்னும் திருவள்ளுவமாலையாலறிக.
அங்ஙனமாயின் “நந்தி உரைத்தருளும் ஞான நூல்'' என்றதற்கும் நந்தி உரைப்பதற்கு முன் வேறு பாஷையில் இருந்திருக்கவேண்டுமென்று கொண்டு அது தமிழ்ச் சிவஞான போதமே எனவும் அதனை நந்தி தேவர் வடமொழியில் மொழிபெயர்த்துக் கூறினாரெனவும் பின்னர் மெய்கண்டதேவர் தமிழில் மொழிபெயர்த்துக் கூறினாரெனவும் கொள்வேமெனின் அது பொருந்தாது,என்னை? நந்தி உரைத்தருளும் ஞானநூலென்றதற்கு நந்தி உடதேசித்தருளிய ஞான நூலென்பதே பொருளா தலா லென்க. அவ்வாசயின் முன்னர் உபதேசமாத்திரையாய் இருந்த தென்ற ஞானசாகரக் கூற்றைமறுப்பானேன் எனின், நந்தி உரைத்தருளும் ஞானமென்றிருந்தால் உபதேசமாத்திரை என்றல் பொருந்தும்.ஞான நூலென்றிருத்தலால் உபதேசமாத்திரையாய் மட்டும் இருந்த தென்றல் பொருந்தாமையின் மறுக்கப்பட்ட தென்க. நூலைநந்தி உரைத்தது உபதேசமாயின வாறுபோல மெய்கண்டதேவர்உரைத்ததும் உபதேசமென்பே மெனின்' எந்தை சனற்குமரன் ஏத்தித்தொழ இயல்பாய் நந்தி உரைத்தருளும் ஞானநூலென்றது போல மெய்கண்டதேவர் இவருக்குச் சொன்னார் என்று கூறாமையானும் "தாரணியோர் தாமுணரத்தானுரைத்தான்" என்றதனாலேயே பிறிதொரு வரை முற்படுத்தாது தானே சொன்னாரென்று பெறப்படுகின்றடைடயானும் தானே சொல்லுங்கால் உபதேசமென்பதின்றி நாலே என்பது மெளிப்படை. யாதலானும் உபதேச மென்றல் பொருந்தாதாம். ஆகவே வடமொழி வரிவடிவா யிருந்த சிவஞானபோத நூல் நந்தி தேவர் முதல் மெய்கண்டதேவர் ஈறாக ஒருவர் பின் ஒருவராய் உபதேசிக்கப்பட்டு மெய் கண்டதேவர் தமிழில் மொழிபெயர்த்து உரைத்தாரென்பதே “எந்தை சனற்குமா''  னென்ற பாயிரச் செய்யுளால் இனிது விளங்கக் கிடக்கின்ற வாற்றிக.
இன்னும் அச்செய்யுளில் ஏது திருட்டாந்தத்தாலென்றதினால் உருபுமாறாது நின்றபொழுது கருவிப் பொருளில் நின்று செயப் படுபொருளை உணர்த்த வேண்டும். உணர்த்தவே ஏது திருட்டா ந்தத்தால் சிவஞானபோத நூலை உரைத்தானென்றவாறாம். இனி ஆல் உருபு ஒரு உருபரக மாறும் உரிமையுடைமையின் அங்ஙனம் மாறுங்கால் ஒரு உருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வருமாதலால் எது திருட்டாந்தத்தோடு சிவஞானபோத நூலை உரைத்தானென் பதே தேற்றம். இனி, இன்று என்றதனால் முன்னர் தமிழில் இல் லாமையும் ஏது திருட்டாந்தம் இல்லாமையும் விளக்கியவாறுமறிக.
2. ஆரியத்திற்கு அக்காலத்தில் எழுத்துக்கிடையா தெனக் காணப்படுகின்றது, ஆரியமென்ற பெயரைப் பெற்றால் எழுத்தில்லா திருக்க முடியுமா? இலக்கணத்தில் எழுத்துச்சொல், பொருளென்பவற்றை முறையாய் வைத்ததை நோக்கின் எழுத்தாற் சொல்லும், சொல் லாற்பொருளும் தோன்று மென்பதை யாவரும் அறிவர். ஆகவே, ஆரியமென்னும் சொல் உண்டானபொழுதே எழுத்துண்டென்பது துணிபாம். இனி, எழுதாமறை என்றதன் கருத்தென்னையோவெனின் மறை எழுதப்படாதிருந்த தென்பதேயாம். அவ்வளவே யன்றி பாடை எழுதப்படாதிருந்த தென்பதன்று.
3. உயர் சிவஞானபோத முரைத்தோ னென்பதற்கு மெய் கண்டார் தம்மாணாக்கருக்குரைத்தார் எனக் காணப்படுகின்றது. அது பொருந்தாமை மேலே காட்டினாம்.
4. நாதத்தைக் குறிப்பது பிரணவம் அப்பிரணவம் தமிழுக்கே உரித்தெனக் காணப்படுகின்றது. நாதம் என்ற சொல்லும் பிரணவம் என்ற சொல்லுமே வடமொழியாயிருக்கத் தமிழிற்குரித்தென்றல் எவ்வாறு பொருந்தும், தமிழில் நாதத்திற்குவுள என்றும் பிரணவத்திற்கு ஓங்காரம் என்றுங்கூறுதல் வழக்சமாம். அன்றியும் தமிழிற்குரிய சிறப்பெழுத்துக்கள் ஐந்தனுள் ஒகரமும் ஒன்றேயன்றி ஓகாரம் ஒன்றன்று ஆதலால் ஓங்காரம் தமிழ் வட மொழி இரண்டற்கும் பொது என்பதே பொருத்தமாம். இப்பொருத்தமும் பிண்டமாகக் கூறும்போதுதான் பொருந்தும். பிரணவத்தில் அகர, உகர, மகரமென்ற மூன்றெழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன என்று கூறும் நூற்கருத்துக்கள் வடமொழிக்குமட்டும் பொருந்துமே யன்றி தமிழிற்குப் பொருந்தாவாம்.
5. தேவபாடை தமிழ் என்று சிலபிரமாணங்கள் காட்டப் படுகின்றன. அப்பிரமாணங்கள் வருமாறு:
(1) ''கொன்றைச் சடையர்க் கொன்றைத்தெரிய கொஞ்சித் தமிழைப் பகர்வோனே.''
(2) ''முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட வெழுதிய முதல்வோனே,''
(3) "ஞால மளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்" முதலாயின.

இவற்றுள் முதலாவது பிரமாணம் ஞானசம்பந்தரைக் குறிப் பாதாம். என்னை தகரமெய்யோடு பிரணவத்தைப் புணர்த்திதோ டுடைய என்பது முதலாக தமிழைப்பாடினா ராதலின் என்க. ஞானசம்பந்தரின் செயலை முருகர் செயலாகவே அருணகிரியார் கொண்டாரென்பதை 'உரைபுகலி ஊரில் அன். றுவருவோனே'' என்பது முதலியவற்றாலறிக. இரண்டாவது பிரமாணம் தமிழ் கையிலாயவரை இருந்ததென்பதையும் தேவர்களும் தமிழ்ப்பேசினார்க ளென்பதையும் குறிக்குமேயன்றி தேவபாடை தமிழ் என்பதைக் குறியாது. உதாரணமாக தமிழ்வழங்கும் தேசத்தை ஆளும் நமது காருண்ய சக்கிரவர்த்தியும் ஏனைய ஐரோப்பிய முக்கியஸ்தர்களும் லண்டனில் ஆளப்படும் தேசத்தின் உரிமைபற்றித் தமிழும் பேசுவராயின் அதுகொண்டு ஐரோப்பியபாடை தமிழேன்றல் பொருந்தாது போலவாம். மூன்றாவது பிரமாணம் தெய்வத்தன்மை பொருந்திய தமிழென்பதேயன்றித் தெய்வம் பேசுந் தமிழென்பதை உணர்த்தாது.

6. சிவபெருமான் வேதாகமங்களைத் தமிழிற்செய்யவில்லை என்று சொல்லலாமா என்று காணப்படுகின்றது.

தமிழிலும் வேதாகமங்கள் உள. வடமொழியிலும் வேதாக மங்கள் உள. ஆயின் இருவேதாகமங்களுக்கும் வேறுபாடு உண்டோ இல்லையோ எனின் உண்டு. அவ் வேறுபாடுயாதெனின் உயி ர்கள் இறைவன் திருவடியடைதற்கு வேண்டுவனவான உபாயங்கள் கருமம், மந்திரம், ஞானம் என முத்திறப்படும். இவற்றுள் கருமம் மந்திரத்தோடு கூடிய கருமம் எனவும் மந்திரத்தோடு கூடாதகருமம் எனவும் இருதிறப்படும், அவற்றுள் மந்திரத்தோடு கூடாத கருமம் சரியை. மந்திரத்தோடு கூடிய கருமம் கிரியை'மத்திரத்தோடு கூடாத கருமம் ஆகிய சரிபையும் ஞானமும் இரு வேதாகமங்களுக்கும் பொது. மந்திரத்தோடு கூடிய கருமமா கிய கிரியையும் மந்திரமும் வடமொழி வேதாகமங்கட்கே உரியன. எவ்வாறெனின் இப்பொழுது தமிழில் உள்ள வேதம் தேவாரம் முதலியன. ஆகமம் திருமந்திரமுதலியன. இவற்றை திருவாய் மலர்ந்தருளியவர் சமயகுரவர் ஆதியோர். இவர்கள் அவதாரத்திற்கு முன் இந்நாட்டில் தமிழ் வேதாமங்கள் இல்லை என்றால் இயலாது. அவை கடலாலும் பிறராலும் கொள்ளப்பட்டொழிய இறைவன் திருவருளால் பின்னுந்தோன்றின. அவ்வாறே மந்திர சாத்திரமும் முன்னரிருந்திறந்திருக்குமாயின் பின்னரும் தோன்றியிருக்கலாம். தோன்றாததினாலேயே முன்னர் இல்லை என்பது நன்கு விளங்கும். அன்றியும் வடமொழிச் சொல்லாயிருக்கும் மந்திரங்களை தமிழிற் சொல்வதற்கு எழுத்துக்களில்லை என்பது பிரத்தியட்சம் உதாரணமாக ''ஹாம்'' என்பதை தமிழில் எவ்வாறெழுதமுடியும். ஆகவே கருமம் மந்திரம் ஞானமென்ற மூன்றும் வடமொழி வேதாகமங்களில் உள்ளன வென்றும் கருமத்தில் ஒரு பகுதியும் ஞானமும் தமிழ் வேதாகமங்களில் உள்ளனவென்றும் அறிய வேண்டும் அறியவே மந்திரமும் லேண்டுவதால் வடமொழி தமிழ் மொழியாகிய இருமொழிகளும் தமிழர்களுக்கு வேண்டப்படுவனவேயாம். வேண்டவே ஆரியர் இந்நாட்டில் குடிபுகுந்த பின் வடமொழி இந்நாட்டிற்கு வந்ததென்றல் பொருந்தாது. வடமொழிக்கலப்பில்லாத தனித்த தமிழ் இந்நாட்டிலிருந்ததென்பதற்கு ஆதாரமுமில்லை. இருந்திருக்கலாயென்ற புத்தி பொருந்தாது. அது கடவுளும் ஒருகாலத்தில் இல்லாமலிருக்கலாமென்பது போலும், ஆகவே உரியன என்பதாம். இக்கருத்தைவலியுறுத்துதற் பொருட்டே தமிழ்ச் சொல்லால் தெய்வவணக்கங்கூறிய பெரியார் தமிழ்ச்சொலும் வடசொலும் தாணிழல் சேரனையும் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாயெனவும் செந்தமிழோடு ஆரியனை எனவும் தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே எனவும் இருமொழிக்கும் கண்ணு தலார் முதற்குரவ ரெனவும் இவ்வாறே பிறவும் அருளிச்செய்வாராயினார். இத்திருவாக்குகளால் வடமொழி தமிழ் மொழியிரண் டும் ஒப்பற்ற தனிப்பற்ற தனிப்பாடை எனவும் தமிழ்மக்களுக்கு இரண்டும் உரியன எனவும், இரண்டு பாடைகளும் இறைவனாற்றரப்பட்டனவெனவும் நன்கு விளங்கும் விளங்கவே ஆரியர் வருவதற்கு முன்னரேயே இந்நாட்டில் வடமொழி உண்டென்றுணரக் கிடக்கின்றது,

அன்றியும் கடல் கொள்ளப்பட்டதனாலும் பிறர்கொள்ளப்பட்டதனாலும் சில நாடுகளும் ஏடுகளும் ஒழிந்தனவேனும் பிறநாடுகள் இன்று மிருக்கின்றனவே அந்நாடுகளில் ஏடு கொள்ளை போயினும் நாட்டிலுள்ளாருள் உண்மையறிவுடையார் ஒரு சிலரிருக்கமாட்டாாகளா? இருப்பரேல் அவர் எடுபோனதை அறிந்து மந்திர சாத்திரங்களை எழுதிவைத்திருக்கமாட்டார்களா? தொன்று தொட்டு இன்றுவரை தீக்கை, சிவபூஜை முதலியவற்றிற்குரிய மந்திர சாத்திரம் ஆதிசைவப்பிராமணரிடத்திலும் தமிழாசிரியர்மாரிடத்தும் வடமொழியாகவே இருந்து வருகின்றபடியால் என்றும் இத்தமிழ் நாடு இருமொசிக்கும் உரியநாடென்பது நன்குபுலனாம், முன்னுள்ள வேதாகமங்கள் இறந்தொழியப் பின் தோற்றியது போல முன்னுள்ள சிவஞான போதம் இறந்தொழியப் பின்னுந் தோற்றிற்றென்னலாகாதோவெனின் வரன்முறை கூறப்படுதலால் ஆகாதெனக,

7. இரௌரவ ஆகமம் பாசவிமோசன படலத்தில் அப்பன்னிரண்டு ருத்திரங்களுமில்லையெனக் காணப்படுகின்றது. உண்டென்பதை இன்றைக்கும் பிரத்திபட்சத்திற் காட்டலாம், தெக்ஷணாமூர்த்தித் திருக்கரத்திலுள்ளது சிவஞானபோதமெனினும் வேதமெனினும் ஆகமமெனினும் ஒரு பொருளை யுணர்த்துமாதலின் அதுபற்றிய ஆசங்கை இடனின்றாம், என்னை, வேதாமங்களுக்கு ஒருசிறிதும் பேதங்கண்டிலம் என்பதனானும் ஆகமத்தின் சாரமே சிவஞானபோத மாதலினாலு மென்க.

8. வடமொழிச் சிவஞான போதத்திறுதியில் ஏவம், வித்யா, சிவஞான போதே, சைவார்த்த நிர்ணயம் என்பதற்கு இவ்வாறே சிவஞானபோதமாகிய இந்நூலில் சைவாகமங்களின் பொருள் நிச்சயத்தை அறிக என்று பொருள் கூறுதல் பொருந்தாதெனவும் இந்நூலிலென்று கூறாமல் இப்படியே சிவஞானபோதத்திலே சைவப்பொருட்டுணிவை அறிக எனக்கூற வேண்டு மெனவும் அதனாலேயே வடமொழியின் வேறான தமிழ்ச் சிவஞானபோத மொ ன்றுண்டென நன்கு விளங்குமெனவுங் காணப்படுகின்றன.

சிவஞான போதமென்று அந்நூலிலேயே கூறியிருத்தல் கொண்டு அதனின் வேறாய சிவஞான போதமென்று கூறவேண்டுமாயின் அந்நூற்பேர் சிவஞானபோதமென்றிருத்தல் கூடாது, சிவஞான போதமென்ற நூலிலேயே சிவஞானபோதமென்றிருக் கப்பொழுது வேறுநூலென்றெவ்வாறு கூறமுடியும், தமிழ்ச் சிவஞானபோதத்தினின்று மொழிபெயர்த்தபடியால் சிவஞான போதமென்று பேரிட்டுக்கொண்டார்க ளென்றால், தமிழ்ச் சிவ ஞான போதத்தில் சிவக்ஞானபோதே சைவார்த்த நிர்ணயம் என் பதை உணர்த்துஞ் சொற்களில்லையே, தமிழ்ச் சிவஞானபோதத் தினின்று மொழிபெயர்த்தது வடமொழிச் சிவஞானபோத மாத லால், வடமொழிக் சிவஞானபோதமாகிய அதனில் தமிழ்ச் சிவ ஞானபோதத்தி லிவ்வாறு சொல்லப்பட்ட தென்பதை உணர்த்து தற்குத் தமிழ்ச் சிவஞான போதத்தி லில்லாத சிவஞானபோதே சைவார்த்த நிர்ணயம் என்பதைக் கூறப்பட்டது. எனின் மூலனு ரைசெய்த மூவாயிரந்தமிழ் என்றதற்கு வேறு மூவாயிரந்தமிழ் என்றும் ''ஞானசம்பந்தனுரை செய்த திருநெறிய தமிழ்''  என்பது போன்ற திருவாக்குகட்கு வேறு தமிழென்றுங் கொள்ளாமல் இம் மூவாயிரந்தமிழ், இத்திருநெறிய தமிழ் என்று கொள்வது போல சிவக்ஞானபோதே என்பதற்கு இச்சிவஞானபோதமென்று கொள்ள வேண்டு மாதலால் வேறு நூலைக் குறிப்பதற்குக் கூறியதென்றல் பொருந்தாது, அன்றியும் ஞானம், போதம் என்ற இரண்டும் தமிழ்ச்சொல்லாகுமா? அச்சோற்களுக்குத் தமிழில் அறிவு, உணர்வு என்றல்லவோ வழங்கிவருகின்றன, நூற்பெயரே வடமொழியாயிருக்கத் தமிழ் நூலென்றெவ்வாறு கூறுவது?

9. பிற்காலத்து பதிப்பாசிரியர்கள் வடமொழி மொழிபெயர்ப்புத்தான் தமிழ்ச் சிவஞானபோத மென்று கதைஎழுதினர்களெனவும் மற்றவர்களும் குரும்பையாட்டுக் கூட்டமாதலால் அதனைப் பின் பற்றினரெனவுங்காணப்படுகின்றன.
உரைமுழுதும சிவஞான யோகிகள் செய்தார்களென்றொப்புக்கொண்டு இதனை மட்டும் பதிப்பாசிரியர் மேலேற்றுவது எவ்வாறு பொருந்தும் அன்றியும் சிற்றுரை பதினொன்றாஞ் சூத்திரத்தில் மொழி பெயர்ப்புத்தானென்பதற்கு காட்டியிருக்கின்ற உரைநடையும் இலக்கணவிதியும் சிவஞான யோகிகள் கூறாமல் பதிப்பாசிரியர் கூற்றாயிருக்குமாயின் பதிப்பாசிரியர்களின் பெருமை பாராட்டற்பலதே அக்கருத்துத் தானும் அவ்வுரை நடையில்லாத பிரதி சைவதீனங்களிலிருந்து காட்டினால் முற்றுப்பெறும்.

10. தமிழ்ச் சிவஞான போதத்தை ஸ்ரீமாந் ஜெ. எம். நல்ல சாமிபிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் பொழிபெயர்த்தது போல முன்னர் வடமொழியில் பெயர்த்திருப்பார்களெனக் காணப்படுகின்றது. திருக்குறள் இப்பொழுது பலபாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறபடியால் ஒவ்வொருவரும் தங்கள் பாஷையிலுள்ளது தான் முதனூல் ஏனையபாஷைகளிலுள்ளன வெல்லாம் பொழிபெயர்ப்பென்று சொல்லுதல் பொருந்துமா? பொருந்தாதென்பதை எவ்வாறு சாதிக்கலாம்? குறளென்னுஞ் சொல் தமிழுக்கே உரித்தாதலால் பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்படினும் நூற்பெயரைக்கொண்டு முதனூல் தமிழென்றே சாதித் துவிடலாம். அதுபோலவே சிவஞானபோதமென்னும் நூற்பெயரைக்கொண்டே முதனூல் வட மொழியென்று சாதித்து விடலாம். இவ்வாறே மந்திரங்களும் பல பாஷைகளில் ஒருவாறு வரிவடியில் மொழியேயர்க்கப்படினும் தொனிமாறுவதில்லை.

11. ஸ்ரீ மெய்கண்டதேவராகிய தமிழ்க்குழந்தைக்கு ஆரிய பாஷையைச் சொல்ல நியாயமில்லையெனக்காணப்படுகின்றது. இன்றைக்கும் தீக்ஷை சிவ பூஜைக்குரியமந்திரங்கள் ஆரிய பாஷையாயிருக்கவும், தமிழர்களனுட்டித்து வருதல் நியாயமாகுமானால் ஸ்ரீ மெய்கண்ட தேவருக்கு மட்டும் ஏன் நியாயமா கமாட்டாது? தீக்ஷாவிதி சிவபூஜாவிதிகள் இப்பொழுது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. வரினும் சில சொற்கள் தனி வட மொழியாகவே காணப்படுகின்றன. அவ்வாறே தமிழ்ச் சிவஞானபோதத்திலும் அந்தம், ஆதி, ஏகம், ஆலயம், அரன் முதலான பல சொற்கள் வடமொழியாகவே காணப்படுகின்ற.

12. இரண்டு வயதுடைய ஸ்ரீ மெய்கண்டதேவருக்குச் சம ஸ்கிருத சப்தங்களை பிழைபறச் சொல்ல முடியாதாதலால் தமிழ்ப் பாஷையைக்தான் கூறியிருக்க வேண்டுமெனக்காணப்படுகின்றது. இரண்டு வயதிலேயே தமிழ்க் குழந்தைகள் தமிழ் தத்துவசாஸ்த்திரத்தை ஓதுவதியற்கையாயிருந்தாலன்றோ இக்கூற்றுப்பொருந்தும். அவ்வாறின்றித் தெய்வத்திருவருள் சிறு வயதில் தமிழ் தத்துவ சாஸ்திரத்தைப் பேசச்செய்ததென்றால் அத்திருவருள் சமஸ்கிருதத்தைப் பேசச்செப்பாதா? திருவருளினாற்றலிவ்வளவென்றளக்க நம்மால் முடியுமா?

13. ஸ்ரீ பரஞ்சோதி முனிவருக்குத் தமிழே தெரியவராதென்பாருக்கு இறுக்குந்தடையொன்றுளது. அதாவது சிவஞானம் கைவந்தவர்களுக்கு எல்லாபாஷையும் வரும். இதற்குக் குமரகுருபரசுவாமிகள் இந்துஸ்தானி பேசியதே சான்றெனக் காணப்படுகின்றது.

ஸ்ரீ மெய்கண்டதேவர் சமஸ்கிருதம் பேசுவதற்கு மட்டும் இது ஏன்சான்றாகமாட்டாது. நிற்க,

14. பிறி தொருசாரார் எல்லா ஆகமங்களுங் கேட்ட ஸ்ரீ நந்தி தேவருக்கு மலைவு தீர்தற்பொருட்டு உபதேசிக்கப்பட்டது. சிவஞான போதமானால் அது அவ்வாகமங்களின் வேறாய்க்தானேயிருக்கவேண்டும். ஆகமங்களுள் ஒரு ஆகமத்தின் ஒரு பகுதியென்றலெவ்வாறு பொருந்து மென்கின்றனர்?

ஒரு நூலை ஒருவன் கேட்கின்றான், கேட்ட பின்னர் அந்நூலிலுள்ள திரண்டபொருள் இதுவெனத் தேற்ற வேண்டுமென்றுக் கேட்பானாபின் அவனுக்குவேறு நூல் கூறுதல் பொருந்துமா? கூறுவனாயின் முன் கற்றநூல் பயனற்றதாய் முடியுமல்லவா, ஆதலால் முன்கற்ற நூலிலேயே அந்நூற்பொருள்கள் யாவு மடங்கிக் கிடக்கும் பகுதியை மீண்டு மெடுத்துக் காட்டுதல் போல எல்லா ஆகமப்பொருளுங் கேட்ட ஸ்ரீ நந்தி தேவர் அவ்வாகமங்களின் ஞானபாகங்களுள் பொருள்கள் ஏழென்றும் ஆறென்றும் ஐந்தென்றும், நான்கென்றும், மூன்றென்றும் கூறப்படுகின்றனவே. உண்மையாதெனக் கேட்க மூன்று பொருளைப்பற்றிக் கூறிய பன்னிருசூத்திரத்தைத் திரும்ப எடுத்துகூறி ஏனையவற்றை அம்முப்பொருளிலடக்கிக்காட்டினார், இவ்வாறே பல நூறபொருளை ஒருநூலில் ஒரு பகுதியிலடக்கிக் காட்டுவது வழக்கென்பதனை "பாதி விருத் கத்தாலிப்பார் விருத்தமாக உண்மை சாதித்தார்'' என்றும் ''பார விரித்தநூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப்பாதி போதும்'' என்றுங்கூறிய திருவாக்குகளால் நன்குதெளியப்படும். என்னை? பார் விரித்த நூலெல்லாம் என்றனால் சிவஞான சித்தியும் டங்கும், அடங்காதாயின் ஓர் விருத்தமென்றிருத்தல் கூடாது. ஆகவே சித்தியார் முதலிய எல்லா நூற் பொருளும் சித்தியாருட் பாதிவிருத்தத்தாலறியலாமென் றவாறாம். அவ்வாறே இரௌரவ முதலிய எல்லா ஆகமப் பொருளையும் இரௌரவத்துள் பன்னிரு சூத்திரத்தா லறியலா மென்பதே துணிபாதலால் ஆகமங்களின் வேறாய்ச் சிவஞான போத மிருக்கவேண்டுமென்றல் பொருந்தா தென்க.

மற்றொரு சாரார் சிவஞானபோதம் ஸ்ரீமெய்கண்ட தேவருக்கு முன் தமிழிலில்லையென்றால் ஸ்ரீமெய்கண்ட தேவருக்கு முன் தமிழர்கள் ஞானம் பெறவில்லையா பெற்றிருப்பரேல் அப்பொழுது ஞானநூல் யாது எனவினவி ஸ்ரீமெய்கண்ட தேவருக்கு முன்ன ரே தமிழில் சிவஞான போத மிருக்கவேண்டு மென்கின்றனர். ஸ்ரீமெய்கண்ட தேவருக்கு முன்னரே தேவாரம் திருவாசகம், திருமந்திரம், திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், திருக்குறள் முதலிய நூல்களுள இந்நூல்களில் ஒரு நூலைக்கற்று ஞானம் பெற்றார், பெறுகின்றார், பெறுவார் பலர். அங்ஙனமாயின் சிவஞானபோதநூல் தோன்றியதின் சருத்தென்னையெனின் ஞானத்திற்குரிய பொருளாராய்ச்சியின் மலைவை அத்துவிதச் சொல்லின் உண்மைப் பொருளால் நீக்கியதேயாம். இத்தமிழ் நாட்டில் அத்துவிதச்சொல்லின் உண்மைப் பொருளை ஐயமின்றியே உண ர்ந்து வந்த நாட்கள் பலகழியவும் பின்னர் ஐயமுண்டாயிற்று. உண்டாகவே அவ்வையத்தைத் தீர்த்தற்கு வடமொழிச் சிவஞா னபோதத்தை ஸ்ரீமெய்கண்ட தேவர் மொழிபெயர்த்து உரையு ஞ்செய்தனர். இது பற்றியே 'பொய்கண்டார் காணாப்புனிதமெனு மத்து விதம், மெய்கண்டநாதன்'' எனத் தாயுமானசுவாமிகளருளிச் செய்வாராயினர்.

ஆகவே ''மயர்வற நந்திமுனி கணத்தளித்த' என்றதனால் பொருளாராய்ச்சியின் ஐயத்தை நீக்குதற்பொருட்டு நந்திபெருமானுக்கு வடமொழிச் சிவஞான போதம் உபதேசிக்கப்பட்டதெனவும் அதனோடு அத்துவிதத்தின் ஐயத்தை நீக்குதற்பொருட்டு ஸ்ரீமெய்கண்ட தேவர் வடமொழிச் சிவஞானபோதத்தை தமிழில் மொழிபெயர்த்து ஏது, திருட்டாந்த முதலிய உரையையுஞ் செய்தனரெனவும் இனிது புலனாம்.

இன்னும் தமிழ்ச் சிவஞான போத நூல் மொழிபெயர்ப்பு பென்பதே 'முந்து மாகமத்தை யருட்டுறை * யண்ணன் மொழி பெயர்த்துரைத்த நூன் முதலா முதல்வழி சார் பா மூன்று நூற் கருத்துப்" என்றருளிய உலகுடை நாயனார் திருவாக்கானுந்தெளிக.
* அருட்டுறை - திருவெண்ணெய் நல்லூர்

இதுகாறுங் கூறியவற்றை நடுவுநிலைமையோடு ஆராய்ந்து உண்மைகடைப்பிடித்தல் அறிவுடையார்க்கழகாம். வேறொரு சாரார் வடமொழிச் சிவஞானபோதத்து இறுதி "ஏவம் வித்யா சிவஞானபோதே சைவார்தநிர்ணயம்' என்றிருக்கவும் தமிழ்ச் சிவஞான போதத்தில் அவ்வாக்கியத்தைக் குறித்த ஒன்று மில்லாமையினால் தமிழ்ச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூல் அன்று எனக்கூறுகின்றனர். இவர் கூற்றும் பொருந்தாது? என்னை? வடமொழிச் சிவஞானபோதத்தில் காப்பும் அவையடக்கமும் கிடையா. அவ்விரண்டும் இல்லாமையே அது ஒரு நூலின் ஒருபாகமென்பதை நன்கு விளக்கும். இனி, ரௌரவ ஆகமத்துள் ஒருபாகமாகிய அதனைத் தனித்தெடுத்துக்கூறி நந்திபெருமானுக்குள்ள மலைவை சிவபெருமான் தீர்த்தருளினாராதலின் அவ்வாறு தீர்த்துள்ளாரென்பதை குறிப்பிப்பதற்கு இறுதியில் "ஏவம்'' என்றது முதல் நிர்ணயம் என்ற துவரையுள்ள சொற்றொடர் சிவபெருமானால் அருளிச்செய்யப்பட்டது. இச் சொற்றொடரின் பொருவையே தமிழில் மொழிபெயர்த்துரைத்த மெய்கண்டதேவர் காப்புச்செய்யுளில் அமைத்து வைத்தார் எவ்வாறெனின் கூறுதும். நந்திபெருமானுக்கு சிவஞானபோதத்தை அருளிச்செய்தவர் சிவபிரான் ஆதலாலும் அவர் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருந்த இடம் கல்லால் நிழல் ஆதலானும் அவ்விரண்டனையும் உணர்த்துதற்குக்கல்லால் நிழல் என்றும் அவ்விடத்தெழுந்தருளியிருந்து சிவாகமப்பொருளிலுள்ள மலைவை நந்திப்பெருமானுக்குத் தீர்த்தருளியதைக் குறிப்பிக்கும் சைவார்த்த நிர்ணயமென்ற வடமொழிச்சொல்லை மலைவில்லார் என்றும் நந்திபெருமானு க்குச் சிவஞான போதத்தால் மலைவு தீர்த்ததுபோல் தமக்கும் மலைவு தீர்த்தருளுதற் பொருட்டுப் பொல்லாரிணை மலர் நல்லார் புனைவரென்னும் காப்புச் செய்தருளினர். இவ்வுண்மையறிந்தே திருவருட்டோன்றலாய் விளங்கிய மாதவச் சிவஞான யோகிகள் மலைவில்லார் என்பதற்கு மலைவு தீர்த்தருளிய முதலாசிரியர் எனவும் அருளிய என்பதற்கு மேன்மேல் கருணை கூர்ந்தருளுதற்பொருட்டெனவும் உரைகூறி அவ்வாறு கூறுதற்கு இலக்கணவிதியும் காட்டினர். இக்கருத்தறியா தார் சுவாமிகள் வாக்கியத்தை இடர்ப்படுத்திப் பொருள் கூறி தன் வல்லமையை காட்டுவதில் சிறந்தாரென்று வாய்கூசாது சொல்லுவர் அந்தோ! இவ்வாறு கூறுவார் கொடும் பாவத்தைப்பற்றி என்னென்றுரைப்பாம்.

இனி, அருளிய பொல்லார் என பெயரெச்சமுடிபாக  வைத்து உரைத்தலுமொன்று என மற்றோர் உரையும் சுவாமிகவே. அருளிச்செய்திருக்கின்றனர். அவ்வாறு கொள்ளுங்காலத்துக் கல்லாநிழல் என்ற அடை சிவபெருமான் குருமூர்த்தியாய் எழுந் தருளியிருக்கும் இடத்தை உணர்த்துதற் கண்மாறுபடாமையின் சிவபெருமானைக் குறிப்பிக்கும் அடைமொழிகள் பலவிருக்கவும் சல்லால் நிழலைக் குறிப்பித்ததினாலே வடமொழிச் சிவஞானபோதத்து இறுதியிலுள்ள பொருளைக் குறிப்பித்தவாறாகும். என்னைகல்லா நிழலின்கண்ணே எழுந்தருளியிருந்து சிவபெருமான் செய்தசெயல் ஞானபாதப்பொருளின் மலைவைத் தீர்த்ததேயன்றி பிரிதில்லையாதலால் என்க. நந்திபெருமான் முதல் மெய்கண்டதேவர் ஈறாக சிவஞான போதம் தமிழிலே தான் இருந்ததென்பார் கூற்றும், தமிழ்ச் சிவ ஞானபோதத்தை வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டா ரென்பார் கூற்றும் பொருந்தாதென்பது இக்காப்புச்செய்யுளும்'' தம்மையுணர்ந்து'' என்ற அவை படக்கச் செய்யுளும் வடமொ ழிச் சிவஞான போதத்தில் இல்லாமையே நன்குவிளங்கும்.

பொ - முத்தையாபிள்ளை,
திருவாவடுதுறை ஆதீன சைவப்பிரசாரகர்
தூத்துக்குடி.

சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴




No comments:

Post a Comment