Saturday, May 9, 2020



தமிழ்ச் சமர்த்தர்

ந. ரா. முருகவேள்

[கொழும்பு விவேகானந்த சபையின் வைர விழாவை ஒட்டி 20, 21, 22 - 4 - 1962 தேதிகளில் நடைபெற்ற திரு முறை மாநாட்டில் திருக்கேதீச்சுரத் திருப்பணிக் குழுத்தலைவர் திரு. சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் தலைமையில், 22 - 4 - 62 அன்று மாலை நிகழ்த்திய சொற் பொழிவின் சுருக்கம்.]


முன்னுரை:

'தமிழ்ச் சமர்த்தர் 'என்னும் தொடர், தாயுமான அடிகளால் வழங்கப்பெற்ற தொன்றாகும். 'சமர்த்தர்' என்னும் சொல் செயற்கருஞ் செயல்களை எளிய இனிய முறையில் திறம்படச் செய்து முடிக்கவல்ல பேராற்றல் மிக்கவர்களைக் குறிக்கும். சமர்த்து எனினும், சாமர்த்தியம் எனினும் ஒக்கும். 'வித்தகர்', 'சதுரர்', 'வல்லாளர்' என்னும் வேறு பிறசொற்களும், இப்பொருளையே யுணர்த்தும் சிறப்புடையன.

"நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது''

என்னும் திருக்குறளில் திருவள்ளுவரால் வித்தகர் என்ற சொல்லும்

"தந்த துன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்?''

என்ற திருவாசகப் பாடலில் மாணிக்கவாசகரால் சதுரர் என்ற சொல்லும்,

"அந்தணனைத் தஞ்சம் என்று ஆட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன்''

என்ற பாடலில் காரைக்கால் அம்மையாரால் வல்லாளன் என்ற சொல்லும், அழகிய இனிய அரிய முறையில் இலக்கிய நலம் பொலிய ஆங்காங்கே எடுத்தாளப் பெற்றிருத்தல் காணலாம்.



தாயுமானவர்:

தாயுமான சுவாமிகள் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் தலை சிறந்த ஞானத்தவமுனிவர். வேதாந்த சித்தாந்த சமரச ஞான வித்தகச் செல்வர். இறையருளனுபவம் கைவரப் பெற்ற இணையற்ற அரும்பெருஞ் சான்றோர். தேவார திருவாசகத் திருமுறைகளையெல்லாம் ஓதி ஓதி யுணர்ந்து உய்வும் உயர்வும் எய்தியவர். அவர்,

"தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கட்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப் பாக
மூவர்சொலும் தமிழ் கேட்கும் திருச்செ விக்கே
மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான்?''

என அருளிச் செய்திருத்தல் கொண்டு, மூவர் தமிழ் ஆகிய தேவாரத் திருமுறைகள் மீது தாயுமானவர் கொண்டிருந்த பெருமதிப்பும் பேரன்பும் இனைய என்று எண்ணியுணரலாம். தேவார திருவாசகத் திருமுறைகளை யெல்லாம், தாயுமானவர் ஆழ்ந்து ஆராய்ந்து பல்காற் பயின்று ஓதியுணர்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர் அதனாலேயே அவர், 'மொழிக்கு மொழி தித்திப்பாக அமைந்தது மூவர் தமிழ்' என்று குறிப்பிடுகின்றார்.

ஓதியுணர்ந்த உயர் அனுபவம்:

தேவார திருவாசகத் திருமுறைகளை யெல்லாம் ஓதி ஓதியுணர்ந்து உள்ளம் களி துளும்பிய தாயுமானவர்க்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்களில் மிகவும் அழுந் திய ஈடுபாடு இருந்தது.

"தேன்படிக்கும் அமுதாம் நின் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நான் அறியேன். நாஒன்றோ?
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும். உயிர்க்குயிரும்
தான் படிக்கும் அனுபவம்காண் தனிக்கருணைப் பெருந்தகையே"

என அண்மைக் காலத்தில் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்திருத்தல் போலவே, தாயுமானவரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடல்களைத் தினந்தோறும் ஓதி ஓதி இன்புற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. சுந்தரரின் பாடல்கள் பல தாயுமானவரின் நெஞ்சைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சிறப்பாக

"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழை ஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே"

என்ற பாடல், அவர் தம் திருவுள்ளத்தைப் பெரிதும் கொள்ளை கொண்டது. தமிழகச் சான்றோர்கள் அனைவரின் உள்ளங்களையுமே இத் திருப்பாடல் பெரிதும் கொள்ளை கொண்டு விட்ட தென்னும் உண்மையை,

"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்று முன் நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழ நினைந் திடில் அடியேன் அருங்கரணம் கரைந்து கரைந்து
ஊழியில்ஒன் றாவ துகாண் உயர்கருணைப் பெருந்தகையே''

என வரும் திருவருட்பாவினால் நாம் தெளிதல் கூடும். இராமலிங்க அடிகளாரைப் போலவே, தாயுமான அடிகளாரும் 'ஏழிசையாய் இசைப்பயனாய்' எனத் தொடங்கும் சுந்தரரின் தேவாரப் பாடலில் தம் நெஞ்சம் பறிகொடுத்து வியந்து மகிழ்ந்தனர் என்னும் செய்தி,

"என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின்
நன்னெறியைக் கண்டு உரிமை நாம்செய்வ தெந்நாளோ?''

எனத் தாயுமானவர் அருளிச் செய்திருத்தல் கொண்டு உணரப்படும். இங்ஙனம் சுந்தரரின் தேவாரப் பாடல் களை நாடோறும் ஓதி ஈடுபட்டு நின்று, அவர்தம் அருமை பெருமைகளை யெல்லாம் அறிந்து மகிழ்ந்தே தாயுமானவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தமிழ்ச் சமர்த்தர்'என வியந்து போற்றிச் சிறப்பித்துக் குறிப்பிடுகின்றார்

"பித்தர் இறை என்றறிந்து, பேதைபால் தூது அனுப்பு
வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வது எந்நாளோ?''

சூத்திரமும் பாஷ்யமும்:

தமிழ்ச் சமர்த்தர்' என்னும் தொடர் சிறியது; ஆனால் அதன் பொருட் குறிப்பும் பரப்பும் மிகப் பெரியன. சுந்தரரைப் பற்றித் தம்முடைய உள்ளார்ந்த கருத்துக்கள் அனைத்தினையும், தாயுமானவர் இச்சிறிய தொடரின் கண் செறித்துக் கூறித் தெளிவுறுத்துகின்றார்! இவ்வாற்றால் இதனை ஒரு சூத்திரம்' என்று சொல்லுதலும் தகும். வாதராயணரின் பிரம சூத்திரத்திற்குச் சங்கரர் இராமாநுசர் மத்துவர் முதலிய பலர் பல சிறந்த பேருரைகளைக் (பாஷ்யம்) கண்டதுபோல, நாமும் இத்தொடருக்குப் பல சிறந்த பொருட் குறிப்புக்களை நம் தவத்திற்கும் தகுதிக்கும் ஏற்பக் கொள்ளுதல் கூடும். ஈண்டைக்கு வேண்டிய அளவில் ஒரு சிறிது மட்டும் ஆராய்வோம்.

தூது போக்கிய தொண்டு:

வேதாகமங்கள் எல்லாம் இறைவனைப் பேரறிவும் பேராற்றலும் உடையவன் என்று புகழ்ந்து கூறி வியக்கின்றன. ஆனாற் சுந்தரரோ, அன்பர்களின் அன்பிற்குக் கட்டுண்ணும் அளவிலா எளிமை, அடியார்களின் குற்றங் குறைகளைக் கண்டு கொள்ளாத அறியாமை, பச்சிலையும் நீரும் தூவி வழிபடும் சிறு செயலுக்கே பெரிதும் மகிழ்ந்து பேரின்ப வீடு அளித்தருளும்  'ஆசுதோஷி'  (அற்பத்திற்கும் அகம் மிக மகிழ்பவன்) ஆகும் தன்மை முதலிய பண்புகள் பல கருதி, இறைவனைப் பித்தர் என்று அறிந்து கொண்டார். அதுவே ஒரு பெருஞ் சாமர்த்தியம்! அம்மட்டோ! தேவர்களை யெல்லாம் ஏவல் கொள்ளும் சிறப்புடைய சிவ பெருமானைத் தாம் ஏவல்கொண்டார் - பித்தனைப் பேதை பால் தூது அனுப்பிவைத்தார். தலைவரெல்லாம் தலை வணங்கும் தனிப்பெருந் தலைவனாகிய சிவபெருமானையே ஏவல் கொண்டமை, ஒரு பெருஞ் சதுரப்பாடேயாகும் அன்றோ? இச் சமர்த்தினையே,

"அரவகல் அல்கு லார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
தருவம்என் றளவில் வேதம் சாற்றிய தலைவன் தன்னைப்
பாவைதன் பக்கல் மேனாள் கழு துகண் படுக்கும் பானாள்
இரவினில் தூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்”

"மோகம் அறுத்திடின் நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டு தனை
ஏதாகச் சொல்லுவேன் யான்''

"பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன் எனத்
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறுந் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே''

எனச் சான்றோர்கள் பற்பலரும் பாராட்டி வியந்திருத்தல் அறிந்தின் புறுதற்குரியது.

''ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட்டு
ஆட்கொண்ட உவனைக் கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட
வல்லாளன்....''

எனவரும் காஞ்சிப் புராணச் செய்யுளிற் சிவஞான சுவாமிகளால் குறிப்பிடப் பெற்றிருக்கும் கருத்தும் ஈண்டைக்கு மிகவும் பொருத்தம் உடையது.

திருத்தொண்டத் தொகையின் திறம்:

சுந்தரரின் தமிழ்ச் சமர்த்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டாதற்கு, அவர் அருளிச்செய்த திருத்தொண்டத்தொகை ஒன்றே சாலும்! அறுபான் மும்மை நாயன் மார்களின் நாடு நகரம் குலம் வரலாறு கொள்கை தொண்டு அருள் நிகழ்ச்சி ஆகிய பலவற்றையும் திறம் தெரிந்து சுருங்க விளக்கி, அவ்வாற்றால் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதிக்கும், சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணத்திற்கும் அடிப்படை வகுத்தளித்தமை, சுந்தரரின் தமிழ்ச் சமர்த்தின் விளைவேயாகும். இஞ்ஞான்றைச் சைவ நெறியின் வளர்ச்சிகளுக்கும் வரலாற்றுக்கும் எல்லாம் மூலகாரண மாகத் திகழ்வது திருத்தொண்டத் தொகையே ! அதனால் அன்றோ,'மூலமான திருத்தொண்டத் தொகைக்கு முதல் வராய் இந்த ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பியாரூரர்" எனச் சேக்கிழார் பெருமான் சுந்தரரைப் பாராட்டிக் கூறி, அவரையே தமது பெரியபுராணக் காப்பியத் தலைவர் ஆகவும் அமைத்துக்கொண்டு சிறப்பித்தருளினார். திருத் தொண்டத் தொகையில் சுந்தரர் இல்லையே என்னாத இயற் பகை', 'வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்', 'கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பா', 'நாட்டம் மிகு தண்டி', 'மும்மையால் உலகாண்ட மூர்த்தி', 'மறவாது கல்லெறிந்த சாக்கியன்', 'திருநீலகண்டத்துக்குக் குயவனார் - பாணனார்' என்பன போன்று அருளிச் செய்துள்ள அரிய தொடர்கள் எல்லாம், அவ்வந் நாயன்மார்களின் அருமை பெருமைகளை யெல்லாம் எத்துணை நுணுக்கமாகத் திறம் தெரிந்து சுட்டிக் காட்டிச் சிறப்பித்துத் தெளிவுறுத்துகின்றன! இவ்வருமைப்பாடுகளை யெல்லாம் செவ்விதின் உணரவல்லார்க்குத் தமிழ்ச் சமர்த்தர்' என்ற புகழுரையின் பொருத்தம் புலனாகும் அன்றோ?

சைவப் பயிர்:

சுந்தரரின் சமர்த்துக்கு வேறொன்றையும் ஈண்டு நாம் நினைவு கூரலாம். ஒரு நாட்டினர் அடிமைத் தளையினின்று விடுதலை பெறுவது சிறப்பு: பெற்ற விடு தலையைப் பேணிக் காத்து வளர்த்துப் போற்றுவது அதனினும் பெருஞ் சிறப்பு. அதுபோல நாவுக்கரசரும் சமண பௌத்த சமயங்களின் தாக்குதல்களினின்று சைவ சமயத்தை மீட்டு நலஞ் செய்தனர்; அச் சைவ சமயத்தை அவர்களின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து பேணிக் காத்துப் போற்றிச் சுந்தரமூர்த்தி சுவாமிகளே பெரிதும் வளர்த்தருளினார் எனலாம்: பக்தி விதையை விதைத்து அன்பு நீரைப் பாய்ச்சிச் சைவம் ஆகிய பயிர் வளருமாறு நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் தொண்டாற்றிச் சென்றனர். அப்பயிருக்கு எருவிட்டுக் களைகட்டு வேலிகோலிக் காவல் புரிந்து, கதிர்கள் முதிரவும் விளைவு பெருகவும் போகம் பெருகவும் வேண்டுவன எல்லாம் செய்தமைத்து நம்மனோர்க்கு உதவி புரிந்தவர் சுந்தரரே யாவார். சுந்தர ரின் சமர்த்து மிக்க இவ்வரும் பெருஞ் செயலின் அருமைப் பாட்டினையே:

"படியில் நீடும் பத்திமுதல்
அன்பு நீரிற் பணைத் தோங்கி
வடிவு நம்பி யாரூரர்
செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின்
களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால்''

எனச் சேக்கிழார் பெருமான் உருவக முகமாக உள்ளுணர்ந்து உவந்து பாடி மகிழ்விக்கின்றார்! சுந்தரர் தமிழ்ச் சமர்த்தர்' என்பதனை இத்திறம் பற்றியும் நாம் இனி தெண்ணித் துணியலாம்

தவநெறி விளக்கம்:

சுந்தரர் செய்தருளிய சமர்த்தான செயற்கருஞ் செயல்கள் பல. அவற்றுள் தவநெறியின் இயல்பினை அவர் விளக்கியருளிய திறமும் ஒன்று ஆகும். 'தவம்' என்னும் சொல்லை நாம் நன்கறிவோம். ஆனால் தவம் என்பது யாது?' என எவரேனும் வினவின், அதற்கு விடையிறுத்தல் நம்மனோர்க்கு எளிதின் இயல்வதன்று. தவம் என்பது பற்றிப் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறக்கூடும். சுந்தரரின் காலத்திற்கு மூன்னும் பின்னும் தவநெறி பற்றிப் பலவேறு கருத்துக்கள் உலவி வந்துள்ளன. சமணர்களும் பௌத்தர்களும் பிறரும் மனைவி மக்களைத் துறந்து, உலகியலோடு, பொருந்தாமல் ஐம் பொறிகளைக் கடிந்து அடக்கி வருத்திக் காவியுடுத்தும், மழித்தலும் நீட்டலும் செய்தும், காடு மலை குகைகளில் தனித்திருந்து வாழ்வதே தவம் எனக் கருதிவந்தனர். இன்றும் அங்ஙனமே பலர் கருதி வருகின்றனர். சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரில் தடுத்து ஆட்கொள்ளப் பெறு கின்றார். பிறகு திருநாவலர் மீண்டு திருப்பதிகம் பாடி இறையருளைப் பரவுகின்றார். பின்னர் அங்கிருந்து திருத் துறையூர் சென்று அணைகின்றார்.

"தீவினையால் அவ நெறியே செல்லாமல் தடுத்தாண்டாய்.
அடியேற்குத் தவநெறி தந்தருள்''

என்று துறையூர் இறைவனைப் பாடித் துதிக்கின்றார். துதித்துத் தவநெறி பெற்ற சுந்தரர் காடு மலை குகைகளில் தனித்திருந்து வாழ்ந்திலர்; அரச மாளிகைகளில் வாழ்ந்தார். "இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு" அவருக்கு வாய்த்திருந்தது. பரவையார் சங்கிலியார் என்னும் இரு மனைவியரை மணம் புணர்ந்து கூடியிருந்தார். வனப் பகை சிங்கடி என்னும் இருவரைத் தமது அருமை மகளிராக ஏற்றுக்கொண்டருளி மகிழ்ந்தார். திருமணக் கோலப் பெருமாள் என விளங்கி, ஐம்புல இன்பங்களும் ஆரத்துய்த்தார். கத்தூரி கமழ்சாந்து பூசி மகிழ்ந்தார் கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டினார்.

"பண்டு நிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே
வண்டமர் பூங் குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூ நலத்தைக்
கண்டுகேட்டுண்டுயிர்த் துற் றமர்ந்திருந்தார் காதலினால்''

எனச் சேக்கிழார் பெருமான் சிறந்தெடுத்துப் பாடியிருத் தலும் இச்செய்தியினை வலியுறுத்தும். இவ்வாற்றால் சுந்தரர் தவநெறிக்குப் புதிய விளக்கம் தந்தருளிய சான்றோராதல் உணரலாம்.

தவம்' என்னும் சொல், தபு என்னும் வினைச்சொல் லின் அடியாகவும், தவ என்னும் உரிச்சொல்லின் அடியாகவும் தோன்றியது எனக் கொள்ளலாம். முறையே அவற்றிற்குத் 'கெடுதல்'' மிகுதல்' என்னும் பொருள்கள் உரியனவாகும். 'நம்மிடம் உள்ள காம வெகுளி மயக்கம் முதலிய தீய குற்றங்கள் கெட்டொழிய, அன்பும் அறிவும் அருளும் போன்ற நற்பண்புகள் வளர்ந்தோங்கப் பெரிதும் முயன்று வாழும் முறையே தவநெறியாகும்.'  என்னும் அரும்பெறல் உண்மையினைத் தவம்' என்னும் சொற் பொருட் குறிப்பால் நாம் இனிது துணியலாம்.

"குற்றங் குறையக் குணம்மே லிட, அருளை
உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே''

என இதனைத் தாயுமானவர் தாமும் அருளிச் செய்திருத்தல் ஈண்டுணரத் தகும்.

இங்ஙனம் நாம் தவநெறிக்குப் புதிய விளக்கம் கொண்டு புரிந்து கொள்ளும் முறையில், பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கு முற்ற வரும் பரிசில்', மங்கையரோடு இருந்தே யோகு செய்யும் மாண்புடைய வராக விளங்கி வாழ்ந்து காட்டியருளிய சுந்தரர் 'தமிழ்ச் சமர்த்தர்' என்பதில் தடையும் உண்டோ?

தவயோக நெறி:

இங்ஙனம் மங்கையரோடு மணந்திருந்தே யோகநெறி நிற்கும் மாண்புடையவராக விளங்கியருளிய சுந்தரரை

"இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை''
என்பது பற்றிச் சான்றோர்கள் அனைவரும் மிகவியந்து புகழ்ந்து போற்றி மகிழ்ந்துள்ளனர்.

"செல்வ நல் ஒற்றி யூரன்
செய்யசங் கிலியால் ஆர்த்து
மல்லலம் பரவை தன்கண்
மாழ்குற அமிழ்த்து மேனும்
அல்லும் நன் பகலும் நீங்காது
அவன் அடி மகிழில் எய்தி
நல்ல இன் படைந்தி ருப்பன்
நம்பியா ரூரன் தானே'"
பெருமிழலைக் குறும்பர் எனும் பரமயோகி
பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி
விரைமலர் தூய் வந்தனை செய்கின்றான் என்றால்,
விளங்கிழையார் இருவரொடும் முயங்க லாமோ?
உரைமதி! நின்றனை வெறுப்ப தென்கொல்? நின்னை
உடையானுக் கடுத்த செயல் உனக்கும் ஆயிற்
சுரர்முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்
தொகைசெய்தோய் ! அறம் முதல் நால் வகைசெய்தோயே''

எனத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் மிக வியந்து போற்றிப் பாராட்டியிருத்தல், ஈண்டு அறிந்து இன்புறத்தக்கது. சேக்கிழார் பெருந்தகையும் மிக்க விழுத்தவ வேந்தர்' எனவும், ‘நீத்தாரும் தொடர்வரிய நெறிநின்றார்' எனவும் போற்றிப் புகழ்ந்திருத்தல் காணலாம். சிவஞானியர் இலக்கணம் தெளிவிக்கத் தலைப்படும் அருள் நந்தி சிவம், சுந்தரரின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அதனையே மேல்வரிச் சட்டமாகக் கொண்டு,

நாடுகளிற் புக்குழன் றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாக முதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்;
ஏடு தரும் மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும், இறைஞானம்
கூடுமவர் கூடரிய வீடும் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்''

அங்கித்தம் பனைவல்லார்க்கு அனல் சுடா தாகும்
அவுடதமந் திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா
எங்கித்தைக் கன்மமெல்லாம் செய்தாலும் ஞானிக்கு
இருவினைகள் சென்றணையா...                  (சித்தியார்: 308, 309)

எனத் தெளிவுறுத்தி யருள்கின்றார். சரியை கிரியை யோக ஞானங்களுள் சுந்தரர் யோக நெறிக்குரியவர் என்பதும், "நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயொர் நால்விரல்” என அவர் அருளிச் செய்திருப்பதும், ஈண்டு நாம் நினைவில் இருத்துதற்குரியன.

வீடுபெற்ற நிலையின் வியப்பு:

இனி வேறொரு வகையிலும் ஆராயலாம். அப்பர் சம்பந்தர் மாணிக்க வாசகர் முதலிய அருளாளர்கள் அனைவரும், மண்ணுலகை நீத்து விண்ணுல கெய்தா இறையரு ளொளியிற் கலக்கப் புக்க நிலையில், அவர்களிடம் இருந்து நாம் யாதொரு செய்தியும் பதிகமும் கிடைக்கப் பெற் றிலேம். அனால் சுந்தரர் திருவஞ்சைக் களத்தினின்று புறப்பட்டு வெள்ளை யானை ஏறித் திருக்கயிலையை நோக் கிச் செல்லுங்கால் வழியிடையே பாடிக்கொண்டு சென்ற ''தான் எனை முன்படைத்தான்'' என்னும் திருப்பதிகம், "ஆழிகடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே'' என அவராற் பணிக்கப் பெற்றபடி, வருணதேவனால் திரு வஞ்சைக் களத்தில் உய்க்கப்பட்டு, நம்மனோர் அனைவராலும் உணரப் பெற்றது. அத்திருப்பதிகத்தின் கண் சுந்தரர் இறைவன் தம்மை வெள்ளை யானையை அனுப்பி வைத்துத் திருக்கயிலைக்கு வரவழைத்துக் கொண்டதும், இந்திரன் மால் பிரமன் முதலிய தேவர்களெல்லாம் வந்து தம்மை எதிர்கொண்டு வரவேற்றதும், ஆகிய செய்திகளைத் தெரிவித் தருளியிருக்கின்றார்.

"மண்ணுலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்பவெள்ளை யானையின் மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை யுத்தமனே''

"இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமா முனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை யுத்தமனே''

இத்தகைய அரிய பல நலங்கள் அமைந்த திருப்பதிகம் ஆதல் பற்றியே, தாயுமானவர் 'தான் எனை முன்படைத் தான்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு விளங்கினார்!


"தான் என்னை முன்படைத்தான் என்ற தகவுரையை
நான் என்னா உண்மைபெற்று நாம் உணர்வ தெந்நாளோ''

என அவர் அருளிச் செய்திருத்தல் காண்க!  வீடுபேறு எய்துவோர் அனைவரும் உடம்பு நீங்கிய பின்னரே அதனை எய்தப் பெறுவர். வீடுபேறு தலைக்கூடுதல் உடம்பு நீங்கிய தற்குப் பின்னரே இயலும். இது குறித்தே 'செடியார் உடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா?' எனவும், 'தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கை யின் திண்வலையே' எனவும் 'மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்' எனவும் மாணிக்கவாசகர் ஆங்காங்கே அருளிச் செய்வாராயினர். இங்ஙனமாகவும், சுந்தரரோ களையா உடலோடு - மானவ யாக்கையோடு - திருக்கயிலை செல்லப்பெற்றார். தாம் சென்றது மட்டுமே யன்றித் தமது அருமை நண்பர் ஆகிய சேரமான் பெரு மாளையும் மனித யாக்கையுடனேயே தம்மோடு திருக் கயிலைக்கு அழைத்துச் சென்றார். சுந்தரர் எய்திய இவ் வீடு பேற்று நிலையின் இயல்பினை வியந்து,


"களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேற்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே''

எனத் திருவிசைப்பா ஆசிரியர் பூந்துருத்தி நம்பிகாட நம்பி களும்,

"ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம்
மானவ யாக்கை யொடும்புக் கவரை; வளர் ஒளிப்பூண்
வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத் தோர் தங்கள் கூட்டத்திலே

என நம்பியாண்டார் நம்பிகளும் புகழ்ந்து போற்றியிருத்தல் காணலாம். இவ்வாற்றாலும் சுந்தரர் ஒரு பெருந் தமிழ்ச் சமர்த்தர் என்பது பெறப்படுகின்றதன்றோ?

வினாவும் விடையும்:

சற்று முன்னர் நிகழ்ந்த 'ஐயந்தெளிதல்' (Seminar) நிகழ்ச்சியில், 'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என ஞானசம்பந்தர் பாடியிருக்க, 'வாழ்வாவது மாயம் இதுமண்ணாவது திண்ணம்'' எனச் சுந்தரர் பாடியிருப்பது முரண்பாடு அல்லவா? என நண்பர் ஒருவர் ஐயுற்று வினவி யிருந்தார். அஃது ஈண்டைக்கு ஒருவகையில் இயைபுடையதாக இருத்தலின், அதற்கு ஒரு சிறிது விடையிறுக்க விழைகின்றேன். ஞானசம்பந்தரின் கூற்றைத் தெருள் நோக்கு (Optimism ) என்றும், சுந்தரரின் கூற்றை மருள் நோக்கு (Pessimism) என்றும் கருதிக்கொண்டு. நண்பர் அவர்கள் மயங்குகின்றார் போலும்! இருவர் கூற்றும் தெருள் நோக்கு உடையனவே அவை தம்முள் முரணுவன அல்ல. ஒன்று மற்றொன்றிற்கு அரண் செய்வதேயாகும். இங்கே மாயம் என்னும் சொல், மித்தை (Illusion, Delusion) என்னும் பொருளில் வழங்கப்படவில்லை; அசத்து (Evanescence) என்னும் பொருளினையே (உள்ளது போலத் தோன்றி இல்லையாகிவிடும் நிலையாமைத் தன்மை யினையே) அது குறிக்கின்றது.

"மண்தனில் வாழ்வும் வானத்
தரசு அயன் மாலார் வாழ்வும்
எண்தரு பூத பேத
யோனிகள் யாவும் எல்லாம்
கண்ட இந்திரமா சாலம்
கனாக்கழு திரதம் காட்டி
உண்டுபோல் இன்றாம் பண்பின்
உலகினை அசத்தும் என்பர்''

எனவரும் சிவஞான சித்தியார் செய்யுளும், அதற்கு
இந்திர சாலம் (Magic) தோன்றும் பொழுதே இல்லையாய் மறைவனவற்றிற்கும், கனாக்காட்சி (Dreams) கடைபோதல் இன்றி இடையே அழிவனவற்றிற்கும், கழுதிரதம் (Mirage) ஒரு காரணம் காட்டி அழி வெய்து வனவற்றிற்கும் உவமையாயின்'

எனச் சிவஞான சுவாபிகள் வகுத்த உரை விளக்கமும் ஈண்டு உளங்கொளத் தக்கன. இங்ஙனமே,

"நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும்
ஓரின் அவை இன்றாமாறு ஒப்பு"

என ஆசிரியர் மெய்கண்டசிவம் அருளிச் செய்திருத்தலும் அறியத்தக்கது. 'மாயம்' அல்லது 'அசத்து' என்னும் சொற்களுக்குப் பொருள், மிகவிரைவில் அழிந்து விடும் இயல்பிற்றாய் நிலையில்லாதது என்பதேயாகும்.

'பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்தது அதனால் நாம் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என நவின்று. ஞானசம்பந்தர் மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையும் பற்றும் உண்டாகச் செய்கின்றார்! வாழ்க்கையின் சிறந்த பயனை மக்கள் பெறவேண்டுமே என்னும் பேரிரக் கத்தால், சுந்தரர் வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்' என அறிவுறுத்துகின்றார். இவ்வறிவுரை உலகியல் நெறிக்குப் புறம்பான (Un-wordly and other wordly) போலியுரையன்று; வாழ்க்கைக்குச் சுறு சுறுப்பும் விறுவிறுப்பும் ஊட்டும் தூய நல்ல சிறந்த உண்மை யுரையேயாம். 'தாழாது அறஞ்செய்மின் எனவும் தாழாது திருக்கேதாரம் எனீர்' எனவும் பணித்தற் பொருட்டே, சுந்தரர் வாழ்வாவது மாயம்' எனக் குறிப்பிடு கின்றார். 'தாழாது' (வீணே காலம் கழியாமல்) என்ற உயிர்ப்பான சொல்லின் அமைப்பை இப்பாடலில் நாம் அழுந்தி அறிதல் வேண்டும்.

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொள்பவர்க்கே அதன் இன்பத்தையும் பயனையும் வல்லாங்குத் தக்கவாறு எய்துதல் இயலும்! அது பற்றியே காஞ்சித்திணை என ஒன்றைத் தொல்காப்பியர் வகுத்தருளினார். மதுரைக் காஞ்சி என்னும் சிறந்த செந்தமிழ்ச் சங்க நூல் தோன்றிய தும் இக் குறிக்கோள் பற்றியேயாகும் கோவல னும் கண்ணகியும் மணந்து இன்பம் நுகர்ந்த திறனைச் சிலப்பதிகாரம் வாயிலாக இளங்கோவடிகள்,

''தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று''

எனக் கூறியிருக்கும் திறமும், இவ்வுண்மையைச் செவ்விதின் வலியுறுத்தும். சுந்தரர் 'முடியால் உலகாண்ட மூவேந்தரும்' மதிப்ப, இன்பத்தோடு இசைந்த பெருமித வாழ்வு நடாத்தும் பெற்றியினராக விளங்கியிருந்தும், அம் மகிழ்ச்சியிலேயே மைந்துற்று மயங்கி விடாமல்,

"இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக! தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து”

என்றபடி வாழ்க்கையின் பிறிதொரு புறத்தையும் (Seamy side of life) தாம் கருதி உணர்ந்து.

"சொல்லிடில் எல்லையில்லை சுவையிலாப் பேதை வாழ்வு' 
மானுட வாழ்க்கை ஒன்றாகக் கருதிடிற் கண்கள் நீர்பில்கும்'
கடையெலாம் பிணைத்தேரை வால்'
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்'

என நம்மனோர்க்கும் உணர்த்தக்கூடியவராகத் திகழ்ந் தருளினார். சுந்தரர் தமிழ்ச்சமர்த்தர் என்பதனை இவ்வாற்றாலும் இனிதுணரலாம் இனி, விறன்மிண்டர் ஏயர்கோன்கலிக்காமர் போன்றோர் தம்பாற் பகைமை பாராட்டினராகவும், அவர்களையும் தம் கெழுதகைமை நண்பர்களாகச் செய்துகொண்டொழுகிய அரும்பெருந் திறமும், சுந்தரரின் தமிழ்ச் சமர்த்தினை விளக்கும் உறுபெருஞ் சான்றாக அமையும்.

"பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு''

நயத்திற்குச் சுந்தரனார்:

சுந்தரரைச் சமர்த்தர்' என்று மட்டும் கூறியமை யாது தமிழ்ச் சமர்த்தர்' என்று விதந்து கூறியது, தமிழ் மொழி ஒப்புயர்வற்றதாதல் போல, ஒப்புயர்வற்ற சமர்த் துடையவர் என்று சிறப்பிப்பதற்த எனக் கொள்ளலாம். சுந்தரர் மட்டுமே சமர்த்தர் அன்றி, அவர் தம் செந்தமிழும் சமர்த்து மிக்கதாகும். தமிழ்ச் சமர்த்தர்' என்னும் தொடர் ‘தமிழிற் சமர்த்து அமையப் பாடுதலில் வல்லவா' எனவும் பொருள்படும். இப்பொருட் குறிப்பிலேயே 'நயத்திற்குச் சுந்தரனார்' என்னும் புகழுரை தமிழகத்தில் வழங்கி வருகின்றது.

"வாக்கிற் கருணகிரி, வாதவூரர்கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நற்கீர தேவர், நயத்திற்குச் சுந்தரனார்
சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல்''

என்பது மிகச் சிறந்ததொரு பழம்பாடல். பழந்தமிழ்ச் சான்றோர்கள் நிகழ்த்திய இலக்கியத் திறனாய்வின் (Literary Criticism) அரும்பெறல் விளைவே. இவ்வினிய பழம்பாடல் எனலாம். இதன்படி சுந்தரரின் நயமார்ந்த செந்தமிழின் திறனறிய இரண்டொரு சான்றுகளை மட் டிற் கண்டு அமைவோம்.

சுந்தரர் இறைவன்பால் நெல்லிட ஆட்கள் வேண்டிப் பாடுகின்றார். அதனை வாளா பாடாமல்,. இறைவனே! நீ நின் உடலின் பாதியில் ஒரு பெண்ணையும், சடையின் மேல் ஒரு பெண்ணையும் வைத்திருக்கின்றாய். அதனால், என்னைப்போல நீயும் மாதர் நல்லார் விளைக்கும் வருத்தத்தின் இயல்பினை அறிந்திருக்கின்றாய். எனவே பரவை பசி வருத்தமும் வாட்டமும் தீர, யான குண்டையூரிற் பெற்ற சில நெல்லினை அட்டித்தரப் பணித்தல் வேண்டும்' என நயமுறப் பாடுகின்றார்!

"பாதியோர் பெண்ணை வைத்தாய் படருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில் புடைசூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப் பணியே''
தம்பக்கல் ஏதேனும் குற்றங்கள் இருப்பின் அவற்றைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டிக்கொள்ளத் தலைப்படும் சுந்தரர், குற்றம் செய்தார் பலரையும் சுட்டிக் குறிப்பிட்டு, அவர் தம் குற்றங்களையெல்லாம் குணமாகக் கொண்டருளிய நீ, என் குற்றங்களையும் அங்ஙனமே கொண்டருளல் வேண்டும் என மன்றாடு கின்றார்!

நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன் நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றம் செயினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே''

தமக்குப் பொருள் கொடுத்தல் வேண்டும் என இறைவனைக் கேட்கும் சுந்தரர், வாளா கேளாது. 'திருவீழி மிழலையில் முன்னர் அப்பருக்கும் சம்பந்தருக்கும் நாள் தோறும் படிக்காசு அளித்தீர். அதுபோல எனக்கும் இப்போது அருள் செய்தல் வேண்டும்' என நயஞ்சிறக்கக் கேட்கின்றார்!

"நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசுஅருளிச் செய்தீர் ! இன்று எனக்கருள வேண்டும் !
கடல் நாகைக் காரோணம் மேவியிருந் தீரே''

சங்கிலியாரைத் தமக்குத் திருமணம் செய்து வைத்தல் வேண்டும் என இறைவன்பாற் சுந்தரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட முறைமையினை,

மங்கை யொருபால் மகிழ்ந்த துவும்
அன்றி, மணிநீள் முடியின்கண்
கங்கை தன்னைக் காந்தருளும்
காதல் உடையீர் ! அடியேனுக்கு
இங்கு நுமக்குத் திருமாலை
தொடுத்தென் உள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தம் தீரும்! என்றார் "

எனச் சேக்கிழார் பெருமான், சுந்தரரின் நயஞ் செறிந்த சொல்வன்மைத் திறம் விளங்கப் பாடியிருத்தல் காணலாம். இத்தகைய நயஞ்செறிந்த நல்லுரைகளால்,
"பாட்டுக்கோ வன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள்
நீட்டுக்கெல் லாம் குறுகி நின்றாய் பராபரமே''

என்றாற் போல, இறைவனைச் சுந்தரர் தாம் இழுத்த இழுப்புக்கொல்லாம் வளைந்து கொடுக்குமாறு செய்து ஏவற் பணிகொண்டனர். இவ்வுண்மையை,

"பொன் நவிலும் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று.
சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோ என்ன
ஒன்னலரைக் கண்டாற் போல் உளோம்போகீர் என்றானே''

எனவரும் தேவாரப் பாடலால் தெளியலாம். " வேட் கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் போலத் தாம் வேண்டுமாற்றா னெல்லாம், இறைவனைத் தம் நயம் சிறந்த செந்தமிழ்ப் பாடல்களால் மயக்கி மகிழ் வித்து ஏவல் கொண்ட சிறப்புப் பற்றிச் சுந்தரரைத்'தமிழ்ச் சமர்த்தர்'என்று தாயுமானவர் புகழ்ந்தமை பொருத்தமே யாகும் அன்றோ?

"தன்மையி னால் அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்தொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப் போகம் புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவ லூரே''


முடிவுரை:

இதுகாறும் கூறிய சிலவற்றால் சுந்தரரின் அருமை பெருமைகளையும், அவர்தம் செந்தமிழ்த் திருப்பதிகங்களின் சிறப்புக்களையுமெல்லாம், ஓரளவேனும் உய்த்துணர்ந்து கொண்ட நாம், 'தமிழ்ச் சமர்த்தர்' எனத் தாயுமானவர் முதலிய சான்றோர்கள் பலரும் போற்றிய நம் சுந்தரரை வழிபட்டு, அவர் தம் தேவாரத் திருப்பதிகங்களை ஓதியுணர்ந்து உய்வதற்கு முயலுவோமாக!

நந்தலில் சீர்க்கொ ழும்பு
நகரின்கண், விவேகானந்தர்
செந்தமிழ்ச் சபையார் கேட்பத்
திருக்கேதீச் சுரநற் றொண்டர்
கந்தையா வைத்ய நாதர்
கவின்பெருந் தலைமை யின்கீழ்ச்
சுந்தரர் பற்றிச் செய்த
சொற்பொழிவு இதுவாம் நன்றே
- ந. ரா. முருகவேள்

சித்தாந்தம் – 1962 ௵ - மே, ஜுன் ௴


No comments:

Post a Comment