Saturday, May 9, 2020



சிந்தைச் சுருதி
ந. வீ. செயராமன் எம். ஏ.,
விரிவுரையாளர், தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை அடைய நமக்குச் சாதனங்களாக உதவுவன. சாத்திர நூல்களும் தோத்திர நூல்களுமே யாகும். பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையைப் பற்றி நாம் அறியவேண் டிய ஞானத்தை விளக்குவன சாத்திரங்கள் என்றும், சாத்திர நூல்களால் துணியப்பட்ட பரம்பொருளை நன்குணர்ந்து அவன் பால் பக்தியைச் செலுத்த உதவுவன தோத்திர நூல்கள் என்றும் கூறுவர். சாத்திர நூல்களும் தோத்திர நூல்களும் இறைவனின் இனிய இயல்பினை நமக்கு எழிலுற வடித்துக் காட்டுகின்றன. 'சாத்திரமும் தோத்திரமும் ஆனான் கண்டாய்' என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்.

சாத்திர நூல்களிலும் தோத்திர நூல்களிலும் மெய்ப் பொருளாய் இலங்குவது நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தாகிய திருமந்திரமேயாகும். சைவாகமங்களும், அருமறைகளும் மற்றும் பிறநூல்களும் திருவைந்தெழுத்தின் பொருளமைதியைச் சொல்ல வந்த நூல்களேயாகும். இக்கருத்தினை,

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்மனைத்தும்

என வரும் உண்மை விளக்கப் பகுதியும்,

அருள் நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்  
பொருள் நூல் தெரியப் புகின்

எனவரும் திருவருட்பயன் பகுதியும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

நமசிவாய என்ற நற்றமிழ் மந்திரத்தின் பெருமையைப் புகழ்ந்துரைக்காத நூலாசிரியர்கள் இல்லையெனலாம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது நமச்சிவாய என்னும் திருமந்திரம் எனத் திரு ஞானசம்பந்தரும், கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாய என்பதே என வாகீசப் பெருமானும் தாங்கள் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மையை அழகுற எடுத்தியம்புகின்றனர். நமசிவாயத்தின் பெருமையை நாட்டினருக்கு உணர்த்த அவர்கள் திருப்பதிகங்களில், நமச்சிவாயத் திருப்பதிகம் என்ற பெயரில் இரண்டு திருப்பதிகங்களும், பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்ற பெயரில் ஒரு திருப்பதிகமும் அமைந்துள்ளமை, அவர்கள் நமசிவாய என்னும் திருமந்திரத்திடத்தே கொண்டிருந்த இணையில்லாத ஈடுபாட்டுக்கு எடுத்துக் காட்டாக இலங்குகின்றது. மூவர் முதலிகளில் மற்றொருவரான சுந்தரர் பெருமான் திருப்பாண்டிக் கொடுமுடித் திருப்பதிகத்தில் பாசுரந்தோறும்  'உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே'  என்று மகுடம் அமைத்துப்பாடி நமசிவாயத் திருமந்திரத்தினிடத்துத் தனக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியிருக்கின்றார். அஞ்செழுத்தின் உண்மை அது உவான பொருளுடன் நெஞ்சழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ? எனத் தாயுமானவர் எந்நாட் கண்ணியில் இரங்கிப் புலம்புகின்றார். சிவாய நம வென்று சிந்தித்திருப் பாருக்கு அபாயம் ஒரு நாளுமில்லை என்பது ஒளவை மூதாட்டியின் அறிவுரை, திருவைந்தெழுத்தை முறையாக உச்சரித்தால், ஊனமெல்லாம் ஓட உள்ளத்துள் புகுந்து இறை வன் அருள்புரிவான் என்பது அருணந்தி சிவாசாரியார் கண்ட உண்மை. தீயபிறவி நோய் தீர்த்து வைக்கும் மருந்தாக திருவைந்தெழுத்தைக் கண்டு மகிழ்கின்றார் கைலைபாதி காளத்திபாதியந்தாதியுடையார். இருவினையையும் போக்கி, இம்மையில் மிடியும் போக்கும் அருமருந் யாகத் திருவைந்தெழுத்தைக் கூறுகின்றது அருணகிரி தந்தாதி. கருவைக் கலித்துறையந்தாதி, மாயை என்னும் இருளை விலக்கும் சுடரென்றும், பிறவிப் பெருநோய் தீர்க் கும் அமுதென்றும், துன்பப் பெருங்கடல் மறைக்கும் வடவை யென்றும் திருவைந் தெழுத்தைப் போற்றி மகிழ் கின்றது. இதனை

கருத்துறு மாயை இருளுக்குத் தீபம் கழிபிறவிப்
பெருத்தெழு நோவுக்கு அமிர்தசஞ் சீவினி பேதித்துள்ளம்  
வருத்திடு துன்பத் திரைவா ரிதிக்கு வடவைமன்றத்து
அருத்தியின் ஆடுங் கருவைப்பி ரான்திரு வஞ்செழுத்தே

எனவரும் பாடல் அழகாகக் கூறுகின்றது. இங்ஙனம் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தின் பெருமையை சாத்திர தோத்திர நூலாசிரியர்களும், பிற ஆசிரியர்களும் போற்றிப் பரவுகின்றனர்.

மூவர் பாடிய தேவாரப் பாசுரங்களுக்கு இதயம் போல, நடுவதாக நமசிவாய என்னும் திருமந்திரம் அமைந்துள்ளது என்று ஆன்றோர் கூறுவர். சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்ற மூவர் முதலிகளின் பக்தியனுபவப் பிழியலே தேவாரம் என்ற நூல். தோத்திர நூல்களுள் முதன்மையானதும் சிறப்பானதும் அத்தேவாரப் பாசுரங்களேயாகும். மூவர் முதலிகளில் நடுவராக விளங்குபவர் திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரசர். அவரது திருமுறைகள் மூன்றனுள்ளும் நடுவதாகப் பொலிவது ஐந்தாம் திருமுறை. இத்திருமுறையில் உள்ள திருப்பதிகங்களில்நடுவதாக இலங்குகிறது திருப்பாலைத் துறைத் திருப்பதிகம். இத்திருப்பதிகத்தின் நடுவதாக விளங்குகின்றது.

விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாயவென்று
எண்ணி னார்க்கிட மாவெழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.

எனவரும் திருப்பாசுரம். இத்திருப்பாசுரத்தின் இதயமாக நடுவதாக விளங்குகின்றது. சிவாய என்ற திருமந்திரம். எனவே தேவாரமாகிய பத்திப்பனுவலின் இதயமாக நம சிவாய என்ற நற்றமிழ் மந்திரம் இலங்குகின்றது என்று ஆன்றோர் கூறியது அறிந்து இன்புறற்குரியதாகும்.

இனி, இத்திருமந்திரமாகிய திருவைந்தெழுத்துக்களே, நிலம், நீர், தீ, வளி, வான் என்ற ஐந்து பூதங்களையும், சுரோத்திரம், த்வக்கு, சக்ஷ, ஜிங்கவை, ஆக்ராணம் என்ற ஐந்து ஞானேந்திரியங்களையும், வாக்கு, பதம், பாணி, பாயுரு, உபஸ்தம் என்ற ஐந்து கன்மேந்திரியங்களையும், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து தன் மாத்திரைகளையும், மனம், அகங்காரம், புத்தி, சித்தம், உள்ளம் என்ற ஐந்து அந்தக் கரணங்களையும், நிவிர்த்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தீயதீதை என்ற ஐந்து கலைகளையும், ஸத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் ஈசானம் என்ற ஐந்து பிரமங்களையும், பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேச்வரன், சதாசிவன் என்ற ஐந்து கர்த்தாக்களையும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என்ற ஐந்து கிருத்தியங்களையும், வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்து பட்சிகளையும், தமக்குள் முறையாகக் குறிப்பாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது ஆன்றோர் கண்ட உண்மை. நம சிவாய என்னும் மந்திரத்தில் உள்ள திருவைந்தெழுத்துக்களை முறையாகப் பொருத்தியறிதல் வேண்டும். திருவைந்தெழுத்துக்களே பூதங்கள் முதலானவற்றிற்கும் அடிப்படை,

அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தாற்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தாலிவ் வகலிடந் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே

எனவரும் திருமந்திரப் பகுதி இதனைக் குறிப்பாக உணர்த்துவது அறிந்து இன்புறத்தக்கதாகும்.

உலகப் பொருள்கள் அனைத்திலும் மட்டுமின்றி, இறைவனின் திருவுருவிலும் திருவைந்தெழுத்து நிறைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலத்துள் ஆனந்த நடமிடுகின்ற நடராசப் பெருமானின் திருமேனி திருவைந்தெழுத்தாகிய பஞ்சாக் கரத்தால் அமைந்தது என்று ஆன்றோர் கூறுவர். ஆனந்த நடராச மூர்த்தியின் திருவுருவில் நகரம் திருவடியாகவும், மகாரம் திருவுந்தியாகவும், சிகாரம் திருத்தோளாகவும், வகாரம் திருமுகமாகவும் யகாரம் திருமுடியாகவும் விளங்கு கின்றது என்பர். இதனை

ஆடும் படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே வ
நாடும் திருவடியி லே நகரம் - கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.
எனவரும் உண்மை விளக்கம் அழகாக விளக்குகின்றது.
ஆனந்த நடராச மூர்த்தியின் உருவ அமைப்பில் மற்றொரு முறையாகவும் திருவைந்தெழுத்தைப் பொருத்திக் காட்டுவது உண்டு. உடுக்கை ஏந்திய கரம் சிகரமாகவும், வீசியகரம் வகாரமாகவும், அபயகரம் யகாரமாகவும், அக் கினி ஏந்தியகரம் நகாரமாகவும், முயலகனை மிதித்தபாதம் மகாரமாகவும் ஒளிரும் என்பர். இக்கருத்தினை

சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் –
தங்கும் மகரமது தான்

என்று திருவதிகை மனவாசகங் கடந்தார் தெளிவாகக் கூறுகின்றார். இறைவனின் எழிலுருவிலே திருவைந் தெழுத்தாகிய திருமந்திரத்தைப் பொருத்திக் காட்டும் முறையை யொட்டியே 

'உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றானை'

என்று சுந்தரர் பாடியுள்ளார் என்பது அறியத்தக்கது.  

திருவைந்தெழுத்தாகிய திருமந்திரத்தால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறலாம். மாயை அறுத்து, பிறவியாகிய துன்பக்கடலை நீந்திக் கரையேறுவதற்கு இடையறாது சிந்திக்க வேண்டிய சுருதி - மந்திரம் - சிவாய நம என்பதேயாகும். எனவேதான் சிவாய நமவென்னும் சிந்தைச் சுருதி தனை, என்று நாவுக்கரசர் பெருமான் பாடுகின்றார்.

திருதிமையால் ஐவரையும் காவலேவித்
திகையாதே சிவாயநம வென்னும் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்பவெள்ளக்
கடல் நீந்திக் கரையேறும் கருத்தே மிக்குப்  
பரிதிதனைப் பற்பறித்த பாவநாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

என்ற நாவுக்கரசரின் பாடல் நமசிவாய என்னும் நற்றமிழ் மந்திரத்திடம் அவருக்கிருந்த ஈடுபாட்டை விளக்குவதுடன் அம்மந்திரத்திடம் நமக்கு இருக்கவேண்டிய ஈடுபாட்டின் இன்றியமையாமையையும் எடுத்தியம்புகின்றது.

சித்தாந்தம் – 1964 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment