Saturday, May 9, 2020



சிவஞானபோதம்

சிவஞான போதமென்பது நான்குபாதங்களுட் சிறந்த ஞான பாதத்தை விளக்குவான் வந்த ஓர் தமிழ் முதனுலா கற்பாலது,

''வினையினீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்''

என்பது தொல்காப்பியம். திருநந்திதேவர்க்குமலைவதீர்தற்பொருட்டுச் சிவபெருமான் உபதேசித்தருளப்பெற்றதும், கண்ணுவர் முதலோர்க்கு ஞானபாதத்தை விளக்குதற்பொருட்டுத் தட்சிணாமூர்த்தியார் தம் திருக்கரத்தில் தரிக்கப் பெற்றதும், திருப்பெருந்துறையில் குருந்தமரத்தின் கீழ்ச் சிவபெருமான் குருமூர்த்தமாய் வந்து தம் திருக்காத்தில் தரிக்கப் பெற்றதும், திருவெண்ணை நல்லூரில் மெய்கண்டான் அருணந்தியார் முதலோர்க்கு உபதேசித்தருளப் பெற்றதும் இதுவேயாம்.
        
இந்நூல் அக்காலமுதல் பக்குவப்பட்டார்க்கு மாத்திரம் வழிவழி கிடைத்துப் பயன் தரற்பாலது.
        
மெய்கண்டார் சாமுசித்தராகலின் மொழிபெயர்த்தருளினாரென்றல் பொருந்தாது. மொழிபெயர்ப்பு, புலவர் தம் செயலாகின்றது,

புலவர்க்குச் சொற்களை நாடும், சொற்கள் ஞானிகள் வாக்கினை நாடும்.

மொழிபெயர்ப்பென்று மெய்கண்டார் யாண்டும் தாம் கூறிற்றிலர். இஃது உய்த்துணரற்பாலது.
        
தமிழ்ச் சிவஞானபோத சூத்திரப்பொருளையும், வடமொழிச் சிவஞான போத சூத்திரப்பொருளையும் ஆராயின். மொழிபெயர்ப்பென்றல் கூடாமையாகின்ற தென்பர்.

      "எந்தை சனற்குமரன் ஏத்தித்தொழ இயல்பான்
      நந்தி யுரைத்தருளு ஞான நூல் - சிந்தை செய்து
      தானுரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணா
      ஏது திருட்டாந்தத்தா லின்று"
        
சனற்குமரன் முதலோர் தமிழ்கற்றவ ராகலாலும், திருநந்திதேவர் கட்டளையென்று நூல் தமிழானமையின் திருநந்தி தேவரும் தமிழ் கற்றவரென்று புலனாகின்றமையானும், பிறவாற்றானும்.
நந்தி யுரைத்தருளு ஞான நூல்'' என்பதற்குத் தமிழ்ச் சிவஞான போதமென்றும், அதனை மெய்கண்டான் சிந்தை செய்து வார்த்திகமெனப்படும் உரைச்செய்யுளினும், வெண்பாவாகியபாச் செய்யுளினும் இன்று தாரணியோர் தாமுணர ஏது திருட்டாந்தத்தால் தானுரைத்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். தாரணியோர் சிந்தைசெய்து தாமுணர என அன்வயிக்கினும் நன்றே,
      
சிவஞானபோதத்தின் சூத்திரநடை, தொல்காப்பிய சூத்திரநடையைப் பெரிதும் ஒத்திருக்கின்றமையின் அதுமெய்கண்டார் காலத்துத் தமிழ்நடையாகாது.
        
வெண்பாவாகிய பாச்செய்யுள் மெய்கண்டார் அருளினா ரென்றல் நடையால் துணியலாம். தமிழ்நடை ஒவ்வோர் காலத்து ஒவ்வோர் வகையுளியாக இருந்து கொண்டிருந்தது.

கூறிற்பெருகும்.

இவ்விலக்கணம் எல்லாப் பாழைக்குமாம்.
      
திருவெண்ணைநல்லூர்ப் பொல்லாப்பிள்ளையார் மெய்கண்டாருக்குச் சூரணிக்கொத்துரைத்த பாமாசாரியரெனின் சூத்திரம் அவரே யுரைத்தருளினாரென்றும் பொருந்தற்பாலதே, சூத்திரமில்லாமல் அதன் இயைபாகிய சூரணிக்கொத்து மாத்திரம் எங்ஙனம் உரைத்தல் கூடும்.

      காரணமில்லாமல் காரியமுண்டாகுமா?
அது கற்பிக்கு முறைமையுமாகாது, கேட்குமுறையுமாகாது
    
பொல்லாப்பிள்ளையார் சூரணிக்கொத்து மாத்திரம் உரைத்தருளியது உண்மையாயின் பாஞ்சோதி முனிவர் மெய்கண்டாருக்குக் கொடுத்தருளியது தமிழ்ச் சிவஞானபோத மென்றே கொள்ளவேண்டும்.

     என் எனின் சூரணி தமிழாகலின் என்க.
ஈண்டு ஓர் சூழ்ச்சியுளது.
    
சிவஞானபோத சூத்திரங்களில் பால்காட்டும் விகுதிமுதலியன இருத்தலின் அஃது செந்தமிழ்க்காலத்துண்டாய தென்க. பழந்தமிழ்க்காலத்ததாகாது.
    
"வேதம் சிவாகமமென இருபகுதிப்பட்டது மூன்றுவருணத்திற்கும் உரிமையாதலும் பற்றி'' என நீலகண்டபாடியத்தில் கூறப்பட்டதென்பர்.
    
நான்கு வருணத்திற்கும் உரிமையாதலும் பற்றி'' என்பதையுணரின், உரைவழக்குடைய தமிழே நான்கு வருணத்தாரும் அறிதல் கூடுமாகலின் முன்னம் ஆகமம் தமிழிலிருந்தமையை விளக்குகின்றது. உரை வழக்கு = பேச்சுவழக்கு.
ஆரியம் நூல்வழக்கென்றே யுடையது.
"ஈறான கன்னி குமரியே காவிரி''
      ஆரியமும் தமிழும் உடனே சொலி''
    
என்னும் திருமந்திரங்களும் தமிழில் முதனூலுண்மை விளக்கற்பாலன.
     இயற்கையாகிய எண் குணங்களையுடைய சிவபெருமான் இயற்கை மொழியாகிய தமிழிலேயே முதல் முதல் வேதம் செய்தருளினன்.
     தமிழ் இயற்கை முதன் மொழியென்பது இப்பொழுது அச்சிட்டிருக்கிற மொழி நூலால் நன்கு விளக்கமாகும்.
ஸ்ரீமான் துடிசைகிழார் அ. சிதம்பரமுதலியாரவர்களும் சித்தாந்த பத்திரிகையில் தமிழ்ச் சிவஞான போதம் முதனூலென்று ஓர்ந்து கூறியது ஞாயவாயிலேயாம்.
பத்திரிகை தொகுதி உ (2). பகுதி -ல் உகஎ  (217)-ம் பக்கமும் கண்ணுற்றனம்.
       சூரியன் புறவிருளை அகற்றுவது போலச் சூரியனாலுண்டாய தமிழ்ச் சிவஞானபோதம் அகவிருளை அகற்றுமென்பது.
சூரியனுக்குக் கலை பன்னிரண்டாகலின் சூத்திரமும் பன்னிரண்டாயின.
ஆண்பாலினை முற்கூறுதல் தமிழ் வழக்காகலின் அவ்வழக்குப்படியே முதற்சூத்திரம் எழுந்தது.
பெண்பாலினை முற்கூறுதல் ஆரியவழக்காகலின் அவ்வழக்குப்படியே அம்முதற்சூத்திரம் எழுந்தது.
அவனவளதுவென'' ''ஸ்த்ரிபுந்நபும்சகம்'' அவ்வழக்கினை முறையே காண்க.

தமிழ்ச் சிவஞானபோதம் - தமிழில் முதனூலாகிய சிவஞானபோதம்.
       மாயாவியந்திரதனு. வி. உபசர்க்கம்.
       வியாழமென்பது போல.
       பசாசம், பண்டை - அரும்பதம்,
       பெண்ணை நல்லூர் - வெண்ணை நல்லூர்,
       பெண்ணையாற்றங் கரையிலுள்ளதென்பது,

வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூரருட்டுறையுள்” (க-தே,)

பகரம் வகரமாகும்,

இவையெல்லாம் மொழி நூலில் விளக்கப்பட்டுள்ளன,

                        இங்ஙனம்,

மாகறல் - கார்த்திகேய முதலியார்,
                             கண்டி, சென்னை.

சித்தாந்தம் – 1914 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment