Saturday, May 9, 2020



சிவார்ச்சனை.

1. மாயாவாதி: - சிவார்ச்சனை' என்பது என்ன? விவரமாய்த் தெரிவிக்க வேண்டும், ஐயா.
   
சித்தாந்தி: -  பரசிவனை யர்ச்சித்தலே முடிந்த பூசை. 'வியந்தேத்தி' னால் தான் பரசிவன் சிவானந்தங் கொடுத்தருள்வான். வியத்தலாவது, அவனுடைய பஞ்சக் கிருத்தியோபகார திருவருட் சோபானக்கிரமத் தீட்சையைக் குருமுகத்தா லுணர்ந்து, அப்பஞ்சக்கிருத்தியம் 'எரியுருவனாகிய' எம்பிரானாற்றான் முடியுமென்ற அகச்சமய வேதாகமக் கருத்தையுட்கொண்டு,
சிவனோடொக்குந் தெய்வந்தேடினுமில்லை
      அவனோடொப்பாரிங்கி யாவருமில்லை.''
என்ற 'தமிழ்மறைக்' கூற்றை யுன்னி யுன்னித் தாமார்க்குங்குடியல்லாத் தன்மை' யனாகிய ஹசிவனாரின்றிருவடி ஞானம் பூண்டு, சிவானந்தக்கண்ணீர் பெருகிப் 'பொங்கித்ததும்பி' வழியும் புனலினறி குறியாகத் திருமஞ்சனமாட்டி, பஞ்சக்கிருத்தியன்'என்ற கருத்துள்ள 'இலிங்கம்' * என்னுந் திருநாமம் பூண்டு, அருவ நிலையிலிருந்து நாம் உருவ நிலையடையும் பிரதமை ரூபமாகிய பின்டரூபமதைச் சிருட்டித்துத்தந்த திருக்கருணைவடிவமாகிய பிண்ட ரூபங்கொண்டு, விளங்கும் நஞ்சிவலிங்கப் பெருமானை வியந்து புகழ்தலேயாம். அதனாலுண்டாகும் உவகையே புனலாட்டலாகும்; அதாவது, சிவலிங்கத்துக்கு அபிஷேகஞ் செய்தலாகுங் கண்டீர்.
* சித்தாந்தத் தேன் பார்க்க

2. மாயாவாதி: - கற்பூர தீபம் காட்டுவது என்ன?  
சித்தாந்தி: -  மேற்கூறிய பஞ்சக்கிருத்தியோபகாரஞ் செய்யவல்லவனாகிய அக்கினிகாரியப் பெருமைவாய்ந்த முக்கட்கடவுளை, யுள்ளபடியுணர்ந்து அனுபவித்தலே உள்ளுணர்வாகிய ஞான தீபம். அந்தச் சிவஞான வொளியை யனுபவித்தற்கறி குறியாகவே கற்பூரதீபம் காட்டுவது.

3. மாயாவாதி: - திருவமுது காட்டுவது யாதுக்கு, ஐயா?'
சித்தாந்தி: -  முற்கூறிய எம்பிரான்றன் றிருக்கருணையை முன்னிட்டு நாம் எம்பிரானுடைய சிருட்டிகளாகிய சகல சீவராசிகளிடத்திலும் அன்பு பாராட்டி வதை செய்யாது சுகம் பாராட்டுவது, அவைகளுக்குண்டாகுங் கொடும்பசி நீக்க அமுதூட்டிச் சுகமுண்டாக்குஞ் சற்குணமென்ற அன்பாகும். அவ்வன்பு பூண்ட நாம் எம் பிரானுக்குரிய அன்பராவோம். அவ்வகையன்பு மேற்கொண்டு சிவ போதை கொள்ளலே அன்பு காட்டுவது. அதாவது, திருவமுது காட்டலெனும் பூசை, அமுதூட்டி வளர்த்தலெனும் எம்பிரான்றன்றிருக்கருணைபையுங் காட்டிநிற்கும்.

4. மாயாவாதி: - இந்த விதமாய்ப்பூசை செய்தவர்களுண்டா?
சித்தாந்தி: -  நமது ஸ்ரீ சேக்கிழார் நாயனார் பாடிய பெரிய புராணத்திலுள்ள திருத்தொண்டர்களி லொருவராகிய 'வாயிலார் நாயனாரே' சான்று. அந்நாயனார் புரிந்த மௌனபூசையாவது :

  "வாயிலார் வாய்பேசா மௌனமனக் கோயிலமைத்
  தாயிழையாட் பங்கன்றா ளர்ச்சித்தார் - நேயமாய்
  உள்ளுணர்வாந் தீபம் உவகைப்புன லாட்டல்
  தெள்ளமுதவன் பமைத்தே.
                                           - திருத்தொண்டர் திருநாம வெண்பா.
   
இவ்வகைப் பூசையோடு மேற்கூறிய புறப்பூசையை நம்புறக் கருவிகரணச் சேட்டை யுள்ளளவும் நாம் செய்து நிற்றலே நம்கடமை. ''என்கடன்பணி செய்து கிடப்பதே'' என்ற சுருதிப்படி யாம். (நான் சமாஜத்திற் சேர்ந்து தேரினேன் என்னை ஏன் சேர்த்துக்கொள்ளக் கூடாதெனல் சுருதி சம்மதமன்று. அவ்வினா தற்போதக்குறியாகும். போதங்கெட்டாற் புனிதந்தானே கிட்டும்.)

                      . ஷண்முக முதலியார்,
                            சைவ சித்தாந்தி, சேலம்.

சித்தாந்தம் – 1913 ௵ - மார்ச் ௴



No comments:

Post a Comment