Saturday, May 9, 2020



சிவானந்தம்.

"நற்குஞ்சக் கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.''

பதிபசுபாசங்களென்னும் முப்பொருள்களும் அநாதித்தி யமாயுள்ள உள்பொருள்களேயாம். ஏனெனில் இல்பொருள் என்றுந்தோற்றாமையால். இவற்றுள் சிவமேபதியாம். ஆன்மாவே பசுவாம். ஆன்மா வின்ப துன்பம் நுகர்தற்கும் நல்வினை தீவினை இயற்று தற்கும் நிலைக்களமாயுள்ளது பாசமாம். அப்பாசமும் ஐவகைப்படும். அவையாவன, சுத்தமாயை, அசுத்தமாயை, ஆணவம், கன்மம், திரோதாயி என்பனவாம். இவற்றுள் ஆணவம், ஆன்மாவுடன் அநாதியே செம்பிற்களிம்பு போல இயைந்து நிற்குஞ் சடப்பொருளாம். சடத்துக்கும் இயக்குவித்தாலியங்குஞ்செயலுண்மையால் இவ்வாணவத்திற்குஞ் செயல்களுள்ளனவாம். அஃது ஒருபொருளாதலினால் பக்குவம்முறும். அப்பொழுது தன்சத்தி குன்றி நிற்கும். அவ்வாணவத்திற்கு ஆன்மாவின் இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்திகளையும் மறைப்பதேதொழிலாம். இவ்வாணவத்தின் குணமோ எண்வகைப்படும். அவையாவன, விகற்பம், கற்பம், குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை என்பனவாம். இக்குணங்களைக்கெடுத்து சத்திகுன்றச்செய்தால் பாசநீக்க முண்டாம். இச்சத்திகளால் மறைக்கப்பட்ட ஆன்மாவின்றன்மையாதோவெனில், சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய பாசத்தையும் அறியுந்தன்மையதாய் அறிவிக்க அறிவதாய் நிலைபெற்ற சத்து அசத்து இவ்விரண்டின்பாலும் அநுபவ அறிவுள்ளவதுவே சத்துமசத்துமல்லாத சதசத்தாய்நிற்குந்தன்மையதாம். அங்கனம் நிற்பது ஆகாயம் ஒளியோடு சேர்ந்தால் ஒளியாகவும், இருளோடு சேர்ந்தால் இருளாகவும் நிற்குந்தன்மைபோலெனக்கொள்க. இங்ஙனம் அவ்வான்மாநிற்குந் தன்மையால் அஃதுபடிகம்போல் சார்ந்ததின் வண்ணமாய் அழுந்துவதோர் தன்மையுடைய தெனக்கொள்க.
இஃது இக்கனமாக உயிர்க்கிரங்களாகிய இச்சையையும், வையம் நடத்தலாகிய கிரியை யையும், இசைந்து உணர்த்தலாகிய ஞானத்தையும், தனக்குச் சத்திகளாய்க்கொண்ட இறைவனது ஞானம் தற்கேடுவந்தவிடத்து ஆன்ம அறிவிற்கோர் அறிவாய்ப் பிரகாசிக்கும். அதனை இறைவன் திருவருட்சத்தியெனக் கூறுவர். அவ்வறிவைச் சுட்டுணர்வின்றியறிதல் ஞான தரிசனமாம். அவ்வாறு அறிதலும் அவ்விறை ஞானத்தாலா மேயன்றி மற்றொன்றாலாகாதெனக் கொள்க, -
அந்த ஞானவிளக்கின் வழியேதிற்க அஃது ஆதித்தப் பிரகாசம்போல ஆன்மாவினுள் பிரகாசியாநிற்கும். - இப்படிப் பிரகாசித்து நிற்றலால் மலங்காரியப்படாமல் கீழ்ப்பட்டு நிற்குமெனக்கொள்க. அவ்வாறுநிற்பதால் அதுதானுங்கெடாது. ஆன்மாவையும் அணுகாது. அஃது ஒளியின் மேலீடு கொண்டு இருளடங்கித்தோற்றமுமற்றுக் காரியப்படாமல் நின்றாற் போலென்க. மேற்கொள்.
                "சேனாரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்
      காணாதொழியும் கணக்கேபோ - லாணவத்தி
      னாதி குறையாம லென்பா லணுகாம
      னீதி நிறுத்து நிலை போற்றி”
என்றருளியதாலறிக.
இவ்வாறு ஆணவத்தின் செயல்மாய்ந்து ஞானம் பிரகாசிக்கப்பெற்ற ஆன்மாவே நின்மல நிலையடைந்ததாகும். இந்நிலையுள் பஞ்சசத்திகளிடமாக நின்று தன்னைத் தலைவனையறிந்து தனக்குப் பாசம்பகையென நீங்கி நிறைவொடு நிறைவாய் நிற்கிறநின்மல சாக்கிரமும், பரை பாதி இச்சைஞானத்தைப் பொருந்தி நிறைவொடு நிறைவாய் நிற்குந்தன்மையிலே தன் நிறைவுங் காணாமல் நீர்நிழல்போலடங்கப்பெற்ற நின்மல சொர்ப்பனமும், பரையாதியிச்சையைப் பொருந்தி நீர்நிழல் போவடங்கப்பட்டதான இந்த நிறைவுக்குள்ளே சந்திரனிடத்திலே களங்கம் நின்றாற்போல நிற்கிற நின்மலசுழுத்தியும், பரையா தியிச்சையைப் பொருந்தி நிறைவு தானாய் நிற்கிறநின்மல துரியமும், பரையைப்பொருந்தி தனக்குயிராய் நிற்கிற தன்மையை யறிந்து அந்த நிறைவுக்குள்ளே தன்னிறைவென்பது சற்றுங்காணாது அந்த நிறைவேநிறைமயை வாய்த்தாக்கற்று நிற்கின்ற நின்மல துரியாதீதமும் ஆகிய ஐந்து அவத்தைகளையுங்கடந்து திருவருளிலே தாக்கறக்கலந்து நிற்பது பரமானந்தம். அந்தப் பரமானந்த திசையிலதுவாயிருப்பதுவே இன்பம். இவ்வின் பந்தான் ஆதியந்தமில்லாத அனந்தானந்தங்க சாகவிருக்கும். இவ்வின்பத்திலே நின்று அநுபவித்து அதிற் மூக்கறக்கலந்து ஆறி யவிழவே இன்பங்கழலும். இது கழலவே எல்லாக்கழன்ற விடம் சிவம். சிவத்தைப் பொருந்தி சிவமன்றி யொன்றுங் காணாமல் நின்றது சிவரூபம். அந்தச் சிவத்திலே வேறுமுடனுமாய் தான் சிவனாயும் சிவன் தானாயு தில்லாமல் நிற்பது சிவதரிசனம். அந்தச்சிவத்திலே தாக்கறக்கலந்து எழுவாயுமீறு மின்றி நின்ற நிலை சிவானந்தம். இதற்குமேல் சும்மாவிருக்கு நிலையாகியமோன நிலையாம். இதிலே உறைப்புண்டு நிற்க சிவமுங்கழலும். சிவங்கழலவே எல்லாமிருக்கையிலே இல்லாமையாய்நின்ற சிவாநுபூதிதானாய் நிற்கும். இதில் நிற்றலே முத்தியாமென்க.
இந்தனத் திலங்கி யெரியு) நீர் தேனிரதங
      கந்தமலர்ப்போ துவான் காலொளிகண் - சந்ததமு
      மத்துவித மாவதுபோ லான்மாவு மீசனுமாய்
      முத்தியிலே நிற்கு முறை.

      இதுவே முத்தி நிலையாம். இம்முத்தியும் சீவன்முத்தியும் விதேகமுத்தியுமென விருவகைப்படும்


சீவன் முத்தர் நிலையாவது.
      "தொண்டர்கடாமும் வானோர் தொழுந்திரு மேனிதானு -
      மண்டருங்கண்டிலாத வண்ணலேயெனவணங்கி.
      வெண்டாளங்கள்சிந்த விழிமொழிகுழறச்சிவமே
      கண்டுகொண்டிருப்பர் ஞானக் கடலமுதருந்தினோரே''

                இது காறுங்கூறியவாற்றால் இறைவன் உயிரோடு கலந்தவழி ஆன்மாவினனுபவமாதற்குரிய பேரின்பாதீதமே சிவாநந்தமெனக்கண்டாம்.
      சிவானந்தம் இன்பப்பொருள்கொள்ளுவது எங்ஙனமெனில் ஒருசொல்லுக்குப் பலபொருளுண்மையின் ஆனந்தம் என்னுஞ் சொல்லுக்கு இன்பம் என்றும் பொருள் கொண்டு யாண்டும்  வழங்கல்கண்டாம். நந்தம் என்பது நிறைதல். ஆ என்னும் உபசர்க்கத்தோடு கூடியவழி இன்பம் என்னும் பொருளுணர்த்தி நிற்றல் சாலும். ஆதலால் இவ்விருமொழிகளும் ஒருபொருட்கிளவிகளாம். இவ்வின்பமானது ஆனந்தமென்னுஞ் சொல்மாத்திரையானன்றி முத்தியிற் பரமசுகமுண்டென சுகம் எனனுஞ் சொல்லானும் பெரும்பாலு மோதுதலின் ஆனந்தத்திற்கு இன்பமென்னும் பொருள் மாத்திரமன்றெனவுணர்க.
இவ்வின்பமும் மேற்கூறியாங்கு எப்பொழுதும் இறைவனுடன் அபின்னையாய் நின்று இன்பசுகப்பிரபை தருவதாகிய இன்பசத்தியா லுண்டாம்.
துன்பற்றவின்ப சுகப்பிரபை தன்னையே
யின்பசத்தியென்றறி நீ எப்போது - மன்புறவே
      நின்றதிலேயாறி நிலாவு நிலாவுப்போன்
      மன்ற றரமணந்து வாழ்.

இவ்வின்பசத்தியோடு இரண்டறக் கலந்து நின்று நிலாவும் நிலாவும்போல் மன்றல் தரமணந்து நின்ற வாழ்வே சிவானந்த வாழ்வாம்.
ஒன்ஞ் சுகவடிவுக்குள்ளான தம்பிரா
      னன்றியொரு பொருளுமாகாதே - நின்ழுந்திச்
      சொல்லரிய வந்தச் சுகத்துக் கதீதமாய்
      நில்லவன்றா னாமே நிலை.

என்று பெரியோர் கூறினர். இதுமாறாத சிவாநுபவமாம். ஆண்டு இறைவன் உயிரோடு கலந்த வழி கரும்பு, தேன், பால், கனி, அமுது, கண்டை ஒத்திருப்பன். மேற்கோள் வருமாறு.
              “இரும்பைக் காந்தம் வலித்தார்போ லியைந்தங் குயிரை
            யெரியிரும்பைச் செய்வது போ லிவனைத் தானாக்கி
      பரும்பித் திந்தனத்தை யனலழிப்பது போன் மலத்தை
            யறுத்தமல னப்பனைந்த வுப்பே போலனைந்து
      விரும்பிப் பொன்னினைக் குளிகையொளிப்பதுபோலடக்கி
            மெளித்துத் தானெல்லாம் வேதிப்பானாகிக் -
      கரும்பைத்தேனைப் பாலைக்கனியமுதைக் கண்டைக்
            கட்டியை யொத்திருப்பனந்த முத்தியினிற் கலந்தே"
என்பதாலறிக,
உலகத்திலுள்ள ஆனந்தத்தை ஆன்மா விலநு பவிக்கப்படுமா - போல் சிவாநந்தத்தையுமான் மாவிலது பவிக்கப்படும். அட்படி அநுபவிக்கப்படுவன வெல்லாம் சடமாதல் காண்டு மாதலின் அது போல் சிவானந்தமுஞ் சடமோவெனில் அஃது அங்கனம் ஆகாது. பின்னையென்னெனில் ஆன்மாவால் சிவஞானம் விளங்கியவழி அறியநின்ற ஞேயப்பொருளாகிய சிவமும் சடமாதல் வேண்டும். அவ்வாறு மறியவில்லையானால் உணராத பொருள் சூனியமெனப்பட்டு முடியும். அஃது இன்மையால் சிவானந்தா நுபவம் உலகானந்தம் போல் சடமாகாமை காண்க. உலகானந்தம் சுட்டியறிந்து அநுபவிக்கப்படுவதொன்). சிவானந்தம் சுட்டிறந்து அது பவிக்கப்படுவதொன்று. ஏனெனில் சிவம்சுட்டிறந்து நின்றறியப்படும் ஞேயப்பொருளாதலினால் அவனது ஆனந்தமும் அவ்வாறே யநுபவிக்கப்படுவதொன்றாம்.
இச்சிவாநந்தம் ஆன்மாவிற்குப் போகமோ வல்லது போக்கியமோ வெனிற்கூறுதும். போகம் அநுபவம், போக்கியம் அநுபளிக்கப்படுபொருள். ஆன்மா எதனைச்சார்ந்து அறிந்தானோ அதன்வண்ணமாய் அப்பொருளில் அழுந்துதலே அநுபவம்என்னுஞ் சொற்குப்பொருளாதலின் போக்கியமாதல் செல்லாமையுணர்க.
ஆன்மாவிற்குப் போக்கியமாத லெதுவெனில் அவனுக்குப் பிரமேயரூபமாய் ஞேயமெனப்பட்டன வெல்லாமென்க. அப்படியானால் சிவனுக்கு ஞேயமெனப்பட்ட பசுபாசங்கள் அவ்விறைவனுக்குப் போக்கியமாமோவெனில், அங்ஙனமாகாது ஏனெனில் சார்ந்ததின் வண்ணமாம் அழுந்துமியல்பு ஆன்மாவிற்கே யன்றிசிவத்திற்கு அத்தன் டையின்றென்றுணர்க. ஆதலால்எல்லாப்பொருளும் அறியப்படும் ஞேயமாதலே யன்றி அதுபவிக்கப்படும் பிரமேயரூபமாதலின்மை கண்டுணர்க. ஆதலால் அவைகள் அவனுக்குப் போக்கியமாகாவாம் (ஞேயம் அறியப்படும்பொருள், பிரமேயம், அறிந்து அநுபவிக்கப்படும் பொருள்) பிரமாண முதலியவற்றை ஒரு சிறிது கூறுவாம். சம்சயா திகளை விட்டிருக்கிற ஆத்மசித்சத்தியானது பிரமாணமாம். ஆத்மாவே புத்தி பிரமாதாவாம். அதன் ஞானக்கிரியா வியாபாரமே பிரமிதியாம். இந்திரியாதிகள் பிரமேயமாம். ஆனால் ஆன்மாவை யறிதல் எந்தப்பிரமாணத்தைக் கொண்டெனிற்கூறுதும்.
ஆன்மசிற்சத்தியைக் கொண்டு ஆன்மாவையறிதல் கிரியா விரோதம். ஆதலால் ஈண்டு பரோன்முகசித்சத்தியே பிரமாணம், ஈண்டு ஸவயோன்முகசித்சத்தியும் புத்தியா திகளும் பிரமாணமன்று. ஆதலால் பரோன்முகசித்சத்தி துணையாக ஆன்மா இறைவனையறியு மென்பதாம். இறைவன் ஆனந்தரூபனாதலினால் ஆன்மா அதிலழுந்து தல் சாரதமாம். மற்றவைவந்துழிக் காண்க.
அன்றியும் பிரமாண ரூபமாகிய ஆன்மசிற்சத்தி சிவனுக்காகத் தனக்காக தன்னோ டொத்த பிறவான்மாக்களுக்காக மெய்யாகிய நினைவுணர்விற்கு விடயமாதல் போல்வதோர் ஞேயமாதல் மாத்திரையேயன்றி பிரமேயமாதலில்லை என்பதற்கு, ஆகமங்களில் ஆன்மாவே பிரமாதா, ஆன்மஞானமே பிரமாணம். அதனறிதல் வியாபாரமே பிரமிதி, ஏனையவெல்லாம் பிரமேயமென்னுஞ்சுருதியும், ஒருவாற்றானும் பிரமாணம் பிரமேயமாகாது. பிரமேயம் பிரமாணமாகாது, எனவரைசெய்து வைத்தோதி இதனானே பிரமேயமாய் அறியட்படுவனவாகிய ஐம்பொறிமுதலியவற்றைப் பிரமாணமென்றல் பொருந்தாதென மறுத்துச் சித்தாந்தம் வலியு மத்திய சுருதியுமே சான்றாகலின், ஒருவாற்றால் ஞேயமாயினும் பிரமேயமாதல் பெறப்படாத ஆன்மசிற்சத்தியானாதல் பிறிதோர் ஆன்மாவினாதல் சிவசத்தியானாதல் அனுபவிக்கப்படும் போலுமெனும் ஆசங்கை சிறிதும் ஏலாமை யறிக.
அன்றியும் இன்பம் நல்வினையின் பயனாய்வருதலாதலினாலே இச்சிவாநந்தமும் இன்பமாயின் அதுவும் வினைப்பயனாய்முடியுமோவெனின் அற்றன்று. ஏனெனில் வினை ஆன்மாவாலியற்றப்படுஞ்செயல், அச்செயலியற்றப்பட்டதால் அழியுமாலையது. அதுபோல அச்செயலர் ல் வரும் சடவின்பமும் அழியுந்தன்மையதாம். அதற்கு வேறாய் நிகழ்வதாய் நித்தியானந்தம் என்னும் பெரியதாயுள்ள சித்தின் இன்பம் வினையின்பயனாய் வருவ தெங்கனம், இயைபின்மைகண்டுணர்க,
குணங்களின் சமூகமே குணியாம் : அக்குணங்களின் அந்ததியே ஒருபொருளோடு சம்பந்தமுற்றிருக்கில் அவைகள் என்றும் மாறாத தன்மையனவாயிருக்கும். அவைகள் காரணகாரியத்துட் சார்ந்தவைகளில்லையாம் :
உலகத்தில் இன்பம் என்னும் பொருள் புறப்பொருள் பற்றிவந்த புத்திதத்துவத்தின் பரிணாமத்தாலாகிய சத்துவகுணத்தின் விளக்கமேயன்றி வேறொன்றன்றாகலின் முத்தியினும் முற்றுணர்வு முதலிய எண்குணங்களின் விளக்கமே இன்பமாவதன்றி வேறாய் இன்பமாவதொன்றில்லையெனின், ஆன்மாவின் வேறாகிய மூலப்பகுதியின் கண்ணதாய் நின்ற சாத்துவிக்குணம் ஆன்மாவின் மாட்டு மேம்பட்டு விளங்குதலே உலக இன்பம். அதுவதுவாய் முந்திநின்றறிதலே அநுபவம் எனப்படும் அது போல ஆன்மாவின் வேறாய் சிவன் கண்ணேயுளவாகிய முற்றுணர்தல் முதலிய வெண்குணங்களும் ஆன்மாவின் மாட்டு விளங்கும் விளக்கமே சிவானந்த இன்பமாம், ஆன்மா அதுவாய் அழுந்தி நின்று அவ்விளக்கத்தையறிதலே அநுபவமெனப்படும். மே
ற்கூறிய சாத்துவிக்குணம் ஆன்மாவின் குணம் மூலப்பகுதியின் குணமன்று என்றால் அவ்வாறு ஒருசாத்திரமும் கூறாததால் அது முரணென்றொழிக,
அன்றியும் பசுத்துவமாய் நின்ற ஆன்மஞானமே சிற்றின்பம். அதுபோல சிவத்துவமாய் நின்ற. ஆன்மஞானமே முத்தியின்பமெனக் கொள்ளில், ஆன்மாவின் ஞானமே இன்பமாயின் அதனையறிந்து அநுபவிக்கும் ஞானம் வேறுயாதோ வெனக்கடாயினார்க்கு குணியாய் நின்ற ஞானமே அதனை யறிந்து அதுபவிக்கும் எனவிடுப்பில், குணியாய் நின்ற ஞானமே அறிவுமாத்திரையாய் நிற்பதன்றி ஏனைமுகமாய் நிற்றலின் மையானும் எதிர்முகமாகாமையுமாதலுமாகிய இயல்பு பற்றியே ஞாதாவெனவும் ஞானமெனவும் பகுத்தோதி யதனை யறியார் கூற்றாமென விடுக்க..
ஞாதா ஞானமாவானென்பது இலக்கண வழுவாம். குணகுணிகள் இரண்டற்குமிடையே பொது வாக ஒரு ஞானமுண்டு அதுவே ஞாதாவெனப்படுமெனின், ஒரு பொருள் குணம் குணி யென இருபகு திப்படுவதின்றி மூன்றாவது ஒரு பகுதியுண்டென்று கூறுதல் யாண்டுமின்மையறிக.
அறிவித்தாலறியுந் தன்மைத்தாகிய ஆத்மாவிற்கு ஆனந்தமென்பதொன்றில்லை.. அப்படிக்கிருக்கத் தன்னானந்தத்தையே முத்தியில நுபவிக்குமென்பது கிரியாவிரோதமாகி நியாயத்துக் கொவ்வாததாகி நிற்கும். சமாதி காலத்தில் ஆன்மாவிற்றோன்றும் இன்பம் சிவரூபமான பேரின்பமே யன்றி ஆத்மானந்தமன்று. ஆனால் ஆன்மாபடிகம் போலவதொன்றாகலின் இப்பேரின்பம் ஆன்மவின்பம்போல தோன்றிற்று. அது பற்றி யவ்வாறுகொள்ளற்க. *
முத்தி யிலக்கணங்கூறுமிடத்து பெறுவான் ஆன்மாவென்றும் அவன் அடையும் ஆனந்த நிலைபேறு என்றும் கூறியிருத்தலால் ஆன்மாவிற் கோர் ஆனந்த முண்டென்பதை மறந்து விடுவாயாக.
ஆன்மாதன்னையே கண்டிருப்பது முத்தியன்று. ஏனெனில், இன்பம் ஆன்மாவின் குணமாகில் குணகுணிகள் வேறின்மையின் ஆன்மாவிற் கோரனுபவமின்றாம். அனறியும் “ முத்தர் சிவமே கண்டிருப்பர்'' என்றும் ஆன்றோர் வாக்கியத்துக்கும் விரோதிக்கும். ஈசனைக் காணவேண்டுமென செய்யுந்தவங்களெல்லாம் பொய்யாகித் தன்னையே தான் காண்டல் மெய்முத்தியாகில் அத்தவங்களெல்லாம் வீணாய் முடியும்.
  [* இக்குறியீடு யிட்டவைகள் சந்தேகந்தரக்கூடியதா யிருக்கிறது. ஆன்மா முத்தியில் இன்பம் (ஆநந்தம்) சிவாநந்தம் அநுபவிக்கின்றதோ இல்லையோ என்பது. அநுபவிக்கின்றது என்பது எமது கருத்து. அப்படி அநுபவிக்குங்கால், ஆன்மா அது அதுவாய் நிற்றலினாற் சுக ஆன்மாவின் சுவானுபவத்தை சிவானுபவமாகவும் கொள்வது அறிவு அநுபவமென்பதின் பேதம் கொஞ்சம் தெரிய வேண்டும். நான் அறிகின்றேன் நான் காண்கின்றேன் நான் கேட்கின்றேன் என்று அறிவு முனைத்து நிற்பது அறிவு. இதனைத்தான் சுட்டறி வென்றும் சொல்வது (consciousness) அப்படி ஏதானுமொன்றை யறியுங்கால், அனுபவம் (இன்பம்) நிகழும். அவ்வநுபவத்திலே அது அதுவாய் அழுந்திநிற்க, அறிவுமுனைத்திடாது அமிழ்ந்தி, அநுபவமாத்திரையாய் ஆன்மா நிற்கும். இப்படி நின்றால் தான் அநுபவம் முற்றி நிற்கும். இதையே அத்துவித அனுபவமென்றது. எப்படி யெனில், ஒருவன் சங்கீதம் கேட்டுழி, அறிவும் அனுபவமும் நிகழுகின்றது. நான் சங்கீதம் கேட்கின்றேன் மிகவும் இனிமையாயிருக்கின்றது என்ற ஞானம் வரில், இதிற் சுட்டறிவு, பேத அறிவு உண்டாகி, இன்பமுதிர்ச்சியுமுண்டாகாது. அப்படி சங்கீதத்திலேயே அதுவதுவாகி லயப்பட்டு பரவசமாய் நிற்றல் அநுபவ முதிர்வு, ஆனால் ஆன்மாவின் அறிவு ஒழிந்துபோகவில்லை. முனைக்காமல் அழுந்தியே நிற்றது. நினையாமல் நினைத்தல், நோக்காது நோக்கல், கேளாது கேட்டல் என்னும் பிரயோகங்களின் கருத்து மிதுவாகும். ஒருவன் சங்கீதத்தில் சுட்டிறிவின்றி அழுந்தி நிற்றலை சுத்தமானவிஷய அறிவு அல்லது அநுபவமென்றும் (Pure objective feeling or consciousness) அப்பொழுது விஷயி (subject) இல்லாமலுமில்லை, என்றார், பேய்ன்பண்டிதரும். எனெனின் அவ்வித அறிவு ஒன்று இல்லாவிடில், அநுபவமே சித்திக்காது. சங்கீத இன்பத்தோடு சிவானந்தத்தை வைத்து நோக்கில், இவ்விதம் சவாநுபவம் சிவாதுபவமாதலுங் காணலாம். ப ர்]
ஆன்மாவிற்கு ஆனந்தமுண்டாகில் எண்ணில்லாத பிறவியையும் இறப்பையும் அவ்வான்மா எய்தவேண்டாம், இரும்பைச்சேர்ந்த தீயின் குணம் இரும்பின் குணமாகத் தோன்றுதல் போல ஆன்மாவிற்றோற்றும் பேரின்பம் ஆன்மாவோடு இரண்டற நிற்றலின் அவ்வான்மாவின் குணம்போற்றொன்றும். ஆன்மாவிற்கு ஆனந்தமில்லை என்று அறுதியிட்டதால் ஆன்மாசத்தாகியும் சித்தாகியும் தின்றதைதவிர ஆனந்தமயனாய் நிற்கவில்லை. சச்சிதானந்த ஈசன் ஒருவனே. ஆதலால் ஆன்மாமுத்தியில்'மும்மலங்கள், நீங்கப்பெற்று சிவானந்த வெள்ளத்திற்றிளைத்து அவ்வானந்த மயமாய்நிற்கும். மேற்கோள்.
ளமல நீங்கி யோங்கு சிவானந்த
வெள்ளந்திளைதததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங்
      கொத்தார் விரிசடையார் கூறுஞ் சிவாகமத்திற்
      சித்தாந்த முத்தியெனத் தேர்.
      ஓங்குணர்வினுள் ளொடுங்கி யுள்ளத்து ளின்பொடுங்கத
      தூங்குவர் மற்றேதுண்டு சொல்,
      நற்பர சிவத்துள் நண்ணுபேரின்பஞ்
      சிற்பாரனந்த தரிசன மாகும்
      பெறும் பேரனந்தப் பெருக்கிற் கலந்தாங்
      குறுவதானந்த யோகம தாகும்.''
      அன்புருகி யுறையாது நெகிழாது பற்றா
            தணைந்த நிலை தேரியாதங் கழுந்தில மகத்தான
      வின்பசுகயே பரமானந்த தரிசனமா -
            மிவை தெளிய வுருகின பொன்போற் சலனமின்றாம்
      பின்புபரமானந்த யோக நிறைநீரிற்
            பெருகவிழித்தவற்கு நிலந்தோன்றுமாபோ.
      லொன்றவுருகிய செம்பிற்கண்டபொறி தோன்றுவபோ
            லுளத்தறிவிற் செருக்குவர வானந்த முதிக்கும்.
      என்னையறி வென்றா னென்னறிவிலானந்தந்.
      தன்னைச் சிவமென்றான் சந்ததமு - மென்னையுன்னைப்.
      பாராமறைத்ததுவே பாசமென்றா னிம்மூன்று
      மரராய்ந்தவர் முத்தராம்,

"முத்தன் சிவானந்தந் தன்னை யருந்தி முதல்வனையு
நித்தம் பிரிவிலனென்றாக மங்கணிகழ்த்தலினா
லத்தனதானந்த மெய்தாது யிரென்றறைந்தசொற்றா
னுத்தம் முத்தி யுணராதவர்களுரைக்குஞ் சொல்லே.''

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப்பன்னாட் பாமாலை பாடப் பயில்வித்தானை, யெத்தேவுமேத்து மிறைவன் றன்னை யெம்மானை யென்னுள்ளத்துள்ளேயூ று, மத்தேனையமுதத்தை யாவின்பாலைப் பண்ணிக்குந் தீங்கரும்பை யரனையாதிப் புத்தேளைப்புள்ளிருக்கும் வேளூரானைப் போற்றாதே யாற்ற நான் போக்கினேனே.
தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
நினைத்தொடங் காண்டொறும் பேசுந்தோறுமெப்போது
மனைத்தெலும் புண்ணெக வானந்தத்தேன் சொரியுங்
குனிப்புடையானுக்கே சென்று தாய் கோத்தும்பீ.
   
முகத்திற்கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
      அகத்திற்கண்கொண்டு காண்பதேயானந்தம் 
      மகட்குத் தாய்தன்மணாளனோடாடிய
      சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமாறெங்ஙனே.

ஆனந்த வெள்ளத்தழுந்து மோ ராருயிரீருருக்கொண்
டானந்தவெள்ளத் திடை திளைத்தாலொக்குமம்பலஞ்சே
ரானந்தவெள்ளத்தறைகழ லோனருள் பெற்றவரி
னானந்தவெள்ளம் வற்றாது முற்றா திவ்வணிநலமே.

                        S. பால்வண்ண முதலியார்.       
சித்தாந்தம் – 1912 ௵ - மே ௴  


No comments:

Post a Comment