Saturday, May 9, 2020



சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
தமிழில் வடமொழி கலத்தல்.

எல்லா மொழிகளும் வடமொழி உச்சரிப்புக்கு ஏறக்குறைய ஒத்திருக்க, தமிழொன்று மாத்திரம் சிறிதும் ஒவ்வாமலிருக்கின்ற படியால் பிறமொழிகளையும் கற்றுணர்ந்த வடமொழி அபிமானிகள், தமிழை மாத்திரம் மிகக் கவனித்துக் கூடிய வரையில் அசைத்து அசைத்துப் பார்க்கின்றார்கள். தமிழையும் வடமொழி சம்பந்தமான தென்று நிலை நாட்ட வேண்டுமென்பதே அவ்வசைப்பதன் கருத்து.

முன்னம் எத்தனையோ பேர் அசைத்திருக்கின்றனர்; சிறிதுகாலத்திற்கு முன் சிலர் அசைத்தனர்; இப்பொழுது சிலர் அசைக்க முயல்கின்றார்கள்.

உயர் நிலையும் நுண்ணறிவும் பெற்ற பெரியார்களில் தமிழின் அருமை பெருமை முதலியனவற்றை எடுத்து விளக்கி அணைப்பார் ஒரு சிலரேயாவர்; அவ்வருமை பெருமை முதலியவற்றை மறைக்க முயல்வார் பலராகின்றனர் ஆயின், இப்படிப்பட்ட கருத்தோடு ஐரோப்பிய விஞ்ஞானிகள் தலையிடவே மாட்டார்கள்; அவர்கள் ஞாயமாகவே போகின்றார்கள்.

தமிழ் இவ்வளவு அசைவிற்கும் அசையாமல் மேம்பாடு அடை ந்து கொண்டுவந்து நாள துவரையில் குடும்பங்களில் மனைவி மக்களோடு அன்புடன் பேசத்தக்க பாழையாக இருந்து கொண்டிருக்க

தாங்கள் அபிமானிக்கின்ற பாழை மறைந்தும் அபிமானியாத பாழை விளங்கியும் வருவது ஓர் வியப்பாகின்றது,

பாழைசித்தர் வழக்கு;
பழந்தமிழ் வழக்குமாம்.

பிறமொழியிலுள்ள சொற்களை ஆங்கிலமுதலிய வற்றில் அவ்வம் மொழி நடைக்கேற்றபடியே எழுதுகின்றார்கள், தாயை யுணர்த்தும் மதர் என்னும் ஆங்கில மொழியானது மாத்ரு என்னும் ஆரி யச்சொல்லின் திரிபாயிலும் ஆங்கிலர் மதரென்று எழுதுவார்களே அன்றி மாத்ரு என்று எழுதவே மாட்டார்கள். அது போல வடமொழிச் சொற்களையும் தமிழில் எடுத்துக்கொள்ள வேண்டுவது ஆவசியகமாக இருந்தால் தமிழ் நடைக்கேற்றபடியே தான் எழுதவேண்டும். தமிழில் பிற சொற்கள், வண்டின் வாய்ப்பட்ட புழுப்போலும், வேரின் வாய்ப்பட்ட எருப்போலும் திரியுமென்பர். வடமொழியுச்சரிப் பாகவே எழுதின் தமிழ்ப்பெருமையுந் தமிழ்ப்பெருமிதமும் வேறு பட்டுத் தமிழ் நடைகோணி ஆபாசமாய்ப் போய்விடுமென்பதற்குச் சந்தேகமேயில்லை; பறையறையலாம்.
இக்கருத்தையே தமிழ்ப் பெரியார்களும் கூறியிருக்கின்றார்கள்; அடியிற்காண்க.

''எல்லாக் கூத்துக்களும் எல்லாப் பாட்டுகளும் எல்லா விசைகளும் வடவெழுத்து ஓரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக் கட்டளைக் கூறுபாடுகளும்'' (சிலப்பதிகாரம்'' தமிழென்பது வடவெழுத்து ஒரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து கட்டப்பட்ட வாக்கியக் கூறுகள் என்பார் " (சிலப்பதிகாரம்) இவைபோல்வன கவனிக்கத் தக்கனவாம். தாட்சண்ணியத்துக்காகத் தாளம் போடலாகாது.

“தாட்சண்ணியம அர்த்தநாசம்'  என்பதை நன்றாக அறிந்து கொள்ளல் வேண்டும்.

"கருமஞ்சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு, உரிமையுடைத் திவ்வுலகு'' (உத்தரவேதம்) கௌரவத்தையும் தாட்சண்ணியத்தையும் பொருளையும் கருதி வடமொழியுச்சரிப்பாகவே தமிழில் எழுதினால் அது தமிழாகாது, பாளி முதலிய பிறபாஷையுமாகாது, வேறோர் நூதனபாஷையாய் விடுமென்பதற்கு என்ன தடையிருக்கின்றது?

தொல்காப்பியம், சங்கச்செய்யுள், பஞ்சகாவியம் திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம் முதலிய செந்தமிழ் நூல்களில் வட சொற்கள் ஒரு சிலவாம்.

அப்பெரியாரெல்லோரும் தமிழ் நடையின் பெருமிதத்தை நன்கு அறிந்து கொண்டு அதனைப் பாதுகாத்துக்கொண்டே வந்தனர். இக்காலத்துள்ள தமிழ்ப் பெரியார்களும் அவர்கள் போலதைப் பாதுகாவல் செய்தல் சாலவும் அறமாகின்றது; நீதியாகின்றது; முறைமையாகின்றது. ஐரோப்பிய விஞ்ஞானிகளும் தமிழ் நடையைப் பாதிரிமார்களும் வடமொழி யுச்சரிப்புக் கலந்த தமிழை அருவருக்கின்றனர்.

பண்களின் இலக்கணமும் அறிந்தவர்கள் தமிழில் வடமோ ழியையும் நன்கு கற்ற சிவஞான முனிவர் தமிழை அபிமானித்திருக் கினும் அவர்கள் எழுதிய தமிழை உணரின் அவர்களெல்லாரும் ஞாய மாகமாகவே தான் போயிருக்கின்றார்கள்.

தமிழர்கள் இருமொழியையும் அபிமானிப்பது போலத் தமியேனும் அபிமானிக்கின்றனன்.

இக்கூற்று முகமனுரை அன்றென்பதை தமிழ் விண்ணப்பம் என்னும் ஒரு சிறு நூலால் அறிந்து கொள்ளலாம். (முகமனுசை உப சாரவார்த்தை) ஆயின் அந்தந்தத் தேசாசாரத்தின் முறைமைக்கு ஒப்பஏற்பட்ட சட்டத்தின்படியே அந்தந்தத் தேசத்தை ஆளுகை செய்தல் திறமையாதல் போல அந்தந்தப் பாஷை நடைக்கேற்றபடி ஏற்பட்ட இலக்கணத்தின் படியே அந்தந்தப்பாஷையை ஆளுகை செய்தல் திறமையாகின்றது.

சட்டம்; பொருட்சட்டம், உரிமைச்சட்டம். தண்டச்சட்டம், கோயிற்சட்டம், மடத்துச்சட்டம் எனப்பலவாம். இலக்கணமும் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், இசையிலக்கணம், செய்யுளிலக்கணம். அணியிலக்கணம் எனப்பலவாம்.

வ்வொரு பாஷையிலும் ஒவ்வொரு சுவையுள்ளது; அச்சுவை பெரும்பான்மையும் உச்சரிப்பினாலாவது அவ்வுச்சரிப்பு காரணத் தோடு வந்தபடியால் நல்லோர் அச்சுவையைக் கெடுக்க முயலமாட்டார்கள்.

திருவருட்சந்நிதியில் அவ்வப்பாஷைக்காயர் அவ்வச் சுவையை உண்டு ஆநந்தித்தல் வேண்டுமன்றோ. மலையாளத்தின் சுவையையும் தெலுங்கின் சுவையையும் அவற்றிற்கு இலக்கணம் அமைக்க வந்தார் ஒருவகையில் கெடுத்தனர்.

இனித் தமிழ் முதலிய சொற்களையும் வடமொழியில் அப்பாஷை நடைக்கேற்றபடியே எழுதியிருக்கின்றார்கள் உ - ம் - உலகம் லோகம்; வட்டம் விர்த்தம்; நட்டம் - நிர்த்தம்; நாயம் - - ந்யாயம் நவ காலை - கால்ய = விடியற்காலம், எலி - இலி - இலி - : (கண்) உலக முதலியவற்றிற்கும் ஒரு முதற்சொல் உண்டு. தமிழில் சில எழுத்து மிகுதியென்றும் சில உச்சரிப்புக் குறைவென்றும் சொல்கின்றனர். அவர்களே மிகுதியான எழுத்தை நீக்கக்கூடாமையாக இருக்கின்றதேன்றும் சொல்லுகின்றனர். தமிழுக்கு அவைகுறைவாயின் வடமொழியிலும் அவ்விதக் குறைவுகள் இல்லாமல் இல்லை.

கல்லாதவர்களால் உண்டாகின்ற பிழைகளைத் தமிழின் மேலேற் றித் தமிழ் திருத்தமில்லை என்று சொல்லுதல் கூடாது. தமிழ் அக த்தியனார்க்கு முன்னமேயே திருத்தமடைந்திருக்கின்றது. தமிழ் வட மொழியிலும் இனிதென்று பிறதேசத்தாரும் கூறியிருக்கின்றார்கள். ஒலியும் எழுத்தும் தமிழில் ஒன்று படல்போல வடமொழியில் இல்லை. மொழி நூல் பாயிரவியல் உக - ம் பக்கம் பார்க்கவேண்டும்.

பரம்பரையாகக் கற்பவர்களுக்கே மிகக் கடினமாக இருக்கின்ற படியாலும், என்றும் குடும்பபாஷையாக இல்லாமையாலும், வட. மொழி குடும்ப உபகாரமான பாஷையாக மாட்டாது. குடும்பபாஷை யின் உதவியின்றி வடமொழியைக் கற்கவும் கூடாது. தமிழ் தனி மொழியாதலால் வடமொழி உதவி வேண்டாமலே நடைபெறக்கூடி யது. தனி மொழியென்னவே இயற்கை மொழியுமாம், இயற்கை மொழியென்னவே பண்டை மொழியுமாம். அது நிற்க.
இப்பொழுது ஸ்ரீமான் ராவ்பகதூர் ம.ரங்கா சாரியரவர்கள் எம். ஏ. "தமிழில் எழுது முறையும் உச்சரிப்பு முறையும்'' என்னும் ஒரு நூல் ஆங்கிலத்தில் தாமே எழுதியும் தமிழில் மொழி பெயர்ப்பித்தும் அச்சிட்டிருக்கின்றார்கள் இது தமிழிற்கு அனுகூலமான நூலாகாதென்பதற்குப் பல காரணங்களுள்ளன. ஒவ்வொன்றையும் விரிப்பின் நூலிலும் மிகுமாதலாலும் பத்திரிகையும் இடந்தராதாகையாலும் சிலவற்றை மாத்திரம் இங்கு எடுத்து விளக்குகின்றனன். இந்தநூலில் துணிவுரை கூறலென்னும் இலக்கணம் இல்லாமல் இருக்கின்றது.

அச்சிலவாவன.

(1) ''மேலும் ஒன்றாகவேயிருக்கும் நகரஒலியைக் குறிக்கத் தமிழில் ந, ன என்கிற இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன " (2வது பக்கம்).

(2) “அவைகளின் உற்பத்திக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாது(2வது பக்கம்).  


(3) “அவைகளுள் வித்தியாசம் கொஞ்சமேனும் தோன்ற வில்லை'" (2வது பக்கம்.

(4) “நகர ஒலியைக் குறிப்பதற்கு ந, ன என்னும் இரண்டு எழுத்துகள் இருப்பது உண்டாகிற கஷ்டத்திற்கு ஒரு காரணமாகின்றது'' (5 - வது பக்கம்).

(5) ''தமிழில் வடசொற்களை எழுதும் போது தமிழ் விகுதி யிலக்கத்தின்படியும் புணர்ச்சி விதிகளின்படியும் றன்னகரம் வரவேண்டு மிடங்கள் தவிர மற்றை யிடங்களில் எல்லாம் றன்னகரத்தை உபயோகிக்கவே கூடாது'' (6 - வது பக்கம்),  

(6) ''புதுக்கன்னடத்தில் வல்லின றகரத்துக்கு ஏற்ற வரிவடிவம் தள்ளிவிடப்பட்டது; அதனால் அப்பாஷையில் யாதொரு கஷ்டமும் உண்டானதாகத் தெரியவில்லை. (2 - வது பக்கம்).

(7) ''தாய்ப்பாஷையாகிய ஸாமாந்யத் திராவிடம்'(2 - வது பக்கம்).

(1) "மேலும் ஒன்றாகவே யிருக்கும் நகர ஒலியைக் குறிக்கத் தமிழில் நன என்கிற இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன என்பர்" (2 - வது பக்கம்)

இதற்குச் சமாதானம்:
"அண்பல் லடிநா முடியுறத் தநவரும்''  (நன்னூல்).
"அண்ண நுனிநா நனியுறில் றன வரும்” ()

எனப்பிறப்பிடம் வேறு வேறு கூறலால் நகானகரங்களின் ஒலி வடிவு ஒன்றாகாது.

தந்நகரத்தின் உச்சரிப்பு வேறு; றன்னக்ரத்தின் உச்சரிப்பு : வேறு என்றே கொள்ள வேண்டும்.

நகரம், தகரத்திற்கு இனமாதலாலும், னகரம் றகரத்துக்கு இன மாதலாலும் தகர றகரங்கள் தத்தம் இனத்தோடு சேருங்கால் அவ் வேறுபாடு கண்டு கொள்ளலாம். உம்: நந்து. நன்று. கந்து, கன்று உச்சரித்துக் காண்க ஒரெழுத்தில் புவனாவது அரிதாதலால் இலக்கண விளக்க நூலார் மெய் பொய் என உச்சரித்துக் காண்க என்பர். வேறுபாடு இல்லையாயின் மொழி முதலில் றன்னகரத்தை, என் விலக்கல் வேண்டும்?

இப்படிப்பட்ட சமயங்களில் ஒலிவடிவின் வேறுபாட்டிலக்கணம் மிகு நுட்பமாதலால்

தத்தந் திரிபே சிறிய வென்ப"

எனப் புறனடையால் அவ்வருமையை விளக்குவர் தொல்காப் பியர்.

தூலவொலியின் வேறுபாட்டிலக்கணம் அறிவதில் இங்கனமா யின், அரைக்கால் மாத்திரை கால்மாத்திரையவாய் சூட்சுமஒலிகளின் வேறுபாட்டிலக்கணம் எங்ஙனம் அறிதல் கூடும்?

"உன்னல் காலே ஊன்ற லரையே'' என்னும் மாத்திரை யிலக்கணமும் டொய்ப்படுமோ?'

கொக்குக்கால் எனக்குற்றியலுகரம் புணர் மொழிக்கண் மாத் திரை காலாகு'' மென்பர். அது நால்வகை வாக்குகளின் வேறுபாடு அறியமாட்டாதார்க்குப் புலனாகாமையின் அவ்விலக்கணமும் பொய்ப்படுமோ? பிரசாத மார்க்கத்தில் வீசம், அரை வீசம், அரைக்காணி, காணி, முந்திரிகை முதலிய அதிசூட்சும மாத்திரை கூறுவர். அதன் கதியென்ன?

(2) “அவைகளின் உற்பத்திக்குக் காரணம் கண்டு பிடிக்க முடியாது'' என்பர். (2 - வது பக்கம்)

இதற்குச் சமாதானம்: -

நகாம், ஞகரத்தினின்றுண்டாய இயற்கை யெழுத்து; னகரம், லகரமும் நகரமும் சேர்வதாலாய செயற்கை யெழுத்து, ல்+ந = ன,

உ - ம்: ஞமன் - நமன்;
சல்+ நன்று = கன்னன்று.

இயற்கையெழுத்து நாவிற் கெளிமையாகும், செயற்கையெழுத்து நாவிற்குக் கடினமாகும், இதனால் நகர னகரங்களின் தோற்றமும் அவ் விரண்டன் வேறுபாடும் நன்கு அறிந்து கொள்ளலாம். மொழி நூல் இலக்கண வியலில் மெய்ச்சந்தி யெழுத்தும் பதசந்தியும் மொழிமுத லெழுத்தும் பார்க்கவேண்டும்.

(3) அவைகளின் வித்தியாசம் கொஞ்சமேனும் தோன்றவில்லை என்பர். (2 - வது பக்கம்)

இதற்குச் சமாதானம்.

இயற்கைப் பொருளுக்கும் செயற்கைப் பொருளுக்கும் வேறுபாடு பெரிதாதல் போல இயற்கை யெழுத்துக்கும் செயற்கை யெழுத் துக்கும் வேறுபாடு பெரிதாதலால் அவைகளின் வித்தியாசம் கொஞ் சமேனும் தோன்றவில்லை யென்பது பொருந்தாது.

நகரம் ஓரெழுத்து; னகரம் இரண்டெழுத்து. இவ்விரண்டெழுத் துக்கும் இலக்கண நூல் வேறுபாடு விளக்கி யிருக்கச் சிறிதேனும் வேறு பாடு தோன்றவில்லை யெனக்கூறின் வடமொழியில் மகர ஸகரங்க ளுக்குள்ள வேறு பாடு மாத்திரம் எவ்வாறு தோற்றமாதல் கூடும்?

நகர னகரங்களுக்குக் கொஞ்சமேனும் வேறுபாடு தோன்றவில் லை பென்பது உண்மையாயின் வடமொழியில் நகரத்தை யெடுத்து விட்டு னகரத்தையே வைத்துக் கொள்ளலாமோ? என்ன தடை? சம பாகமாயின் ஏதேனும் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலா மன்றோ?

(4) நகர ஒலியைக் குறிப்பதற்கு நன என்னும் இரண்டெழுத் துகள் இருப்பது தமிழை எழுதும் போ துண்டாகிற கஷ்டத்துக்கு ஒரு காரணமாக இருக்கின்றது என்பர். (5 - வது பக்கம்).

இதற்குச் சமாதானம்:

இப்படி சொல்வர் யார்?
நகர னகரங்களுக்கு இவ்வளவு வருத்தமானால் வடமொழியில் கர ஸகர முதலிய எழுத்துடைய சொற்களுக்கு எவ்வளவு வருத்த மிருக்க வேண்டும்?

னகரம் இரண்டெழுத்து :ஸகர ஸகரங்கள் தனித்தனி ஒவ்வோ ரெழுத்து.

மச்சம் = மீன் (தமிழ்) மச்ச மீன் (மராடம்) மச்ச, மத்ள, மத்ஸய :, இவற்றுக்கு மீனென்பதே பொருள், எல்லாம் பும்லிங்கமே.

வடமொழி நிகண்டில் இங்ஙனமாய உச்சரிப்புகள் பல. இது வருத்தமன்றோர் ஒரு சொல்லுக்கே பல உச்சரிப்புகள் உள்ளன.

மச்ச மென்பதனை மற்சமென் றெழுதுவார்கள். இது எவ்வளவு ஆபாசம்?

ஆர்த்தவம் ஆர்த்தேயி முதலியவற்றின் சொற்பொருளுணர்ந்த வர்கள் அரத்தமென்றே எழுவார்கள்; இரத்தமென்றெழுத மாட்டார்கள்.

ஆர்த்தவம் - பூப்பு, ஆர்த்தேயி = பூப்புற்றாள்.
அரத்தம் = சிவப்பு, உதிரமுதலியன.
அரத்தம் = ரத்தம்  = “ “

ரத்தம் வடமொழி யென்னும் கருத்தினால் இரத்தமென்பர். இங் ஙனமாய ஆபாசங்கள் பல.

வடமொழியில் லிங்கம் அறிந்து கூறுவது எளிதான காரியமா? எவ்வளவு நெட்டுருப் போடவேண்டும்.

அரி, மா - முதலிய சொற்களுக்குப் பல பொருளுள்ளன. ஒவ் வொன்றையும் மனதில் வைப்பது வருத்தமன்றோ? ஆங்கிலத்தில் அச்செழுத்தொன்று; கையெழுத்தொன்று; முதலில் பெரிய எழுத்து வரவேண்டும். இது வருத்தமன்றோ?


மாகல் - கார்த்திகேய முதலியார்.
கெண்டி சென்னை.

சித்தாந்தம் – 1915 ௵ - ஏப்ரல் / மே ௴


No comments:

Post a Comment