Saturday, May 9, 2020



சிவன் போகமோக்ஷப் பிரதாயகர்.
இவ்வரிய திருப்பெயரால் ஸ்ரீ பரமசிவம் வேதாகமங்களில் துதிக்கப்படுகின்றார் (பிரதாயகர் - கொடுப்பவர்.)
போகமோக்ஷப் பிரதாயகர் என்னுந் திருப்பெயர் ஒன்றைவிசாரித்தலினாலேயே சகலக்ஷணம் - சீவலக்ஷணம் - பரலக்ஷணம் - ஆகியதத்து, வத்திரையங்களின் லக்ஷணங்கள் இனிது விளங்கவந்து, பரம்பொருளாவார் இவர் எனத் துணிதற்கு ஏதுவாகும்.
சிவன் அநந்த சக்திமான் என்று வேதாகமங்களில் சொல்லப்படுகின்றனர். அது அவரதுஷாட்குணியங்களிலொன்று. அதனால் அவர் அநந்த தொழில்களையும் உடையவராவர். அந்தத் தொழில்களுள் பிரதாயகத்தொழிலானது, பெத்தமுத்திகளிரண்டிடத்தும் உடனிருந்து  நமக்கு உபகரிப்பதோர் முக்கியத்தொழிலாயிருத்தலால், போகமோக்ஷப்பிரதாயகர் என்ணுந் திருப்பெயரானது, சனனமரண சம்சாரத்தொழில்  வலையில் மொத்துண்டு வருந்தும் நம்மனோர்க்கு அமிர்தம் போன்று அதி  மாதுரியமா யினிப்பதோர் திருப்பெயராயிருக்கும். ஆதலினால், இத்திருப்  பெயரையெடுத்து விளக்குங் காதல் இயல்பாகவே யெமக்கதிகமுண்டாயதென்க. எடுத்துக்கொண்ட விஷயம், உண்மை விளக்கத்தின் பொருட்டு,  சம்வாதரூபமாகச் சுருங்க விளக்கப்படும், சம்வாதம் பூர்வபக்ஷத்திற்கும் சித்தாந்தத்திற்கும் ஆம். பூர்வபக்ஷங்கள் பல. சித்தரந்தம் ஒன்று.
சம்வாதம்.
பூர்வபக்ஷம்: - சிவன் ஏன் போகமோக்ஷப்பிரதாயகர் ஆனார்.?
சித்தாந்தம்: - பெறுவான் உண்டாயிருத்தலால்.
பூர்வபக்ஷம்: - பெறுவான் யாவன்.?
சித்தாந்தம்: - ஆன்மா : இங்ஙனம் பெறுவானும் பிரதாயகரும் உண்டாயிருந்த படியால் பேறு என்பதொன்றும் உண்டாகவேண்டுவது அவசியமாயிற்று. இந்தப்பேறே போக மோக்ஷங்கள் எனப்படும்.
பூர்வபக்ஷம்: - போக மோக்ஷங்கள் என்பனயாவை?
சித்தாந்தம்: - தேகேந்திரியாதி உபாதிகளுடன் கூடியிருந்து அநுபவிப்பதும், அவ்வுபாதிகள் நீங்கிச்சிவத்தோடு ஐக்கியம் பெற்று அனுபவிப்பது மாகிய அனுபவங்களே போக மோக்ஷங்களாம்.
பூர்வபக்ஷம்: - ஆன்மா என்னும் பதார்த்தம் ஒன்று தனியே யுண்டென்று கொள்ளும் பக்ஷத்தில், வஸ்து நிச்சயத்தில் ஏகத்துவம் சாதிக்குங் கொள்கைக்கு அது விரோதப்படாதா?
சித்தாந்தம்: - ஆம் படும்.
பூர்வபக்ஷம்: - ஆகவே, அவ்விரோதம் வராதிருத்தற் பொருட்டுச் சிவன் தாமே தமக்குப் போகமோக்ஷப் பிரதாபகராயிருக்கின்றார் என்று கொள்ளுவோம்
சித்தாந்தம்: - அழகுநன்றாயிருக்கின்றது ! சிவன் என் தாமே தமக்குப் போக  மோக்ஷப்பிரதாயகராதல் வேண்டும்? இக்கொள்கையிலுள்ள அவலக்ஷணங்கள் உமக்குத் தோன்றவில்லையா?
பூர்வபக்ஷம்: - தோன்றினாலும், ஏகத்துவத்திற்கு ஆனியில்லாதிருப்பேறதே அது முக்கியமல்லவா?
சித்தாந்தம்: - அநேகத்துவமாயிருத்தலில் வருந்தாழ்வென்னையோ? ஏகத்துவ ஆனிக்குப் பயந்து கடவுளுக்குப்போக மோக்ஷங்கற்பித்தல் சர்வாபாசமாவதுடன், கடவுட்டன்மைக்கு முழவிரோதஞ்செய்யுமென்றுணர்க.
பூர்வபக்ஷம்: - எப்படி முழுவிரோதஞ் செய்யும்?
சித்தாந்தம்: - போக மோக்ஷானுபவங்கள் கடவுளுக்குக் சொல்லப்படுங்கால், அவர் சமலர் (மலத்துடன் கூடினவர்) எனப்பட்டுச் சீவவர்க்கத்துள் வைத்து எண்ணப் படுவர். போகமோக்ஷங்கள் சமலருக்கே யின்றியமையாதுவேண்டப்படுகையால். ஆகவே, நிர்மலராகிய கடவுளுக்குப் போகமோக்ஷங்கூறுதல் பெருந்தாழ்வாதலறிக.
பூர்வபக்ஷம்: - கடவுள் தாமே தமதுலீலையால் பெறுவானும் - பேறும் - பிரதாயகருமாய்ப் பிரணமித்து நிற்பர் என்னுங்கொள்கைக்குத் தோஷமென்ன?
சித்தாந்தம்: - கடவுளுக்குத்தமக்கென ஓர்லீலையுங்கிடையாது, அவர் மகாபரிசுத்த - பரிபூரணப்பொருளாயிருந்தால். அவர் செயலெல்லாம் பிறர்பொருட்டு இமையளவுமுபகாரமல்லால் வேறென்று இயக்குதலில்லாப் பரமோபகாரச்  செயலாம். அன்றியும், கடவுள் பெறுவான் - பேறுகளாகிய சிற்சடங்களாகத்திரிந்து இழிவெய்தவும் நியாயமில்லை - திரிவெய்துதல்'கடவுள் லக்ஷணமல்லவாதலால், நிர்மலருஞ் சிற்சொரூபருமாகிய கடவுள் ஒருவாற்றானும் சமலராகிய சீவரும், சடமாகிய சகத்தும் ஆகமாட்டார். இந்த நியாயங்களால் லீலைக் கொள்கையும் கடவுள் லக்ஷணத்தை அடியோடு தொலைக்கு மென்றுனர்க.
பூர்வபக்ஷம்: - எது எப்படியாயினுமாகுக. வஸ்து நிச்சயத்தில் ஏகத்துவ ஆனி வரலாகாது. ஆதலால் அதனை நிலைப்பித்தற்குக் கடாசியாக ஓர்யுக்தி கூறுகின்றோம்; சித்த சமாதானத்துடன் கேட்பீரா?
சித்தாந்தம்: - "சிந்தசமாதானத்துடன்" என்று அடிபோட்டுக் கொண்டதனால் உமதயுக்தி ஏதோவிசித்திரயுக்தியா யிருக்குமென்று நினைக்க இடந்தருகின்றது. ஆயினும், அதையும் உலகமறிய வேண்டுவது கடனாதலால், தாராள்மாகச் சொல்லலாம்.
பூர்வபக்ஷம்: - உள்ளவஸ்து ஒன்றே. பெறுவான் பேறு பிரதாயகர் என்பனவெல்லாம் கானல் நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப் பநகர் கனாவூர், வானமை கயிற்றிற்பாம்பு மலடி சேய் முயலின்கோடு ஈனமாந்த றிபுமான் என்றதுபோல எல்லாம் மித்தையே. பிராந்தியால், உள்ளனபோற் காணப்படும். இதற் கென்ன சொல்லுகிறீர்?
சித்தாந்தம்: - இதற்குத்தான் சித்தசமாதான அடிபோட்டுக்கொண்டீர் போலும் ! நல்லது, இங்கு எடுத்துக்கொண்ட'' பிரதாயார்'' என்னும் விஷயத்திற்கு இச்சங்கை பொருத்தமுடையதாகக்காணப் படவில்லை. ஏனெனில் பிரதாயகரையே இல் பொருளாக்குங் காரணத்தால். அன்றியும், இம்மித்தியாவாத - பிராந்திவாதங்கள், பிராந்தியை, நீர் கொள்ளும் கெவஸ்துவின்  தலையிற் சுமத்தி அதன் பரத்துவத்தை யழித்து, முடிவில் வஸ்து நிச்சயம் ஏற்படாதொழியச்செய்து விடுமாதலால், இக்கொள்கையும் அறிஞர் கழகத்துச் செல்லுடா ரில்லை யென்க.
பூர்வபக்ஷம்: - ஏகத்துவசாதனையின் பொருட்டுப் பெறுவானாகிய ஆன்மா என்பதொன்று இல்லை என்னுங்கொள்கை யாகக்காணப்படவில்லை. ஆனால், ஆன்.மாக்களைக் கடவுள் நுதனமாகச் சிருட்டித்து அவர்களுக்குப் போகமோக்ஷங்களைக் கொடுக்கின்றார் என்னுங்கொள்கையில் ஆக்ஷேபமென்னை :
சித்தாந்தம்: - முன்னில்லாச் சீவசகங்களைக் கடவுள் ஏன் நூதனமாகச்சிருட்டிக்கவேண்டும்?
பூர்வபக்ஷம்: - தமக்குண்டாயிருக்கும் மகிமைகள் வெளியாவதற்கு வேறு வழியில்லையா தலால் நூதன சிருட்டி நியாயம் பொருத்தமுடையதேயாம்.
சித்தாந்தம்: - மகிமை வெளியாவதனாலும் கடவுளுக்கு வரும் லாபநஷ்டங்கள் என்னை?'' வேண்டுதல் வேண்டாமையிலான்'' என்னும் லக்ஷணமுடையகடவுள் தமக்கு மகிமை வர வேண்டி தூதனசிருஷ்டி செய்வார் என்னும் நியாயம் செல்லாதென்க. இது நிற்க, தமதுமகிமையை வெளிபடுத்த விரும்பின கடவுள, என்றுஞ்சுக சௌக்கிய நிலையிலிருந்து வாழும் வண்ணம் சீவர்களைச்சிருட்டியாது, சொல்லவும் சகிக்கவும் ஒண்ணாத்துன்பங்களாற் சூழப்படும், அநேக சபலமயக்கங்கட்கு (Temptations) ஆளாகிவருந்தும் வண்ணமும்சிருட்டித்து அவர் பால் நீதியும் இரக்கமும் ஆகாவாம்.
பூர்வபக்ஷம்: - துன்பங்களுக்கு ஆளானது, சீவர்கள் தாமாதேடிக்கொண்டதன்றி, அதற்குக் கடவுள் காரண ரல்லர். கடவுள் சீவர்களுக்குச் சுதந்தர அறிவைக்கொடுத்து விட்டாராதலால்.
சித்தாந்தம்: - உலகிலுள்ள துன்பங்கள் சீவர்களால் தேடிக்கொள்ளப்பட்டனவா? நன்று ! நன்று ! ! கடலிற் சுழற்காற்று முதலிய வற்றாலுண்டாகும் விபத்துக்களும், பூமியின் கண் பூகம்பம் - எரியலை - அக்கியாறு முதலியவற்றாலுண்டாகும் உத்பாதங்களும், சலப்பிரவாகமுதலிய பஞ்சபூதபௌதிகங்களாலுண்டாகும் அனர்த்தங்களும் சீவர்கள் தாமாதேடிக் கொண்டனவை? சிங்கம் புலி கரடி முதலிய துஷ்டமிருகங்களாலுண்டாகும் துன்பங்களும், பாம்பு தேள் செய்யான் முதலிய கொடிய சீவசந்துக்களாலுண்டாகுந் துன்பங்களும் மனிதர் தாமாதேடிக்கொண்டனவை? ஆதிதைவிகம் - ஆதியாத்மிகம் ஆதி பௌதிகங்களாலுண்டாகும் தாபத்திரையங்கள் கொஞ்சமல்லவே ! இவையெல்லாம் சீவர்கள் தாமாதேடிக்கொண்டனவாகுமா? இங்கே உண்மையாதெனில், நூதனமாகச்சிருட்டி செய்யுங்கால், சீவர்கள் தாமாகெடவிரும்பினும் கெடமுடியாத் தன்மையில் அவர்களைச் சிருட்டி செய்து, அவர்கள் சுகசௌக்கியத்திற்கு வேண்டிய சகலபாது காப்புகளையும் அமைத்து வைக்கக் கடவுள் எல்லாப்படியாலும், கட்டுப்பட்டவர் ஆகின்றார் என்பதே நிர்மானுஷ்ய தீவில் ஒருவனைக்கொண்டுபோய் விட்டவன், அங்கே அவனுக்கு ஓரிடரும் வாராவண்ணம் வேண்டிய பாது காப்புக்களைத் தேடியமைத்தல், கொண்டு போய் விட்டவன் மேலேறிய பெருங்கடனாமன்றோ? அன்றியும், தாமளித்த சுதந்தரபுத்தி, முதன் முதல் தாம்விரும்பியது போற்பயன்படாமையினையும், அது துர்விகியோகமாகுந் தன்மையினையும், கடவுள் தமது சர்வஜ்ஞலக்ஷணத்தால், முன்னுணர்ந்து அத்தகைய சுதந்தரவறிவைக்கொடாதிருக்க வேண்டுவதும் அவர் கடனாம். ஓர்பயிற்சியுமறியாத நூதன மனிதன்னொருவன்கையில், அவன் கெடுதற்கேதுவான கருவியைக் கொடுத்தல் உண்மையில் இரக்கமுடையார் செயலன்றாம். நூதனசிருட்டிகொள்கைக்கு இத்தியாதி முன் சாக்கிரதைகள் இன்றி பமையாது வேண்டப்படுதலால், தூதன சிருட்டிநியாயமுஞ் செல்லாமை காண்க.
பூர்வபக்ஷம்: - ஆன்மாக்கள் பின்னை யெப்படித்தான் வந்தார்கள்?
சித்தாந்தம்: - ஆன்மாக்கள் வந்ததுமில்லை போன துமில்லை. என்றுமிருந்தர்கள் இருப்பார்கள். இருந்தவர்க்கே கடவுள் பிரதாயகராகக் கூடுமன்றி இல்லம் தவர்ககல்லவே..
பூர்வபக்ஷம்: - கடவுள் ஒருவரே என்றும் உள்ளவராவர். ஆன்மாக்களும் அங்கனமா தற்குறி யாயங்காணோம். கடவுளைப்போலவே ஆன்மாக்களும் ஏன் அநாதியாயிருத்தல் வேண்டும்?
சித்தாந்தம்: - கடவுள் ஒருவர்தான் ன் அநாதியாயிருத்தல் வேண்டும்? என்று எழுஞ்சங்கைக்கு வருஞ்சமாதானமே நுமதுகேள்விக்குமாம்.
பூர்வபக்ஷம்: - அநாதியே ஆன்மாக்களிருந்தார்கள் என்பதற்குச்சான்றென்னை
சித்தாந்தம்: - கடவுள் போகமோக்ஷப்பிரதாயகராயிருத்தலே சான்றாம். பெறுவோர்கள் இருந்தபடியினாலே தான் கடவுள் பிரதாயகரா வேண்டிவந்த தென்க.
பூர்வபக்ஷம்: - முன்னரேயிருந்தவர்க்குத்தான் கடவுள் பிரதாயகரா யிருத்தல் வேண்டும் என்பதென்னை? நூதனமாகச்சிருட்டிக்கப்பட்டவர்க்கு அவர் ஏன் பிரதாயகராயிருத்தல் கூடாது?
சித்தாந்தம்: - அங்ஙனமாகுங்கால், நூதனமாகச்சிருட்டிக்கப்பட்ட ஆன்மாக்கள் அறியாமை சபலம் மயக்கமுதலிய அநேககுறைவுகள் நிறைந்தவர்களாகச்சிருட்டிக்கப்படல் வேண்டும். இங்கே கேள்வி பாதெனில், முன்னில்லாத ஆன்மாக்களை என் அங்கனங்குறைவுகளுடன் சிருட்டித்து, அவர்களுக்குப்பலவித இடர் களையும் அமைத்துப்பிறகு அவர்களுக்குப்போகமோக்ஷங்களைக்கொடுக்கும் பெரிய வேலையைக் கடவுள் வைத்துக் கொள்ளல் வேண்டும்? என்பதேயாம். அனேக்குறைவுகளுடன் சிருட்டிக்கப்பட்ட ஆன்மாக்கள் தப்பு, தவறுகள் செய்தல் இயல்பாமன்றோ? அத்தவறுகள் கண்டுவருந்துதலும், கோபித்தலும், சபித்தலுமாகிய விகாரங்களை யடைதல் எவ்வாற்றானும் கடவுள் லக்ஷணமாகாதென்பதேயுண்மை யென்க.
பூர்வபக்ஷம்: - தனமாகக் சிருட்டிக்கப்பட்ட ஆன்மாக்கள் பலகுறைவுகளுடன் என் சிருட்டிக்கப்படல்வேண்டும் என்று சங்கித்தீர், அநாதியாயிருந்த ஆன்மாக்கள் என் பலகுறைவுகளுடன் இருத்தல் வேண்டும் என்று எழுஞ்சங்கைக்கு என்ன சமாதானஞ் சொல்லுவீர்?
சித்தாந்தம்: - அநாதியாயிருந்தகடவுள் என் குறைவு திறைவுகளில்லாப் பரிபூரணப்பொருளாய் இருந்தார்? என்று எழுஞ்சங்கைக்கு நீர் என்ன சமாதானஞ் சொல்லுவீரோ, அதேசமாதானம் யாமுஞ்சொல்லுவோம் !
பூர்வபக்ஷம்: - சர்வஜ்ஞராயுள்ள கடவுள் செயல்களைக் கிஞ்சிஜ்ஞராயுள்ள நாம் சங்கிக்க அருக ராவோமா? அவருடைய நியாயங்களும் வழிகளும் சிற்றறிவுடைய நமக்குப் புலப்படுங்கொல்லோ? ஆதலால், கடவுள் செயல்களைச்சங்கித்தல் தேவதூஷணமாகாதா?
சித்தாந்தம்: - இந்த நியாயத்திற்கு ரீங்கள் கட்டுப்படுவது வுண்மையானால், நீங்கள் இதரமதங்களிற் குற்றங்காணவும் மறுக்கவும் உங்களுக்கு நியா டமில்லை ஏனெனில், சர்வஞ்ஞரெனக்கருதப்படும் அம்மதக் கடவுளர் செயல்களும் வழிகளும் சிற்றறிவுடைய வுங்களுக்கு எவ்வண்ணம் புலப்படக்கூடும் ! இந்த தங்கள் நியாயத்தால் எந்தமதஸ்தர் எந்த ஆபாசக்கொள்கைகளைச் சொல்லினும் அவற்றைச்சங்கிக்குஞ் சுதந்தரம் உலகில் ஒருவனுக்கும் இல்லை யென்று ஏற்பட்டுவிடும். இது சர்வாசங்கதமென்க. அங்ஙனமன்று, இதரமதக்கடவுளர் அல்லராதலால் அவர்கள் செய்ல்களிற் குற்றங்காண்டல் விரோதமாகாது என்று நீங்கள் சொல்லுவீர்களாயின், நீங்கள் சொல்லுங் கடவுள் தான் மெய்க் கடவுள் என்பதற்குப் பிரமாணம் என்னை? என்னுஞ் சங்கை நிகழும். இவ்வாறு, விஷயம் சிறு மகார் விவகாரமாய்முடிதலால், உங்கள் நியாயம் சித்தாந்தக்கழத்துச் செல்லுமாறில்லை என்க. இதுநிற்க, கடவுள் ஆன்மாக்களைக்கிஞ்சிஜ்ஞராயேன் சிருட்டித்தல் வேண்டும்? அங்ஙனஞ் சிருட்டித்தனாலன்றோ ஆன்மாக்கள் தவறுகள் செய்யுந் தன்மையரானார்கள். இந்த நியாயத்தால், ஆன்மாக்களது தவறுகளுக்கு ஆன்மாக்கள் உத்தரவாதிகளாக நியாயமில்லை என்றும், குறைவுகளுடன் சிருட்டித்தவரே உத்தரவாதியாவது எல்லாப்படி யாலும் நியாயமாம் என்றும் இனிது விளங்கும்
மேலும்.
    நூதனமாக ஆன்மாக்களைச் சிருட்டிக்குங்கால், கடவுள் தமது ரூபத்தைப்போலவே சிருட்டித்தார் என்பது நுங்கொள்கையன்றோ? அது தார்த்தமானால், கடவுளுக்குள்ள அறிவு நீதி நியாயவுணர்ச்சியாதிகள் தான் மனிதனுக்கும் இருக்கும் என்பது நியாயமன்றி, கடவுளுக்கு வேறு மனிதனுக்கு வேறுயிரா. உதாரணமாக : கடவுள் திருஷ்டியில் விபசாரம் தோஷம் என்றாகுமானால், மனிதனுக்கும் அது தோஷமேயாம். கடவுளுக்கு அந்தினி அக்கினியேயாகுமானால் மனிதனுக்கும் அது சலமாய்விடமாட்டாது. அதுபோல, கடவுள் செயலில் விரோதமிருக்கில் அது மனிதனுக்கும் விரோதமாகவேகாணும். அந்த விரோதங்கண்டு சொல்லுங்கால், மனிதன் சொல்ல அருகனல்ல என்று சொல்லும் நியாயம் விவேகிகளாற் கொள்ளத்தக்க தன்றென்க.
பூர்வபக்ஷம்: - இவ்வாறு பலகொள்கைகளை வருவித்து மறுத்தல், அக்கொள்கைகளையும் அவற்றை யுடையாரைபும் எதிர்த்தல் போலாகி ஒற்றுமைக்கு விரோதஞ் செய்யாதோ?
சித்தாந்தம்: - அக்கொள்கைகள் யாவும் பூர்வபக்ஷக கொள்கைகளாதலால். அவை சித்தாந்தத்தளடங்கியிருக்கும். ஆலால் சித்தாந்திகளே அவற்றையுடைய வருமாவர். ஆதலினால், விரோதம்வர நிமித்தமில்லை யென்க. அன்றியும், எவ்வித நஷ்டங்கள் வருவனவாயிருப்பினும், எக்காலத்துஞ்சத்தியத்தைச் சொல்லுவதே தருமமாம். தாக்ஷணியத்திற் கஞ்சி அசத்தியத்தைச் சத்தியமென்று சொல்லலாமா : அங்கனஞ்போல்லுவதனால் உலகுக்கு ஒருபயனுமில்லையே. பயனுக்குப் பதிலாகக் கெடுதியன்றோ விளையும்? நியாயந்தமாக, ஒருவன் தேகத்தை ஆத்துமா என்கிறான். அதனை மறுத்து, அப்பா : அப்படியல்ல; தேகஞ் சடபதார்த்தம். அது ஆத்துமா ஆகாது, அதனிடத்தில் அறிவாய் விளங்குஞ் சித்தே ஆத்துமாவாம், என்று உள்ள  வண்மையை விளக்கினால் அதில் விரோதம் என்வரவேண்டுமோ எமக்குத் தெரியவில்லை. இப்படியே ஒருவன் ஆன்மாவைப் பரம் என்கின்றான். அவனைநோக்கி அப்பா ! அப்படியல்ல; தேகேந்திரியாதிகளிற் கட்டுண்டு அவத்தைப் பட்டுழல்கின்றானாதலால் ஆன்மா பரமல்ல, சிவமே பரம என்று உள்ள வுண்மையை விளக்கினால் அதில் ஏன் விரோதம் வரவேண்.டுமோ தெரியவில்லை ! இவ்வாறே ஏனைக்கொள்கைகளிலுற்ற வழுக்களை நியாயவாயிலாகக் காட்டி உண்மை நிலை இன்னது என விளக்கு தலைப்பேருபகாரமாக்கொண்டு மகிழ்வர் அறிவுடையோரென்க.
பூர்வபக்ஷம்: - ஏனைக்கொள்கைகள் நும் மதத்திற் பூர்வபக்ஷங்களாகக் கழிக்கப்படுதலால், அக்கொள்கைகளை யுடையார் சித்தாந்திகள் என்றது எப்படி பொருந்தும்?
சித்தாந்தம்: - உலகிலுள்ள எல்லாப் பூர்வபக்ஷக்கொள்கைகளும் இயல்பாகவே சித்தாந்தத்துளடங்கி யிருக்கும். பூர்வபக்ஷம் இல்லாவிடில் சித்தாந்தம் என்பதொன்றிருக்கவே மாட்டாது. பூர்வக்ஷக்கொள்கைகளுள் ஏதாவதொன்றைப் பூர்வபக்ஷஞ் செய்ய முடியாதொழியின், சித்தாந்தத்திற்குச் சித்தாந்தம் என்னும் பெயர் நிலைக்காது. ஆதலினால், சித்தாந்தமானது எழுந்து வெளிவருங்கால், தன்னைச்சூழ்ந்துள்ள பூர்வபக்ஷங்களை விலக்கி யொதுக்கிக்கொண்டு தான் அது வெளிவரும். அது சித்தாந்தத்திற்கு இயற்கையாயுள்ள தர்மமாம், உமியுடன் சேர்ந்திருக்கும் அரிசியே இதற்குத்திட்டாந்தம். அரிசிவெளி வரவேண்டில், உமி தவிடுகளை விலக்கிக்சொண்டுதான் அது வெளிவரக் கூடும். அதுபோல, பூர்வபக்ஷம் பண்ணாவிடில், சித்தாந்தத்திற்குச் சித்தாந்தம் என்னும் பெயர்வரமாட்டாது. இந்தநியாயங்களால், உலகத்தில் தற்காலமுண்டாயிருப்பதும், இனியுண்டாவது மாகிய சமஸ்த பூர்வபக்ஷக்கொள்கைகளும் சித்தாந்தத்துளடங்கி அதற்குச் சொந்த பரிவாரங்களாயிருக்கும். இத்தியாதிநியாயங்களால் சித்தாந்தத்திற் குரியவர்கள் யாரோ, அவர்களே பூர்வபக்ஷங்கட்கும் உரியரா குமியல்பினை உய்த் துணர்க.
பூர்வபக்ஷம்: - ஆயின், பூர்வபக்ஷக்கொள்கைகளால் சித்தாந்தத்திற்கு வரும் பயன் யாது?
சித்தாந்தம்: - சித்தாந்தத்தினது முடிந்த முடிபைத் துணிவாய் நாட்டுதற்குப் பூர்வபக்ஷங்கள் ஓர்விதசாதனங்களாயிருந்து பயன்படுதலால் அதுவே பயனாடென்க.
பூர்வபக்ஷம்: - சித்தாந்தத்துளடங்கிய பூர்வபக்ஷக் கொள்கைகளுள் ஒவ்வொன்றை ஒரோர் சாரார் தமக்குரிய கொள்கையாக்'கொண்டு பயிலக்காரண மென்னை
சித்தாந்தம்: - அது வினைவழி அவரவர் பரிபாகமிருந்தவாறாம். உலகில் கன்ய பேதத்தால் பரிபாகமும் அளவிறந்தபேதங்களாய் விளங்கும். அவ்வப்பரி பாகத்தினர்க்கு அவ்வக் கொள்கைகளே யினித்து உண்மையெனப்படும். அதனால் அக்கொள்கைகள் அவர்களுக்கு இன்றியமையாதனவாம். அவ்வக்கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பலன்களையே அவரவரும் அடைகிறார்களன்றி அதிகமாகவாவது குறைவாகவாவது அடைகிறதில்லை. மக்களின் பருவத்திற்கேற்ப உணவளித்து வளர்க்குங்கருணை மிகுத்த அன்னையே  போல, சித்தாந்தமாதாவும், ஒன்றுக்கொன்று உயர்ந்து உபகரிக்கும் நிலையிலுள்ள பூர்வபக்ஷக்கொள்கைகளாகிய உணவுகளால் ஆன்மாக்களை வளர்த்து முடிவில் தனக்குள் சேர்த்துக் கொள்ளும். ஈண்டு இதனைச்சற்று விரிவாய் விளக்குவாம் : முதன் முதல் சித்தாந்தமானது (வேதாகமமுடிபுகள்.) தேகத்தைப்பரம் எனக்காட்டும். பிறகு அதைப் பூர்வபக்ஷஞ் செய்து இந்திரியங்களைப் பரமெனக்காட்டும். பிறகு அந்தக்கரணத்தைப் - பரமெனக்காட்டும். பிறகு சீவனைப் பரமெனக் காட்டும். இப்படி முறை பூர்வபக்ஷ, சித்தாந்தங்கள் செய்து கொண்டு போய்க் கடைசியாகச் சிவத்தைப் பரம் எனக்காட்டி முடிக்கும். உலகில் தற்காலமுள்ள எவ்வகைப்பட்ட மதக்கொள்கைகளும், இனி நூதனமாகவுண்டாகுங் கொள்கைகளும் இப்பூர்வபக்ஷக் கொள்கை வரிசைக்குளடங்கி எல்லாம் சித்தாந்தத்திற்குப் பரிவாரங்களாகச்சூழ்ந்து நிற்கும். இக்கொள்கைகளுள் ஒவ்வொன்றைத்தத் தமக்குச் சொந்தம் எனக்கொண்டு அவலம்பிப்போர் சார்வாகனே முதல் ஏகான்மவாதியீறாயுள்ளவர்களும், ஏனை நவீன மதஸ்தருமாம். துரபிமானமொழிந்து உண்மையை உள்ளபடி விசாரிக்கப் புகுவார்க்கு எவ்வழியிலும் விரோதம் வரநியாயமில்லை யென்க. இதுகாறுங் கூறிவந்த நியாயங்களால் உலகிலுள்ள -இனியுண்டாகும் எல்லாக் கொள்கைகளும் சித்தாந்தத்திற்கு உடன்பாடேயன்றி விரோதமில்லை என்பது தேற்றம்.
"விரிவிலா வறிவினார்கள் வேறொருசமயஞ் செய்தே,
      எரிவினாற் சொன்னாரேனும் எம்பிரார்க் சேற்றதாகும்.
                              - திருநாவுக்கரசுகள்.
      "இயல் பென்றுந் திரியாமலியமமாதி...''
      "அந்தோ வீததிசயமிச்சமபம் போலின்று...."
- ஸ்ரீதாயுமானார்.
பூர்வபக்ஷம்: - இது காறுங்கூறிவந்த நியாயங்களால், பூர்வபக்ஷக்கொள்கைகளும் வீணான கொள்கைகள் என்றாகாமல், ஓர் பள்ளிக்கூடத்தில் கீழ்போல் வகுப்புகளிருத்தல்போல, ஒன்றுக் கொன்று உபகா ரரூபமாயிருந்து, ஆன்மாக்களைப் பாபாகப்படுத்தி உய்விக்குமியல் பினவாயிருக்குமென்றும், அந்தந்த பரிடாகிகளுக்கு அந்தந்த சமயக் கொள்கைகளே உசிதமாமென்றும், ஆதலினால் அக்கொள்கைகளெல்லாஞ் சித்தாந்தமதத்திற் உடன்பாடேயன்றிவிரோதமாகா வென்றும் புலப்படுகின்றது.
சித்தாந்தம்: - நீர் பூர்வபுண்ணிய விசேஷத்தால் நல்லறிவு விளங்கப்பெற்றவராதலால் உண்மை கண்டு சொன்னீர். துரபிமானம் விட்டு விஷயங்களையிங்ஙனம் விசாரித்து உண்மை கடைப்பிடித்தலே பகுப்பறிவுடைமைக்குப்பயனுமென்றறிக..
பூர்வபக்ஷ சித்தாந்தங்களின் சம்வாதம் முற்றிற்று.
இனி, போகமோக்ஷப்பேறுகளைப்பற்றிய ஏனையவிஷயங்களையும் விவகரிப்பாம். போகமோக்ஷங்களாகிய இரண்டு பேறுகளுள் ஆன்மாவினாலனுபவிக்கப்படும் சமஸ்த அனுபவங்களும் அடங்கும். ஆயினும், போகம் என்பது இங்குச்சுகபோகத்தையே குறித்து நிற்கும். ஆன்மாவுக்கு அது பேறாகக்கொடுக்கப்படலால், இந்த இரண்டு அரும்பெரும் பேறுகளைச் சிவன் ஆன்மாக்களுக்கு இலவசமாயளிக்கின்றார். மனவாக்குக் காயங்களால் தம்மைவழிபடும் நிலையில் தேகபோகாதி சுகசௌக்கியங்களை வெறுத்து (sacrifice செய்து) ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டை கருணைக்கடலாகிய நம் பரமர் திருவுளத்தடைக்காமற் போவாரா? ஆதலினால் அவர் மகாமகிமைதங்கிய போகமோக்ஷப் பிரதாயகர் என்று ஆயினர் என்க. பரமசிவம், தம்மை வழிபடுமான்மாக்களுக்கு முன்னர்ப் போகத்தைக் கொடுத்துப்பிறகு மோக்ஷத்தைக் கொடுத்தல் சாதாரண முறை என்று சாஸ்திரங்களால் விளங்குகின்றது. இந்த முறைக்குக் காரணம், கீழ்வருமாறு சாஸ்திரங்களிற் காணப்படுகின்றது. சாயுச்சியமாகிய பரமுத்தி, ஞானம் ஒன்றினாலேயேயடையம்படும். அந்தஞானமும் தீவரதரபரிபக்கு வதசையில் சித்திக்கும். அந்தப் பரிபக்குவதசைவந்ததும், எந்தபுவனத்தில் வசிப்பினும் தமது திருவருளைக்கொடுத்து சிவம், ஆன்மாக்களைத்தமது பேரின்பநிலையில் நிறுத்துகின்றது. அது காறும் ஏனைப்பக்குவதசைகளிலிருக்கும் ஆன்மாக்களை அதிகாரமலத்திற் சேர்த்து நாநாபுவன போகங்களில் நிறுத்திப் பாகம் வருவிக்கும் என்று சாத்திரங்களால் விளங்குகின்றது.
போகமானது அத்துவாக்களில் உண்டாகும். அத்துவாக்கள் அசுத்தம்  மிச்ரம், சுத்தம் என முத்திறப்பட்டு ஒன்றுக்கொன்று பிரேரக - பிரேரியநிலையில் நிற்கும். அத்துவாக்கள், வழிகள், வினையைப் புசித்தொழிக்கும் வழிகள். எனவே, பொதுவில் பிரபஞ்சங்கள் என்னலாம். அசுத்தாத்துவபோகம், பிரகிருதிமாயை யாலுண்டாகிற ஸ்தூலப்பிரபஞ்சத்திலுண்டாகும். மிச்ராத்துவபோகம், அசுத்தமாயையாலுண்டாகிற சூக்ஷ்மப்பிரபஞ்சத்திலுண்டாகும். சுத்தாத்துவபோகமானது, சுத்தமாயையாலுண்டாகிற பரப்பிரபஞ்சத்திலுண்டாகும். இப்போகங்கள் முறையே ஒன்றுக்கொன்று உயர்ந்தனவாய் அதிவிசித்திரியங்களாயிருக்கும். இங்கே கொஞ்சம்விரித்துவிளக்குவதனால் அப்போகங்களின் மகிமை இனைத்தென ஒருவாறு விளங்க வரும்.
நாம் வசிக்கும் இந்த ஸ்தூலப்பிரபஞ்சத்திலேயே போகாயு சுவரியமானது மாநுஷம் - பைசாசம் - ராக்ஷசம் - யக்ஷம் - கந்தர்வம் - ஐந்திரம் - சோமம்  பிராஜபத்தியம் - பிராமம் - பிராகிருதம் எனப்பிரிந்து ஒன்றுக்கொன்று எண்மடங்கு அதிகப்பட்டிருக்கும். இவற்றுள் மாநுஷஐசுவரியம் ஒருபுடையிருக்கபைசாசஐசுவரியத்தில் சாதாரண அணிமாதி அஷ்டஐசுவரியங்களும் அடங்கும். அணிமாதி ஐசுவரியங்களின் மகிமை சாஸ்திர ஆராய்ச்சியுடையோர்க்குத் தெரிந்த விஷயம். ஆயினும் சற்று விரிப்பாம் : அணிமா - மகிமா - லகிமா - கிரிமா - பிராப்தி பிராகாமியம் - ஈசத்துவம் வசித்துவம் ஆகஐசுவரியங்கள் எட்டு, அணிமா, அணுவினுஞ் சிறிதாதல் - மகிமா, அண்டத்தினும் பெரிதாதல், லகிமா, பஞ்சினும் மெல்லியவாதல் - கிரிமா, மலை, இரும்புகளினுங்கனமாதல். பிராப்தி, நினைத்த விடஞ்செல்லுதல். பிராகாமியம், விரும்பிய பொருளை அடைதல். ஈசத்துவம், தலைமை வகித்தல், வசித்துவம், எல்லாந் தனக்குச்சுவாதீனமாதல், ஆம். இச்சித்திகள் எவ்வளவு அருமையும் மகிமையுடையன வுமாயிருக்கின்றன ! இவை ஈசுரத்தன்மையனவாயிருத்தலால் இவற்றிற்கு ஐசுவரியம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது
இத்தனைக்கும் இதுபைசாச ஐசுவரியமே யன்றி வேறல்ல. பைசாசங்சள்  நினைத்தவுருக்கொள்ளும்; உருமாறும்; நினைத்தவிடஞ் செல்லும். தாழ்ந்த பைசாச ஐசுவரியத்திற்கே யிவ்வளவு மகிமை யிருக்குமானால், இதற்குமேற்புவன சித்திகளாகிய ராக்ஷசம் - பக்ஷம் - காந்தர்வ முதலிய புவனசித்திகளின் மகிமைகளை என்னென்று பகரலாம். பைசாச அணிமாதிகளினும் ராக்ஷச அணிமாதிகள் ஒவ்வொன்றும் இருமடங்கு அதிகப்பட்டனவாம். யக்ஷ அணிமாதிகள் மூன்று மடங்கு அதிகப்பட்டன, காந்தர்வ அணிமாதிகள் நாலுமடங் கதிகப்பட்டன. ஐந்திர அணிமாதிகள் ஐந்து மடங்கதிகப்பட்டன. இப்படியே பிராகிருதம் வரையில் ஒவ்வோர் மடங்கு அதிகரித்துச் செல்லும், பைசாச அணிமாவிலும் ராக்ஷசஅணிமா இருமடங்கு அதிக மகிமையுடையது. யக்ஷ அணிமாமூன்றுமடங்கதிகம் - இம்முறையே காந்தர்வ - ஐந்திர - சௌமிய - பிராஜா பத்திய அணிமாக்களும் மகிமையில் உயர்ந்து சென்று, பிராம்ம அணிமா எண் மடங்கும், பிராகிருத அணிமர் ஒன்பது மடங்கும் அதிக மகிமையுள்ளனவாயிருக்கும். இம்முறையே மகிமா - கிரிமா முதலியவைகளும் கொள்ளத்தக்கனவாம். பிராம்ம ஐசுவரியம் பிரம்மாவின் ஐசுவரியம், பிராகிருத ஐசுவரியம் விஷ்ணுவின் ஐசுவரியம். இந்திர - பிரம்ம - விஷ்ணுக்களின் அணிமாதி அஷ்ட  ஐசுவரியங்கள் அளவில்லாத அதிவிசித்திர மகிமையுடையனவா மாதலால்  அவ் வைசவரியங்களை அடையப் பெற்ற ஆன்மாக்கள் ஒரோர்கால் தாந்தாமே ஈசுரன் என்று செருக்குவாராயின வுண்மை புராணங்களில் விளக்கப்பட்டிருக்கும். ஸ்தூலப்பிரபஞ்ச அணிமாதிகளே இவ்வளவு மகிமையுடையனவா மானால், மிச்ராத்துவ - சுத்தாத்துவாக்களாகிய சூக்ஷ்ம - பரபஞ்சங்களின் அணிமாதி அஷ்ட ஐசுவரியங்களின் மகிமைகளை வர்ணிக்க யாராலாகும் ! மூன்று அத்துவாக்களிலு முள்ள புவனங்களும், புவனபதிகளின்மகிமைகளும், அவர்களுடைய போகங்களும் ஒன்றுக்கொன்று உயர்ந்து மகா விசித்திரகரமும் அற்புதங்களுமாயிருக்கும் என்பது சாஸ்திர நிச்சயம்.  இங்ஙனம் அளப்பறும் மகிமைகள் வாய்ந்த போகாயு சுவரியங்களை நம்பரமசிவம் நம்மை வழிபடும் ஆன்மாக்கட்கு இலவசமாயளிப்பது பரமசிவத்தின்போகா நுக்கிரகமகிமையாம். இப்புவனபோக வாசிகளாயுள்ள ஆன்மாக்களை அவரவர் பரிபாக முதிர்ச்சியறிந்து, கீழ்க்கீழ்ப்புவன போகங்களிலுள்ளாரை மேன்மேற் புவன போகங்ளில் முறையே உயர்த்தி முடிவில் தீவரதர பரிபாகம் வந்தது கண்டு பரமசிவம், ஒப்புயர் வில்லாத தமது பேராநந்தப்  பெருவாழ்விற் சேர்த்துக் கொள்ளுகின்றார். இது பரமசிவத்தின் மோக்ஷானுக்கிரக மகிமையாம். இவ்வாறு சீனியாரிடிபடிப் பிரகாரம் ஆன்மாக்களை உயர்ந்துப் (பிரமோஷன் செய்யும்) வரிசைக்கிரம வழக்கு அநாதியே சிவாகமங்களாகிய சித்தாந்தத்தில் ஏற்பட்டிருக்கும் அதிசயம்கவனிக்கத்தக்கதாம். ஐரோப்பியர்களாலே தான் சீனியாரிடிபடிப் பிரமோஷன் வரிசைக் கிரமம் ஏற்பட்ட தென்றிருந்தோம். நம் திவ்வியா கமங்களில் அது அநாதியே சொல்லப்பட்டிருத்தல் பெரிதும் வியக்கத்தக்கதல்லவா? இதனால்,  அநாதியே சாஸ்திரங்களில் வந்துள்ள உண்மைகள் தான் ஐரோப்பியருக்கும் ஒரோவழி ஸ்புரிக்கின்றன ! என்று உளகிக்க இடந்தருகின்றது. இப்படியின்னும் எத்தனை யோரகசியங்கள் சித்தாந்த நூலாகிய திவ்வியாகமங்களில் மிலைந்து கிடக்கும். ஆதலால், சித்தாந்த சாத்திரங்களை வரன்முறையாய்க் கற்றுணர்ந்து அவை! சொல்லு முறைப்படி அநுஷ்டித்து நம்மனோர் பிறவிப் பயனெய்து வார்களெனத் திருவருளைச் சிந்திக்கின்றாம்.
சிவார்ப்பணம்.
திருச்சிற்றம்பலம்.
                          C. M. ரங்கசாமி நாயகர்.
சித்தாந்தம் – 1912 ௵ - மே ௴
         


No comments:

Post a Comment