Saturday, May 9, 2020



சிவஞான பாடிய விளக்கம் - இளைஞருக்கு

தி. கி. நாராயணசாமி நாயுடு

[சமாஜ பாடிய வெளியீட்டிலுள்ள
திரு. வி. க. அணிந்துரையைத் தழுவிய எளிய நடை]

உலகு, உயிர், கடவுள் என்ற மூன்றும் என்றும் இருப்பன. உலகு மாறுதல் அடையும் அழியா நிலையான (உள்) பொருள் உயிர் அறியாமை கலந்த (விரவிய) அறிவாகிய உள் பொருள். கடவுள் அறியாமையே இல்லாத முழு (முற்று) அறிவு உடைய உள்பொருள். இம்மூன்றில் கடவுள் கட்டு இல்லாத முழு அறிவுடையது; ஆதலால் அஃது அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கம்அறநிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் நிற்கும் தன்மை உடையது. எங்கும் உள்ள கடவுளை விடுத்து, உலகும் உயிரும் பிரிந்து தனியே நிற்பதில்லை. இரண்டும் கடவுளின் அகண்டத்தில் கலந்தே நிற்கும்.

உயிருக்கு - உலகும் கடவுளும், கடவுளுக்கு - உலகும் உயிரும் வேண்டும். உலகும் உயிரும் இல்லை எனில், கடவுளும் தேவை இல்லை. உலகைக் கொண்டே கடவுள், உயிருக்கு நலன் செய்து உயிரைத் தன்னைப் போல் ஆக் குதல் வேண்டும் முப்பொருளும் இப்படி ஒன்றுக்கு ஒன்று நீங்காத்தேவையாய் இன்றியமையாதனவாய் இருக்கின்றன.

முன் நாளில் வாழ்ந்த மக்கள் முதலில் உலகு, பின் உயிர், இதற்குப் பின் கடவுள் உண்மையைப் படிப்படியாகக் கண்டு இருப்பார்கள். இம்மூன்று பொருள்களில் எங்கும் உள்ள கடவுள், உலகு - உயிரில் கலந்து நிற்பதை அவர்கள் நாளடைவில் உணர்ந்து இருப்பார்கள். இந்தக் கலப்பே பின் நாளில் அத்துவிதம் என்று சொல்லப்பட்டது

முப்பொருள் அத்துவிதம் (கலந்து நின்ற தன்மை) பற்றி ஆராய்ச்சி வளர வளர பல திறக் கருத்து வேற்றுமைகள் தோன்றின. அவைகளில் பல, நூல்களாகி உலவு கின்றன. அவைகளால் சிலசமயம் நன்மைகளும், சிலசமயம் தீமைகளும் விளைகின்றன. காய்தல், உவத்தல் இன்றி நடு நின்று உண்மைகாண ஆய்வோர்க்கு நல்ல பயன்களும் மற்றவர்க்குத் தீய பயன்களும் விளைகின்றன.

தத்துவ (மெய்ப்பொருள்) விதை முதல் முதல் நம்நாட்டில் தான் விதைக்கப்பட்டது. இந்த உண்மை வரலாற்றுக் கண்ணருக்கு நன்கு விளங்கும். நம் நாட்டிற்கு 'நாவலர் தீவு' என்ற பெயர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மிகப் பழைய காலத்தில் ஏற்பட்டது. இத்தீவில் வாழ்ந்த மக்களில் ஆத்மசத்தி (Occult power) பெற்றவர் 'சித்தர்' எனப்பட்டனர். அவர் கண்ட முடிபே 'சித்தாந்தம் என்பது.
[† திரு. வி. க. நூல் சித்த மார்க்கம். பார்க்க.]

சித்தாந்தம், ஒரு காலம் உலகம் முழுவதும் பரவி இருந்தது. இன்று உலகில் நிலவும் சமயங்கள் அனைத்தும் அதன் சிதைவுகளே ஆம். சிதைவுகள் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு விதப்பெயர் பெற்று நிற்கின்றன. சித்தாந்தம், இடைநாளில் தான் பிறந்த நாட்டில் வடபகுதியில் 'வேதாந்தம்' என்றும் தென்பகுதியில் சித்தாந்தம்' என்றும் வழங்கியது. பின் இரண்டும் வெவ்வேறாகக் கருதப்பட்டு வாதப் போர்களும் நிகழ்ந்தன.

நம் நாட்டு மொழிகளுள் வடமொழி, தென்மொழி இரண்டும் மிகப்பழமையானவை. இவற்றில் மிகப்பழமையாக உள்ள நூல்கள் முறையே வேதம், தொல்காப்பியம் ஆகும். பழைய இருக்கு வேதத்தில் இயற்கைக் கூறுபாடுகளும், உயிர் வளர்ச்சியும், கடவுள் இயல்பும், தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில், இயற்கை நிலக்கூறும், இன்பமும், ஓர் அறிவு உயிர் முதலியனவும், கந்தழிக் கடவுள் நிலையும் சொல்லப்பட்டு இருக்கின்றன.

வடமொழி வேதம் நாளுக்கு நாள் பெருகி, அதில் புகுந்த ஞானப் பகுதியாகிய உபநிடதம் (வேதாந்தம்) உலகைக் கவர்ந்து பெருகிற்று. பலர் அதில் படிந்து ஆழம் காண, வியாசர் தம் நுண் அறிவால் வேதாந்த (பிரம்ம) சூத்திரம் எழுதினார் இதற்குப் பேருரை (பாடியம்) கள் பலரால் எழுதப்பட்டன. இவை தோன்றுவதற்கு முன், ஒரே கருத்தில் வேதாந்தம், அறிஞரால் கொள்ளப்பட்டு வந்தது. பேருரைகள் தோன்றிய பின்னர் வேதாந்தத்தின் ஒருமை நோக்கம் நாளடைவில் பாழ்படலாயிற்று. சிவாத்துவிதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், துவிதம் என்று வேதாந்த உலகில் கிளைகள் பிரிந்தன. அவைகளின் மீது செடி கொடிகளும் தூறுகளும் படர்ந்தன.

பேருரைக்காரர்கள் பெயரால் மடங்களும் தொன்று தொட்ட வழக்கங்களும் (சம்பிரதாயம்) ஏற்பட்டன. அவைகளை ஒட்டி வாதங்களும் பிணக்குகளும் எழுந்தன. மூலத்தின் ஒருமை, மக்களின் உள்ளத்தை விட்டு இழிந்து வீழ்ந்தது. உரைகளின் பன்மை மேல் எழுந்து ஆட்சி புரிந்தது. உரைகாரர்கள் மீது பழி சுமத்துவது அறியாமை. அவர்கள் தம் காலத்திற்கு ஏற்றபடி உரைகள் எழுதினார்கள். அவைகளை ஒட்டி ஏற்பட்ட மடங்களும் பிறவும் பழிக்கு உரியன ஆம்.

உயர்திணை உலகம், என்றும் ஒரு தன்மையாய் இருக்காது. அதன் கண் கருத்து வேற்றுமைநிகழ்வது இயல்பு. சில சமயம் மூன்று பொருளில் ஒன்றை விட்டு மற்று ஒன்றை உலகம் கொள்ளும். அதனால் வாழ்வும் குலையும். அக்காலத்தில் சான்றோர் தோன்றி உலகம் கைவிட்ட ஒன்றை வலியுறுத்திச் செல்வர்.

ஒரு சமயம் நம் நாட்டவர் உலகை மறந்து, வாழ்வை வெறுத்து, கடவுள் பெயரால், வேதத்தின் பெயரால் கொலை, வேள்வி செய்தனர். எளிதில் வீடு பேறு எய்தலாம் என்ற உறுதி மக்களிடை நிலை பெற்றது. அந்நாளில் புத்தர் தோன்றி, உலகியலின் பெருமையைப் பலப்படுத்தி, கொல்லா அறத்தின் சிறப்பை உயிர்களுக்குக் கூறினார். கடவுள் கடவுள் என்று வாயால் பேசி, வெறி கொண்டு தீச்செயல் செய்து வந்த மக்கட்குக் கடவுள் உபதேசம் செய்யப் புத்தர் முன்வரவில்லை. அக்காலப் போக்கிற்குக் கடவுள் உபதேசம் தேவை அற்றது என்று அவர் கருதி னார் போலும் !

காலநிலை நோக்கிக் கடவுள் உண்மையை வலி உறுத்தாது புத்தர் சென்றதால், அவர் வழிவழி வந்த சிலர் அற நெறி நிற்பதில் கருத்துச் செலுத்தாது, கடவுள் உண்மையை மறுப்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவார் ஆயினர். அவர் பிரசாரத்தால் நாத்திகம் பரவிற்று. அதைக் கடியச் சங்கரர் தோன்றினார்.

புத்தர் பெயரால் அறிவற்ற (சடம்) பொருள் உண்மை மட்டும் வலியுறுத்தப்பட்டு, அறிவாகிய கடவுள் உண்மை மறுக்கப்படுவதைச் சங்கரர் கண்டார்; மக்கள் உள்ளத்தில் அறிவாகிய கடவுள் உண்மை உலவாது, சடத்தின் உண்மை ஒன்றே நிலவியதால், மக்கள் மன நிலையை மாற்ற, அறிவாகிய கடவுள் ஒன்றே உண்மை என்றும், அறிவுக்கு வேறாகப் பிறபொருள் இல்லை என்றும் அறிவுறுத்தத் தலைப்பட்டார். அந்நோக்குடன் பேருரையும் எழுதினார். காலத்திற்கு ஏற்ற தொண்டை, சங்கரர் செய்தார்.

"அறிவாகிய கடவுள் ஒன்றே" என்ற தலைசிறந்த கருத்தில் நிலைத்து நில்லாது, அதற்கு வேறாகப் பிறபொருள் இல்லை என்பதிலே மக்கள் தலைப்பட்டார் கள். அதனால் சங்கரர் உலகியல் (விவகார) நிலையினர்க்கு வேண்டியது என்று சொல்லியும் செய்தும் காட்டிய கடவுள் வழிபாட்டுக்கு இடர் நேர்ந்தது, அதைப் போக்க இராமாநுஜர் வந்தார். அவர், ஜக - ஜீவ - பர உண்மையை நிலைநாட்டி, ஆண்டான் அடிமைத் திறத்தை வலி உறுத்திக் கடவுள் வழிபாட்டின் அவசியத்தை உலகுக்கு உரைத்தார். இவை யாவும் காலத்திற்கு ஏற்றபடி ஆன்றோர் கருத்து வெளிவருவதை உணர்த்துகின்றன.

உரை (பாஷிய) காரர்கள் உள்ளக் கிடக்கைகளை வரலாற்றுக் கண்ணால் நோக்கினால் மாறுபாட்டிற்கு இடமே நேராது. மடங்களும் தொன்று தொட்ட வழக்கங்களும் அறிவு விளக்கத்திற்குத் தோன்ற வில்லை. அவை, உரைகாரர்கள் பெயரால் கட்டுப்பாடுகளையும் மூட வழக்க ஒழுக்கங்களையும் வளர்க்கவே தோன்றின. இவைகளால் அறியாமை பெருகி. பிணக்குகள் மலிந்தன. முப்பொருள், அத்துவிதம் பற்றி சொல், மல் சண்டைகள் அங்கு அங்கே நிகழ்ந்தன. உண்மைகாணும் நல்ல முயற்சி எழவில்லை. எங்கும் குழப்பம் பெருகியது.

பொருள் உண்மையைப் பற்றிக் குழப்பம் நிகழும் போது பெரியோர் தோன்றுதல் மரபு. அதன்படி மெய்கண்டார் தோன்றினார். அவர் சிவஞானபோத நூலை அருளினார். அதன் வழி நூல் சிவஞான சித்தியார்; புடைநூல் சிவப்பிரகாசம்; ஏனைய சார்பு நூல்களும் தோன்றின. இந் நூல்களால் குழப்பங்கள் எல்லாம் இரிந்து ஓடின. முப்பொருள், அத்துவிதம், வேதாந்தம், வேதாந்த சூத்திரம் இவற்றின் உள்ளம் நேரிய முறையில் உலகத்திற்குப் புலனாயின.

சிவஞான போத வரலாறு பற்றி நாட்டில் பலவித கட்டுக்கதைகள் வழங்குகின்றன. இவை யாவும் தென் முகக் கடவுளின் ஒருகையில் சிவஞான போத நூல் இருப் பதைச் சொல்லத் தவறியதில்லை. தென்முகத் தெய்வம், உலகில் உள்ள பழம்பெருஞ் சமயங்களுக்கு எல்லாம் மேலான குரவராக (பரம ஆசாரியர்) விளங்குவது. முன்நாளில், இவருக்கே வந்தனை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இவரே தலைமைக்குரவர் என்று தியொசாபிகல் சங்கத்தை அமைத்த பிளவட்ஸ்கி அம்மையாரும் தம் நூல்களில் வலியுறுத்தியுள்ளார்.

தென்முகத் தெய்வம் அமைதி (சாந்தம்) மயமாய் இருப்பது; சொல்லின் பொருள் கடந்த நிலையில் அமைதி நிலவுவதை அறிவுறுத்துவது. 'சாந்தம், சாந்தம், சிவம்' என்ற நுட்பத்தின் அறிகுறியாக விளங்குவது. அக்கடவுளின் ஒருகையில் சின்முத்திரையும், * மற்றொரு கையில் சிவஞான போதநூலும் திகழ்கின்றன. இம்முத்திரை, மூன்று பொருள் உண்மையைத் தெரிவிப்பது. பெருவிரல் கடவுள் (பதி); சுட்டு விரல் உயிர் (பசு); மற்ற மூன்று விரல்கள் மூன்று மலங்களாகிய பாசம் மும்மலங்களிலிருந்து நீங்கிக் கடவுளுடன் சேர்தல் வீடுபேறு என்பது கருத்து. இவைகளின் உள்ளுறை சிவஞான போதம் என்பது. சின் முத்திரையும் சிவஞான போதமும் பொருளில் ஒன்றே. இரண்டும் இருவகைகளாகச் சொல்வது தத்துவம். பிற உறுப்புக்களும் தத்துவங்களே!

* பெருவிரலும் சுட்டு விரலும் ஒன்று சேர்ந்து (ஒன்றி) மற்ற மூன்று விரல்களும் தனியே சேர நிற்கும் குறி.
ஆணவம், கன்மம், மாயை.  

நாதம் மாயாநாதம், அருள்நாதம் என இருவகைப் படும். தென்முகக் கடவுளின் கையில் விளங்கும் சிவஞான போதம் அருள் நாதமயமாய் இருப்பது, மாயாநாதம் மாயை வாயிலாகப் பிறப்பது. இஃது எல்லோர்க்கும் கேட்கும். அருள்நாதம் மாயா நாட்டங் கடந்தது; சாந்த சமாதி நிலையில் எழுவது; மெய் அறிஞர்க்கு மட்டும் புலனாவது.
`
உலகம் பெயர் (நாம்), வடிவ'ரூபங்களாக வேறு பட்டு (பரிணமித்து) இருக்கிறது. பெயர், வடிவங்கள் மாறுபாட்டறிவை (பேதபுத்தி) உண்டு பண்ணுவன. அவை உள்ள வரை மாறுபாட்டறிவு இருக்கும். இந்த அறிவு உள்ள வரையில் பெயர், வடிவங்கள் தோன்றும். அவை அழிந்தால் எல்லாம் ஒலி மயம் ஆகும். இந்நிலையில் மாறு பாட்டறிவு அழியும்.

எல்லாம் ஒலிமயமாகப் புலப்படும் வேளையில் குரு நாதன் காட்சி அளிப்பான்; சிவஞான போதத்தை உபதே சிப்பான். உபதேசம் ஒலிமயத்தை, ஒளிமயமாகச் செய்து, அமைதியும், சொல்ல முடியாத மேல் நிலையையுங் கூட்டும். இந்த உபதேசம் பெற்ற பெரியோர் வழி, வரிவடிவு பெற்று வந்தது சிவஞான போத நூல்.

ஒலிவடிவில், மொழி வேற்றுமை கிடையாது. ஒலி, வரிவடிவமாக மாறும் போது வேற்றுமை உணர்வு தோன்றுகிறது. பெயர், வடிவங்களில் வேற்றுமை விளைதல் இயல்பு, வேற்றுமை உணர்வை ஒழிக்கவே மக்கள் முயல வேண்டும். சிவஞான போதம்வேற்றுமை உணர்வை ஒழிக்க வல்லது.

மெய்கண்டார் தமிழர். அவர் பெற்ற சிவஞான போத உபதேசம், அவர் வழியாக, நூலாகத் திரண்டது. தமிழுக்கு உரிய சிறப்பியல்பு, 'சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது' இந்நூல் அம் முறையில் சுருங்கிய பன்னிரண்டு சூத்திரங்களால் ஆகியது. இச்சிறு நூல் பெரிய உலகையும் எண் இறந்த உயிரையும், எல்லை அற்ற கடவுளையும் காட்டுதல் வியப்பு அல்லவா? இது சுருங்கிய சொல்லும், பெருகிய பொருளும் உடையது. இதன்சொல், ஆலின் விதைபோன்றது; பொருள், மரம் போன்றது.

இதற்குப் பாண்டிப் பெருமாள் உரை, சிவஞான முனிவர் சிற்றுரை, பேருரை என்ற உரைகள் உண்டு. பேருரை, சிவஞான பாடியம், திராவிட மாபாடியம் என்று வழங்கும். இந்த உரை, சிவாக்கிர யோகிகளின் வடமொழி உரையை சிறுபான்மை தழுவியது. நூலின் அகத்தைத் திறந்து காட்ட வல்லதிறவு, அடிகளார் உரையே ஆம். இந்த உண்மை, மூலத்தையும் உரையையும் உடன் வைத்து ஆராய்வார்க்கு நன்கு புலனாகும். நுண்மாண் நுழைபுலம் கொண்டு எழுதி யுள்ளமை தெள்ளி தின் விளங்கும்.

அடிகள், வடமொழி, தென்மொழிக் கடல்களை ஆழம் கண்டவர். அவரது அறிவின் தேக்கம் சிவஞான பாடியம் அவரது தத்துவ ஆராய்ச்சி நுட்பத்தை நோக்கும் போது நீலகண்டர், சங்கரர், இராமானுஜர், மத்துவர் யாவரும் ஓர் உருக்கொண்டு வருவது காணலாம். அவரது தமிழ் நடையை நோக்கும் போது நக்கீரர், இளம்பூரணர், பரிமேல் அழகர், நச்சினார்க்கினியர் அனைவரும் முனிவராக வந்தனரோ என்று அறிஞர் கருத இடம் தருகிறது. அவரை அறிவுப்பிழம்பு என்று கூறல் மிகை ஆகாது. கலைகள், தருக்கம், வியாகரணம், இலக்கியம், பிறவும் தமிழ் முனிவருக்குத் துணை புரிவது தெரியும். அவர் உரை, அந்நூலுக்கு நிலன், நீர், காற்று, ஒளியாவையுமாய்த் துணை செய்துவருகிறது. நூலைத் தழுவி, முப்பொருள் உண்மையை யும் அத்துவிதத்தின் சிறப்பையும், பிற நுட்பங்களையும் அவர் விளக்கித் தெளிவு செய்துள்ள சிறப்பை எழுதி முடிவது அல்ல. அவரது கருத்துக்கள் பல, தற்கால விஞ்ஞானக் கலைக்கு அரண் செய்வன. மெய்ப்பொருளியல் (தத்துவ) உலகில், அவர் பேருரை, தலைமை வீற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. தற்காலத் தமிழர் அடிகளாரது பெருமையை உணராது கிடப்பது வருந்தத் தக்கது.
சத்காரியவாதம் 'உள்ளம் போகாது, இல்லது வராது' என்பது, சித்தாந்தம் இதனை அடிப்படையாகக் கொண்டது. இதன் வழி நின்று, சிவஞான சுவாமிகள் உரை கண்டுள்ள மாண்பு போற்றுதற்கு உரியது.

மாயா காரியமாகிய உலகு, பெயர், வடிவங்களை உடைமையால், அது சுட்டி உணரப்படுவதாகிறது. சுட்டி உணரப் படும் ஒன்று, என்றும் ஒரு தன்மையாய் இராது. அஃது அழியக் கூடியதே. 'பெயர், வடிவம் இவற்றிற்கே அழிவு உண்டு; மூலத்திற்கு இல்லை' என்று விஞ்ஞானக்கலை கூறும். ஆகவே பெயர், வடிவங்கள் உள் பொருளாகிய மாயையிலிருந்து தோன்றி, அம்மாயையிலேயே ஒடுங்கும் தன்மை யன என்க. இந்த முறையில் உலகு மாறுதல் அடையும் உள் பொருள் என்பதை அவர் திறம்பட மூலநூல் வழியாக விளக்கம் செய்கிறார்.

'அறிவு ஒன்றே உள் பொருள்' என்போர் மாயைக்குத் தனி இருப்புக் கூறுவது இல்லை. அப்படிக் கூறினால் இரு பொருள் உண்மைக்கு இடம் தருவதாகும் என்பது அவர்கள் எண்ணம். அவர், மாயை அறிவின் சாயலாகக் காணப்படும் பொய்த் தோற்றம் உடையது என்பர். அஃது உள் பொருள் அன்று, அநிர்வசனீயம் (சரியாக நிரூபிக்க முடியாதது) என்றும் சொல்வர். மாயை (Matter) அறிவில்லா தது. அறிவு இல்லா ஒன்று அறிவாகிய ஒன்றிலிருந்து எப்படித் தோன்றும்? இதை வினா விடைகளால் அடிகள் தெளிவு செய்துள்ளார்.

உயிர், தனித்த பொருளா? பூதங்களின் கூட்டுறவால் பிறப்பதா? என்ற ஆராய்ச்சி உலகில் நிகழ்ந்து வருகிறது. உயிர் அறிவற்ற சடம் அல்லாததாய், முற்றறிவாகிய கடவுளும் அல்லாததாய், அறிவற்றதுடன் சேரும்போது அறிவு அற்றது போலவும், கடவுளுடன் சேரும் போது கடவுள் போலவும் நின்று, சார்ந்த தன் வண்ணமாய் இருப்பது என்று மூல நூல் கூறுவதை முனிவர் தருக்க முறையால் நன்கு நிறுவிக் காட்டியுள்ளார்.

மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்ததும் சிவப்பு நிறம் தோன்றுவது போல, பூதங்களின் சேர்க்கையால் உயிர் தோன்றுகிறது என்று பூதவாதிகள் கூறுவது உண்டு. அவர் கூற்றை முனிவர் உடைத்து எறிகிறார். சிவப்பு நிறம் எங்கிருந்து பிறக்கிறது? உள்ள ஒன்றிலிருந்து பிறக்கிறதா? இல்லாத ஒன்றிலிருந்தும் புதிதாகப் பிறக்கிறதா? எதுவும் உள்ள ஒன்றிலிருந்து பிறப்பது இயற்கை. சிவப்பு நிறம் மஞ்சளிடத்தில் மறைந்து இருந்தது. அது கண்ணாம்பின் கூட்டுறவு பெற்றதும் சிவப்பாக வெளியாயிற்று. இம்முறையே பூதங்களிலிருந்து உயிர் தோன்றியதெனில், அஃது எப்பூதத்தில் ஒடுங்கி இருந்து தோன்றியது? என்ற கேள்வி எழும் அல்லவா? மஞ்சள் அறிவில்லாதது. அதிலிருந்து வெளியான சிவப்பும் அறிவில்லாதது. அறிவற்றதில் அறிவற்ற பொருள் பிறத்தல் இயல்பு. பூதம் அறிவில்லாதது. உயிர் சிற்றறிவு. அறிவற்றதிலிருந்து சிற்றறிவு எப்படிப் பிறக்கும்? இப்படி உண்மையை விளக்குகிறார்.

உயிரை ஆராயப் புகுந்தவன், உயிர் - தோலா? நாம்பா? எலும்பா? மூளையா? மனமா? காணமா? என்று ஆராய்ந்து ஆராய்ந்து ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். அவன் செயலை ஓர் ஊருக்குச் சென்ற நூற்றுவர், ஊர் சேர்ந்ததும் எல்லாரும் வந்தனரா என்று தெரிந்து கொள்ள விழைந்த ஒருவன் வந்தயா வரையும் எண்ணத் தலைப்பட்டு, அவன், தன்னை விட்டுவிட்டு ஏனையவரை எண்ணி எண்ணி, ஒருவனைக் காணோமே என்று வருந்திய சமயத்தில், ஓர் அறிஞர் 'எண்ணிய உன்னையும் சேர்த்து எண்ணிப் பார்க்க என்றதும், நண்பரை எண்ணியவன் நாணம் உற்றான் என்ற சிறு கதையை எடுத்துக் காட்டி, உயிரை ஆராய்ப்பு தந்தவனுக்கு நல்ல அறிவு வரச் செய்கிறார். உயிர், தோலா? நாம்பா?. மற்றதா? என்று ஆபாயப் புகுந்தவனை, அவன் தன் ஆராய்ச்சிக்குக் கருவியாக நின்று துணை செய்யும் ஒன்று எது? என்று சிந்தித்துப் பார்க்கும்படி முனிவர் அவனை நோக்கிச் சொல்கிறார்.   

உயிர், பேர் அறிவின் கூறே அன்றி, தனித்த ஒன்று அன்று என்று வாதிப்போரும் உளர் - உயிர், பேர் அறிவின் கூறாயின், அதற்கு, இடையில் அஞ்ஞானம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வி பிறக்காமல் போகாது. இதற்கு, 'அஞ்ஞானம் பொருளாய் இருந்தால் அன்றோ அவற்குப் பற்றல் பற்றாமை கூறலாம். அது பொருள் அல்ல'  என்ற விடை அளிக்கப்படுகிறது. அஞ்ஞானம் இல்லை எனில் எல்லா உயிரும் ஞானமயமாக அல்லவா இருக்க வேண்டும்? விடு தலைக்கு உரிய முயற்சி எதற்கு 'அஞ்ஞானம் உள் பொருள் அன்று' என்று கூறுவோரும் விடுதலைக்கு முயற்சி செய்யாமலா இருக்கிறார்? இல்லை. மேலும் உலகியலில் (விவகாசம்) அஞ்ஞானம் உண்டு என்றும் கடவுள் இயலில் (பார மார்த்திகம்) அஃது இல்லை என்றும் சொல்லப்படுகின்றன. இல்லாத (பொய்யான) அஞ்ஞானம் உலகியலில் மட்டும் எங்கிருந்து எப்படி நுழைந்தது? ஆகவே, உயிர் அஞ்ஞா னம் உடையது. அஞ்ஞானம் இல்லாதது முற்றறிவாகிய இறை ஒன்றே என்பவற்றை விளக்கி இருக்கிறார்..

கடவுள் - அறியாமை இல்லாதது; முற்று அறிவாய் இருப்பது; உலகு உயிர்களில் நீக்கமற நிறைந்து இருப்பது; அவைகளைக் கடந்தும் நிற்பது; போக்கு வரவு இல்லாது இருப்பது எல்லாம் ஒடுங்குதற்கும் தோன்றுதற்கும் நிலைக் களனாய் இருப்பது. இப்படிப்பட்ட கடவுள் இயல்புகளை விளக்கி, கடவுள் ஒன்றே மகாசங்காரத்திற்கு உரியது என்று அவர், வேதவேதாந்தக் கலைகள், யுத்தி, அநுபவம் கொண்டு நிறுவியுள்ளார்.

படைப்பைப் பற்றிப் பலர் பலவாறு கூறுவர். கடவுள் எல்லாம் வல்லவர்; ஆகலின், அவர் வெறும் பாழில் இருந்து உலகாதிகளைப் படைக்கிறார் என்று கூறுவோரும் உளர். மூலநூல் கூறும் படைப்பு, தருக்க முறைக்கு மிகப் பொருந்தியதாய் இருக்கிறது. முனிவர் அதைத் தழுவிப் பலவழியிலும் அணி செய்து உள்ளார்.

இந்த உலகில் ஒளியும் இருளும், நினைப்பும் மறைப்பும் அறிவும் அறியாமையும் இன்பமும் துன்பமும் உண்டு. இங்கே அவை தனித் தனியே முழுமையாய் இல்லை. யாவும் இருக்கின்றன. விரவி இருக்கும் நிலை கொண்டு, முழு ஒளி இருள் - நினைப்பு மறப்பு. அறிவு அறியாமை - இன்ப துன்பம் •உடைய ஒரு நிலை இருத்தல் அறிவால் அளந்து ஊகித்து உணரலாம். உயிர், முழு ஒலி - நினைப்பு - அறிவு - இன்பம் உள்ள இடத்திலிருந்து இங்கு வந்திருக்குமா? அல்லது முழு இருள் - மறப்பு - அறியாமை - துன்பம் - உள்ள இடத்திலிருந்து இங்கு வந்திருக்குமா? என்பது ஆராய உரியது. வெயிலில் உள்ள ஒருவன் நிழலை நாடுதல் இயல்பு. ஆதலால் உயிர், முழுஒளி - நினைப்பு - அறிவு - இன்பம் உள்ள இடத்தி லிருந்து வந்திருக்காது. இவற்றின் * எதிர்மாறானவை சூழ்ந்த இடத்திலிருந்து இங்கு வந்திருக்கவேண்டும்.

* காரிட்ட ஆணவக் கருவறை'என்ற தாயுமானார் பாடலைப் பார்க்க.

முழு இருளில் மூழ்கியுள்ள உயிர், அந்த இருளிலிருந்து வெளிவர இயலாததாய் இருக்கிறது. அதன் கட்டை அவிழ்க்க இறைவன் திரு அருள் சுரக்கிறான். இறைவன் முற்றறிவுடையவன் ஆதலின், அவன் பால் இரக்கம் இயல்பாகவே அமைந்து இருக்கிறது. அழுக்காறு எழும் போது இரக்கம் ஒடுங்குவதையும், அழுக்காறு ஒடுங்கும் போது இரக்கம் எழுதலையும் அநுபவத்தால் உணர்கிறோம். அழுக்காறுவன் கண்மை முதலியன அறியாமைக்கூறுகள் இரக்கம், ஒப்புரவு முதலியன அறிவுக் கூறுகள். இறைவன் முற்றறிவு உடையவன் ஆதலின், அவனிடம் இரக்கம் இயல்பாக வே அமைந்து இருத்தலை விளக்க வேண்டுவது இல்லை. நீரில் தண்மையும், நெருப்பில் வெம்மையும் இருப்பது போல இறைவன் இடத்தில் இரக்கம் இயல்பாய் இருக்கிறது. துன் பம் கண்ட இடத்தில் இரக்கம் எழுந்து துன்பத்தைப் போக்க முயல்வது அதன் தன்மை. உயிர், தன் நிலை அறியாது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதைக் காணும் இறைவன் வாளா (சும்மா) கிடக்காமல் இரக்கத்தால் உயி ரைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்ய முனைகிறான். இறைவன் இரக்கத்தால் உயிரின் கட்டை அவிழ்த்து, அதைத் தன்னைப் போல் ஆக்கத் திரு உளம் கொள்கிறான். இறைவன் உயிரின் கட்டைப் படிப்படியாக அவிழ்க்க, உயிர்க்குப் பலதிற மாயா உடலம் அளிக்கிறான். உயிர் மாயா உடலம் பெற்றதும் சிறிது அளவு விளங்கப் பெறுகிறது. மாயை உயிரின் அறியாமையை நீக்குகற்கு உரிய கருவி. சிவஞான சித்தியார், 'மாயாதனு (உடல்) விளக்கு' என்றது காண்க.

உடல், உறுப்பு, உலகம், துய்ப்பன (தனு, கரண, புவன, போகம்) எல்லாம் மாயையின் காரியப்பாடே ஆம். காரியமாகிய இவற்றை உயிருடன் சேர்ப்பதே படைப்பு என்பது. இதில் புதுமை ஒன்றும் இல்லை. உயிர், மாயை கடவுள் மூன்றும் உள்ளவை. உயிர் அறியாமைக் கட்டில் இருப்பதால், அதுதானே மாயையுடன் சேர்வது இல்லை.மாயை அறிவற்றது; ஆதலின் அதுவும் தானே உயிருடன் சேர்வது இல்லை. இரண்டையும் சேர்க்க ஒரு பொருள் வேண்டும். அஃது உயிரைப் போல அறியாமைக் கட்டு இல்லாததாய், மாபையைப் போல அறிவற்ற பொருள் அல்லாததாய், முற்றறிவுடைய தாய் இருத்தல் வேண்டும். இந்த இயல்புடைய ஒன்றே கடவுள் என்பது. உள்ள ஒன்றுடன் உள்ள ஒன்றைச் சேர்ப்பதே கடவுள் செய்யும் படைப்புத் தொழில் என்க. இந்த நுட்பத்தை இவர் விளக்கி உள்ள திறம் பேருரையில் காணலாம்.

உயிர், தொடக்கத்தில் புல், கொடி, செடி, மரம் முதலிய உடல்களைப் பெற்றும், பின்னே புழு, மீன், ஆமை, பறவை, விலங்கு முதலிய உடலங்களைப் பெற்றும், இறுதியில் மக்கள் உடலைப் பெறுகிறது. மக்கள் பிறவியில், உயிர்க்குப் பகுத்தறிவு மலர்கிறது. பகுத்தறிவின் இயல்பு, பிற உயிர்களைத் தன்னைப் போல் கருதுவது. இந்த இயல்பை மேலும் மேலும் பெருக்க உயிர் முயலுதல் வேண்டும்.

பகுத்தறிவு விளங்கிய உயிர், தன்னை இந்த நிலைக்குக் கொணர்ந்த இறைவனிடம் நன்றி அறிதல் உடையதாய், அவனை நினைத்து நினைத்து உருகும் பயிற்சியில் நிலைத்து நிற்றல் வேண்டும். உருகும் உள்ளம், இறைவனுக்குக் கோயில் ஆகல் உறுதி. பகுத்தறிவு உடைய மக்களுக்கு † இறை வழிபாடு இன்றியமையாது வேண்டும். இறைவனது நன்றியை மறந்து, அவனை நினையாது வாழும் உயிரைத் தீவினை சூழ்ந்து உறுத்தும். அதனால் பிறவி வளரும். பிறவி இல்லாக் கடவுளை உன்ன உன்னப் பிறவிவேர் அறும்.

குனித்த புருவமும்'என்ற அப்பர் பாட்டு பார்க்க,

கூர்தல் (உள்ளது சிறத்தல் Evolution) நியாயம் பற்றி ஹெக்கல், டார்வின், கீத் முதலியோர் கூறியுள்ள உயிர் வளர்ச்சி இந்த உரையிலும் ஒளிர்தல் காணலாம். உயிர், புழு, மீன், ஆமை, பன்றி, குரங்கு முதலிய உடலங்களைத் தாங்கிப் பின்னே மனித உடல் தாங்குவது என்பது மூலநூலுக்கு அரண் செய்யும் உண்மையே ஆகும்.  

உயிர் அறிவற்றதின் சார்பு கொள்ளக் கொள்ள அதன் அறிவு நன்கு விளங்கும் என்பது விஞ்ஞான கலையின் விளைவு, உயிர், மாயையின் கூட்டுறவு பெறப் பெறப் படிப் படியே அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெறுகிறது என்று மூல நூல் கூறுகிறது. இரண்டுக்கும் வேற்றுமை இல்லை. பேருரை இந்த நுட்பங்களை எல்லாம் மிகத் தெளி வாக விளக்குகிறது.

உலகு - உயிர் - கடவுள் உண்மை கூறும் சிவஞான போதம், அம்மூன்றும் தனித் தனியே நிற்கவில்லை என்றும், உலகு உயிருடன், கடவுள் நீக்கமற நிறைந்து நிற்கிறார் என்றும் கூறுகிறது. முப்பொருள் உண்மை மறுத்துப் பொருள் ஒன்றே கூறுவோர், உலகு உயிருடன் கடவுள் நீக்கமற நிறைந்திருத்தல் என்ற கூற்றை ஏற்பது இல்லை. எங்கும் நிறைந்துள்ள கடவுளில் உலகும் உயிரும் இடம் பெறின், கடவுளுக்குப் பரிபூரண தோஷம் (முழு இழுக்கு) உண்டாகும் என்று அவர் வாதிக்கிறார். இதை முனிவர் தடைவிடைகளால் வீழ்த்தி, மெய்கண்டார் உள்ளக் கிடக்கையை உறுதிப் படுத்துவது கூர்ந்து சிந்தித்தற்கு உரியது.

இரண்டு பொருள்கள் ஓர் இடத்தில் இடம் பெற என்பது உண்மையே. எள் உள்ள இடத்தில் கொள் இருத்தல் முடியாது; கொள் உள்ள இடத்தில் எள் இருக்க முடி யாது, எள்ளும், கொள்ளும் எல்லை உடைய வடிவப்பொருள். எல்லை உடைய வடிவப் பொருள், ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்று இருக்க இடம் பெறுதல் அரிதே. கடவுள் எல்லையுடைய பொருள் அன்று; அஃது உருவம், எல்லை அற்றது; அகண்டமானது (பகுக்கப்படாதது). அதைக் கண்டப் பொருளாகக்கருதி, இரண்டு பொருள்கள் ஓர் இடத்தில் இடம் பெறு' என்ற நியாயத்தைக் குறிப்பது நியாயம் ஆகாது. அவயவப் பொருளுக்கு ஏற்பட்ட நியாயத்தை அவயவம் அற்ற பொருளுக்கு எடுத்துக் காட்டுதல் தருக்க முறை ஆகாது.   

ஆகாயம், தனித்தும் மற்றப் பூதங்களில் நிறைந்தும் இருப்பது. அது மற்றப் பூதங்களில் பாய்ந்து இருப்பது உண்மை. காற்றுள்ள இடத்தில் ஆகாயம் இருக்கிறது. இங்கே 'இரண்டு பொருள்கள் ஓரிடத்தில் இடம்பெறு' என்ற நியாயத்தை எடுத்துக் காட்டுவது அறிவுடைமையாகுமா? ஆகாயம் போன்றது கடவுள்; மற்றப் பூதங்கள் போன்ற உலகும் உயிரும். இவ்வாறு முனிவர் பேருரையில் எடுத்துக் காட்டுவதைத் தற்கால அறிவியல் நூல் வல்லார் காண்க.

உலகு உயிருடன், கடவுள் நீக்கமறக் கலந்துள்ள நிலையையே மெய்கண்டார் அத்துவிதம் என்கிறார். பொருள் ஒன்றே என்போர் அவர் கருத்தை ஏற்பதில்லை. அத்து விதம் என்பதில் உள்ள அ - எழுத்துக்கு அவரவர் கொள் கைக்கு ஏற்றபடி அவரவர் பொருள் சொல்கிறார்கள். மெய் கண்டார் சார்பினர், அ - எழுத்துக்கு அன்மைப் பொருள் கூறுகிறார்கள். ஏகான்மவாதச் (சங்கரர்) சார்பினர் அ - எழுத்துக்கு இன்மைப் பொருள் கூறுகிறார்கள். மறுமை முதலிய வேறுபொருள் கூறுவோர்களும் உண்டு.

அ - எழுத்துக்கு அன்மைப் பொருளும் உண்டு; இன்மைப் பொருளும் உண்டு. அமலம், அநேகம் என்ற சொற்கள் இரண்டிலும் '' எழுத்து இருக்கிறது. அமலம் என்றால் மலம் இல்லை என்பது பொருள். அநேகம் என்றால் ஒன்றல்லபல என்பது பொருள். அமலத்திலுள்ள அ - எழுத்து இன்மைப் பொருளையும், அநேகத்திலுள்ள அ - எழுத்து அன்மைப் பொருளையும் தருகின்றன. அநேகத்திலுள்ள அ - எழுத்துக்கு இன்மைப் பொருள் கூறின், அநேகம் என்பது பல என்ற பொருள் இழந்து ஒன்றுமில்லை என்ற பொருள் தரும். அநேகத்திற் குப் பொருள் பல என்று எவரும் சொல்வர். இதனால் எண்ணுப் பெயருடன் வரும் அ - எழுத்து அன்மைப்பொரு ளையே தரும் என்ற முடிவுக்கு வருகிறோம். அத்துவிதம் என்பதில் உள்ள அ - எழுத்து, துவிதம் என்ற எண்ணுப் பெயரை ஒட்டி இருத்தலால், அ - எழுத்துக்கு அன்மைப் பொருள் குறிப்பதே இலக்கண வரம்பும் உலக வழக்கும்ஆகும். முனிவர் வியாகாண வழியாக அத்துவிதத்திலுள்ள அ - எழுத்துக்கு அன்மைப் பொருளையே உறுதி செய் அள்ளார்.

வேதத்தில் ஒன்று, இரண்டு என்ற எண்களைக் குறிக்க முறையே ஏகம், துவிதம் என்ற சொற்கள் வருகின்றன. சிவனும் சீவனும் ஒன்றாய் இருப்பின் ஏகம் என்றும், வேறு வேறாய் இருப்பின் துவிதம் என்றும் சொல்லுவதோடு வேதம் நின்றிருக்கும். வேதம் 'அத்துவிதம்' என்று கறுகிறது. ஆகவே, அத்து விதத்துக்குப் பொருள் ஏகம் என்றே துவிதம் என்றே கூறுதல் வேதக்கருத்துக்கு முரண்பாடு ஆகும். இதையும் அவர்கள் பேருரையில் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

பொருள் ஒன்றே' என்று வேதம் கூறுவதற்கு, கடவுள் ஒன்றே என்று மெய்கண்டார் கொண்ட பொருளை அவர் தெளிவு செய்துள்ளதைப் பார்த்தால் அவரது வட மொழிப் புலமை தெரியும். சிவசூத்திரம் முதலிய பல வட மொழி நூல்களை அவர் பொருந்திய முறையில் எடுத்து ஆண்டு இருத்தல் புலவர்கட்கு விருந்து ஆகும். அடிகளார் பேருரையைப் பயில்வோர், வேத வேதாந்தம், ஆகமம், வேதாந்த சூத்திரம், சூத்திரபாடிய (ஷி) யங்கள் முதலியவற்றைப் படிக்காமலே, அவைகளைப் படித்த பயனைப் பெறுவர் என்பது திண்ணம்.

சிவஞான அடிகளார் பேருதைத்துவ ஆராய்ச்சிக்கும் தமிழ் பயில்வோருக்கும் ஒருகருவூலம் போலத் துணை புரியும். இது தமிழ்ச் செல்வம்; கற்பகம்; காமதேனு. அது வேண்டுவதை உதவும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த திராவிட மாபாடியத்தை யாவரும் படிக்க வேண்டும். தமிழ் வாழ்க; சிவநெறி வாழ்க; சிவஞான முனிவர் திரு அடி வாழ்க.  

சித்தாந்தம் – 1964 ௵ - மே, ஜுன், ஜுலை, ௴


No comments:

Post a Comment