Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சமய அருட்சி.

சமய அருட்சி பூர்வகாலந்தொட்டு எல்லாத் தேசங்களிலும் ஓர் ஓர் காலத்துக் கிளர்ந்து நிகழ்ந்துகொண்டே வருகின்றது. எல்லாத் தேசத்தார்க்கும் எல்லாச் சாதியாருக்கும் தங்கள் தங்கள் சமயமே மற்றைச்சமயங்கள் அனைத்திலும் மேலான தென்பது கருத்தாகலின், அவர்கள் எல்லாம் தத்தம் சமயத்தை விருத்தி செய்தற்கண் பெருஞ் சிரத்தை எடுப்பது வழக்கமாயிற்று, ஆனால் இங்ஙனம் சிரத்தை எடுப்பதெல்லாம் சர்வான்மாக்களும் ஈடேறிவிடுதல் வேண்டும் என் னுஞ் சீவகாருண்ணியம்பற்றியே என்று சொல்லத்தக்கதல்ல. இந்தச் சீவகாருண்ணியநோக்கமும் சிற்சிலரிடத்தே உளதாமாயினும், அநேக மாகச்சனங்கள் சமயவிருத்தியில் கிளர்ச்சி கொள்வதெல்லாம் ஓர் ஓர் லௌகிகப்பயன் கருதியேயாம். இந்த நோக்கத்திற்றானும் ஒரு சிறு நன்மை எய்துதற்குரியதாயினும், இது லௌகிகமுதிர்ச்சிக்குப் பெருந் துணைக்காரணமா பிருக்கின்றது, சமயவிருத்தி செய்யுமிடத்தெல்லாம் உலகநன்மையே எமது பெருநோக்கமாக இருத்தல்வேண்டும்,

முற்காலத்திலே மேலைத்தேசங்களிலே சமயக் கிளர்ச்சி காரணி மாகப்பல குரூர யுத்தங்கள் மூண்டு சனங்களை யெல்லாம் பெரிதும் வருத்திய துண்டு, மேலைத்தேசத்தாரது சமயஷ்டூரம் எமது ஆரிய வர்த்தத்தும் நுழைந்து எம்மவரையும் வருத்திய காலங்களுமுண்டு. எமது தேசத்திற்றானும் ஓர் ஓர் காலத்திலே ஓர் ஓர் சம்யக் கிளர்ச்சி கிளர்ந்ததுண்டேனும், அக்கிளர்ச்சிகளால் நமதுதேசத்தார் அத்துணை நிற்பந்தமுற்றாரென்று சொல்லத்தக்கதல்ல, எங்கள் வேதங்களும் உபநிடதங்களும் சிரத்தையோடுகற்கப்பட்டு வந்த காலங்களிலே பற் பல தரிசனகர்த்தாக்கள் கிளர்ந்து தத்தமக்குரிய கொள்கைகளை நாட்டி விவாதங்கள் விளைத்தார்கள். அதன்பின் கௌதமபுத்தன் முதலி போர்கிளர்ந்து ஓர் ஓர் சமயத்தைப்போதித்து வாதித்தார்கள். அதன் பின் சங்கராசாரிய சுவாமிகளும் பிறருந்தோன்றி உபநிடதக் கொள்கைகளுக்கெல்லாம் ஓர் ஓர் பொருள் கற்பித்து வாதித்தார்கள். சுத்த சித்தாந்தமாகிய நமது திவ்விய சமயத்தின் பொருட்டும் காலத்துக்குக் காலம் பல முயற்சிகள் நம்மவராற் செய்யப்பட்டன. இவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் இந்தத் தக்கிணபாகத்தே எங்கெங்கும் மலிந்து பொலிந்து விளங்குஞ் சிவாலயங்கள் மடங்களாலும், நமது சமயக் கொள்கைகளை எடுத்துக்காட்டிக் காலந்தோறுஞ் செய்யப்பட்ட புராணங்கள் இதிகாசங்கள், சமய சாஸ்திரங்கள் வியாக்கியா னங்கள் முதலிய பன்னூறு கிரந்தங்களாலும் நாம் எல்லாம் தெள்ளிதின் அறியக்கிடக்கின்றன. இந்த முயற்சிகளை எல்லாம் கீழ்ப்படுத்தி மேற்பட்டு விளங்குவன எங்கள் நாயன்மார் திருவவதாரஞ் செய்து காலந்தோறுஞ் செய்தருளிய அற்புதங்களும் அவர்கள் அருள்வாக்கிற் றோன்றிய தேவார திருவாசக முதலிய அதிமதுரச் செந்தமிழ்களுமாம். இவர்கள் திருவாக்கிற்பிறந்த இந்த அருண்மொழிகளும், எங்கள் சிவாலயங்களும் இந்தப் பரதகண்டத்திலே நிலையுற்று விளங்குந் தனையும் எங்கள் சமயம் ஒருபோதுந் தளர்வடைய மாட்டாதென்று நாம் வற்புறுத்திச் சொல்லலாம். எங்கள் சிவாலயங்களிற் சிலவற் றுக்கும், எங்கள் சமயக் கிரந்தங்கள் தமக்கும் இடையூறு சம்பவித்த காலங்களுமுண்டு. ஆனால் அவைகள் அவ்விடையூறுகள் அனைத்தையும் மேற்கொண்டு, இத்துணைக் காலஞ் சென்றும் இப்பரதகண்டத்திலே நிலைபெற்று நின்று கிரிதீபம் போல் விளங்கி, ஏனைத் தேசங்களினும் தமது திவ்விய தேசோமயத்தை வீசிநிற்கும் இந்தமாட்சிதானே அவற்றின் பெருமைக்குச் சிறந்த சாட்சியாகும்,

இத்துணைப் பெருமைவாய்ந்த நமது சமயத்தின் நிகழ்கால நிலையை நோக்குமிடத்து அது நமது தேசத்தின் பெருமைக்கு ஏற்புடைய தொன்றாகத் தோன்றவில்லை : எமது சமயத்தின் விருத்திக்குப்பெருந்தடையாக அகத்தும் புறத்து மாகிய இருபாலும் பெறுங்கெடுதிகள் உண்டாயிருத்தலைச் சிந்திக்கும்போது எமது மனம் பெரிதும் வருந்து கின்றது. புறத்தே அக்கிய சமயிகளால் தத்தம் மதவிருத்தியின் பொருட்டுச் செய்யப்படும் முயற்சிகள் எமது தேசத்திலே காலந்தோறும் வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்நிய சமயங்களை எமதுதேசத்தில் விருத்தி செய்வதற்காகச் செலவிடப்படுந் திரவியத்தின் தொகையும், அதன்பொருட்டு ஏவல்கொள்ளப்படுவாரது பெருக்கமும், அவர்கள் தமது முயற்சிகளை நடத்துமக்கிரமமும் பிறவும், நாம் மௌனமுற்றிருப்பதுண்டாயின் எமது சமயவிருத்திக்குப் பெருங்கேடு செய்து விடும் என்பதிற்றடையேயில்லை. மேலைத்தேசத்தார் நமது பரத கண்டவாசிகளது தற்கால நிலைமையையும், அவர்களது துர்ப்பலத்தையும் நன்குணர்ந்து, அவர்களுக்குப் படிப்படியாக லௌகிகச் சுவையை ஊட்டி, அவர்களது சமயப்பற்றை நாள்தோறுங்குன்றச் செய்து தாம் ஊட்டும் லௌகிகச்சுவை வாயிலாக அவர்களைத் தமது சமய வலையுட்படுக்கும் நோக்கங்கொண்டு பெருமுயற்சி செய்கின்றார்கள். இவர்கள் இந்த நோக்கங்கொண்டே லௌகிக கல்விக்குரிய வித்தியா சாலைகளைத் தாபித்தும் பலவாறான பொருள் வருவாய்களைக் காட்டி யும், பின்னும் பல லௌகிக சிலாக்கியங்களான் மருட்டியும் நம்மவர் களை மயக்குவராயினர். இவர்கள் இங்ஙனம் எல்லாஞ் செய்வதனால், நமது தேசத்தார் தமது சமயப்பற்றையும் இழந்து அந்நியசமயத்தை யும் அங்கிகரிக்க மனங்கொள்ளா பாய், ஒருசமயப் பற்றுமின்றிச் கடவுளை மறந்து கலகமிடுவதற் கேதுவாயிற்று. இது எத்துணைப்பெருங் கெடுதியா மென்பதை நமது தேசத்திலே தமது சமயத்தை விருத்தி செய்யவந்த இந்தப் பரசமயிகள் சிறிதுஞ் சிந்திக்கின்றார்களில்லை. இவர்கள் செய்யுங் கேட்டை நன்கறிந்த நமது சமயத்தவர்களாகிய விவேகிகள் பலரும், இவர்களுடைய செய்கையைக் கண்டித்தால் தமக்கு இவர்கள் வாயிலாகப் பெறப்படும் மதிப்புக் குறைந்து விடும் என்று அஞ்சிப்போலும் மௌனஞ் சாதிப்பாராயினர். மௌனஞ்சாதித்த லொன்றோர் இவர்களுக்கு இயலுந்தோறும் வேண்டிய சகாயஞ் செய்யவும் முற்படுவாராயினர்! இதுபற்றியன்றே இவ்வன்னிய சமயிகளுக்குத்தத்தம் சுவதேசத்திலும் நமது தேசத்திலே அதிக கவர்ச்சியுள தாதற் கேதுவாயிற்று !

இங்ஙனமே நமது சமயவிருத்திக்குப் புறப்பகைமாத்திரமல்ல, எமது சாகியத்துட்டானே தோன்றியுள்ள அகப்பகையும் பெரிதென்றே சொல்லத்தக்கது. புறப்பகையினும் அகப்பகையே எமக் குப் பெருங்கேடு செய்தற்கு ஏதுவாயிற்று என்று கொள்ளினும் இழுக்காது. இந்த அகப்பகைகளுள்ளே புறச்சமயத்தவர்களுக்குச் செய்யப்படுஞ் சகாயம் ஒருபுறமாக, எமது சமயத்துக்கு நேரே செய்யப்படும் கெடுதிகளும் அநேகமுண்டு. இக்கேடுகளுள்ளே மிகக் கொடியது, சமயத்தின் பொருட்டுத் தம்வாழ்நாளைத் தர்ப்பணஞ் செய்ய வேண்டிய கடம்பாடு பூண்டவர்களாகிய எங்கள் பிராமண குலத்தவருட் பலர் செய்யும் கெடுதியேயாம். இவர்கள் பிறப்புரிமையாகத் தப்பாற் சுமத்தப்பட்டுள கடப்பாட்டைக் குறித்துச் சிறிதுஞ் சிந்தியாது, தங்கள் கருத்து அனைத்தையும் லௌகிகத்துக்கே தானஞ் செய்து விட்டார்கள். சமய விஷயத்தைக் குறித்து இவர்களோடு சம்பாஷிக்கத் தலைப்படுவார் யாவரும் உளர் எனில் அவர்களைப் பைத்தியக்காரராக மதிக்கவேண்டும் என்பது இவர்கள் கருத்தாய்க் கொண்டது. இவர்கள் ஆரிய பாஷையினும் தமிழ் மொழியினுமுள்ள அருமருந்தன்ன சமயசாத்திரங்களை எல்லாம் உவர்த்தொழித்து விட்டு ஆங்கில பாஷையிலுள்ள லௌகிக்கல்வியின் கண்ணே அதிமோக முற்றுநிர்பமாயினர். அங்ஙனம் ஆங்கில லௌகிகக் கல்வியிற் பயின்றளார் எல்லாம் இராசாங்க உத்தியோகங்களினும் லௌகிக கோலங்களினுமே தமது கருத்தைச் செலுத்துகின்றாரன்றி, சமயத்தைக் குறித்த சிந்தனை அவர்கள் மனத்திலே கிளர்வது அரிதினும் அரிதாகக் கொண்டது. இந்த லௌகிகப் பிரமையால் இவர் எல்லாம் பெரிது பீடிக்கப் பெற்றுத் தங்கள் ஊண் உடை முதலியவற்றையும் சமயாசார சாதியாசாரங்களையும் மாற்றி ஐரோப்பிய கோலம்படைத்தலின் வேணவாக்கொண்டு நிற்கின்றார்கள். இவர்கள் சமயத்தின் பொருட்டு உழைக்கவேண்டிய கடப்பாடு பற்றியே முதல்வருணத்துக்குரிய முதன்மைகளுக்கெல்லாம் பாத்தியம் படைத்தாராயினும், இப்போது அப்பாத்தியதைக்கு வேண்டப்படும் சாதனமாகிய சமய சிரத்தை சிறிதுமின்றி எவ்வருணத்துக்குரிய முதன்மைக்கு மாத்திரம் முந்திநிற்கின்றார்கள். அந்தோ! இது கலிகால வலிமை போலும்! இவர்கள் தமது மனதைக் கொள்ளை கொண்டுள லௌகிக வேட்கை மிகுதியால் சமயானுட்டானங்களுட் பலவற்றைக் கைநெகிழ விடுதன் மாத்திரையோடடையாது, அவற்றுட் பலவற்றை வீண்செயல் என்று கண்டிக்கவுந் தொடங்கிக்கொண்டார்கள். ஆலய வழிபாட்டை விக்கிரகவணக்கம் என்றும், கோயில் அர்ச்சகர்களைக் கற்கழுவிகள் என்றும், அனுட்டான செபதபங்களைப் பித்தாட்டங்கள் என்றும் தம்முள்ளே நகைத்துப் பரிகசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டோ! ஆங்கில மாக்கள் தாம் எல்லாம் ஆரியபரம்பரையைச் சார்ந்துளார் என்று தாபிக்கு முகத்தால், இவர்கள் தாமும் அவர்களோடு இனமுறைகொண்டாடக் கருதிப்போலும், திராவிடர்களையும் திராவிட சமயசாத்திரங்களைபும் திராவிட மெய்யடியார்களால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட தேவார திருவாசகங்களையும் அலட்சியஞ் செய்வதிற்றலைப்பட்டு விட்டார்கள். அங்ஙனம் தலைப்பட்டார் ஆங்கில கல்விபயின்றுளார் மாத்திரமல்ல, சமயநெறியை ஒருவாறு அனுட்டித்து வரும் வைதிகர்களுமே இங்ஙனஞ் செய்யத் தலைப்படுவார்கள் என்றால், எமது சமயவலி எவ்வளவுக்குக் குன்றத்தக்கது என்பதை நம்தேசத்தின்கண் அபிமானமுடையார் எவ்வெவரும் ஆத்திரமுற்றுச் சிந்தித்தல் வேண்டும். இவர்கள் திராவிட கிரந்தங் களையும் பரிபாலித்து வந்த சேர சோழ பாண்டியர்கள் காலத்திலே திராவிடாபிமானம் மிகப்பூண்டிருந்தார் என்பது எங்கள் ஆலயங்கலிலே இன்று காறும் நிலைபெற்று விளங்கும் பல விஷயங்களால் இனிது துணியத்தக்கதாக இருக்கின்றது. இப்போது ஆரியபரம் பரயைச்சாதிக்கும் ஆங்கிலசெங்கோல் நிகழ்தல் பற்றித்திராவிடத்தை அலக்ஷியஞ்செய்து ஆரியத்தைப் போற்றத் தோடங்கிக் கொண்டார்கள். இவர்கள் இங்கனஞ் செய்வதைக் கண்ட திராவிடர்கள் கோபாவேசமுற்று ஆரிய தர்மங்களையும் ஆரியசாத்திரங்களையும் இழித் துரைக்குமாறு தூண்டப் பெற்றுவிட்டார்கள். இங்ஙனமே இருதிறத் தாரும் ஒருவர்க்கொருவர் பகைமை சாதித்தலால், ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் பொதுமையில் விளங்குவ தாகிய நமது சமயத்தின் விருத்தி பெரிது துற்பலம் அடைதற்கேதுவாயிற்று.

இக்காலத்திலே இங்கிலிஷ்கல்வியில் தேர்ச்சியுற்ற நமது நாட்டவர் எல்லாம், புண்ணிய பூமியாகிய நமது பரதகண்டத்தின் மாட்சிக்க்குக் காரணங்களாயுள்ளன எமது திவ்விய சமயமும் அந்தச் சமயத் துக்குரிய சாத்திரங்களுமே என்பதைச் சிறிதேனும் சிந்தியாமல், மேலைத்தேசத்தாரது லெளகிக விருத்தியாற் பெரிதும் மருட்டப் பெற்று "ஆங்கோர் பேரின்ப முண்டென்பர் எதனையார்கண்டார்” என்று "நாத்தழும்பேற நாத்திகம் பேசும்'' உலோகாயதர் கொள்கையையே மேற்கொண்டவர்களாய், வௌகிகவிருத்தி ஒன்றே எம்க்கு வேண்டப்படுவதன்றிச் சமயத்தைக் குறித்துச்சிந்திப்பது வீண்செய் கையாம் என்றும், அதுமட்டோ, சமயசிந்தனை எமது லௌகிக விருத்திக்குப் பெருந்தடையாகும் என்றும், ஆதலால் அதை நாம் எத்துணை விரைவில் எமது நாட்டில் நின்று ஓட்டிவிடுதல் கூடுமோ அத்துணை விரைவாக எமது நாடு உயர்வடையும் என்றும் லௌகிகப் பிராந்தி தலைக்கேறப்பெற்று, எமது தேசத்திற்குத் தீர்த்தற்கரிய பெருங்கேடு சூழ்வாராயினர்.

இவர்களெல்லாம் இந்துக்களாகிய நாம் சமயவாயிலாக வன்றி லௌகிகத்திற்றானும் விருத்தியுறுவது கூடா தென்பதைச் சிந்திக்கின்றாரில்லை. ஏனையதேசங்கள் எல்லாம் லௌகிக நாடுகளேயாதலின் அங்குள்ளார் சமயசிந்தனையின்றி லௌகிகத்தின் விருத்தியுறுவது ஒரு வாறு கூடும். புண்ணிய பூமியாகிய இப்பரத கண்டத்திலே வந்து சென்மிக்கும் பாக்கியம் படைத்தவர்கள் சமயத்துறையாலன்றி யாதொரு விருத்தியும் பெறுவது ஒரு சிறிதும் கூடாது. மானுடர் மாத்திரமல்ல, விலங்கினங்கள் தாமும் தத்தமது இயற்கை முறையை யனுசரித்தே விருத்தியுறுதல் வேண்டும். பரதகண்ட வாசிகளாகிய இந்துக்களது இயற்கைத் தருமமே சமய நாட்டமுடையதாய் இருக்கும் போது, அந்த நாட்டத்தைப்புறந்தந்து இவர்கண் விருத்தியுறுமாறு சிறிதும் வாய்க்கமாட்டாதென்னும் இந்த உண்மையைக் காணவொட்டாது நமது நாட்டாருட்பலரை மேலைத் தேசாபிமானம் கிரகணித்து விட்டது. ஆன்மார்த்தத்திலே கருத்தில்லாமல், லௌகிகத்திற்றானே தமது கருத்து முழுவதையும் செலுத்துவ துண்டெனில், மேலைத் தேசவாசிகள் தாமும் அவலமுற்றழிய வேண்டிவரும் என்பது இப்போது அத்தேசத்திலே நிகழும் “பாரத” யுத்தத்திலிருந்து நாம்தெளிவுற விளங்கிக் கொள்ளலாம். எமது பரதகண்டத்திலே துவாபரயுகத்தில் நடந்த யுத்தத்தைப் பாரதயுத்தமென்பார். அது பாரை அதஞ் செய்ததில்லை. இப்போது நிகழும் யுத்தமே பாரை அதம் செய்வதாகலின் இதனையே “பாரத” யுத்தமெனத்தகும். மேலைத்தேசத்திலே கடவுட் பத்தியும் சமய சிந்தனையும் இல்லாமைபற்றியே இந்த யுத்தம் நிகழ்வதாயிற்றென்பது மானுட தர்மத்தை நுணுகி ஆராய்வார்க் கெல்லாம் இனிது புலப்படும். இதுவே மேலைத்தேசத்தின் லௌகிகவிருத்தி யால் விளைந்தவிளைவு. இந்த விளைவையே பரதகண்டவாசிகள் தாமும் பெறுதல் வேண்டுமென்று பெருமோகங்கொண்டு, தமக்குப் பிதிரார்ச்சிதமாகக் கிடைத்த சமய நாட்டத்தைப் பரீத்தியாகஞ் செய்துவிடப் பார்க்கிறார்கள். எவ்வெவரும் தத்தமது சமயத்தின் வழி ஒழுகிக் கடவுட்பத்தி செய்தாலன்றி, அவர்கள் லௌகிகங்களிற்றானும் உண்மையான விருத்தியுறுதல் கூடாதென்பதையும், ஏனைத் தேசத்தவர் கள் அவ்விருத்தியை ஒருசிறிது படைத்தாலும்; புண்ணியபூமியாகிய இப்பரதகண்டவாசிகள் சமயபத்தி யுடையராய்ச் சமயாசாரத்தைப் பாதுகாத்தன்றி ஒரு சற்றும் விருத்தியுறுவது கூடாதென்பதையும், இவர்கள் எல்லாம் சமயப்பற்றை இழந்து லௌகிகத்திற்றமது கருத்து முழுதையும் செலுத்தினது பற்றியே முன்னொருகாலத்தில் தமது மேன்மைகளை எல்லாம் இழக்கும் குடியாயிற்றென்பதையும் நம்மவர்கள் ஒருபோதும் மறக்கலாகாது, இந்த உண்மையை நமது தேசத்திலே எல்லாச்சனங்களது மனதிலும் அழுத்தமுறுமாறு செய்ய வேண்டியது. சமய விஷயத்திற் சிரத்தை கொண்டிருக்கும் இந்த மகாசமாஜத்தார் அனைவர்க்கும் பொருத்தகடனாம்.

இங்ஙனம்,
S. சபாரத்தின முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴
             

No comments:

Post a Comment