Monday, May 4, 2020



அன்பு.

அன்பென்பது ஒரு பொருள் காரணமாகப் பிறிதொன்றற்கு உளதாம் உள்ள நிகழ்ச்சி. இஃது. உலகத்துள்ள நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளுமென்னும் இருபாலனவற்றுள் பின்னதன் பால் நிகழ்வதாம். நிலையியற் பொருளென்பன பெயர்ந்து செல்லும் ஆற்ற லுடையவன்றித் தாந் தோன்றிய நிலைக்களத்தவாம்; அவை, புல், பூடு, மரம், மலை முதலாயின. இயங்கியற் பொருளென்பன எறும்பு முதல் யானையீறாகக் கிடந்த விலங்கினத்தவும், கொதுகு, , சிட்டு முதல் பருந்தீறாகக் கிடந்த புள்ளினத்தவும், கோற்புழுமுதல் பாம்பீறாகக் கிடந்த ஊர்ந்து செல்லினத்தவும், கயல் முதற் சுறவிறாகக் கிட ந்த நீர்வாழினத்தவும், குரக்கு முதல் மக்களீறாகக் கிடந்த பகுத்தறியி னத்தவுமென ஐந்து பகுதியவாம். மறித்தும் இவ்வன்பு இம்மைக்கேயுரியதுஉம், மறுமைக்கேயுரியதூஉம், இம்மை மறுமை யிரண்டற்குமுரியதூஉமெனும் வகையான் முத்திறத்ததாம். மக்களொழித் தொ ழிந்த இயங்கியற் பொருளாவன வெல்லாம் இம்மை யன்பு செய்தற் குரியன, மக்களுள்ளுங் குரங்குப் பிறப்பினீங்கிப் புதிதாய் வந்த ஒரு சாரார் இம்பை யன்பே செலுத்துவர்; இவர் மக்கட் பிறப்பினருட்கடையாயா ரெனப்படுவர்; தலையாயாரென்பார் மலங்கழன்று அறிவுச் சுடர்கொளுவி இறைவன் பாற்செலுத்தும் மறுமையன்பொன்றேயுடையார்; இடையாயாரெனப்படும் எம்போல்வாரே இம்மை மறுமை யென்னும் இரண்டினும் அன்புடையா ரெனப்படுவர். மக்களொழித் தொழிந்த இயங்கியற் பொருளாவன வெல்லாம் தாய், தந்தை, மனைவி, கொழுநன், மக்கள் கிளையென்னும் பிறப்புரிமையால் இயல்பில் அன்புடையவாய் ஒன்றற் கொன்று வேண்டுவன விரும்பித் தேடியளித்துப் போதுவவன்றி, ''இறைவனுளனென்றும் "அவனை யாம் வழுத்தற்பால" மென்றும் உணர்ச்சியுடையவாய் மறுமையன்பு செலுத்துந்தகைமையல்ல. மக்களுட்டலையாவார் இவ்வுலகம் அழிந்து போந்தன்மைத் தென்றும், அவ்வாறழியும் அதன்பால் அன்பு வைத்தல் பயனுடைத்தன்றென்றும் அதனை வெறுத்து, நிலைபேறுடைய இறைவன்பால் மறுமையன்பொன்றே செலுத்தம் பெருந்த கையாளர். இடையாவாரே "ஆற்றிலொருகால் சேற்றிலொருகால்''  என்று பெரியாருரைத்த உரைக்கிணங்க இம்மை, மறுமை இரண்டினும் அன்புவைத் துடையார். இம்மை, மறுமை யன்பிரண்டும் மற்றும் ஒரு வகையாற் பொதுவுஞ் சிறப்புமென இரண்டு பெற்றியவாம். இம்மைப் பொதுவன் பென்பது உறவினர் மாட்டும் உற்றார் மாட்டும் பிறர்மாட்டும் ஒரு தன்மைத்தாய் நிகழ்வது, இம்மைச் சிறப்பன்பெ ன்பது யாவர் மாட்டும் ஒரு தன்மைப்படப் பரந்து சேறலின்றி இம்மைப் பொருளாவனவற்றுள் யாதானுமொன்றன்பால் சிறந்து நிகழ்வது; மது தன்னு பிர் மேற்றானும், உடல் மேற்றானும், மக்கள் மேற்றானும், மனைவி மேற்றானும் ஒன்றன்பால் உறுமாற்றில் வைத்துக் கண்டுகொள்க. மறுமைப் பொதுவன் பென்பது எச்சமயிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுட் பொதுத்தன்மைகளான ''தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாகல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், வரம்பிலின்பமுடைமை, வரம்பிலாற்றலுடைமை, பேரருளுடைமை" முதலாயினவற்றையுடைய பொருளெதுவோ அது கடவுளென்று மாத்திரையே யுணர்ந்து மற்றொன்றானும் அப்பொருளைத் தாம் வேறுபடுத்தாது அதன் பாலன்புறுத்தல், மறுமைச் சிறப்பன்பென்பது, பொதுவன்பாற் பயனின்றென்றுணர்ந்து முற்கூறிய பொது விலக்கணங்களையுடைய பழம் பொருட்கு வடிவு, குணம், பெயர் முதலாயின கூட்டியதன்பாலன் புறைத்தல். நடுவுநிலைமையோடு உண்மைநெறியான் நோக்குவார்க்குப் பல்வேறு வகைத்தாய்ப் பிரிவும் அன்பு ஒரு பொருட்கட் சிறப்பாகவே யுறைக்குமன்றிப் பொதுவகையான் நிகழ்தலிலதென்பதூஉம் அவ்வாறு நிகழினும் அது அன்பெனும் பெயர்க்குரித்தாகாதென்பதூஉம் இனிது விளங்கும். இது பற்றியன்றே, பல்வகைச் சமயிகளும் பொது விலக்கணங்களை யேற்றுக்கொள்ளினும் அந்நெறியே நில்லாது தத்தமக்கு அன்பு இனிது செல்லும் வழியாற் சிறப்பிலக்கணங்களுங் கூறிக்கொண்டு அப்பொருளை வழிபடுவாராயினர். இப்பரிச்றியாதார் பல்வகைச் சமயங்களையும் இகழ்ந்து சமயங்கடந்த நிலையில் தாம் இருப்பதாக எண்ணித் தருக்கிக் களிப்பர். அவ்வாறு கூறுவார் தாமும் நுண்ணிதாக அளந்தறிவரேல் தம் அன்பு பொது வகையால் நிகழா தென்பதும் சிறப்புவகையால் நிகழுமென்பதும் இனிதின் அறி ந்துகொள்வரென்க. எனவே, ஒரு சமயத்தையும் தழுவாது கடவுளை வழிபடு தற்கு ஒருவராலும் இசையாதென்பதும், அவ்வாறு கூறுவார் கூற்று யாம் ஒரு நெறியானுமின்றித் தில்லையம்பலம் போதும்" என்பார் - அரியவுரையோ டினப்பட்டுப் போலிப்படு பென்ப தும் தெரிய விளங்கும், ஈண்டுரைத்துப் போந்தவற்றால் அன்பினி'லக்கணம் இனிது விளங்குதலாலும், உலகத்துப் பரந்து பட்டுக்கிடக் கும் பல்வகைச் சமயங்களுள் எதன். வழித்தாகச் சிறப்பன்பு செலு த்தற் பாலதென்பதும் எச்சமயத்தான் வீடுபேறுகை வரப்பெறு மென்பதும் அறிந்து கோடல் எடுத்தபொருளோ டியை புடைத்தா யிருத்தலாலும் அவ்வச் சமயக் கடவுள ரிலக்கணங்களை யாராயவே அவை யினிது விளங்குமென்பது.

அன்பு செலுத்தப்படுவார்.

பன்முகச் சமயநெறியாளராலும் தத்தங்கடவுட்குக் கூறப்படும் பொதுவும் சிறப்புமாம் இலக்கணங்களுள் எச்சமயத்தார் தந்தலைவற்குக் கூறும் இலக்கணம் அளவையோடிடை புடைத்தாமென்பதை நோக்குவார்க்குச் சைவசமயமே அங்ஙனமாமென்பது இனி து விளங்கும். இதையுணர்ந்தே பெரியோரும் "சைவநெறியேயுய்யுநெறி", சைவ சமயமே சமய்ம்", சைவத்தின்மேற் சமயம் வேறில்லை'' என்றற்றொடக்கத்த உரைகளால் உண்மை வெளிப்படுத்தியருளினார்கள். இதைப் பல்வகைச் சமயங்களையும் எடுத்துக்காட்டி விளக்கின் மிகவிரிந்தோடு மாதலால், ஈண்டுப் பொதுச் சிறப்பிலக்கணங்களிற் சிலவற்றை யாராய்வாம். பொது விலக்கணங்களுள் இரண்டொன்று காட்டவே ஏனையவு மடங்கும். அவற்றுள், தூயவுடம்பினனாதல், முற்றும் உணர்தல் என்லும் இரண்டு பொது விலக்கணங்களாலும் முதற்பொருளையளந்தறிதும், கடவுளெனும் பொருள் இல்விரண்டிலக்கணங்களுக்கும் இலக்காயிருத்தல் வேண்டுமென்பது யாவரும் ஒப்புக்கொண்டதன்றே ! தூயவு டம்புடைத்தாத லென்பது, எழுவகைப்பிறப்புள் ஒன்றிற் பிறவாமை யும் பின்னர் இறவாமையுமாம். முற்று முணர்தல் என்பது, ஒரு பொருளாயும், அப்பொருளினுள்ளாயும், அதற்குப் புறம்பாயும் நிறைந்து நின்று அவற்றிற்கு வேண்டுவனவற்றையறிந்தாங்கறிதல். இவ்விரண்டிலக்கணங்களும் இல்லாத பொருள்யாது அதுவே உலகியற் பொருளாம். பாஞ்சராத்திரம் முதலாகக்கிடந்த புறச்சமயிகள் அனை வரும் தத்தங் கடவுளர் பிறந்தாரிறந்தா ரென்றுதாமே கூறுதலானும், சைவசம்பிகள் மட்டும் தம்மிறைவன் பிறந்தானிறந்தானென்று கூறாமையானும் சைவமொழித் தொழிந்த சமயிகள் வழிபடுங் கடவுளரெல்லாம் பிறந்திறக்குந் தன்மையரான மக்களே யென்பது பெறுதும், அற்றன்று, அக்கடவுளரெல்லாம் தம்மடியாரைக் காப்பாற்றும் பொருட்டுப் பிறந்தாரென்று அவர் கதைகளிற் 'கூறப்படுதலால் நீயிர் கூறியது பொருந்தாதாம் பிறவெனின்; - நன்று கூறினாய், அவர் "வரம்பிலாற்றலுடைய' கடவுளராயின் தாம் விரும்பியாங்கு இடருறாது பல்வேறு வடிவுகோடல் சாலுமாகவும், அல்குல்வாய்ப்பட்டுப் பிறந்திறத்தலென்னையோவென்பது. முக்கட்பெருமான் சிறுத்தொண்டர் முதலிய அடியார் பொருட்டுத்தாம் வேண்டும் வடிவுடையராய் வந்தமை காண்க, அல்குல் வாய்ப்பட்டுப் பிறத்தல் குற்றமுடைத்தெனின் யாண்டும் நிறைந்திருக்கும் இறைவன் ஆண்டில்லையெனப்பட்டு வழுவாமெனின்; - அற்றேல், அவ்வடியார் துயர் தீர்த்தற் கருவிப்பொருளினும் அவன் இருத்தல் பெறப்படு தலின் ஆண்டிருந் தே அவற்றை யியக்கிப் பயன் விளைத்தல் சாலுமாகவும் பிறந்திறக்க வேண்டிய தென்னையோ வென்பது. அன்றியும், கடவுட்டன்மையை நிறுவும் இலக்கணங்களை ஒட்டியறியாது, அடியார்க்காக எம்மிறைவன் பிறந்தானென்றொரு சமயிகூற அதுபோலவே பிறிதொரு சமயியும் கூற அவற்றை ஏற்கின் உலகிற்கு ஒரு முதற் கடவுள் என்பது போய்ப் பலர் கூறும் பலரையுங் கடவுளெனக் கொள்ளும் அனேகேஸ்வர வாதப் போலியாய் முடியுமெனக் கூறி மறுக்க. ஆதலினன்றே, பிறப் பிறப்பெய்தாமையைச் சிறந்த இலக்கணமாகக் கொண்டு முக்கண்ணனுக்கே கடவுட்டன்மை கதித்தலை'எல்லார் பிறப்பு மிறப்பு மியற் பாவலர் தம், சொல்லாற் றெளிந்தே கஞ்சோணேசர் - இல்லிற், பிறந்த கதையுங்கேளேம் பேருலகில் - வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலேம்'' என்று ஆன்றோர் விளக்கி உண்மை தெளித்தார்கள். பிறப் பெய்தியாற்குத் தன்வயத்தனாத லின்மையிற்றான் பிறர் வயத்தனாய் ஐந்தவத்தையானும் உணர்வு திரிதலிற் செயற்கை யுணர்வினனாய், வரம்புப்பட்ட மெய்யுடனியைதலின் முற்றுணர் விலனாய், பலவகைப் பற்றுடையனாதலின் பாசங்களையு முடையனாய், இடையிடையே பலதுன்பமெய்தலின் வரம்பில் துன்பமுடையவனாய், வெகுளியாதி முக்குற்ற மெய்தலின் அருளிலனாய், தன்னினும் வலியுடையானிருத்தலின் ஆற்றலிலனாய் மக்கட்டன்மை யெய்துதலின் அவரெல்லாங் கட வளராகா ரென்சி. இதன்றியும், வைகையடைக்க மண்சுமந்த ஞான்று வழுதி தன்கைக்கோலால் புடைத்த அடி "தார் மேனின்றிலங்குபுயவ ழுதி மேலுந் தன்மனை மங்கையர் மேலுமமைச்சர்மேலு, மார்மேலுஞ் சென்று பொருஞ்சேனை மேலுமயன்மேலு மான்மேலு மறவோர் மேலும். தேர்மேல் வெம்பகன்மேலு மதியின் மேலுஞ் சிறந்துள விந்திரன் மேலுந் தேவர்மேலும், பார்மேலுங் கடன்மேலு மரங்கண்மேலும் பட்டதரன் மெய்யிலடி பட்டபோதே'' என்றவாறு போலவும் அருசுனன் வில்லாலடித்த அடி ''வேதமடி யுண்டன விரிந்த பல வாகம விதங்களடி யுண்டன வொரைம், பூதமடியுண்டன விநாழிகை முதற்புகல் செய்பொழுதொடு சலிப்பில் பொருளின், பேதமடி யுண் டன பிறப்பிலிறப்பிலி பிறங்கலாசன் றன்மகளார், நாதனமலன் சமர வேட வடிவங்கொடு நரன் கையடியண்டபொழுதே''  என்றவாறு போலவும் இருமுறை யாண்டும்பட்டு முக்கட்பெருமான் நிறைவை விளக்கிய போலப் பிறகடவுளர் கதைகளில் அங்ஙனங் கூறப்படாமையால் அவரெல்லாம் கடவுளராதலியாண்டைய தென்க. கறைமிடற்றண்ணலே கடவுளென்பதைப் பொது விலக்கணத்தானளந்து காட்டி நிறுவினாம், இனிச் சிறப்பிலக்கணத்துட் சிலவற்றானும் அங்ஙனே அளந்துரைப்பாம்.

முக்கண் ணுடைமையுஞ் செக்கர்ச் சடையும்
மதிபொதி முடியு நதிவளர் சென்னியும்
விடைகடா அய்ச் செல்லும் மிடலுங் கடல்படு
நஞ்சு நிறுத்திய களமும் எஞ்சிய
இடையுடை படவால் கெழுமிய புடையும்
அன்னவுள் விழிக்குடை மானுந் துன்னிய
மழுவுங் கொழுந்துடை எழுநா மேனியும்
தமருகக் கையுந் தழல்கலி கையும்
அஞ்சலென் கையும் எஞ்சா வரந்தரு
பஞ்சின் மெல்லிய பல்விரற் கையும்
ஊன்றிய சுழலுந் தூக்கிய வடியும்
தேன்றுளி கொன்றையும் ஊன்றொடு தலையும்
எற்புச் சட்டகம் முத்தலைச் சூலம்
உட்குறு தலைப்பிணை பெட்புறத் தாங்கலும்
கரியுரி போர்த்த விரிவறு பெருமையும்
அரவரைக் கசைத்த ஆண்மையும் அகல்விசும்
பனை தரு முடுக்குலங் கடுப்பச் செறிவுறு
புள்ளிப் புலித்தோல் போற்றிய மருங்கும்
கள்ளப் பாசங் கழித்தலி னின்பத்
தெள்ளமிழ் தருத்தலில் அரன்சிவ னெனும்பேர்
கொள்ள லும் பிறவுங் கோனிவ னெனவே
விரித்துரை சிறப்புக் குறிக ளாமெனத்
தெரித்துரை செய்குவர் தெள்ளறி வோரே,

என்றிக் கூறியவடையாளங்களனைத்தையும் ஒருங்கே கூறப்புகின் வரம்பின்றி விரியுமாதலின் ஈண்டுச் சிலவற்றைத் தந்து காட்டி யேனையவற்றைச் சமய நேர்ந்துழிவிரித்துரைப்பாம். உலகத்தார்க் கொழுக்கம் நிகழ்விக்கும் ஒளிதரும் பொருள்கள், ஞாயிறு, திங்கள், தீயென்னும் மூன்றுமேயாம். இம்மூன்றையும் சைவசமயிகளைப் போலவே தத்தங் கடவுளருக்குங் கண்களாகச் சொல்வார் வேறு பிறருளராயினும், அவ்வாறு தாஞ்சொல்வதற்கு இதுகாறும் அவர் மெய்ச்சான்று ஒன்றேனும் அக்கதைகளின் றெடுத்துக் கூறக்கண்டிலம்; அன்றி முக்கணான் எனப் பெயர் கூறியாதல் தங்கடவுளையழைக்கக் கேட்டிலம். இதனால், அவர் கடவுளருக்கு அவர் வாய்மொழிபோலவே இறைமை தலைப்பட்டிலது. முக்கட் பெருமானுக்கு அப்பெயர் வாய்த்த வாய்மையன்றியும் அவனது மூன்று கண்களுமே ஞாயிறு திங்கள் தீ என்பதற்கு உமை கண் புதைத்த ஞான்று நிகழ்ந்த நிகழ்ச்சியே கரியாய துணர்க. இத்தகைய கதை ஒன்று பிறர் புராணங்களில் காணப்பட்டிலது. அவ்வாறிருந்தால் நாம் அதைச் சென்னிமேற்கொண்டு வழுத்துவாம். நஞ்சு நிறுத்திய களம் அடியார் பொருட்டு அவர்க்கு வருந்துன்பங்களைத் தான் தன்னகத் தடக்கி அவர்க்குப் பேரின்ப மளித்தலை விளக்கும். பாசத்தை பரித்தலில் அரன் எனுந்திருப்பெயரும், அவ்வாறரித்த மாத்திரையினமையாது பேரின்பத்தையும் உடன் ஈந்து துய்ப் பித்தலின் சிவனெனுந் திருப்பெயரும் உடையவா போலப் பிறருக் கித்தகைய பெயர்களில்; அவ்வாறவர் புரிபவராயின் இடுகுறியாய் இப் பெயர்களெய்து தற்கோர் இடையீடின்மையறிக.

மேற்கூறிப் போந்த பகுதிகளால் அன்பு இன்னதன்மைத்தென்றும் அவ்வன்பு செலுத்தப் படுந்தன்மைக் கடவுள் சைவ சமயத்திற் கூறப்படும் சிவபெருமானே யென்றுங் காட்டப்பட்டது,

சுவாமிவேதாசலம்.

சித்தாந்தம் – 1914 ௵ - டிசம்பர் ௴


No comments:

Post a Comment