Saturday, May 9, 2020



கணம்புல்ல நாயனாரது திருப்பதி
[நாவலர் - ந. மு. வேங்கடசாமி நாட்டார்]

செந்தமிழ்ச் செல்வி" சிலம்பு - 21, பால் - 9 - ல் என் கெழுதகை நண்பர் திருவாளர் - T. V. சதாசிவ பண்டாரத்தா ரவர்கள் கணம்புல்ல நாயனாரது திருப்பதி' என்னும் பொருள் பற்றி எழுதியிருப்பதனைக் கண்ணுற்றேன். பண்டாரத்தாரவர்கள் எழுதுங் கட்டுரைகளை விருப்புடன் படித்துப் புதியன கண்டு, “பழந்தனம் - இழந்தன பரைத்தவரை யொப்ப' மகிழும் வழக்க முடையேனாகலின், அப்பெற்றியே இதனை விருப்புடன் படித்தேன். ஆயின், இதன்கண், அவர்கள் துணிபு என் கருத்துக்கு இயைய வில்லை. அதனை வெளியிடுவது கடனெனக் கருதி இதனை யெழுதுகின்றேன்.

நம்பியாண்டார் நம்பிகள் தாமியற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் 'நன்னகராய இருக்குவே ளூர் தனில்............. எந்தை தந்தைபிரான் எங்கணம் புல்லனே' எனவும், 'இருக்கு வேளூர் மன் இடங்கழியே'' எனவும் கணம்புல்லர் பதியையும், இடங்கழியார் பதியையும் இருக்குவேளூர் என்று குறித்துள்ளார். சேக்கிழார் பெருமான் கணம்புல்லர் பதியைக் குறிக்குமிடத்தில்,

பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப் பால்பிறங்கு பொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல் விளைக்கும்
இருக்குவேளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி''  

எனவும் இடங்கழியார் பதியைக் குறிக்குமிடத்தில்,

"மாதவிச் சூழல்,
குருகுறங்கும் கோனாட்டுக் கொடிநகரங் கொடும் பாளூர்''

எனவும் கூறியுள்ளார். மற்றும் அவர் இடங்கழியாரைப்பற்றி,

அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத் தரசளித்து
மன்னிய பொன்னம்பலத்து மணி முகட்டிற் பாக்கொங்கின்
பன்னு தலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த
பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்"

என்று கூறியுள்ளார்.

நம்பியாண்டார் நம்பிகள் கூறியனகொண்டு அப்பதிகள் இன்னவெனத் துணிதல் அருமையே. "ஒரே பெயருடைய பல ஊர்களிருப்பின் அவற்றுள் சிவனடியார் பிறந்தருளிய பேறு பெற்றது யாது என்பதைச் சேக்கிழாரடிகள் மிகத் தெளிவாக விளக்கி யிருப்பது பெரிதும் பாராட்டற்பாலதாகும்'' என்று பண்டாரத்தாரவர்கள் கூறியிருப்பது யாவரும் போற்றத்தக்க உண்மையாகும். சேக்கிழாரடிகளின் வரலாற்றாராய்ச்சியின் தெளிவுக்கும், அவர் தாம் கண்ட உண்மைகளை மயக்கற விளக்கி யருளுதற்கும் இவ்வூர்களைப் பற்றி அவர் கூறியனவே அமையுஞ் சான்றாகும்.

இனி, பண்டாரத்தாரவர்கள் மேலே காட்டிய செய்யுட்களை எடுத்து ஆராய்ந்து, கொடும்பாளூரே இருக்குவேளூராம் எனவும், அதுவே கணம்புல்லர், இடங்கழியார் என்னும் இரு பெரியாரும் பிறந்த பதியாமெனவும் துணிந்துள்ளார்கள். இக்காலத்தில் இருக்கு வேளூர் எனப் பெயரிய ஊர் யாண்டும் காணப்படவில்லையெனக் கொண்டதும், நம்பிகள் அந்தாதியில் இரண்டு பதிகட்கும் இருக்கு வேளூர் என்றே பெயர் கூறியிருப்பதும், பெரிய புராணத்திலே கொடும்பாளூர் அரசராகிய இடங்கழியாரை "அந்நகரத்தினி லிருக்கு வேளிர் குலத்தரசளித்தார்' என்பதனால் கொடும்பாளூருக்கு இருக்குவேளூர் என்னும் பெயருண்மை பெறப்படுதலும் அத் துணிவிற்குக் காரணங்களாகவுள்ளன. வேறு தடையில்வழி இம்முடிபே பொருத்தமுடைத்தாகும்.

இருக்குவேளூர் வடவெள்ளாற்றுத் தென்கரைப்பால் உள்ளதாகத் திருத்தொண்டர் புராணங் கூறுவது இதற்குத் தடையாகின்றது. இதனையும் அவர்கள் எடுத்தாராய்ந்து, 'சிதம்பரத்திற் கண்மையிலுள்ள வெள்ளாறு சேக்கிழாரடிகள் காலத்தில் நிவா என வழங்கி வந்ததென்பது பெரியபுராணப் பாடல்களால் நன்குணரப்படுதலின், அவ்வடிகள் கணம்புல்ல நாயனார் புராணத்திற் கூறியுள்ள வெள்ளாறு வேறு ஓர் ஆறாக இருத்தல் வேண்டுமென்பது திண்ணம்? எனவும், 'புதுக்கோட்டை இராச்சியத்திலுள்ள குடுமியாண் மலையில் காணப்படும் கல் வெட்டுக்களால் அவ்வூர்க் சருகில் வெள்ளாறு என்ற பெயருடைய ஆறு ஒன்று ஓடுகின்றது என்பது புலனாகின்றது' எனவும் கூறி, அதன் மருங்கிலுள்ளதே இருக்குவேளூர் என முடிவு கட்டியுள்ளார்கள். ஈண்டும் வெள்ளாற்றுக்குக் கொடுத்துள்ள வடக்கு என்னும் அடை தடையாகத் தோன்றுதலின், அதனையும் ''பாண்டி மண்டலத்து வடவெள்ளாற்றுக் கூற்றத்து ஆத்தம்பூரில்'' என்னும் கல்வெட்டு ஆதரவுகொண்டு'அது பாண்டி நாட்டிற்கு வடக்கு வெல்லையாக இருத்தல்பற்றி அதனை முற்காலத்தில் வடவெள்ளாறு என்று வழங்கியுள்ளனர்' எனக் கூறி மாற்றியுள்ளார்கள். இங்ஙனம் ஒவ்வொன்றும் அவர்களுடைய சிறந்த ஆராய்ச்சியைப் புலப்படுத்தி இன்புறுத்துகின்றன. எனினும், இன்னும் இன்றியமையாத சில செய்திகளை நன்கு சிந்தியாது விட்டமையால் முடிவு தவறியது எனக் கருதுகின்றேன்.

சேக்கிழார் கணம்புல்லர் தோன்றிய பதியை 'வட வெள்ளாற்றுத் தென்கரைப்பால்....... இருக்குவேளூர்' என்றும், இடங்கழியார் தோன்றிய பதியைக் 'கோனாட்டுக் கொடிநகரங் கொடும் பாளூர்' என்றும் கூறியுள்ளார். இரண்டு பதிகளும் வேறு வேறாம் என்பதனை நன்கு உணர்ந்த தெளிவினாலேயே அவற்றுள் ஒன்றிருக்குமிடத்தை ஆற்றின் சார்பாலும், மற்றொன்றிருக்குமிடத்தை நாட்டின் சார்பாலும் விளக்கியுள்ளார். அன்றியும் வடவெள்ளாறு, தென்கரை என்னுந் தொடர்களை ஊன்றி நோக்கின், தென்கரை வடகரையின் வேறாயதுபோல் வடவெள்ளாறு தென்வெள்ளாற் றின் வேறாயதெனவே பொருள் கொள்ளக் கிடக்கும். கல்வெட்டிலுள்ள 'பாண்டி மண்டலத்து வடவெள்ளாற்றுக் கூற்றம் என்பதில் வடக்கு என்பது கூற்றத்தின் அடையாகலாம். ஆண்டு வெள்ளாற்றுக்கே அடையாயினும் இழுக்கின்று. அது கொண்டே அதற்கு வடவெள்ளாறு என்று பெயர் கூறுவது அமைவதன்று.

இனி, சிதம்பரத்திற்கு வடக்கிலே ஓடும் ஆறு குறிப்பிட்ட சில இடங்களில் நிவா என்னும் பெயரால் திருமுறைகளில் வழங்கப் பட்டிருப்பினும் அதற்கு வெள்ளாறு என்னும் பெயர் பண்டே உண்டென்பது தேற்றம். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென் பெண்ணையை அடுத்துப் பெரிய ஆறாகவுள்ளது வடவெள்ளாறே. மணிமுத்தா நதியும் கூடலையாற்றூரில் வந்து அதனுடன் கலந்து விடுகின்றது. கூடலையாற்றூர் என்னும் பெயரின் காரணமும் அதுவே. அருணகிரியார் திருக்கூடலையாற்றூர்த் திருப்புகழில்,

கூட்டுத்தித் தேங்கிய வெளாறு தரளாறு திகழ்
நாட்டிலுரைச் சேர்ந்தமயி லாவளிதெய் வானையொடு
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில்வாழ்குமர தம்பிரானே"

எனக் கூறியிருப்பது ஈண்டு அறியற்பாலது.

இனி, பிறிதோருண்மையை அறியின் இவ்வாராய்ச்சி யெல்லாம் இதற்கு மிகையாதல் பெறப்படும். அவ்வுண்மையாவது பதுக்கோட்டைச் சீமையில் ஓடும் வெள்ளாற்றின் தென்கரையில் கொடும்பாளூர் இல்லையென்பதே. வெள்ளாறு புதுக்கோட்டைக்குத் தெற்கில் நான்கு கல் தொலைவில் உள்ளது. கொடும்பாளூா புதுக்கோட்டைக்கு வடமேற்கில் இருபத்தைந்து கல் தொலைவில் உள்ளது. வெள்ளாற்றிக்கு வடக்கே இருபத்து நான்கு காத வட்டகையுள்ள நிலப்பகுதி கோனாடு எனப்படும். கோனாட்டின் வட பகுதியில் கொடும்பாளூர் உள்ளது. சேக்கிழார் பெருமான் வட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் இருக்குவேளூர் உள்ளதாகக் கூறியிருத்தலின் அவ்வியாறும், ஊரும் இவற்றின் வேறாயினவென்பது போதரும். சோணாட்டின் தெற்கெல்லையாக ஒரு வெள்ளாறு அமைந்திருத்தல் போல, வடவெல்லையாக அமைந்துள்ள பிறிதொரு வெள்ளாறே ஈண்டு வடவெள்ளாறு எனப்பட்டதென்க. இவ் வாற்றால் சேக்கிழாரடிகளும் அதனை வெள்ளாறு என ஆண்டுள்ளமை பெற்றாம். வடவெள்ளாற்றின் தென் மருங்கில் பச்சைமலைப் பக்கத்திலே கணம்புல்லர் பிறந்த வூராகிய இருக்குவேளூர் உள்ளதெனத் தெரிகின்றது. சேக்கிழாரடிகள் ஒவ்வோரிடத்தையும் நேரிற் சென்று கண்டாங்கு இயற்கை பிறழாமல் வருணனை களையும் அமைத்திருப்பது இறும்பூது விளைப்பதாகும். அவர் இப்பதியினை வளமிக்க மலைச்சாரலில் இருப்பதென்பது புலப்படக் கூறியிருக்கும் செய்யுளைப் படித்து இன்புறுவோமாக.


திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கை நெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவேளுரென்ப திவ்வுலகில் விளங்குபதி

என் இனிய நண்பர் திரு. பண்டாரத்தாரவர்கள் யான் எழுதிய இச்சிற்றுரை, அவர்கள் கருத்திற்கு மாறாயினும், உண்மை யொடு பொருந்தியதாயின் அதற்கு உவத்தலே செய்வார்கள் என்னும் துணிபுடையேன். என் உள்ளமும் அவர்களால் நன்கு அறியப்பட்ட தொன்றே.

[குறிப்பு: - இக்கட்டுரை. திரு. நாட்டாரவர்கள் சிவபதமடைவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது.]

சித்தாந்தம் – 1944 ௵ - மே ௴


No comments:

Post a Comment