Saturday, May 9, 2020



கருணை மலை
ந. வீ. செயராமன், எம். ஏ.,
விரிவுரையாளர், தமிழாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.

பஞ்சபூதத் தலங்களுள் தீ வடிவாக இறைவன் எழுந்தருளியிருப்பது திருவண்ணாமலை என்னும் திருப்பதி யாகும். அண்ணாமலையானையும், உண்ணாமுலையம்மையையும் நெஞ்சம் நெக்குருகப்பாடி மகிழ்ந்தவர் துறைமங்கலம் சிவப் பிரகாசர் என்னும் நிறைமொழியறிஞர். மின்னவிர் சடிலக் கற்றையும், அருள் கூர் விழிகளும், திருமுகத்தழகும், கன்ன விறிரடோள் நான்கும் ஈரடியுமாக இருக்கும் அண்ணாமலையானின் அருளுருவைக் கண்டு தித்திக்கும் செந்தமிழில் பக்திப்பாமாலை சூட்டி மகிழ்ந்தார் சிவப்பிரகாசர். வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் நிறைந்து, உள்ளத்தைச் சிவன்பால் செலுத்திய இச்சிவநேசச் செல்வர் இயற்றிய சோணசைலமாலை நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டது; சோண சைலனே கைலைநாயகனே எனச்செய்யுள் தோறும் மகுடம் பெற்று விளங்குகின்றது.

அண்ணாமலையான் அக்னி வடிவாய் எழுந்தருளியுள்ள திருவண்ணாமலையில் கார்த்திகைவிழா பெருஞ்சிறப்புடையது. "கார்த்திகை விளக்குத் தடமுடியிலங்க வளர்ந் தெழுஞ் சோண சைல''  நாதனை,

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவ ரகத்திரு ளனைத்துஞ்  சால
சாய்த்து நின் றெழுந்து விளங்குறுஞ் சோணம் இமே
சைலனே கைலைநா யகனே

என்று சிவப்பிரகாசர் பாடிப்பரவுகின்றார். 'வாழ்த்தவாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை மாமலர்த் தூவித்து திப்பதனைச் சிவப்பிரகாசர் பாடுகின்றார்,   

கண்கணிற் பர்ந்து கண்டுவப் பனவே –
கைகணிற் றொழுபவே செவிகள்  
பண்கணிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே
பதநினை வலம்புரி வனவே  

இப்பகுதி அப்பர் பெருமானின் திரு அங்கமாலைக் கருத்தை அடியொற்றி அமைந்ததாகும். பொறிகளைச் சென்ற விடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின் பால் உய்க்க எண்ணிய சிவப்பிரகாசர்,.
நின்னையே நோக்கி விடதகட் புலனும்  
நின்னையே நினைக்கும் நெஞ்சகமும் படி
நின்னையே துதிக்கும் நாவும் .......
அருள்க என்று இறைவனை வேண்டுகின்றார்.  

நாளும் இன்னிசையால் நற்றமிழ் வளர்த்த ஞானசம் பந்தப் பெருமானிடத்தும், சூலைநோய்தந்து ஆட் கொள்ளப்பட்ட ஆளுடை அரசரிடத்தும் சிவப்பிரகாசருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு, 'செம்மை பெறவெடுத்த திருத்தோடுடைய செவியனெனும் மெய்மை மொழித் திருப்பதிகம் பாடி வேயுறு தோளிபங்கனை விடைமீது கண்டு - அம்மையின் அருளமுத ஞானப்பால் உண்டு சிவஞானம் பெற்ற இளங்கன்று சம்பந்தர். 'அரனோடு வந்து அம்மை யளித்த வள்ளப் பாலைப் புரை தீரவுண்ட' சம்பந்தரைப் பற்றி –

ஊனமில் காழி தன்னுள் உயர்ஞானசம் பந்தர்க் கன்று   
ஞானம் அருள் புரிந்தான் நண்ணு மூர் நனிபள்ளியதே
என்று நம்பியாரூசர் பாடுகின்றார்.

இனி, மாதர்ப் பிறைக் கண்ணியானை, தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரனைக் – கூற்றாயினவாறு விலக்க கிலீர்என்று போற்றித் தொழுது உடலுறு கோய் தீர்ந் கவர் நாவுக்காசர். அறம் தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை ஆரம்பக் குண்டரோடயர்த்து நாளும் மறந்தும் அரன் திருவடிகள் நினைபமாட்டாத நிலையில், நாவுக்கரசருக்கு இடருறு நோய் தந்து மீட்டுக் கொண்டார் இறைவன். பக்தி மணங்கமழும் இச்சிவநேசச் செல்வர்களிடத்து ஈடுபாடு கொண்ட சிவப்பிரகாசர் அவர்களை முன்னிறுத்தி இறைவனை வேண்டுகின்ற பகுதி சிறையின்பம் நல்கும் பெற்றியுடையதாய்த் திகழ்கின்றது. 

யாவுமா முமையுண் ணமலை முலைப்பால் –
லீந்துபாடச்செயா யெனினும்
மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும்
விடுத்துநிற் பாடுமா றருளாய்

சிவப்பிரகாசரின் இச்செந்தமிழ்க்கவிதை சிந்தை முழுதும் இன்பம் விளைக்கின்றது.

சிவப்பிரகாசர் சோண சைல நாதரை பிறவி தருமாறு வேண்டுகின்றார், ஆம்! பிறவிதான் வேண்டுமென்று பாடுகின்றார். ஆனால் அப்பிறவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் தெரியுமா? “மதுரம் பெருகும் தமிழ்ச் சொன் மலர் நினக்கணியும் பிறவியே வேண்டுவன் றமியேன்” என்று அவர் கூறுகின்றார். குமானேயெனவும் மதனவேளெனவும் புன்றொழில் மனிதரைப் புகழ்ந்து, பாழ்க்கிறைக்கும் புலமை தீர்த்து, இறைவன் திருவடிமலர்க்கு அன்பு செயும் மெய்த் தொண்டர் கணத் தினுள் எனை விடுப்பாய் என இறைவனை நெக்குருக வேண்டும் பகுதியில் சிவப்பிரகாசரின் சீரிய இறையன்பினைத் தெற்றெனக் காண்கின்றோம்.

சிவப்பிரகாசர் செந்தமிழ்ப் புலமை மிக்கவர். கற்பனை யலங்காரக் கவின் ஒளிர, கற்கண்டு கனிதேனென்னப் பொற்பமை நற்கவி சொல்லும் வல்லமை பெற்றவர் சிவப்பிரகாசர்.

தவம்பழுத்த துறவுடையான் தமிழ் பழுத்த உளம் முடையான் தாரணிக்கே
சிவம் பழுத்த உண் மையினைப் பத்தி நயம் பல நாட்டித் தெளிவு கூட்டி
நவம் பழுத்த தமிழ் நூல்கள் நல்குசிவப் பிரகாச நற்றவத்தோன்

என்று சிவப்பிரகாசரின் தமிழ்ப் புலமையைத் தக்கோர் பாராட்டுவர். சிவப்பிரகாசர் சொல்லும் கவியெல்லாம் சொற் சிலம்பம் ஆடும்,

 மொழிதரு கருணை மலையெனும் பெயான்
மொழியொரீஇ வேற்றுமைத் தொகையைத்  
தழுவுற நின்று வளர்ந்திடுஞ் சோண
சைலனே கைலைநா யகனே!

என்ற செய்யுளில் சிவப்பிரகாசரின் புலமை நலம் பொதிந்து கிடக்கக் காண்கின்றோம். இறைவருக்கு இங்கு இருமலைகளை உரிமையாக்கிக் காட்டுகின்றார் ஆசிரியர். கருணைமலை ஒன்று! திருவண்ணாமலை மற்றொன்று, அண்ணாமலையானாய் – திருவண்ணாமலையில் தீவடிவினனாக எழுந்தருளுமுன் கருணைமலையானாகக் காட்சி தந்தான் இறைவன். அதாவது கருணையாகிய மலையையுடையானாக அல்லது மலைபோலுங் கருணையுடையானாக இருந்தான். கருணை மலை என்னும் தொடர் . கருணை மலையாகிய இறைவனைக் குறிப்பதால் அன்மொழித் தொகையாக இங்கு விளங்குகின்றது. பின், அண்ணாமலை யானாய் எழுந்தருளியபின் கருணையையுடையமலை என்று வேற்றுமைத் தொகையாக அத்தொடர் மாறுகின்றது. இதனையே கருணைமலை என்றும் பெயர் அன்மொழியொரீஇ வேற்றுமைத் தொகையைத் தழுவுற நின்ற இறைவன் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுகின்றார்.

அணிநலமும் பொருள் வளமும் நிறைந்து பக்திமணங் கமழும் இத்தெய்வப்பனுவலைக் கற்று மகிழ்தல் வேண்டும். விடையேறும் பெம்மானை விடமுண்ட கண்டனைக் கண்டு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க, சிவப்பிரகாசர் பாடிய இச்செந்தமிழ்ப் பனுவலைத் தொட்டாலும் கை மணக்கும்; மாசுவைத்தாலும் வாய் இனிக்கும்; நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும்.  

சித்தாந்தம் – 1964 ௵ - மே ௴


No comments:

Post a Comment