Saturday, May 9, 2020



ஆஸ்திக நாஸ்திக சம்பாணை

இது, நிகழும் 1919௵ ஏப்ரல்மீ 27உ நடைபெற்ற சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்து 20 - வது சபா வருடப் பர்த்தி விழாவில் சைவபாடசாலை மாணவர்கள் சம்பாவிக்க வேண்டி, இப்பத்திரிகாசிரியரால் இயற்றப்பட்டது. இது பாடசாலைகள் தோறும் அவசியம் கற்பிக் கற்பாலதொன்றாம்.

சுந்தரம்: - அடா, கந்தா, சைவப்பழமே, எப்போது பழுத்து விட்டாய்? கழுத்தில் ஒரு கொட்டை கட்டிக் கொண்டாய். உடம்பெல்லாம் சாம்பல் பூசிக்கொண்டாய். எந்த மூடனிடத்தில் இந்த வேடம் போடக் கற்றுக் கொண்டாய்?

கந்தன்: - அப்பா, சுந்தரம். நீ இம்மாதிரி பேசுவது நன்றாயில்லை. நீ இப்படியே பல பெரியோர்கள் மனம் புண்படப் பேசித் திரிகிறாய்; இது உனக்குத் தகாது.

சுந்தரம்: - நான் எந்தப் பெரியவாள் மனதைப் புண்படுத்தினேன்? நீ சொல்லும் பெரியவாள் எவ்வளவு பெரிய மரங்களை அறுக்கும்?

கந்தன்: - அப்பா, நீ இப்படிப் பேசுவது ஒரு சாமர்த்தியம் என்று நினைக்கிறாய். நான் பெரியவர்கள் என்றால் நீ பெரியவாள் என்று சொல்லி ஏளனஞ் செய்கிறாய். இது ஒரு சாமர்த்தியமா? ஆனால் நான் சொல்லும் பெரியவர்கள் பெரியவாள்களே. அவ்வாள்கள் சாதாரணமான மரங்களை அறுப்பதில்லை. ஐம்புலப்பகையை யறுத்தெறியும். குதர்க்கம் பேசும் துட்டநாவைத் துண்டித்துவிடும்.

சுந்தரம்: - ஏதடா. புலையனாய்விட்டாயே !

கந்தன்: - அப்பா, உன்னோடு பேச நேரிடும் புலவனும் புலையனாவது அதிசயமா !

சுந்தரம்: - என்னை இறக்காமல் இறக்குகின்றாயே. இப்படிச் சாதுரிமாய்ப் பேசுவதற்கு யாரிடத்தில் கற்றுக் கொண்டாய்? இது இருக்கட்டும். இப்போது நீ எங்கே மெத்த அவசரமாய்ப் போகிறாய்?

கந்தன்: - நான் கோயிலுக்குப் போகிறேன்.

சுந்தரம்: - கோயிலில் உனக்கென்ன உத்தியோகம்?.

கந்தன்: - கோயிலில், கடவுளை வழிபடப்போகின்றேன். அங்கே எனக்கு வேறொரு உத்தியோகம் இல்லை.

சுந்தரம்: - கடவுள் ஒருவர் உண்டு என்பதை நன்றாய் தெரிந்துகொண்டாயா?
கந்தன்: - தெரிந்து கொண்டபடியாற்றான் கோயிலுக்குப் போகிறேன். இல்லாவிட்டால் கோயிலுக்குப் போவேனோ. நீயே தெரிந்துகொள்ளலாமே.

சுந்தரம்: - நான் நெடுங்காலமாக அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை. நீ எப்படியப்பா அவரைக் கண்டுபிடித்தாய்! எனக்கும் அவரைக் கொஞ்சங் காட்டமாட்டாயா 7.

கந்தன்: - அப்பா, நீ உண்மையாய் கடவுளையறிய விரும்பி ஆராய்ச்சி செய்தால் உனக்குச் சொல்லத்தகும். நீயும் அறிந்துகொள்வாய். நி குதர்க்கம் செய்யவேண்டி உன் மனம் போனபடி யெல்லாம் கேள்விகளைக் கேட்டால், உனக்குச் சொல்வதினால் யாதுபயனுண்டாம். ஒருபயனும் உண்டாகாது. ஆதலால் என்னை விட்டுவிடு. நான் சீக்கிரம் போகவேண்டும்.

சுந்தரம்: - அப்பா கந்தசாமி, இனி நான் உன்னிடம் குதர்க்கம் செய்யமாட்டேன். கடவுள் உண்டு என்பதை மாத்திரம் எனக்கு விளக்குவாயானால் நீ ஊருக்கெல்லாம் கந்தசாமியானால் எனக்குச் சொந்தசாமியாயிருப்பாய்,

கந்தன்: - கடவுள் என்னும் பதத்திற்கு என்ன பொருள் என்பதை யறிந்துகொண்டாயா?

சுந்தரம்: -  அதுவும் எனக்குத் தெரியாது. நீ தான் சொல்ல வேண்டும்?

கந்தன்: - கடவுள் என்பதற்குக் கடந்தது என்பது பொருள். நாம் எதையும் மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கரணங்களால் அறிகிறோம். இவைகளைக் கடந்தது எதுவோ, அதாவது இம்மூன்றினாலும் அறியப்படாதது எதுவோ. அதுவே கடவுள் எனப்படும். அம்மாதிரியான பொருளை நான் உனக்கு எதைக்கொண்டு தெரிவிக்கக்கூடும். நீ எதைக்கொண்டு அறியக்கூடும்.

சுந்தரம்: - ஆனால் அப்பொருளை நீ மாத்திரம் எப்படி அறிந்து கொண்டாய்?.

கந்தன்: - உன் மனதைக் குதர்க்கத்தில் செலுத்தாமல் நான் சொல்வதைக் கவனமாய்க்கேள். ஒரு பொருளை மூன்று வழியாய் அறியலாம். அவ்வழிகள் சுருதி, யுக்தி, பிரத்தியட்சம் என்னப்படும். அவற்றுள் சுருதி என்பது பெரியோர்கள் தாம் அனுபவித்தறிந்தவைகளைப் பிறரும் அறிந்து கொள்ளும்படி எழுதிவைத்த சாஸ்திரங்கள். உலகத்தைச் சுற்றி யாத்திரை செய்தவர்கள் இவ்வுலகம் பந்தைப் போல் உருண்டைவடிவாயிருக்கிறதென்று அறிந்து, அதை நூலின் மூலமாக மற்றவர்களுக்கும் விளக்கினார்கள். மற்றவர்களும் அந்நூலைப்படித்து அவர்கள் கூறியபடி யாத்திரைசெய்து, இவ்வுலகம் உருண்டைவடிவமாயிருத்தலை பிரத்தியட்சமாக,அறிகிறார்கள். அவர்கள் தாம் கண்ட அனுபவத்தைப் பிறர்க்குச் சொல்லியிரா விட்டால் மற்றவர்கள் இவ்வுலகம் தட்டையாயிருக்கிறதென்றே எண்ணிக் கொண்டிருப்பார்கள். இப்படியே ஆதியிலே பலர் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே கடவுளை யறிந்து இன்புற்ற பெரியோர்கள் தாம் அனுபவித்த இன்பத்தை நம் போலவரும் அனுபவிக்க வேண்டி வேதமுதலிய நூல்களை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். அவைகளைப் பத்தியோடும் சிரத்தையோடும் படித்து அவைகளிற் சொல்லியபடி நடந்தால் கடவுளை யறியலாம். அல்லாமலும், தூரத்தே புகையைக் கண்ட போது அவ்விடத்தில் நெருப்பு உண்டென்று யுக்தியால் அறிவதுபோல், இவ்வுலகத்தின் அமைப்பையும் தோற்றக் கேடுகளையுங்கொண்டு இதைப் படைத்த பேரறிவுடைய கடவுள் ஒருவர் உண்டென்று நிச்சயிக்கலாம்.

சுந்தரம்: - ஆனால் பிரத்தியட்சப் பிரமாணத்தால் கடவுளை யறியக் கூடாதோ?

கந்தன்: - பிரத்தியட்சமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி, என்னும் ஜம்பொறிகளைக் கொண்டு சத்தம், ஸ்பரி சம், ரூபம், ரசம், கந்தம் என்பவைகளையறிதல். கடவுள் இவ்வைந்தில் ஒன்றாயிருந்தால் அவரைப் பிரத்தியட்சமாக அறியலாம். அவர் இந்த ஐந்திற்கும் வேறானவர் எனில், அவரை நாம் எப்படி ஐம்பொறிகளைக்கொண்டு அறியலாம்.

சுந்தரம்: - ஆனால் அவருடைய சொரூபம் தான் யாது? அதை அறிவிப்பது எப்படி?,

கந்தன்: - ஆதியும் நடுவுமுடிவுமில்லாத ஆனந்த மயமும் ஞானமயமுமாயிருப்பது அவருடைய சொரூபம், அது ஞானிகளின் அநுபவ மாத்திரமாயிருப்பதேயன்றி எவர்களாலும் பிறர்க்கு எடுத்துச் சொல்லுந் தரத்ததன்று, உலகத்தில் அவரவர்கள் அனுபவிக்கும் இன்பதுன்பங்களே பிறர்க்கு எடுத்துச்சொல்லக் கூடியனவாயில்லை எனில், பேரின்ப ரூபமாகிய கடவுளின் சொரூபத்தை எப்படி விளக்கக்கூடும். ஞானிகளும் அப்பொருளைப் பெற்று இன்பம் அனுபவிப் பார்களேயன்றி வாயினாற் சொல்ல மாட்டார்கள்.

சு     ந்தரம்: - ஆனால் அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதை விட்டுக் கோயிலுக்குப் போய் கல்லை வணங்குவதேன்?

கந்தன்: - பெரியோர்கள் சொன்னதை நம்பி நடந்தால் கடவுளை யடைந்து பேரின்பம் பெறலாம் என்று நான் உனக்கு முன்னமே சொன்னேன். அதை இதற்குள் மறந்து விட்டாய் போலும். கோயில் வழிபாடானது கடவுளை யடைவதற்கு மிகவும் அவசியமான மார்க்கம். பசுவின் பால் அதின் தேக முழுவதும் வியாபித்திருந்தாலும் அதின் முலையின் வழியாய் அதை எப்படிப் பெறுகின்றோமோ, அப்படியே கடவுள் எங்கும் வியாபித்திருந்தாலும் கோயில் வழிபாட்டினால் அவரருளை எளிதில் பெறலாம். கோயில் வழிபாட்டின் மூலமாகவே நம்முன்னோர்களெல்லாம் கடவுளை அறிந்து உய்ந்தார்கள். நாம் சமுத்திரத்தைப் பூசிக்க வேண்டுமானால், ஏதேனும் ஒரு துறையிலிருந்து பூசித்தால் அச்சமுத்திரத்தைப் பூசித்தவராவோம். அப்படியே எங்கும் நிறைந்த கடவுளை நாம் ஏதேனும் ஓரிடத்தில் பூசித்தால் அவரையே பூசித்தவர்களாவோம்.

சுந்தரம்: - நாம் கடவுளைப் பூசித்தால் அவருக்கேதேனும் இலாபமுண்டா?

கந்தன்: - அவருக்கு யாதொரு இலாபமும் இல்லை. அவர் விருப்பு வெறுப்பற்றவர், இன்பதுன்பம் இல்லாதவர், நாம் துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் பெறும் பொருட்டே அவரை வணங்குவது.

சுந்தரம்: - அப்படியானால், நான் இப்போது உன்னுடன் கோயிலுக்கு வந்து தேங்காய் உடைத்துக் கும்பிடு போட்டால் என் துன்பமெல்லாம் போய் இன்பம் உண்டாய் விடுமா?

கந்தன்: - நீ நீரிற்குமிழி போல் நிலையற்ற இவ்வுலக இன்பத்தை யனுபவிப்பதற்கு இரவும் பகலும் எவ்வளவு பாடுபடுகிறாய்! அதில் ஆயிரத்தில் ஒரு கூறளவாயினும் பாடு படாமலும், அன்பில்லாமலும் தேங்காய் உடைத்துக் கும்பிடு போட்டால் துன்பம் நீங்கிப் பேரின்பம் உண்டாய் விடுமா. ஒருபோதும் உண்டாகாது.

சுந்தரம்: - ஆனால் அந்தக் கடவுளையடைந்து இன்பம் பெறுதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

கந்தன்: - சுத்தமான மனதோடு அவரை வணங்குதல் வேண்டும்.

சுந்தரம்: - மனம் எப்படியிருந்தால் சுத்தமாகும்?.

கந்தன்: - மனம் வாக்கு காயம் என்னும் மூன்று கருவிகளுள் முதலில் தேகம் சுத்தமாயிருத்தல் வேண்டும். குளித்தல் சுத்தமான உடையைத் தரித்தல், சுத்தபோஜனம் செய்தல், சுத்தமான வேலைகளைச் செய்தல், முகமலர்ந்திருத்தல் முதலியவற்றால் சரீர சுத்தியுண்டாம். பொய் சொல்லாமை. கடுஞ்சொல் பேசாமை, கோள் சொல்லாமை, பயனில் சொல்பேசாமை, இன்சொல் கூறல் முதலியவற்றால் வாக் குச்சுத்தம் உண்டாம். ஐம்புலன்களின் வழிச்செல்லாமல் சாந்தம், கருணை முதலிய பெருங்குணங்களை வகித்தலால் மனம் பரிசுத்தமாகும். மனம் சுத்தமாதற்கு வாக்குச்சுத்தமும் காயச்சுத்தமும் அத்தியாவசியமாம். சரீரம், வாக்கு, மனம் என்னும் மூன்று கருவிகளைச் சுத்தஞ் செய்யும் மார்க்கங்கள் முறையே சரியை கிரியை யோகம் என்று சொல்லப்படும். ஆலயத்தொண்டினாலும் பூதிருத்திராக்க முதலிய சிவசின்னங்களைத் தரித்தலினாலும் காயச் சுத்தம் உண்டாம். சிவபூசை முதலியவற்றால் வாக்குச் சுத்த முண்டாம். யோகம் செய்து ஐம்புலன்களை யடக்கி மனதை கடவுளிடத்தில் நிலைபெறச் செய்தலினால் மனச் சுத்தம் உண்டாம். இம்மூன்று சுத்தமும் உண்டானால் மெய்ஞ்ஞானம் உண்டாம். மெய்ஞ்ஞானத்தின் பயனாக கடவுளிடத்தில் மெய்யன்பு உண்டாகும். மெய்யன்பு வளருந்தோறும் பேரின்பம் விளையும். இதுதான் கடவுளை யடையும் வழி. இவ்வழிகளில் நீ நடப்பாயானால் கடவுளை யடைந்து எல்லையற்ற யின்பக்கடலில் ஆழ்ந்திருப்பாய்.

சுந்தரம்: - அப்பா. நீ சொல்லுவது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாணிக்கமாய் இருக்கிறது. இதுவரையில் நான் உன்னையடைந்து இவைகளைத் தெரிந்து கொள்ளாமைக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். இது முதல் நீயே எனக்குக் குருவாயிருந்து என்னைச் சன்மார்க்கத்தில் செலுத்த வேண்டும். (சுந்தரம் தரையில் வீழ்ந்து கந்தசாமியை நமஸ்கரிக்கின்றான்)

கந்தன்: - அப்பா, எழுந்திரு. உனக்கு நற்காலம் பிறந்து விட்டது. இனி நீயும் சிவசின்னங்களைத் தரித்துச் சிவாலய சேலையும். பெரியோர் வழிபாடும் விடாமற்செய். நமது அருமையினும் அரிய அமிழ் தினும் இனிய தேவாரப் பதிகங்கள் சில சொல்லுகிறேன்; கேள்'

'எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
யுவராதே யவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
யிவர்தேவ ரவர்தேவ சென்று சொல்லி
யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே''.

இத்திருப்பதிகத்தால் சிவசின்னங்கள் தரித்தவர்களை யாவர் சிவனாகவே கருதி வழிபடுகின்றார்களோ அவர்கள் மனதில் சிவபெருமான் குடி கொண்டிருப்பாரென்று வேதம் கூறுகின்றது.

நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் "
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்று
மாரூரா வென்றென்றே யலறா நில்லே''

இத்திருபதிகத்தால் என்றும் நிலைபேற்ற இன்பம் பெற வேண்டுவோர் சிவாலயத் தொண்டு செய்தல் வேண்டும் என்று சொல்லுகிறது. ஸ்ரீமத் தாயுமான சுவாமிகளும்,

"அன்பர்பணி செய்யவெனை யாளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவர் செய்தும் பராபரமே''
என்றருளிச் செய்தனர். இதனால் பெரியோர் வழிபாட்டின் பெருமை யுணரலாகும்.

சுந்தரம்: - என் அண்ணலே, நான் இதுவரையில் சிவசின்னங்களைத் தரிக்கவில்லை, சிவாலயசேவை செய்ததில்லை, பெரியோரைப் பணிந்ததில்லை. நான் படித்த பாடசாலைகளுள் ஒன்றிலாவது இவைகளை எனக்குக் கற்பித்தாரில்லை. ஆத லால் நான் இவைகளைத் தவித்துப் பாவியானேன். இனி நான் உய்யுமாறு கருணை கூர்ந்து தேவரே எனக்குச் சிவ சின்னதாரணம் செய்தருளி என்னை யடிமையாக்கிக் கொள்ளல் வேண்டும். (மறுபடியும் சுந்தரம் தரையில் வீழ்ந்து வணங்குகிறான்)

கந்தன்: - அப்படியே சிவசின்ன தாரணம் செய்கிறேன், அப்பா எழுந்திரு. இப்போது நான் உனக்குச்செய்த உபதேசமானது வீணாகாமல் உடனே பயன்பட்டமைக்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். இனி உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்னைக்கேள். எனக்குத் தெரிந்த வரையில் சொல்லுகிறேன். தெரியாவிட்டால் தெரிந்த பெரியோர்களை யடுத்துத் தெரிந்துகொள்வோம்.

சுந்தரம்: - சுவாமி, இப்படிப் போதிப்பாரில்லாமல் என் போன்றார் பலர் வீணே கெட்டுப்போகிறார்களே, இவர்கள் கெடாதபடி பாடசாலைகள் வைத்துச் சிறுவர்களுக்கு நம்மவர்கள் சமயபோதனை செய்யலாகாதா?.

கந்தன்: - இருக்கம் ஆதிமூல முதலியாரவர்கள் 'ஞான மணிவிளக்கு' என்னும் ஒரு நூலையச்சிட்டிருக்கிறார்கள்; அதைப் படித்தே எனக்குத் தமிழ்ப் பாஷையில் ஆர்வமும் கடவுட் பக்தியும் உண்டாயிற்று.

சுந்தரம்: - அப்படியானால் அந்நூலைக் கல்விச் சாலைகடோறும் கற்பிப்பது அவசிய மல்லவா?

கந்தன்: - அதற்கு என்ன சந்தேகம். வெகுநேரமாய் விட்டது, போய் இன்னொரு சமயம் வாரும்.

சுந்தரம்: - நமஸ்காரம்; போய்வருகிறேன் சுவாமி.

சித்தாந்தம் – 1942 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment