Saturday, May 9, 2020



இத்தை விளைத்தல் மலம்

ந. ரா. முருகவேள்

['சைவ சித்தாந்த சாத்திர வகுப்புக் குழு'வின் சார்பில், மே மாதம் 18,19, 20 தேதிகளில் திரு. வி. க. மணர் மண்டபத்தில் உண்மை விளக்கம் பற்றி நிகழ்த்திய சொற் பொழிவுகளின் ஒருபகுதி.]

உண்மை விளக்கம்' என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலில், மிகவும் சிறந்த முதன்மையான செய்யுட்களுள் ஒன்றாகத் திகழ்வது, முத்தி நிலையைப் பற்றிக் கூறும் பின்வரும் செய்யுள் ஆகும்:

"முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்த அனு போகத்தைத் துய்த்தல் அணு; - மெத்தவே
இன்பங் கொடுத்தல் இறை; இத்தை விளைத்தல் மலம்;
அன்புடனே கண்டு கொள்! அப்பா''

இச் செய்யுளில் அறிஞர்களிடையே பெரிதும் மலை வினையுண்டாக்கும் பகுதியாக விளங்குவது, 'இத்தை விளைத்தல் மலம்' என்னும் பகுதியாகும். அதுபற்றி ஈண்டுச் சிறிது காண்போம்.

சைவசித்தாந்தம் சற்காரியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனை முன்னரே கண்டோம். இதனைச் சிவப்பிரகாசத்தில் ''தாவில் சற்காரியத்தாய் மலை வறும் உணர்வு'' என்று உமாபதி சிவமும் குறிப்பிட்டருளியுள்ளார்.

சற்காரிய வாதமாவது ''உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே உள்ளது'' என்னும் கொள்கையாகும். இதன்படி இருக்கின்ற பொருள்கள் எதுவும் அழிய மாட்டா (Indestructibility of matter) என்பது தெளிவு. அதுபற்றி முத்திநிலையினும் முப்பொருள்களும் உண்டு என்பது தேற்றம்.

"கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக்
கட்டியை ஒத்திருப்பன் அந்த முத்தியினிற் கலந்தே"

என்றாற் போல, முத்திநிலையில் ஆன்மாவுக்கு இன்பம் தரும் பதி ஆகிய இறைவன் உளன்.

''உம்பர்பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன்
உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே''
என்றபடி, சிவானுபவ நுகர்ச்சிக்கு உரிமையுடையதாகிய பசு என்னும் உயிரும் முத்தி நிலையில் உள்ளது. முத்தி நிலையில் 'உயிர் தன்னியல்பு கெட்டழிந்து சிவத்தை அணைந்து நிற்கும் எனச் சிவசங்கிராந்த வாதி முதலிய சமயவாதிகள் கூறுவர். 'கெட்டு அணையும்' என்னும் அவர்தம் கூற்றை நான்கு வகையாகப் பாகுபாடு செய்து கொண்டு,

".... சிவத்தை அணைந் தொன்றாய்
நின்ற துயிர் கெட்டதென்னில், கெட்டதணை வின்றாம்;
நின்றதேல், கேடில்லை; அணைந்து கெட்ட தென்னில்,
பொன்றினதேன்? முத்தியினைப் பெற்றவரார்? புகல் நீ.
பொன்றுகையே முத்தி எனில், புருடன் நித்தன் அன்றாம்”

என அவர் தம் கூற்றை மறுத்துரைத்து, முத்தி நிலையிலும் உயிர் அழியாது உள்ளமையினைச் சிவஞான சித்தியார் தெளிவித் திருத்தல் காணலாம். இனி மூன்றாவதாகிய பாசத்துள், மாயை கன்மங்கள் இடையே வந்தவை (ஆகந்துகம்) ஆதலின், தனுகரணாதிகள் நீங்கிய அளவில் மாயை கன்மங்கள் நீங்கியொழிகின்றன. எஞ்சி நிற்கும் ஆணவமலம் பற்றியே நாம் ஈண்டு ஆராய்தல் வேண்டும்.

பேதவாதிகள் மாயை கன்மங்களைப் போல் ஆணவ மலமும் அழிந்து விடும்; அழியாக்கால் ஆன்மாவுக்கு ஞானமும் அதன் பயனாகிய முத்தியும் நிகழமாட்டா என்று கூறுவர். பாடாணவாதிகள் குணம் அழியீற்குணியும் அழியுமாதலின், உயிர்த் தன்மையாய் அனாதியே உடன் நிற்பதாகிய ஆணவமலம் ஒருபோதும் அழிவதில்லை : அழிந்தால் ஆன்மாவும் அழிந்து விடும் தன்மையதாய் முடியும் என மொழிவர்.

ஆணவம் அழியும் என்றால், ‘உள்ள பொருள் அழியாது' என்னும் சற்காரியவாதக் கொள்கைக்கு முரண்படும். அழியாது என்றால், ஆன்மா ஞானமும் அதன் பயனாகிய முத்தியும் எய்தாதென முடியும்.

"அழிந்திடும் பாசம் என்னில் நித்தம் என் றறைதல் வேண்டா
அழிந்திடா தென்னின் ஞானம் அடைவது கருத வேண்டா''

என்பது சிவப்பிரகாசம் எனவே மருந்தினால் தடுப்புண்ட விடமும், ஒளியின் முன்னர் இருளும், தேற்றாங் கொட்டை யிடப் பெற்ற கலங்கல் நீரும் போல ஆணவ மலமானது தான் மாயாமல், தன் ஆற்றல் மட்டும் மாய்ந்து முத்தி நிலையில் நிற்கும். இவ்வுண்மையினை,

"உரிய மலம் அவுடதத்தால் தடுப்புண்ட விடமும்,
ஒள்ளெரியின் ஒளிமுன்னர் இருளும், தேற்றின்
வருபால் சேர் நீர்மருவு கலங்கலும் போல் ஆகி
மாயாதே தன்சத்தி மாய்ந்து... தேயும்''
எனவரும் சிவஞான சித்தியார் செய்யுள் கொண்டுணரலாம். ஆணவமலம் அழியாமையால் அது நித்தம் என்று கூறும் சற்காரிய வாதத்திற்கும், அதன் சத்தி அழிதலால் ஆன்மா ஞானமும் முத்தியும் அடைதற்கும் நேரும் தடை யொன்றுமில்லை.

அழிந்திடும் சத்தி நித்தம் அழிந்திடா, ஒளியின் முன்னர்
அழிந்திடும் இருளும் நாசம் அடைந்திடா, மிடைந்தி டாவே

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளும் இக்கருத்தை வழிமொழிந்து வலியுறுத்துதல் காணலாம் இவ்வாற்றால் முத்திநிலையில் ஆணவமலம் உண்டென்பது இனிது பெறப்படும்,

இனி, முத்திநிலையிலும் ஆணவமலம் உண்டு என ஓராற்றான் உடன்படினும், தீங்கையே பயக்கும் இயல் பீற்றாய் எல்லாக் கேடுகட்கும் காரணமாகும் ஆணவ மலம், பேரின்பத்தை விளைவிப்பதாக முத்திலையில் மாறுவது எங்ஙனம்? பொருளியல்பு அழிந்தாற் பொருளும் அழியும் அன்றோ? என நம்மனோர்க்கு ஐயம் நிகழ்தல் இயல்பு அது குறித்துப் பலவகையில் அமைவுரைகள் கூறலாம். ஒரு சில வருமாறு:

1. "நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்' என்றாற் போல ஆணவமலத்தால் அடைந்த அளப்பருந் துன்பங்கனால் முத்தி நிலையில் ஆன்மாவுக்குச் சிவானுபவ நுகர்ச்சியின் சிறப்பு மேம்பட்டுத் தோன்றும். துன்புளது எனின் அன்றோ சுகம் உளது?" (கம்பர்) "துன்பம் உற்றவர்க்கு அலால் இன்பம் இல்லை'' (சிந்) என்பனவும் ஈண்டு ணரற்பாலன. திருநாவுக்கரசர் சமண சமயத்தினின்று தாம் மீண்டும் சிவநெறி திரும்புதற்குக் காரணமாய் இருந்தமை பற்றித் தமக்கு ஆற்றொணாத் துன்பம் விளைத்த கொடிய சூலைகோயையும் 'யான் இதற்கு என்ன கைம் மாறு செய்ய வல்லேன்' என நன்றி பாராட்டி மகிழ்ந்து தொழுதனர்.

“பொய்வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில்
சமண் நீ சர் புறத்துறையாம்
அவ்வாழ்குழி யின்கண் விழுந் தெழுமாறு அறியாது
மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
எதிர் செய்குறை என்கொல்? எனத் தொழுவார்''

என இதனைச் சேக்கிழார் பெருமான் திருவாய் மலர்ந் தருளியுள்ளமையும் ஈண்டுச் சிந்திக்கத் தகும். மேலும்,


"ஊர்ந்து வரும் இள ஏறுடை யான்றன் உளத்தருளால்
சார்ந்து சமண் வீட்டுறும் உனக் கேவரும் சைவநலம்!
கூர்ந்து மிளிர் தரும் நாவர சே, நல் குரவு முனம்
சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறும் செல்வமுமே''

எனப் போதரும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடலும் இவ்வுண்மையைச் செவ்விதின் வலியுறுத்தும்.

2. நாம் பிறர்க்கு ஒல்லும் வகையா னெல்லாம் உதவி செய்தல் வேண்டும். உதவி செய்தல் இயலாதொழியின், தீமை செய்யாமலாவது இருத்தல் வேண்டும். நன்டை செய்யாவிட்டாலும், தீமை செய்யாமலாவது இருப்பது ஒருவகையிற் பேருதவியாகக் கொள்ளத் தகும் எனலாம்.

"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''

எனப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் பாடியது போல, இதுகாறும் சிவஞான விளைவுக்குத் தடையாய்த் தீங்கே பயந்து போந்த கொடிய ஆணவமலம், தன் ஆற்றல் அழிந்து யாதொரு கேடும் சூழ்தலின்றிச் செயலற்றிருப்பது தானே, முத்தி நிலையிற் காழில் கனி, போலும் சிவா னுபவம் நுகர ஆன்மாவிற்கு ஒருவகையில் உதவியாகும். இதனை "எதிர்மறை யுதவி" (Negative help) எனக் கூறலாம்.

"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மை யன்றோ இன்றிவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தெல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே''

எனக் கைகேயியின் இரக்கம் இன்மையையும், கம்பர் ஓராற்றால் உலகுக்குப் பேருதவி புரிந்தது போலப் புகழ்ந்து பாடியிருத்தல், எதிர்மறை யுதவிக்கு ஒருவகையில் இனிய எடுத்துக்காட்டு எனலாம்.

3. ஒரு பொருளுக்கு அதன் இயற்கைப் பண்பு என்றுமே மாறாது என்பது சற்காரியவாதம். அதன் படி ஆணவமலத்தின் இயற்கைப் பண்பும் என்றும் மாறு படாது என்பது தெளிவு, அறியாமை விளைவித்தல் ஆணவ மலத்தின் இயல்பு. பெத்த நிலையில் ஆணவமலம் ஆன்மா சிவத்தை அறியாமற் செய்யும், முத்தி நிலையில் அஃது ஆன்மா உலகத்தை அறியாமல் மறைக்கும். சார்ந்ததன் வண்ண மாந்தன்மையாற் பொருள்களை அதுவது வாய் நின்று அனுபவிக்கும் இயல் பிற்றாகிய ஆன்மா, சிவத்தை யன்றி ஏனையவற்றையும் அறியத் தலைப் பட்டுழிச் சிவானுபவ விளைவிற்கு இடையூறாய்க் குறைவுபடும் எனவே ஆணவமலம் முத்தி நிலையில் உலகத்தை அறியாமற் செய்வது. ஆன்மா சிவத்தை முழுதாக நன் கினிது அனுபவித்தற்குத் துணைபுரிவதாகின்றது. அது பற்றியே 'இத்தை விளைத்தல் மலம்' எனக் கூறப்பட்டது.

4. இன்ப நுகர்ச்சிக்கு நுகர்வதும் நுகரப்படுவதும் ஆகிய இரு பொருள்கள் இருத்தல் வேண்டும். அவ்விரு பொருள்கள் தனித்தனியே பிரிந்து நிற்பின் இன்பம் நிக ழாதாகலின், அவை இரண்டறப் பிரிப்பின்றி இயைதலும் வேண்டும். இங்ஙனம் பொருள்கள் ஒருவகையில் இரண் டாயும், பிறி தொருவகையில் ஒன்றாயும் இயைந்து நின்ற வழியே இன்ப நுகர்ச்சி யுண்டாம். அதுபோது 'யான் இதனை நுகர்கின்றேன்' என்னும் தன்னுணர்வு (Self-consciousness, not Egotism) நிகழப் பெற்றால் தான், இன்ப நுகர்ச்சி மேலும் மிகுதிப் பட்டுச் சிறந்தோங்கும்.

"ஆனந்த வெள்ளத் தழுந்தும் ஓர் ஆருயிர் ஈருருக்கொண்டு
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும்; ஐய ! மெய்யே
ஆனந்த வெள்ளத் தறைகழ லோன் அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றா துமுற் றாதிவ் அணி நலமே''

எனவரும் மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக் கோவையார் செய்யுளால், இன்ப நுகர்ச்சிக்கு இருபொருள்கள் இன்றியமையாமையினை இனிது உணரலாம். அம் மணிவாசகர் தாமே பிறிதோர் இடத்தில்,

"சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத் துணிந் திங்ஙனே
நற்பால் வினைத் தெய்வம் தந்தின்று, நான் இவள் ஆம் பகுதிப்
பொற்பு ஆர் அறிவார்? புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற்
கற்பாவிய வரைவாய்க் கடிதோட்ட களவகத்தே''

என அருளிச் செய்திருத்தல் கொண்டு, இன்ப நுகர்ச்சியைத் தலைப்படுதற்கு இருபொருள்கள் தம்முள் ஒன்றி இயைதல் வேண்டும் என்பது தெளியப்படும்.

"செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள்ளகத்த
கழுநீர் மலர் இவள்; யான் அதன் கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுலமே''

எனவரும் திருச்சிற்றம்பலக் கோவையார் செய்யுளால், 'யான் இதனை நுகரப் பெறுகின்றேன்' என்னும் தன்னுணர்வு நிகழப் பெறுதலே, இன்ப நுகர்ச்சியானது மிக்குப் பெருகிச் சிறந்து திகழ்தற்கு ஏற்ற வாயிலாகும் என்பது தெளிவாம்: யான் இதனை நுகரப் பெறுகின்றேன்' என்னும் உணர்வை நிகழச் செய்யும் ஆணவ மலத்தின் ஆற்றல் அதோ நியாமிகாசத்தி எனப்படும். சகல நிலையிற் போல் முத்திநிலையிலும் அச்சத்தி ஓராற்றால் தொழிற்படுகின்றது. ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியை இவ்வாறு விளைவிக்கும் 'அதோ நியாமிகா சத்தி' யுடைமை பற்றியே  'போத்திருத்து வத்தை நிகழ்த்தும் ஆணவம் இயைந்து நின்றே'' எனச் சிவஞான சித்தியார் (170) கூறுவதாயிற்று. 'போத்திருத்துவம்' என்பது போக நுகர்ச்சிக்கு வினைமுதல் ஆகும் தன்மை. இங்ஙனம் முனைப்பை விளைவிக்கும் இயல்புடைய ஆணவமலம் தன்ஆற்றல் அழிந்து, முத்தி நிலையிற்சிவத்தை அனுபவிக்கும் ஆன்மாவிற்கு நான் அனுபவிக்கின்றேன்' என்னும் தன்னுணர்வை மட்டும் விளைவித்துச் சிவானுபவ நுகர்ச்சி மேலோங்கிச் சிறத்தற்குத் துணை நிற்றலின், ''இத்தை விளைத்தல் மலம்" என ஆசிரியர் குறிப்பிட்டார்.

"கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடு துங்காண் அம்மானாய்"

"கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின்கழற்கு அன்பன் ஆக்கினாய்''

எனவரும் திருவாசகத் திருப்பாடல்கள், முனைப்பை விளைவிக்கும் ஆணவமலம், முத்திநிலையில் ஆன்மாவுக்குத் தன்னுணர்வை மட்டுமே நிகழ்த்தியமையும் வகையில், அதன் ஆற்றலைத் தேய்ந்தழியச் செய்தருளும் சிவபிரானின் பெருங் கருணைத் திறத்தினை வியந்து புகழ்ந்ததாகவும் கொள்ளலாம்.

சித்தாந்தம் – 1962 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment