Saturday, May 9, 2020



இரண்டு மணிகள்

(சத்தும் சதசத்தும்)

கொ. நீ. சிங்காரவேலு, M. A.

[திரு. ஜெ. எம். நல்லசாமிப் பிள்ளை இயற்றிய "Studies in Saiva siddhandha” என்ற ஆங்கிலக் கட்டுரைத் தொகுதி நூலிலுள்ள ஒரு கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம்.]

இக்கட்டுரையில் திருமந்திரத்திலுள்ள பின்வரும் இரண்டு பாடல்களை ஆராய்வோம்: -

“பொன்னை        மறைத்தது         பொன்னணி        பூடணம்
பொன்னின்         மறைந்தது         பொன்னணி        பூடணம்
தன்னை            மறைத்தது         தன்கர              ணங்களாம்
தன்னின்           மறைந்தது         தன்கர              ணங்களே.

மரத்தை            மறைத்தது         மாமத              யானை
மரத்தின்           மறைந்தது         மாமத              யானை
பரத்தை            மறைத்தது         பார்முதற்          பூதம்
பரத்தின்            மறைந்தது         பார்முதற்          பூதமே''

இவ்விரண்டு பாக்களும் ஒரே கருத்தைக் கூறுவது போல யிருப்பினும், கூர்ந்து நோக்குழி அவை இரு வேறு கருத்துக்களை விளக்குவது புலனாகும். இவை, ஆன்மாவின் பந்த நிலையையும் முத்தி நிலையையும் விளக்குவ தோடல்லாமல் ஆன்மா, படிப்படியாகத் தத்துவ தரிசனம், ஆன்ம தரிசனம், சிவ அல்லது பரதரிசனம் அடைவதை விளக்குகின்றன.

முதற்பாட்டில் நாம் பார்ப்பது ஒரு பொன்னாலாகிய அணிகலன். அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். பொன்னின் மாற்றைப் பற்றி ஆராயலாம். அல்லது அதன் வேலைப்பாட்டை ஆராயலாம். பொன்னின் மாற்றை ஆராயும் போது அணிகலனின் வேலைப்பாட்டை மறந்து விடுகிறோம். வேலைப்பாட்டை ஆராயும்போது பொன்னை மறந்து விடுகிறோம். ஆனால் இரண்டும் உள் பொருள்களே. அதைப்பற்றி நமக்கு ஐயமில்லை. அணி கலனை வாங்கும் போது இரண்டின் தரங்களையும் ஆராய்ந்தே வாங்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

பின் இரண்டடிகளில் ஆன்மாவிற்கும் பாசத்திற்கும் உள்ள தொடர்பு குறிக்கப்படுகிறது. 'தன்' என்பது ஆன்மாவைக் குறிக்கும், மனிதன் உலகமுகப்பட்டு, தன் கரணங்களிலும், உடம்பிலும், உலகத்திலும் அழுந்தும் போது தன்னை மறக்கிறான். தன்னை நோக்கும் போது உலகத்தை மறக்கிறான். திருமூலர் உலகத்தையோ ஆன்மாவையோ பொய்யென்றோ, வெளித்தோற்ற மென்றோ கூறவில்லை. ஆன்மா பாசத்தில் அழுந்தும் போது தான் மறைந்திருக்கிறது; தன்னையே நோக்கும் போது பாசம் மறைந்து விடுகிறது. ஆன்மா பாசத்தில் அல்லது உலகத்தில் மறைந்திருக்கும் நிலை பந்தநிலை எனப்படும். ஆன்மா தன்னையும் பாசத்தையும் பிரித்துப் பார்க்கும் நிலை தத்துவதரி சனமும் ஆன்ம தரிசனமும் கைவரப்பெற்ற நிலையாகும். இத்தொடர்புகளை உணர்வதின் அடிப்படையில் தான் ஒழுக்கம் என்ற கட்டிடம் எழுப்பப்படும். மனிதன் உல கத்தில் அழுந்த அழுந்த அவன் துன்பத்தில் ஆழ்கிறான். உலகப்பற்றை விட விட அவன் ஆன்மீக வலிமை பெற்று ஒழுக்க நெறியில் தளராது நிற்கிறான்.

ஆன்மா சத்திற்கும் அசத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. ஆகையால் அது சதசத்து (சத் + அசத்து) என்று அழைக்கப்படும். இந்த நுண்ணிய கருத்தை நமக்குத் தெரிந்தவரையில் வேறெந்த தத்துவநூலும் கூற வில்லை. ஆன்மாவின் இவ்விலக்கணத்தை 'ஒழிவிலொடுக்கம்' இயற்றிய கண்ணுடைய வள்ளலார் 'அலி' என்ற பெயரினால் விளக்குகிறார். 'அலி' என்ற சொல்லுக்கு மனஇலக்கணப்படி தனி பால்' கிடையாது. "ஆணுறுப்பு மிகுந்தால் ஆணாகும், பெண்ணுறுப்பு மிகுந்தால் பெண்ணாகும்'' என்னும் இலக்கணப்படி அலி அவன் என்றும் அவள் என்றும் குறிக்கப்படும். இதுபோல ஆன்மாவிற்குத் தனிப்பட்ட குணமில்லை. அசத்தோடு கூடி அசத்தாகவும், சத்தோடு கூடி சத்தாகவுந்தான் நிற்கும். இறைவனும் உலகமும் இல்லையானால் ஆன்மாயில்லை. இக் கருத்தை மெய்கண்டார் இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறார்.

எப்பொருளும் ஆகாயத்தில் ஆதாரமின்றித் தனித்து நிற்க முடியாது. ஆன்மா ஒரு ஊஞ்சலைப் போன்றது என்றார் மெய்கண்டார். ஊஞ்சல் கயிற்றால் மரக்கிளையில் கட்டப்பட்டுள்ளது. ஊஞ்சலுக்கு மரம் ஆதாரமாகவுள்ளது. கயிறு அறுந்தால் நிலத்தின் இழுப்புச் சக்தியால் ஊஞ்சல் தரையில் விழுகின்றது. அதுபோல ஆன்மா மாயைக்கும் இறைவனுக்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அது மலப்பற்றற்றதும் இறைவனைச் சேரும். பழம் முதிர்ந்து பக்குவமடைகின்ற வரையில் மரத்திலிருக்கும். பக்குவப்பட்டதும் மரம் அதை நிறுத்திவைக்க முடியாது. பக்குவப்பட்ட ஆன்மாவாகிய பழம் பாசமாகிய மரத்தை விட்டு இறைவனாகிய நிலத்தை அடைந்தே தீரும். அதுவரையில் நிலத்தின் சாற்றினால் (இறை அருளால்) மரத்தின் மூலம் காய் பழுக்கிறது.

மெய்கண்டார் கூறும் மற்றொரு உதாரணம், அணையால் நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளம். அணை நீங்கின வழி கடலில் சென்று கலத்தல் போல, மாயையால் தடுப்புண்ட ஆன்மா, மாயை அகன்ற வழி இறைவனைச் சேரும் என்பதாகும். இவ்வணையைப் "பற்று" என்றும் கூறுவர். இக் கருத்தையே திருவள்ளுவரும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை, யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
என்று விளக்குகிறார்.

பின்வரும் மணிவாசகர் வாக்கும் இதையே வற்புறுத்தும்:

"சுற்றிய சுற்றத் தொடர்பு அறுப்பான் தொல்புகழே
பற்றி இப் பாசத்தைப் பற்று அறநாம் பற்றுவான்,
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும்காண்; அம்மானாய்"

ஆன்மாவின் இவ்விலக்கணத்தை அறியாது பண்டைய பௌத்தரும், தற்காலத்திய நிரீஸ்வரவாதிகளும் இடர்ப்படுகின்றனர். அவர்கள் ஆன்மாவின் முடிந்த ஆதாரமாகிய இறைவனின் உண்மையை மறுத்து, தங்கள் தத்துவத்தைச் சூன்ய வாதத்தில் முடிக்கின்றனர். பௌத்தர்களுக்கு ஆன்மாவின் பரிபக்குவ நிலைதான் அதன் அறிவு நிலையாகும்.

சைவ சித்தாந்தத்தின்படி ஆன்மா இறைவனோடு கூடியபோது அது உலக உணர்வை விட்டதுமல்லாமல் தன்னுணர்வையும் விட்டு விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா அன்பும் ஆனந்தமுமாகிய அனுபவ நிலையிலேயே நிற்கும்: -

“பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்”
சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம்''  

இவ்வனுபவத்தை மனத்தில் கொண்டு தான் சங்கரர் இறைவன் தவிர வேறொன்றும் இல்லை என்று எண்ணுகிறார். ஆனால் அது உண்மையன்று. இறைவனோடு கலந்த நிலை துரியம் அல்லது பரஅவஸ்தை என்று சொல்லப்படும். இந்நிலையில் உலக உணர்வும் தன்னுணர்வும் இல்லாமற் போனாலும், அவைகளின் இருப்பு அழிந்து போகவில்லை. இக்கருத்தையே திருமூலர் மரத்தை மறைத்தது மாமதயானை' என்று தொடங்கும் மேற் குறித்த இரண்டாம் பாட்டில் விளக்குகிறார்.

இப்பாட்டின் பின்னிரண்டு அடிகளில் இறைவன் உலகத்தால் மறைக்கப் படுகிறான். உலகம் இறைவனால் மறைக்கப்படுகிறது என்கிறார். இரண்டும் எப்பொழுதும் இல்பொருளாக ஆன தில்லை என்பது போதரும்.
மற்றும் தன்னை மறைத்தது தன் கரணங்களாம். தன்னின் மறைந்தது தன் கரணங்களே'' என்றவிடத்து இரண்டு பதார்த்தங்கள், அதாவது, ஆன்மாவும், உலகமும் கூறப்படுகின்றன. இதைப் புரிந்து கொள்வதற்கு வேறு பதார்த்தம் தேவையில்லை. ஆனால் 'பரத்தை மறைத்தது பார் முதற் பூதம், பரத்தின் மறைந்தது பார் முதற் பூதம்'' என்புழி மூன்றாவது பதார்த்தமாகிய ஆன்மா தொக்கு நிற்கின்றது. பரத்தையும் பார் முதற்பூதத்தையும் அனுபவிக்கும் ஆன்மா யில்லையேல் மறைதலுக்கும் மறைத்தலுக்கும் பொருளில்லை. இவ்வடிகளில் சத்தையும் அசத்தையும் கூறியிருந்தாலும், மூன்றாவது பொருளாகிய சதசத்தையும் கூறாமலே குறித்து முப்பொருளுண்மை விளக்கப் பெற்றிருக்கிறது. மேற்குறித்த கருத்துக்களே சிவஞான போதத்தின் ஏழாஞ் சூத்திரத்தில் விளக்கப் பெற்றிருக்கின்றன.

இறைவன் ஒளி எங்கும் நிறைந்த பேரொளி. நம் ஒளிகளெல்லாம், துண்டுபட்ட, அவன் ஒளியைப் பிரதி பலிக்கும் ஒளிகள். அவ்வொலியின்றி நாம், இருளில் சிந்திய வைரத் துண்டுகள் போல்வோம். பந்த நிலையில், சாணை பிடிக்காத வைரங்கள் போன்று அவனுடைய ஒளியைப் பிரதிபலிக்க முடியாதவர்களாக இருப்போம். நாம் ரத்தினப் பளிங்குகள். இறைவன் அவைகளில் பிரகாசிக்கும் ஒளி. “வெண் பளிங்கின் உட்பதித்த சோதியனே!'' பளிங்கைப் போன்று நாம் ஒளியில் ஒளியாகவும் இருளில் இருளாகவும் உள்ளோம். யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்ற பந்தமறும் பளிங்கனையம் யாம். "இறைவன் யாவற்றையும் தந்நிறமாக்கும் மரகதமணி போன்றவன்.

"எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்தும்
தானே யாகிய தயாபரன் எம்மிறை"

பளிங்கு சார்ந்ததன் வண்ண மாகும் மரகதம் சார்ந்து தன் வண்ணமாக்கும். ஆன்மா பளிங்கு போன்றது. இறைவன் மரகதம் போன்றவன். இம்மரகத ஒளிதான் உமை. இறைவி தன் பசுமை ஒளியால் நம்மை ஆட் வாகொள்கின்றாள். பாநயமும், தத்துவ நயமும் நிறைந்த பின்வரும் குமரகுருபரர் பாடலோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்.

“பண்ணாறு கிளிமொழிப் பாவைநின் திருமேனி
பாசொளி விரிப்பவந்தண்,
பவளக் கொடிக்காமர் பச்சிளங் கொடியதாய்,
பருமுத்தம் மரகதமதாய்,
தண்ணாறு மல்லற் றுறைசிறை யனங்களி
தழைக்குங் கலாமஞ்ஞையாய்
சகலமும் நின்திருச் சொரூபமென் றோலிடும்
சதுர்மறைப் பொருள் வெளியாகும்''

சித்தாந்தம் – 1964 ௵ - நவம்பர் ௴


No comments:

Post a Comment