Saturday, May 9, 2020



இருக்கு வேதம்.

அஷ்டகம் 1 - அத்தியாயம் 1 - அனுவாகம் 1.
சூக்தம் - 1 மண்டலம் - 1.

(முதல் சூக்தத்திற்குத்தேவதை அக்கினி, ருஷி விஸ்வாமித்திரர் பிள்ளை மதுச்சந்தஸ், சந்தஸ் காயத்திரி.)

வர்க்கம் - 1

1. யக்கியத்திற்குப் புரோகிதனும், தேவனும், ஓதாவென்னும் ருத்துவிக்கும், இரத்தினங்களைத் தரிப்பிக்கிறவருமாகிய அக்கினியைத் துதிக்கிறேன்.
2. அக்கினியானவர் பழைய ருஷிகளாலும் புதுமையானவர் களாலும் புகழத்தக்கவர். அவர் வேர்களை இங்கே கொண்டுவரக் கடவது.
3. அக்கினியினாலே நாள் தோறும் வளர்ந்துகொண்டே யிருக் கிறதாகவும், புகழ்பொருந்தியவும், வீரர்களோடு கூடியவுமாகிய திர வியத்தை (யஜமானன்) அடைகிறான்.
4. ஒ அக்கினியே! நீர் இம்சையில்லாத எந்த யக்கியத்தை எல் லாதிக்குகளிலும் அடைந்திருக்கிறீரோ அது தான் தேவர்களிடத்துப் போகிறது.
5. ஓதாவும், ஞானமடைந்தவரும், சத்தியமானவரும், மிகவும் பலவிதமான புகழ்கூடியவருமாகிய அக்கினிக்கடவுளானவர் தேவர் களோடு வரக்கடவது.

வர்க்கம் - 2

6. ஓ அக்கினியே! (யஜமானனாகிய அவிசு) கொடுக்கிறவனுக்கு நீர் எந்தச் சுபத்தைப் பண்ணுகிறீரோ அது உமதே, ஏ அங்கிரசே ! (இது) சத்தியம்.
7. ஒ அக்கினியே! நாங்கள் நாள்தோறும் இரவும் பகலும் புத் தியினாலே வந்தனம் செய்துகொண்டு உம்மை நெருங்குகிறோம்,
8. பிரகாசித்துக் கொண்டிருக்கிறவரும், யாகங்களைக் காக்கிற - வரும் சத்தியத்தைப் பிரகாசப் படுத்துகிறவருமாகிய உம்முடைய) சொந்தவீட்டில் வளர்கின்ற (உம்மை நெருங்குகிறோம்,) –
9. அப்பேர்ப்பட்ட அக்கினியே புத்திரனுக்குப் பிதாவைப் போலநமக்குச் சுலபமாயிரும், நம்முடைய க்ஷேமத்துக்காக நம்மோடு கூடவிரும்.

சூக்தம் - 2.

(இதற்கு ருஷி மசூச்சந்தஸ், பா - காயத்திரி, இதில் அடங்கிய. கூ - ரூக்குகளில் மூன்றுக்குத் தேவதை வாயு, மூன்றுக்கு இந்திரனு,ம் வாயுவும்,' மற்ற மூன்றுக்கு மித்திரனும் வருணனும்.)

வர்க்கம் - 3

1. ஓ வாயுவே! பார்க்கத் தகுதியானவரே வாரும் இந்த சோமங்கள் * பிழிந்து ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கின்றன. அவைகளில் (உம்முடைய பாகத்தைக்குடியும்) எம்முடைய அழைத்தலைக்கேளும்.
* சோமம் என்பது ஒரு விதமான கொடி. அதன் சாறு சாந்தகுணமும், புளிப்பானருசியும் உள்ளது, அதைப்புளிக்கவைத்துப் போதையுண்டு பண்ணும் குணம் வந்த பின்பு அதை யாகத்தில் உபயோகித்தல்.
2. வாயுவே! யாகமறிந்தோரும் அபிஷதமான † சோமத்தை உடையவருமாகிய ஸ்துதிப்போர் உம்மை உக் தங்களால் ஸ்துதிக்கிறார்கள்.
அபிஷதமானது சோமத்தின் சாற்றைப் பிழியும் கிரியை
3. வாயுவே! சோமத்தைமிகவும் தழுவுகின்றதும், அனேகரிடத் திற்குப் போகின்றது மாகிய உம்முடைய வாக்கானது சோமபானத் தின் பொருட்டு (எஜமானனாகிய) கொடுக்கிறவரிடத்தில் செல்லுகின்றது.
4. இந்திரவாயுக்களே! இவைகள் அபிஷதங்களா யிருக்கின் றன. நீங்கள் எங்களுக்குக் கொடுக்க) அன்னத்துடன் கிட்டவாருங் கள. நிச்சயமாகவே சோமங்கள் உங்களை இச்சிக்கின்றன.
5. வாயுவே! அவிசின் தொடர்ச்சியில் வசிக்கிறவர்களாகிய நீ ரும் இந்திரனும் அபஷூதங்களானவைகளை அறிகிறீர்கள். அப்ப டிப்பட் நீங்கள் சீக்கிரமாய்க் கிட்டவாருங்கள்.

வர்க்கம். 4.

6. வாயுவே! நீரும் இந்திரனும் அபிஷவம் பண்ணுகிறவனுடைய ஆயத்தமாயிருக்கிற (ஓமத்) தினிடத்திற்குச் சமீபம் வாருங்கள் புருஷர்களே ! (உங்களுடைய வருகையினால் தான் இந்தக்) கிரியை சீக்கிரத்தில் (முடிவு பெறும்,) (இது) சத்தியம்.
7. நீரை (பூமியின்மேல்) சொரியுந் தொழிலைச் செய்கிறவர்களாகிய, பவித்திரமான வலிமையையுடைய மித்திரனையும் சத்துருக்களை விழுங்குகிற வருணனையும் அழைக்கின்றேன்.
8. நீரை விருத்தி செய்கின்றவர்களும், நீரைக் கொடுக்கிறவர் களுமாகிய மித்திராவருணர்களே! (நீங்களிருவரும்) சத்தியத்தோடு (அங்கவுபாங்கங்களால் மிகவும்) பெருகியிருக்கிற (இந்தச்சோம) யாக த்தை வியாபித்திருக்கிறீர்கள்.
9. மேதாவிகளும் அனேகர் பொருட்டுப் பிறந்தவர்களும், அனேகருக்கு இருப்பிடமுமாகிய மித்திராவருணர்களே, நமக்கு வலிமையையும், (யாகமாகியவிந்தக்) கர்மத்தையும் போஷியுங்கள்.




சூக்தம் - 4.

(இதற்குருஷியும் பாவும்முன் போல, இதிலுள்ள பனிரண்டு ருக்குகளில், முதல் மூன்றிற்குத் தேவதை அசுவின்கள். மறுமூன்றிற்கு இந்திரன், பின் மூன்றிற்கு விசுவதேவர்கள், கடைமூன்றிற்குச் சரஸ்வதி.

வருக்கம் - 5.

1. (அவிசுவாங்கும் பொருட்டு) நீட்டப்பட்டிருக்கிற கைகளையுடையவர்களும், நற்செய்கைகளை போஷிக்கிறவர்களும், நீண்ட புஜங்களையுடையவர்களுமாகிய அசுவின்களே! யாகத்திலான அன்னத்தை வாங்குங்கள்
2. மிகுந்த கருமங்களை யுடையர்களும் வழிகாட்டிக் கொண்டு போகிறவர்களும், மனத்திண்மை யுடையவர்களுமாகிய அசுவின்களே (எங்களுடைய) தோத்திரங்களை விரைவான மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
3. (சத்துருக்களைக்) கொல்லுகிறவர்களும், அசத்திய மில்'லாதவர்களும், போர் வலரை முன் சென்று நடத்துகிறவர்களுமாகிய (அசுவின்களே) கலந்து அபிஷவம் பண்ணப்பட்டிருக்கிற (சோமங்கள்) வேர்களை வெட்டி நீக்கிய தர்ப்பையின் பேரில் இடப்பட்டிருக்கின்றன. (அவைகளை வாங்க). வாருங்கள்,
4. விசித்திரமான ஒளியையுடைய இந்திரனே! வாரும் (ருத்விக்குகளுடைய) விரல்களால் அபிஷாத மாயிருக்கிற நித்தியம் சுத்தமான இவைகள் உம்மை இச்சித்துக் கொண்டிருக்கின்றன.
5. இந்திரனே! புத்தியினாலே அடையப்பட்டிருக்கிற வரும், மேதாவிகளால் அடையப்பட்டிருக்கிற வருமாகிய (நீர்) அபிஷாதமான சோமத்தை யுடைய ருத்துவிக்கின் தோத்திரங்களை நெருங்கும்.
6. குதிரைகளோடு கூடிய இந்திரனே! தீவிரமுலடய நீர் (எங்கள்) தோத்திரங்களை ஏற்கும் பொருட்டு வாரும், சோமாபிஷ வத்தோடு கூடிய (இந்தக் கருமத்தில்) எங்களுடைய (அவிசாகிய) அன்னத்தை வாங்கும்.

வர்க்கம். 6
7. பாதுகாப்போரும், மனிதர்களைத் தாங்குவோரும், (பயனைக் கொடுப்போருமாகிய விசுவதேவர்களே! (யஜமானனாகிய அவிசு) கொடுக்கிற வனுடைய அபிஷத (சோம) த்தினிடத்து வாருங்கள்.
8. நீரைச் சீக்கிரத்தில் கொடுக்கிறவர்களாகிய விசுவதேவர்கள், பகலினிடத்திற்குச் சூரிய கிரணங்கள் (வருவது) போல, அப ஷதமான (சோமத்தினிடத்து, விரைவுள்ளவர்களாய் வருக,
9. அழிவில்லாதவர்களும், எங்கும் வியாபியானின்ற புத்தியை யுடையவர்களும், துரோக மற்றவர்களும், (பொருளைக்) கொண்டு வருகிறவர்களுமாகிய விசுவ தேவர்கள் அவிசைவாங்கக் கடவது.
10. இன்பமாகிய சத்தியவாக்கியங்களைப் பிரேரிக்கிறவர்களும், நற்புத்தி யுடையவர்கட்கு அறிவு மூட்டுகிறவர்களுமாகிய சரசுவதியானவள் யக்கியத்தை ஏற்றுக் கொண்டாள்,
11. இன்பமாகிய சத்திய வாக்கியங்களைப் பிரேரிக்கிறவர்களும், நற்புத்தி யுடையவர்களுக்கு அறிவு மூட்டுகிறவருமாகிய சரச்சுவதி யானவள் யக்கியத்தை ஏற்றுக்கொண்டாள்.
12. சாச்சுவதியானவள் (தனது) செய்கையினால் பெரும் வெள்ளத்தைத் தோற்றுவிக்கிறாள் (மேலுந்தனது இயல்பான ரூபத்தால்) எல்லாப்புத்திகளையும் பிரகாசிப்பிக்கிறாள்.

2 - வது அனுவாகம்.
சூக்தம் - 1 (4)

(ருஷியும், பாவும் முன்போல தேவதை இந்திரன்)

வர்க்கம் - 7.

1. நல்ல கறவைப்பசுவைக் கறக்கும் பொருட்டுக் (கூப்பிடு கிறது) போல அழகானவற்றைச் செய்கிறவனை (எங்களுடைய இந்திரனை) பட்சணத்திற்காக நாள்தோறும் கூப்பிடுகிறோம்.,
2. சோமங் குடிப்பவரே! எங்களுடைய சவனங்களின் * கிட்டேவாரும் (வந்து) சோமத்தைக் குடியும். தனவானாகிய (உம்முடைய) களிப்புமாடு கொடுக்கத்தக்கதே.
* ஸவனம் = ஸோமாபிஷவம். அக்கினிஷ்டோமம் என்னும் யாகமானது .''பிராதஸ்ஸவனம்", "மாத்தியந்தினசவனம்", "திருதீயஸவனம்'' என்றும் வெவ்வேறான மூன்று பாகங்களையுடையதாம்.
3. இப்போ (நாங்கள்) நற்புத்தியுடையவர்களாகிய, உமக்கும் மிகவும் சமீபமானவர்களின் (நடுவேரின்று) அறிகிறோம். நம்மை விட்டுப் (பிறருக்குச் சொல்லாதேயும் (கம்மிடத்திற்கே) வாரும்,'
4. (ஓயஜமானனே! எவர் உம்முடைய மித்திரர்களுக்கு எங்கும் (பொருள் மக்கள் முதலாகிய) வரம் (கொடுக்கிறாரோ) அப்படிப்பட்ட மேதாவியும், இம்சை யடையாதவருமாகிய இந்திரன் கிட்டே போம், (போய்) ப்பற்றிக்கேளும்.
5. இந்திரனிடத்தே உபாசனை செய்கிறவர்களுமாகிய, எங்க ளுடைய (ருத்துவிக்குகள்) துதிக்கட்டும் ஒ! நிந்திப்பவர்களே (இவ்வி டத்தினின்றும்) மற்றிடங்களினின்றும் போய்விடுங்கள்.

வர்க்கம் - 8.

6. (பகைவர்களை) அழிக்கின்றவரே! சத்துருக்களும் எங்களைச் செல்வரென்று சொல்லுக. (நமக்கு மித்திரர்களாகிய) மனிதர்கள் (அப்படிச் சொல்லுகிறார்களெனச் சொல்வானேன்) (நாங்கள்) இந்திரனுடைய (பிரசாதத்தாலுண்டாகிற) சுகத்திலிருப்போமாக.
7. (யஜமானனே மூன்று சவனங்களினும்) வியாபித்திருக்கின் றதும், யாகத்துக்குச் சம்பத்தாகவிருப்பதும், மனிதர்களைக் களிப்ப தும், கருமங்களை நிறைவேற்றும்) யஜமானனைச் சந்தோஷிப்பிக்கிற வராகிய (இந்திரனுக்குச்) சகாவாகியதுமான இந்தச் (சோமத்தை யாகத்தில்) வியாபித்திருக்கிற (இந்திரனுக்குக்) கொடும்.
8. மிகுதியான கருமங்களையுடையவரே இந்தச் (சோமத்தின் அம்சத்தைக்) குடித்து (நீர்) விருத்திரனைச் சேர்ந்த அசுரரின் சங்காரகரானீர். (நீர்) உம்முடைய பக்தர்களாகிய படையாளர்களை யுத்தத்தில் மிகவும் பாதுகாக்கின்றீர்,
9. மிகுந்த கருமங்களை யுடையவரே யுத்தத்தில் வலியரான, அப்படிப்பட்ட உம்மைத் திரவியத்தையடையும் பொருட்டு (நாங்கள்) அன்ன முடையராக்குகிறோம்.
10. (ஓய்ருத்துவிக்குகளே)! எவர் பொருளுடையவரோ? பெரியரோ? நல்ல (தருமங்களை) நிறைவேற்றுகின்றவரோ? அபிஷவப் பண்ணுகிறவர்க்குச் சகாவானவரோ? அத்தகைய இந்திரனுக்குப் பாடுங்கள்.

வர்க்கம் 9

1. ஸ்தோத்திரங்களை ஏந்துகிற சிநேகிதர்களே! சீக்கிரமாய் வாருங்கள், வாருங்கள், உட்காருங்கள், உட்காந்து இந்திரனை மிகப்பாடுங்கள்.
2. (சினேகிதர்களே) அனேக (பகைவர்களைத் துயரப்படுத்துகிற வரும், பெறத்தகுதியான மிகுந்த (பொருளின்) யஜமானனுமாகிய இந்திரனை ஸோமமானது அபிஷதமாயிருக்கையில், எல்லாருமாய்ச் சேர்ந்து பாடுங்கள்.
3. அவரே நமக்கு முன்னடையாத பேறுகளைத் தருக; அவரே பொ ருளை; அவரே பெண்களை; அவரே அன்னத்தோடு நம்மிடம்வருக.
4. யாருடைய தேரில் (கட்டின) இரண்டு குதிரைகளை யுத்தத்தில் சத்துருக்கள் நெருங்குகிறதில்லையோ அப்பேர்ப்பட்ட இந்திரனுக்குப் பாடுங்கள்.
5. அபிஷவம் பண்ணப்பட்டவைகளும் (வடிகட்டிச்) சுத்தமாகியவைகளும், தயிரினால் தங்குற்றம் நீக்கப்பட்டவைகளுமாகிய இந்த ஸோமங்கள் அபிஷத (ஸோம) த்தைக் குடிக்கிறவரிடத்திற்குச் சாப்படப்பட்டும் பொருட்டுப் போய்ச் சேருகின்றன.

வர்க்கம் 10.

6. நல்ல கருமங்கள் பொருந்தியவரே! நீர் (தேவர்களுக்குள்) முதுமை (அடையும்) பொருட்டு அபிஷுத (ஸோம) த்தின் பானத்திற்காக உடனே பெருத்திட்டீர்.
7. ஸ்துதிகளால் சேவிக்கத்தக்க இந்திரனே! (மூன்று ஸவனங்களிலும்) வியாபியாநின்ற ஸோமங்கள் உம்மிடம் புகக்கடவது. (அவைகள்) உம்முடைய உயர்ந்த புத்திக்குச் சுகமானவைகளாக.
8. மிகுந்த கருமம் பொருந்தியவரே! ஸ்தோத்திரங்கள் உம்மைஉயர்த்தின; உக்தங்கள் உம்மை (உயர்த்தின) (அப்படியே) எங்களுடைய வாக்குகளும் உம்மை உயர்த்தக்கடவது.
9. அழியாத க்ஷண மாற்றுகிற இந்திரனானவர், எல்லா ஆண்மைகளும் எதில் (தங்கியிருக்கின்றனவோ) அப்பேர்க்கொத்த ஆயிரவகைப்பட்ட, இந்த (ஸோமமாகிய) அன்னத்தைச் சாப்பிடக் கடவது.
10. ஸ்துதியால் ஸேவ்யரான இந்திரனே! (சத்துருக்களாகிய) மனிதர்கள் (எங்களை) எதிர்த்து எங்களுடைய தேஹத்துக்குத் துரோகம் பண்ணாதிருக்க வலியராகிய (நீர்) கொலையை நாமிடத்தினின்றும் தூரமாக்கும்.

சூக்தம் 3 (6)

(ருஷியும், பாவும் முன் போல. முதல் மூன்று ருக்குகளுக்கும், கடைசி ருக்குக்கும்தேவதை இந்திரனும் மற்றவைகளுக்கு மருத்துக்கள் அதாவது காற்றுகள்)

வர்க்கம், 11.

1. சுற்றிலும் நிலையாயிருக்கிற (மூவுலகத்திலுள்ள) வர்கள் மாட் சிமை பொருந்திய (சூரியனாகவும்) ஹிம்ஸகரில்லாத (அக்கினியாக வும்) (எங்கும்) சஞ்சரிக்கின்ற (வாயுவாகவும்) உருவுகொண்டிருக்கிற இந்திரனை (தத்தங் கருமங்களில் தேவதையாக) இசைக்கிறார்கள், (மேலும் அவ்விந்திரனுடைய வேறுவேறு ரூபங்களான) நக்ஷத்திரங்கள் வானத்தில் பிரகாசிக்கின்றன.
2. இவருடைய தேரில், காமுறத்தக்கவைகளும், ரக்தவர்ணமானவைகளும், செருக்குற்றவைகளும், மனிதர்களை இழுக்கத்தக்கனவகளுமாகிய ஹரி (என்னு மிரண்டு) குதிரைகளை (சாரதிகள்) வெவ்வேறு பக்கங்களில் கட்டுகிறார்கள்.
3. மனிதர்களே! இந்த ஆதித்தியரூபமான இந்திரன்) உணர்வற்ற வைகளுக்குணர்வும், உருவற்றவைகளுக் குருவும் உண்டுபண்ணுகிறவராய் எரிகதிர்களோடு (மறுபடியும்) உண்டானார், (இது என்ன ஆச்சரியம்!

. போ

சித்தாந்தம் – 1914 ௵ - ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்,


No comments:

Post a Comment