Saturday, May 9, 2020



இருவினை யொப்பு.

நற்குஞ்சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
            நற்குஞ்சரக்கன்று காண்.''
      மனநினைவில் வாக்கிலனைவருக்கு மறிவரிய
            வள்ளல்கள்ளத்தினான் மறுகுமறிவிலியேன்
      றனை நினைவி லுட்கொண்டே யவனவளோ டதுவாந்
            தன்மையினின் மலவடிவு தன்னை மன்னித்
     தினையனையவலிவி லிருவினை துலையொப்பறிரது
            சீர்காழிமன்னு சிற்றம்பல நாடினானென்
     முனை வினையு முடல்வினையும் வருவினையு மறுத்து
            முத்தியளிப்பவன் மலர்த்தாள் சித்தமுறவைப்பாம்.”
    
பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்தமாயை, அசுத்தமாயை என்னுமிவையாறும் அநாதி நித்தியப் பொருள்களாம். இவற்றுள் பதி சிவமாம். பசு மும்மலங்களால் பாதிக்கப்பட்ட ஆன்மாவாம் அதுவும் தனக்குரிய இச்சா ஞானக்கிரியையோடு கூடி நிற்கும் முப்பாசக் கட்டினின்று நீங்கில் மோக்ஷமடையும்.
      
ஆணவமலமானது இருள் வினை யுடையதாய் ஆன்மாவோடு அநாதியே இரண்டறக்கலந்து நின்று அவ்வான்மாவையுண் மணியென மறைத்து நிற்கும். அது தன்னை ஆன்மாவுக்குக் காட்டாது ஆன்மநிலையை அவ்வான்மா அறிவதையுந் தடுக்கும் அதாவது ஆன்மாவின் அறிவு செயல்களைத் தடைப்படுத்தி நிற்குமென்பதாம். அன்றியும் அஃது ஏகமாய் நின்று பற்பலசக்திகளை யுடையதாய் நிலவும் அச்சத்திகள் வெவ்வேறு ஆன்மாக்களிடத்தில் ஒருபடித்தாய் நில்லாமல் பல வேறு தன்மைகளைப் பொருந்திகிற்கும்.
அவ்வாணவம் எட்டுக்குணங்களை யுடையதாம். அவையாவன.

  1.   விகற்பம்    =     தன்னையொழிய மற்றொருவரும் ஒவ்வாதவரென்றல்
  2.   கற்பம்      =     பிடித்ததைப் பிடித்திருத்தல் 
  3.   குரோதம்    =     கோபங்கொண்டு நினைத்தல்
  4.   மோகம்     =     யாதாமொன்றற்கு ஆசைப்படல்
  5.   கொலை     =     உயிர்களைக் கொல்லுதல்
  6.   அஞர்       =     சந்ததமுந் துக்கப்படல்
  7.   தம்         =     அகங்கார மேலிடுதல்
  8.   நகை        =     சிரித்தல் என்பனவாம்.  


இக்குணங்கள் ஆன்ம அறிவிற்பொருந்தி நின்று பலவித செயல்களைச் செய்வனவாம் அவ்வாறு செயல்கள் செய்யப்படும் போது பலவித இச்சைகளுண்டாம் அவ்விச்சைகளாலுண்டாகிய ஆசைப்பகுதிகளே வினையாம். இதனால் ஆணவம் கன்மத்துக்கு ஓர்வித்தெனவும் அக்கன்மம் அவ்வித்தின் வினையெனவுங் கண்டாம் இதுபற்றியன்றோ.

"யானென் செருக்கா - லிருவினையா மச்செருக்கு
      மூனமலத்தானா முயிர்க்கு”  என ஆன்றோர் கூறுவாராயினர்.
        
ஆணவத்தின்றன்மை இங்கனமாக ஆன்மாகன்மங்களை யநுபவித்தற்குரிய நிலைக் களம் மாயாதேகமாம் அது மயக்குடன் கூடியபோதந்தரும் பொருளாய் ஆன்மா வினைப்பிணித்து நிற்கும். அவ்வாறு அத்தேகத்தை ஆன்மாவிற்கு இறைவன் பிணித்தமை. ஆணவத்தோடு கூடிய இச்சையினின்றெழும் மேற்கூறிய ஆசைப்பகுதிகளை அநுபவித்ததற்காம்.
      
இனிக்கன்மத்தைப்பற்றிப் பேசுவாம்.
        
இக்கன்மமானது அநாதியே ஜடமாய் வியாபகமாயுள்ளது. ஆன்மாக்களுக்குச் சாதி ஆயுள்போகம் இக்கன்மத்தாலேயே உண்டாம் காந்தத்தின் முன் இரும்பைப்பிடிக்கையில் செயலுண்டாமாறு போல ஜடமாகிய இக்கன்மத்துக்குஞ் செயலுண்டு. அஃது ஜடமாகையால் தானே ஆன்மாவைப் பொருந்துமாறின்று. சிற்றறிவினையுடைய ஆன்மாவும் தானே எடுத்துக் கொள்ளும் வலியுடையதின்று. இவ்விரண்டு பொருள்களையுஞ் சம்பந்தப் படுத்துவோன் இறைவனேயாம்.
        
அவன் நியதி என்னுந் தத்துவத்தின் வழியாய்ச் செய்தவன் மாட்டுக்கன்மம் சென்றடையுமாறு செய்வன். கன்றானது தனது தாயைக் கருதிச் செல்லுமாப்போல வினையும் செய்தவினை நாடிச் செல்லும்.
        
இக்கன்மம் மனம்வாக்குக் காயமூன்றினால் வரும் அது பற்பல பகுதிகளையுடையதாம் அவையாவன.

நல்வினை தீவினை என்றும் ஆகாமியம் சஞ்சிதம் பிரார்த்தம் என்னும் ஸ்தூல சூக்கபம் அதி சூக்கடம் என்றும் வன்மை மென்மை என்னும் புக்திபூர்வம் அபுத்தி பூர்வம் என்றுமாம்.

இக்கன்மம் திதிகாலத்தில் புத்தியைப் பொருந்தி நிற்கும் மா சங்காரகாலத்தில் அப்புத்தி பிரகிருதியைப் பொருந்தும் அது மாயைப் பொருந்தி நிற்கும் சிருஷ்டிகாலத்தில் தேகத்தைப் பொரு ந்தும் அன்றியும் திதிகாலத்தில் 84 - லக்ஷம் யோனி பேதத்திற் பிறந்திறந் துழலுமாறு செய்யும்.
      
சங்காரகாலத்தில் பக்குவம் எய்தும், சிருஷ்டிகாலத்தில் தேகத்துக்கேதுவாகும். இவ்வினைகள் யாவும் மந்திரமுதலியனவாய்க் கூறப்பெற்ற அத்துவாக்கள் ஆறினும் சஞ்சிதமெனக் கட்டுப்பட்டுநிற்கும்.
      
கன்மங்களை சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம். என மூன்றினுள் அடக்கிக் கூறலாம். பிரார்த்தம் புசிக்கும்போதே யான்செய்தேன் பிறர்செய்தார் என்று சுட்டு கையினாலே அந்தச்சுட்டாலுள்ள பயன் மேலைக்கு உற்பவிக்கும். இஃது ஆகாமியம் பலஜனங்களினு மியற்றிய ஆகாமியக்கூட்டமே சஞ்சிதம். இதினின்றும் பக்குவப்பட்டு ஆன்மாவிற்கு இன்பதுன்பமாய் வருவது பிரார்த்தம் இவையாமாறு.

      ''மேலைக்குவித்து மாகி விளைந்த வையுணவுமாகி
            ஞால்த்துவருமாபோல நாஞ்செய்யும் வினைகளெல்லாம்
மேலத்தான் பலமாச்செய்யு மிதமகிதங்களெல்லா
            மூலத்ததாகியென்றும் வந்திடுமுறைமையோடே.''

இவ்வாறு பிரவாக அநாதியாய்க் கன்மங்கள் பொருந்துவனவாம் ஆன்மாதொன்று தொட்டு வருகிற கன்மங்கட்குட்பட்டு காற்றாடியுமூசலும் போலச் சுழன்று திரியும் பசு நல்வினையால் சொர்க்கமும், தீவினையால் நாகமும், இவ்விருவினையால் பூமியுங் கிட்டிநிற்கும்.
இக்கன்மம் ஆறுகுணங்களையுடையது - அவையாவன: -
1.     இருத்தல்    =     இந்திரியவழி செலுத்தல்
2.     கிடத்தல்     =     அவ்வழியில் ஓங்கிநிற்றல்
3.     இயற்றல்    =     இதவகிதஞ்செய்யல்
4.     விடுத்தல்    =     முயலுதல்
5.     பரநிந்தை    =     பிறன்பழி கூறல்
6.     மேவல்      =     பலவகையோனிகளில் மேவல் - என்பனவாம்.

கன்மங்களின் குணங்களாகிய இவைகளைப் பொருந்தப்பெற்ற ஆன்மாவிற்கு எவ்வாறு இருவினையொப்பு எய்துமெனிற்கூறுதும்.

ஆன்மாக்கள் தங்கிநிற்கும் நிலைகள் மூன்றாம் அவையாவன. கேவலம் சகலம் சுத்தம் என்பவைகளே. இவற்றுள் கேவலம் தேகங்களோடு பொருந்தி நில்லாது ஆணவத்தோடு மாத்திரம் பொருந்திநிற்குநிலை. சகலம் தேகத்தோடு பொருந்தி எண்பத்துநான்கு லக்ஷம் போனி பேதங்களுள்ளும் பிறந்து இறந்து திரியுங்கால் இரு வினை இயற்றி இன்பதுன்பங்களை யநுபவிக்கும் பெத்த நிலையாம். திருவருளால் பாசம் பகையெனக்கண்டு நீங்கி, தன்னையும் தலைவனை யுமறிந்து இறைநிறைவுள் அத்துவிதமாய் நிற்கும் நிலை சுத்தமாம்.
        
மேற்கூறிய சகல நிலையிலே தான் இருவினை இயற்ற வேண்டும். ஞானேந்திரியம் கன்மேந்திரிய மநுபவிக்கிற விஷயங்களை அனுபவிக்கிறவன் நானென்றும் அவ்வ நுபவம் எனதாகிய விஷயங்களென்றும் அகங்கரிக்குமாறு செய்து நிற்பது அகங்காரமாம். சர்வவிஷயத்திலுஞ் சென்று பற்றி ஆத்மபோதத்தை விரியப்பண்ணி இப்பொழுது அநுபவிக்கிற இந்த விஷயமும் முன்னனுபவித்தவிஷயத்தோடு ஒக்குமெனவும் ஒவ்வாதெனவும் பிரித்து அறிந்து தெளிவது புத்தித்தத்துவமாம்.
        இப்புத்திக்கொத்ததாகிய பதார்த்தங்களை விரும்பிப் போகம் பக்குவமான விடங்களிற் சென்று ஆன்மாதேகியாய் புவனமெங்குஞ் சஞ்சாரத்தைப் பண்ணும்.

சுகவிறுதியாலே துக்கமும் துக்கவிறுதியாலே சுகமுமாக துக்கமாயினும் சுகமாயினும் என்று உறுதிப்படாமல் வருதலால் சுகமெல்லாம் துக்கமா தலால், "கழிபடு துன்பங்களின் பயன்'' என்று கூறப்பட்டது. அன்றியும் கன்மம் ஓர்பதார்த்தமாதலினால் பக்குவம் எய்தும் ஆர்ச்சித்த கன்மங்களில் பக்குவப்பட்ட கன்மத்தைப் புசித்தும் பக்குவப்படாத கன்மத்தைப் புசியாமல் நீக்கிப் புசிக்கத்தக்க விஷயபதார்த்தங்களை ஆராய்ந்து ஒருதேகத்தை விட்டுப் பின்னை யொருதேகத்திலே சென்று பிறந்து ஒழியா தஜனமும் மரணமுமே தொழிலாகத் தண்ணீர்ச்சுழியிற்பட்ட கோரைப்புல்லைப் போல் ஆன்மா நிலையறவலைந்து திரியும்.

மேற்கூறிய மூன்று நிலைகளுள் சகல நிலையிலியற்றப்பெறும் புண்ணிய பாபங்கள் இரண்டும் ஒரு சென்மத்திலே புசிக்கத்தக்கதாக ஆறு அத்துவாக்களில் முன்னேகட்டுப்பட்ட சஞ்சிதமும் இப்போது எடுத்த தேகத்தில் புசித்து முடிவதாயுள்ள, பிரார்த்தமும் இங்ஙனம் புசிக்குமளவிலேறும் ஹிதாவஹிதங்களால் வரும் ஆகாமியமும் முடிந்து போம்படி சிவபுண்ணியஞ் செய்தல் வேண்டும் இனிப் புண்ணியமாமாறு கூறுவாம்.
      
புண்ணியம் பசுபுண்ணியமென்றும் பதி புண்ணியமென்று மிருவகைப்படும் பசுபுண்ணியத்தைப் பயன்விரும்பிச் செய்வாராயின் அது காமியத்துட்பட்டு அழிவெய்து மென அறநூல் கூறுதலால் நிலைபேறுடைய மெய்ஞ் ஞானத்தை அது பயப்பியாது என்பது பெற்றாம். ஆயினும் பயன்விரும்பாது செய்யின் அது பதி புண்ணியப் பண்பினதாகும். ஏனெனில் அது செய்வான் கருத்து வகைபற்றி நிகழுமாற்றா னென்க. எவ்வாறெனில் பரமஞானியர்பால் நிகழும் ஜீவகாருணணியம் சிவபுண்ணியப் பகுப்புள்ளடங்குமாற்றா னுணர்க.

சிவபுண்ணியமும் புத்தி பூர்வம் அபுத்திபூர்வமென விருவகைப்படும். அபுத்தி பூர்வம் புத்தி பூர்வத்துக் கேதுவாய் நிற்கும் வெள்ளி பசு புண்ணியத்துட் பட்டதாயினும் பயன் கருதாது செய்யில் அபுத்தி பூர்வபதிபுண்ணியமாம். மாபலி போன்றார் முன்னைப்பிறப்பிற் செய்ததும் அபுத்தி பூர்வமாய் இறையணியாயினமையறிக. இஃது இங்ஙனமாக, புத்திபூர்வமாகிய சிவபுண்ணியங்கள் வேதாகமங்களில் விதிக்கப்பட்டாங்கு அறிந்து செய்தலாம் அவை சரியை, கிரியை, யோகமுதலி பனவாம். சிவபெருமான் சாதகாசாரியனைய திட்டித்துநின்று சமைய தீக்கை செய்து சரியை தன்னை நவையற இயற்றச்செய்வன். அவர்கள் சிவலோகத்தைப் பொருந்தி அங்குள்ள போகமருந்தி அவனியிலுதிப்பர். பின்னர் போதகாசாரியனாலே விசேட தீக்கைபெற்றுச் சிவபூஜை இயற்றிச் சிவசாமீப்பியம் பெற்று அங்குள்ள பெரும்போகந் துய்த்து ஒழிந்தகாலை புவியில் நண்ணியோகாசாரியனை யடைந்து சிவயோகமியற்றிச் சிவனுடைய சாரூபஞ் சேர்ந்து நிற்பர். இச்சாரூப தேகத்தில் ஆசையிலராகிப்பெருகி வரும் போகத்திற் பற்றிலரேல் உலக மெலா மழியுங் காலத்து இவர் முத்தி எய்துவர். போகத்தில் ஆசையுடையரேல் சிருஷ்டிகாலத்தில் உலகிலுதித்து இருவினை ஒப்பெய்தி ஆணவமல பக்குவமடைந்து அதனால் சத்திபதிந்திட மிக்கதொரு பக்குவம் வந்து குருவருளால் முத்தி எய்துவர். இதனால் இவ்விருவினை யொப்பு யோகியர்க்கே உரித்தெனப்பெற்றாம். அன்றியும் இருவினையொப்பும் பிறந்தபின் மலபரிபாகம் வருதலும் அதன்பின் சத்திநிபாதநிகழ்தலும் முறைமயின் வந்தமைகண்டாம். ஆனால் சத்திநிபாதம் பலபடித்தாயுள்ளதாதலினால் மூவகையான்மாக்களுள் சகலர்க்கு மந்ததரம் மந்தமென்னும் சத்திநிபாத முள்ளனவாம். ஆனால் சிவனுக்கும் சத்திக்கும் செய்த புண்ணியபாவங்கள் பஞ்ச கலைகளினிடத்து மருவி நிற்பனவாம். மந்ததர சத்திநிபாதர்க்கு ஆசான் நிவிர்த்தி பிரதிஷ்டை என்னுங் கலைகளிலுள்ள வினைத் தொகுதிகளை மாய்த்துப் பிரகிருதிக்கு மேலுள்ள புவனங்களில் வைப்பன். மந்தசத்திநிபாதர்க்கு வித்தியா கலைகளிலுள்ள வினைகளையழித்துச் சுத்தவித்தையில் வைப்பன். தீவிர சத்திநிபாதர்க்கு. சாந்திகலையிலுள்ள பாசங்களை நீக்கிச் சிவசமமுத்தியளிப்பன். இவர்களுக்கும் பரமுத்தி பிரளயகாலத்தில் பரமனளிப்பன். தீவிரதரமாம் சத்திநிபாதம் பதியில் யாதொரு பற்றுமிலராகிச் சத்தியோ நிருவாணத்துக்குரியராவர். அதாவது உடனே பரமுத்தி எய்துதற்குரியராவர்.
        
சகலர்க்கு இருவினை யொப்பில்லாவிடத்து மலபரிபாகமில்லையாம். அஃதில்லாவிடத்துச் சத்திநிபாதமில்லையாம். இஃது இல்லாவிடத்துச் சிவஞானமில்லையாம். இஃதில்லாவிடத்து முத்தியில்லையாம். ஆதலால் மும்மலமுடைய சகலராகிய நமக்கு முதற்கண் இருவினை யொப்பு வேண்டுவது மிக்கு ஆவசீகமாயிற்று. பின் மலபரிபாகமும் அதன்பின் சத்திநிபாதமும் வேண்டற்பாலவாம்.
        
சத்திநிபாதத்துக்குக் காரணமாயுள்ளது மலபரிபாகம் அதாவது - ஆணவம் தனது சத்திகள் தேய்தற்குரிய துணைக் காரணங்களெல்லாவற்றோடுங் கூடு தலாம். துணைக்காரணங்கள் சிவபூசைதவம் செபமுதலாயின. சத்திநிபாதமென்பது சத்தியின் வீழ்ச்சியாம். இஃது ஆன்ம அறிவின்கண் நிகழுங் குறிப்பினாலுணரலாம்.
        
ஜீவன்முத்தருக்கும் ஆகாமிய மேராதிராது பிரார்த்த கன்மம் புசிப்பு மாத்திரமாய் வந்து போகிற தொழிய அவர்கள் ஈடுபடத்தக்கதாக மேலிட்டு வருத்தாது அவர்கள் அப்படி ஈடுபட்டு வருந்தாது கொண்டே மற்ற ஆகாமியகன்மமும் ஏறாது அப்படி ஏறிற்றாகிலும் பேதமாக்குவித்து ஜனனத்தை யுண்டாகாது.
      
ஜீவன் முத்தரல்லாத மற்றையர்க்கு ஆகாமியம் செபம் தவம் அர்ச்சனை, நல்லோர் இணக்கம், கற்றல், கேட்டல், சிந்தித்தல், நிட்டைகூடல் முதலிய இறப்பில் தவங்களாகிய சிவபுண்ணிய விசேடத்தால் இருவினையொப்புவரும் வந்தகாலை ஆகாமியம் ஏறாததாகும். பிரார்த்தம் அநுபவத்தாலும் பிராயச் சித்தத்தாலும் போம். சஞ்சிதம் குருவின்றி வெருளால் வெந்துபோம். இது நிற்க.
       ஒருவன் ஒருலக்ஷியத்தைக் கட்டித் தூக்கினவிடத்து அஃது அசைவற்று சமமாக நின்றகாலம் பார்த்து எய்தாற் போலச் சிவ பெருமானும் ஆன்மாவின் கன்பசாமியத்தைப் பார்த்துச் சத்திபதிப்பன். துலையின் இருதட்டுகளில் வைத்தபொருள்கள் சமமானாற்றான் அத்துலையின் நடுநிலையாய் நிற்கும். அல்லாக்கால் அத்தட்டுகள் ஏற்றத் தாழ்வுடையனவாகி ஒன்றற்கொன்று ஒவ்வாததாகும். அவ்வாறு ஒவ்வாமல் நிற்கில் விலைபகர்வோர் வாங்குபவர் தம்முளொவ்வாதவராவர். ஆதலால் - உலகவழக்கினும் துலையொத்தல் மிக அவசியமாயிற்று. கன்மம் காக்ஷிக்கெய்தாத பொருள் அங்ஙனமே அதன் சத்திகளுமாம். நல்வினையின் சத்தியும் தீவினையின் சத்தியும் மற்றொருசத்தியின் பேராற்றலால் தம்தம் புடைபெயர்ச்சியினின்றும் விலகி யாதொரு செயலுமற்று ஆன்ம அறிவைத்தாக்காமனின்று சமநிலைபெற்று வாளாகிடக்கு மந்நிலையை ஒப்புறுநிலையெனக் கூறுவர். அவ்வாறு அவ்விருவினையின் தாக்குதலில்லாத அவ்வான்ம அறிவில் இறப்பில் தவங்களா லெய்தப்பெற்றசத்திகள் ஊடுருவிச் சென்று கன்மமுளையை அவித்து அதன் விதையாகிய ஆணவத்தின் சத்திகளை ஒருங்கே மாய்த்தல் கூடும். இச்சமநிலை பெறாவிடத்துப் போற்றலுடைய அச்சத்தியும் பதிந்து செயல் செய்வதற் கேலாததாகும்.
      
இருவினைகளாகிய புண்ணியபாவங்களைப் பண்ணிச் சுகதுக்கங்களாக அநுபவிக்க வறுமென்று எண்ணப்பட்ட கன்மமலத்தால் பிருதுவிமுதல் மாயையிறுதியான தத்துவங்களிடமான புவனத்தில் பக்குவப்பட்ட போகங்களைப் புசித்துவரும் சகலர்களுக்கு அளவுபடுத்திச் சொல்லவொண்ணாதகாலம் அந்தந்தப் புவனங்கள் தோறும் ஆர்ச்சித்தகன்மம் துலையொப்புப் பிறந்தவிடத்திலே சத்திநிபாதமுண்டாக சிவம் குருவாய்வந்து தீக்ஷையினாலே மும்மலங்களை யறுத்து மோக்ஷத்தைத்தருவன்.
மேற்கூறியாங்கு இறப்பில் தவங்களால் நிகழும். "இருவினை யொப்பு' என்பதைப்பற்றி பற்பலவிதமாய்க் கூறப்பட்டுள்ளன அவைவருமாறு.

1. ஒரு ஆன்மா புண்ணியத்தையும் பாவத்தையும் அளவாய்ப்பண்ணிவரப் புண்ணியமிகுதியானாற் பாவங்குறைந்தும் பாவமிகுதியானாற் புண்ணியங்குறைந்தும் இப்படி ஒன்றுக்கொன்று ஏறிக்குறைந்து வரக்குறைந்ததில் நிறைவுவர வேண்டி ஒருகாலத்தும் எல்லைப்படாமல் அளவற்ற காலத்தினெல்லையிலே ஆர்ச்சித்த கன்மம் ஒத்த போது துலையிட்டதட்டு இரண்டிலும் பொன்னும் படிக்கல்லும் போலத் தம்மிலொத்து நிற்பது துலையொப்பு என்பது ஒருசாரார் கொள்கை.
        
இப்படிப் புண்ணியபாவம் துலையொத்து நில்லாதபோது புண்ணியமிருந்தால் பாவத்தையாராச்சிக்கும் பாவமிருந்தால் புண்ணியத்தை யாராச்சிக்கும் இரண்டு மொத்தால் சுகதுக்கமிரண்டும் வேண்டாமல் பிரபஞ்ச உபரிதை பிறந்து இந்த வேண்டாதபிர பஞ்சத்தை நீக்கிப்பிழைக்கும் வழி தருவாருளரோ வென்று ஆன்ம அறிவு தேடும். இது துலையொப்பில் சத்திநிபாத அவதரம் அதாவது பிரபஞ்சத்தையும் பொருளையும் மறைத்து உருசிப்பித்து ஆணவமலத்தைச் சேட்டிப்பித்து நின்ற திரோதாயி மாறி அருட் சத்தியான நிலை.

எண்ணும் வினைப்பயனாற் புவனந்தோறும் போகமென்று
      நண்ணிவருஞ் சகலர்க் கொருகால் நயந்திங்ஙனே
      பண்ணிய கன்மந் துலையொத் துழிச்சத்தி பாதமுறக்
      கண்ணியனுங் குருவாய்க் காழிவேந்தன் கதிதருமே.''
      
சஞ்சிதமாய் ஈட்டப்பட்டுக் கிடந்த இருவினைக்கும் பக்குவமுறையானே பயனாய்வரும்வழி நல்வினை மிக்க புரிமேதயாகம் தீவினை மிக்க பிரமக்கொலை ஒருங்கே பக்குவமெய்திப் பயன்படுதற்கண் ஒத்தனவாயின் அவை தம்முள் ஒன்றோடொன்று அடிக்கப்பட்டு சுந்தோபசுந்த நியாயமாய்க் கெட்டொழியு மாதலின் அவ்வாறொத்தல் இருவினை யொப்பென்பர் ஒரு சாரார்.'
      
மிக்கவினையாகிய புண்ணியபாவங்கள் தம்முள் ஒத்துக்கெட்டனவாயினும் அவையொழித்தொழிந்த புண்ணியபாவங்கள் தத்தம்பயனைத் தருதற்கு இடையிட் டின்மையானும் இருவினைகள் முழுதுந்தம்முளொக்கு மாறில்லை ஒக்குமெனினும் அதுபற்றி ஆணவமலம் நீங்குமாறின்மையால் விஞ்ஞானகலாரவரன்றி முத்தி எய்துதல் கூடாமையானும் இருவினை பொப்பிற்கு ஈதுபொருளல்லவாம்.
      
சுவர்க்கநரகங்களில் அநுபவிக்கத் தக்கதா யிருக்கிற அஸ்வமேத பிரமஹத்தியாதி கன்மங்களை ஒரு சரீரத்தி லநுபவிக்கக் கூடாதாகையால் சிவசக்தியானது இரண்டையு நாசஞ்செய்து அநியதமாயும் பரிபக்குவமா புமிருக்கிற இரண்டுக்குமத்தியில் பிரபலமாயிருக்கிற ஒருகர்மத்தைப் புசிக்கச்செய்யும்மற்றொன்று அநிபத காலபோக்யமாயிருக்கும். அவ்விரண்டு காமங்கள் ஸமபலமாய் விருத்தமாயிருந்தால் அவ்விரண்டையும் நாசஞ்செய்து வேறு கர்மத்தைப் புசிக்கச் செய்யும் சர்வகாமங்களும் ஏககாலத்தில் பரிபக்குவமானால் சிவசத்தியானது அவைகளை நாசஞ்செய்யும் அதுவே விஞ்ஞானகைவல்யம் சர்வகர்ம நாசத்தால் கர்மசஹ காரியாயிருக்கிற ஆணவமலத்திற்குப் பரிபாகம் வரும்.
''ஒத்தவினை யிரண்டு மோட்டு மொவெனது
      சத்திமல பாகமுறிற்றாள். என்றுங் கூறுவர்.''
      
ஒரு ஊருக்கு இருவழிதோன்றின விடத்துச் செல்வானுக்குத் திகைப்புண்டானது போல கன்மத்துலை பொப்பிலே சத்திக்க்குத் திகைப்பு வரும் அப்பொழுது சத்தி தன்றொழிலினைச்செலுத்தாம லிருக்கு மென்பர்.
      
அன்றியும் பசு நல்வினை தீவினை ஒத்து நின்ற இருவினையொப்பு ஒன்று', சில நல்வின தீவினை பொத்த விருவினை பொப்பு ஒன்று ஆக இருவினை யொப்பு இருவகைப்படும். இவற்றுள் முன்னைய இருவினை யொப்பு எங்ஙன மெனிற் கூறுதும். ஆன்ம அறிவின் கண்மலபரி பாகக்குறி சத்திநி பாதக்குறி விளங்குமாப்போல் இருவினை யொப்புக்குறி விளங்கி நிற்றலாம். அக்குறி யாதெனில் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றி இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின் கண் அவ்விருவினபும் அவ்வாறு ஒப்பநிகழ்தலேயாம். இவ்வாறு அறிவின் கண் இக்குறி நிகழ்ச்சிகூடு மாறில்லையாயின். முத்திபடைதற்கு ஏதுவாதல் கூடாதென்க. ஏனெனில் கன்ம ஒப்பு இல்லையாயின் குருபரன்றோன்றான் அவன்றோன்றிலனேல் சீவதீக்கைப்பேறு கிட்டாது. கிட்டாதாகவே சிவஞான மெய்தாது எய்தாதாகவே அத்துவிதக் கலப்பினது ஆன்ம அறிவு தூலமாய் நிற்றலால் வியாபகமாய் நின்று விளக்கல் கூடாது. முற்கூறியாங்கு சோபனமுறையில் சிறிது சிறிதாக விளங்கி விள்ங்கிப்பின் வியாபகமாய் விளங்கும் சிற்சத்தியும் முற்பக்கத்துத் திங்கள் போலத் திரோதான சத்திரூபமாய் நின்றறிவிக்கும். அன்றியும் இருவினையொப்பென்பது சஞ்சித வினையொத்தலா, அல்லது பிரார்த்தவினையொத்தலர், அல்லது ஆகாமியவினை யொத்தலாவென ஐயப்பாடுறும், அவ்வையம் நீக்குவான் சில கூறுவாம்.
       
ஒரே ஜனனத்தில் முந்தியடைய நின்ற ஆன்மா முன் ஜனனங்களிலீட்டிய புண்ணியபாவங்களிரண்டும் புசித்துத் தொலையத்தக்கதாக அத்துவாவிலே கட்டுப்பட்ட சஞ்சிதமும் அதினின்று இப்பொழுது புசித்து முடி வதாக வந்தவுடலிலே கட்டுப்பட்ட பிரார்த்தகன்மமும் எதிர்வினையாகிய ஆகாமியமும், முடிந்து போம்படி சிவபுண்ணிய மிகுதியிலே எல்லாம் சேரத்துலையொக்கப் பொருந்தின விடத்துத் திரோதாயி காருண்ணியத்தைச் செய்து நன்மையுடைய சத்திநிபாதம் விளைவிக்கும் என்று உண்மை நூல்கள் கூறுகின்றமையாலும், இருவினையொப்பு என்று பொதுப்படக்கூறியதாலும் இவ் வினையொத்தல் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியமாகிய மூன்றற்கும் பொருத்த முடைத்தாதலறிக. இதுபற்றி யன்றோ பெரியோர்.

''இனைய பலபிறவிகளினிறந்து பிறந்தருளா லிருவினை உள்புரிந்
            தருந்து மீது சகலமகலா
முனமருவு மிருபபனு மொரு காலத் தருந்த முந்து நுகருந்துபயனந்த
            முறவந்த
வினையுமெதிர்வினையுமுடிவினையு தவுபயனா னேராகநேராதல்
            மேவுங்கான்முற்
      சினமருவுதிரோதாயிகருணை : பாகித் திருந்தியசத்திநிபாதந்
            திகழும்ன்றே.''
                        
என்று கூறுவாராயினர்.
      
இவ்வாறு சகலர்க்கு கன்ம வொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எனமூன்றும் மிக்கு அவசியமென்றும் கன்மவொப்பிற்குக் காரணம் இறப்பில் தவங்களென்றும் கண்டாம். அன்றியும் ஆன்ம அறிவின்கண் இருவினையொப்புக் குறிநிகழ வேண்டுமென்றும் மூவகைக் கன்மங்களுக்கும் இருவினையொப்புண்டென்றும் ஏக காலத்தில் பரிபக்குவமான கன்மங்களைச் சிவசத்திநாசஞ் செய்யுமென்றும் அந்நாசத்தால் ஆணவமல பரிபாகமுறு மென்றும் கண்டாம்.
      
விஞ்ஞானாகலர் பிரளயா கலர்க்கு இருவினை யொப்பில்லாமலே மலபரிபாகம் சத்திநிபாதமுண்டாம். விஞ்ஞானா கலருக்குக் கன்மாப்பு ஏனில்லையெனில், அவர்களுக்கு விஞ்ஞான யோக சந்தியாசங்களால் கன்பக்ஷபமும் மாயா மலக்ஷயமும் பிறந்திருக்கிறபடி யாலென்க, ஆதலால் இவர்களுக்கு பலபரி பாகமே சத்திநிபாதத்துக்குக் காரணமெனவறிக.

மாயாபோகத்தால் கன்மசாமிய முண்டாக வேணும் பிரளயாகலர்க்கு இஃதின்மையால் இருவினையொப்பு இல்லாமலே மலபரிபாகம் வந்து சத்திநிபா தமுறும். அன்றியும் பிரளயாசலர் நிலையில் அருங்கலாதி போகமுணடாகையால் சகலராவார்கள். இச்சகலருக்கும் மற்றுள்ள சகலருக்கும் கன்ம ஒப்பு சத்திநிபாதத்திற்குக் காரணமோ வெனில் பிரளயாகலர் நிலையினின்று சகலராவார்க்கு இருவினை யொப்புசத்தி பதிதற்குக் காரணமன்றி மலபரிபாகமே காரணம்.
      
மாயையில் ஆதியிலிருக்கும் சகலர்க்கேகன்மவொப்புடன் கூடின மலபரிபாகம் சத்திநிபாதத்துக்கு காரணம் எனவறிக. கமலபரிபாகமில்லா விடத்துச்சகலர்க்குச் சத்திநிபாதம் உண்டாகாது. எனவேமலபரி பாகத்துக்கு முன்னிகழும் இருவினை யெய்பைச் சிவசக்தி புசிக்க வொட்டாமற் கெடுத்து விடுமென்க. இனி சிவ நல்வினை  யொத்தலாவது.
    
சிவநல்வினை, தீவினை போலந் தமது முதலுபகாரத்தை மறந்து பிறவிக் கேதுவாய்ப் பசு போதம் முளைத்துச் செய்யப் படுவதொன்றெனத் தெளிந்து உவர்த்து விடுவோன தறிவிலகண் அவ்வாற்றா னொப்ப நிகழ்தலாம். சுருங்கக்கூறில் சிவபுண்ணிய விசேடத்தால் புத்தி இருவினையின் கண்ணும் அவற்றின் பயன்களிடத்தும் விசாரித்தறியாது நடுநிலையாகி ஒத்து நிற்றலே இருவினையொப்பு எனப்படும். இஃதுற்ற போது அக்கினியைச்சார்ந்த விதை போல ஆணவமலம் பக்குவமெய்தும் என்றறிக.

“'பிணக்கில்லாத பெருந்துறைப் பெருமானுன்
னாமங்கள் பேசுவார்க்
கிணக்கிலாத தோரின்பமே வருந்துன்பமே
            துடைத் தெம்பிரா
னுணக்கிலாததோர் வித்து மேல் விளையாம
            லென்வினை யொத்தபின்
கணக்கிலாத் திருக்கோல நீவந்து காட்டினாய்
            கழுக்குன்றிலே.''  
                        S. பால்வண்ண முதலியார்.
சித்தாந்தம் – 1914 ௵ - ஜனவரி / பிப்ரவரி ௴


No comments:

Post a Comment