Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
இவை நமக்குத் துணையாகுமா?

இங்கே இனிமையாகக்கொள்ளும் பொருட்களையே இவை என்று குறிக்கப்பட்டது. நமக்கு என்றது ஆன்மாக்களுக்கு என்னும்பான் மைத்து. அஃது தேகத்துடன் ஆன்மாக் கூடிநிற்கும்போது கூறப்படும் பதம் நான் என்பதும் வழக்கு. மாநுஷ்ய ஜென்மத் தேகமாகிய எங்களுக்கு இவ்வுலகின்கணுள்ள பொருள்களும், இன்பமும் ஆன்மாவுக்குத் துணையாகா என்பதே முகநாமக்கருத்தாகும்.

இவ்வுலகம் காரியம். காரியத்திற்குக்காரணம் வேண்டும். எதனாற் காரியம் என்னில் தோற்ற ஒடுக்கக்கேடுகளினாலேயாம். தோற்ற ஒடுக்கமின்றி ஒரேபெற்றித்தாயபொருளே காரணமாகும். காரணமாவது காரியத்திற்கு முந்தியிருப்பது, அஃது பதி, பிரமம், கடவுள் என்று கூறத்தக்க சிந்மாத்ரமூர்த்தியாக விளங்குவதாம். இதனாலே உலகமும். அதிலேயுள்ள பலவித விசித்திர மஹாஜாலப் பொருள்களும் அழியும் என்றும், அவைகளுக்குமேலான சிவமஹாஞானமே அழியாப்பொருளான பதியைக் கூட்டி மேலாங்கதிகாட்டும் என்றும் உணர்ந்து அன்பையும் ஆசையையும் பற்றையும் நீக்கிப் பக்தியைப் பற்றல்வேண்டும், இந்நிலையை யோகிகள் அடைவார்கள்.

''அஜரூபம் பசும் ஹத்வா ஞானசாஸ்திரேண யோஹவித் |
பக்ஷயே தஜஸ்யாமிஷம் பதுவக்காபஹாரகம்!!"

இதன் கருத்து: “ஆட்டுரூபமாகிய பசுவைச் சிவஞானமாகிய அஸ்திரத்தினாலே வெட்டிச் சிவயோகியானவன் ஜனனத்தை நீக்குதலாகிய ஆட்டு மாம்சத்தைப் புசிக்க'' என்பதாம்.

வேதங்களிலே கூறப்படும் ஆடு சிவாகமத்திலே தெரிவுறுத்தப் பெறும் பசுவாம் என்றும், இங்கே ஆட்டை வெட்டி என்றது சிவ ஞா நாப்பியாசத்தாலே ஆன்மாவின் பிறவியை அறுத்தலாம் என்றும் ஆட்டு மாம்சத்தை உண்ணுதலாவது பிறவிக்கேதுவாகிய தற்போதம் என்னப்படும் பசுபோதத்தை மேலே எழவொட்டாது சிவஞான முகிழ்ப்பானே அடக்கிவிடுதலாம் என்றும் செம்பொருள் புலப்படுதல் காண்க.

இவ்வுண்மைப்பொருளை நோக்குமிடத்து ஆன்மாவின் றன்மையும், அதற்காகச் செயற்பாலனவும், செய்தாற் பெறுங் கதியும் ஒரு வாறு அறிஞர்க்குத் தெளிவாகும். ஆகவே லௌகிக சம்பந்தம் பெறுங் கெடுதியை யுண்டாக்கி ஆன்மலாபத்தைத் தடுத்து அரூநரகத்தை ஆட்சியாக அவ்வான்மாவுக்குக் கொடுக்கும் என்பது நிதர்சனமாம்.

உலகத்திலே விரும்பும் பொருட்கள் பலவாய் விரியினும் ஆன்றோர் சுருக்கி விளக்கியிருக்கின்றார்கள். உலகவேடணை; உலகமே நமது சாஸ்வதமான இடம் என்றும், அதிலுள்ள மாடு கன்று காணி வீடு முதலியவைகள் நம்முடையவைகளென்றும் செல்லும் பிராந்தி. இரண்டாவது அர்த்தவேடணை; பொருளே பெரிதென்றும் பொருளினாலே செய்த ஆபரணங்களே அலங்கரிப்பன என்றும் பொன்னைத் திரட்டியுருட்டி “பூனை பவ்வீ” ஒழித்தெனக்காக்கும் கசட்டு அறி வுடைமை, மூன்றாவது புத்ரவேடணை; புத்திரனே நம்மைக் கரை யேற்றும் புகழும் வலியும் அமைந்தோன் என்று செல்லும் பற்று. ஈஷணா என்னும் வடமொழி ஏடணை என்றாயிற்று.

நாம் முன்னே எத்தனையோ ஜன்மங்களை எடுத்து எடுத்து எய்த்து இளைத்து மூர்ச்சித்து வருந்துந் தருணத்திலே கருணாநிதியாகிய சிவபெருமான் சிறிது திருக்கடைக் கணோக்கஞ் செய்தருளினார். அஃதாவது விஷத்தினாலே யாது முணராது மயக்க முற்றானொருவனை மாந்திரீகன் கருடபாவனையினாலே நீக்கி அறிவுவரச்செய்து உய்விக்கு மாறுபோலச் சிவபெருமானார் மாயாசம்பந்தமுடைய ஆன்மாக்களை இதனிடத்தனின்றும் நீக்கிக்காக்கவேண்டி அருட்சத்தியை அதிட்டித்து நின்று, கர்மம் சா பேக்ஷ நிலை நாடித் தேகங்களைக் கொடுத்தரு ளினார். அத்தேகங்களுள்ளே அறிவுடைய மாநுஷ்ய தேகமே விழுப்பமுடையதாயிற்று. ஆதலினாலே தான் மாநுஷ்ய ஜன்மம் உத்கிருஷ்டமுடையதென்று மேலோர் வகுத்தனர். (உத்கிருஷ்டம் உயர்வு)

இதனாலே என்ன, நன்றாக ஸ்நானம் பண்ணினோம், கடவுளைப் பிரார்த்தித்தோம். இனி என்னசெய்வது என்று ஆலோசித்தாலோ? தமக்குச் சொந்தமும் நிந்தமும் எவை? இன்னுஞ் செயற்பாலன யாவை? என்றற் றொடக்கத்த இவைகளைச் சிந்திக்கவேண்டிவரும். செய்யவேண்டியவை இறைவாநுக்கிரஹ பாத்யதையான சற்கருமங்கள். இக்கருமங்களைக் செய்யவொட்டாது மாயாசத்தி கெடுக்கும்.

அம்மாயாசத்தியை அச்சமின்றி நீக்கவல்லது அறிவாகிய மெய்ச் சத்தியேயாம். அறிவு உதயமானவுடன் ஆநந்தஸ்வரூப சிவம் இனிது விகலிக்கும். சுடலை ஞானம் பெற்றுக் கடவுளையடைய முடியாது. ஆதலினாலே என்றும் உள்ளது சத் என்றும் வேதாகம உபநிஷத உபபிருங்கணாதிகள் உத்கோஷிக்கும் பரமசிவ பரம்பொருளைத் திரிகரணங்களினாலேயும் வழிபட்டு, ஆசையாகிய மாசையொழித்தலே முறையாகும். மனசு இச்சையுடையது; அவ்விச்சை அவிச்சையேயாம். ஆன்மாவுடன் நமது வீடு வருமா? நமது பெண்டீர்வருவாளா? நமது உடுதுணிவருமா? நமது கை வருமா? பிறிதான இனிய பொருட்கள் யாதும் வருமா? இறக்கும்போது இவை யொன்றும் வராவன்றோ !. அன்பீர்! “காதற்ற ஊசியும் வாராதுகாணும் கடைவழிக்கே''  ஆ! இவ்விதமான வாக்குக்களை அறியாமையினாலே தெரியாத்தனமுடைய வர்களைச் சேர்ந்து தெரியாத்தினத்து என் செய்வோம் ! என்ன துணை யாகும்? ஒன்றுந்துணையாகாவன்றோ! பின்னை நன்னேயத்தை எங்கே வைக்கவேண்டும்? வெளிப்பெட்டியிலன்று! ஹீரதயமாகிய உட்பெட்டியிலுள்ள நன்மணியிடத்திலே நமதுமனஞ் செல்லல் வேண்டும். இன்பநெறிக்கெல்லாம் மேலான இன்பநெறி காட்டுவது அப்பெரும்பரம் பொருளிடத்து அமைந்த கருணையாகும். இவைகளைப் பத்திய ரூபமாகவே அடியார்கள் அநுபூதியிற்கண்டு தெளிந்து மகிழ்ந்து அருளிச் செய்தார்கள்.

அடியாருறவு நின்பூசை நேசமுமன்பு மன்றிப்
படிமீதில் வேறுபயனுளதோ பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் வாரமும்வாழ்வுங் குயக்கலங்கள்
தடியா லடியுண்ட வாறொக்குமென்றினஞ் சார்ர் திலரே.

என்று பட்டினத்தடிகளும்;

காயமே கோயிலாகக் கடிமன மடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிரைய நீ ரமையவாட்டிப்
பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.

கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க் குழற்பாவை நல்லாரினுந்
தனிமுடி கவித்தாளு மரசினும்
இனியன்றன் னடைந்தார்க் கிடைமருதூரனே.

என்று திருநாவுக்காசு நாயனாரும் அருளிச்செய்தார்கள். இவைமாத்திரமா?
குசேலோபாக்கியானத்தும்,

சாருறு தந்தையாருந் தாயரு மனந்தஞ் சன்ம, வூருமோ ரனந்தம் வாய்த்த வுறவுமோ ரனந்தம் பெற்ற, பேருமோ ரனந்தங் கன் மப் பெருக்கமு மனந்தங்கொண்ட, சீருமோானந்த மின்னுஞ் சேர் வதுமனந்தமாமால்.

என்று கூறப்பெற்றதுங் காண்க.

திரட்டுரை.

இதுவரையுஞ் சுருக்கி எழுதப் பெற்றவைகளானே இவ்வுலகத்துப் பொருட்களினும், மனை, புத்திரராதியோர்களினும், மனதைச் செலுத்தாது மனோசங்கற்பத்தில் இவைகளைக் கனாப்போல நினைந்து ஒதுக்கிவிட்டு, நிலையான பொருளாய கடவுளிடத்தும் மெய்யடியாரிடத்தும் சத்கதா காலக்ஷேப, மஹோபந்நியாச, புராண சிரவணாதிகளிடத்தும் மனதைச் செலுத்தியும் நமது வாணாளைக் கழித்தல்வேண்டும் என்பதாம். ஏன் அங்ஙனஞ் செய்யவேண்டுமென்றால் “பற்றித் தொடரு மிருவினைப் புண்ணியபாவமுமே” ஆதலினென்க, குரு வாழ்க.
முத்தாந்தவீதி முளரிதொழு மன்பருக்கே
சித்தாந்தவீதிவருந் தேவே பராபரமே.

இங்ஙனம்,
வ. மு. இரத்திநேசுவரையர்,
தமிழ்ப்பண்டிதர்.

சித்தாந்தம் – 1916 ௵ - பிப்ரவரி ௴


No comments:

Post a Comment