Saturday, May 9, 2020



திருநீறும் உபநிடதங்களும்
[பெ. திருஞான சம்பந்தன் M. A. L. T.]

அதர்வவேதத்தைச் சார்ந்த பஸ்மஜாபாலோப நிடதத்தில் நீறணிய வேண்டிய முறை கூறப்பட்டுள்ளது. இது சதாசிவனால் ஜாபாலரான பஸுண்டருக்கு அருளப்பட்டது. பஸ்மத்தை முதலில் காயத்ரியினால் புரோக்ஷணம் செய்து, பொன், வெள்ளி, தாமிரம் அல்லது மண்கொண்டு செய்யப்பட்ட குடுவையில் இட்டு, பின்னர் ருத்ர மந்திரங்களால் புரோக்ஷணம் செய்து தூய இடத்தில் வைக்கவேண்டும். அந்தணர்கள் நீறணியாமல் எதையும் பருகுதல் கூடாது. காயத்ரியை ஜபித்தல் கூடாது. அவிசொரிதல் கூடாது. வேதம் ஓதுதல் கூடாது. தர்ப்பணம் செய்தல் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. நால்வகை ஆசிரமத்தாருக்கும் நீறணிதல் பொது. இதைச் செய்யாதொழியின் பாவமாம். அதற்கேற்ற பிராயச்சித்தம் செய்தல் வேண்டும். துறவி ஒருவர் நீறணிவதினின்றும் ஒருமுறை வழுவினாரேனும் உபவாசம் இருந்து பன்னீராயிரம் முறை பிரணவத்தை ஜபித்துத்தான் தூயவராதல் முடியும்.

நீறணிவதால் களவு, குடி முதலான மாபாதகமும் கழியும். முப்போதும் திருநீறணிவார் வேதமோதிய பயனை அடைவர். தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பயனைப் பெறுவர். சகல ருத்திர மந்திரங்களையும் ஜபித்தவர் ஆவர். நீண்ட ஆயுளைப் பெறுவர். பிரஜாபதி, குபேரன், பசுபதி இவர்கள் நிலையை அடைவர். ஜாபால்யுபநிடதத்தில் பசுபதி ஞானமே நீறணிவதால் ஏற்படுகிறதெனக் கூறப்பட்டுள்ளது.

காலாக்னிருத்ரோபநிடதத்தில் த்ரிபுண்ட்ரத்தை பாவனை செய்ய வேண்டிய முறை விவரிக்கப்பட்டுள்ளது. த்ரிபுண்டரத்தின் மூன்று கோடுகளும் முறையே வேள்வியில் வளர்க்கப்படும் கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆஹவயேம் என்ற முத்தீயாகவும், ரஜஸ், ஸத்வம், தமஸ் என்ற முக்குணங்களாகவும், அகார உகார மகாரமாகிற பிரணவ வர் ணங்களாகவும், கிரியாசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி என்ற முச்சக்திகளாவும், ருக், யஜுஸ், சாமம் என்ற மூவகை வேதங்களாகவும், பிராதஸ்ஸவனம், பாத்யந்தின ஸவனம், த்ருதீய ஸவனம் என்ற மூன்று கிரியைகளாகவும், மகேசு வான், சதாசிவன், மகாதேவன் என்ற மும்மூர்த்திகளாவும் பாவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிருஹஜ்ஜாபாலோபநிடஷத்தில் திருநீற்றுக்கு ஐந்து பெயர்கள் குறிக்கப்பட்டு அவற்றின் விளக்கமும் தரப்பட்டுள்ளது. அவை விபூதி, பஸிதம், பஸ்ம, க்ஷாரம், க்ஷா என்பன. இவை இறைவனின் ஐந்து முகங்களோடும் தொடர்புடையன. சத்யோஜாதத்தினிடமிருந்து நிலம் தோன்றியது. அதனின்றும் நிவிருத்திகலையும் அதனின்று 'நந்தா' என்ற கபிலைப்பசுவும் தோன்றியது, அதன் கோமமே விபூதி. எல்லா பூகி (ஐசுவரியம்) களுக்கும் காரணமாக இருத்தலின் அப்பெயர் பெற்றது. வாமதேவத்தினின்று நீரும், அதனின்று பிரதிஷ்டாகலையும் அதனின்று 'பத்ரா' என்ற காராம்பசுவும் தோன்றியது. அதன் கோமயமே பஸிதம். எல்லாப் பாவங்களையும் பக்ஷணம் செய்வதால் 'பஸிதம்' எனப்பட்டது. அகோரத்தினின்றும் தீயும், அதனின்று வித்யாகலையும் அதனின்று 'சுரபி' என்ற செம்பசு வும் தோன்றியது. அதன் கோமயமே பஸ்மம் எனப்படுவது. ஒளிர்வதால் (பாஸம்) அப்பெயர் பெற்றது, தத்புருஷத் தினின்றும் வாயுவும் அதனின்றும் சாந்திகலையும் அத னின்று 'சுசீலா' என்ற வெண்பசுவும் தோன்றியது. அதன் கோமயமே க்ஷாரம். ஆபத்துக்களை அழிப்பதால் (க்ஷார ணம்) அப்பெயர் பெற்றது. ஈசானத்தினின்றும் ஆகாயமும் அதனின்றும் சாந்திய தீதகலையும் அதனின்று 'சுமனா' என்ற பல்வண்ணப்பசுவும் தோன்றியது. அதன்கோமயமே ரக்ஷா. பூதம், பிசாசு, அரக்கர், அபஸ்மாரம், சம்சாரம் இவற்றால் ஏற்படும் பீதிகளினின்றும் காப்பதால் 'க்ஷா எனப் பட்டது.

திருநீற்றின் பெருமையை விளக்க எழுந்த கதை இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது. வசிஷ்ட கோத்திரத்தில் தோன்றிய தனஞ்ஜயன் என்ற அந்தணருக்குக் கருணன் என்றொரு புதல்வர். அவருக்கு சுசிஸ்மிதை என்ற மனைவி இருந்தாள். ஒருமுறை அவர் பவானிக்கரையிலுள்ள நிருசிம்ம மூர்த்தியை அடைந்தார். அங்கு இறைவனுக்குப் படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பழத்தைப் பார்த்தார். அதைக் கண்ணுற்ற ஆங்கிருந்த பக்தர்கள் வெகுண்டு நீர் ஈயாக வாழக்கடவீர்' எனச்சபித்தனர். ஈ உருவம் பெற்ற அவர் தன் மனைவியிடம் நிகழ்ந்ததைக் கூறி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். எனினும் அவரது உறவினர்கள் அவ்வீயை எண்ணெயில் எறிந்து கொன்று விட்டனர். மனைவி இறந்த கணவனைத் தாங்கி அருந்ததியை அடைந் தாள். அருந்ததி மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து விபூதியைத் தூவினாள். அகன்ற உயிர் மீண்டது, - அவர் தான் பின்னர் ததீசி முனிவர் என்று போற்றப் படுகின்றவர்.

மேலும் சுவேதகேது, தூர்வாசர், ஜடபரதர், தத்தாத்ரேயர் முதலானோர் திருநீற்றை அணிந்ததனாலேயே முத்தியடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. நீறணிவதனால் சிவசாயுஜ்யத்தையும் பெறலாம் என யாக்ஞ்யவல்கியர் ஜனகருக்குக் கூறுகிறார்.

இவற்றுடன் நீறில்லா நெற்றி பாழ்' சிவாலயம் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், ஈசனை வழுத்தாத பிறப்பு வீண், சிவனைப் பற்றாத வித்தை நிந்திக்கத்தக்கது' என்பன போன்ற கருத்துக்களும் இவ்வுபநிடத மந்திரங்களில் காணப்படுவனவாம்.

இவற்றை யெல்லாம் பார்க்கும்போது 'மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, வேதத்திலுள்ளது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, போதந்தருவது நீறு, புன்மை தவிர்ப்பது நீறு, முத்தி தருவது நீறு, முனிவரணிவது நீறு என்றெல்லாம் திருஞானசம்பந்த மூர்த்திகள் போற்றியிருப்பதில் வியப்பில்லை யன்றோ?

சித்தாந்தம் – 1964 ௵ - செப்டம்பர் ௴


No comments:

Post a Comment