Saturday, May 9, 2020



திருநீலகண்டர் புராண சாரம்
வித்துவான் - ஆ. சிவலிங்கம்,
தமிழ் விரிவுரையாளர், சி. பா. சு. தமிழ்க் கல்லூரி, மயிலம்

உலகிற் பிறந்த நாம், துன்பத்தைப் போக்கி இன்பத்தை அடைய விரும்புகிறோம். இதனால் நம்மிடம்இன்பக் குறைவும், துன்ப நிறைவும் உண்மையை அறிகிறோம்.இன்பம் நல்வினை காரணமாக வருவது; இது கொள்ளத்தக்கது. துன்பம் தீவினை காரணமாக வருவது; இதுதள்ளத் தக்கது. நல்வினையிற் சிறந்தது அறஞ்செய்தல்.அறமாவது யாது? உண்டி, உடை, உறையுள் (இருப்பிடம்)கொடுத்தலாம். பொதுமையின் நோக்கின், வறியார்க்குஅவர் தம் வறுமையறிந்து வழங்குவது எனக் கூறலாம். வறிஞர்க்குப் பயன்படு நிலையிற் செய்வன யாவும் அறங்களே. இவ்வறத்திற்கு இன்றியமையாச் சார்பாவது அன்பு அறம் செய்து இன்பத்தினையடைய விரும்புவோர் அன்பு உடையராதல் வேண்டும். "அறத்திற்கே அன்புசார் பென்ப" என்ற வள்ளுவர் மொழியில், மறத்திற்கும் துணையாகக்கூடிய அன்பு, அறத்திற்கும் சார்பென்பது போதரும்.

இவ்வன்பு முதிர முதிர, அருள் தோன்றும். “அருளென்னும் அன்பீன் குழவி'என்ற குறளையும் காண்க.- அருளாவது யாது? பகைவரும், நண்பரும் அல்லாத நொதுமலரிடத்தே தோன்றும் பற்றுள்ளம். அதாவது இரக்கம்.

அருள் காரணமாகத் தவம் பிறக்கும். தவமாவது யாது?

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு"

எனும் பொய்யா மொழியைக் கண்டு தெளிக. இங்ஙனம் இயற்றப்படும் தவம் காரணமாகச் சிவம் வெளிப்படும். இச்சிவம் தரும் இன்பமே பேரின்பமாம். நல்வினை காரணமாகஅடையும் இன்பமும் இதுவே. (சிற்றின்பங்கள் இப்பேரின்பத்திற்கு முன்னர் துய்க்கப்பட்டு வெறுக்கப்படுவனவாம்.ஆதலின் அவற்றை பற்றி ஈண்டு கூறப்படவில்லை.)

இதுவரையும் நாம் அறிந்ததாவது : இன்பம் அடையகல்வினை வேண்டும்; நல்வினையாவது அறம் செய்தல்; அறத்திற்கு அன்பு வேண்டும்; அன்பின் முதிர்வே அருள்; அருளால் தவம் பிறக்கும்; தவத்தினால் சிவத்தைக் காணலாம் :சிவம் தரும் இன்பமே பேரின்பம் என்பன. இதனால் சிவம்தரும் இன்பத்தை அடைய ஒருவனுக்கு அறம், அன்பு,அருள் தவம் ஆம் இவைகள் இன்றியமையா தன என்று அறிகிறோம். இவவுண்மையை வெளிப்படுப்பதே "திருநீலகண்டர் புராணம்." இவ்வுண்மையே அப்புராணத்தின் சாரம். அதனை, இனிச் சரிதத்தில் நுழைந்து கண்டு மகிழ்வாம்.

தில்லை (சிதம்பரம்) மூதூரில் குயவர் குலத்துத்தோன்றி, “அற்புதத் தனிக் கூத்தாடும், நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கா” ராகி, சிவனின் நஞ்சுதங்கிய கண்டத்தை வியந்து "திருநீலகண்டம்”, “திருநீல கண்டம்" எனப் பலகால் கூறி, அதனால் “திரு நீலகண்டர்” எனச் சிறப்புப் பெயர் வாய்க்கப் பெற்று “ அருந்ததிக் கற்பின் மிக்க ' " மனைவியாரோடு இல்லறம் நடத்' தும் நம் திருநீலகண்டர்,“ மன்றுளார் அடியார்க்கு என்றும்,உளமகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகி” னார் என நம்சேக்கிழார் பெருந்தகையார் கூறுகின்றார். பேரின்பத்தைவிரும்பிய நீலகண்டர் ஓடு அளித்தலாகிய அறத்தைச் செய்தனர் என ஈண்டு நாம் அறியவேண்டும். "உளமகிழ் சிறப்பின்” என்றமையின் தம்மால் விரும்பப்பட்ட அடியவர்கட்கு அன்புடன் ஓடளித்தமை பெறப்படும். அன்றியும், தாம்கொண்ட கூடா ஒழுக்கம் காரணமாகத் தம் மனைவியார் கொண்ட புலவி (ஊடல்) நீக்கவிரும்பி “வேண்டுவ இரந்துகூறி” னார் எனச் சேக்கிழார் கூறுமிடத்து, தமது மனைவிமாட்டு அடியவர் கொண்ட அன்பு வெளிப்படும். இதனால் அறத்திற்குரிய அன்புடையர் நீலகண்டர் என்பதை உணரலாம்.

மனைவியாரை மெய்யுற அணையச் செல்லுங் காலத்தில் “தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்” எனத் தமக்கு வைத்த ஆணையை மீறாத நீலகண்டர். தமக்குரிய - சொந்தமான - தம் வழி நடக்கும் கற்பின் மிக்க மனைவியாரை,“ ஏதிலார் போல நோக்கி " னார். (ஏதிலார் - நொது மலர்) தமது சொந்த மனைவியென்றோ, அன்றித் தம் எண்ணத்தை நிறை வேற்றாது ஆணையும் வைத்தமையால் பகைமை உடையாள் என்றோ நோக்காது, நொதுமலர் போல நோக்கியது அருள் நோக்கு என்க. இதனால் நம் அடியவர் அருளுடையவராகின்றார்.

இவ்வருள் காரணமாகத் தவம் அவர்பால் தோன்றியது. தமக்கு இளமை பாழ்படுதலாகிய நோயை (துன்பத்தை) மேற் கொண்டார். தமதெண்ணம் (மாதரைத் தீண்டாமை) கெட, மனைவியாம் உயிர்க்கு (வைத்த ஆணையை மீறுதலாகிய) உறுகணும் (துன்பம்) செய்தாரில்லை. ஆகத் தவத்தை மேற்கொண்டவர் நம் அடியார் என்பது தெரியும்.

"இந்நெறி ஒழுகும் நாளில் எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையான் தானும் தொண்டரை விளக்கம்காண
நன்னெறி யிதுவாம் என்று ஞாலத்தார் விரும்பியுய்யும்
அந்நெறி காட்டு மாற்றால் அருட்சிவ யோகி யாகி''
 - பெரிய புராணம்

வந்தார் எனச் சேக்கிழார் கூறுகின்றார். தவத்தினை மேற்கொண்ட நீலகண்டரது நெறியினை உலகறிந்து உய்ய இறைவன் விரும்பி, சிவயோகியாகி வெளிப்படுகின்றான். வெளிப்பட்டு நீலகண்டர்பால் ஓடளித்துச் செல்லல் முதலிய யாவும் நாம் அறிந்தனவே. ஆதலின் கதையைத் தொடராது விடுகின்றேன்) இதனால் தவமுள்ள இடத்தில் சிவம் வெளிப்படும் என்பது தெரிகின்றது. இக்கட்டுரையால் “திருநீலகண்டர் புராணசாரம்” வெளிப்படும்.
[மறைத் திரு ஞானியார் அடிகள் திருக்கோவலூரில் " திருநீலகணடர் " என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவில் யான்எடுத்த குறிப்பின் சாரம் இக்கட்டுரை.      ஆ. சி.]

சித்தாந்தம் – 1943 ௵ - ஜுன் ௴


No comments:

Post a Comment