Saturday, May 9, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சமயசூக்கும பஞ்சாக்ஷரம்.

சமய சூக்கும பஞ்சாக்ஷரத்தின் தாத்பரியம் நான்கு அதன் அக்ஷரம் ஐந்து.

சிவாயநம: இதன் தாத்பரியம் நான்குவகை. பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் என்பனவாம். சிவனை நமஸ்கரிக்கின்றேன் என்பது பூர்வத்தின் அர்த்தம். அநாதியில் மலமின்றியும் எல்லாமுடைய சிற்சத்திக்கு எனது கரணங்களைச் சமர்ப்பிக்கின்றேன் என்பது பூர்வபூர்வத்திற்குத் தாத்பரியம். உத்தரம் உத்தரோத்திரத்தை அனுபவத்தாலறிக.

இதுபோல் மதசன்மார்க்கத்திற்கும் அக்ஷரமே மேல் குறித்தபடி இதற்கும் நான்கு தாத்பரியம் உள்ளது. பூர்வத்தின் தாத்பரியம், சி என்பது பதி, வா என்பது சக்தி, ய என்பது ஜீவன், ந என்பது திரோதை, ம என்பது மஹாமாயை. ஆதலால் மஹாமாயை திரோதை நீங்கி ஜீவபோதமற்று அருள்வடிவாய்ச் சிவமாவது.

பூர்வபூர்வத்தின் தாத்பரியம், சி என்பது எல்லாம் உடையது, வா என்பது அபின்னமாகிய அருள், ய என்பது ஆன்மசிற்சாயை, ந என்பது ஜீவன், ம என்பது பசு. ஆதலால் பசுத்தன்மை கெட்டு ஜீவபேதம் போய் ஆன்ம இயற்கைவடிவாய்ச் சத்துவமயமாய் எல்லாம் உடையதுவாய் பூரணமாய் நிற்றல். ஒருவாறு அநுபவத்தில் பரவிந்து பரநாதம் பரத்திலும் அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும் இவ்வளவும் செபமூலமா'யக் கரணசுத்திவந்து அக்ஷரம் உன்னு தலைவிட்டு அறிவாகிருதியாய்க் கருணை யுஞ்சிவமே பொருளென்னும் படி நின்றார்க்கு முதற்றுவாரமாம்.

மற்ற உத்தரத்தில் ஏமசித்தியும் உத்தரோத்திரத்தில் தேகசித்தியும் சொல்லும், இது மதசன்மார்க்க அனுஷ்டானம். இதுபோல் சமயத்திலும் தேகசித்தி ஏமசித்தி உளது, மேற்குறித்த சமயமதங்களில் விரிவு அநந்த கோடி.

அந்தச் சித்திகள் யாவற்றும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்திதலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும். ஆதலால் மேற்குறித்த இரண்டு சித்தியும் எக்காலத்தும் அழிவுறாது இருப்பதாகச் சொல்வது சுத்தசன்மார்க்க பூர்வோத்திரம்.

ஏமசித்தி தேகசித்தி மேற்குறித்த சூக்கும பஞ்சாக்ஷரத்தில் சொல்வதற்குப் பிரமாணம். 'சிவாய நம வெனச் செம்பு பொன்னாய் விடும்", சிவாய நம வென்று சிந்தித் திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை."

ஆதலால் மேற்குறித்த அக்ஷரத்தை மகான்கள் குழூஉக்குறி வடிவமாய்ச் சுட்டினார்கள். இதைச் சுக அநுபவிகள் தத்துவார்த்தங்களை அறிந்து அநுசந்தானஞ் செய்வார்கள். சாதகிகளுக்கு நாவினால் உன்னில் சரணம் ஓய்ந்தால் தத்துவாநு சந்தானஞ் செய்யக்கூடும்.

உலகின் கண் நாவினால் உன்னில் தங்கள் மனோரதம் சித்திக்கும். வகர வித்தை உடையவர்கள் மேற்படி அக்ஷரத்தின் உண்மையை பௌதிகம், உலோகம், ஓஷதி, லவணம் முதலியவற்றிற்சேர்த்து வகரத்தை முடிப்பார்கள். தகரத்தை உடையவர்கள் அது போலவே அமைத்துக் கொண்டு தேகத்தை நீடிக்கச் செய்வார்கள். ஆதலால் மேற்குறித்த அக்ஷரங்கள் பரிபாஷையாக இருந்தது. உண்மையாவற்றும் சுத்தசன்மார்க்க சகஜசாத்திய ஞானாநுபவிக்கு விளங்கும்.

மேலும், சி என்னும் எழுத்துக்குப் பொருள் ஒருவாறு இதில் அடங்கிய பீஜம் ஐந்து. அவையாவன:
(1) தோன்றி அசைதலாகிய விந்து
(2) அதன்புடைபெயர்ச்சி ஒலியாகிய நாதம்.
(3) அதன்வர்ன வடிவமாகிய வரி அக்ஷரத்தின் சகர மெய் என்னும் இச்
(4) அதனது குணங்களை வெளிப் படுத்தும் ஆதி அக்ஷரமாகிய பிரணவமூல ஆகாசம்.
(5) இதை தன் வண்ணச் சுபாவத்தோடு வெளியில் தோன்றச் செய்வித்து விளக்கும் அருட் பிரணவ மாகிய இகாரம்.

ஆக கூடிய விந்துக்கள் ஐந்தும் ஒருருவமாய் சிகரம் ஆயிற்று. இதன் இலக்கணம் விரிக்கிற் பெருகும். அநுபவத்தால் அறிக.

(திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள் எழுதிவைத்த குறிப்பினுள் கண்டது.)

காஞ்சி. நாகலிங்க முதலியார்.

சித்தாந்தம் – 1916 ௵ - செப்டம்பர் ௴
             

No comments:

Post a Comment