Saturday, May 9, 2020



சமரசம்
சமரசம் என்னும் சொற்றொடர் சமம், ரசம் என்று பிரிகின்றது. சமம் என்றபதம் ஒற்றுமை,'ஒப்பு'என்று பொருள் படினும், இன்னொரு பொருளும் அதற்குண்டு. அதாவது பட்சபாதமின்மை (impartiality.) மாக்டானல்ஸ் சமஸ்கிருத அகராதியைப் பார்க்க. சமதிருஷ்டி, சமதர்ஸனம் என்பதும் அதுவே. பலவற்றின் உண்மையை விசாரித்துழி, ஒன்றின் மேலும், விருப்பு வெறுப்பு மேம்படாமல், உள்ளதை உள்ளபடியறிதல் என்பது தான் அதன் கருத்தாகின்றது. இருவினையொப்பு' (கர்மசாம்யம்) என்னும் சொற்றொடரில், ஒப்பு என்ற பதமும், சமம் என்னும் பதத்தின் மொழிபெயர்ப்பேயாகி, சாதாரணமாக ஒற்றுமையாதல் ஒத்தல், எனப் பொருள் விளக்கினும், அது உணமையா காது, விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தல் என்னும் பொருளே சிறந்தமை காண்க.  எப்படியெனின், இருவினையொப்பு உண்டாதல், ஒருவன் செய்த புண்ணியமும் பாவமும், இரண்டு தட்டில் வைத்து நிறுத்தால், எப்பொழுது நிறை சரியாகுமோ, அப்பொழுதே இருவினையொப்பு உண்டாகுமென்கிறார்கள். இது சரியான கருத்தன்று. இரண்டு தட்டிலும் பொருள் நிறைபவைக்க எவ்விதம் நடுமுள்ளானது இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் சாயாது நடுவில் நிற்குமோ அவ்விதமே, ஒருவன் மனம்; நல்வினையில் (தனக்கு இன்பம் தருவதில்) விருப்பும்; தீவினையில் (தனக்குத் துன்பம் தருவதில் வெறுப்புமுண்டாகாதபடி, நடுமையாக நிற்றலே கர்மசாம்ய மடைதலாம். இவ்வொப்பின்மையும், உண்மையுமேயன்றோ பசுவுக்கும் பதிக்குமுள்ள தார்தம்யம்
            வேண்டுதல் வேண் டாமையிலான் அடிசேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.

இவ்வுண்மையுமன்றோ திருப்பாற்கடல் கடைந்த இதிகாசத்திலும் காணப்படுகின்றது. தேவர்கள் முதலாகிய சகலர்கள் தாங் கள் அடைந்திருந்த வறுமையின் மேல் வெறுப்புற்று, அமிர்த முதலிய பொருள் மேல் விருப்புற்று மேல்வினையைச் செய்ததில் சகல பிராணிகளுக்கும் அதனால் உண்டாகிய இம்சையின் பயனா கிய விஷம்பிறந்து அதன் மேலும் வெறுப்புற்று வருந்தினார்கள். இதுவரையும், இறைவன் அச்சகலர்களின் கூட்டத்திற் கலவாது, வறுமையினாலும் வருந்தாது, (அவன் என்றும் பிட்சாடனன்) பொருளையும் விரும்பாது நின்று, விஷத்தினால் பீடிக்கப்பட்ட தேவாதிகள் அலறி முதல்வனை நோக்கி ஓலமிட அவர்களுக்கு இரங்கி, அவ்விஷத்தையுமே தான் அமுதாக்கிக் கொண்டனன்.
ஆகவே சமம் என்ற பதத்துக்கு, ஒற்றுமையென்னும் பொருளைவிட, அபிமானத் தழுந்தாது, உள்ளதை உள்ளபடி உணர்ந்து அதன் உண்மையையறிதல் என்னும் பொருள் சிறக்கின்றது. அதுசமரசம் என்னும் சொற்றொடரையே உய்த்துணரில் இன்னும் நன்றாய் விளங்குகிறது. எப்படியெனின், ரசம் என்பது நாவினால் அறியக்கூடிய சுவையாகி, பல பொருள்களின் சுவை, சார், சாரமென்பதாம். அச்சுவையுமே ஆறுவகையா யுள்ளது. ஆறுசுவையுமே ஒன்றெனின் அது ஒருபோதும் ஒவ்வாது. அப்பொழுது ஆறென்று பிறிவும் ஏற்படவேண்டியதில்லை. கருப்பஞ்சாற்றை விரும்பி ஏற்றவன் வேப்பஞ்சாற்றையும் மகிழ்ந்து குடிக்கவேண்டும். ஒரேவிதப் பழச்சாற்றின்'ஒப்புமை சொல்வதிலும் விசேஷமில்லை. பேதமில்லாத பட்சம், அபேதம் சாதித்தல் அசம்பாவிதமாகும். பேதங்கண்டவிடமே, ஓர்வித சொரூப ஒற்றுமைபற்றி அபேதம் சொன்னால் அதில் சிறப்புண்டு. அணியிலக்கணத்திலும், இவ்வுண்மையை உய்த்துணர்க. ஆகவே சமரசம் என்றதனால், எல்லாப்பழத்தின் சாரமும் ஒன்றாகா. ஒரேவித சாதிப்பழங்களின் சாரமும் ஒன்றெனல் பொருள் சிறக்கா, அபேதமில்லாத விடத்து. ஆயின், சாரங்கள் வேறுபடினும், ஒரே சுவையில்லாவிடத்தும், ஒவ்வொரு பழத்தின் ரசமும் ஒவ்வொரு முக்ய உபகார குணமுள்ளது யாவர்க்கும் கைவந்தது. கருப்பஞ்சாறானது மிக வும் இனிக்கினும், சுரநோயுள்ளானுக்கு அது குணத்தைச் செய் யாது கெடு தலையேவிளைவிக்கும். அப்பொழுது, வேப்பஞ்சாறானது கசக்கினும் குணத்தைக் கொடுக்கும். (வேப்பஞ்சாறும் குயினாவும் ஒரேகுணமுள்ளது) கர்ப்பிணிக்கு மதுரமான பதார்த்தத்தில் வெறுப்பும், புளிப்பில் விருப்பும் உண்டாகின்றது. ஆகவே சாரங் கள் வேறுபடினும், அதனை நோக்காது, ஒன்றை விரும்பியும், ஒன்றை வெறுக்கவும் செய்யாது, அதன் உண்மைகுண விசேஷத் தைக் கைக்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி அதனைப் பிரயோகப் படுத்துவதே அதன் சமாசத்துவமாகும். இச்சமரசத்தை மதங் களில் ஏற்றிக் கூறுமிடத்தும், இவ்விதமான பொருள் ஒற்றுமை மிகவும் சிறக்கின்றது. எல்லாமதங்களும் ஒன்றாகா. தெய்வமில்லை என்கிற மதமும் சீவனில்லையென்கிற மதமும், இவையிரண்டு முள்ளது என்று கொள்ளும் மதங்களும் ஒன்றாகா. இவ்விதமாகவே, புறப்புறச்சமயங்கள் புறச்சமயங்கள், அகப்புறச்சமயங்கள், அகச்சமயங்கள் என்று எண்ணப்பட்டவைகள் ஒன்றோடொன்று ஒன்றாகா. ஆயின் இச்சமயங்களிலும் ஒவ்வொரு உண்மை கிடக்கின்றது. ஒவ்வொன்றும் ஆன்மாக்களுக்கு ஒவ்வொரு பிரயோசனத்தை உண்டாக்கியே நிற்கின்றது. அவ்வவர்களுக்கும் ஒன்று பயன்படுவது போல், மற்றையது பயன்படாது, அந்நிலையிலிருந்து அப்பொருளையுணர்ந்து அப்பயனையடைந்து பரிபக்குவப்பட்டகாலத்தில், அதன் மேல்நிலையிலிருக்கும் பொருளைக்காணின், அதன் மேல் அவாவுறும். இதனானே எல்லாச் சமயங்களும் இறைவனால் ஆக்கப்பட்டதென்றும், அவன் ஆணைவழி நிற்கின்றதென்றும் சொல்வது. எல்லாச் சமயங்களையும் சோபான மார்க்கங்களாகக் கொண்டதும் இக்கருத்தைப்பற்றியே யென்பதாம்.'இதுவாகுமதுவல்லவெனும் பிணக்கதின்றி'என்றதின் உண்மையும் இதுவாகும். ''நீதியினால் இவையெல்லா மோரிடத்தே காண்பது'' ஒப்பற்ற ஓர்சமயத்தில் காணக்கிடக்குமே யல்லாமல், சமயகோடிகளில், ஒவ்வொருவரும் தங்களுடன் மற்றவர்களைச் சமப்படுத்தார்கள். ஒன்றுபடார்கள். 'நீதியினால்' என்றதின் விசேடத்தை மிகவும் கவனிக்கப்பாலது. இச்சமரசம், விளக்கெண்ணெய், வெண் டக்காய், சேப்பங்கிழங்கு முதலாயின் சேர்த்துச்செய்யுங் குழகறி போல்வ தொன்றன்று. அல்லது, ஒருவர் சொல்கிறார். புத்தர் கள் விஞ்ஞானம் என்ற பொருளை அங்கீகரிக்கிறார்கள். உபநிடதங் களில், விஞ்ஞானம் என்ற ஒருபொருள் பிரஸ்தாபிக்கப் படுகின் றது. அதற்கு ஆத்மா என்ற பொருளும் காணப்படுகின்றது. ஆகையால், புத்தர்களும் பிரம்மவாதிகளன்றோ என்பது. இது வும் சமரசமாகாது. ஏனெனில், இந்த விஞ்ஞானமும், இல்லாத மாயையினின்றும் உண்டாகியது. உபநிடதங்களில், விஞ்ஞானம் என்றதற்கு இரண்டு பொருள் உண்டு. மாயையினின்றும் உண்டாகிய புத்தி ஒன்றும் அதற்கு அதிகமாகிய ஆன்மா (சீவான்மா - பரமான்மாவன்று) ஒன்றும் சமயப் பிரயோகங்களை நோக்கியே, இவ்விரண்டில் ஒருபொருளைக் கொள்ள வேண்டி யிருக்கின்றது. ஆகவே, எல்லாச் சமயங்களையும் சமரசபாவனை செய்யவேண்டுவதென்பது, நீதியினால் ஆகவேண்டுமே தவிர அவரவர் நினைத்த படியுமாகாது.
மேல், நம்மான்றோர், வேதாந்த சித்தாந்த சமரசத்தையே மிகவும் போற்றியதென்னை எனின், அதன் கருத்தை விசாரிப்பாம். இதில் வேதமென்பது இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்பட்டு, ஒவ்வொன்றும் சம்மிதை பிராம்மணம் என இருவகைப்படும். சம்மிதை மந்திர ரூபமாக, பெரும்பாலும் பல தேவதைகளின் ஸ்தோத்திரமாகி, அக்னிஷ்டோமாதி யாகங்களில் பிரயோகப்படும். பிராம்மணத்தில் இப்பிரயோகங்களையும், யாகஞ் செய்ய வேண்டிய விதிகளையும் கூறுவதுடன், ஆரணியபாகம் என்று 'சொல்லப்பட்டதில், சில புராண சரித்திரங்களும், ஹிதோபதேசங்களும் உபநிடதங்களும் காணப்படுகின்றன. மந்திரபாகங்களில், அறம்பொருள் இன்பத்தை வேண்டியபாகம் அதிகமாகவும், வீட்டு விஷயத்தைக் குறித்தது மிகவும் சிறுத்தும் காணப்படுகிறது. உதாரணமாக, இருக்கில்,'இருபட்சிகள் ஒரேமாத்தில் வசிக்கின்றது'என்றதும்,“ ஒன்றே சத் உள்ளது அதனை விப்பிரர்கள் வெகுவிதமாய்ச் சொல்லுகிறார்கள்'' என்றதும் நாசதசத்'சூக்தமும், இன்னு மிரண்டொன்றுமே முக்யமாய்க் காணப்படுகின்றது. இந்திரன் அக்னி வாயுமுதலான தேவர்களை வரிக்கும் மந்திரங்கள் அநேகமாகவும், ருத்ரன் விஷ்ணுவைக் குறிக்கும் மந்திரங்கள் கொஞ்சமாகவும். காணப்படுகின்றன. யஜுர்வேதத்தில், சதருத்ரியம் என்னப்பட்ட பாகமேமுக்ய பாகம். இதன் மத்தியில் நமசிவாய: என்னும் பஞ்சாட்சர மந்திரம் படிக்கப்படுகிறது. இந்தச் சதருத்ரியத்தைத் தான் புராண இதிகாசங்களில் எல்லாம் விதந்து எடுத்து ஒதப்படுகிறது. ஆயினும், இருக்கிலேயே ருத்ரனைச் சிவமாகவும், யக்ஞங்களுக்கு அதிபதியாயும், அதன் பலனைத் தருபவனாகவும், சுதந்தரமுள்ளவனாகவும் பரமயோகியாகவும் காட்டப்படுகின்றது. நித்திய யசுர்வேதத்தில் இதனையே மிகவும் விளக்கியிருக்கின்றது.
மேற்சொன்ன உபநிடதங்களே வேதாந்தம் என்றும், வேதசிரசு என்றும் கூறப்படும். இதில் முக்யமாய் ஞானபாகத்தை யெடுத்து ஓதும். இதில் பதிபசுபாசங்களின் உண்மைகளையும், பாசவீக்கத்திற காகவேண்டிய வித்தைகளை (உபாசனை களை) யும் கூறும். யஞ்ஞாதிகளைச் செய்வதினால் அடையும் பலன் நித்தியமல்லவென்று அவற்றை யொதுக்கியும் தள்ளும். சிவாகமங்கள் 28 - ஆக எண்ணப்பட்டு மேற்படி விஷயங்களை விரித்து, மோக்ஷலாப மடையவேண்டி மட்டும் உபாசனைகளுக்காக அதுகரணமான மந்திர தந்திரங்களைச் சொல்லும். இக்கிரியைகளில் உபயோகப்படு மந்திரங்கள், அதனைச் செய்யும் முறைகளும் வேதமந்திரமும், பிராமணங்களில் கண்டதுமேயாம். ஆயின், உபயோகப்படுத்து முறை வேறு. வேதத்தின்படி அம்மந்திரங்கள் முதலானவை அறம்பொருள் இன்பமடைதற்கு வேண்டிய யாகாதிகள் சம்பந்தமாகும். சிவாகமவிதிப்படி அவைகளையெல்லாம் ஞானபரமாக்கி உபயோகப்படுத்துகிறார்கள். உதாரணமாக, யாகாதிகளில், ஆடு முதலிய பிராணிகளைக் கொன்று பலியிட்டு அக்கினியில் தகிக்கின்றார்கள். மேற்கூறிய பலனை விரும்பி. ஆகம விதிப்படி, பலியென்றால், பிராணிகளைக் கொல்வதன்று. ஒவ்வொரு சீவனின் அகங்காரமாகிய தற்போதத்தை, பசுத்துவத்தை, ஞானாக்கினியில் தகிப்பதே உறுதியான பலியென்பதாம். இப்பசுத்வம் கழலவும், பதித்வம் கிடைக்கும். நந்தனார் சரித்திரத்தின் உண்மையுமிதுவே. மல சம்பத்திகளா யிருக்கும்வரையும் நாம் மாலர்கள் (பஞ்சமர்கள்) மலம் தகிதமானவுடன் பண்டிதன் (பிராமணன்) ஆகின்றான். *
 [*        அரசுடனாலத்தி யாகுமக்காரம்
      விரவு கனலில் வியனுருமாறி
      நிரவயன் நின்மலன்றாள் பெற்ற நீதர் -
      உருவம் பிரமனுடர்குலமாமே. - திருமந்திரம்.]

"பாசம்தகதிபண்டத்த:" இந்தப் பிராமணபதமே
நந்திபதம், சிவபதம். இவ்விதமான தாரதம்யம் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ளதை கவனிக்கவேண்டும். ஆனால், அவை வேதத்தில் சூட்சமமாகக் கிடக்கின்றது. அதனாலேதான் வேதம் பொதுவென்றும் சூத்திரரூபமென்றும் ஆகமங்கள் சிறப்பென்றும் பாடியம் போன்றதென்றும் சொல்லுகிறது. மேலும் இன்னொன்று. இவ்விரண்டு முதல் நூல்களிலும், சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்குபாதங்களும் பிரஸ்தாபிக்கப்படினும், உபநிடதங்களில் யோகபாதத்தை யே அதிகமாக எடுத்துப் பேசுகின்றது. உபநிடதங்கள் முடிகின்ற பாகமெல்லாம் தத்வமசி முதலிய சிவோகம்பாவனையே எடுத்துச்சொல்லி நிறுத்தும். உபநிடதம்என்றபதமும் யோகம் என்றபதமும் ஒரேபொருள். உபநிஷத் - உப + நி + சத். உப = நெருங்கவும், நி = உபசர்க்கம் மிகுதியை யுணர்த்தும்; சத் = அழிதல். அதாவது ஒன்று மற்றொன்றை நெருங்கவும் நெருங்கவும், ஒன்று அழிகின்றது என்று பொருள். யோகம் என்றது நெருக்கம், ஒன்றாதல் என்பது பொருள். இந்நெருக்கத்தில், ஒன்றுகெட்டாலும், வீட்டின் பயன் இல்லை. ஒன்று அழியாதிருந்தாலு மோட்சமடைதலும் கூடாது. ஆக, உளன்முதல் நான் என்றதுவரை முற்றிலும் அழிந்து ஆன்மாசிவத்தோடு கலந்து அதுவதுவாய்ச் சிவமாகி நிற்றல் என்பது உண்மையாகும்.
   சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்”
    “வான்கெட்டு மாருதமாய்ந்து.”
    “நான்கெட்டவாபாடித் தெள்ளேணம்கொட்டாமோ. "
    “நான்கெட்டுசிவமானவாபாடித் தெள்ளேணம்கொட்டாமோ.”
என்று திராவிட மெழுது மறைமொழிகளைக் கவனித்தால் பொருள் இனிது விளங்கும். மேலும், உபநிடதம் என்ற பதம், சாந்தோக்யம் (11 - 10) ல் உபயோகிக்கப்பட்டு யோகம் என்று ஸ்ரீ சங்கரராலும் அர்த்தம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆக இவ்வே தாந்தநிலை யோகபாதத்தில் நிற்கும். இந்நிலையினின்றுமே ஞான பாதத்தில் இறங்கும். மேல் நாம் ஆறாறு தத்வங்களையும்படி முத்தி பேணியாகச் செல்லவேண்டி யிருப்பதால், இதில் இளைப்பாறுவதற்காக அங்காங்கு சில தட்டுகள், தானங்கள், நிலைகள், பதங்கள், ஏற்பட்டுள்ளன. அதில் நிலைத்து இளைப்பாறியபின் தான் மேல் தட்டை நோக்கிப் படிகள் மீது கால்வைக்க வேண்டும். இம்முறையில் பொதுவாக ஆத்மதத்வம் முடிகிறவரையில் ஒருதட்டு வித்யாதத்வ முடிகிறவரையில் ஒருதட்டு. அதற்கு மேலுள்ள சிவதத்துவங்களிலும் ஒவ்வொரு தட்டு. ஆகவும், உபநிடதங்களில் அநேகமாக, ஆத்மதத்வம் வரையும் ஏறியும், சிலவற்றில், வித்யாதத்வம் வரையுமே ஏறியும், ஒன்றின்மட்டுமே, சிவதத்வத்தைப் பற்றிக் குறித்துமிருக்கின்றது. ஆகமங்களின் மட்டுமே 36 - தத்துவங்களைப் பூராக விவகரித்து எல்லாத் தத்துவங்களும் எல்லாக் கலைகளும், நாதம் நாதாந்தமும் தாண்டிய பதமே, முத்திப்பதமென்று கூறுகின்றது. இவ்விதமாக நாம் விசாரிக்கின்ற காலத்து, வேதம் வேதாந்தமும், ஆகமம் ஆகமாந்தமும் நமக்கு ஒரே இறைவனால் அளிக்கப்பட்டு, பலவேறு பரிபாகமுள்ள ஆன்மாக்கள் அறிந்தவண்ணம் பயன் அடையுமாறும், முடிவில் எல்லாம் ஒரே உண்மைக்கருத்தையுடையதாகவும் காண்கின்றோம். ஆகையால் இவையிரண்டும் ஒன்றே. இரண்டும் பிரமாணமே. மூல நூல்களில் வித்தியாசமில்லை. ஆனால் ஒன்றோடொன்றொவ்வாமல் சபாயங்கள் ஏற்பட்டவிதமெங்ஙனமெனில், ஆன்மாக்கள் பரிபக்குவத்துக்கு அது குணமாகப் படிகளும், நெறிநிலைகளும், கடைசியில் ஒறேதுறையும் ஏற்பட்டிருப்பதால், அவ்வான்மாக்கள் சிற்சில படிகளிலும், நெறிநிலைகளிலும் இருந்தவாறே தடித்து நின்று அந்நிலையை உண்மை நிலையென்று நம்பி அதற்காக அம்முதல் நூல்களினின்றும் விரித்துத் தங்கள் மார்க்கத்தையே விளக்குவதாக அநுமானாதியொப்ப விரித்துரைத்து வேறு நூல்களும் செய்திருக்கிறார்கள். இவ்விதம் பார்க்குமளவில், முற்கூறிய புறப்புறச் சமயமுதல் அகச்சமயம்வரை விரிந்த விவரம் புலப்படுகிறது. - இவைகளில், புறப்புறம்; 'புறச்சமயங்கள் வேதத்தை யொட்டாமலும் ஒட்டியும் நின்றமார்க்கங்கள். மற்ற சமயங்கள் - வேதத்தையும். ஆகமத்தையும் ஒட்டிநின்றவைகள். இவைகளில், சிவாத்துவித சைவடானது. சித்தாந்த சைவத்துக்கு மிகவும் நெருங்கிநிற்பது ஒன்று. அந்நெருக்கத்தினாலேயே அவ்விரண்டிற்கும் அபேதம் சொல்வதுண்டு. ஆயின் அவையிரண்டிற்கும் பேதமுண்டு. பேதமில்லா தவழி அபேதம் சாதித்தலும் அசங்கதமென்று முன்னமே குறிப்பிட்டிருக்கின்றாம். சிவாத்துவித சைவம் நிமித்தகாரணபரிணாம வாதமாகும். சிற்சத்திக்கும் சுத்தமாயைக்கும் வித்தியாசம் பாராட்டாது. 36 - தத்துவங்களுக் குட்பட்ட நிலையில் நிற்பது. ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியரும், ஸ்ரீமத் அப்பயதீக்ஷித சுவாமிகளும், வீரசைவாசாரியர்களும் இந்நிலையில் நின்றவர்கள். சக்தி விஷபமாக இவ்விதமாயிவர்களுக்கும் சித்தாந்தசைவர்களுக்கும் பேதமுளதேனும், மற்றெல்லா விஷயங்களிலும் ஒரு அமையுண்டு. அதுவுமுக்கி பமாக, ஆன்மாவும், இறைவனும் வேறு வேறு பொருள்கள் என்பதில் மிகவும் திடசித்தமுடையவர்கள். இது ஒன்று முக்கியமாகக் கைக்கொள்ளவும், மற்றுள்ள வித்யாசங்கள் அவ்வளவு பெரிதாகத் தோற்றது. சித்தாந்த சைவர்களும், மாயைதனு விளக்காகக்கொண்டு, இறைவனால் உபகரிக்கப்படும் பரிக்கிரகசக்தி. பாகச் சொல்லுகிறார்கள். ஆயின் இப்பரிக்கிரக சக்தியே, ஆறைவனுடைய அபின்னசக்தியாயிருந்தாலும் அதனால் விளையும் தீமை ஒன்றுமில்லை யென்க. ஆ : பின், பதிபசுக்களின் அபேதம் சொல்லுவதினால் விளையும் தீங்கு இவ்வளவென்று எண்ணவொணாது. ஆதலாற்றான் சிவாத்துவித சைவத்துக்கும் சித்தாந்தசைவத்துக்கும் அபேதம் பாராட்டுவது. மேலும், யோகமெனபது. சரியை முதல் சிவாத்து வித சைவம்வரை ஓடி நிற்குமானாலும், சிவாத்துவிதசைவத்தைச் சிறப்பாக நின்றுணர்த்தும், ஞானமென்பதும் சரிபை முதல் சுட்டிறந்து நின்ற நிலையாகிய. உண்மை முக்தி நிலையினையும் அதின் அனுபவப் பேறாகிய நிஷ்கள சிவத்தையும் குறிப்பிக்கினும், சிறப்புவகையில், சிவத்தோடு கலந்து இரண்டற நின்ற நிலையி,னையே உணர்த்தும்.. இது போலவே வேதாந்தமும் சித்தாந்தமும் என்க. ஆகவே, யோ காந்தம், பேர் தாந்தம், கலாந்தம், நாதாந்தம் என்பன கொஞ்சம் கொஞ்சம் பேதப்படினும் இதுவெல்லாம் சிவாத்துவிதமாகிய வேதாந்தத்தில் அடங்கும். தனி ஞானடானது சித்தாந்தத்தையே குறிக்கும். இதனால் நம் அருள் பொழித்தேவர்தம் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க" என்ற திருவாக்கும் விளங்கினமை காண்க. இக்கருத்தைத் தான்.'தானானவேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்'என்னும் திருமந்திரத்துக்கும் பொருளாக மதிக்கின்றாம். பின் வரும் அடிகளை யோசிக்கும் காலையும் அதன் கருத்து அவ்வாறே யிருக்கவேண்டுமென்பது தெரிகிறது.
தானான வேதாந்தம் தான் என்னும் சித்தாந்த
மானா துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய்
ஆனாமலமற் றருஞ்சித்தி யாதலே.''

தான் என்னும் பதம் முப்பாலினும் மூவிடங்களிலும் வரும். ஆகவே சீவன் பான் என் இரண்டு பொருளிலும் வரும். ''தானலா துலகமில்லை சகமிலா தடிமையில்லை.'' ''சகமலா தடிமையில்லை தான லாற் றுணையுமில்லை'' என்ற மறைமொழிகள் விளக்கும்.
            “யானாகிய என்னை விழுங்கி வெறுந்
தானாகி நின்றது தற்பரமே"

என்ற அனுபூதிச்சொல் இன்னும் விளக்கும். ஆகவே திருமந்திரத்தின் பொருள் : நான் தான் (சிவம்) ஆன என்றும் சிவோகம் பாவனையாகிய யோகநிலையில் நிற்பது வேதாந்தம். தான் (சிவம்) ஒன்றே என்றும் வேறொன்றும் திரிஸ்யமில்லை என்றும் ஆன்மா சிவாநந்தத்தில் அழுந்திநிற்கும் ஞானநிலைய தாகியது சித்தாந்தம். அதனைவிரித்துரைக்குங்கால், ஆத்மதரிசனமடைந்து அவ்வாத்மாவில் சிவத்தைக் காண்கை சிவபோகமாகிய வேதாந்தம். ஆணவம் முற்றும் கழன்று பாரானும் பெறுதற்கரிய சித்தியையடைதல் சித்தாந்தம். இவ்விதம் பொருள் கூறுதல், ஆன்மா ஒன்று உண்டு என்று சொல்லுகிற மார்க்கம் சித்தாந்தம், என்பதைவிட., எம் சிற்றறிவிற்கு சிறப்பாகக் காண்கின்றது. நிரீஸ்வர சாங்கியமுதல், ஆத்மா உண்டு என்று சொல்லுகிற மார்க்கங்கள் அநேகமுளவாமாதலால். இதற்கு அடுத்த திருமந்திரத்திலும் நாம் விளக்கிய பொருளை வற்புறுத்துவதற்காகவே,“ அத்தன்பரன்பால் அடைதல் சித்தாந்தமே” என ஆறுதி நிலையினையே சித்தாந்தமாகவும் கட்டளையிட்டிருக்கின்றார். * சமாதியென்பதும் யோகத்தின் முதிர்ச்சியேயானதால் அதனையே நான்தான் ஆகும், அல்லது தான் அவன் ஆகும் சமாதியென்றும் கூறி, வேதாந்தம் யோகமார்க்கமென்றே தெளிவுறுத்தார்.

* பின்வரும் திருமந்திரங்களையும் பார்க்க.
      “நூலதுவேதாந்தம் நுண்சிகைஞானமாம் "
      "வேட்கைவிடுநெறி வேதாந்தம்''
      “வேதாந்தமாவது வேட்கையொழிந்திடம் "
        (யோகம் சித்தநிரோதம் என்ற பொருள் பற்றி)
      "பரசித்திக்குவித்தாஞ் சிவோகமேசேர்தல்"
     ''சிவயான ஞானந் தெளியவொண்சித்தி"
      சிவமானஞானஞ் சிவாநந்தநல்குமே "
      “........................................ புலன்கரணம்புந்தி
      “சாதாரணங்கெடலாஞ் சகமார்க்கம்"
                         (யோகம் சாரூபம்.)
      “இங்கிவராக இழிவற்றயோகமே "
       யோகம்சிவரூப முற்றிடும் "
                         (சைவம் சாயுச்சியம்.)
      "சைவம்சிவனுடன் சம்பந்தமாவது"
      "சைவஞ்சிவானந்த சாயுச்சியமே"
      “தானவனாகித்தானைந் தாமலஞ்செற்று
      மோனமதாமொழிப் பான் முத்தராவது
      மீனமில்ஞானானு பூதியிலின்பமுந்
      தானவனயற்றல் ஆன சன்மார்க்கமே.''
      "ஞானத்தில் ஞானமே நானெனதென்னாமல்
      ஞானத்தில்யோகம் நாதாந்தநல்லொளி "
      "ஞானிக்குக்காயம் சிவமேதனுவாகும்"
      .....................................................................................
       “மேனிக்கும்யோகிக்கு விந்துவும் நாதமும் "
       "விஞ்ஞானத்தார்க் காணவமேமிகுதனு.''
       “ஒன்றுமிரண்டு மிலதுமாயொன்றாக
        நின்று சமய நிராகர் ரநீங்கியே.
        நின்றுபராபரை நேயத்தைப்பாதத்தாதி
        சென்று சிவமாதல் சித்தாந்தசித்தியே"
_____________________________________________________________________________________

இவ்விதமான சமாதி கைகூடினால், மற்றெல்லா நிலைகளும் அடைந்தபடியென் றும் அத்திருமந்திரத்தில் கூறியுள்ளார். ஆறந்தமாகக்கூறியதும் பொதுவாக, சித்தாந்தத்தையொழிந்த மற்று நாலந்தங்களும் வேதாந்தத்தில் அடங்கு மெனத் தோற்றுகின்றது. போதாந்தத்தை வேதபோதாந்தமென்று உமாபதி சிவமும் கூறியது சான்றாமென்க.
இதுநிற்க, நாம் மேல் முதல் நூல்களை யநுசரித்து பலரும் அநேக நூல்களியற்றியுள்ளதாகச் சொன்னோம். அவற்றில், சாரீரகமீமாம்சா சூத்திரமென்று ஒன்று பாதாரயண ரென்பவரால் செய்யப்பட்டுள்ளது. இவரும் வேதவியாசரும் ஒருவரோ வேறோ என சிலர் சந்தேகிக்கின்றார்கள். இந்நூலும், எக்காலத்துப் பிறந்தது என்பதும் தெரியவில்லை. நம் சங்க நூல்கள் காலத்தும் மாணிக்கவாசகர் திருமூலர் ஔவையார் முதலானவர்கள் காலத்தும் மிருந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த நூலில் ஒவ்வொரு சூத்திரங்களிலும், உபநிஷத் வாக்கியத்தை யுதகரித்து அதற்குப்பிறர் கூறும் அநர்த்தத்தைத் தவிர்த்து உண்மையபிப்பிராயம் கூறிப்போகும். அதனாலுமே அதற்கு வேதாந்த சூத்திரங்கள் என்றும் ஏற்பட்டது. இந்நூல் அநேக ஆசிரியர்கள் தங்கள் தங்கள் மதத்தினையே வலியுறுத்தியதென்று பாடியம் செய்திருக்கிறார்கள். அதற்கு, ஸ்ரீசங்கர பகவத் பாதாசாரியர் ஒருபாடியஞ்செய்திருக்கின்றார்கள். அது சைவர்கள் சொல்லும் ஏகான்வாதம் மாயாவாதம் என்னும் நிலையிலையே நிற்பதாக ஏற்படுகின்றது. சுவமதஸ்தர்கள் அதனையே வேதாந்தமென்றும் அத்வைத மதமென்றும் பரமஹம்ச மதமென்றும் கூறுகின்றார்கள். உலகவழக்கிலும் பெரும்பாலும் அதனையே வேதாந்தமென்றும் கூறுவதுண்டு. ஆனால், ஸ்ரீசங்கரர்சிஷ்ய பரம்பரைகளுக்குள்ளுமே, ஸ்ரீசங்கரரின்
"சுத்தச்சிவனுரை தானதிற்றோயாமல்
முத்தர்பதப்பொருள் முத்திவித்தமூலம்
      அத்தகை ஆன்மா அரனையடைந்தற்றால்
சுத்தச்சிவமாவரே சுத்தசைவரே.''

உண்மைய பிப்பிராயம் இன்னதென்று விளங்காது பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள். தற்காலத்து இவ்வேதாந்த விசாரணைசெய்து வரும் ஐரோப்பிய பண்டிதர்களிலும் இவ்வித வேற்றுமை காண்கிறோம். மோக்ஷமூலர் அவர்களும், தம் ‘வேதாந்தம்' என்னும் அரிய நூலில் சங்கரரின் அபிப்பிராயம் இன்னதெனக்காட்டி, அவருக்குப் பின்வந்தோர் அம்மதத்தை சுத்தம் மித்யாவாத மாக்கிவிட்டார்களெனவும், அதனாலேயே மற்றவர்கள் அம்மதத்தை பிரச்சன்ன புத்தமதமென்று இழிந்தார்களென்றும் - காட்டியிருக்கிறார். இந்நூல்களை யாதாரமாகக் கொண்டொழுகிவரும் நூல்கள் பஞ்சதசி, கைவல்ம், ஞானவாசிட்டம் (குருஞானவாசிட்டமல்ல) முதலிய நூல்களாம். ஆக இவ்விதமான வேதாந்தம் வேதாந்த நூல்களை நாம் அநுசரியாவிடில், உண்மை வேதாந்தத்தை இகழ்ந்ததாகமாட்டாது. ஆயின், வேதாந்த சூத்திரத்துக்கு ஸ்ரீ கண்டசிவமும் ஒருபாடியம் இயற்றி உள்ளார்கள். இப்பொழுதுள்ள பாடியங்கவில் இது புராதனமானது. மற்றைய தெல்லாம் இதற்குப் பிற்பட்டவைகளேயாம். இதன் உண்மை சங்கவியத்தினாலேயே காணலாம். இந்த சைவபாடியம் செய்தவரின் கருத்து சூத்திரங்கள் சிவாத்துவித சைவத்தையே உணர்த்தி நின்றதென்பது. யாமும் அச்சூத்திரங்களையும், ஆங்கி லேயத்துள்ள எல்லா பாடியங்களையும் படித்தும் பார்த்ததில், ஸ்ரீ கண்ட சிவத்தின் அபிப்பிராயமே சூத்திரங்களாற் போந்ததென்பதும் விளங்குகிறது. சங்கர பாஷ்யத்தையும் இராமானுஜ் பாஷ்யத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் தீபா என்ற பெரியோரின் அபிப்பிராயமும் இதற்கு ஒத்தே வருகின்றது. ஆயின் இந்த வேதாந்தசூத்திரம் நம்மவர்களிற் சிலர் அது ஏகான்மவாதத்தை நிலையுறுத்துவதாக எண்ணி ஒதுக்குகின்றார்கள். சங்கர் முதலிய மகான்கள் சிலர் அப்படியே அதனைக் கொண்டதையும் கண்டோம்; ஆயின் அதன் உண்மைக்கருத்து, ஸ்ரீகண்டசிவமும், டாக்டர் தீபாவும் கூறியபடியும், எம் விசாரணைக்கு எட்டியபடியும், சிவனும் சீவனும். வேறு என்பதே. ஆகவே, உண்மையில் பலகலையாகம வேதவதாந்தங்களின் கருத்து சிவத்தையும், சீவனையும் அவர்களுக்குள்ள பேதத்தையும், அபேதமாகும் முறையினையும், பின்னிற்கு நிலைபினையும் தெரித்து நிற்கின்றதென விளங்கும். நமது ஸ்ரீ கண்டசிவமும் அவருக்கு பின்வந்தோராகிய ஹரதத்த சிவாசாரியர், அப்பயதீக்ஷிதர் அவர்களும் தற்காலத்து ஸ்ரீகாசிவாசி, செந்திநாதய்யர் அவர்களும் காட்டியவண்ணம், வேதவேதாந்தங்களில் ஆன்மா, பரமான்மா, அமிர்தம், சத்து, சிவம், ஹரன், ருத்ரன் முதலிய பதங்கள் பரியாய பதங்களாய் உபயோகிக்கப்பட்டு பரம்பொருளாகிய பரமசிவத்தைக் குறிக்கும்.. உபநிடதங்களில், ஆன்மா என்னும் பதம் சீவான்மா, சிவம் என்னும் இரண்டு பொருளையும் உணர்த்திவரும் பிரயோகங்கள் காணப்படும். ஏகான்வாத நூல்களிலேயே, சிவன் ஹன் முதலிய பிரமத்தின் நாமங்களை விட்டு விட்டு, ஆன்மா, பிரமம் என்னும் நாமங்களையே உபயோகிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு விஷயத்தைமட்டும் குறித்தபின் இவ்வியாசத்தை முடிவுசெய்கின்றோம். பகவத்கீதையானது மகாபாரதமென்னும் இதிகாசத்தின் ஓர்பா கமாகி எல்லோராலும் அங்கீகரிக்கக் கூடிய நூலேயாம். ஆயின் சைவர்களிற் சிலர், அதை நிராகரித்தது மற்ற புறச்சமயத்தவர்கள் அதனை அதிகமாகப் பாராட்டி, அதனை வேறுவிதமாய் செய்வதினால் தான். யாம் அதனை ஓதியுணர்ந்தமட்டில் அதுசுத்த சைவ நூலாகக் கொண்டோம். ஸ்ரீ கண்ணபிரான். சம்பந்தப்பட்டமட்டில் பாஞ்சராத்திரிகள் அவரை பரம்பொருள் என்று கொள்ளுகின்றார்கள் என்பதிற் சந்தேகமில்லை ஏகான்மவாதிகளாகிய வேதாந்திகள், எல்லாம் பரமென்று நிலைப்பதால், ஸ்ரீ கண்ணனையும் சாமான்யபரமாகக் கொள்வதில் விசேஷமில்லை. ஆயின் சித்தாந்திகள் கொள்ளுவது அவ்விதமன்று. சிவஞான யோகிகள் கூறியது வேதாந்திகள் கூறுவது போல்வதொன்றன்று. ஸ்ரீ கண்ணபிரான் சிவேகம்பாவனையின் முதிர்ந்து, சிவனே தானெனக்கொண்டு குருமுகமாய்நின்று அருச்சுனனுக்கு உணர்த்திய சீவமுக்தன் என்பதே சிவஞான யோகிகள் கருத்து. இதனை முதல் முதல் சுட்டிக்காட்டியவர் ஸ்ரீ கண்ட சிவம். இதனையவர் பாஷியம், 1. 1. 31. கீழ்காண்க.
இதனை விரித்து ஸ்ரீமத் அப்பயதீக்ஷதர் சிவாதித்தணி தீபிகையிலும் கூறியுள்ளார்கள். அவற்றிற்கண்டு தெளிக.
அத்வைத சொரூபம் இன்னொரு சஞ்சிகையில் விரிப்பாம்.
                                ஜே. யெம்.  நல்லசாமிபிள்ளை
சித்தாந்தம் – 1912 ௵ - ஜூலை ௴


No comments:

Post a Comment