Monday, May 4, 2020



அருளாசிரியரும் ஆணவநீக்கமும்
[புலவர். பொன். சண்முகனர், காஞ்சிபுரம்.]

ஆணவத்தைப் பற்றிய அருளாளர் கருத்துக்களுட் சிற்சில. சித்தாந்தம் மலர் 36, இதழ் 5 இல் வெளிவந்தது.

அக்கட்டுரையைக் கற்பாரெல்லாரும் அதன் பொருளை உணர்தல் அரிதே. ஏன் எனின், ஆணவம் அகல முயல்வார் அனைவரும் ஒரு திறத்தாரல்லர். ஒரு திறத்தாராயின் 'மலபரிபாகம்' என்ற வழக்குண்டாகாது. அருள் பெற முயல்வாரும் அவ்வாறே ஒரு திறத்தாரல்லர். 'சத்திநிபாதம்' ஒரேகாலத்தில் முற்றும்பற்றாது. ஏன் என்றால் சத்திநிபாதத்திற்குக் காரணம் மலபரிபாகம். அச்சத்திநிபாதம் சோபான (பழ) முறையால் மந்தம், மந்ததாம், தீவிரம், தீவிர தரம் என நால்வகைப்பட்டு அவற்றுள்ளும் பலவேறு வகைப்பட்டு நிகழும். அது பராசத்தி ரூபமேயாய் ஆன்மாக்களிடத்திற் பதிவது, அது கருணை எனப்படுவது. அதன் முன் (மலபரி பாகம் எய்தாதபோது) பக்குவம் ஆதற் பொருட்டு மலத்திற்கு அநுகூலமாய் நின்று திரோதான சத்தி நடாத்தியது. மலம் பரிபாகம் எய்தியவழி அச்சத்தி அக்கருணை மறம் ஆகிய செய்கைமாறிக் கருணையெனப்படும் பராசத்தி ரூபமே யாகின்றது. ஆகவே சத்திநிபாதம் பலவேறு வகைப்படுவது போன்று மலபரிபாகமும் பலவேறு வகைப்பட்டு நிகழ்கின்றது. அந்நிகழ்ச்சிக்கு உட்பட்ட உயிர்களுள் வேறுபாடு இராது போமோ? இருப்பது முறை தானே! அவ்வேறு பாடே, அருளாளர் தெளிவித்த உண்மையிலும் முன்னுக் குப் பின் முரணாகக் கொள்ளற்குக் காரணம் ஆகும்.

சுவாமிகள் கட்டுரையில் உள்ளகருத்து நம் முன்னோருடைய கருத்தே. அக்கருத்துக்கு உற்ற மறுப்பு நம் முன்னோர்கருத்துக்கு உற்ற மறுப்பேயாகும்.

மறுப்புக் கட்டுரையினையும் சுவாமிகள் கட்டுரையினையும் ஒருங்கு வைத்து நோக்கி ஆராயும் புலவர்க்கு, அம்மறுப்புக்குத் தக்கவிடை அவர்கள் கட்டுரையில் விளங்குவது உறுதி. முன்னையோர் எல்லாரும் வேறு கருத்து இல்லாத வரே, சுவாமிகள் கட்டுரையில் உள்ள எல்லாம் பழமையவே. நம் முன்னோர் சொன்ன பொருளை நன்குணரும் ஆற்றல் இல்லையேல், குழப்பம் வாராது போமோ?' நம்மைக் குழப்பம் அடையச் செய்கிறது' என்று (பக்கம் 382) எழுதியவர் தமது மறுப்புக் கட்டுரையில் முதல் இடைகடை மூன்றிடத்துள் எங்கேனும் கட்டுரைக் குறிக்கோட் பொருளை நிறுவினாரோ? இல்லையே! தமது கட்டுரையின் முடிவிற் குழப்பம் அன்றி வேறுண்டோ? 'அடிக்குறிப்பு' என்ற தலைப்பில் உள்ளது முழுதும் 'குழப்பம்' பற்றியதே. அதை அவரது கட்டுரை முடிவில் அறிந்து கொள்ளலாம். பல பக்கம் எழுதியும் தம் குழப்பத்தையே முடிவிற் காட்டினார் என்று எவர் தாம் உணரார்? பக்கம் 378 - 382 இல் உள்ளவற்றை ஊன்றி நோக்கியுணர்வார்க்கு, சுவாமிகளது கட்டுரைப் பொருளை மறுப்புரை யெழுதியவர் செவ்விதின் உணரா தெழுதினார் என்பது விளங்கும். அதற்கோர் எடுத்துக் காட்டு இது:

"மலம்சாய அமுக்கி", "மும்மலத்தை மோசித்து", "ஆதிமலம் இரண்டும்'',  சித்தமலம் அற்றார் செறிந்திடுவர்" எனச் சுவாமிகள் தம் கட்டுரையில் நிறைய எடுத்துக்காட்டும் திருவாக்குகள் அனைத்தும் "பாசத்தொடக்கு அறு தலையே'' குறிப்பன வாதலால், 'முத்தியில் மும்மலங்களும் உண்டு' என்னும் கருத்துக்கு மாறானவை அல்ல என்றே நாம் கருதுகின்றோம் என்று (பக்கம் 47) எழுதினார். இவ்வாக்கியம் எவர்க்குப் பொருந்துவதாகத் தோன்றும். அறு தலைக்குறிக் கும் திருவாக்குக்கள் உண்டு என்பகற்கு மாறானவை அல்ல வாம் என்றால், பின் எப்பொருளது? மோசித்தல், அறுதல், சாய அமுக்குதல் எல்லாம் உண்டு என்னும் பொருளனவோ?

உமாபதி சிவாசாரியாரும் சுவாமிகளும் ஆணவத்தைக் குறித்து 'ஒடுக்கம' என்று யாண்டும் கூறியருளினார் அல்லர். உமாபதி சிவாசாரியார் கூறியருளும் 'ஒடுக்கம்' என்றும், 'நீக்கமும் சொல்லி ஒடுக்கமும் சொல்லி முடிவாக முத்தியில் மலத்திற்கு மறைகின்ற ஒரு செயலும் உண்டு என்று சொன்னால், சுவாமிகள் அவர்கள் எக்கருத்தை இங்கு வலியுறுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை" என்றும் எழுதியது; உணராமையால் வந்த பிழை (பக்கம் 381 - 46 பார்க்க.)

அருணந்தி சிவாசாரியாரும், உமாபதி சிவாசாரியாரும் அருளியவற்றுள் இரண்டனைக் காட்டி, இருவர் கருத்தும் ஒன்றுக் கொன்று முரண்படுவது போல இருப்பதால், சிக்கறுத்துத் தெளிவு காணவேண்டும்'' என்று எழுதினார். (பக்கம் 382) முரணானது என்று பொ. மு. பிள்ளை விளக்கிய தறிக. –

சுவாமிகள் கட்டுரைச் சொல்லாக மறுப்புரையிற் காட்டிய நீக்கமும் மறைப்பும் அவ்வமைவுரையிலும் இருத்தலைக் காணலாம்.

புகழுடல் எய்திய பொ. முத்தைய பிள்ளை எழுதியனவாக மறுப்புக் கட்டுரையில் காட்டித் தம்கருத்துக்கு இயைபு கொண்டார். (பக்கம் 383 - 46) அவர் 'சித்தாந்தம்' தொகுதி க. பகுதி 5 + 6இல் '' கடவுள் + ஆன்மாக்கலப்பிற்கு மலநீக்கமே ஏது ஆகலின் மூன்று எனச் சித்தாந்கம் கூறுதலின் முரணின்மை அறிக'' " சிவானந்தத்தை விளைவித்தல் மலம் என்றுகாணப்படவும் மலநீக்கம் ஏதுவாம் என்ற சிவாநந்த விளைவு (துன்பமின்மை) மலமின்மையின் விளைவு. அதனால் மலமின்மை ஏது " என்றெழுதினார். அஃது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையே. மேலும் அவர் சருவ ஞானோத் தராகமத்தின் உரையில் (பக்கம் 58 - 64) விரித்தெழுதியதை நோக்கியிருப்பாரேல், அவருரைதாது கருத்துக்கு ஒவ்வாது என்று உணர்தல் கூடும். அதில் உள்ளவை இவை: -

1. மலம் நீங்கிய விடத்துத் தன்னோடு பிரிப்பின்றி நிற்கும் சிவத்தின் தன்மை விளங்கித் தோன்ற அதுவாய் நிற்கும் என்பதே பொருத்தம் உடைத்து என்பது உய்த் துணர்ந்து கொள்க'' என்றும்,

2. 'இத்தை விளைத்தல் மலம்' எனவும் அச்சுருதி கூறுதலின், முத்தியில் மலமும் 0உண்டு என்று கொள்ள வருமே? வரின், மலத்தால் ஆகிய சம் சாரசாகரத்தைக் கடப்பன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், மலநீக்கம் ஏதுவாகச் சிவத்தன்மை விளங்கித் தோன்றும் என்பது பற்றி இத்தை விளைவித்தல் மலம் என்றார் ஆதலின் பொருந்தும் என்க. இவ்வுண்மையினையும் உற்று நோக்காது, அவ்வாசிரியரே (மனவாசகங்கடந்தாரே) மேல், "முத்திதனில் - சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்று மறை சத்தியமாவோதியிடும் என்றருளியிருத்தலையும் நோக்காது முத்தியிலும் மலம் உண்டு போலும் என மயங்கியிடர்ப்படுவர்.''

(3) "முத்தியில் மலம் அறவே நீங்கும், நீங்கினும் ஏனைப் பெத்தரிடத்திருத்தலால் நித்தத்திற்கு இழுக்கு இல்லை. இதனை ''நெல்லினுக்குத் தவிடுமிகள்.... நாசமும் இன்றாமே'' என்னும் சிவஞான சித்தியாரானும் "ஏகனாகி.... வல்வினை யின்றே" என்னும் சிவஞான போதத்தானும் தெளிக. அங்ஙனம் ஆயின், "அழிந்திடும் பாசம் என்னில்... இருளும் நாசம் அடைந்திடா மிடைந்திடாவே'' என்னும் சிவப்பிரகாசக் கருத்தோடு முரணாகோ எனின் முரணாது. என்னை! சிவனோடு பிரிப்பின்றி நிற்கும் உயிர்களை மறைக்கும் மலத்தின் சத்தி, சிவனை மறையாத வாறு போல, சிவமேயாய் நிற்கும் உயிர்களை மறையாமையின் சத்தியழிந்திடும் என்றும், சிவனுள் வியாப்பியமாயிருந்து சிவனையுணராத உயிர்களை மறைத்து நிற்றலின் 'நித்தம் அழிந்திடா'' என்றும் கூறினமையால் என்க.

(4) "இன்மை முகத்தான் இன்பம் விளையும் எனக் கூற வேண்டி இத்தை விளைவித்தல் மலம் என்றார் என்று ணர்ந்து கொள்க''

(5) "சூலை நோய் காரணமாகச் சிவபிரானை அடைய, அடைந்ததனால் சூலைநோய் நீங்கிச் சிவாநந்தம் பெற்றமையின், சிவாநந்தாநுபவகாலத்தும் சூலைநோய் சத்தி கெட்டிருந்த தென்று கொள்ளுதல் கூடாதவாறு போல, 3 முத்தி பெற்ற உயிரினிடத்து மலம் சத்திகெட்டு இருக்கும் என்று கொள்ளுதல் கூடாது.'' என்பதாம்"

(6) "மலம் நீங்கிய விடத்துத் தன்னோடு பிரிப் பின்றி நிற்கும் சிவம் விளங்கித் தோன்றுதலால் அச்சிவமாய் நிற்றல் சிவஞானம் எனப்படும்."

(7) “மாயாகாரியம் நீங்குதலும் மலம் நீங்குதலும் முறையே பசு ஞானத்திற்கும் ஆன்மஞானத்திற்கும் வேற்றுமை"

மறுப்புக் கட்டுரையாளர்க்கு, இப்படி, பொ. முத்தைய பிள்ளை எழுதியவை நல்ல விளக்கம் செய்யும் என்று கொள் ளல் கூடும்.

அடுத்த கட்டுரையில் மெய்கண்ட நூல்களின் சான்றுகளைக் காட்டி, முத்தியில் ஆணவமலம் உயிர்களைப் பற்றியிராமை நிறுவப்படும். நித்தியா நுட்டானமும் சிவபூசையும் உடையவர்க்கு எந்நூலும் இதனை உணரத்துணையாதல் வேண்டா. அவை இல்லாதார் எத்தனை பிறவி யெடுப்பினும், முப்பொருளின் நித்தம் சித்தம் வாப்பெறார். அநுட்டானத்தில் நாள் தொறும் மும்மலமும் நீக்கப்படும் செயல் முறையுள் திருநீறணிதல் ஆணவமலநீக்கத்திற்கே.

காட்சியளவைக்கு நிகாக உள்ள தொருசான்று காட்டி, 'முத்தியிலும் மூன்று முதலும்' என்றதை விளக்குவோம்: -

(1) திருக்கோயிலுள் திருமூலத்தானத்திலே சிவமாகிய பதியுளது.

(2) அச்சிவசந்நிதியிலே (பாசமும் பசுத்துவமும் நீங்கியும் பதித்துவம் ஓங்கியும் பசு என்ற பெயர் நீங்கியும் ஆன்மா என்ற பெயர் அடைந்தும் பேரின்பம் ஒன்றே பெற்றுத் திளைக்கும்) நந்தியுளது.

(3) அக் நந்திக்குப் பின்னர், அவ்வான்மாவைப் பற்றியிருந்து நீங்கியதும் முத்தி பெற்ற அதனைப் பசுவாக்கும் சத்தி கெட்டதும் ஏனைப் பெத்தர்பால் உள்ளதும் ஆகிய (பலி பீடமாக இருக்கும்) பாசம் அமைந்திருக்கின்றது. இது முப்பொருளும் நித்திய மாதலை உணர்த்தும் நிலை. இவ்வுண்மையால் உணரக்கிடக்கும் வாய்மை, முத்தியிலும் மூன்று முதலும் நித்திய மாதலை நிதர்சனமாகக் காட்டும் மெய்மமையாகும். திருக்கோயில் முழுதும் திருவருள் வெளியே. அத்திருவருளை வடிவாகக் கொண்ட சிவமே, திருக்கோயிலுள் திருமூலத்தானத்தில் சிவலிங்கப் பெருமான்களிடத்தில், வழிபட்டு வரும் மெய்யன்பர்க்குச் சாந்நித்தியமாகும் பதி. அச்சிவத்தையே நோக்கியிருந்து சிவா நுபவமே எய்தும் ஆன்மா (முன்னைய) பசு. அப்பசுவைப் பெத்தகாலத்துப் பற்றி முத்திகாலத்து நீங்கியதே பலிபீடம் என இருக்கும் பாசம். அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்த நிறைவே திருக்கோயில் முழுதும். அப்பூரணாநந்தமே சிவலிங்கப் பெருமான் கண் நின் நநளும் சிவம். அச்சிவமாகிய பூரணாநந்தத்தை நுகர்ந்து பிறிதுயாதும் இன்றியிருக்கும் நிலையே நந்தியின் நோக்கம். அதனைச் சாரமாட்டாது நீங்கிய மலத்தின் நிலையே பலி பீடத்தின் வைப்பு.

இதையே திருவருளில் அடங்கியது என்று கூறினர் அருட் சான்றோர் பலரும். திருமூலநாயனார் அருளிய

"ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலேறு எனதிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற் பாசமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள் வார்க்கே
என்னும் திருமந்திரத்தை யுற்று நோக்கின் இவ்வுண்மை தெளிவுறும். அடுத்த திருமந்திரத்திலே,

'பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆநந்த மா நந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே'

என்று 'பாச நீக்கம்' உணர்த்தியதையும் காண்க.

"அநாதி சீவன் ஐம்மலம் அற்று அப்பாலாய்
அநாதியடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தனாதி மலம் கெடத் தத்துவா தீதம்
வினாவு நீர் பாலாதல் வேதாந்த உண்மையே

என்றதில், மலம் கெடுதலையும் அஃது உபநிடதத்தின் உண்மையாதலையும் அறிக. வேதாந்தம் - உபநிடதம். இதனைச் 'சிவமாதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்' என்றதாலுணர்க. உபநிடதத்தின் முடிபு என்பது பொருள்.

முத்தி பெற்ற உயிர்களிடத்திலேயே மலம் (பாசம்) இருக்கும் எனில், அது முத்தியாகாது. ஆனால், அம் முத்தி உலகிற் பலதிறத்தால் எய்தும் முத்தியே.

(1) சிவம் சூரியனைப் போலும் (2) சீவன் கண்ணை ஒக்கும். (3) சிவசத்தி சூரியப்ப காசத்தை நிகரும். (4) மலம் இருளைப் புரையும். (5) கண்பற்றும். இருள் கதிரொளியால் நீங்கிக் கதிரோன் எதிரே நிற்கில் கண்ணுங் கதிரோனாகும். அக்காலத்தில் பேரிருளும் பேரா இருளாய்க் கதிரோன் ஒளியுள் அடங்கி அவ்வொளிமயமாய் விடும். விடினும் கதிரோனெதிரே நில்லாத கண்களைப் பற்றி நிற்கும்.

சிவத்தைப் பெற்ற ஆன்மாவின் நீங்கிய மலம் சிவத்தைப் பெறாத பசுக்களிடத்தில் இருக்கும் உண்மையை இதனால் உணரலாம்.

இதனை 'உபதேச விளக்கம்' என்னும் அருணூலில் உள்ள,

சூரியன் சிவன்; கண்சீவன்; சுடரொளி அருள் மலம் தான்
கூரிருள் ஆகும்; கண்தான் கொள் இருள் ஒளியால் நீங்கிச்
சூரியன் ஒளிநேர் நிற்கில், சூரியனாம், அக்காலைப்
பேரிருள் ஒளியாய் நித்யம் பெறும் திரிபொருள் முத்திப்பால்.”

என்ற இத்திருவிருத்தத்தில், 'முத்தியிலும் மூன்று முதலும்' என்றதன் உண்மையைத் 'திரிபொருள் முத்திப்பால்' என்றும், பதி பசு பாசம் மூன்றும் அநாதி நித்தியம் என் னும் சைவ சித்தாந்தத்தை 'நித்யம் பெறும்' என்றும் குறித்தவாறுணர்க.
சித்தாந்தம் – 1964 ௵ - ஏப்ரல் ௴


No comments:

Post a Comment