Monday, May 4, 2020



சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
அப்பர் தேவாரத்தாற் கொள்ளக்கிடக்கும் கீரனார் யார்?

செந்தமிழ்

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கன கக் கிழி தருமிக் கருளினோன் காண் "

இது திருநாவுக்கரசர்வாக்கு. திருநாவுக்கரசரும் சம்பந்தரும் ஒரே காலத்தவ ரென்பதும், இருவரும் பெருநட்பினரென்பதும் யாவருமறிந்த வுண்மை. திருநாவுக்கரசர் இத்திருவாக்கிற் சுட்டியது தருமிக்குப் பொற்கிழியளித்த சரித்திரம். தருமிக்குச் சிவபெருமான் கொடுத்தருளியபாடல் வருமாறு.

“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டதுமொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலி
னறியவுமுளவோ நீயறியும்பூவே"

இச்செய்யுளைத் தருமிகொண்டுசென்று சம்பகப்பாண்டியனுக்குக் காட்டிய போது கீரனார் அதிற் குற்றம் பாரித்து அதற்குரிய பொற்கிழியைக் கொடுக்கவிடாது தடுத்தார். அதுகேட்டுச் சிவபெருமான் ஒருபுலவராய் வெளிப்பட்டு அப்பாடலினது தகுதியெடுத்துக் காட்டித் தருமிக்கு அப்பொற்கிழியை வழங்குமாறருளினார்.

தருமிக்குச் சிவபெருமான் பாடல் கொடுத்தருளியதும், அதிலே கீரனார் குற்றம் பாரித்துப் பொற்கிழி வழங்காது தடுத்ததும், அப்போது சிவபெருமான் ஒரு புலவராய்ச் சென்று சங்கமேறியதும், அப்பாடலின் தகுதியை நாட்டியதும், பொற்கிழி யுதவுமாறருளியது மாகிய பெருங்கருணைச் செய்திகளைத் திருநாவுக்கரசர் வியந்து தமது தேவாரத்தில் “பின் பாட்டுப் புலவனாய்" என்று எடுத்துப் பாடுவாராயினர்.

அற்றேல், கீரனார் மூன்றாஞ் சங்கமுடிவில் விளங்கியவரன்றோ. அவர் செய்தியை எடுத்துக்கூறிய திருநாவுக்கரசர் மூன்றாஞ் சங்கத்துக்குப் பிற்பட்டவராகற் பாலர். சம்பந்தர் திருநாவுக்கரசர் காலத்தவராதலின் அவரும் மூன்றாஞ் சங்கத்துக்குப் பின்னுள்ளவரே யாவர் என்பது சிலர் துணிபு.

இத்துணிபு நன்கு செய்யப்பட்டதாகத் தோன்றவில்லை, தருமி கொண்டுசென்ற பாடலிற் குற்றம் பாரித்தார் மூன்றாஞ் சங்கத்திறுதியி லிருந்த கீரனார் தாமா? அன்றி, அப்பெயருடைய மற்றொருவரா வென்பதும், கீரப்பெயருடையார் ஒருவரா பலராவென்பதும் அவர்தாம் எவ்வெக் காலத்திருந்தவ ரென்பதும் ஆராயப்படுதல் வேண்டும்.

திருவிளையாடற் புராணத்தின்படி, தருமிகொண்டு சென்ற கொங்கு தேர் வாழ்க்கை'  என்னுந் தெய்வப்பாடலிற் - குற்றம் பாரித்தவர் கீரனார் என்னுமொரு புலவர். அவரே அகஸ்தியர்பால் இலக்கணங்கேட்டு விபரீதம் நீங்கப்பெற்றவர். அவர் சம்பகபாண்டியன் காலத்தில் விளங்கியவர் அவர்க்குக் கீரனார் என்னும் பெயரே பெருவழக்கு. நக்கீரனாரென்னும் பெயரும் சிறு வரவின தாய்ப் பிற்காலத்து வழங்கிற்று.

அவர் காலத்துக்குப் பின்னர் கீரனார் என்னும் பெயர் கொண்டார் அநேகர். அவருட் குட்டுவன் கீரனார், தும்பிசேர்கீரனார், பொருந்திலிளங் கீரனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரனார், மோசிகீரனார் என்போர் சிறந்தோர்.

இவருள்ளே மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் இறையனாரகப் பொருளுக்கு உரைசெய்த விரகர். இவரே திருமுருகாற்றுப்படையும், நெடுநல் வாடையும் பாடியவர். இவர் உக்கிரப்பெருவழுதி காலத்தவர். மூன்றாஞ் சங்கத்திறுதிக் காலத்திருந்தவர்.

நெற்றிக்கண்ணைக் காட்டினாலுங் குற்றங்குற்றமே எனக்கூறி அஞ்சாது வாதாடிய கீரனாரும் வேறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் வேறு. முன்னையவர் இரண்டாஞ் சங்கத்துக்கடைக்கூற்றில் விளங்கியவர் பின்னையவர் மூன்றாஞ் சங்கத்திறுதிக் காலத்திலே விளங்கியவர், இவரை அவராகவும், அவரை இவராகவுங்கொண்டு மயங்குவார் அநேகர். யானுஞ் சிறிதுகாலத்துக்கு முன் அவ்வாறுகொண்டு மயங்கினேன். ஆதாய்ச்சியாற் பின்னர்த் தெளிந்தேன். அது நிற்க,

1. சம்பகபாண்டியன் முதல்

2. பிரதாப சூரியன் 3. வங்கிசத்துவசன் 4. இரிபுமர்த்த னன் 5. சோழவமிசாந்தகன் 6. சேரவமிசாந்தகன் 7. பாண்டிவமிசேசன் 8. வமிசசிரோமணி 9. பாண்டீச்சுரன் 10. குலத்துலசன் 11. வமிசபூட ணன் 12. சோமசூடாமணி 13. ராஜசூடாமணி 14. பூபசூடாமணி 15. குலோபாண்டியன் 16. அரிமர்த்தனன், 17. சகநாதபாண்டியன், 18. வீரவாகு, 19. விக்கிரமவாகு, 20. பராக்கிரமவாகு, 21. சுரபிமாறன், 22. குங்கும பாண்டியன், 23. கர்ப்பூர பாண்டியன், 24. காருண்ணிய பாண்டியன், 25. புருடோத்தமன், 26. சத்துருசாதனன், 27. கூன் பாண்டியன் ஈறாக இருபத்தேழு பாண்டியர் வழிவழி யரசுபுரிந்தனர் என்பது திருவிளையாடற்புராணம். -

இறையனாரகப் பொருளுறைப்படி கூன்பாண்டியன் முதல் உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பது பாண்டியருளர்.

உக்கிரப்பெருவழுதி காலத்தில் விளங்கியவராகிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்க்கும் முன்னைய கீரனார்க்குமிடையே எழுபத்தைந்து பாண்டியர் அரசு செய்து போயினர் என்பது வெளிப்படையா நின்றது. இறையனாரகப் பொருளுரைப்படி கூன்பாண்டியன் முதல் உக்கிரப்பெரு வழுதியீறாகச் சென்ற காலம் ஆயிரத் தொண்ணூற்றைம்பது வருடம். இக்கணிதப்படி சம்பகபாண்டியன் முதற் கூன் பாண்டியனீறாகச் சென்ற காலம் (900) தொளாயிரம் வருடமாகும். ஆகவே முன்னைய கீரனார் பின்னைய கீரனாருக்கு 2750 வருடங்களுக்கு முன்னர் விளங்கினராகற் பாலர்.

ஆதலால் முன்னைய கீரனாரே அப்பர் தேவாரத்தாற் கொள்ளக் கிடப் பவரென்பது நன்கு துணியப்படும்.

ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை.

சித்தாந்தம் – 1916 ௵ - ஜுலை ௴


No comments:

Post a Comment